அணியிலக்கணம் 9 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 30

அணியிலக்கணம் – தொடர்- 5426) ஒப்புமைக் கூட்டவணி
தண்டியலங்காரத்தில் இருபத்தியாறாவதாகக் கூறப்படும் அணி,  ஒப்புமைக் கூட்டவணி ஆகும்.  கவிஞர்கள் பாடலில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் பல பொருள்களை  அடுக்கிக் கூறுவது உண்டு. அவ்வாறு கூறும்போது, அப்பொருள்களைச் சமமான தன்மை உள்ள பொருள்களாகக் கூறுவார்களாயின் அப்பாடல் அழகு பெற்றுத் திகழக் காணலாம். இதன் பொருட்டுக் கூறப்படும் அணியே ஒப்புமைக்கூட்ட அணி.
ஒப்புமைக்கூட்ட அணியின் இலக்கணம்
கவிஞர் ஒரு பொருளைச் சொல்லும் போது, குணம் முதலாயினவற்றில் சிறந்த ஒரு பொருளைக் கூட்டி வைத்துச் சொல்லுவது ஒப்புமைக்கூட்டம் என்னும் அணி ஆகும்.
“கருதிய குணத்தின் மிகுபொருள் உடன்வைத்து
ஒருபொருள் உரைப்பது ஒப்புமைக் கூட்டம்” (நூற்பா – 79)
ஒப்புமைக்கூட்டம் – சமமான தன்மை உடைய பொருள்களை ஒருங்கு கூட்டுதல்.
கருதிய குணம்- புகழ்வதற்கு உரியனவும்,இகழ்வதற்கு உரியனவும் என இருவகைக் குணங்கள்ஒப்புமைக்கூட்ட அணியின் வகைகள்
ஒப்புமைக்கூட்ட அணி ஒரு பொருளைப் புகழ்ந்து கூறும்போதும், பழித்துக் கூறும்போதும் தோன்றும்.
“புகழினும் பழிப்பினும் புலப்படும் அதுவே” (நூற்பா – 80)ஒப்புமைக்கூட்ட அணியானது புகழ் ஒப்புமைக்கூட்டம்,  பழிப்பு ஒப்புமைக்கூட்டம் என்று இரு வகைப்படும்.

புகழ் ஒப்புமைக்கூட்டம்
புகழத்தக்க பொருள்களை ஒருங்கு சேர்த்துக் கூறுதல் புகழ் ஒப்புமைக்கூட்டம் எனப்படும்.
“பூண்தாங்கு கொங்கை பொரவே குழைபொருப்பும்,
தூண்டாத தெய்வச் சுடர்விளக்கும், – நாண்தாங்கு
வண்மைசால் சான்றவரும், காஞ்சி வண்பதியின்
உண்மையால் உண்டுஇவ் வுலகு”
(பொருப்பு – மலை, மலையாகிய ஏகாம்பர நாதர் ; தெய்வச் சுடர்விளக்கு – நந்தா விளக்கு)

அணிகலன்களை அணிந்த உமையம்மையாரின் கொங்கைகள் அழுந்துவதால் மேனி குழைந்த மலையாகிய ஏகாம்பர நாதரும், தூண்டும் தேவையற்ற தெய்வத்தன்மை பொருந்திய ஒளியுள்ள நந்தா விளக்கும், பிறர் நாணம் கொள்ளும்படியான கொடைத்தன்மை வாய்ந்த சான்றோரும், காஞ்சி என்னும் மாநகரில் உள்ளமையால் இவ்வுலகம் நிலைபெற்றிருக்கின்றது.

இப்பாடலில், ஏகாம்பர நாதர், நந்தா விளக்கு, சான்றோர் ஆகிய மூன்றும் காஞ்சியில் உள்ளமையால் உலகம் நிலைபெற்றிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இம்மூன்றும் புகழத்தக்க சமமான தன்மை உடைய பொருள்கள் ஆகும்.

