இசைத்தமிழின் தொன்மை – தொல்காப்பியம் : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை – 15

இசைத்தமிழின் தொன்மை - 15தொல்காப்பியம் – 1

தமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது!!

“தொல்காப்பியம் மொழியியலையும் இலக்கிய இயலையும் விளக்கும் நூலேயாயினும் தமிழர் வாழ்வியலையும் அறிவுறுத்தும் வரலாறாகவும் அமைந்துள்ளது.

தமிழர் வரலாறு எழுதப் புகுவோர் தொல்காப்பியத்தை நன்கு கற்றல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழரின் உண்மை வரலாற்றை எழுத இயலும். ஆகவே, தமிழக வரலாறும் பண்பாடும் அறிய விரும்புவோர் தொல்காப்பியத்தைத் தவறாது கற்றல் வேண்டும்.

தமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது என்ற குறிக்கோளைக் கொள்ளுதல் வேண்டும்.

கல்வித் திட்டமும் அதற்கு இடம் கொடுத்தல் வேண்டும். தொல்காப்பியம் கற்றுத் தூய தமிழக வரலாறும் பண்பாடும் அறிவோம்”.

-பேரா.சி.இலக்குவனார்
குறள்நெறி (மலர்- 1 – இதழ் 18)
ஆவணி 17, 1995 : 1.9.64

தொல்காப்பியம்

“அகத்தியம்” கால வெள்ளத்தால் அழிந்த காரணத்தால் அதற்கு வழி நூலாக ஒரு இலக்கண நூலை இயற்ற தனது தலை மாணாக்கரான தொல்காப்பியரை அழைத்துச் சொன்னார் அகத்தியர். இந்நிலையில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார்.

மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு.

தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதி இட்டு கூறினார் அதங்கோட்டாசான்.

பனம்பாரனார்
பனம்பாரனார் தொல்காப்பிய நூலுக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் ஆவார். இவர் தொல்காப்பியரின் சமகாலத்தவர் என அறிகிறோம். தொல்காப்பியரும் பனம்பாரனாரும் ஒருசாலை மாணாக்கர் என்றும் கூறப்படுகிறது.

தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்
“வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே”.

விளக்கம்
“தமிழ்கூறு நல்லுலகம்” – வடக்கில் வேங்கடமலைக்கும், தெற்கில் குமரிமுனைக்கும் இடையில் பரந்துகிடப்பது. தமிழ் கூறு நல்லுலகத்தில் நிலவிவந்த வழக்கு மொழியும், செய்யுள் மொழியும்.

தமிழ் நூல்கள் பயன்படுத்திய எழுத்து பேச்சிலும் எழுதப்பட்ட நூலிலும் அமைந்திருந்த சொல்லமைதி பேச்சும் நூலும் உணர்த்திய பொருளமைதி

“செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்”- செந்தமிழ் இயல்பாகப் பேசப்படும் நிலத்துக்கு அண்மையதாய்ப் பொருந்தியிருக்கும் நிலத்தில் நிலவிவந்த தமிழும் தொல்காப்பியரால் ஆராயப்பட்டது.

“முந்துநூல்”- தொல்காப்பியருக்கு முன் தோன்றி நிலவிவந்த இலக்கண, இலக்கியங்கள். இவற்றைத் தொல்காப்பியர் கண்டறிந்தார். அவற்றை முறைப்படுத்தி எண்ணிப் பார்த்தார்.

“புலம்”- மொழிப்புலம். தொல்காப்பியர் மொழிப்புலம் தொகுத்துத் தந்தார்.

போக்கு = மனம் போன போக்கு, குற்றம்
பனுவல் = (பன் = பஞ்சு, பனுவல் = பஞ்சை நூலாக்கி ஆடை நெய்வது) நூல் – இது எழுத்து என்னும் பஞ்சைச் சொல் என்னும் நூலாக்கிப், பொருள் என்னும் ஆடையாக்கிக் கொள்வது. நூல் – ஆகுபெயர்.

மனம் போன போக்கில் எழுதாமல், மொழியமைதியைத் தழுவியே பனுவல் செய்தார்.

அரங்கேற்றம் – நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் (தமிழ்ச்சங்கத்தில்) அரங்கேற்றப்பட்டது.

தமிழவைத் தலைமை – தொல்காப்பியர் தொல்காப்பியத்தை அரங்கேற்றியபோது அவைக்குத் தலைமை தாங்கியவர் அதங்கோட்டாசான் (அதங்கோட்டு ஆசான்). இவரது நாவில் அறநெறி கரைந்த சொல் வெளிப்படும். இவர் நான்மறை முற்றக் கற்றவர்.

அரங்கேற்றத்தின்போது இவர் சில அரில்களை (ஐயங்களை) எழுப்பினார். அவற்றைத் தொல்காப்பியர் போக்கினார். பின்னரே தொல்காப்பியம் அரங்கேறியது.

“மயங்கா மரபின் எழுத்துமுறை”- அதங்கோட்டாசானுக்கு எழுந்த ஐயங்கள் எழுத்து எழுத்துமுறை வைப்பில் எனப் பனம்பாரனார் குறிப்பிடுகிறார்.

(அது வடமொழியை ஒப்புநோக்கி, எகர, ஒகர எழுத்துக்கள் பற்றியதாகவும், கசடதப வல்லினத்தில் வர்க்க எழுத்துக்கள் பற்றியதாகவும் இருந்திருக்கலாம்) தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்கள் மயங்கா மரபில் தன் நூலில் காட்டப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டித் தெளிவுபடுத்தினார்.

