அணியிலக்கணம் 6 : சிறீ சிறீஸ்கந்தராஜா

பொருளணியியல் - 17அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 17


13) ஏதுவணி

தண்டியலங்காரத்தில் பதின்மூன்றாவதாகக் கூறப்படும் அணி, ஏதுவணி ஆகும். பாடலில் கூறப்படும் பொருள் நிகழ்வதற்கான காரணத்தைச் சிறப்பாக எடுத்துக் கூறுவதற்குக் கவிஞர்கள் கையாண்ட அணி ஏது அணி.

ஏது அணியின் இலக்கணம்
ஏதேனும் ஒரு பொருளின் திறத்தைக் கூறும்போது இதனால் இது நிகழ்ந்தது என்று காரணத்தைச் சிறப்பாக எடுத்துச் சொல்வது ஏது என்னும் அணி ஆகும்.  ஏது அணி காரக ஏது, ஞாபக ஏது என்று இரு வகைப்படும்.

“யாதன் திறத்தினும் இதனின் இது விளைந்தது என்று
ஏது விதந்து உரைப்பது ஏது; அதுதான்
காரகம், ஞாபகம் என இரு திறப்படும்” (நூற்பா – 57)
(ஏது – காரணம் ; காரகம் – செயலை இயற்றுவிப்பது ; ஞாபகம்- அறிவிப்பது, உணரச் செய்வது)

காரகவேது
“முதல்வனும் பொருளும் கருமமும் கருவியும்
ஏற்பது நீக்கமும் எனஇவை காரகம்” (நூற்பா – 58)
கருத்தா, பொருள், கருமம், கருவி, ஏற்பது, நீக்கம் என்று சொல்லப்படும் இவை ஆறும் காரணமாகத் தோன்றுவது காரக ஏது ஆகும்.

இந்த நூற்பாவிற்குத் திரு. சுன்னாகம், குமாரசாமிப் புலவர் அவர்கள் ‘முதல்வனும் பொருளும் கருமமும் கருவியுமாகிய இவை, ஏற்பதும் நீக்கமும் என இருவகையாகி வருவன காரக ஏதுக்களாம் ‘ என உரை காண்பர்.

ஏற்பது – ஒன்றற்கு நன்மையாக நிற்பது.
நீக்கம் – ஒன்றனை அழிக்க வருவது.
இவ்விருவகையில் அந்நான்கும் வரும் என்பது கருத்து. இங்ஙனம் உரை காண்பதே பொருத்தம் உடைத்தாகும்.

கருத்தா காரகவேது
“எல்லைநீர் வையகத்(து) எண்ணிறந்த எவ்வுயிர்க்கும்
சொல்லரிய பேரின்பந் தோற்றியதால் – முல்லைசேர்
தாதலைத்து வன்கொன்றைத் தாரலைத்து வண்டார்க்கப்
பூதலத்து வந்த புயல்”

(எல்லைநீர் – கடல் ; தோற்றியது – உண்டாக்கிற்று ;  தாது – மகரந்தம்; தார் – மாலை பூ ; அலைத்து – அசைத்து ; பூதலம் உலகம் ; புயல் – மழை)

ஒரு வினைமுதலே (கருத்தாவே) தொழிலே இயற்றுவிப்ப தாயும் (காரகமாயும்), பிற தோன்றற்கு ஏதுவாயும் நிற்பின், அது கருத்தாகாரக ஏதுவாம்.

முல்லை மலரிற் சேர்ந்த தாதினைக் கீழே உதிர்த்து, வளப்பம் மிகுந்த கொன்றை மலர்களையும் உதிரச் செய்து, அவற்றில் உள்ள வண்டுகள் ஒலிக்க, இந்நில வுலகத்து வந்த காற்றானது, கடல் சூழ்ந்த நிலவுலகத்திலுள்ள எவ்வுயிர்களுக்கும் சொல்லுதற்கரிய பேரின்பத்தைத் தோற்றுவித்தது என்பதாம்.

இப்பாடற்கண் கூறப்பட்ட கருத்தா காற்று ஆகும்.  அதுவே உயிர்களுக்கு இன்பத்தைத் தோற்றுவித்தது எனக் காரகமாகவும், தாதலைத்தல், தாரலைத்தல் ஆகிய செயல்கள் நிகழ்தற்கு ஏதுவாகவும் நிற்றலின், இது கருத்தா காரக ஏது ஆயிற்று. காற்று உயிர்களுக்குப் பேரின்பம் தோற்றியது எனக் கூறலின் இது ஆக்கமாயிற்று.

பொருட் காரகவேது
“கனிகொள் பொழிலருவி கைகலந்து சந்தின்
பனிவிரவிப் பாற்கதிர்கள் தோய்ந்து – தனியிருந்தோர்
சிந்தை யுடனே உயிருணக்குந் தென்மலயம்
தந்த தமிழ்மா ருதம்”

மலை மீதுண்டாய பொழில்கள் உகுத்த கனியோடு கலந்து இழியாநின்ற அருவியினுட் புக்குக் கலந்தும், அதனினுண்டாய சந்தனத்தின் தட்பத்துடன் மருவியும், பால் போன்ற சந்திர கிரணங்களில் மூழ்கியும், தனது தன்மை ஒழிந்து கொழுநரைப் பிரிந்திருந்தோர் மனத்தோடு உயிரையும் உணக்கா நின்றது ; பொதிய மலையிற் பிறந்து தமிழோடு பழகிய தென்றற் காற்று.

