வாழை சமையல்

வகைவகையான வாழை சமையல்

“வீட்டில் ஒரு வாழைக்கன்று வைத்தால் போதும், நம் பரம்பரைக்கே அது பலன் தரும்” என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இலை, பூ, காய், பழம், தண்டு என்று அனைத்துமே சமையலுக்குப் பயன்படும் தாவரம் என்றால் அது வாழைதான். வாழையை வைத்து சாம்பார், கூட்டு, பொரியல், வறுவல், வடை, பாயசம், சூப், அவியல், பச்சடி, கஸ்டர்ட் என ஒரு விருந்தே தயாரித்து விடலாம். இப்படி, சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்ட வாழையில் செய்முறைகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி. ”வாழைக்காய், பூ, தண்டு ஆகியவற்றை நறுக்கியதும் மோர், மஞ்சள்தூள் சேர்த்து வைத்தால், சமைப்பதற்குள் கறுத்து விடாமல் இருக்கும். வாழை இலையில் தொடர்ந்து உணவு அருந்தினால், கண்களுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் உதவும்” என்கிறார்.

வாழைப்பூ பொரிச்சக் குழம்புவாழைப்பூ பொரிச்சக் குழம்பு

தேவையானவை : நரம்பு நீக்கி சுத்தம் செய்யப்பட்ட வாழைப்பூ – ஒரு கப், பயத்தம்பருப்பு – 50 கிராம், சாம்பார் பொடி – 2 மேசைக்கரண்டி (அல்லது காரத்துக்கேற்ப), மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – ஒரு தேக்கரண்டி, வெங்காய வடகம், மோர் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள : துருவிய தேங்காய் – கால் கப், சீரகம் – அரை தேக்கரண்டி, கொத்தமல்லித் தழை – ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை – 4 இதழ்கள்.

செய்முறை : பயத்தம்பருப்பை குழைய வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். வாழைப்பூவை நறுக்கி, சிறிதளவு மோர், உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து வேகவிடவும். பிறகு, வேக வைத்த பயத்தம்பருப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து, எல்லாமாகச் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, வெங்காய வடகத்தை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும்.

வாழைப்பூ - முருங்கைக் கீரை பொரியல்வாழைப்பூ – முருங்கைக் கீரை பொரியல்

தேவையானவை : நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப், முருங்கைக்கீரை – அரை கப், உதிர் உதிராக வேகவைத்த பயத்தம்பருப்பு – 4 மேசைக்கரண்டி, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் – 3 மேசைக்கரண்டி, மோர் – 2 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க : உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி, கடுகு – அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – ஒரு தேக்கரண்டி.

செய்முறை : வாழைப்பூவை மோர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து உதிர் உதிராக வேகவைக்கவும். முருங்கைக்கீரையை தனியாக வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெந்த வாழைப்பூ, முருங்கைக்கீரை சேர்த்து, வேகவைத்த பயத்தம்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.

வாழைப்பூ அடை.வாழைப்பூ அடை

தேவையானவை : நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப், புழுங்கல் அரிசி – 2 கப், துவரம்பருப்பு – 6 மேசைக்கரண்டி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 3 மேசைக்கரண்டி, பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 5, கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – 8 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : அரிசியையும் பருப்புகளையும் ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலையை தாளித்து மாவில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழையையும் சேர்க்கவும். 3 மேசைக்கரண்டி எண்ணெயில் வாழைப்பூவை வதக்கி, அதையும் மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லில் இரண்டு கரண்டி மாவை ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் ஊற்றி, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு நறுக்கிய கொத்தமல்லித் தழையை தூவி, வேகவிட்டு எடுக்கவும். இந்த அடையை வெண்ணெய் தொட்டுச் சாப்பிடலாம்.

வாழைப்பூ வடைவாழைப்பூ வடை

தேவையானவை : பொட்டுக்கடலை – 2 கப், மெல்லியதாக நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் – கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு – ஒரு மேசைக்கரண்டி, பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, சோம்பு – அரை தேக்கரண்டி. பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, நறுக்கிய புதினா, கொத்தமல்லி – தலா ஒரு மேசைக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைக்கவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் அதில் சேர்க்கவும். (இதில் உள்ள நீரே போதுமானது. தேவைப் பட்டால், சிறிதளவு நீர் சேர்க்கலாம்). வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

வாழைப் பூ வடை

தேவையான பொருட்கள் : வாழைப்பூ – 1, துவரம்பருப்பு-200 கிராம், சம்பா மிளகாய்-6, சோம்பு-1/2 தேக்கரண்டி, சீரகம்-1/2 தேக்கரண்டி, சின்னவெங்காயம்-3, மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை, உப்பு-தேவையான அளவு, நல்லெண்ணெய்-1/2 லிட்டர்.

செய்முறை : வாழைப்பூவை சுத்தம் செய்துவிட்டு சிறிது சிறிதாக நறுக்கிக் கொண்டு, அதனுடன் மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். துவரம் பருப்பினை 1மணிநேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்தபின் அதனுடன் சோம்பு, சீரகம், மிளகாய் சேர்த்து கொஞ்சம் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்). பின் வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் வாழைப்பூ, துவரையுடன் சேர்த்து பிணைந்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்திட வாழைப் பூ வடை ரெடி!

