அணியிலக்கணம் 13 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் –  ஓர் அறிமுகம்

சொல்லணியியல் –  மடக்கு பகுதி – 4

அணியிலக்கணம் – தொடர்- 68அந்தாதி மடக்கு

அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன வடமொழித் தொடர் ஆகும். இத்தொடரில் உள்ள அந்தம் என்பது ‘முடிவு’ என்றும் ஆதி என்பது ‘முதல்’ என்றும் பொருள்படும். முடிவை முதலாகப் பெற்று அமைவது அந்தாதி ஆகும்.

ஒரு செய்யுளின் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது அந்தாதி ஆகும்.

அந்தாதி குறைந்தது இரண்டு அடிகளுக்கும் அல்லது இரண்டு செய்யுட்களுக்கும் இடையே காணப்படுவது.

இரண்டு அடிகளுக்கு இடையே அமைவதை அந்தாதித் தொடை என்றும் இரண்டு செய்யுட்களுக்கு இடையே அமைவதை அந்தாதிச் செய்யுள் என்றும் கூறுவர்.

அந்தாதி அமைப்பு, மனப்பாடம் செய்வதற்கும் எளிதாக நினைவு கொள்வதற்கும் ஏற்றதாக அமைந்திருப்பதால் புலவர்களால் அதிக அளவில் பாராட்டப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் அந்தாதி அமைப்பு வழக்கில் இருந்திருக்கின்றன என்பதற்கு பதிற்றுப்பத்திலுள்ள நான்காம் பத்தினை சான்றாகக்கொள்வர்.

இன்று கிடைக்கும் காலத்தால் முந்திய அந்தாதி, காரைக்கால் அம்மையார் பாடிய “அற்புதத்திருவந்தாதி” ஆகும்.

பதினோராம் திருமுறையை “அந்தாதி மாலை” என்றும் இலக்கண நூல் வல்லோர் கூறுவார்.

மேலும், மாணிக்கவாசகர் திருவாசகத்தில் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், குழைத்த பத்து, யாத்திரைப் பத்து ஆகிய பகுதிகளை அந்தாதி முறையில் பாடியுள்ளார்.

திருமூலர், திருமந்திரத்தில் பல பாடல்களை அந்தாதியாக அமைத்துள்ளார். நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி ஆயிரம் பாடல்களும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.

சிற்றிலக்கிய வகைகளில் இரட்டைமணிமாலை, அட்டமங்கலம், நவமணிமாலை, ஒருபா ஒருபது, இருபா இருபது, மும்மணிக்கோவை, மும்மணி மாலை, நான்மணி மாலை, கலம்பகம் ஆகியன அந்தாதித்தொடையைத் தம் இலக்கணமாகக் கொண்டு உள்ளன.

அந்தாதி அமைப்பில் எழுதப்பட்ட புகழ்பெற்ற நூல்களாவன:

திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி
இந்நூலை இயற்றியவர் அதிவீரராம பாண்டியர் ஆவார். கரிவலம் வந்த நல்லூரில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் மீது இந்த அந்தாதி பாடப் பெற்றுள்ளது.

திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி
இந்நூலைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றியுள்ளார். திருச்செந்தூர் முருகனின் திருவருள் இந்நூலுள் புகழப்பட்டுள்ளது.

சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி
இந்த இரண்டு நூல்களையும் கம்பர் இயற்றியதாக அறிய முடிகின்றது. திருமால் அடியவராகிய சடகோபரைத் தலைவராகக் கொண்டு சடகோபர் அந்தாதி அமைந்துள்ளது. சடகோபரே நம்மாழ்வார் என்று அழைக்கப்பெற்றார். கல்விக் கடவுள் கலைமகள் (சரஸ்வதி) மேல் பாடப்பெற்றது சரஸ்வதி அந்தாதி.

திருவரங்கத்து அந்தாதி
மணவாள தாசர் என்று அழைக்கப்படும் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் திருவரங்கத்து அந்தாதியை இயற்றி உள்ளார். திருவரங்க நாதனின் அருட்செயல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

அபிராமி அந்தாதி
அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது.