ஒரு செயப்படு பொருளே காரகமாயும், அதுவே ஏதுவாயும் நிற்பின்,  அது பொருட்காரக ஏதுவாம்.

இப்பாடற்கண் கூறப்பட்ட செயப்படு பொருள் மாருதமாகும்.  அதுவே பிரிந்திருந்தோரின் மனத்தோடு உயிரையும் வாட்டுகின்றது எனக் காரகமாயும் ; கைகலத்தல், மருவல், தோய்தல் ஆகிய காரணங்களாலே உயிரை வாட்டிற்று எனக் கூறுதலின் ஏதுவாயும் நிற்றலின், இது பொருட்காரக ஏதுவாயிற்று.

காற்று உயிரை வாட்டுகின்றது என்பதால் இது அழிவாயிற்று. மலயம் தந்த மாருதம் என்பது மலயத்தால் தரப்பட்ட மாருதம் எனப் பொருள்படுதலின், மாருதம் என்பது செயப்படுபொருளாயிற்று.  இங்ஙனம் பொருள்கொள்ளாக்கால் கருத்தா காரக ஏதுவிற்கும், இதற்கும் வேற்றுமையின்றாம்.

கரும காரகவேது
“மலையின் அலைகடலின் வாளரவின் வெய்ய
தலையிற் பயின்ற தவத்தால் – தலைமைசேர்
அம்மாதர் புல்லும் அபயன் புயம்புணர
எம்மா தவம்புரிந்தோம் யாம்”

மலையில் தவம் புரிந்தோள் – சயமடந்தை.
அலை கடலில் தவம் புரிந்தோள் – சீதேவி.
வாளரவின் வெய்ய தலையில் நின்று தவம் புரிந்தோள் – பூமிதேவி.

இப்படிப் பெரிய தவம் புரிதலாலே அவர்களால் தழுவப்பட்ட அபயனுடைய புயத்தை யாம் தழுவுதற்கு எத்தவம் புரிந்தோம்?

ஒரு கருமமே காரகமாகவும், அதுவே ஏதுவாயும் நிற்பின் அது கருமகாரக ஏதுவாகும். இப்பாடற்கண் கூறப்பட்ட கருமம் தவமாகும்.  அதுவே அபயன் புயத்தைப் புணர்வித்தது எனக் காரகமாயும், அங்ஙனம் புணர்தற்கு ஏதுவாதல்பற்றி ஏதுவாயும் நின்றலின், இது கருமகாரக ஏதுவாயிற்று.

கருவி காரகவேது
“கரடத்தான் மாரியும் கண்ணால் வெயிலும்
நிரைவயிரக் கோட்டால் நிலவும் – சொரியுமால்
நீளார்த் தொடையதுல னேரார் கலிங்கத்து
வாளாற் கவர்ந்த வளம்”

மதத்தால் மழையையும், கண்ணின் கடுமையால் வெயிலையும்,  கோட்டின் வெண்மையால் நிலவையும் கொடா நின்றது;

நெடிய ஆர்த் தாரையுடைய ஒப்பில்லாதானாகிய சோழன் பகை கொண்ட கலிங்கருடைய தேயத்துச் சென்று வாளாலே கவர்ந்து கொண்ட வளம்.

ஈண்டு வளம் என்றது, கலிங்கனுடைய யானைத்திரள்கள் எனக் கொள்க. கரடம்-மதம்.

ஒரு கருவியே காரகமாயும், அதுவே ஏதுவாயும் நிற்பின் அது கருவிகாரக ஏதுவாகும்.

இப்பாடற்கண் கூறப்பட்ட கருவிகள் கரடம், கண், கோடு என்பனவாம்.  இவை முறையே மாரி, வெயில், நிலவு ஆகியவற்றைத் தோற்றுவித்தது என்பதால் காரகமாயும், இவற்றை அக்கருவிகள் தோற்றுவித்தன என்பதால் அவையே ஏதுவாயும் நிற்றலின், இவை கருவிகாரக ஏதுவாயின.