வாழைப்பூ துவையல்வாழைப்பூ துவையல்

தேவையானவை : ஆய்ந்து, சுத்தம் செய்த வாழைப்பூ – ஒரு கப், உளுத்தம்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 4, புளி – 50 கிராம், தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி, மிளகு – ஒரு தேக்கரண்டி, சீரகம் – அரை தேக்கரண்டி, பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை : கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், சீரகம், ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் புளி, உப்பு, தேங்காய் துருவல், வாழைப்பூ சேர்த்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்க… வாழைப்பூ துவையல் ரெடி! விரும்பினால், வாழைப்-பூவை வதக்கி அரைக்கலாம். இதை சாதத்துடன் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.

வாழைப்பூ உசிலிவாழைப்பூ உசிலி

தேவையானவை : ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 2 கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு (கலந்தது) – கால் கப், காய்ந்த மிளகாய்- 4, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : துவரம்பருப்பு, கடலைப்பருப்பு கலவையுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து, கெட்டியாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன், அரைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். உதிரியாக வந்ததும், வேக வைத்த வாழைப்பூ, உப்பு சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை கிளற.. வாழைப்பூ உசிலி தயார்!

தக்காளி-வாழைப்பூ குழம்புதக்காளி-வாழைப்பூ குழம்பு

தேவையானவை : ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 2 கப்,  தக்காளிச் சாறு – ஒரு கப்,  மஞ்சள்தூள், கடுகு – தலா கால் தேக்கரண்டி, தேங்காய் துருவல்- 2 மேசைக்கரண்டி, சீரகம் – ஒரு தேக்கரண்டி, பச்சை மிளகாய் – 3, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… வாழைப்பூ, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்த கலவையை வெந்து கொண்டிருக்கும் வழைப்பூவுடன் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு… தக்காளிச் சாறு, உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். கெட்டியாக வந்ததும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வாழைக்காய் - பனீர் புட்டுவாழைக்காய் – பனீர் புட்டு

தேவையானவை : பெரிய வாழைக்காய் – ஒன்று, பனீர் (துருவியது) – கால் கப், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, பூண்டு – 3 பல், பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி, கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் – 2 தேக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : வாழைக்காயை தோலுடன் 3 துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவைத்து, தோலை உரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, வேகவைத்த வாழைக்காயை கேரட் துருவியில் துருவி சேர்த்து மேலும் வதக்கி, துருவிய பனீரையும் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சைச் சாறு பிழிந்து, நன்கு கலந்துவிடவும்.

வாழைக்காய் எரிசேரிவாழைக்காய் எரிசேரி

தேவையானவை : வாழைக்காய் – ஒன்று, சேனைக்கிழங்கு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 3, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – ஒரு தேக்கரண்டி, சீரகம் – அரை தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி, துருவிய தேங்காய் – கால் கப், தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி, நறுக்கிய வாழைக்காய், சேனைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பாதியளவு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து, வெந்துகொண்டிருக்கும் காய்களுடன் சேர்க்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, மீதம் இருக்கும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி, வெந்த காய்களில் சேர்த்துப் புரட்டி இறக்கவும். கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு இந்த எரிசேரி.

வாழைக்காய் – வெங்காயம் – தக்காளி பொரியல்வாழைக்காய் – வெங்காயம் – தக்காளி பொரியல்

தேவையானவை : வாழைக்காய் – ஒன்று, நறுக்கிய வெங்காயம் – 3 மேசைக்கரண்டி, தக்காளி – ஒன்று (நறுக்கவும்), பூண்டு – 3 பல், கடுகு – ஒரு தேக்கரண்டி, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்தூள் – ஒரு மேசைக்கரண்டி, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய் – 2 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வாழைக்காய், பூண்டு சேர்த்து வதக்கி… உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடிவைக்கவும் (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்). 5 நிமிடத்தில் வெந்துவிடும். பிறகு இறக்கி, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

வாழைக்காய் உசிலிவாழைக்காய் உசிலி      

தேவையானவை : வாழைக்காய் – ஒன்று, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் – ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய் – 3 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
ஊறவைத்து அரைக்க : துவரம்பருப்பு – 6 மேசைக்கரண்டி, கடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி, பயத்தம்பருப்பு – 3 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 3.

செய்முறை : வாழைக்காயை மெல்லியதாக நறுக்கவும். பருப்புகளை மிளகாயுடன் சேர்த்து 40 நிமிடம் ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். சற்று ஆறிய பிறகு மிக்ஸியில் ஒரு சுற்று லேசாக சுற்றினால் ஒரே அளவாக இருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வாழைக்காயையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து, லேசாகத் தண்ணீர் தெளித்து மூடி வைத்தால் 5 நிமிடத்தில் வெந்துவிடும் (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்). பிறகு, தயார் செய்து வைத்துள்ள பருப்புக் கலவையைச் சேர்த்து, இரண்டு புரட்டு புரட்டி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

வாழைக்காய் கொத்சுவாழைக்காய் கொத்சு

தேவையானவை : வாழைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, புளி – நெல்லிக்காய் அளவு, இஞ்சி – சிறிதளவு, வேகவைத்த பயத்தம்பருப்பு – 6 மேசைக்கரண்டி, கடுகு – அரைதேக்கரண்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 3 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க : எண்ணெய் – அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 2, கடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி, தனியா – 3 மேசைக்கரண்டி, தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி.

செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை வதக்கி, மிகவும் பொடியாக நறுக்கிய வாழைக்காயை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, காய் வெந்த உடன், வேகவைத்த பயத்தம்பருப்பைச் சேர்த்து, எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.  இந்த கொத்சு… இட்லி, தோசை, உப்புமாவுக்கு ஏற்ற சைட் டிஷ்.

