அணியிலக்கணம் 11 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம்

அணியிலக்கணம் – தொடர்- 64சொல்லணியியல்
மொழி பயிர்களைப் போன்றது. இலக்கணம் வேலி போன்றது. வேலி பயிர்கள் அழியாதவாறு காப்பது போல இலக்கணமும் மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் நின்று, அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகின்றது.

இவ்விலக்கணங்கள் மொழிக்குப் பாதுகாப்பு மட்டுமன்றி அதற்குப் பெருமையும் தரவல்லனவாம்.

தமிழ்மொழியில் இன்றைக்குத் தொன்மையாகவுள்ள இலக்கணம் தொல்காப்பியாகும். இது எழுத்து சொல் பொருள் என்ற மூன்று பாகுபாட்டையுடையது. செய்யுளியல் யாப்புப் பற்றியதாயினும், அதனைத் தனித்துக் கூறாது ஆசிரியர் பொருளதிகாரத்தின்பாற் படுத்தியே கூறியுள்ளார்.

கி. பி. 11ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரர் என்பார் எழுத்துச் சொல் பொருள் யாப்புடன் அணியிலக்கணத்தையும் வேறாக அமைத்து வீரசோழியம் என்ற பெயரால் ஐந்திலக்கணங்ளையும் ஒருங்கு சேர்த்துக் கூறினார்.

இதற்குப் பின்பு கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் அணியிலக்கணத்தைத் தனியே எடுத்து விளக்க வந்த நூலே இத்தண்டியலங்காரம் ஆகும்.

இதற்குப் பின்பு அணியிலக்கணத்தை மட்டும் எடுத்து விதந்த நூல்கள் மாறனலங்காரமும், சந்திராலோகமும், குவலயானந்தமும் ஆகும்.

ஒரு செய்யுளில் உள்ள அழகையும் நயத்தையும் எடுத்துக் கூறுவது அணியிலக்கணமாகும். இவ்வருமையை எல்லா மொழிகளிலும் காணலாம். எனினும் இங்ஙனம் பாகுபடுத்திக் கூறுவதற்காக எழுந்த இலக்கண நூல்கள் வடமொழியிலேயே மிகப்பலவாகவுள்ளன. தமிழ் மொழியில் இதுபற்றி எழுந்த நூல்கள் மிகச் சிலவே.

தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம், சந்திராலோகம், வீரசோழியம், இலக்கணவிளக்கம், தொன்னூல், முத்துவீரியம், என்ற எட்டு நூல்களே உள்ளன.

இவற்றுள்ளும் முன்னைய நான்குமே அணியிலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துக் கூறுகின்றன. அவையும் மொழிபெயர்ப்பாக அமைந்தவையே. பின்னைய நான்கும் அணியிலக்கணத்தை ஒரு பகுதியாகக்கொண்டு கூறுவன.

இவற்றிற்கெல்லாம் முதனூலாகவுள்ள தொல்காப்பியத்தை நோக்குமிடத்து, தொல்காப்பியர் கூறிய உவமை அணியிலிருந்தே மற்ற அணிகள் எல்லாம் தோன்றின என்றும், எனவே அணியிலக்கணத்தை முதன் முதல் கூறிய நூல் தொல்காப்பியமே என்றும் கூறுவர்.

தண்டியலங்காரத்தில் கூறப்பட்ட பொருளணிகள் 35 ஆகும்.

தொல்காப்பிய உவம இயலை அடிப்படையாகக் கொண்டே,தண்டியலங்காரம் முதலிய அணியிலக்கணங்கள் எழுந்தன என்று கூறுவதிலும், தொல்காப்பியத்தையும் வடமொழி அணியிலக்கணங்களையும் கொண்டு தண்டியலங்காரம் எழுந்தது எனக் கூறினும் அது மிகையன்று!

தண்டியலங்காரம்

100 அணிகள், 64 அணிகள் என விரிவாகக் கூறும் இலக்கண நூல்கள் இருக்கும் போது 35 அணிகள் பற்றியே நுவலும் இத் தண்டியலங்காரத்தைப் பலரும் பயில்வதொன்றே இதன் சிறப்பினை நன்கு விளக்கும். இந்நூல் தொகுத்தல் முதலிய நால்வகையுள் மொழி பெயர்ப்பு வகையைச் சார்ந்தது.

இதன் முதனூல் காவியாதர்சம் என்றும், இதன் ஆசிரியர் தண்டி என்னும் பெயரால் அறியப்படுகின்றார். இவர் இராசசிம்ம பல்லவன் (கி.பி. 666 – 705) காலத்தவர்.

இந்நூலை முதனூலாகக் கொண்டு எழுந்த நூல்கள் தமிழில் மட்டுமன்றிப் பிறமொழியிலும் உள்ளன.

தமிழ் – தண்டியலங்காரம், கன்னடம் – கவிராச மார்க்கம், சிங்களம் – சியபஸ்லகாரம் ஆகும்.

மேற்கூறிய காவியதர்சம் என்ற நூலில் நான்கு பிரிவுகளில் கூறப்பட்டிருப்பதை தண்டியலங்காரம் மூன்று பிரிவுகளில் மிகவும் அழகாகக் கூறுகின்றது எனலாம். அவையாவன, பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்பனவாகும்.