அந்தாதி வகைகள்
பாட்டியல் நூல்கள் அந்தாதியின் வகைகளைச் சுட்டி உள்ளன. அந்தாதி இலக்கியங்களை அந்தாதி எனும் பெயரால் பாட்டியல் நூலார் குறிப்பிடவில்லை. அந்தாதி வகைகளின் பெயரைத்தான் குறிப்பிட்டுள்ளனர்.

பன்னிரு பாட்டியல் இதனை அந்தாதித் தொகை என்று குறிப்பிட்டுள்ளது.

சிற்றிலக்கியங்களுள் அந்தாதி வகைகளாக ஒலியந்தாதி, பதிற்றுப் பத்தந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி ஆகியன தென்படுகின்றன.

இவை அல்லாமல் கலித்துறை அந்தாதி, கலியந்தாதி, வெண்பா அந்தாதி ஆகியவற்றிற்கும் பாட்டியல்கள் இலக்கணம் வகுத்துள்ளன.

இவை தவிர வேறு சில அந்தாதி வகைகளும் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

அந்தாதியின் பாடுபொருள் வகைப்பாடு
அந்தாதி இலக்கியங்கள் தலங்கள், தல இறைவன், சான்றோர்கள், தொண்டர்கள், புலவர்கள், வள்ளல்கள், முதன்மைபெற்ற நிகழ்ச்சிகள் முதலியன குறித்து அமைந்தனவாக உள்ளன.

பக்திப் பெருக்கினை உணர்த்துவதே பெரும்பான்மை அந்தாதிகளின் குறிக்கோள் எனலாம்.

சில அந்தாதிகள் அகத்திணைத் துறைகளைக் கொண்டும் விளங்குகின்றன. சான்றுக்குத் திருவிடைமருதூர் அந்தாதியைக் கூறலாம்.

திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதியினைக் குட்டித் திருவாசகம் என்று கூறுவர்.

கயிலைபாதி காளத்திபாதி அந்தாதியில் இரு தலங்களின் மேன்மை போற்றப்பட்டுள்ளது.

அம்மை பாதி அப்பன் பாதி அந்தாதியில் பாட்டுடைத் தலைவர் இருவர் ஆவார்.

தண்டபாணி சுவாமிகளின் குருநாதன் அந்தாதியில் ‘அருளுக்கு ஏங்குதல்’ எனும் ஒரு பொருண்மையே எல்லாப் பாடல்களிலும் காணப்படுகின்றது.

“ஓர் எழுத்து மடக்காலும் உரித்து எனமொழிப ” (நூற்பா – 97)
ஓர் எழுத்தே மடங்கி நின்றும் பல பொருள் தருதலுமுண்டு என்று கூறுகிறார் தண்டியலார். இவற்றில் பல வகையுண்டு.

– ஒர் எழுத்தே எல்லா அடிகளிலும் இடம்பெற்று மடக்காதல்.

– நெட்டெழுத்துக்கள் மட்டுமே செய்யுளில் இடம் பெற்று மடக்காதல்.

– குறில் எழுத்துக்கள் மட்டுமே செய்யுளில் இடம் பெற்று மடக்காதல்.

– ககர விகற்பத்தான் (க, கா, கி… ) மடக்காதல்.

– தகர விகற்பத்தான் (த, தா, தி… ) மடக்காதல்.

– ஈரெழுத்தால் வருவன.

– மூவெழுத்தால் வருவன.

– நான்கெழுத்தால் வருவன. என இப்பட்டியல் நீளும். இவற்றுள் ககர விகற்பத்திற்கு மட்டும் எடுத்துக்காட்டு சுட்டப் பெறுகின்றது.

ககர விகற்பத்தான் வந்த மடக்கு
“காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்கக் – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா”

இரவில் காக்கைக்கு ஆகாது கூகை (ஆந்தை).
அதாவது காக்கையும் கூகையும் பகையானவை.
பகலில் கூகைக்குக் காக்கை ஆகாது.
பகலில் காக்கை வலிமை பெறும்.
இரவில் கூகை வலிமை பெறும்.

அதுபோல காலம் கருதி, அரசன் கொக்கைப் போல காத்திருந்து எதிரிகளை அழிக்க வேண்டும். இல்லை யென்றால் எவ்வெற்றியும் இந்திரனாக இருந்தாலும் கிடைக்காது. என்று பாடல் பொருள் தருகிறது.