வாழைக்காய் அவியல்வாழைக்காய் அவியல்

தேவையானவை : நீளவாக்கில் நறுக்கிய வாழைக்காய் – ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கேரட், பீன்ஸ், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப், தயிர் – ஒரு கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள : தேங்காய்த் துருவல் – ஒரு கப், பச்சை மிளகாய் – 4.

செய்முறை : காய்கறிகளை நீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேக விடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தயிர், தேங்காய் எண் ணெய் சேர்த்து இறக்கி னால்… வாழைக்காய் அவியல் தயார்!

வாழைக்காய் சாம்பார்வாழைக்காய் சாம்பார்

தேவையானவை : வாழைக்காய் – ஒன்று, சின்ன வெங்காயம் – 6, வேகவைத்த துவரம்பருப்பு – கால் கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 மேசைக்கரண்டி (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, பெருங்காயத்தூள் – தலா அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய் – 3 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : புளியைக் கரைத்து கடாயில் விட்டு உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, சேர்த்து, ஒரு கொதி வரும்போது… சின்ன வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய வாழைக்காயை எண்ணெயில் வதக்கி சேர்க்கவும். காய் வெந்ததும், வெந்த துவரம்பருப்பைச் சேர்த்து மீண்டும் இரண்டு கொதி வந்ததும் இறக்கி… கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

வாழைக்காய் - வற்றல்கள் காரக்குழம்புவாழைக்காய் – வற்றல்கள் காரக்குழம்பு

தேவையானவை : வாழைக்காய் – ஒன்று, சுண்டைக்காய் வற்றல் – 3 தேக்கரண்டி , மணத்தக்காளி வற்றல் – 4 தேக்கரண்டி, வெல்லம் – சிறிதளவு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, குழம்பு மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, பூண்டு – 8 பல், தேங்காய்த் துருவல் – கால் கப், சமையல் எண்ணெய் – 3 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க : நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி, கடுகு – அரை தேக்கரண்டி , வெங்காய வடகம் (சிறியது) – ஒன்று.

செய்முறை : தேங்காய் துருவலை சிறிதளவு நீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வாழைக்காயை நறுக்கி எண்ணெயில் வதக்கி, பூண்டு சேர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். காய் பாதி வெந்ததும், வற்றல்களை வறுத்துச் சேர்க்கவும். குழம்பு சேர்ந்து வந்ததும் தேங்காய் விழுதை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து, தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

வாழைக்காய் - பனீர் துவட்டல்வாழைக்காய் – பனீர் துவட்டல்

தேவையானவை : நறுக்கிய வாழைக்காய் (ஸ்வீட் கார்ன் அளவுக்கே நறுக்கவும்) – ஒரு கப், ஸ்வீட் கார்ன், நறுக்கிய பனீர் (இரண்டும் சேர்த்து) – ஒரு கப், கடுகு – ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, கொத்தமல்லி – 2 மேசைக்கரண்டி, எண்ணெய் – 3 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
வறுத்துப்பொடிக்க : காய்ந்த மிளகாய் – 3, தனியா – 3 மேசைக்கரண்டி, கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி, எள் – ஒருதேக்கரண்டி, வேர்க்கடலை – ஒரு மேசைக்கரண்டி, தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி.

செய்முறை : வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, மிக்ஸியில் சற்றுக் கொரகொரப்பாகப் பொடித்து வைக்கவும். வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய வாழைக்காயை வதக்கி, பனீரையும் சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, 3 மேசைக்கரண்டி தண்ணீர் விட்டு வேகவைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கி, எல்லாமாகச் சேர்த்து வெந்ததும், வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து, நன்றாக புரட்டி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.

வாழைக்காய் பஜ்ஜிவாழைக்காய் பஜ்ஜி

தேவையானவை : வாழைக்காய் – 2, கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – கால் கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, மஞ்சள் பொடி, பெருங்காயம் – சிட்டிகை, சோள மாவு – ஒரு மேசைக்கரண்டி, தனி மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி (அல்லது காரத்துக்கேற்ப), பேக்கிங் பவுடர் – சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : வாழைக்காயை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். அனைத்துப் பொருட்களையும் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொண்டு, நறுக்கிய வாழைக்காயை தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறுக்கு காளன்குறுக்கு காளன்

தேவையானவை : நறுக்கிய வாழைக்காய் – ஒரு கப், துருவிய தேங்காய் – அரை கப், சீரகம் – ஒரு தேக்கரண்டி, பச்சை மிளகாய் – 3, நீர் விடாமல் கடைந்த மோர் – அரை கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க : கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று.

செய்முறை : தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை சேர்த்து விழுதாக அரைக்கவும். நறுக்கிய வாழைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். பாதியளவு வெந்த தும் தேங்காய் விழுதைச் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து கொதித்து வந்ததும் கடைந்த மோரை அதில் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, நீர் முழுவதும் வற்றும்படி குறுக வைத்து இறக்கவும்.

