அணியிலக்கணம் 14 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம்

அணியிலக்கணம் – தொடர்- 73

வழுக்கள் மலைவுகள் – 1

வழு : வழு என்பது பிழையைக் குறிக்கும் சொல்லாகும்.

வழா நிலை : பிழையின்றி எழுதவேண்டும் என்று வலியுறுத்துவது வழா நிலை ஆகும்.

வழு அமைதி : பிழையிருந்தாலும் ஒரு காரணம் கருதி ஏற்றுக் கொள்வது வழு அமைதி ஆகும்.

எடுத்துக்காட்டு
“அம்மா வந்தது”
“நாளை வந்தான்”
“குயில் கத்தும்”
அம்மா என்பது உயர்திணைச் சொல்; வந்தது என்பது அஃறிணை முடிவு.  இவ்வாறு உயர்திணையோடு அஃறிணையைச் சேர்த்திருப்பது  திணை வழு ஆகும்.

நாளை என்பது எதிர்காலச் சொல். வந்தான் என்பது இறந்தகால முடிவு.  இவ்வாறு எதிர்காலத்தையும், இறந்தகாலத்தையும் சேர்த்திருப்பது கால வழு ஆகும்.

கூவும் என்னும் மரபுச் சொல்லுக்குப் பதிலாகக் கத்தும் என்று இருப்பதால்  அது மரபு வழு ஆகும்.

வழுக்கள் மலைவுகள்
“பிரிபொருட் சொற்றொடர் மாறுபடு பொருண்மொழி
மொழிந்தது மொழிவே கவர்படு பொருண்மொழி
நிரனிறை வழுவே சொல்வழு யதிவழு
செய்யுள் வழுவொடு சந்தி வழுவென
எய்திய ஒன்பதும் இடனே காலம்
கலையே உலகம் நியாயம் ஆகம
மலைவும்உள் ளுறுத்தவும் வரைந்தனர் புலவர் ” (நூற்பா – 98)

1. பிரிபொருட் சொற்றொடரும்,
2. மாறுபடு பொருண்மொழியும்,
3. மொழிந்தது மொழிதலும்,
4. கவர்படு பொருண்மொழியும்,
5. நிரனிறை வழுவும்,
6. சொல் வழுவும்,
7. யதி வழுவும்,
8. செய்யுள் வழுவும்,
9. சந்தி வழுவும் என்னும் ஒன்பது வழுக்களை தண்டியலார் பட்டியலிடுகின்றார்.

1. இடமலைவும்,
2. கால மலைவும்
3. கலைமலைவும்,
4. உலகமலைவும்,
5. நியாய மலைவும்,
6. ஆகம மலைவும்
என்னும் ஆறுமலைவுகளையும் உள்ளிட்ட பதினைந்தும் செய்யுளிடத்து வரும் வழுக்களும் மலைவுகளும் வரைந்தனர் புலவர் என்று கூறுகிறார்.

முன்னர் ஒன்பது வழுக்களையும், பின்னர்  ஆறு மலைவுகளையும் வைத்தது ஏனெனில்,  ஒன்பது வழுவும் குற்றமாதல் பெரும்பான்மை குணமாதல் சிறுபான்மை என்பதனாலும்,  ஆறு மலைவும், ஒருதலையாகவே குற்றமாய்ப் புகழ்ச்சியிடத்துப் புனைந்துரையாகப் புணர்க்கத்தக்க புலவரால் மொழியப்படும்  சிறுபான்மைய என்பதனாலும் என்றறிக.

(1) பிரிபொருட் சொற்றொடர்
“அவற்றுள்
பிரிபொருட் சொற்றொடர் செய்யுள் முழுவதும்
ஒருபொருள் பயவா(து) ஒரீஇத் தோன்றும்.” (நூற்பா – 100)

பிரிபொருட் சொற்றொடர் என்பது, செய்யுள் முழுவதும் கூட்டி நோக்க ஒரு பொருளாக உணரப்படாது, தனித்தனி நோக்கப் பொருள் தோன்றுவதாகும்.
பிரிபொருள் – ஒன்றாத பொருள்
சொற்றொடர் – செய்யுள்
அதாவது, வாக்கியங்களை வெவ்வேறு நோக்கப் பொருளுடையனவாகவும், கூட்டி நோக்க ஒரு பொருளாக உணரப்படாதனவாகவும் வருவதாகும்.

எடுத்துக்காட்டு
“கொண்டல் மிசைமுழங்கக் கோபம் பரந்தனவால்
தெண்டிரைநீ ரெல்லாம் திருமுனியே – உண்டுமிழ்ந்தான்
வஞ்சியார் கோமான் வரவொழிக மற்றிவளோர்
பஞ்சியார் செஞ்சீ றடி”

வானின்கண் மேகங்கள் முழங்க நிலத்தின்கண் இந்திர கோபம் பரந்தன எனவும்,
தெளிந்த அலைகளையுடைய கடல் நீரையெல்லாம் அகத்திய முனியே உண்டு உமிழ்ந்தான் எனவும்,
கருவூராருக்குக் கோமானாகிய சோழனே வருதலை ஒழிவாயாக எனவும்;
இவள் செம்பஞ்சியை யூட்டிய சிவந்த சிற்றடியாள் எனவும்,
தனித்தனி நோக்கப் பொருள் பயந்து நின்றும், கூட்டி நோக்கப்பொருள் பயவாமையினாலும் இது “பிரிபொருட் சொற்றொடர்” ஆயிற்று.


அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம்

வழுக்கள் மலைவுகள் – 2

அணியிலக்கணம் – தொடர்- 72(2) மாறுபடு பொருண்மொழி
“மாறுபடு பொருண்மொழி முன்மொழிந் ததற்கு
மாறுபடத் தோன்றி வருமொழித் தாகும்.”
(நூற்பா – 100)

மாறுபடு பொருண்மொழியாவது, முன்மொழிந்த சொற்பொருளோடு, மாறுபட்ட பொருள் தோன்றி வருமொழியுடைத்து. “வருமொழி” என்றது அதன் பொருளை.

“மின்னார் மணிப்பைம்பூண் வேந்தே! நினக்குலகில்
இன்னா தவர்யாரு மில்லையால் – ஒன்னார்
குலமுழுதும் கூற்றங் கொளவெகுண்டு நீயே
தலமுழுதும் தாங்கல் தகும்”

ஒளியினை யுடைய மணிகள் இழைத்த பசும்பொன்னால் செய்த ஆபரணங்களை யுடைய வேந்தனே!

நினக்கு இன்னாதவர் உலகில் யாவரும் இல்லை என்று கூறிப், பின்பு நின் பகைவர் உயிரை யெல்லாம் கூற்றுவன் குலத்தோடு கொள்ளும்படியாக வெகுண்டு நீயே இத்தல முழுவதும் தாங்குதல் நினக்குத் தக்கது என்று கூறியமையினால் இது மாறுபடு பொருண் மொழி ஆயிற்று.

முதலில் அரசனைப் புகழ்கின்ற புலவர், “உனக்கு உலகில் பகைவர் யாரு மில்லை” என கூறிவிட்டுப் பின்னர், “பகைவர் குலங்களை எல்லாம் அழித்து உலகைத் தாங்குகிறாய்” எனக் கூறுகிறார்.

இது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. காமம், அச்சம் ஆகிய உணர்வுநிலைகளில் இவ்வாறு முரண்மொழிகள் வரலாம் என்பது தண்டியலார் கூறும் புறனடை ஆகும்.

(3) மொழிந்தது மொழிவு
முன்னர்ச் சொன்ன சொல்லையே அதே பொருளில் மீண்டும் சொல்வது மொழிந்தது மொழிவு என்னும் வழு ஆகும்.

“மொழிந்தது மொழிவே கூறியதுகூறி
வேறுபட வொருபொருள் விளங்கா தாகும்”
(நூற்பா – 104)

“அங்கமி லாதவ னங்கன் தலம்புரியும்
வெங்கணையுங் காக்குங்கொல்? வேல்வேந்தர் – தங்கோன்
நிலையார்த் தொடையதுல னேரிழைக்காய் முன்னோர்
மலையாற் கடல்கடைந்தான் மால்”

வேலைத் தாங்கிய அரசர்க்கரசனாகிய, நிலைத்த ஆத்தி மாலையைத் தரித்த ஒப்பில்லாத சோழன், அங்கம் இல்லாதவனாகிய மன்மதன் கைத்தலங்களால் எய்யப்படுகின்ற கொடிய அம்புகளையும் காப்பானோ?

காப்பான்; ஏனெனில், ஆதியில் திருமால் திருமகளைப் பெறவேண்டி ஒரு மலையாலே பாற்கடலைக் கடைந்தான்.

இங்கே “அங்கமில்லாதவன்” என்று கூறியபின்னும், மீண்டும் அவனையே “அனங்கன்” என்றும் சொன்னமையான் மொழிந்தது மொழிவாகிக் குற்றமாயிற்று.
(அன் + அங்கன் = அங்கமில்லாதவன்)
விரைவுப் பொருளினும், சிறப்புப் பொருளினும் மொழிந்தது மொழிதல் குற்றமன்று என்பது புறனடை.

(4) கவர்படு பொருண்மொழி
ஒரு பொருளைத் தெளிவாக உணர்த்துவதற்காக வந்த சொல், அப்பொருளையே ஐயுறும்படி, பல பொருள்களை உணர்த்தி நிற்பது கவர்படு பொருண்மொழி என்னும் வழுவாகும்.

“ஒருபொருள் துணிய வுரைக்க லுற்றசொல்
இருபொருட்(கு) இயைவது கவர்படு பொருண்மொழி.” (நூற்பா – 106)

ஒரு பொருளைத் தெரிவுற உணர்த்தற்கு வந்த சொல், அதனையே ஐயுறும்படி பல பொருள்மேல் நிற்பது,கவர்படு பொருண்மொழி என்னும் குற்றமாகும்.