எனவே இவற்றை ஒருங்கு சேர்த்துக் கூறியிருப்பதால் இப்பாடல்  ‘புகழ் ஒப்புமைக்கூட்டம்’ ஆயிற்று. ‘பண்புடையார்ப் பட்டுண் டுலகம் ‘ என்பர் வள்ளுவர்.

பழிப்பு ஒப்புமைக்கூட்டம்
“கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந்(து) எல்லை கடப்பாளும் இம்மூவர்
வல்லே 1மழையருக்கும் கோள்”
கொள்ளும் பொருளை ஆசைப்பட்டுத் தன்கீழ்க் குடியை அல்லல் செய்யும் அரசனும், உண்மை சொல்லாது வெல்ல வழக்குச் சொல்லுவாரும், ஒருவன் இல்லிருந்து அவ்வெல்லை கடக்கின்றாளும் இம்மூவராலும் மிகுதியாக இவ்வுலகத்துக் காலமழை அருகப்படும். ‘வல்லே’ என்றது மிக என்றவாறு.

இப்பாடற்கண் பழிக்கத்தக்க பொருள்கள் மூன்றும் ஒருங்கு தொகுத்துக் கூறப்பட்டுள்ளமையின், இது பழிப்பு ஒப்பமைக் கூட்டமாயிற்று.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 31

அணியிலக்கணம் – தொடர்- 5527) விரோதவணி

தண்டியலங்காரத்தில் இருபத்தியேழாவதாகக் கூறப்படும் அணி, விரோதவணி ஆகும். யாப்பு இலக்கணத்தின் செல்வாக்கை அணி இலக்கணத்தில் காணலாம்.

யாப்பு இலக்கணத்தில் செய்யுள் உறுப்புகளில் ஒன்றாகக் கூறப்படுவது ‘தொடை’ என்பது. பாடலில் ஓசை நலம் பற்றியது தொடை. தொடை வகையுள் ஒன்று ‘முரண் தொடை’ ஆகும். அத்தகைய முரண் தொடையே தண்டியலங்காரத்தில் விரோத அணி என்று வழங்கப்படுகிறது.

விரோத அணியின் இலக்கணம்
மாறுபட்ட சொல்லாலும், பொருளாலும் மாறுபட்ட தன்மை தோன்றக் கூறுவது விரோதம் என்னும் அணி ஆகும்.
“மாறுபடு சொல்பொருள் மாறுபாட்டு இயற்கை
விளைவுதர உரைப்பது விரோதம் ஆகும்”  (நூற்பா – 81)

விரோத அணியின் வகைகள்
விரோத அணி சொல் விரோதம், பொருள் விரோதம் என இரு வகைப்படும்.

சொல் விரோதம்
சொற்களை ஒன்றோடு ஒன்று மாறுபடுமாறு அமைத்தல் சொல் விரோதம் எனப்படும்.
“காலையும் மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்
மேலை வினைஎல்லாம் கீழவாம் – கோலக்
கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்
பெருமானைச் சிற்றம் பலத்து”
அழகு பொருந்திய கரிய யானைத் தோலையும், வெண்மையான திருநீற்றையும், சிவந்த திருமேனியையும், பசுமையான கொன்றை மாலையையும் உடைய பெருமானைச் சிற்றம்பலத்தில் காலையிலும் மாலையிலும் கைகளைக் கூப்பி, அவனது திருவடிகளைத் தொழுதால் நாம் முன் செய்த தீவினைகள் எல்லாம் சிறிது சிறிதாகக் குறைந்து நம்மை விட்டு நீங்கிவிடும்.

இப்பாடலில், காலை – மாலை ; கைகூப்புதல் – கால்தொழுதல் ; மேல் – கீழ்; கருமை – வெண்மை – செம்மை – பசுமை ; பெரு – சிறு எனச் சொற்கள் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு இருத்தலின் இது சொல் விரோதம் ஆயிற்று.