வாழைக்காய் கதம்ப பக்கோடாவாழைக்காய் கதம்ப பக்கோடா

தேவையானவை : வாழைக்காய் – ஒன்று, கடலை மாவு – ஒன்றரை கப், அரிசி மாவு – அரை கப், பச்சை மிளகாய் – 4, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா ஒரு சிட்டிகை, நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காய், பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : வாழைக்காயை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். எண்ணெயை அடிகனமான வாணலியில் காயவிடவும். நறுக்கிய வாழைக்காய், பச்சை மிளகாய், மற்ற காய்கறிகளுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிசிறவும். காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் இருந்து 4 மேசைக்கரண்டி எண்ணெயை எடுத்து சேர்த்து நன்கு பிசிறி, கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு மேலும் பிசிறவும். காயும் எண்ணெயில் மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

மொளகூட்டல்மொளகூட்டல்

தேவையானவை : வாழைக்காய் – ஒன்று, வேகவைத்த துவரம்பருப்பு – கால் கப், காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் – அரை கப், மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி (அல்லது காரத்துக்கேற்ப), கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய் – 2 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் இரண்டையும் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். வாழைக்காயை தோல் சீவி, நறுக்கவும். இதனுடன் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வேக விடவும். பின்னர் வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்துக் கொதிக்கவிடவும். அரைத்த தேங்காய் விழுதை கொதிக்கும் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூளை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும். பின்னர், இறக்கி எல்லாவற் றையும் நன்றாக கலந்துவிடவும்.

வாழைக்காய்-கசகசா பொரியல்

தேவையானவை : நறுக்கிய வாழைக்காய்த் துண்டுகள் – 2 கப், கசகசா – 3 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : கடாயில் எண்ணெய் விட்டு, வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். கசகசாவை பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து… காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், அரைத்த கசகசா கலவை போட்டு நன்கு கிளறவும். மணம் வந்ததும், பொரித்து வைத்துள்ள வாழைக்காய்த் துண்டுகள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் விட்டு, மிதமான தீயில் வைத்து சில நிமிடங்கள் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: வாழைக்காய் – 2, நறுக்கிய பச்சை மிளகாய் – 2, முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை : வாழைக்காயை இரண்டாக நறுக்கி வேக விடவும். வெந்ததும், ஆற வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்-பருப்பு, முந்திரித் துண்டுகள் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, மஞ்சள்-தூள், உதிர்த்து வைத்துள்ள வாழைக்காய், உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கிளறவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி, எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து பரிமாறவும்.

வாழைக்காய் மிளகு கூட்டு

தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், புளி – 50 கிராம், தேங்காய் துருவல் – அரை கப், மிளகு – ஒரு மேசைக்கரண்டி, சின்ன வெங்காயம் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4 , மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும். புளிக் கரைசலில் வாழைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் தேங்-காய் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்தெடுக்கவும். இதை மிக்ஸியில் போட்டு, அரை கப் சின்ன வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, மீதமுள்ள அரை கப் சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கி, மிக்ஸியில்அரைத்த கலவை, புளித் தண்ணீரில் வேக வைத்த வாழைக்காய், உப்பு போட்டு கொதிக்க வைத்து, இறக்கிப் பரிமாறவும்.

வாழைக்காய் போண்டா

தேவையானவை: வேக வைத்து, தோல் உரித்து, மசித்த வாழைக்காய் – 2 கப், தோசை அல்லது இட்லி மாவு – 2 கப், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய பச்சை மிளகாய் – தலா 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, பச்சைப் பட்டாணி – கால் கப், நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை: வேக வைத்து மசித்த வாழைக்காய், பச்சைப் பட்டாணி, இஞ்சி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

தோசை அல்லது இட்லி மாவை அகலமான பாத்திரத்தில் விடவும். பிசைந்து வைத்துள்ள வாழைக்காய் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் ஒவ்வொரு உருண்டையையும் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு உருட்டிய உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் எடுக்க.. வாழைக்காய் போண்டா தயார்!

இதற்கு, தக்காளி சட்னி சரியான ஜோடி!

வாழைக்காய் பெப்பர் ரோஸ்ட்

தேவையானவை: கெட்டியான வாழைக்காய் – 2, மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். உப்பு, மிளகுத்தூள் தூவிக் கலந்து பரிமாறவும்.

ரெகுலரான வாழைக்காய் சிப்ஸில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும்.

 

சீரக வாழைக்காய்

தேவையானவை: துண்டுகளாக நறுக்கி, வேக வைத்த வாழைக்காய் – 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கிளறவும், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வாழைக்காய் குணுக்கு

தேவையானவை: வேக வைத்து மசித்த வாழைக்காய் – 2 கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, அரிசி மாவு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சிறு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மூன்று வகை பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து மிக்ஸியில் போட்டு, கெட்டியாக அரைக்கவும். அதனுடன்… மசித்த வாழைக்காய், அரிசி மாவு, தேங்காய்ப்பல், பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

வாழைக்காய் கோஃப்தா

தேவையானவை – உருண்டைக்கு: வாழைக்காய் – 6, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

கிரேவிக்கு: சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், தயிர் – ஒன்றரை கப், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் – தலா அரை டீஸ்பூன், கிராம்பு – 4, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 3, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை – உருண்டைக்கு: வாழைக்காய்களைத் தோலுடன் குழையாமல் வேக விடவும். ஆறியதும், தோல் உரித்து கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாக மெதுவாகப் போட்டு பொரித்து எடுக்கவும்!

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்துக் கொள்ளவும். பிறகு… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தயிர் சேர்க்கவும். அதில், பொரித்த உருண்டைகளைப் போட்டு ‘சிம்’மில் சில நிமிடங்கள் வைத்து இறக்கிப் பரிமாறவும்.

வாழைக்காய் புளிக் கூட்டு

தேவையானவை: சிறு சிறு சதுரங்களாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், வேக வைத்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு (கலந்தது) – கால் கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல் – கால் கப்.

செய்முறை: புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டிய கரைசலை, அடி கனமான பாத்திரத்தில் விடவும். வாழைக்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனை கொதித்துக் கொண்டிருக்கும் புளிக் கரைசலில் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும். வேக வைத்த பருப்புகளைச் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி, கடுகு தாளித்துக் கொட்டிக் கலந்து இறக்கவும்.