“புயலே புறம்பொதிந்து பூந்தா தொழுக்கி
மயலே கடவுளர்க்கு வாய்த்துச் – செயலை
எரிமருவு பூந்துணர்த்தாய் யாவரும்ஊ டாடார்
அரிமருவு சோலை யகத்து”

மேற்புறம் மேகத்தால் மூடப்பட்டு, அழகிய மகரந்தங்களைச் சொரிந்து, தேவர்களுக்கும் மயக்கத்தை உண்டாக்கி, அசோகினது நெருப்பைப் போன்ற நிறம் பொருந்திய பூங்கொத்துக்களை யுடையதாய், அரி சார்ந்திருக்கின்ற சோலையினுள் எவரும் ஊடே செல்லார்.

இதனுள் “அரிமருவு சோலை யகத்து” என்றவழி,
அரி என்பது – வண்டு, சிங்கம், நெருப்பு முதலிய பல பொருள்களுக்கும் பொதுவாதலான், ஒன்று துணியப்படாமையின் வழுவாயிற்று.

அரி என்பதற்கு வண்டு, சிங்கம், நெருப்பு முதலிய பல பொருள்கள் உண்டு. இப்பாடலில் அச்சொல் என்ன பொருளைத் தருகிறது என்ற தெளிவில்லை. ஆகவே இது கவர்படு பொருண்மொழி என்னும் வழுவாகும். எனினும் வழு என்று தோன்றாத இடத்தில் கவர்படுசொல் வருவது குற்றமன்று என்பது புறனடை.

“அரியே அனைத்துலகும் காக்கும் கடவுள்” என்பதில் உலகத்தைக் காத்தல் என்னும் தொழிலுக்குப் பொருத்தமான திருமாலை அரி என்ற சொல் குறிக்கும். அதுமட்டுமன்றி அத்தொழிலைச் செய்பவனான இந்திரனையும் குறிக்கும். இவ்வாறு வெவ்வேறு பொருள்தர வந்தாலும் இங்குக் குற்றமில்லை.

(5) நிரனிறைவழு
நிரனிறை அணியைப் பொருளணியியலில் பார்த்திருக்கிறோம். சில பொருள்களை வரிசையாக நிறுத்திப் பின்னர் அவற்றோடு தொடர்புடைய வேறு சில பொருள்களை  அடுத்த வரிசையில் நிறுத்தி முறையே அவற்றை இணைத்துப் பொருள் காண்பது நிரனிறை அணி ஆகும்.

அவ்வாறன்றி, முதலில் நிறுத்திய வரிசைக்கு மாறுபாடாக, அடுத்த வரிசையில் பொருள்களை மாற்றி வைப்பது நிரனிறை வழுவாகும்.

“ஒருநிரல் முன்வைத்(து) அதன்பின் வைக்கும்
நிரனிறை பிறழ்வது நிரனிறை வழுவே.”  (நூற்பா – 108)

ஒருநிரல் முன் எண்ணி வைத்து, அதன் பின் வைக்கும் நிரலை மொழிமாற்றிக் கொள்ளும்படி பிறழவைப்பது நிரனிறை வழுவாகும்.

“தெற்குக் குடக்கு வடக்குக் குணக்குமேல்
நிற்குந் திறத்துலகை நீடளிக்கும் – பொற்பினார்
ஈரெண் கலையோன் வருணன் இரவியமன்
யாரும் புகழியல்பி னார்”

தெற்கு, மேற்கு, வடக்கு ,கிழக்கு என்னும் திசைகளின்மேல் நிற்கும் திறமையினாலே உலகை நெடுங்காலம் காக்கும் பொற்பினை யுடையார், பதினாறு கலைகளை யுடைய சந்திரன், வருணன், சூரியன், இயமன் என எவரும் புகழக்கூடிய இயல்பினை யுடையார்.

இதனுள், தென்திசை முதல் குணதிசை யீறாக அடைவே எண்ணி, அத்திசைகளினின்றும் உலகங்காப்பவர் – இயமன், வருணன், சந்திரன், சூரியன், என முறையே வையாது, சந்திரன், வருணன், சூரியன், இமயன் என முறைபிறழ வைத்தமையின் வழுவாயிற்று.

எனினும் உய்த்துணர்ந்து கொள்ளுமாறு அமைத்திருந்தால் இவ்வழுவும் வழுவன்று என்பது புறனடை.

இயமன், வருணன், குபேரன், இந்திரன் ஆகிய நால்வரையும் முறையே தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளுக்குக் காவலர்களாகக் கூறலே மரபு.

எனினும் வடதிசைக்கு ஈரெண் கலையானாகிய சந்திரனைக் காவலாகக் கூறியதன் கருத்து விளங்கவில்லை.