அதே நிலையில் சொல் வகையாலும் அழகு பெறுகிறது. இதே வகையில் நாமும் சொல்லணி பயில்வோம்.இத்துடன் மடக்கு அணி முற்றுப் பெறுகின்றது.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம்

சொல்லணியியல் – சித்திரகவி – 1

அணியிலக்கணம் – தொடர்- 659பொருட் சிறப்பையே பெரிதும் கருதாது, சொல்லடுக்கையே குறிக்கோளாகக் கொண்டு சொல்லழகு காணும் விருப்பம் உடையார் உள்ளம் உவகை உறும் வகையில் பாடப்படும் நூற்றைந்து வகை மடக்கும், கோமூத்திரி முதலாக இருபது திறத்தனவாகக் கூறப்பட்ட மிறைக்கவிகளும் சித்திரகவிகளாகும்.

ஒரு செய்யுளுக்குள், எழுத்துகள் மடங்கி, மடங்கி நின்று ஓவியமாக அமைவது சித்திரகவி எனப்படுகின்றது.

சித்திரகவியின் வகை
“கோமூத் திரியே கூட சதுக்கம்
மாலை மாற்றே எழுத்து வருத்தனம்
நாக பந்தம் வினாவுத் தரமே
காதை கரப்பே கரந்துறைச் செய்யுள்
சக்கரம் சுழிகுளம் சருப்பதோ பத்திரம்
அக்கரச் சுதகமும் அவற்றின் பால.”
(நூற்பா – 97)

கோமூத்திரி
கூடசதுக்கம்,
மாலைமாற்று
எழுத்து வருத்தனம்
நாகபந்தம்
வினாவுத்தரம்
காதைகரப்பு
கரந்துறைச் செய்யுள்
சக்கரம்
சுழிகுளம்
சருப்பதோபத்திரம்
அக்கரச்சுதகம்

இந்த நூற்பா மேற்கூறிய பன்னிரண்டு வகையான சித்திரகவிகளைப் பட்டியலிடுகின்றது.

“அக்கரச் சுதகமும்” என்னும் உம்மையால்,நிரோட்டம், ஒற்றுப் பெயர்த்தல், மாத்திரைச்சுருக்கம், மாத்திரை வருத்தனை, முரசபந்தம்,திரிபாகி, திரிபங்கி, பிறிதுபடு பாட்டு முதலியனவும் சித்திர கவிகள் எனக்கொள்க.

(1) கோமூத்திரி
இரண்டிரண்டுவரியாக ஒரு செய்யுளை எழுதி, மேலும் கீழும்ஒன்றிடையிட்டு வாசித்தாலும் அச்செய்யுளே வருவதாகும்.

“பருவ மாகவி தோகன மாலையே
பொருவி லாவுழை மேவன கானமே
மருவு மாசைவி டாகன மாலையே
வெருவ லாயிழை பூவணி காலமே”

பருவம் ஆக இது – அவர் குறித்தகாலம் இது வாதல் வேண்டும்;
கனம் மாலை – மேகவொழுங்கானது,
ஆசை மருவும் – திசைகள் எல்லாம்பொருந்தும்,
மாலையே கனம் விடா – (அதுவுமன்றி)மாலைப்பொழுதின் கண் மழையைவிடாது பொழியும்;
பொருவிலா உழை – ஒப்பில்லாத மான்கள்,
மேவனகானமே – பொருந்தாநின்றன காட்டின்கண்;
ஆயிழை – (ஆதலால்) குற்றமற்ற ஆபரணங்களை யுடையாய்!,
வெருவல் – அஞ்சாதொழிவாயாக;
பூ அணி காலமே – தலைவர்நம்மைப் பூவால் அலங்கரிக்கும் காலம் இது.

பாடலின் பொருள்
“தலைவியே ! தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம் இதுதான். எல்லாத் திசைகளிலும் மேகங்கள் காணப் பெறுகின்றன.

மாலைப் பொழுதில் இம்மேகங்கள் தொடர்ந்து மழையைத் தந்து கொண்டே இருக்கப் போகின்றன. காட்டிலே மான்கள் இக்காலத்தின் வருகையால் மகிழ்ந்து விளையாடுகின்றன.

உயர்ந்த அணிகலன்களை அணிந்தவளே ! தலைவன் மலர்களால் உன்னை அழகு செய்ய வரப்போகிறான் கலங்காதே” எனத் தோழி கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைகிறது.