இது சாதம், சப்பாத்தி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

வாழைக்காய் க்ரிஸ்பீஸ்

தேவையானவை: வேக வைத்து மசித்த வாழைக்காய் – 1 கப், அரிசி மாவு – 2 கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எள் – 2 டீஸ்பூன், இஞ்சி- பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, மசித்த வாழைக்காய் எள், உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், நெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். அந்தக் கலவையை விரல் நீள உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

இது, மாலை நேரத்துக்கு ஏற்ற ஸ்நாக்ஸ்.

 

வாழைக்காய் புளி கொத்சு

தேவையானவை: வேக வைத்த பாசிப்பருப்பு – 1 கப், வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், கெட்டியான புளிக் கரைசல் – கால் கப், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் – 3, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் புளிக் கரைசல், மஞ்சள்தூள், வாழைக்காய்த் துண்டுகள், பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். அதனுடன், மிளகாய்த்தூள் போட்டுக் கலந்து மீண்டும் கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கலந்து பரிமாறவும்.

இதனை தோசை, உப்புமா போன்ற டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

வாழைக்காய் பராத்தா

தேவையானவை: வேக வைத்து மசித்த வாழைக்காய் – 1 கப், கோதுமை மாவு – 2 கப், பச்சை மிளகாய்-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மசித்த வாழைக்காய், பச்சை மிளகாய்-பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும். மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, சப்பாத்திக் கல்லில் இட்டு சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து கொள்ளவும். அவற்றை தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

வாழைக்காய் கட்லெட்

தேவையானவை: வேக வைத்து, மசித்த வாழைக்காய் – 2 கப், பிரெட் ஸ்லைஸ் – 4, வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – கால் கப், நறுக்கிய பச்சை மிளகாய் – 2 தேக்கரண்டி, பொடித்த அவல் – 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சிறிதளவு தண்ணீரில் பிரெட் ஸ்லைஸை ஒவ்வொன்றாக அமிழ்த்தி நன்றாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அவற்றுடன் மசித்த வாழைக்காய், பொடித்த வேர்க்கடலை, வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்டம், சதுரம் என பிடித்த வடிவங்களில் செய்து, அவல் பொடியில் இருபுறமும் புரட்டவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, தயார் செய்தவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்க… வாழைக்காய் கட்லெட் ரெடி!மேசைக்கரண்டிதேக்கரண்டி

 

நேந்திரங்காய் சிப்ஸ்நேந்திரங்காய் சிப்ஸ்

தேவையானவை : முற்றிய நேந்திரம் வாழைக்காய் – 3, மஞ்சள் தூள் – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : நேந்திரங்காய்களை அடி, நுனி இரண்டையும் நறுக்கிவிட்டு, தோலை உரிக்கவும். அடிகனமான வாணலியில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு நீர் விட்டு உப்பு, மஞ்சள்தூளைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் நேரடியாக காய்களை (சிப்ஸ் கட்டையால்) வட்டமாக எண்ணெயில் படும்படி சீவவும். எண் ணெயில் நன்கு கலந்துவிடவும். சலசலவென்று சத்தம் வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் கரைசலை கால் தேக்கரண்டி எடுத்து கொதிக்கும் எண்ணெயில் விட்டு, நன்கு கலந்துவிடவும். மறுபடி சத்தம் வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் கரைசல் கால் தேக்கரண்டி எடுத்து கொதிக்கும் எண்ணெயில் விட்டு, நன்கு கலந்துவிடவும். மறுபடி சலசலவென்று சத்தம் வந்ததும் வறுவலை எடுத்து எண்ணெயை வடிய வைத்து, காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். இந்த சிப்ஸ் பல மாதங்கள் கெடாது. இதை தேங்காய் எண்ணெயில்தான் பொரிக்க வேண்டும்.

நேந்திரம்பழ பாயசம்..நேந்திரம்பழ பாயசம்

தேவையானவை : நேந்திரம்பழம் – 3, வெல்லம் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – 3 மேசைக்கரண்டி, உடைந்த முந்திரித்துண்டுகள் – 3 மேசைக்கரண்டி, தேங்காய்த் துருவல் – அரை கப்.

செய்முறை : தேங்காய்த் துருவலை சிறிதளவு நீர்விட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும். நேந்திரம் பழத்தை தோல் நீக்கி நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து கரைந்துவிடாமல் வேகவைக்கவும். வெந்ததும் வெல்லத்தைச் சீவி சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும், அரைத்த தேங்காயைச் சேர்த்து, ஒரு கொதி வெந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிவிடவும். முந்திரித்துண்டுகளை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

இலை அப்பளம்இலை அப்பளம்

தேவையானவை : புழுங்கல் அரிசி – ஒரு கப், சீரகம் – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப, வாழை இலை – தேவையான அளவு.