குபேரன் திசையாகிய வடதிசையினைத் திவாகர நிகண்டு ‘சந்திர திசை’ எனக் கூறுதல் பற்றி, ‘ஈரெண் கலையோன் திசை’ எனக் கூறினர் போலும்!

அங்ஙனம் கொள்ளின் “ஈரெண் கலையோன்” என்பது குபேரனைக் குறிக்கும்; ‘ஈரெண்கலை’ என்னும் அடைமொழி சந்திரனுக்கு அடையாய்க் குபேரனைப் பெயரளவில் குறித்ததாகக் கொள்ளல் வேண்டும்.

கீழ்த் திசைக்கு இந்திரனைக் காவலராகக் கூறாது சூரியனைக் கூறியது, அத்திசைக்குச் ‘சூரிய திசை’ என்ற பெயர் பற்றிப் போலும்.

அணியிலக்கணம் – தொடர்- 75அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம்

வழுக்கள் மலைவுகள் – 3

(6) சொல்வழு : சொல்லிலக்கணத்தோடு மாறுபட்டு வரும் சொல்லைச் சேர்ப்பது சொல் வழு ஆகும்.

“சொல்வழு வென்பது சொல்லிலக் கணத்தொடு
புல்லா தாகிய புகர்படு மொழியே” (நூற்பா – 110)

சொல்லதிகாரத்தில் சொல்லிய இலக்கணத்தோடு மாறுபட்டு வருஞ்சொல் புணர்க்கப்படுவது.

“யாவகைய தாயர்க்கும் எங்களுக்கும் எந்தையர்க்கும்
ஆவி யிவளே யனையவர்க்கும் – கோவே!
நுனக்க பயமிந்த நுண்மருங்குல் மாது
தனக்கிடரொன் றில்லாமல் தாங்கு”

ஈன்றதாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய் என்ற எல்லாத் தாயர்க்கும், எங்களுக்கும், எங்கள் தந்தையர்க்கும், இன்னும் எல்லோருக்கும், இவளே உயிராவள்; ஆதலின், அரசனே! இந்த நுண்ணிய இடையினையுடைய மாது உனக்கு அடைக்கலம்; இவளுக்கு இடர் ஒன்றுமில்லாமல் இவளைக் காத்துக் கொள்வாயாக.

இதனுள் “எங்களுக்கு” எனவும் “நுனக்கு” எனவும் வழுச்சொல் புணர்க்கப்பட்டன ஆதலால் சொல்வழு ஆயிற்று.

“யாவகைய தாயர்க்கும்” என்று கூறிப், பின்னர் “எங்களுக்கும்” என்று தன்னை மறுபடி சொல்வது சொற்பிழை.

‘நினக்கு’ என்பதை ‘நுனக்கு’ என்பதும் சொற்பிழை.

இக்கூற்றிற்கு உரியாளும் தாய்மார்களில் ஒருத்தியாதலின்.

மேற்கூறியவை போன்ற வழுச்சொற்கள் சான்றோரால் வழங்கப்பட்டு வருவதால் அவை ஏற்றுக்கொள்ளப்படும் என்பது புறனடை ஆகும்.

(7) யதிவழு
யதி என்னும் சொல்லுக்குச் சீரோசை முடியுமிடம் என்பது பொருளாகும்.

செய்யுளில், ஓசைக்கேற்பச் சீரைப் பிரித்தமைக்கும்போது, பிரிக்கக் கூடாததாய் இருந்தால் இது யதிவழு ஆகும்.

“யதிவழு என்ப(து) ஓசை யறுவழி
நெறிப்பட வாரா நிலைமைய(து) என்ப” (நூற்பா – 110)

யதிவழுவாவது, ஓசைகொண்டு சீரறுக்கும் வழி, அறுத்தற்கு அரிதாய் வேறுபட்டுவரும் தன்மையதாகும்.

“மாடு பயிலும் வரையாளி மால்யானைக்
கோடுபுயத் துண்டுழலுங் கொள்கைத்தாம் – காடு
அரிதாம் இயல்பிற்(று) அரையிருட்கண் வாரல்
பெரிதாகும் ஐய! பிழை”

மலைப்பக்கங்களிலே சஞ்சரிக்கின்ற சிங்கம், மதயானையினது கோட்டைப் புயத்திலே தாங்கி வருந்தும் இயல்பினை யுடையதாகிய காடு, எவரும் செல்லற்கு அரிதாம் தன்மை யுடையதாம்; ஆதலின், ஐயனே! அக்காட்டில் நள்ளிரவில் வருதலை ஒழிவாயாக; அங்ஙனம்வரின் பெரிதும் பிழையாகும்.

“யாளி யானைக்கோடு புயத்துண்டு” என்றது, யானை மதங்கொண்டு சிங்கத்தையும் பாய, அதன்புயத்தில் தந்தம் முறிந்திருக்க அதனோடு சிங்கம் வருந்தித் திரியும் என்றபடி, இங்ஙனம் யானை சிங்கத்தையும் பாயும் எனவே, காட்டின் கொடுமை மிகுதிப்பாடு விளங்கும்.