ஞாபகவேது
ஏது அணியின் இரண்டு வகைகளிலே மற்றொன்று ஞாபக ஏது ஆகும். காரக ஏதுவிற்குச சொல்லப்பட்ட காரணங்கள் அன்றிப் பிற காரணத்தினால், உய்த்துணரத் தோன்றுவது ஞாபக ஏதுவாம். ஞாபகம் என்பதற்கு அறிவிப்பது என்று பொருள். இதனால் இது விளைந்தது என்று அறிவிப்பது ஞாபக ஏதுவாம்.
“காதலன்மேல் ஊடல் கரைஇறத்தல் காட்டுமால்
மாதர் நுதல்வியர்ப்ப, வாய்துடிப்ப, – மீது
மருங்கு வளை வில்முரிய, வாள் இடுக நீண்ட
கருங்குவளை சேந்த கருத்து”
(காதலன் = தலைவன் ; கரை இறத்தல் = அளவு கடத்தல் ; மாதர் = தலைவி ; நுதல் = நெற்றி ; மருங்கு = பக்கம் ; வளை வில் = வளைந்த வில் போன்ற புருவம் ; முரிய = வளைய ; கருங்குவளை= கண் ; சேந்த – சிவந்த ; கருத்து = குறிப்பு.)

தலைவியின் நெற்றி வியர்த்தது; வாய் துடித்தது; இரு பக்கமும் வளைந்த புருவங்களாகிய விற்கள் மேலும் மேலே சென்று வளைந்தன; வாள் படையும் தோற்கும் படியான நீண்ட கரிய நீலமலர் போன்ற கண்கள் சிவந்தன.  இந்த மெய்ப்பாடுகள் யாவும் அவள் தன்னுடைய காதலன் மீது கொண்ட ஊடல் அளவு கடந்து செல்வதைத் தெரிவிக்கும்.

இப்பாடலில், நெற்றி வியர்த்தல், வாய் துடித்தல், புருவங்கள் மேலும் வளைதல், கண்கள் சிவத்தல் ஆகியவற்றுக்குத் தலைவி தன்னுடைய காதலன் மீது கொண்ட ஊடல் மிகுதியே காரணம் என அறிவிக்கப் படுவதால் இது ஞாபக ஏது ஆயிற்று.

பொருளணியியல் - 178அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 18

14) நுட்பவணி 
தண்டியலங்காரத்தில் பதினான்காவதாகக் கூறப்படும் அணி,  நுட்பவணி ஆகும்.

கவிஞர் தாம் சொல்லக் கருதியதைக் கூற்றினால் (சொற்களால்), வெளிப்படையாகக் கூறுவதும் உண்டு.  குறிப்பினால் (மறைமுகமாகக்) கூறுவதும் உண்டு. குறிப்பினால் உணர்த்தும் அணிகளுள் நுட்பஅணி ஒன்று.

செயல்பாட்டாலும், செய்யும் தொழிலாலும் கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தும் முறையில் அமைத்துப் பாடப்படுவது ஆகும்.

நுட்ப அணியின் இலக்கணம்
பிறர்கருத்தைத் தெரிந்து கொண்டு அதற்கான பதிலை வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பினாலோ, செயலினாலோ அரிதாக நோக்கி உணரும்படி வெளிப்படுத்துவது நுட்பம் என்னும் அணியாம். அதாவது கருத்தை நுட்பமாக உணர்த்துவது ஆகும்.

“தெரிபுவேறு கிளவாது குறிப்பினும் தொழிலினும்
அரிது உணர் வினைத்திறன் நுட்பம் ஆகும்” (நூற்பா – 63)
(தெரிபு = தெரிந்துகொண்டு; வேறுகிளவாது = வெளிப்படையாகச் சொல்லாமல்)
நூற்பாவில் ‘குறிப்பினும் தொழிலினும்’ என்றமையால் நுட்ப அணி குறிப்பு நுட்பம், தொழில் நுட்பம் என இரு வகைப்படும் என்பது பெறப்படும்.

குறிப்பு நுட்பம்
பிறருடைய கருத்தை அறிந்துகொண்டு, அதற்குத் தமது கருத்தை வெளிப்படையாகக் கூற முடியாத நிலையில் அதனை, அரிதாக நோக்கி உணர்ந்து கொள்ளும் வகையில் குறிப்பால் தெரிவிப்பது குறிப்பு நுட்பம் எனப்படும்.  குறிப்பு என்பது, மனத்தில் கருதியதைக் கண், முகம் போன்ற உடல் உறுப்புகளின் செயல்பாட்டால் தெரிவிப்பது ஆகும்.

“காதலன் மெல் உயிர்க்குக் காவல் புரிந்ததால்,
பேதையர் ஆயம் பிரியாத – மாதர்
படர்இருள்கால் சீக்கும் பகலவனை நோக்கிக்
குடதிசையை நோக்கும் குறிப்பு”
(பேதையர் = மகளிர் ; ஆயம் = தோழியர் கூட்டம் ; மாதர் = தலைவி ; சீக்கும் = போக்கும் ; குடதிசை = மேற்குத் திசை ; குறிப்பு = உள்ளக் கருத்து.)

தோழியர் கூட்டத்தின் நடுவே இருக்கும் தலைவி, உலகத்தில் படர்ந்த இருளை அடியோடு போக்கும் கதிரவனைப் பார்த்துவிட்டுப் பின்பு மேற்குத் திசையைப் பார்க்கின்றாள்.