செய்முறை : புழுங்கல் அரிசியை முதல் நாள் இரவே கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். (அரைப்பதற்கு முன்பு 40 நிமிடங்கள் அரிசியை ஊற வைக்கவும்), மறுநாள் காலை மாவுடன் உப்பு, சீரகம் சேர்க்கவும். இட்லிப்பானையில், தட்டில் வாழை இலையை வைத்து, அதில் ஒரு கரண்டியால் மாவை வட்ட வடிவில் ஊற்றி வைத்து 2 நிமிடம் கழித்து எடுத்தால்… இலை அப்பளம் தயார். இதே மாதிரி முழு மாவையும் ஊற்றி எடுத்து வெயில் காய வைத்து, இரண்டு மணி நேரத்தில் வாழை இலையை விட்டு எடுத்து விடலாம். எடுத்த அப்பளத்தை துணியில் போட்டு, வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். 4 தினங்கள் பகலில் இவ்வாறு காயவைத்து எடுக்கவும். வாழை இலை அப்பளத்தை அதிக அளவில் செய்து வைத்துக்கொண்டால், ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். இதை எண்ணெயில் பொரித்தோ, தணலில் சுட்டோ பயன்படுத்தலாம்.
குறிப்பு : பச்சை மிளகாய் – கசகசாவை அரைத்து, அப்பளம் தயாரிக்கும் மாவில் சேர்த்தால்… சற்று காரத்துடனும், கூடுதல் ருசியுடனும் அப்பளம் இருக்கும்.

வாழைத்தண்டு சூப்வாழைத்தண்டு சூப்

தேவையானவை : பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் – தலா 2 மேசைக்கரண்டி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா ஒரு தேக்கரண்டி, மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி, சோள மாவு – ஒரு மேசைக்கரண்டி, வெண்ணெய் – ஒருதேக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு, அது உருகியதும் நறுக்கிய வாழைத்தண்டு, கேரட், பீன்ஸ், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் போட்டு வதக்கி, 2 கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சோள மாவைக் கரைத்து ஊற்றி, மேலும் 2 நிமிடம் கொதித்து சூப் பதம் வந்ததும், மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

வாழைத்தண்டு சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – கால் கப், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும். அதனை, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும்; சிறுநீரகக் கல் கரையும்.

வாழைத்தண்டு கூட்டுவாழைத்தண்டு கூட்டு

தேவையானவை : பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப், மோர் – 3 மேசைக்கரண்டி, வேகவைத்த பயத்தம்பருப்பு – 5 மேசைக்கரண்டி, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப.
அரைக்க : துருவிய தேங்காய் – 5 மேசைக்கரண்டி, சீரகம் – கால்தேக்கரண்டி, கறிவேப்பிலை – 3 இலைகள், கொத்தமல்லித் தழை – ஒரு தேக்கரண்டி.
தாளிக்க : கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – ஒரு தேக்கரண்டி.

செய்முறை : வாழைத்தண்டை உப்பு, மஞ்சள்தூள், மோர், சிறிதளவு நீர் சேர்த்து வேகவிடவும். இதனுடன் வேகவைத்த பயத்தம்பருப்பைச் சேர்க்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். வாழைத்தண்டு கூட்டு, மருத்துவக் குணங்கள் நிறைந்தது.

வாழைத்தண்டு ஸ்வீட் பச்சடிவாழைத்தண்டு ஸ்வீட் பச்சடி

தேவையானவை : பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப், சீவிய வெல்லம் – அரை கப், துருவிய தேங்காய் – கால் கப், எண்ணெய் – ஒரு தேக்கரண்டி, உப்பு – சிட்டிகை.
தாளிக்க : கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு வாழைத்தண்டை வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சீவிய வெல்லத்தைச் சேர்த்து இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து பச்சடி பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

வாழைத்தண்டு பச்சடி

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப், மாதுளை முத்துக்கள் – கால் கப், பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது – ஒன்றரை டீஸ்பூன், புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 2 கப், கடுகு – கால் டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடுகு, எண்ணெய், கொத்தமல்லி தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் கடைந்த தயிரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வாழைத்தண்டு - ஸ்வீட் கார்ன் பொரியல்வாழைத்தண்டு – ஸ்வீட் கார்ன் பொரியல்

தேவையானவை : பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு (சோளம் அளவுக்கு நறுக்க வேண்டும்) – ஒரு கப், மோர் – 3 மேசைக்கரண்டி, ஸ்வீட் கார்ன் முத்துக்கள் – கால் கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க : கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, எண்ணெய் – ஒரு தேக்கரண்டி.

செய்முறை : வாழைத்தண்டை உப்பு, மஞ்சள்தூள், மோர் சேர்த்து அரைவேக்காடாக வேகவிட்டு… சிறிதளவு தண்ணீர், ஸ்வீட் கார்ன் சேர்த்து, வாழைத்தண்டு – ஸ்வீட் கார்ன் இரண்டும் குழைந்துவிடாமல் வேகவைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து இதனுடன் சேர்த்து, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

வாழைத்தண்டு மோர்க்கூட்டு

தேவையானவை : பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப், துவரம்பருப்பு – 2 தேக்கரண்டி, சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, மஞ்சள்தூள் – தலா கால் தேக்கரண்டி, தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி, கெட்டித் தயிர் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை : வாழைத்தண்டுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும். பிறகு, தண்ணீரை வடித்து, சீரகம், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன், வேக வைத்த வாழைத்தண்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, நன்றாகக் கடைந்த கெட்டித் தயிரை விட்டுக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.

பாசிப்பருப்பு – வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை : பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி, தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : பாசிப்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். அதனுடன், வாழைத்தண்டு, ஊற வைத்த பாசிப்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும். வெந்ததும் இறக்கி, தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்

வாழைத்தண்டு ஊறுகாய்

தேவையானவை : மெல்லியதாக, நீளவாட்டில் நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப், மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு – 2 தேக்கரண்டி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 3, கடுகு – கால் தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை : எண்ணெய், கடுகு தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டிக் கலந்து பயன்படுத்தவும். ‘நறுக் நறுக்’ என்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த ஊறுகாய்.