இந்த வெண்பாத் தொடரில் “காடு அரிதாம்” எனப் பிரித்தது தவறு. அது “காடரிதாம்” என வருவதே முறை.

இலக்கண முறைப்படி சேர்ந்திருக்க வேண்டியதைப் பிரித்துச் சீரமைத்தமையால் இது யதி வழு ஆயிற்று.

எனினும், யாப்பிலக்கணத்தில் “வகையுளி” எனப்படும் சீர் பிரிப்பு முறைப்படி பிரித்திருந்தால் அது வழுவாகாது என்பது புறனடை.

“வகையுளி” யாவது அந்தந்தச் சொன்முடிபே சீர்முடிவாகத் தளைகொள்ளாமல் வேண்டியவிடத்துச் சீர்முடிவு செய்து தளைகொள்ளுதல் ஆகும்.

(8) செய்யுள்வழு
யாப்பிலக்கணத்தோடு பொருந்தாது வருவன செய்யுள்வழு ஆகும்.

பாக்களுக்கு விதிக்கப்பட்ட தளை, சீர், அடி இலக்கணங்களுக்கு மாறாக வருவனவற்றைச் ‘செய்யுள்’ என ஏற்க இயலாது.

“செய்யுள் வழுவே யாப்பிலக் கணத்தோ(டு)
எய்தல் இல்லா இயல்பிற் றாகும்” (நூற்பா – 114)

செய்யுள் வழுவாவது யாப்பிலக்கணத்தோடு பொருந்தாத இயல்பினை யுடைத்து

“ஆதரந் துயர்தர வயர் தருங் கொடிக்குப்
பூதலம் புனைபுகழ் வளவன் – தாதறாத்
தாங்கரும் பாலன்றித் தணியுமோ தாரனங்கன்
பூங்கரும்பால் வந்தடுத்த போர்”

ஆசையானது வருத்தத்தைத் தர அதனாலே வருந்துகிற பூங்கொடி போலும் மாதினுக்கு, பூமியை அலங்கரிக்கும்படியான புகழுள்ள சோழன் அணிந்திருக்கின்ற மகரந்தம் நீங்காத பூவரும்புகளால் ஆகிய மாலையாலன்றி, மாலையைத் தரித்த மன்மதனுடைய அழகிய கரும்பு வில்லால் வந்து சேர்ந்த போர்த் துன்பமானது தணியுமோ.

முன்னர் ஆசிரியம் வந்து, பின்னர் வெண்பாவாய் முடிந்தது. இங்ஙனம் முடிதற்கு இலக்கணமின்மையால் இது யாப்பு வழுவாயிற்று.

அதாவது, இந்தப் பாட்டில் முதல் இரண்டடிகள் ஆசிரியப்பாவுக்குரிய தளைகள் அமைந்துள்ள ஆசிரிய அடிகள் ஆகும்.

பின்னிரண்டடிகள் வெண்பா அடிகள்.

அதிலும் “பாலன்றித் தணியுமோ” என்ற சீர்களிடையே வெண்பாவிற் குரியதல்லாத கலித்தளை அமைந்துள்ளது. ஆகவே இது செய்யுள் வழு ஆகும்.

இதற்கும் புறனடை உண்டு.

“ஆரிடத் துள்ளும் அவைபோல் பவற்றுளும்
நேரும் என்ப நெறியுணர்ந் தோரே” (நூற்பா – 115)

செய்யுள் வழு ஆரிடத்துள்ளும், ஆரிடப் போலியுள்ளும் சிறுபான்மை வரையப்படா.

“கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க
ஒண்செங் குருதியு ளோஒ கிடப்பதே – கெண்டிக்
கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள்
அழுதகண் ணீர்துடைத்த கை”

தலைவரது பிரிவால் கூட்டம் இல்லாத யான், அப்பிரிவுத்துன்பம் உடம்பை யறுத்துத் தின்னப் பூமியில் கிடந்து பிணங்கப் பலநாளும் அழுத கண்ணீரைத் துடைத்துத் துன்பம் போக்கிய எனது கை, வாளைப் பற்றிக்கொண்டு கடகத்தில் உள்ள இரத்தினம் ஒளிவிடச் சிவந்த இரத்தத்தினுள்ளேயோ தோய்ந்து கிடப்பது.

இது, பதினாறு சீர் வெண்பாவாய் யாப்பிலக்கணத்தோடு பொருந்தாது வந்தது.

ஆரிடமாவன – இருடிகளாற் சொல்லப்படுவன.
ஆரிடப்போலியாவன – பாட வல்ல புலவரால் சொல்லப்படுவனவாம்.

முனிவர்கள் போன்றவர்கள் செய்யும் பாடல்கள் சிறுபான்மை மறுக்கப்படா.