இந்தக் குறிப்பு, தலைவனுடைய மென்மையான உயிருக்குப் பாதுகாவலைத் தந்தது. தலைவன் பகல் பொழுதில் தலைவியைச் சந்திக்க வேண்டி வருகிறான். அப்பொழுது தலைவி தன்னை விட்டு எப்பொழுதும் பிரியாது இருக்கின்ற தோழியர் கூட்டத்தின் நடுவில் இருக்கிறாள்.

எனவே இரவில் வந்து தன்னைச் சந்திக்குமாறு அவனிடம் கூற விரும்பினாள். ஆனால் தோழியர்கள் தன்னைப் புடை சூழ்ந்திருப்பதால் அதனை அவனிடம் சொற்களால் கூற முடியவில்லை.

எனவே குறிப்பாக அதனை உணர்த்த விரும்புகிறாள். கதிரவனைப் பார்த்துவிட்டு உடனே மேற்குத் திசையை நோக்கித் திரும்பிப் பார்க்கின்றாள்.  இக்குறிப்பினால் கதிரவன் மறைந்த பின்பு இரவில் வந்து தன்னைச் சந்திக்குமாறு தலைவனுக்கு உணர்த்துகிறாள்.

தலைவனும் அக்குறிப்பின் உள்பொருளை அறிந்து கொள்கிறான். இவ்வாறு தலைவி தனது கருத்தைத் தலைவனுக்குக் குறிப்பால் நுட்பமாக உணர்த்தியமையால் இப்பாடல் குறிப்பு நுட்பமாயிற்று.

தொழில் நுட்பம்
தன்னுடைய கருத்தை வெளிப்படையாகக் கூற முடியாத நிலையில் அதனைத் தான் செய்து கொண்டிருக்கும் செயலின் மூலம் குறிப்பாக உணர்த்தல் தொழில் நுட்பம் எனப்படும்.
“பாடல் பயிலும் பணிமொழி தன்பணைத்தோள்
கூடல் அவாவால் குறிப்பு உணர்த்தும் – ஆடவற்கு
மென்தீம் தொடையாழின் மெல்லவே தைவந்தாள்
இன்தீம் குறிஞ்சி இசை”

(பணிமொழி – பணிவான சொற்கள், குளிர்ந்த சொற்கள் ; பணை – பருத்த; கூடல் – புணர்ச்சி; அவா – விருப்பம் ; தொடை – நரம்பு ; தீம் – இனிய ; தைவந்தாள் – நரம்பை வருடிப் பாடினாள்.)

பாடும் தொழிலைப் பயின்று கொண்டிருக்கும் தலைவி, தன்னுடைய பருத்த தோள்களினால் தலைவனைத் தழுவ வேண்டும் என்னும் விருப்பத்தாலே, அவனுக்குத் தன்னுடைய உள்ளக் கருத்தைக் குறிப்பாக உணர்த்த வேண்டி, தான் இசைத்துக் கொண்டிருந்த மெல்லிய இனிய நரம்பை உடைய யாழில் இனிய குறிஞ்சிப் பண்ணை மீட்டிப் பாடினாள்.

யாழ் மீட்டிப் பாடிக் கொண்டிருக்கிறாள் தலைவி, அந்நேரத்தில் தலைவன் வருகின்றான். தலைவி தலைவனிடம் தனக்குள்ள புணர்தல் விருப்பத்தையும் அதன்பொருட்டு யாமத்தில் (நள்ளிரவில்) அவன் வரவேண்டும் என்பதையம் ஒருசேரத் தெரிவிக்க எண்ணுகிறாள்.

ஆனால் அதனைப் பிறர் முன்பாக அவனிடம் நேரிடையாகத் தெரிவிக்க அவளால் முடியவில்லை. எனவே அவள் அதனைக் குறிப்பாக அவனுக்கு உணர்த்த வேண்டி, யாழில் குறிஞ்சிப் பண்ணை மீட்டிப் பாடத் தொடங்கினாள்.

குறிஞ்சிக்கு உரிய சிறுபொழுது யாமம் (நள்ளிரவு). இப்பாடலில் தலைவி, குறிஞ்சிப் பண்ணைப் பாடுதலாகிய தொழிலால் அக்குறிஞ்சிக்கு உரிய இடை யாமத்தில் தலைவன் தன்னை வந்து தழுவ வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை நுட்பமாகத் தெரிவிக்கிறாள். எனவே இப்பாடல் தொழில் நுட்பமாயிற்று.

பொருளணியியல் - 19அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 19

15)இலேசவணி
தண்டியலங்காரத்தில் பதினைந்தாவதாகக் கூறப்படும் அணி, இலேசவணி ஆகும்.  ஒரு கருத்தை அல்லது உணர்வைக் குறிப்பாகக் காட்டுதல் அல்லது வெளிப்படுத்தல் பல அணிகளில் காணப்படுவது.  ஒருவகையில் இலேச அணியும் குறிப்புணர்த்தலைச் செய்வது, ஆயினும் குறிப்புணர்த்தும் பிற அணிகளிலிருந்து வேறுபடுவது.