வாழைத்தண்டு சாலட்

தேவையானவை : பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப், நறுக்கிய வெள்ளரிக்காய், குடமிளகாய் – தலா கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு தேக்கரண்டி, வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 மேசைக்கரண்டி, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு – கால் தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை : கடுகு, எண்ணெய், கொத்தமல்லி தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வாழைத்தண்டு கலவையில் கொட்டி, மீண்டும் ஒருமுறை கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். ‘சிக்’கென்ற உடல் வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவாக இதனை சாப்பிடலாம்.

வாழைப்பழ கீர்வாழைப்பழ கீர்

தேவையானவை : மலை வாழைப்பழம் – 3, பச்சரிசி – 2 மேசைக்கரண்டி, பால் – ஒரு கப், சர்க்கரை – கால் கப், ஏலக்காய்த்தூள், லெமன் ஃபுட் கலர் – தலா ஒரு சிட்டிகை, மெல்லியதாக சீவிய பாதாம் – ஒரு மேசைக்கரண்டி, மெல்லியதாக சீவிய முந்திரி – ஒரு மேசைக்கரண்டி.

செய்முறை : பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும். இதனுடன் ஒரு கப் பால், ஒரு கப் நீர் சேர்த்து குழைய வேகவிடவும். பிறகு சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு, வாழைப்பழத்தை மசித்து சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, பாதாம், முந்திரியால் அலங்கரிக்கவும்.

வாழைப்பழ கஸ்டர்ட்வாழைப்பழ கஸ்டர்ட்

தேவையானவை : நறுக்கிய வாழைப்பழம் – ஒரு கப், நறுக்கிய மாம்பழம், ஆப்பிள், பலாச்சுளை, முழு பச்சைத் திராட்சை (எல்லாம் சேர்த்து) – ஒரு கப், பால் – 2 கப், சர்க்கரை – அரை கப், கஸ்டர்ட் பவுடர் – 2 மேசைக்கரண்டி.

செய்முறை : பாலை சர்க்கரை சேர்த்துக் காய்ச்சவும். மிதமாக சூடாகும்போதே கால் கப் பாலை எடுத்து கஸ்டர்ட் பவுடர் சேர்த்துக் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்க்கவும். பால் – கஸ்டர்ட் பவுடர் இரண்டும் சேர்ந்து வரும்போது இறக்கி, ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரவிடவும். பரிமாறுவதற்கு 10 நிமிடங்கள் முன்பு எடுத்து, பழங்களைச் சேர்த்து கலந்துவிடவும்.
குறிப்பு : பரிமாறுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு பழங்களை ‘கட்’ செய்தால் போதும். வெனிலா, ஸ்ட்ராபெர்ரி என்று எந்த ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடர் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

வாழைப்பழ ஸ்மூத்திவாழைப்பழ ஸ்மூத்தி

தேவையானவை : வாழைப்பழம் – 3, தயிர் – ஒன்றரை கப், விதை நீக்கிய பேரீச்சம்பழம் – 3, தேன் – ஒரு தேக்கரண்டி, தூளாக்கிய பனங்கற்கண்டு – ஒரு தேக்கரண்டி, உப்பு – ஒருசிட்டிகை.

செய்முறை : பேரீச்சம்பழத்தை சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் சேர்த்து ஓடவிட்டு, உப்பு, பனங்கற்கண்டு, தேன் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். பிறகு, வாழைப்பழத்தைச் சேர்த்து அடித்து, இறுதியில் தயிரும் சேர்த்து நுரைவரும் வரை அடித்து நிறுத்தவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கினால்… சுவையான, சத்தான வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி!

வாழைப்பழ ஸ்மூத்தி

தேவையானவை : பால், தயிர் – தலா ஒரு கப், வாழைப்பழம் – 2, பாதாம்பருப்பு – 8, சர்க்கரை – 2 மேசைக்கரண்டி.

செய்முறை : கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தெடுக்க.. நுரை பொங்க வரும். அதனை உடனே பரிமாறவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்; எதிர்பாராத விருந்தினர்களுக்கு உடனடியாக தயார் செய்து கொடுக்கலாம்.

வாழைப்பழ அப்பம்வாழைப்பழ அப்பம்

தேவையானவை : புழுங்கல் அரிசி – ஒரு கப், பச்சரிசி – அரை கப், உளுந்து, ஜவ்வரிசி – தலா ஒரு மேசைக்கரண்டி, வெந்தயம் – ஒரு தேக்கரண்டி, துருவிய தேங்காய் – அரை கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், நன்கு கனிந்த மஞ்சள் வாழைப்பழம் – 2, உடைத்த முந்திரித் துண்டுகள் – 3 மேசைக்கரண்டி, உலர் திராட்சை – 3 மேசைக்கரண்டி, நெய் – சமையல் எண்ணெய் கலவை – 6 மேசைக்கரண்டி, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை : புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, ஜவ்வரிசி, வெந்தயம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் கெட்டியாக அரைத்து, 6 மணி நேரம் புளிக்கவிடவும். துருவிய தேங்காயை நீர் விட்டு கெட்டியாக அரைத்து மாவில் சேர்த்து, பொடித்த வெல்லத்தையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து, உப்பு, பொடியாக நறுக்கிய வாழைப்பழம் சேர்க்கவும். மீண்டும் நன்றாகக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் – எண்ணெய் கலவையை கொஞ்சமாக விட்டு, மாவினை ஊற்றி, மேலே முந்திரி, திராட்சையை தூவி, ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
குறிப்பு : வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவினை கரண்டியால் எடுத்து ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டும் எடுக்கலாம்.