இதுபோன்ற புறனடைகளைத் தமிழ் யாப்பிலக்கணம் ஏற்பதில்லை.

ஒரு குறிப்பிட்ட யாப்பு அமைப்புத் தவறினால் அப்பாட்டு ‘இனம்’ என்னும் வேறு பிரிவில் அடக்கப்படும் என்பது யாப்பிலக்கணம்.

குறள் வெண்பாவில் தளைப் பிழை நேர்ந்தால் அது “குறள்தாழிசை” என்றே வகைப்படுத்தப்படும்.

முனிவர்களுக்கென்று விதிவிலக்குக் கொடுப்பது தமிழ் யாப்பு மரபில் இல்லை.

(9) சந்திவழு
எழுத்திலக்கணத்தில் சொல்லப்படுகின்ற புணர்ச்சி இலக்கணத்தோடு பொருந்தாது வருவது சந்திவழு ஆகும்.

“சந்தி வழுவே எழுத்திலக் கணத்துச்
சந்தியொடு முடியாத் தன்மைத் தாகும்” (நூற்பா – 116)

அதாவது, எழுத்ததிகாரத்து ஓதப்பட்ட புணர்ச்சி யிலக்கணத்தோடு பொருந்தாது வருவது சந்தி வழுவாகும்.

“என்பூ டுருக இனைவேன் மனங்கலக்கும்
பொன்பூண் சுமந்த புணர்முலையீர்! – மின்போல்
நுடங்கிடைக்குங் காவலாய் நோக்கங் கவரும்
படங்கிடைக்கும் அல்குற் பரப்பு”

எலும்பும் உள்ளே உருகும்படி வருந்துவேனாகிய எனது மனத்தைக் கலக்குகின்ற பொன்னாலாகிய அணிகலங்களைத் தாங்கிய இணைந்த கொங்கைகளை யுடையீர்!

பாம்புப் படத்தினை எதிர்க்கும் நும் கடிதடப் பரப்பானது, மின்னலைப் போல் அசைகின்ற இடைக்குங் காவலாய், பார்ப்பவரது நோக்கம் கவரும்.

“பொன்பூண்” என்பது புணர்ச்சி இலக்கணப்படி “பொற்பூண்” என்று வரவேண்டும். ஆகவே “பொன்பூண்” என்பது சந்தி வழுவாயிற்று.

“னகார இறுதி வல்லெழுத் தியையின்
றகாரமாகும் வேற்றுமைப் பொருட்கே” (தொல் – புள்ளி – 37)

என்னும் விதிப்படி பொற்பூண் என்றாக வேண்டுவது, அங்ஙனமாகாது பொன்பூண் என நிற்றலின், இது சந்தி வழுவாயிற்று.

 

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம்

வழுக்கள் மலைவுகள் – 4

அணியிலக்கணம் – தொடர்- 74மலைவுகள்
மலைவு என்னும் சொல்லுக்கு மயக்கம், முரண் என்பன பொருள். செய்யுளில் வரும் வழுக்கள் போலவே மலைவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவை.

1. இட மலைவு
2. கால மலைவு
3. கலை மலைவு
4. உலக மலைவு
5. நியாய மலைவு
6. ஆகம மலைவு

(1) இட மலைவு
மலை, நாடு, ஆறு போன்றவை இடங்கள். இவற்றில், ஒன்றில் உள்ள பொருள் வேறொன்றில் உள்ளதாகச் சொல்வது இட மலைவு.

“இடமெனப் படுபவை மலைநாடி யாறே” (நூற்பா – 118)
இடம் என்று கூறப்படுவன மலையும், நாடும், யாறும் ஆகும்.

மலையாவன : இமயமலை முதலியன.
நாடாவன : பதினெண்மொழி வழங்கு நிலங்கள்.
யாறாவன : கங்கை முதலியன.

இவற்றின் மலையாவது – ஒன்றினுள்ள பொருள் பிறிதொன்றினுள்ளதாகச் சொல்லுதல்.

எடுத்துக்காட்டு
“தென்மலையின் மான்மதமும் சாமரையும் தேமருசீர்ப்
பொன்மலையின் சந்தனமும் ஆரமும் – பன்முறையும்
பொன்னி வளநாடன் முன்றிற் பொதுளுமே
மன்னர் திறைகொணர வந்து”

பொதிய மலையிலுள்ள கஸ்தூரியும், சாமரையும், வாசனை பொருந்திய சிறப்புடைய மேருமலையிலுள்ள சந்தனமும், பூமாலையும், அரசர்கள் திறைப் பொருள்களாகப் பன்முறையும் கொண்டுவர வந்து, காவிரி பாயும் வளம்பொருந்திய சோழ நாட்டை யாளும் சோழனுடைய முன்றிலிலே நிறையும், என்பதாம்.

இமயத்தில் உள்ளன பொதியத்திற்கு உரியவாகவும், பொதியத்தில் உள்ளன இமயத்திற்கு உரியவாகவும் கூறினமையின், மலையிட மலைவு ஆயிற்று.