“ஐந்திரம்” – தொல்காப்பியர் ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கண நூல் அறிந்தவர். அதிலிருந்து மேற்கோள்களைக் காட்டி அதங்கோட்டாசானின் ஐயங்களைப் போக்கினார்.

“தொல்காப்பியன்”- தொல்காப்பியர் ஐந்திர நூலறிவு நிரம்பியவர் என்றாலும் தமிழின் தொன்மைக் காப்பை இயம்பும் (தொல்காப்பியம்) தொல்காப்பியன் என அரங்கேற்ற அவையில் தனது செயலை விளக்கும் காரணப்பெயரைத் தானே தோற்றுவித்துக்கொண்டார்.

“படிமையோன்”- தொல்காப்பியர் தமிழின் பல்வகைப் புகழைத் தன் தொல்காப்பியத்தில் நிலைநிறுத்திக் காட்டியுள்ளார் என்று பனம்பாரனார் குறிப்பிடுகிறார்.

இவரது கூற்று தமிழின் புகழைப் படிமையாக்கிய படிமையோன் என்றும் பொருள்படுமாறு அமைந்துள்ளது. படிமையோன் என்பதற்குப் படிமையாகிய தவக்கோலம் பூண்டவர் என்றும் பொருள் காண்கின்றனர்.

பாயிரம் கூறும் செய்திகள்
தமிழ் கூறும் நல்லுலகம் என்பது வடவேங்கடம், தென்குமரி எல்லைகளுக்கு இடையே பரந்திருக்கும் நாடு.

இங்கு வழங்கிய மொழி, எழுதப்பட்ட செய்யுள், ஆகியவை தொல்காப்பியத்துக்கும், அவரது முன்னோர் நூலுக்கும் முதல்.

இந்த முதலானது எழுத்து, சொல், பொருள் என முன்னோரால் பகுத்துக் கூறப்பட்டிருந்தது. இவை செந்தமிழின் இயற்கை.

தொல்காப்பியர் செந்தமிழ் வழங்கிய நிலத்தையும் கருத்தில் கொண்டார். முன்னோர் நூல்களைத் தேடிக் கண்டறிந்து அவற்றிலுள்ள செய்திகளை முறைப்படுத்தி எண்ணிப் பார்த்தார். அவற்றைப் புலமாகத் தொகுத்தார்.

இது போக்கு என்னும் குற்றம் இல்லாத பனுவல் – நூல்
இதனை நிலந்தரு திருவிற் பாண்டியன் புலவர் – அவையில் அரங்கேற்றினார். அப்போது அதங்கோட்டு ஆசான் என்பவர் எழுப்பிய ஐயங்களைப் போக்கினார்.

இந்த அதங்கோட்டாசான் அறத்தை மட்டும் அழைத்துப் பேசும் நாவினை உடையவர். நான்கு வேதங்களிலும் முதிர்ந்த அறிவினை உடையவர். தமிழ் (ஆரியத்தோடு) மயங்காத எழுத்து முறைமையை அதங்காட்டாசானுக்கு எடுத்துக் காட்டினார்.

தொல்காப்பியர் ‘ஐந்திரம்’ என்னும் நூல் நிரம்பியிருந்த அறிவினை உடையவர்.

(ஐந்திரம் என்பது பாணினி எழுதிய வடமொழி இலக்கணத்துக்கு முந்துநூலாய் விளங்கிய வடமொழி இலக்கண நூல்.) இந்தப் புலநூலால் தன்னைத் தொல்காப்பியன் என நிலைநாட்டிக்கொண்டார்.

இதனால் படிமைக்கோலம் பூண்டிருந்த தொல்காப்பியர் புகழ் பலவாகப் பெருகிற்று, (படிமையோன் = துறவி)

தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!

இசைத்தமிழின் தொன்மை – 16

தொல்காப்பியம் – 2
இசைத்தமிழின் தொன்மை - 16“நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து”

விளக்கம்
மாற்றானது நிலத்தை தன் கீழ் வாழ்வார்க்கு கொண்டு கொடுக்கும் மன்னன் மாகீர்த்தியது, அவையின் கண் நான்கு மறைகளையும் அதாவது ரிக், யஜூர் , சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களையும் முற்றும் உணர்ந்த “அதங்கோடு” என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது.

இளம்பூரணரின் கருத்து
தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர்

“நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த “அதங்கோடு” என்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது” என்று கூறுகின்றார்.

அடைமொழி இன்றி தனிமொழியாக “அதங்கோடு” என்ற ஊர் திகழ்கின்றது. அதனால் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தை அரங்கேற்றியவர் அதன்கோட்டில் பிறந்து தமிழ் ஆய்ந்த இடம் “அதங்கோடு” என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொன்மைக் காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது.

அக்கூட்டுக் குடும்பத்தினைச் சுருக்கமாக “குடி” என்பர். “குடி உயரக் கோல் உயரும்” என்பதும் பழமொழி ஆகும்.

ஒவ்வொரு குடிக்கும், ஒவ்வொரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த “காப்பியக்குடி” யில் வாழ்ந்த ஒருவரே இந்நூலின் ஆசிரியராவர்.

தொல்காப்பியர் காலம்
தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர்என்று அறிய முடிகிறது. அவர் தம் பாயிர உரையில் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்று குறிப்பிடுகிறார்.