மனத்தில் தோன்றும் ஓர் உணர்வைச் சொல்லாமல் மறைக்கிறோம்.  ஆனால் உடலில் (கண், முகம்) தோன்றும் மெய்ப்பாடுகள் நாம் மறைத்த உணர்வை வெளிப்படுத்திக் காட்டிக் கொடுத்து விடுகின்றன.  அந்நிலையில் உள்ளக் கருத்தை மறைப்பதற்காக, அம்மெய்ப்பாடுகளுக்கு வேறு காரணம் கற்பித்துக் கூறுகின்றோம்.  இவ்வாறு கூறுவதே இலேச அணி. (இவ்வாறு மறைக்கமுயன்றாலும் மனக்குறிப்பு தெரிந்துவிடுகிறது என்பதுதான் அணியின் தன்மை).

இலேச அணியின் இலக்கணம்
மனத்தில் கருதியதை வெளிப்படுத்திக் காட்டும் சத்துவமாகிய குணங்களை (மெய்ப்பாடுகளை) வேறு ஒன்றால் நிகழ்ந்தன என மறைத்துச் சொல்லுவது இலேசம் என்னும் அணி ஆகும்.

“குறிப்பு வெளிப்படுக்கும் சத்துவம் பிறிதின்
மறைத்து உரையாடல் இலேசம் ஆகும்” (நூற்பா – 64)
சத்துவம் = மனம் கருதியதைப் புறத்தே வெளிப்படுத்திக் காட்டும் குணங்கள்.
அவை சொல் தளர்வு, மெய்வியர்ப்பு, கண்ணீர் அரும்பல், மெய்விதிர்ப்பு (உடம்பு நடுக்கம்), மெய் வெதும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலியன.

“கல் உயர்தோள் கிள்ளி பரிதொழுது, கண்பனிசோர்
மெல்லியலார் தோழியர்முன் வேறு ஒன்று – சொல்லுவரால்,
பொங்கும் படைபரப்ப, மீது எழுந்த பூந்துகள் சேர்ந்து,
எம்கண் கலுழ்ந்தனவால் என்று”
(கல் – மலை ; கிள்ளி – சோழன் ; பரி – குதிரை ; ஆல் – அசை ; துகள் – புழுதி, கலுழ்ந்தன = கலங்கின)

மலை போன்ற உயர்ந்த தோள்களை உடைய சோழன் ஏறி வந்த குதிரையைத் தொழுது, (அதாவது அவன் மீது காதல் கொண்டு) அக்காதலால் கண்களில் நீர் தளும்ப நின்ற மெல்லியல் மகளிர் தம்முடைய தோழியரிடம், அவ்வுண்மையை மறைத்தனர்; ‘சினத்தை உடைய படைகள் பரந்து வர, விண்ணில் எழுந்த தூசியானது உள்ளே புகுந்தமையால், எம்முடைய கண்கள் நீர் சொரிந்தன’ என்று நிகழ்ந்ததை மறைத்து வேறு ஒன்றைச் சொல்கின்றனர்.

இப்பாடலில், குதிரையின் மேல் ஏறிச் சோழன் உலா வருகிறான். அவன் பின்னால் அவனுடைய பெரும்படை அணி வகுத்து வருகிறது.  அப்போது சோழனைக் கண்ட நங்கையர் அவன் மீது மிக்க காதல் கொள்கின்றனர்.

அந்தக் காதல் முதிர்ச்சியால் அவர்கள் கண்களில் நீர்த்துளிகள் துளிர்க்கின்றன.  அதைத் தோழியர் பார்த்துவிட்டால் என்ன செய்வது?  என்று நாணத்தால், அவர்களிடம், ‘இந்தப் படைகள் பரந்து வருதலால் எழுந்த புழுதி கண்ணினுள் புகுந்துவிட்டது; அதனால் கண்கள் நீர் சொரிகின்றன’ என்று கூறுகின்றனர்.

சோழன் மேல் கொண்ட காதலைப் புறத்தே ‘கண்ணீர் அரும்பல்’ என்ற சத்துவக் குணம் காட்டிவிடுகிறது. அதை நங்கையர் மறைத்து, அது வேறு ஒன்றால் அதாவது புழுதி படிந்தமையால் நிகழ்ந்தது என்று கூறியமையால் இப்பாடல் இலேச அணி ஆயிற்று.

இலேசவணியின் வகை
“புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும்
பழிப்பது போலப் புகழ்புலப் படுத்தலும்
அவையும் அன்னதென்(று ) அறைகுநர் உளரே ”  (நூற்பா – 65)

புகழ்வது போலப் பழித்தல், பழிப்பது போலப் புகழ்தல் என்னும் இரண்டு அணிகளும் இலேச அணியின்பால் படுவன ஆகும்.

புகழ்வதுபோலப் பழித்தல்
ஒருபொருளைப் புகழ்வது போலப் பழித்துக் கூறுதல் உண்மைக் கருத்தை மறைத்து வேறு விதமாகச் சொல்வதால் இது இலேசத்துள் அடங்குகிறது.