“தண்பொருநைச் செங்கனகம் மாதங் கிரித்தரளம்
வண்கலிங்கந் தந்த வயப்புரவி – பண்பு
மருவும் யவனத்து மால்யானை சென்னி
பொருநர்க்கு வீசும் பொருள்”

குளிர்ச்சி பொருந்திய பொருநை யாற்றிலுள்ள செம்பொன்னும், மாதங்கிரியிலுள்ள முத்தும், வளப்பம் பொருந்திய கலிங்க தேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வெற்றி பொருந்திய குதிரைகளும், நற்குணம் சேர்ந்த யவன தேசத்து மதயானைகளும் ஆகிய இவைகளே, சோழன், தன்னைப் புகழ்ந்து பாடும் பொருநர்க்கு வாரி யிறைக்கும் பொருள்களாம்.

பொருநைக்குரிய தரளத்தை மாதங்கிரியோடு புணர்த்தியும், மாதங்கிரிக்குரிய கனகத்தைப் பொருநையோடு புணர்த்தியும் கூறினமையால் யாறிடமலைவு ஆயிற்று.

மேலும், யவனத்திற்குரிய புரவியைக் கலிங்கத்தோடு புணர்த்தியும், கலிங்கத்துக்குரிய யானையை யவனத்தோடு புணர்த்தியும் கூறினமையால் நாடிடமலைவு ஆயிற்று.

(2) கால மலைவு
காலம் என்பது பொழுதும் பருவமும் (சிறுபொழுது, பெரும்பொழுது) ஆகும்.  ஒரு காலத்திற்குரிய பூ முலியவற்றை மற்றொரு காலத்திற்குரியவாகச் சொல்வது கால மலைவு ஆகும்.

“காலம் பொழுதொடு பருவமென்(று) இரண்டே” (நூற்பா – 119)

காலமாவது, பொழுதும் பருவமும் என இரண்டாம்.

பொழுதாவன : விடியல், உச்சி, எற்பாடு, மாலை, யாமம், வைகறை  ஆறுவகைப்படும்.

இவற்றுள், ஒவ்வொன்றுக்கும் நாழிகை பத்துப்பத்தாக, ஆறு பொழுதிற்கும் நாழிகை அறுபதாகும். இவை தமிழ் நூல் வல்லோர் முடிபாகும்.

பொழுது மலைவாவது : ஒரு பொழுதிற்குரிய பூவும், புள்ளும், தொழிலும் பிறிதொன்றற்கு உரியனவாக உரைப்பது.

எடுத்துக்காட்டு
“செங்கமலம் வாய்குவியத் தேங்குமுதம் கண்மலர
எங்கும் நெடுவானில் மீனிமைப்பப் – பொங்குதயத்
தோராழி வெய்யோன் உகந்தான் மலர்ந்ததே
நீராழி சூழ்ந்த நிலம்”

சிவந்த தாமரை மலர்கள் முகங்கூம்ப,
வாசனை பொருந்திய அல்லிமலர்கள் முகமலர,
நீண்ட ஆகாயத்தில் எங்கும் நாள்மீன் ஒளிர,
பொங்குகின்ற தோற்றத்தை யுடைய
ஒற்றைச் சக்கரம் பொருந்திய தேரினனாகிய சூரியன்
மகிழ்ந்து உதயஞ் செய்தான்.

கடல் சூழ்ந்த உலகம் விளங்கிற்று.
சிவந்த தாமரை மலர்கள் முகங்கூம்ப,
வாசனை பொருந்திய அல்லிமலர்கள் முகமலர,
நீண்ட ஆகாயத்தில் எங்கும் நாள்மீன் ஒளிர,
பொங்குகின்ற தோற்றத்தை யுடைய
ஒற்றைச் சக்கரம் பொருந்திய தேரினனாகிய சூரியன்
மகிழ்ந்து உதயஞ் செய்தான்;
கடல் சூழ்ந்த உலகம் விளங்கிற்று.

இங்கே, மாலைக்கு உரியன, காலையோடு புணர்த்தப்பட்டதனால் பொழுதுமலைவு ஆயிற்று.

மேலும், சூரியன் உதித்த பொழுது தாமரை மலர்தலும், அல்லி குவிதலும், நாள்மீன் ஒளித்தலுமே மரபு.

அங்ஙனமின்றி மாலை நேரத்தில் நிகழவேண்டிய தாமரை மலர்தல்,  அல்லி குவிதல், நாள்மீன் இமைத்தல் ஆகியவற்றைக் காலைக்கண் உளவாகக் கூறியது பொழுது மலைவாகும்.

பருவங்களாவன: கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என ஆறுவகைப்படும்.

ஆவணி முதல் இவ்விரண்டு திங்கள் ஒவ்வொன்றாக அறுவகைப்படும். (இவை வடநூற்கும் பொருந்தும்).