“ஐந்திரம்” என்பது சமஸ்கிருத இலக்கணநூலாகும். இது பாணினி எழுதிய சமற்கிருத இலக்கண நூலுக்குக் காலத்தால் முற்பட்டது.

தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் தோன்றவில்லை. எனவே தொல்காப்பியர் பாணினிக்கு முந்திய நூலான ஐந்திரம் என்னும் நூலையும் அறிந்திருந்தார்.

தமிழில் இருந்த “முந்துநூல்” (அகத்தியம்) கண்டிருந்தார். எனவே தொல்காப்பியர் பாணினியின் காலமாகச் சொல்லப்படும் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பது தெளிவு.

இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது. கிறித்துவுக்கு முற்பட்டது என்ற முடிவிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

க.வெள்ளை வாரணர் – கி.மு. 5320
மறைமலையடிகள் – கி.மு. 3500
கா.சுப்பிரமணிய பிள்ளை – கி.மு. 2000
ச.சோ.பாரதியார் – கி.மு. 1000
க.நெடுஞ்செழியன் – கி.மு. 1400
மா.கந்தசாமி – கி.மு.1400
கே.கே.பிள்ளை – கி.மு. 400
மு.வரதராசனார் – கி.மு. 500
ஞா.தேவநேயப் பாவாணர் – கி.மு.700
சி.இலக்குவனார் – கி.மு.700
இரா.இளங்குமரன் – கி.மு.700

தொல்காப்பியர் காலத்தின் ஆய்வில் கீழ் எல்லையாக கி.மு.7-ஆம் நூற்றாண்டைக் கொள்ளுதல் தகும்.

தொல்காப்பியம் என்ற இலக்கிய வரலாற்று “உரைநடைத் தொல்காப்பிய’ நூலில் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), க.வெள்ளை வாரணர், தொல்காப்பியம் திருக்குறளுக்கு முற்பட்டது என்று கணிக்கின்றார். சங்கப் பாடல்களுக்கு முற்பட்டது என்பதைப் பல சான்றுகளால் நிறுவியுள்ளார்.

சி.இலக்குவனார், தொல்காப்பியம் திருக்குறளுக்கும் சங்கப் பாடல்களுக்கும் முற்பட்டது என்பதற்குப் பல சான்றுகள் தந்துள்ளார். இவையும் இவை போன்ற செய்திகளும் எளிதில் மறுக்கக்கூடியதே.

பாணர், பொருநர் போன்றவர்களின் ஆற்றுப்படைப் பாடல்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஆனால், அவர்களின் பாடலுக்கு இலக்கிய வடிவம் தந்து, புலவர்கள் அவர்கள் பாடலைப்போல பாடியவையே பத்துப்பாட்டில் உள்ளன.

தொல்காப்பியர் செய்யுள் வடிவமான பாவகைகளைக் கூறும் விளக்கம் அனைத்தும், அவர் தமக்கு முந்தியவற்றைக் கண்டு கூற முற்படுவதை உணர்த்துகின்றன.

பிற்கால யாப்பிலக்கண நூல்களைப்போல வரையறைப்படுத்திக் கூறவில்லை. இலக்கணம் கூறும் முறை தொடக்க காலத்தைக் காட்டுகிறது.

இதனால் முதற்கண் சங்கப் பாடல்களின் காலத்தை ஒரு முடிவு செய்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.

சங்க இலக்கியப் பாடல்கள் பாடப்பட்ட காலம் கி.மு. 5, 4ம் நூற்றாண்டுகள் என்பதை, நடுநிலையாளர் அனைவரும் ஒப்புவர் என்பது இயற்கையே.

சங்கப் பாடல்களின் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்பதை அதன் மேல் எல்லையாகக் கருதலாம்.

தொல்காப்பியம் அச்சங்கப் பாடல்களுக்கு சில நூற்றாண்டுகள் முற்பட்டிருக்க வேண்டும் என்பதும் முன்பே குறிக்கப்பட்டது.

இங்கு காட்டப்பட்டுள்ள சான்றுகளின் படியும் சான்றோர் பலரது ஆய்வுகளின் படியும் உற்று நோக்கினால், தொல்காப்பியர் காலம் கி.மு.7ம் நூற்றாண்டுக்கும் 8ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது எனக்கொள்ளுதலே மிகப்பொருத்தமுடையதாகும்.

கி.மு. 31, திருவள்ளுவர் காலம் என முடிவு செய்யப்பட்டதுபோல, கி.மு. 711 தொல்காப்பியர் காலம் என முடிவு செய்யலாம்.

தொல்காப்பியர் காலம் பற்றிப் பல்வேறு கருத்துகள் உள்ளன. எனினும் திருவள்ளுவர் காலம் பற்றி ஒரு முடிவு செய்ததும் திருவள்ளுவர் திருவுருவம் பற்றிய கருத்துப் போலவும் தொல்காப்பியர் திருவுருவம் பற்றி (கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் போன்ற வடிவம்) ஒரு கருத்துடன் முடிவுசெய்தலும் திருவள்ளுவர் நாள் போல, தொல்காப்பியர் நாள் ஒன்றைக் குறிப்பது அச்சான்றோரை தமிழ்ப் புலவோரில் முதற்குடி மகனெனப் போற்றத் தகுந்த பெருமையுடையவரை ஆண்டுதோறும் நினைந்து கொண்டாட வாய்ப்பாகும்.

தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்தில், நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் முன்னிலையில், தொல்காப்பியர் தம் நூலை அரங்கேற்றினார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து, அரச அவையத்தில் (சங்கத்தில்) புதிய நூல்கள் அரங்கேற்றப்பட்ட மரபு மிகத் தொன்மைமிக்க காலத்திலிருந்து வழக்கிலிருந்தமை அறியப்படுகிறது.

பாண்டிய நாட்டு மதுரையில் இம்மரபு தொடர்ந்து நடந்ததைக் கலித்தொகையால் அறிகிறோம்.

கலித்தொகையில், பாலைக்கலியில், பாலை பாடிய பெருங்கடுங்கோ இதைக் குறிப்பிடுகிறார்.

தலைவன் பிரிந்து சென்ற போது திரும்பி வருவதாகக் கூறிச் சென்றது இளவேனிற் காலமாகும்.  ஆனால், தலைவன் இளவேனிற் பருவம் வந்தும்,  கூறியபடி வந்திலன்; சிறிது காலம் தாழ்த்தது. “அப்பருவம் வந்ததும், தலைவரும் வருகிறார் பார் வருந்தாதே” எனத் தோழி கூறுவதாக இப்பாடல் உள்ளது.

“தரவு” என்ற முதற்பகுதியில் இளவேனில் வருணனை, பிறகு மூன்று “தாழிசை”களில் இவ் இளவேனிற் பருவமல்லவா அவர் வருவதாகச் சொன்னது; அவரும் மறவாது வந்தனர் எனக் கூறும் ஆறுதலுரை எனப் பாட்டுப் பொருளமைப்பு உள்ளது.

இதில் வரும் மூன்று தாழிசைகளும் கால (சித்திரை, வைகாசி) வருணனைகளாக உள்ளன.

முதல் தாழிசை, வையையாறு பூத்துக்குலுங்கும் காலம். இரண்டாம் தாழிசை, காதலர் காமன் விழாக் கொண்டாடும் காலம். மூன்றாம் தாழிசை, புலவர்கள் புதிய நூல்களை அரங்கேற்றும் காலம்.

இங்கு மூன்றாம் தாழிசைதான் உற்று நோக்கத்தக்கது.

“நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுதன்றோ?
பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்கால்
கடரிழாய் நமக்கவர் வருதுமென்று உரைத்ததை”  (கலி:35)

நிலன் நாவில் திரிதரூஉம் – உலகோர் நாவிலெல்லாம் பலவாறு புகழ்பாடும்,

நீண்ட மாட மாளிகைகளையுடைய இக் கூடல் மாநகரிலுள்ளார் புலவர்களின் நாவில் பிறந்த புதிய சொற்களை – நூல்களைக் கேட்டு இன்பம் நுகர்ந்து மகிழும் இளவேனிற் காலமல்லவா?

புலன் நாவில் பிறந்த புதிய சொல் – புதிய புதிய நூல்களைப் புலவர்கள் புதிதாக இயற்றி வந்து, அவர்களே அவற்றை எடுத்துக் கூறி அரங்கேற்றம் செய்வர் என்பதாம்.

கி.மு. 711, சித்திரை மாதம், முழுமதிநாள் (சித்ரா பெளர்ணமி) தொல்காப்பியர் தம் ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியத்தை அரங்கேற்றிய நாளாக மட்டுமன்றி, அவரது பிறந்த நாளாகவும் கொண்டு, கொண்டாடுதல் மிகப்பொருத்தமுடையதாகும்.

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை – 17

இசைத்தமிழின் தொன்மை - 17 தொல்காப்பியம் – 3

தொல்காப்பியம் – பெயர் விளக்கம்
“தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம்”.
“தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர்”. என்னும் இருவேறு கருத்துக்கள் அறிஞர்களிடையே  நிலவிவருகின்றன.

“தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம்”
தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான ‘வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் ‘தொல்காப்பியம்’ என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) . இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.

அகத்தியர் செய்தது அகத்தியம்.
பன்னிருவர் செய்தது பன்னிரு படலம்.
இந்திரன் செய்தது ஐந்திரம்.
காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம்.
பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம்.
திருமூலர் செய்தது திருமூலம்.
இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும், தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும், பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் எனக் கொள்வதே முறைமையாகும்.

கபிலர், தொல்கபிலர், பரணர், வன்பரணர் என வேறுபடுத்தப்படும் புலவர்களை நாம் அறிவோம். அதுபோலக் காப்பியனார் என்னும் பெயரில் தொல்காப்பியனார், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இருந்துவந்ததை வரலாறு காட்டுகிறது.

தொல்காப்பியப் பாயிரம் “புலம் தொகுத்தோன்… ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன்” என்று கூறுகிறது. இதில் தொல்காப்பியன் புலம் (=இலக்கணம்) தொகுத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

“தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர்”
இயம்புவது “இயம்” ஆகும்.  இயத்துக்குக் காப்புத் (காவல்) தருவது “காப்பியம்”.  தொன்மையான காப்பியம் ஆதலால் இது தொல்காப்பியம் ஆனது.

தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனப்பட்டார். நன்னூல் செய்த பவணந்தி முனிவரை நாம் நன்னூலார் என வழங்குவது போன்றதே இது.

தோற்றம்
தொல்காப்பியப் பாயிரம் இவரை:
“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்
எனத் தன் பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறைந்த படிமையோன்” என்று குறிப்பிடுகிறது.