“மேய கலவி விளைபொழுது, நம் மெல்லென்
சாயல் தளராமல் தாங்குமால் – சேயிழாய்!
போர்வேட்ட மேன்மைப் புகழாளன், யாம் விரும்பும்
தார்வேட்ட தோள்விடலை தான் ”
(மேய – பொருந்திய ; கலவி – புணர்ச்சி ; சாயல் – மென்மை ; தளராமல் – குன்றாமல் ; வேட்ட – விரும்பிய ; தார் – மாலை ; விடலை – தலைவன்.)

‘தோழி! கேட்பாயாக! எப்பொழுதும் போர்த் தொழிலை விரும்பிய மேம்பட்ட புகழினை உடையவனும், யாம் விரும்பிக் காதலித்து மாலையிட்ட தோள்களை உடையவனும் ஆகிய தலைவன், எம்மொடு பொருந்திப் புணர்ச்சியினை நிகழ்த்தும் பொழுது, நம்முடைய மென்மைத் தன்மை குன்றாதவாறு நடந்து கொள்கிறான்’ என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

இப்பாடலில் தலைவி, புணர்ச்சியின்போது தன்னுடைய மென்மைத் தன்மை கெடாதவாறு தலைவன் நடந்து கொள்கிறான் என்று கூறுவது, புகழ்வது போலத் தோன்றுகிறது, ஆனால் புணர்ச்சிக் காலத்தில் உணர்ச்சி மேலிட்டு அறிவு அழியாமல் இருக்கிறான்.

போரில் உள்ள அளவு விருப்பம் காதலில் அவனுக்கு இல்லை எனத் தலைவனைத் தலைவி மறைமுகமாகப் பழிக்கிறாள்.  ஆகவே இது புகழ்வது போலப் பழித்தல் ஆயிற்று.

பழிப்பதுபோலப் புகழ்தல்
ஒரு பொருளைப் பழிப்பது போலப் புகழ்ந்து கூறுதல்.  இதுவும் உள்ளக் கருத்தை மறைத்து வேறுவிதமாகச் சொல்வதால் இலேசத்துள் அடங்குகிறது.

“ஆடல் மயில் இயலி! அன்பன் அணிஆகம்
கூடுங்கால் மெல்லென் குறிப்புஅறியான் – ஊடல்
இளிவந்த செய்கை இரவாளன், யார்க்கும்
விளிவந்த வேட்கை இலன்”
(இயல் = சாயல் ; அன்பன் = தலைவன் ; அணி ஆகம் = அழகிய மார்பு ; இளிவந்த = தகாத செயல்கள் ; விளிவந்த = வெறுக்கத்தக்க ; வேட்கை = விருப்பம்.)

‘ஆடும் மயில் போன்ற சாயலினை உடைய தோழியே! தலைவன் என்னுடைய அழகிய மார்பகத்தைக் கூடும் போது மென்மையான என் நலத்தைப் பாராட்டி நுகர்தலை அறியான் நான் ஊடல் கொண்டபோது, தன் தகுதிக்குப் பொருந்தாதபடி பணிந்து இரக்கும் இரவாளன்; யார்க்கும் வெறுக்கத்தக்க; ஆசை உடையவன் அல்லன். ஆகவே இகழ்தற்கு உரியவன்; என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

இப்பாடலில் தலைவி, புணர்ச்சியின்போது தலைவன் தலைவியினுடைய மென்மைத் தன்மை கெடுமாறு நடந்து கொள்கிறான் என்றும் தலைவியின் ஊடலைத் தீர்ப்பதற்காகத் தன் தகுதியிலிருந்து தாழ்ந்து கெஞ்சுகிறான் என்றும், விருப்பம் அற்றவன் என்றும் கூறுவது பழிப்பது போலத் தோன்றுகிறது.

ஆனால் புணர்ச்சிக் காலத்தில் அவன் காமவசப்பட்டு அறிவழிந்தவனாக இருக்கிறான்; அதுவே தனக்கு இன்பமாக இருக்கிறது எனத் தலைவி மறைமுகமாகப் புகழ்கிறாள்.  ஆகவே இது பழிப்பது போலப் புகழ்தல் ஆகும்.

இவ்விரு அணிகளையும் ஒரே அணியாகக் கொண்டு அதற்கு  ‘வஞ்சப் புகழ்ச்சி அணி’ என்று பெயரிட்டுக் கூறுவதும் உண்டு.

வஞ்சப் புகழ்ச்சி அணி
புகழ்வது போலப் பழித்தும், பழிப்பது போலப் புகழ்ந்தும் கூறுவது வஞ்சப் புகழ்ச்சி அணி எனப்படும்.  புறநானூற்றில் ஒளவையார் பாடிய பாடல் ஒன்றில் வஞ்சப் புகழ்ச்சி அணி சிறப்பாக அமைந்துள்ளது.