பஞ்சாமிர்தம்பஞ்சாமிர்தம்

தேவையானவை : வாழைப்பழம் – 10, நாட்டு சர்க்கரை – 100 கிராம், கொட்டை நீக்கிய பேரீச்சை – 50 கிராம், உலர் திராட்சை – 25 கிராம், நெய் – 50 கிராம்.

செய்முறை : வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கவும். பேரீச்சையையும் சிறிய துண்டுகளாக்கவும். இவற்றுடன் உலர் திராட்சை, நாட்டு சர்க்கரை, நெய் சேர்த்துப் பிசைந்து, சாப்பிடக் கொடுக்கவும் (விருப்பப்பட்டால், சிறிதளவு கல்கண்டு சேர்க்கலாம்). இதில் சத்துக்கள் ஏராளம்!

வாழைப்பழ பச்சடிவாழைப்பழ பச்சடி

தேவையானவை: வில்லைகளாக நறுக்கிய வாழைப்பழம் – ஒரு கப், கறுப்பு திராட்சைப் பழம், சிறிதாக நறுக்கிய தக்காளி, பைனாப்பிள் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப், சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த்தூள், லெமன் ஃபுட் கலர் – தலா ஒரு சிட்டிகை, தேன் – 2 தேக்கரண்டி.

செய்முறை : சர்க்கரையுடன் லெமன் ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள் சேர்ந்து மூழ்கும் வரை நீர் விட்டு மிதமாக பாகு காய்ச்சவும். இதனுடன் நறுக்கிய வாழைப்பழம், முழு திராட்சை, நறுக்கிய தக்காளி, பைனாப்பிள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி… தேன் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு கலந்துவிடவும்.

பனானா கேக்

தேவையானவை : கெட்டியான வாழைப்பழம் – 1, அரிசி மாவு – முக்கால் கப், சர்க்கரை – 2 மேசைக்கரண்டி, தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், வாழை இலை, செர்ரிப்பழம் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை : தேங்காய்ப்பாலில் உப்பு, சர்க்கரை, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து கொதிக்க விடவும். இட்லி மாவு பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். வாழைப்பழத்தை, 2 இஞ்ச் நீளத்துக்கு துண்டுகளாக நறுக்கவும். அவற்றை, ஒவ்வொன்றாக மாவு கலவையில் நனைக்கவும். அந்தத் துண்டுகளை வாழை இலையில் வைத்து மெதுவாக மடித்து, இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும். செர்ரிப் பழம் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

 

வாழைப்பழ அல்வா

தேவையானவை : நன்கு பழுத்த வாழைப்பழம் – 4, சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், – முந்திரித் துண்டுகள் – 2 தேக்கரண்டி.

செய்முறை : அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரியை வறுத்தெடுக்கவும். அதே பாத்திரத்தில், நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். நிறம் மாறியதும், சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் நன்கு கிளறி, முந்திரி சேர்க்கவும். விருப்பப்பட்டால், மற்ற பழங்களையும் சேர்க்கலாம். விருந்தாளிகளுக்கு உடனடியாக செய்து கொடுக்கக்கூடிய சுவையான டிஷ் இது!

வாழைப்பழ ஜாம் ரோல்ஸ்

தேவையானவை : கெட்டியான ரஸ்தாளி / பச்சை வாழைப்பழம் – 2, ஏதேனும் ஒரு ஃப்ரூட் ஜாம் – அரை கப், முந்திரி, பாதாம் (பொடித்தது) – ஒரு கப்.

செய்முறை : பழத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஃப்ரூட் ஜாமில் சிறிதளவு சுடுதண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும். நறுக்கிய வாழைப்பழத்தை அந்தக் கலவையில் தோய்த்து எடுக்கவும். பிறகு, பொடித்து வைத்துள்ள முந்திரி, பாதாமில் ஒருமுறை உருட்டி எடுத்துப் பரிமாறவும். இது, திடீர் விருந்தாளிகளுக்கான உடனடி டெஸர்ட்!

 

பனானா பஜ்ஜி

தேவையானவை : மைதா, சர்க்கரை – தலா 100 கிராம், வாழைப்பழம் – 4, சீரகம் – கால் தேக்கரண்டி, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை : மைதாவில் சீரகம், சர்க்கரை சேர்த்து, தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். வாழைப்பழத்தை நீளவாக்கிலோ அல்லது வட்டமாகவோ நறுக்கவும். வாழைப்பழத் துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து, பரிமாறவும். வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த பனானா பஜ்ஜி.

வாழைப்பழ கஸ்டர்டு

தேவையாவை : பால் — ஒரு லிட்டர், வாழைப்பழத் துண்டுகள் – 2 கப், வெனிலா கஸ்டர்டு பவுடர் – 2 மேசைக்கரண்டி, சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை : சிறிதளவு குளிர்ந்த பாலில் கஸ்டர்டு பவுடரைக் கரைத்துக் கொள்ளவும். மீதி பாலை, மிதமான தீயில் காய்ச்சவும். சிறிதளவு வற்றியதும், கரைத்து வைத்துள்ள கஸ்டர்டு பவுடரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். அப்போது பால் கெட்டியாகும். உடனே இறக்கி சர்க்கரை சேர்க்கவும். நன்றாக ஆறியதும், வாழைப்பழத் துண்டுகள் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’ என்று பரிமாறவும்.

-kaivelaipadukal.blogspot.co.uk
-மலர்மருத்துவம்‬
-chittarkottai.com