தொல்காப்பியர் ‘புலம்’ தொகுத்தார் என்றும் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார்.

புலம் என்றும் புலன் என்றும் நாம் அறிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நிலைக்களங்களைக் குறிப்பிடுகிறோம்.

அது போல மொழிக்கு அடிப்படையாக அமைந்துள்ள எழுத்து முதலான களங்களைக் காட்டுவது புலம் ஆகும். ஆகவே தொல்காப்பியர் புலம் தொகுத்தார் ஆனார். தொல்காப்பியர் பற்றி வேறு தனிப்பட்ட தகவல்கள் அதிகம் காணப்படவில்லை.

தொல்காப்பிய ஆசிரியர் சமணர் என்று சிலரும் பிராமணர் என்று சிலரும் குறிப்பிட்டாலும், வேறு சிலர் இது பலரால் பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல் என்றே நம்புகின்றனர்.

தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதங்களில் இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள்.

நூலின் அமைப்பு
தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது.

இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது.

மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும், அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும், தமிழ்மரபையும் விளக்குகிறது.

எழுத்ததிகாரம்
தொல்காப்பி எழுத்து நடை – ஒரு பகுதி.
1. நூல் மரபு – (நூன்மரபுச் செய்திகள்)
2. மொழி மரபு – (மொழிமரபுச் செய்திகள்)
3. பிறப்பியல் – (பிறப்பியல் செய்திகள்)
4. புணரியல் – (புணரியல் செய்திகள்)
5. தொகை மரபு – (தொகைமரபுச் செய்திகள்)
6. உருபியல் (உருபியல் செய்திகள்)
7. உயிர் மயங்கியல் (உயிர் மயங்கியல் செய்திகள்)
8. புள்ளி மயங்கியல் (புள்ளிமயங்கியல் செய்திகள்)
9. குற்றியலுகரப் புணரியல் (குற்றியலுகரப் புணரியல் செய்திகள்)

முதலாவதாக உள்ள நூன்மரபு என்னும் இயலில் தமிழ் மொழியிலுள்ள எழுத்துக்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. எழுத்துக்களின் தொகுப்புப்பெயர்கள், எந்த எழுத்தோடு எந்த எழுத்து சேரும் என்பன போன்ற செய்திகள் இதில் சொல்லப்படுகின்றன.

இரண்டாவதாக உள்ள மொழிமரபு என்னும் இயலில் சார்பெழுத்துக்களைப் பற்றிய விளக்கமும், சொல் தொடங்கும் எழுத்துக்கள், சொல்லில் முடியும் எழுத்துக்கள் பற்றிய செய்திகளும் உள்ளன.

மூன்றாவதாக உள்ள பிறப்பியலில் எழுத்துக்களின் ஒலி எவ்வாறு எந்தெந்த உறுப்புகளில் பிறக்கும் என்னும் செய்திகள் சொல்லப்படுகின்றன.

நான்காவதாக உள்ள புணரியலில் நின்ற சொல்லின் இறுதி எழுத்தோடு வருகின்ற மொழியின் முதலெழுத்து எவ்வாறு புணரும் என்று விளக்கப்படுகிறது. இயல்பு, திரிபு, சாரியை பெறுதல் முதலானவை சொற்கள் புணரும்போது நிகழும் பாங்கு இதில் கூறப்படுகிறது.

ஐந்தாவதாக உள்ள தொகைமரபு என்னும் இயலில் வேற்றுமைப் புணர்ச்சி, வேற்றுமை அல்லாத அல்வழிப் புணர்ச்சி முதலானவை விளக்கப்படுகின்றன.

ஆறாவதாக உள்ள உருபியலில் எந்தெந்த எழுத்தின் இறுதியில் எந்தெந்த சாரியைகள் இணைந்து புணரும் என்று விளக்கப்படுகிறது.

ஏழாவதாக உள்ள உயிர்மயங்கியலில் உயிரெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.

எட்டாவதாக உள்ள புள்ளிமயங்கியலில் மெய்யெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.

ஒன்பதாவதாக உள்ள குற்றியலுகரப் புணரியலில் குற்றியலுகரத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.

இப்படி எழுத்து, மொழி புணர்மொழி ஆகிய மொழிக்கூறுகள்  எழுத்ததிகாரத்தில் விளக்கப்படுகின்றன.


தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை – 18

இசைத்தமிழின் தொன்மை - 18தொல்காப்பியம் – 4

சொல்லதிகாரம்
1. கிளவியாக்கம்
2. வேற்றுமை இயல்
3. வேற்றுமை மயங்கியல்
4. விளி மரபு
5. பெயரியல்
6. வினை இயல்
7. இடையியல்
8. உரியியல்
9. எச்சவியல்

சொல்லதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் உள்ளன. முதலாவது கிளவியாக்கம் என்னும் இயலில் தமிழ்ச் சொற்றொடர் வாக்கியமாக அமையும் பாங்கு கூறப்படுகிறது.

இரண்டாவது வேற்றுமையியலில் வேற்றுமை உருபுகள் இன்னின்ன கருத்துக்களைப் புலப்படுத்திக்கொண்டு சொற்றொடராக அமையும் என்பது விளக்கப்படுகிறது.

மூன்றாவது வேற்றுமை மயங்கியலில் 2, 3, 4, 5, 6, 7 வேற்றுமை உருபுகள் உருவில் திரிந்தும், பொருளில் வேறுபட்டும் நிற்கும் இடங்கள் எவை என விளக்கப்படுகிறது.