பொருள் விரோதம்
பொருள்களை ஒன்றோடு ஒன்று மாறுபடுமாறு அமைத்தல் பொருள் விரோதம் எனப்படும்.
“சோலை பயிலும் குயில்மழலை சோர்ந்துஅடங்க,
ஆலும் மயில்இனங்கள் ஆர்த்துஎழுந்த; – ஞாலம்
குளிர்ந்த; முகில்கறுத்த; கோபம் சிவந்த;
விளர்ந்த, துணைபிரிந்தார் மெய்”
(மழலை – மழலைச் சொற்கள் ; ஆலும் – ஆடும் ; ஞாலம் – உலகம் ; முகில் – மேகம் ;  கோபம் – இந்திரகோபம் என்னும் ஒருவகைப் பட்டுப்பூச்சி ; விளர்ந்த – வெளுத்த ; மெய் – உடம்பு.)
சோலைகளில் தங்கிய குயில்களின் மழலைச் சொற்கள் சோர்வுற்று அடங்க, ஆடுகின்ற மயில் கூட்டங்கள் ஆரவாரித்து எழுந்தன; உலகம் குளிர்ந்தது; மேகங்கள் கறுத்தன; இந்திர கோபப் பூச்சிகள் சிவந்தன; தம் துணைவரைப் பிரிந்தவருடைய உடல்கள் வெளுத்தன.

இப்பாடல், கார்கால வருணனை. இதில் முன்னிரண்டு அடிகளில் பொருள் விரோதம் அமைந்துள்ளது. குயில்மழலை சோர்ந்து அடங்கலும், மயில் இனங்கள் ஆர்த்து எழுதலும் ஒன்றற்கு ஒன்று மாறுபட்ட பொருள் ஆதலின் இது பொருள் விரோதம் ஆயிற்று.

மேலும் இப்பாடலில் உள்ள பின்னிரண்டு அடிகளில் கறுத்த – சிவந்த – விளர்ந்த (வெளுத்த) எனச் சொற்கள் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு இருத்தலின் இது, சொல் விரோதமும் ஆயிற்று.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 32

28)மாறுபடு புகழ்நிலையணிஅணியிலக்கணம் – தொடர்- 56

தண்டியலங்காரத்தில் இருபத்தியெட்டாவதாகக் கூறப்படும் அணி, மாறுபடு புகழ்நிலையணி ஆகும். பாடல் கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்குக் கவிஞர் கையாண்ட அணிகள் பல. அவற்றுள் மாறுபடு புகழ்நிலை அணியும் ஒன்றாகும்.

கவிஞர் பாடலில் ஒன்றைப் பழித்துக் கூற நினைக்கிறார். ஆனால் அதை வெளிப்படையாகக் கூற முடியாத நிலை. எனவே தாம் மனத்தில் கருதிய அதனை மறைத்து, வேறொன்றைப் புகழ்ந்து கூறுவதன் வாயிலாக, அதனைக் குறிப்பாகப் புலப்படுத்திக் காட்ட விழைகிறார். இம்முறையில் பாடப்படும் அணியே மாறுபடு புகழ்நிலை அணி ஆகும்.

மாறுபடு புகழ்நிலை அணியின் இலக்கணம்
கவிஞர், தாம் சொல்லக் கருதிய பொருளை மறைத்து அதனைப் பழித்தற்கு வேறு ஒன்றினைப் புகழ்ந்து உரைப்பது மாறுபடு புகழ்நிலை என்னும் அணி ஆகும்.
“கருதிய பொருள் தொகுத்து ஆங்குஅது பழித்தற்கு
வேறுஒன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை” (நூற்பா – 82)