அதியமான் போர்க்களம் பல கண்டவன். வெற்றிகள் பல குவித்தவன்.  இருப்பினும் போரால் ஏற்படும் உயிர் இழப்புக் கண்டு மனம் வருந்திப் போரில் விருப்பம் இல்லாதிருந்தான்.  இந்நிலையில் தொண்டைமான் என்பவன் அதியமான் மீது போர் தொடுத்தான்.

ஒளவையார் போரைத் தடுத்து நிறுத்த வேண்டி அதியமான் பொருட்டு, தொண்டைமானிடம் தூது சென்றார்.  ஒளவையாரை வரவேற்ற தொண்டைமான் தனது படைக் கொட்டிலை அழைத்துச் சென்று காட்டினான்.

அதைக் கண்ணுற்ற ஒளவையார் அதனைப் புகழ்வது போலவும், அதே நேரத்தில் அதியமான் படைக்கலங்கள் இருக்கும் கொட்டிலை இகழ்வது போலவும் பின்வருமாறு பாடுகிறார்.

‘தொண்டைமானே! இப்படைக் கலங்கள் மயில் பீலி அணிந்து, மாலை சூட்டி, திரண்ட வலிய காம்புகள் திருத்தி, நெய் பூசப்பட்டுக் காவலை உடைய உன் அரண்மனையிலே உள்ளன.

ஆனால் எம் அரசனாகிய அதியமானின் வேல்களோ (படைக் கருவிகளோ) பகைவர்களைக் குத்தியமையால் நுனி முறிந்து கொல்லனுடைய உலைக்களத்தில் அன்றோ கிடக்கின்றன.

“இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து,
கடியுடை வியன்நகர் அவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ …. ….
அண்ணல் எம்கோமான் வைந்நுதி வேலே” (புறநானூறு, 95)

(இவ்வே = இவை ; கண்திரள் = திரண்ட ;  நோன் காழ் = வலிமையான காம்பு ; கடி = காவல் ; வியன்நகர் = பெரிய அரண்மனை ; அவ்வே = அவை ;  கோடு = வேலின் கழுத்துப் பகுதி ; நுதி = நுனி ; கொல்துறை = கொல்லனுடைய உலைக்களம்)

இப்பாடலில், ஒளவையார் தொண்டைமானுடைய படைக்கலங்களைப் புகழ்வதுபோல, அவன் போர்ச்செயல் செய்யாதவன், அதாவது போர்க்களமே காணாதவன், என மறைமுகமாக இகழ்கிறார்.

அதே நேரத்தில் அதியமானது படைக் கருவிகள் எல்லாம் கோடும் நுனியும் முறிந்து கொல்லனது உலைக்களத்திலே உள்ளன என்பதன் வாயிலாக, போர்கள் பலவற்றைச் செய்து வெற்றி கண்ட அவனுடைய வீரத்தை மறைமுகமாகப் புகழ்கின்றார்.

இவ்வாறு தொண்டைமானைப் புகழ்வது போலப் பழித்தும், அதியமானின் பழிப்பது போலப் புகழ்ந்தும் பாடியுள்ளதால் இப்பாடல் வஞ்சப் புகழ்ச்சி அணி ஆயிற்று.

 

பொருளணியியல் - 20அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 20

16) நிரல்நிறை அணி
தண்டியலங்காரத்தில் பதினாறாவதாகக் கூறப்படும் அணி, நிரல்நிறை அணி ஆகும்.  தண்டியலங்காரம் பொருளணியியலில் சொல் பற்றிய அணிகள் சிலவும் இடம் பெற்றுள்ளன என்பதைச் முன்னைய தொடர்களில் பார்த்தோம்.  தீவக அணி, பின்வருநிலை அணி ஆகியவற்றின் இலக்கணத்தை இங்கு நினைவுபடுத்திப் பாருங்கள்.
சொல் பற்றிய அணிகளில் நிரல் நிறை அணியும் ஒன்று.

நிரல்நிறை அணியின் இலக்கணம்
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.  அதாவது, சில சொற்களை ஒரு வரிசையில் நிறுத்தி, அவற்றோடு பொருள் தொடர்புடைய வேறுசொற்களை அடுத்த வரிசையில் நிறுத்திப் பொருத்தமாக இணைத்துப் பொருள் காண்பது.

“நிரல்நிறுத் தியற்றுதல் நிரல்நிறை யணியே” (நூற்பா – 66)
நிரல் = வரிசை ; நிறை = நிறுத்துதல்.

நிரல்நிறை அணியின் வகைகள்
நிரல்நிறை அணி இரண்டு வகைப்படும்.
அவை நேர் நிரல்நிறை அணி, எதிர் நிரல்நிறை அணி என்பன ஆகும்.