நான்காவது விளிமரபு என்னும் இயலில் 8-ஆம் வேற்றுமையாக எந்தப் பெயர்ச்சொல் எவ்வாறு மாற்றம் கொள்ளும் என்பது விளக்கப்படுகிறது.

ஐந்தாவது பெயரியலில் பெயர்ச்சொற்கள் தோன்றுமாறும், அவை ஒருமை, பன்மை என்னும் எண்ணைப் புலப்படுத்தும்போதும், தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் இடத்தைப் புலப்படுத்தும்போதும் எவ்வாறு அமையும் என்பது விளக்கப்படுகிறது.

ஆறாவது வினையியலில் வினைச்சொற்கள் காலம் காட்டும் பாங்கும், ஐம்பால் மூவிடங்களில் ஈறுகள் கொள்ளும் பாங்கும், எச்சங்களாகத் திரியும் பாங்கும் விளக்கப்படுகின்றன.

ஏழாவது இடையியலில் பெயரையும் வினையையும் கூட்டுவிக்க இடையில் வந்தமையும் இடைச்சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.

எட்டாவது உரியியலில் பெயருக்கும், வினைக்கும் உரிமை பூண்ட உரிச்சொறகள் எடுத்துக் காட்டப்பட்டு அவை உணர்த்தும் பொருள்கள் இவை என்பதும்
சொல்லப்படுகிறது.

ஒன்பதாவது எச்சவியலில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் பாகுபாடுகளும், பெயரெச்சம், வினையெச்சம், சொல்லெச்சம், பிரிநிலையெச்சம், எதிர்மறை எச்சம், ஒழியிசை எச்சம், உம்மை எச்சம், என-என்னும் எச்சம் முதலானவை பற்றிய விளக்கங்களும்,

ஈ, தா, கொடு ஆகிய சொற்களின் சிறப்புப்பொருள்களும், இடக்கரடக்கல், குறைசொற்கிளவி பற்றிய விளக்கங்களும், காலமயக்கம், ஒருமை-பன்மை மயக்கம் பற்றிய பல்வகை மொழிக்கூறுகளும் விளக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கு இடையே நிரல்நிறை, சுண்ணம், அடிமறி-மாற்று, மொழிமாற்று ஆகிய செய்யுளின் பொருள்கோள் வகை புகுந்துள்ளது விந்தையே.

மொத்தத்தில் சொல்லதிகாரம் மொழியின் வாக்கிய அமைப்பைக் கூறுகிறது எனலாம்.

பொருளதிகாரம்
1. அகத்திணையியல்
2. புறத்திணையியல்
3. களவியல்
4. கற்பியல்
5. பொருளியல்
6. மெய்ப்பாட்டியல்
7. உவமவியல்
8. செய்யுளியல்
9. மரபியல்

பொருளதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும்  தமிழ்மொழியின் இயல்பைக் கூறுகின்றன.

பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. வாழ்வியல் நூல்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதையும் விளக்குகிறது. பொருளதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் உள்ளன.

முதலாவதாக உள்ள அகத்திணையியல், புறத்திணையியல் ஆகியவை முறையே அகத்திணைகள் ஏழையும், புறத்திணைகள் ஏழையும் விளக்குகின்றன.

அகத்திணைகள் ஏழு

அகத்திணைப் பிரிவுகள்
1. குறிஞ்சித் திணை
2. முல்லைத் திணை
3. மருதத் திணை
4. நெய்தல் திணை
5. பாலைத் திணை
6. பெருந்திணை
7. கைக்கிளைத் திணை

புறத்திணைகள் ஏழு

புறத்திணைப் பிரிவுகள்
1. வெட்சித் திணை
2. வஞ்சித் திணை
3. உழிஞைத் திணை
4. தும்பைத் திணை
5. வாகைத் திணை
6. காஞ்சித் திணை
7. பாடாண் திணை

மூன்றாவதாக உள்ள களவியலும், நான்காவதாக உள்ள கற்பியலும் அகத்திணையின் உட்பகுப்பு விளக்கங்கள்.

ஐந்தாவதாக உள்ள பொருளியல் அகப்பாடல்களுக்குப் பொருள் காணும் முறைமையை விளக்குகிறது.

ஆறாவதாக உள்ள மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும், புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது.

பெய்ப்பாடு என்பது உள்ளத்து உணர்வுகள் உடலில்(மெய்யில்) வெளிப்படுவது.

ஏழாவதாக உள்ள உவம இயல் வாய்மொழியில் பொருளை வெளிப்படுத்தும் பாங்கை விளக்குகிறது.

எட்டாவதாக உள்ள செய்யுளியல் அகச் செய்திகளையும், புறச் செய்திகளையும்; பண்டைய பாடல்களும், நூல்களும் எவ்வாறு புலப்படுத்தின என்பதை விளக்குகிறது.

ஒன்பதாவதாக உள்ள மரபியலில் உயிரினங்களின் பாகுபாடும், அவற்றின் இளமை, ஆண், பெண் பாகுபாட்டு வழக்குப் பெயர்களும் விளக்கப்படுகின்றன.

அத்துடன் ஓரறிவு உயிர்களை மரம் என்றும், புல் என்றும் பாகுபடுத்தி அவற்றின் இலை, காய், பழம், முதலானவற்றிற்கு வழங்கப்படும் பெயர்களும் சுட்டப்படுகின்றன.