“இரவுஅறியா; யாவரையும் பின்செல்லா; நல்ல
தருநிழலும் தண்ணீரும் புல்லும் – ஒருவர்
படைத்தனவும் கொள்ளா; இப் புள்ளிமான் பார்மேல்
துடைத்தனவே அன்றோ துயர்”
(இரவு- இரத்தல், பிச்சைஎடுத்தல் ; தரு – மரம்.)
இந்தப் புள்ளிமான்கள் பிறரிடம் சென்று இரத்தலை அறியமாட்டா. எவரிடத்தும் தம் குறைகளைச் சொல்லிப் பின் தொடர்ந்து செல்லமாட்டா. ஒருவர் படைத்தனவாகிய நல்ல மரத்தின் நிழலையும், குளிர்ந்த நீரையும், புல்லையும் கொள்ளா. அவற்றைத் தாமே பெறும் ஆதலின், இம்மான்கள் இந்தப் பூமியின்மேல் துன்பத்தில் இருந்து நீங்கியன அன்றோ?

இப்பாடலில் கவிஞர் பழித்துக் கூறக் கருதிய பொருள், ‘செல்வர் பின் சென்று இரந்து, அவரிடம் தம் குறைகளைச் சொல்லி, அவர் நிழலில் தங்கி உயிர் வாழும் இரவலரை’ ஆகும்.

ஆனால் கவிஞர் அக்கருத்தை மறைத்துப் புள்ளிமானைப் புகழ்ந்து கூறுவதன் வாயிலாக அதனைப் புலப்படுத்தியமையால், இது மாறுபடு புகழ்நிலை அணி ஆயிற்று.

மாறுபடு புகழ்நிலை அணியும், முன்பு இலேச அணியின் பிரிவாகக் கூறிய அணிகளில் ஒன்றாகிய புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும் ஒன்று போலத் தோன்றும். ஆனால் இரண்டிறகும் வேறுபாடு உள்ளது.

மாறுபடு புகழ்நிலை; ஒன்றனைப் புகழ்வது, அதனோடு எவ்விதமான தொடர்பும் இல்லாத பிறிது ஒன்றற்குப் பழிப்பாய்த் தோன்றுவது ஆகும். புகழ்வது போலப் பழித்திறம் புனைதலோ, ஒன்றனைப் புகழ்வது, அதற்கே பழிப்பாய்த் தோன்றுவது ஆகும்.

மாறுபடு புகழ்நிலைக்கு ஈண்டுக் காட்டிய ‘இரவறியா’ என்று தொடங்கும் பாடலில் மானை வெளிப்படையாகப் புகழ அப்புகழ்ச்சி, இரவலர்க்குப் பழிப்பாய்த் தோன்றக் காணலாம்.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் -33

அணியிலக்கணம் – தொடர்- 5729) புகழாப் புகழ்ச்சியணி
தண்டியலங்காரத்தில் இருபத்தியொன்பதாவதாகக் கூறப்படும் அணி, புகழாப் புகழ்ச்சியணி ஆகும். பாடல் கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்குக் கவிஞர் கையாண்ட அணிகளில் இதுவும் ஒன்று. ஒன்றைப் பழிப்பது வேறு ஒன்றற்குப் புகழாய்த் தோன்றும் முறையில் பாடப்படும் அணி ஆகும்.

புகழாப் புகழ்ச்சி அணியின் இலக்கணம்
பழித்துக் கூறுவது போன்ற முறையினால் ஒரு பொருளுக்கு மேம்பாடு தோன்றச் சொல்லுவது புகழாப் புகழ்ச்சி அணி என்னும் அணி ஆகும்.
“பழிப்பது போலும் பான்மையில் மேன்மை
புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி”  (நூற்பா – 83)
(மேன்மை – மேம்பாடு, புகழ்.)