பருவ மலைவாவது : ஒரு பருவத்திற்குரியன, பிறிதொரு பருவத்தில் தோன்றக் கூறல் ஆகும்.

“காதலர் வாரார் களிக்கும் மயிலகவத்
தாதவிழ் பூங்குருந்தின் தண்பணையின் – மீதே
தளவேர் முகைநெகிழத் தண்கொன்றை பூப்ப
இளவேனில் வந்த திதோ”

மகிழ்கின்ற மயில்கள் ஆட,
மகரந்தங்கள் பரந்த மலர்களையுடைய
குருந்த மரத்தின் குளிர்ந்த கிளைமீதே படர்ந்த
முல்லைக்கொடியில் அழகிய முல்லையரும்புகள் மலர,
குளிர்ந்த கொன்றை மரம் பூத்தலைச் செய்ய,
இளவேனிற் பருவம் இதோ வந்தது;
எனது காதற்குரிய தலைவர் வந்திலர்.

இங்கே, கார்காலப்பருவத்திற்கு உரியன, இளவேனிற் பருவத்தில் தோன்றினவாகப் புணர்த்தியமையினால், பருவமலைவு ஆயிற்று.

(3) கலை மலைவு
கலை – சாத்திரம்.
இன்பமும் பொருளும் பற்றிக் குற்றமில்லாமல் செய்யப்படும் கலைகள் அறுபத்து நான்காகும்.  அவை இசை, கருவியிசை, கணிதம், நடனம் போன்றவை.

ஒவ்வொரு கலைக்கும் இலக்கணம் கூறும் நூல்கள் உண்டு.  அந்நூல்களில் கூறியபடி கூறாமல் கலையைத் தவறாகக் கூறுவது  கலை மலைவு ஆகும்.


அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம்

அணியிலக்கணம் – தொடர்- 77புறநடை
“மெய்பெற விரித்த செய்யுள் திறனும்
எய்திய நெறியும் ஈரைங் குணனும்
ஐயெழு வகையின் அறிவுறும் அணியும்
அடியினும் சொல்லினும் எழுத்தினும் இயன்று
முடிய வந்த மூவகை மடக்கும்
கோமூத் திரிமுதல் குன்றா மரபின்
ஏமுற மொழிந்தமிறைக் கவியீ ராறும்
இவ்வகை யியற்றுதல் குற்றம் இவ்வகை
எய்த வியம்புதல் இயல்பென மொழிந்த
ஐவகை முத்திறத்(து) ஆங்கவை யுளப்பட
மொழிந்த நெறியின் ஒழிந்தவும் கோடல் 
ஆன்ற காட்சிச் சான்றோர் கடனே.” (நூற்பா – 125)

இந்நூலில் உரைக்கப்பட்ட இலக்கணம் அனைத்தும் தொகுத்து, இவ்வாறன்றிப் பிறவாறு வருவன உளவெனினும் கொள்க எனப்  புறனடை உணர்த்துகிறது.

பொருள்பெற விரித்த முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை எனக் கூறப்பட்ட செய்யுள்மரபும்,

அச்செய்யுட்குக் கௌடம், வைதருப்பம் எனப் பொருந்திய நெறியும், அவற்றொடு தொடர்ந்த செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்று கூறப்பட்ட பத்துவகைக் குணமும்,

தன்மை முதல் பாவிகம் ஈறாகக்கிடந்த முப்பத்தைந்துஅலங்காரமும்; அடியினாலும், சொல்லினாலும் கூடி முற்றுப்பெற வந்த மூவகை மடக்குஅலங்காரமும்,

கோமூத்திரி முதலாகக் குறைபாடில்லாத இலக்கணத்தில் பிழைப்பின்றி வந்த மிறைக்கவி பன்னிரண்டும்,

இவ்வாறு கூறுதல் வழுவென்றும், அவற்றையே இவ்வாறு கூறுதல் வழக்கென்றும் சொல்லப்பட்ட பதினைந்து கூறுபாடும் உள்ளிட்டுக் கூறப்பட்ட இலக்கண நெறியின் ஒழிந்து வருவன உளவெனினும் கொளல் அறிவுடையோராகிய மேலோரது கடனாம்.

மேற்கூறியவற்றையே ஈண்டும் கூறியது புனருத்தமாம் பிறவெனின், “தொகுத்து முடித்தல்” என்பது தந்திரவுத்தியாதலின் இவ்வாறு உரைக்கப்பட்டது என்க.

“முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழிநூ லாகும்” (நன்னூல் – 7)

சொல்லணியியல் முற்றிற்று. தண்டியலங்காரம் மூலமும் பழைய உரையும் நிறைவுற்றது.

மீண்டும் இன்னொரு தொடரில் உறவுகளைச் சந்திக்கும் வரை  மிகவும் நன்றி!!

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் : தொடர் 72-77
சிறீ சிறீஸ்கந்தராஜா
04/10/2013 – 19/10/2013

தொகுப்பு – thamil.co.uk