நிலம், தீ, நீர், வளி, விசும்பு என்னும் வரிசையில் ஐந்து பூதப்பொருள்களும் சுட்டப்படுகின்றன.

உயிரினங்களின் இளமை, ஆண், பெண் ஆகியவற்றை விளக்கிய பின்னர், ஓரறிவு உயிரினங்களை விளக்கியிருப்பதற்கு முன்னர், இடைப்பகுதியில், மக்களை அந்தணர், அரசர், வைசியன், வேளாண் மாந்தர் என்னும் பாகுபாடு, நிரல் மாறி உள்ளதால் இந்தப் பாகுபாட்டைப் பிற்கால இடைச்செருகல் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

மேலும் மரபியலுக்குப் புறனடையாக அமைந்துள்ள நூற்பாக்களுக்குப் பின்னர் ஓர் இணைப்பைப் போல் நூல், உரை, உத்தி பற்றிய பாகுபாடுகள் பிற்காலத்து 13ஆம் நூற்றாண்டு நன்னூலார் பாங்கில் அமைந்துள்ளன.

மொத்தத்தில் பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலையும், தமிழ்ப் பாடல்களின் அமைதியையும் விளக்குகிறது எனலாம்.

இலக்கணம் – சொல்விளக்கம்
தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் – சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம்.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்

தொல்காப்பிய ஆறு பண்டைய உரையாசிரியர்கள்
1. இளம்பூரணர்-எழுத்து, சொல், பொருளதிகாரத்திற்கு
2. பேராசிரியர்- பொருளதிகாரத்திற்கு
3. சேனாவரையர்- சொல்லதிகாரத்திற்கு
4. நச்சினார்க்கினியர்
5. தெய்வச்சிலையார்
6. கல்லாடனார்

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை – 19

தொல்காப்பியம் – 5

இசைத்தமிழின் தொன்மை - 19தொல்காப்பியத்தில் தமிழிசை

தொல்காப்பியத்தில் தமிழிசை பற்றிய குறிப்புகள் உள்ளன. பழந்தமிழ் இலக்கண நூல்களுள் முழுமையாகக் கிடைக்கும் நூல் தொல்காப்பியம் ஆகும். இது தொல்காப்பியர் என்பவரால் எழுதப்பட்டது.

எழுத்து, சொல், பொருள் என்ற தமிழ் இலக்கணம் கூறும் நூலாகும். இசைத்தமிழ், தொடர்பான செய்திகளையும் இந்நூல் ஆங்காங்கு கூறுகின்றது. தமிழிசை பற்றிய நூல்களில், இன்று கிடைக்கப்பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும்.

இந்நூலின் காலக் கணிப்பு தமிழர் இசையின் தொன்மையை உறுதிப்படுத்தும். இருவகை இசை, இசைக் கருவிகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஒன்று தொழிலிசை, மற்றையது இன்ப இசை. தொழிலிசைக் கருவி பறை என்றும், இன்ப இசைக் கருவி யாழ் என்றும் குறிப்பிடுகிறது.

ஒவ்வொரு திணைகளுக்கும் உரிய தொழிலிசை, இன்ப இசை பற்றியும் இது குறிப்பிடுகிறது.

இசைத்தமிழ் பற்றிய தொல்காப்பியச் சான்றுகள்
“அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.”  (எழுத்து. 33)

“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.” (அகத். 20)

“துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே “  (களவு. 1)

“பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலிலியர் அறிவர் கண்டோர்’’  (கற்பு. 52)

“பாட்டின் இயல பண்ணத்தி யியல்பே”  (செய். 173)

இசையொடு பொருந்திய யாழ் நூலில் இசையிலே எழுத்து ஒலிகள் அளவுகடந்து ஒலித்தலும், ஒற்றுக்கள் நீண்டு ஒலித்தலும் உண்டு என்று அறிஞர் கூறுவர் என்பது இதன் பொருள்.

இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 18ம் நூற்பா தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது.

இங்கு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று பறை.

யாழ்
தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். மிடற்றிசை (குரலிசை), நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை), காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை) ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.

பண்வகைகளை “யாழின் பகுதி” எனவும், இசைநூலை “நரம்பின் மறை” எனவும், தொல்காப்பியர் குறித்துள்ளார்.

பண்டைநாளில், நரம்புக் கருவியாகிய யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.

பறை
தொல்காப்பியர் கூறும் “பறை” என்னும் சொல் தாளம் பற்றியதாகும். அதாவது தாளத்தைக் கொட்டிக் கொடுக்கும் பல்வேறு தாளக்கருவிகளின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.

ஐந்துதிணைக்குரிய பண்களும், அதற்குரிய காலமும்
நிலத்தை ஐந்தாக வகுத்துக் கொண்ட தமிழர் அந்தந்த நிலத்துக்குரிய இசையைகளையும் உருவாக்கினர்.

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும, இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார்.

பண் இசைப்பதற்குரிய பொழுதையும் வரையறை செய்துள்ளார்.