பசுவானது நடந்துகொண்டே சிறுநீர் விடும்போது,அந்நீர் ஒழுகிய தாரையானது இவ்வாறே மேலும் கீழும்நெளிந்த வடிவமாய் இருக்கும்; அதனைப்போலவே இக்கவியும் அமைவதால் இதற்குக் “கோமூத்திரி” எனப் பெயர் ஏற்பட்டது. (கோ = பசுமாடு ; மூத்ரி = மூத்திரம்)

(2) கூடசதுக்கம்
ஈற்றடி எழுத்துக்கள் ஏனைய மூன்றடியுள்ளும் கரந்து நிற்கப் பாடுவது.

அதாவது, ஒரு செய்யுளின் இறுதி அடியில் இடம் பெறும் எழுத்துகள் அனைத்தும், முன்னுள்ள அடியில் (அல்லது) அடிகளில் இருந்து பெறப்படுவனவாகப் பாடப் பெற்றால் அது இவ்வகைச் சித்திரகவியாகும். (கூடம் = மறைவு; சதுக்கம் = மறைவான நிறைவு அடியை உடையது)

“புகைத்தகைச் சொற்படைக் கைக்கதக்கட்பிறைப் பற்கறுத்த
பகைத்திறச் சொற்கெடச் செற்றகச் சிப்பதித் துர்க்கைபொற்புத்
தகைத்ததித் தித்ததுத் தத்தசொற் றத்தைப்பத் தித்திறத்தே
திகைத்தசித் தத்தைத் துடைத்தபிற் பற்றுக் கெடக்கற்பதே”

புகை தகை – நெருப்பின் தன்மையையுடைய,
சொல் – சொற்களையும்,
படைக் கை – ஆயுதங்களோடு கூடிய கைகளையும்,
கதக்கண் – வெகுளியோடு கூடிய பார்வையையும்,
பிறைப்பல் – பிறைபோன்ற கோரப்பற்களையும்,
கறுத்த – கரிய நிறத்தையும் உடைய,
பகைத்திறச் சொல் கெட – பகைஞராகிய அவுணசாதியெனும் சொல்கெட,
செற்ற கச்சிப்பதி – செறுத்த காஞ்சிபுரப்பெரும்பதியில் உள்ள,
துர்க்கை – கொற்றவை,
பொற்புத் தகைத்த – அழகு தங்கிய,
தித்தித்ததுத்தத்த சொல் – இன்பந் தராநின்ற யாழினிசைபோன்ற சொல்லையுடைய,
தத்தை – கிள்ளையையொப்பாளிடத்து,
பத்தித் திறத்தே திகைத்த – அன்பு செய்யாது அறிவழிந்த,
சித்தத்தைத்துடைத்தபின் – உள்ளத்தை நீக்கிய காலத்து,
பற்றுக் கெட – இருபற்றும் கெடுதற்கு ஏதுவாகிய,
கற்பதே – ஞானத்தை அறிவது

கிள்ளை மொழியினை யொத்த மொழியை யுடையதுர்க்கை எனக் கூட்டுக.

இச்செய்யுளில், முதல்மூன்றடிகளிலும் ஈற்றடி எழுத்துக்கள் காணப்படும். இங்ஙனம் ஓரடியின் எழுத்துக்கள் மற்றையடிகளில் மறைந்து நிற்றலால், இது கூடசதுக்கம் எனப்பட்டது.

கொற்றவை யிடத்து அன்பு செய்தாலன்றி ஞானம் உளதாகாது என்பது கருத்து.

சதுர்த்தம் – சதுக்கம் என்றாயிற்று.

நான்கு அடிகள் உள்ள பாடலில், நான்காம் அடியிலுள்ள எழுத்துக்கள் ஏனைய மூன்றடிகளிலும் மறைந்து நிற்பது இதன் இலக்கணமாகும்.

“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு ”
(குறள் – 786)

கீழடியில் உள்ள பதினொரு எழுத்துகளும் மேலடியில் இருந்து பெறப்பட்ட எழுத்துகளால் பாடப் பெற்றுள்ளது.


அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம்

சொல்லணியியல் – சித்திரகவி – 2

அணியிலக்கணம் – தொடர்- 70(3) மாலைமாற்று
ஒரு செய்யுளை ஒவ்வோர் எழுத்தாக தொடக்கம் முதல் இறுதி வரை படித்தாலும், இறுதியிலிருந்து ஒவ்வோர் எழுத்தாக தொடக்கம் வரை படித்தாலும் மாறாமல் அமைவது மாலைமாற்று என்னும் சித்திரகவியாகும்.

“பூவாளை நாறுநீ பூமேக லோகமே
பூநீறு நாளைவா பூ”

பூவாளை – இயல்பாய் பூப்பில்லாதவளைக் கலந்து,
நாறும் நீ – புலால்கமழும் நீ,
பூ மேகம் லோகம் ஏ – எமக்குப் பூமழையும் பொன்மழையும் பொழியும் மேகமோ?,
பூ நீறு நாளை வா -பூவும் திருநீறும் புனைந்து நாளைவா,
பூ – இவள் இப்பொழுது பூப்பினளாய் இருக்கின்றாள்.

தலைவியைக் கூடி மகிழ வந்த தலைவனைத் தோழி தடுத்ததாக இப்பாடல் அமைகிறது.

பூப்பு அடையாதவளை அடைய விரும்பிய மேகமே !
நீ பூமழை பொழிய வந்தாயோ !
பூவும் நீறும் கொண்டு நாளை வா !
இன்று அவள் பூப்பு அடைந்திருக்கிறாள்.

இப்பாடல் தலைவி கூடி மகிழும் அளவிற்கு உடல் அளவில் உரியவளாக இல்லை. அதனை மறைமுகமாகத் தலைவனுக்கு உணர்த்த மேகத்தை அழைத்துச் சொல்வதாகத் தோழி பேசுகிறாள்.

பூப்புனைதல் புலால் நாற்றம் நீங்க. திருநீறுபுனைதல் குற்றம் நீங்க.

மாலையை எப்பக்கம் திரும்பினும் அது ஒரேதன்மைத்தாய் இருத்தல் போல, இச்செய்யுட்களும் எவ்வாறு மாற்றி வாசிப்பினும் ஒரே தன்மைத்தாய் இருத்தலின் மாலைமாற்று எனப்பட்டது.

(4) எழுத்து வருத்தனம்
ஓரெழுத்தான் ஒரு மொழியாய்ப் பொருள் பயந்து, பின் ஓரெழுத்து ஏற்றுப் பிறிதொரு மொழியாய்ப் பொருள் பயப்பது. அதாவது வருத்தனம் என்பதற்கு வளருதல் என்பது பொருளாகும். ஒரு செய்யுளில் பல கருத்துகள் கூறப் பெற்றிருப்பதாகக் கொள்வோம்.

அதில் முதற்கருத்து ஒரு சொல்லின் அடிப்படையாய் அமைகிறது என்று கொண்டால், அந்தச் சொல்லில் சில எழுத்துகளை மேலும் மேலும் சேர்த்துப் பொருள் பெறுவது எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்னும் சித்திரகவியாகும்.

எடுத்துக்காட்டு
“மது” என்பது போதை தரக்கூடிய ஒரு பானம். அதனோடு “ரை” என்ற எழுத்தை இணைத்துக்கொண்டால் (வளர்த்துக்கொண்டால்) “மதுரை” என்ற நகரின் பெயர் வருகிறது.

“ஏந்திய வெண்படையு முன்னால் எடுத்ததுவும்
பூந்துகிலு மால்உந்தி பூத்ததுவும் – வாய்ந்த
உலைவில் எழுத்தடைவே யோரொன்றாச் சேர்க்கத்
தலைமலைபொன் தாமரையென் றாம்”

திருமால் தாங்கிய கம்புவும், அவன் எடுத்த நகமும், அவனது ஆடையாகிய கநகமும், அவன் உந்தி மலர்ந்த கோகநகமும் கேடில்லாத எழுத்தின் அடைவே.

இவற்றிலிருந்து ஓரெழுத்தாக எடுத்துச் சேர்க்கும்போது அது தலையென்றும், மலையென்றும், பொன்னென்றும், தாமரையென்றும் வருதல் காண்க.

பொருள் விளக்கம்
திருமால் சங்கு ஆயுதத்தை உடையவர்.

அவர் முன்னொரு காலத்தில் கோவராத்தன மலையை கைவிரலால் தூக்கினார்.