பொதுவணியியலில் செய்யுட்களின் வகைகள், அவற்றின் இலக்கணங்கள், வைதருப்பர், கௌடர் ஆகியோர்க்குரிய சொல்லமைப்பு நெறிகள் ஆகியவை கூறப்பட்டுள்ளன.

பொருளணியியலில் 35 அணிகளின் இலக்கணமும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

சொல்லணியியலில் மடக்கின் வகைகள், அவற்றின் இலக்கணம், சித்திர கவிகளின் இலக்கணம், வழுக்கள், அவற்றின் அமைதிகள், மலைவுகள் அகியன கூறப்பட்டுள்ளன.

தண்டியலங்காரத்தை இயற்றிய ஆசிரியர் பெயர், வரலாறு முதலியன தக்கவாறு அறிதற் கியலாதிருக்கின்றது.

காவியாதர்சத்தை இயற்றிய ஆசிரியர் பெயர் தண்டியாதல் போலவே, தமிழ்த் தண்டியலங்காரத்தை இயற்றிவரும் தண்டி என்ற பெயரினரே என்பது சிலருடைய முடிபாகும். இதற்குப் பின்வரும் சிறப்புப் பாயிரச் செய்யுளைச் சான்றாகக் காட்டுவார்.

‘வடதிசை யிருந்து தென்மலைக் கேகி
மதிதவழ் குடுமிப் பொதிய மால்வரை
இருந்தவன் தன்பால் அருந்தமிழ் உணர்ந்த
பன்னிரு புலவரின் முன்னவன் பகர்ந்த
தொல்காப் பியநெறி பல்காப் பியத்தும்
அணிபெறு மிலக்கணம் அரிதினில் தெரிந்து
வடநூல் வழிமுறை மரபினின் வழா அது
ஈரிரன் டெல்லையின் இகவா மும்மைப்
பாரத விலக்கணம் பண்புறத் தமீஇத்
திருந்திய மணிமுடிச் செம்பியன் அவையத்து
அரும்பொருள் யாப்பி னமைவுற வகுத்தனன்
ஆடக மன்றத்து நாடக நவிற்றும்
வடநூ லுணர்ந்த தமிழ்நூற் புலவன்
பூவிரி தண்பொழிற் காவிரி நாட்டு
வம்பவிழ் தெரியல் அம்பி காபதி
மேவருந் தவத்தினிற் பயந்த
தாவருஞ் சீர்த்தித் தண்டியென் பவனே.’

இதிலிருந்து நூலாசிரியர் பெயர் தண்டி யென்பதும், அவர் அம்பிகாபதியின் புதல்வர் என்பதனால் கம்பரின் பேரன் என்பதும், வடமொழி தென்மொழி வல்லுநர் என்பதும், சோழ நாட்டினர் என்பதும், சோழனவையில் இந்தூல் அரங்கேற்றப்பட்டதென்பதும் அறிய முடிகின்றது.

இவர் அம்பிகாபதியின் புதல்வர் தான் என்பதற்கு பிறசான்றுகள் ஏதுமில்லை. இவ்வாசிரியர் பலவிடத்தும் தம் அன்புரிமை கொண்டு அனபாயன் பற்றி விதந்துரைகின்றார்.

இவ்வனபாயன் இரண்டாம் குலோத்துங்க சோழனேயாவான். இவனுடைய காலம் கி.பி. 12 -ம் நூற்றாண்டு ஆகும். ஆதலால் இவர் தம் காலமும் அதுவேயாகும். அன்றியும், ஒட்டக்கூத்தரின் காலம் கி.பி. 12-ம் நூற்றாண்டாதலால் இவ்வாசிரியர் காலமும் அதுவேயாதல் அறியலாம்.

இவ்வுரைவழி நூலையும், நூல்வழி அணியிலக்கணத்தையும் அறிந்தின்புறுவது நம்முடைய கடமையாகும்.
பொதுவணியியல்
பொருளணியியல்
சொல்லணியியல்
ஆகிய அணி இலக்கண விதிகளில் இறுதியாக சொல்லணியியல் பற்றி பின்வரும் தலைப்புக்களின்கீழ் விரிவாகப் பார்ப்போம்.

சொல்லணியியல்
சித்திரகவி
வழுக்கள் வகை
பிரிபொருள் சொற்றொடர்
மேலதற்கோர் சிறப்புவிதி
மொழிந்தது மொழிவு
சிறப்பு விதி
கவர்படு பொருள் மொழி
சிறப்பு விதி
நிரல் நிறை வழு
சிறப்பு விதி
சொல் வழு
சிறப்பு விதி
யதிவழு
மேலதற்கோர சிறப்பு விதி
செய்யுள் வழு
மேலதற்கோர சிறப்பு விதி
சந்தி வழு
மேலதற்கோர சிறப்பு விதி
இட மலைவு
கால மலைவு
கலை மலைவு
உலக மலைவு
நியாய மலைவு
ஆகம மலைவு
மலைவுக்குச் சிறப்பு விதி
புறனடை

 

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் : தொடர் 64
சிறீ சிறீஸ்கந்தராஜா
16/08/2013 

தொகுப்பு – thamil.co.uk