நிலம் – குறிஞ்சி
இசைத்த பண் – குறிஞ்சிப்பண்
இசைத்த யாழ் – குறிஞ்சி யாழ்
முழங்கிய பறை – வெறியாட்டுப் பறை, தொண்டகப் பறை
தொழுத தெய்வம் – சேயோன் என்னும்முருகன்
பண்ணிற்குரிய சிறுபொழுது – யாமம் அல்லது நள்ளிரவு

நிலம் – முல்லை
இசைத்த பண் – முல்லைப்பண்
இசைத்த யாழ் – முல்லையாழ்
முழங்கிய பறை – ஏறுகோட்பறை
தொழுத தெய்வம் – மாயோன் என்ற திருமால்
பண்ணிற்குரிய சிறுபொழுது – மாலை

நிலம் – மருதம்
இசைத்த பண் – மருதப்பண்
இசைத்த யாழ் – மருத யாழ்
முழங்கிய பறை – நெல்லரி, மணமுழவு
தொழுத தெய்வம் – வேந்தன் என்ற இந்திரன்
பண்ணிற்குரிய சிறுபொழுது – விடியல்

நிலம் – நெய்தல்
இசைத்த பண் – செவ்வழிப் பண்
இசைத்த யாழ் – விளரி, யாழ்
முழங்கிய பறை – மீன் கோட் பறை
தொழுத தெய்வம் – வருணன்
பண்ணிற்குரிய சிறுபொழுது – ஏற்பாடு

நிலம் – பாலை
இசைத்த பண் – பாலைப்பண்
இசைத்த யாழ் – பாலை யாழ்
முழங்கிய பறை – துடி
தொழுத தெய்வம் – கொற்றவை
பண்ணிற்குரிய சிறுபொழுது – நண்பகல்

இசை என்ற சொல் தொல்காப்பியத்தில் 24 இடங்களில் வந்துள்ளது. இவை அனைத்தும் இசைக் கலையுடன் ஒரு வகையில் தொடர்பு உள்ளதாகவே அமைந்துள்ளது.

தொல்காப்பியர் குறிப்பிடும் பாட்டு, வண்ணம் ஆகிய சொற்கள் இசையோடு தொடர்புடைய ஆழ்ந்த பொருள் பொதிந்த சொற்களாகவே அமைந்துள்ளன.

தொல்காப்பியர் வண்ணத்தை 20 வகையாகப் பிரித்துப் பெயர்களைச் சுட்டி நூற்பா இயற்றியுள்ளார்.

தொல்காப்பியம் ஒலிநயம், ஓசைநயம் குறித்து ஏராளமான செய்திகளைக் கூறுவதுடன், குறிப்பாக ஒலி நயத்தின் சிறப்பை விளக்கும் வண்ணம், சந்தம் போன்றவற்றையும் விரிவாக பேசுகிறது.

“வண்ணந் தானே நாலைந்தென்ப ..”என்று கூறி, அந்த இருபது வண்ணங்களை விபரித்துச் செல்கிறார் தொல்காப்பியர்.

“பாஅ வண்ணந் தா வண்ணம்
வல்லிசை வண்ண மெல்லிசை வண்ண
மியைபு வண்ண மளபடை வண்ண
நெடுஞ் சீர் வண்ணங் குருஞ்சீர் வண்ணஞ்
சித்திர வண்ண நலிபு வண்ண
மகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ண
மொழகு வண்ண மொரூஉ வண்ண
மெண்ணு வண்ண மேந்தல் வண்ண
முருட்டு வண்ண முடுகு வண்ணாமன்
றாங்கன மறிப வறிஞ்சதிசி னோரே” – செய்யுள் : 213

அவர் பட்டியலிட்ட வண்ணங்கள்.
1. பாஅ வண்ணம் 2. தாஅ வண்ணம் 3. வல்லிசை வண்ணம் 4. மெல்லிசை வண்ணம் 5. இயைபு வண்ணம் 6.அளபடை வண்ணம் 7. நெடுஞ்சீர் வண்ணம் 8. குருஞ்சீர் வண்ணம் 9. சித்திர வண்ணம் 10. நலிபு வண்ணம் 11. அகப்பாட்டு வண்ணம் 12. புறப்பாட்டு வண்ணம் 13. ஒழுகு வண்ணம் 14. ஒருஉ வண்ணம் 15. எண்ணு வண்ணம் 16.அகைப்பு வண்ணம் 17. தூங்கல் வண்ணம் 18. ஏந்தல் வண்ணம் 19. உருட்டுவண்ணம் 20. முடுகு வண்ணம்

இவ்வண்ணங்களை அவற்றின் இசைத்தன்மையை உயர்த்தும் வகையில் அமைத்துள்ளார்.

தொல்காப்பியர் பாடல்களை அவற்றின் அமைப்பு, கருத்து மற்றும் இசைத்தன்மையைக் கொண்டு பாகுபாடு செய்துள்ளார். கலிப்பாவும், பரிபாடலும் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தன.

பரிபாட்டு என்பது இசைப்பா என பேராசிரியர் குறிப்பிடுகிறார். பிசியைப் போன்ற இயல்புடையதாகப் பண்ணத்தி என்னும் இசைப்பாடல் இருப்பதைத் தொல்காப்பியத்தின் வழி அறியலாம்.

ஊடல்தீர்க்கும் வாயில்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடும் பாணன், கூத்தன், பாடினி, விறலி ஆகியோர் இசையிலும் கூத்திலும் திறமை உடையவர்கள் என்பதைச் சங்க இலக்கியத்தின் வாயிலாக அறிய முடிகிறது.

தமிழிசைப்பண்கள் : தொடர் 15-19
சிறீ சிறீஸ்கந்தராஜா
15/04/2016 – 29/04/2016

தொகுப்பு – thamil.co.uk