இவ்வணிக்குத் தண்டியலங்கார உரையில் இரண்டு பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
“போர்வேலின் வென்றதூஉம், பல்புகழால் போர்த்ததூஉம்,
தார்மேவு திண்புயத்தால் தாங்குவதூஉம், – நீர்நாடன்
தேர்அடிக்கூர் வெம்படையால் காப்பதூஉம், செங்கண்மால்
ஓர்அடிக்கீழ் வைத்த உலகு”
நீர் வளம் பொருந்திய நாட்டை உடைய சோழன்; போர் செய்யும் வேலினால் வெற்றி கொண்டதும், தன்னுடைய பல்வேறு வகைப்பட்ட புகழால் மூடியதும், மாலையை அணிந்த தன்னுடைய வலிமையான தோளினால் தாங்குவதும், தேர்க்காலின் பெயரை உடைய கூர்மையும் கொடுமையும் உடைய ஆயுதத்தால் (அதாவது சக்கர ஆயுதத்தால்) காப்பதும்,  சிவந்த கண்களை உடைய திருமால் தனது ஒரு காலடியில் வைத்த இந்நிலவுலகமே ஆகும்.

இப்பாடலில், ‘திருமால் ஓர் அடியின் கீழ் வைத்த உலகு’ என உலகத்தைப் பழிப்பது போலக் கூறும் முறையால், அவ்வுலகம் முழுவதையும் மனிதனாகிய சோழன் வேலால் வென்றும், புகழால் போர்த்தியும், தோள் வலிமையால் தாங்கியும் பல விதமான துன்பங்கள்பட்டுப் பாதுகாப்பது செயற்கரிய செயல் என்னும் மேம்பாடு அவனுக்குத் தோன்றுமாறு குறிப்பாகச் சொல்லப்பட்டிருப்பதால் இது புகழாப் புகழ்ச்சி அணி ஆயிற்று.

“நினைவுஅரிய பல்புகழார் நின்குலத்துத் தொல்லோர்
அனைவரையும் புல்லினாள் அன்றே – மனுநூல்
புணர்ந்த நெறிஒழுகும் பூழிய! நீ இந்நாள்
மணந்த தடமலர்மேல் மாது”
(புல்லினாள் – கூடினாள் ; பூழியன் – சோழன் ; தடமலர் – பெரிய தாமரைமலர் ; மாது – திருமகள்.)
மனுவின் நீதிநெறிப்படி ஆட்சி செலுத்துகின்ற சோழனே!  நீ இந்நாளில் உனக்கு உரிமையாகும்படி மணந்துள்ள, பெரிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் திருமகள், மனத்தாலும் நினைத்தற்கு அரிய பலவகைப் புகழை உடைய உன் குலத்து முன்னோர்கள் அனைவரையும் கூடினவள் அன்றோ?

இப்பாடலில், ‘சோழன் மணந்த திருமகள், அவனுக்கு முன்னே வாழ்ந்த அவனுடைய குலத்து முன்னோர்கள் அனைவரையும் கூடியவள்’ என்று அவளைப் பழிப்பது போலக் கூறும் முறையால், ‘சோழன், வழிவழியாக வந்த பெருஞ்செல்வத்தையும் அரசாட்சியையும் உடையவன்’ என்னும் மேம்பாடு அவனுக்குத் தோன்றுமாறு குறிப்பாகச் சொல்லப்பட்டிருப்பதால் இது புகழாப் புகழ்ச்சி அணி ஆயிற்று.

புகழாப் புகழ்ச்சி அணியும், முன்பு இலேச அணியின் பிரிவாகக் கூறிய அணிகளில் ஒன்றாகிய பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தலும் ஒன்றுபோலத் தோன்றும்.
ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.

புகழாப் புகழ்ச்சி, என்பது ஒன்றனைப் பழித்துக் கூறுவது, பிறிது ஒன்றற்குப் புகழாய்த் தோன்றுவது ஆகும்.

பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தலோ, ஒன்றனைப் பழித்துக் கூறுவது, அதற்கே புகழாய்த் தோன்றுவது ஆகும்.

புகழாப் புகழ்ச்சிக்கு ஈண்டுக் காட்டிய பாடல்களில் ஒன்றாகிய ‘போர்வேலின்’ என்று தொடங்கும் பாடலில் ‘திருமால் ஓர் அடியின் கீழ் வைத்த உலகு’ என்று உலகத்தைப் பழித்துக் கூறுவது, அவ்வுலகைப் பல விதமான துன்பங்கள்பட்டுக் காக்கின்ற சோழனுக்குப் புகழாய்த் தோன்றக் காணலாம்.

பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தலுக்குச் சான்றாகக் காட்டப்பட்ட ‘ஆடல் மயில்இயலி’ என்று தொடங்கும் பாடலில், தலைவி, ‘புணர்ச்சியின்போது, தலைவன் என்னுடைய மென்மைத் தன்மை கெடுமாறு நடந்து கொள்கிறானே’ என்று அவனைப் பழித்துக் கூறுவது, ‘கூடும் காலத்தில் அவன் அவ்வாறு நடந்து கொள்வதே பேரின்பமாக உள்ளது’ எனபதைக் குறிப்பாகப் புலப்படுத்தலின் அவனுக்குப் புகழாயிற்று.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல்- 34

அணியிலக்கணம் – தொடர்- 5830) நிதரிசனவணி
தண்டியலங்காரத்தில் முப்பதாவதாகக் கூறப்படும் அணி, நிதரிசனவணி ஆகும்.

உலகில் இயற்கையாகச் சில நிகழ்ச்சிகள் நிகழ்வதைக் கவிஞர்கள் காண்கிறார்கள். அவற்றை உலக மாந்தர் வாழ்க்கையோடு இயைத்துப் பார்க்கின்றனர். தாம் கண்ணுற்ற இயற்கை நிகழ்ச்சிகள் மாந்தருடைய நல்ல பண்புகளையும் தீய பண்புகளையும் எடுத்துக் காட்டுவதற்காவே நிகழ்கின்றன என்ற அரிய நோக்கில் பாடத் தலைப்படுகின்றனர். இப்பொருள்பட அமைந்த அணியே நிதரிசன அணி. அல்லது காட்சிப் பொருள் வைப்பு அணி என்றும் அழைக்கப்படுகிறது.

நிதரிசன அணியின் இலக்கணம்
இயற்கையாக நிகழும் நிகழ்ச்சிகளின் பயன், வேறு ஒரு பொருளுக்கு நன்மையோ, தீமையோ தோன்றுமாறு இருப்பதாகச் சொல்லுவது நிதரிசனம் என்னும் அணி ஆகும்.
“ஒருவகை நிகழ்வதற்கு ஒத்தபயன், பிறிதிற்குப்
புகழ்மை தீமை என்றுஇவை புலப்பட
நிகழ்வது ஆயின் நிதரிசனம் அதுவே”  (நூற்பா – 84)
(புகழ்மை – நன்மை.)

நிதரிசன அணியின் வகைகள்
புகழ்மை நிதரிசனம், தீமை நிதரிசனம் என்பன ஆகும்.

புகழ்மை நிதரிசனம்
ஒரு பொருளின் பயன் வேறு ஒரு பொருளுக்கு நன்மை புலப்பட நிகழ்வதாகச் சொல்லுவது புகழ்மை நிதரிசனம் எனப்படும். இதை நற்பொருள் காட்சி என்று கூறுவர்.

“பிறர்செல்வம் கண்டால் பெரியோர் மகிழ்வும்
சிறியோர் பொறாத திறமும் – அறிவுறீஇச்
செங்கமலம் மெய்மலர்ந்த; தேம்குமுதம் மெய்அயர்ந்த;
பொங்குஒளியோன் வீறுஎய்தும் போது”

(செங்கமலம் – செந்தாமரை மலர் ; மெய் – உடல் ; மலர்ந்த – மலர்ந்தன ; தேம் – தேன் ; குமுதம் – அல்லி மலர் ;அயர்ந்த – குவிந்தன ; பொங்குஒளியோன் – மிகுந்த ஒளியை உடைய கதிரவன் ; வீறு – ஒளி.)