அவர் பொன்னாடை அணிபவர், அவரின் தொப்புழ்க் கொடியில் பிரம்மா இருக்கிறார்.

“ஏந்திய வெண்படை”
(திருமாலின் வெள்ளை ஆயுதம்) கம்பு (சங்கு)
(கம்பு என்பதில் ஒரு எழுத்து நீங்க கம் (தலை) என்பது கிடைத்தது).

“முன்னால் எடுத்தது”
(கோவர்த்தன மலையைத் திருமால் குடையாகப் பிடித்தார்)
(ந என்ற எழுத்து வர நகம் (மலை) கிடைத்தது.)

“பூந்துகில்”
(திருமால் உடுத்தும் ஆடை)
(க என்ற எழுத்து மேலும் இணைய கநகம் (பொன்) கிடைத்தது.)
கநகம் (பொன்னாடை)

“மால் உந்தி பூத்தது”
(திருமால் தொப்பூழ்க் கொடியில் தாமரை பூக்க அதில் பிரம்மா இருப்பார்)
(கோ என்ற எழுத்து மேலும் வர கோகநகம் (தாமரை) கிடைத்தது.)
கோகநகம் (தாமரை)

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம்

சொல்லணியியல் – சித்திரகவி – 3

அணியிலக்கணம் – தொடர்- 71(5) நாகபந்தம்
இது இரண்டு பாம்புகள் இணையும் அமைப்பில் பாடப்படுவதாகும். இது வெண்பா யாப்பில் அமைக்கப் பெறவேண்டும். அறம் உரைப்பதாக அமைய வேண்டும்.

ஒரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல்லின் முடிவில் உள்ள எழுத்தும்,மற்றொரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல்லின் முடிவில் உள்ள எழுத்தும்
ஒன்றாக இருக்கும் அமைப்பில் பாடுவது இக்கவியாகும்.

(6) வினாவுத்தரம்
செய்யுளில், சில வினாக்களைக் கேட்டு, அவ்வினாக்கள் வாயிலாகப் பதிலைப் பெற்று, அப்பதில்களின் ஒன்றிணைந்த சேர்க்கையால் ஒரு சொல்லைப் பெறுவது என்ற முறைமை இக்கவியாகும்.

எடுத்துக் காட்டு
“பூமகள்யார்? போவானை ஏவுவான் ஏதுஉரைக்கும்?
நாமம் பொருசரத்திற்கு ஏதென்பார்? – தாம்அழகின்
பேரென்? பிறைசூடும் பெம்மான் உவந்துறையும்
சேர்வென்? திருவேகம் பம்”

இதனுள் பூமகள் யார் – “திரு” எனவும்;
போவானை ஏவுவான் ஏதுரைக்கும்? – “ஏகு” எனவும்;
நாமம் பொருசரத்திற்கு ஏது என்பர்? – “அம்பு” எனவும்;
அழகின் பேர் என்? – “அம்” எனவும்
கூட்டித் “திருவேகம்பம்” எனக் கண்டு கொள்க.
அதுவே “திருவேகம்பம்” என்னும் ஊராகும்.

(7) காதைகரப்பு
ஒரு செய்யுளில் தொடக்கமாக அமையும் முதல் எழுத்தை விட்டு விட வேண்டும்.

அடுத்த எழுத்து அதாவது இரண்டாம் எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மூன்றாம் எழுத்தை விட்டுவிட வேண்டும். நான்காம் எழுத்தை எடுத்துக் கொள்ளவேண்டும்.

இவ்வாறாக ஓர் எழுத்து விட்டு ஓர் எழுத்து என்ற அமைப்பில் சேர்க்க, சேர்க்கப் பெற்ற எழுத்து கடைசிச் சொல்லிற்கு முன் உள்ள எழுத்துத் தொடங்கி, முதலடி வரை தலைகீழாகப் படித்தால் ஒரு புதுப்பாடலாக அமைவது இவ்வகைச் சித்திரகவியாகும்.