நேர் நிரல்நிறை அணி
சொல்லையும் அச்சொல் கொண்டு முடியும் பொருளையும் முறைமாறாமல் வரிசையாக நிறுத்துதல் நேர் நிரல்நிறை அணி எனப்படும்.
“காரிகை மென்மொழியால், நோக்கால், கதிர்முலையால்,
வார்புருவத்தால், இடையால், வாய்த்தளிரால் – நேர்தொலைந்த
கொல்லி, வடிநெடுவேல், கோங்கு அரும்பு, வில்கரும்பு,
வல்லி, கவிர்மென் மலர்”

(காரிகை = பெண் ; நோக்கு = கண் ; கதிர் = ஒளி ;  வார் = நீண்ட ; நேர் தொலைந்த = அழகுகெட்டன ; கொல்லி = கொல்லிப்பண் ; வல்லி = பூங்கொடி ; கவிர் = முள்முருங்கை)
மகளிருடைய மென்மையான சொல்லாலும், கண்ணாலும், ஒளி வீசும் முலையாலும், நீண்ட புருவத்தாலும், இடையாலும், வாயாகிய தளிராலும் முறையே, கொல்லி என்னும் பண்ணும், கூர்மை பொருந்திய நீண்ட வேலும், கோங்கினது அரும்பும், மன்மதனது கரும்பு வில்லும், பூங்கொடியும், மென்மையான முருக்க மலரும் அழகு இழந்தன.

இப்பாடலில், முதல் இரண்டு அடிகளில் பெண்களின் மென்மொழி, கண், முலை, புருவம், இடை, வாய் ஆகிய சொற்களை வரிசையாக நிறுத்தி, பின் இரண்டு அடிகளில் அவற்றால் அழகு இழந்து போன கொல்லிப்பண், வேல், கோங்கு அரும்பு, கரும்புவில், பூங்கொடி, முருக்க மலர் ஆகிய தொடர்புடைய பொருள்களை அதேவரிசையில் வைத்திருப்பதைக் காணலாம்.

மென்மொழியால் – கொல்லிப் பண்ணும்
கண்ணால் – வேலும்
முலையால் – கோங்கு அரும்பும்
புருவத்தால் – கரும்பு வில்லும்
இடையால் – பூங்கொடியும்
வாய்த்தளிரால் – முருக்க மலரும் என ஒன்றுக்கொன்று நேராக நிறுத்திப் பொருள் கொள்ளுமாறு அமைத்தமையால் இது நேர் நிரல்நிறை அணி ஆயிற்று.

எதிர்நிரல்நிறைஅணி
சொல்லையும் அது கொண்டு முடியும் பொருளையும் முறையாக இல்லாமல் எதிராக நிறுத்தல், எதிர் நிரல்நிறை அணி ஆகும்.
“ஆடவர்கள் எவ்வாறு அகன்று ஒழிவார் வெஃகாவும்
பாடகமும் ஊரகமும் பஞ்சரமா – நீடியமால்
நின்றான், இருந்தான், கிடந்தான், இதுஅன்றோ
மன்று ஆர் மதில்கச்சி மாண்பு”
(பஞ்சரம் = இருப்பிடம் ; மன்று = மன்றம், அவை; ஆர் = நிறைவு; மதில் = கோட்டை ; கச்சி – காஞ்சி மாநகர்.)

நெடிய திருக்கோலத்தை உடைய திருமால், வெஃகா, பாடகம், ஊரகம் ஆகிய இடங்களைத் தனக்கு இடமாகக் கொண்டு, அவற்றில் முறையே கிடந்தான், இருந்தான், நின்றான்; மன்றங்கள் பல நிறைந்ததும், மதில் சூழ்ந்ததும் ஆகிய காஞ்சி மாநகரின் பெருமை இது அன்றோ?  இத்தகைய சிறப்புமிக்க காஞ்சி மாநகரை மானிடர்கள் எவ்வாறு விட்டு நீங்குவார்கள்?

இப்பாடலில், முதல் இரண்டு அடிகளில் காஞ்சி மாநகரில் உள்ள வெஃகா, பாடகம், ஊரகம் ஆகிய திருமாலின் இருப்பிடங்கள் கூறப்படுகின்றன.  ஆனால் பின் இரண்டு அடிகளில் அவ்விடங்களில் உள்ள திருமாலின் திருக்கோலங்கள் வரிசையாக இல்லாமல்,

வெஃகாவில் நின்றான்
பாடகத்தில் இருந்தான்
ஊரகத்தில் கிடந்தான்
என்று (எதிர் வரிசையாக) முறை மாறிக் கிடக்கின்றன. எனவே இவற்றை,

வெஃகாவில் கிடந்தான்  (படுத்திருக்கும் திருக்கோலம்)
பாடகத்தில் இருந்தான் (அமர்ந்திருக்கும் திருக்கோலம்)
ஊரகத்தில் நின்றான் (நின்று கொண்டிருக்கும் திருக்கோலம்) என்று மாற்றிப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இது எதிர் நிரல்நிறை அணி ஆயிற்று.

நிரல்நிறை அணியை நன்னூலும் யாப்பருங்கலக் காரிகையும் பொருள்கோள்களுள் ஒன்றாகக் கொண்டு அதை ‘நிரல்நிறைப் பொருள்கோள்’ என்று குறிப்பிடுகின்றன.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் : தொடர் 41-44
சிறீ சிறீஸ்கந்தராஜா
29/07/2013 – 01/08/2013

தொகுப்பு – thamil.co.uk