பிறர் செல்வத்தைக் கண்டால் பெரியோர் மகிழ்ச்சி அடைவதையும், சிறியோர் பொறாமை கொள்வதையும் அறிவுறுத்தி, மிகுந்த ஒளியை உடையவனாகிய கதிரவன் தோன்றி ஒளி மிகும் காலத்தில், செந்தாமரை மலர்கள் உடல் நெகிழ்ந்து மலர்ந்தன. தேன் பொருந்திய அல்லி மலர்கள் உடல் வாடிக் குவிந்தன.

இப்பாடலில் புகழ்மை நிதரிசனம், தீமை நிதரிசனம் ஆகிய இரண்டும் அமைந்துள்ளன.

1) கதிரவனின் ஒளியைக் கண்டு தாமரை மலர்கள் மலர்வது, பிறர் செல்வத்தைக் கண்டால் பெரியோர் மகிழ்ச்சி அடைவர் என்பதைக் காட்டுகிறது.

இங்கே தாமரை மலர்களின் மலர்ச்சி ஆகிய பயன், பெரியோரிடத்து மகிழ்ச்சி என்னும் நன்மை புலப்பட நிகழ்வதாகச் சொல்லப்பட்டதால் இது புகழ்மை நிதரிசனம் ஆயிற்று.

2) கதிரவனின் ஒளியைக் கண்டு அல்லி மலர்கள் குவிவது, பிறர் செல்வத்தைக் கண்டால் சிறியோர் பொறாமை கொள்வர் என்பதைக் காட்டுகிறது.

இங்கே அல்லி மலர்களின் குவிதல் ஆகிய பயன், சிறியோரிடத்துப் பொறாமை என்னும் தீமை புலப்பட நிகழ்வதாகச் சொல்லப்பட்டதால் இது தீமை நிதரிசனம் ஆயிற்று.

இப்பாடல் புகழ்மை, தீமை ஆகிய இருவகை நிதரிசனத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தாலும் தண்டியலங்கார உரையாசிரியர் இப்பாடலைப் புகழ்மை நிதரிசனுத்துக்கு மட்டுமே எடுத்துக் காட்டியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தீமை நிதரிசனம்
ஒரு பொருளின் பயன் பிறிது ஒரு பொருளுக்குத் தீமை புலப்பட நிகழ்வதாகச் சொல்லுவது தீமை நிதரிசனம் எனப்படும். இதைத் தீப்பொருள் காட்சிஎன்று கூறுவர்.

“பெரியோர் உழையும் பிழைசிறிது உண்டாயின்
இருநிலத்துள் யாரும் அறிதல் – தெரிவிக்கும்,
தேக்கும் கடல்உலகில் யாவர்க்கும் தெள்ளமுதம்
வாக்கும் மதிமேல் மறு”
(உழையும் – இடத்தும் ; பிழை – குற்றம்; இரு – பெரிய ; தேக்குதல் – நிறைதல் ; வாக்கும் – பொழியும் ; மதி – நிலவு ; மறு – களங்கம். )

நீர் நிறைந்த கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் யாவருக்கும் தெளிவான அமுதத்தைத் தன் கதிர்களால் பொழிகின்ற நிலவின் மேல் உள்ள களங்கமானது, பெரியவர்களிடத்தும் சிறிதளவு குற்றம் உண்டானால், அது இப்பூமியில் உள்ள எல்லோராலும் அறியப்படும் என்பதை விளக்கிக் காட்டும்.

இப்பாடலில், நிலவிடம் பொருந்தி உள்ள களங்கமானது, பெரியவர்களிடமும் குற்றம் உண்டு என்ற தீமைப் பயனைத் தெரிவிக்கும் என்று கூறப்பட்டிருப்பதால் இது தீமை நிதரிசனம் ஆயிற்று.

இப்பாடல், “குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து” ( குறள், 957 ) என்னும் திருக்குறளின் கருத்தை ஒட்டி எழுந்ததாகும்.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் : தொடர் 54-58
சிறீ சிறீஸ்கந்தராஜா
07/08/2013 – 09/08/2013

தொகுப்பு -thamil.co.uk