(காதை = சொல், கவிதை; காப்பு = மறைவு)

(8) கரந்துறைச்செய்யுள்
ஒரு செய்யுளில் உள்ள எழுத்துகளில் இருந்து சில எழுத்துகளைத் தேர்ந்து கொண்டு, மற்றொரு செய்யுளை அமைத்துக் கொள்வது என்பது கரந்துறைப்பாட்டு என்னும் சித்திரகவியாகும். (கரந்து = மறைந்து; உறை = இருத்தல்; பாட்டு = செய்யுள்)

காதைகரப்பிற்கும் கரந்துறைச் செய்யுளுக்கும் உள்ள வேறுபாடு யாதெனில், இவ்விரண்டின் கண்ணும் பிறிதொரு செய்யுட்கேற்ற எழுத்துக்கள் மறைந்து கிடக்கும் வகையில் ஒப்புமையிருப்பினும், முன்னையது இறுதிச் சொல்லை ஒழித்து, அதற்கடுத்துள்ள எழுத்துக்களிலிருந்து ஒவ்வோரெழுத்தினை இடையிட்டு எடுத்துக் கொள்ளப் பிறிதொரு செய்யுள் தோன்றுவதாகும்.

ஆனால் கரந்துறைச் செய்யுளில் பாட்டின் முதற்கண் இருந்தே எவ்வித வரையறையுமின்றி எழுத்துக்களைப் பொறுக்கிக் கோக்கப் பிறிதொரு செய்யுளாய்த் தோன்றுவதாகும்.

(9) சக்கரம்
சக்கர வடிவில், ஏதேனும் ஒரு சுழற்சி முறையில் பாடலை அமைப்பது சக்கர பந்தம் என்னும் சித்திரகவியாகும்.

இது நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம் என மூன்றுவகைப்படும்.

(10) சுழிகுளம்
சுழிகுளம் என்ற சித்திரகவி செய்யுளின் எழுத்து எண்ணிச் செய்யப் பெறுவதாகும்.

இதில் இடம் பெறும் செய்யுள் நான்கு அடிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துகளையே பெற்றிருக்க வேண்டும்.

இவ்வெட்டு எழுத்துகளும் மேலும் கீழும், உள்ளும் புறமுமாக ஒத்தமைய வேண்டும்.

எடுத்துக் காட்டு
“கவிமுதி யார் பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா”

பாடல் பொருள் 
வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள் விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும். அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத செல்வமாகும்

(11) சருப்பதோபத்திரம்
இதுவும் பாடலுக்கு நான்கு வரிகள்., வரிக்கு எட்டு எழுத்துகள் என்ற அமைப்பினது.

கீழ் மேல், மேல் கீழ், முன் பின், பின் முன் எப்படிப் படித்தாலும் அதே செய்யுள் வருமாறு அமைக்க வேண்டும். இவ்வமைப்பே சருப்பதோ பத்திரம் எனப்படும்.

(12) அக்கரச்சுதகம்
ஒரு செய்யுளில் பல பொருள்கள் கூறப் பெற்றிருப்பதாகக் கொள்வோம். அதனைப் பெறப் படிப்படியாக ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளைக் குறைத்துப் பொருள்களைப் பெறுவது இவ்வகைச் சித்திர கவியாகும். (அக்கரம் = அட்சரம் ; சுதகம் = நீக்கம்)

எடுத்துக்காட்டு
இலைகளுள் சிறந்தது = தலைவாழை
தலைவரை விளிப்பது = தலைவா
உறுப்பினுள் சிறந்தது = தலை என்ற உரைநடை எடுத்துக்காட்டுக் கொண்டு இதனை விளங்கிக் கொள்ளலாம்.

மேலும் பல வகைச் சித்திரகவிகளை தண்டியலார் இனம் காட்டுகிறார். இருந்தபோதும் அவை பெரும்பாலும் வழக்கொழிந்து போயின என்பதனால் அவற்றின் பெயர்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். விரிவினை இங்கு தவிர்த்துக் கொள்ளுகிறேன்.

(13) நிரோட்டம்
(14) ஒற்றுப்பெயர்த்தல்
(15) மாத்திரைச் சுருக்கம்
(16) மாத்திரை வருத்தனம்
(17) முரசபந்தம்
(18) திரிபாகி
(19) திரிபங்கி
(20) பிறிதுபடுபாட்டு

சித்திரகவி முற்றிற்று.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் : தொடர் 68-71
சிறீ சிறீஸ்கந்தராஜா
06/09/2013 – 28/09/2013

தொகுப்பு – thamil.co.uk