இசைத்தமிழின் தொன்மை : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழின் தொன்மை - 10தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!

இசைத்தமிழின் தொன்மை – 10
“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்!”

விளக்கம்:
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி,  இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.

தமிழ் மொழி உலக முதன் மொழியாகும்.  அது உலகத்தின் முதல் தாய்மொழியாகும்.  உயர்தனிச் செம்மொழியாகும். வரலாற்றிற்கும் எட்டாத முதுபழந் தொன் மொழியாகும். இத்தகைய தொன்மை வாய்ந்த தமிழை  உலகத்து இருளை அகற்றும் சுடராகச் சொல்கிறது தண்டியலங்கார உரையின் தமிழ் வாழ்த்துப்பா!!

எட்டாம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் புறப்பொருள் வெண்பா மாலையின் ஆசிரியராகிய ஐயனாரிதனர், குறிஞ்சியும் முல்லையுங் கலந்த பாலை நிலத்து மறவர் குடியின் பழைமையைக் குறிக்கும் இடத்து,

“பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் – கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி”  (புறப்பொருள் வெண்பா மாலை 35) என்று கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

குறிஞ்சி முல்லை வாணர் மிகப் பழைமையான தமிழ் வகுப்பார். அவர் குடியின் தொன்மை கூறவே, தமிழின் தொன்மையும் உடன் கூறியவாறாம்.

“கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தஇப் பசுந்தமிழ் ஏனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?” என்னும் பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடற் புராணம்) பாடல் தமிழின் செம்மையையும், தொன்மையையும் நன்கு உணர்த்தி நிற்கிறது.

தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழியாயும், திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாயும், தமிழரே உலகெங்கும் ஒளி பரவுமாறு முதல் முதல் நாகரிகப் பண்பாட்டு விளக்கேற்றினராயும் இருந்தும்; இன்றைக்கு 2500 ஆண்டுகட்குமுன் நாவலந்தேயத்திற்குள்ளும், 2000 ஆண்டுகட்கு முன் தென்னாட்டிற்குள்ளும் வந்து புகுந்த பார்ப்பனர் தாமுந் தம் எச்சமரபும், பழங்குடி மக்களான தமிழரையும் திராவிடரையும் என்றும் அடிமைத் தனத்துள்ளும் அறியாமையுள்ளும் அமிழ்த்தி வைத்தனர்.

தம் வெண்ணிறத்தையும் தம் முன்னோர் மொழியின் எடுப்பொலிகளையையும் பயன்படுத்தித் தம்மை நிலத்தேவராகவும் தம் வழக்கற்ற முன்னோர் மொழியைத் தேவமொழியாகவும் காட்டினர்.

தமிழ் நாகரிகத்தின் தனிப் பெருஞ் சான்றாயிருந்த பல்லாயிரக்கணக்கான முதலிலிரு கழகநூல்கள் (சங்க நூல்கள்) அத்தனையையும் அழித்துவிட்டனர்.

இன்று தமிழ் நாகரிகத்தின் தனிச் சிறப்பைத் தாங்கி நிற்கும் இருபெருந் தூண்கள், இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடையிலெழுந்த தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலும் திருக்குறள் என்னும் இலக்கிய நூலுமேயாகும்.

இவ்விரு நூல்களையும், தமிழ்நாட்டையே தாய்நாடாகவும் தமிழையே தாய்மொழியாகவும் கொண்டு தமிழாலேயே பெரும்பாலும் வாழ்ந்து வரும் சிலர், நூலாசிரியரும் உரையாசிரியரும் பதிப்பாசிரியருமாயிருந்து ஆரிய வழியினவாகக் காட்டிக்கொண்டும் நன்றிகெட்ட தனமாகவும் தம் முன்னோர் ஏமாற்றை இன்றும் போற்றிவருகின்றனர்.

நூலாசிரியருட் சிறப்பாகக் குறிப்பிடற்குரியவர் வரலாற்றாசிரியர்.

“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.” என்று முன்னோர் புகழுமாறு, உலகிலேயே முதன்முதலில் இலக்கிய முறையாய்ப் பண் படுத்தப்பெற்றதும் இசை, நாடகம் முதலிய பல அருங்கலை நூல்களெழுந்ததுமானது தமிழே. இது தற்போது புன்சிறு புது மொழியினும் தாழ்வாகக் கருதப்படுகின்றது.

இம்மாபெருங் கொடுமையைப் போக்கும் வண்ணம், செட்டிநாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் இசைத்தமிழ்க் கிளர்ச்சியைத் தோற்றுவித்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரும் தமிழால் வாழ்க்கை நடாத்துவாரும் ஆகிய இரு சாராரும், அன்னாரை நெஞ்சார நினைத்து வாயார வாழ்த்தவேண்டும்.

இசைக்கு மொழி வரையறையில்லையென்றும், தமிழில் இசைப்பாட்டில்லையென்றும், தமிழ் இசைக் கேற்காதென்றும் ஒரு சிறு கூட்டத்தார் வேண்டுமென்றே கட்டுப்பாடாய் உத்திக்கும் கலைக்கும் உண்மைக்கும் மாறாகப் பேசியும் எழுதியும் வருவது மிகமிக வருந்தத்தக்க தொன்றாகும்.

இசைத்தமிழ்த் தொன்மை

ஆரியர் வருமுன்பே, கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்னரே,  குமரி நாட்டில் நீடித்து வழங்கிய தலைச்சங்கத் தமிழ் முத்தமிழாயிருந்தது. தலைச்சங்கத்திறுதியில் செய்யப்பட்ட வழி நூலாகிய அகத்தியம் முத்தமிழிலக்கணம்.

நாலாயிரம் ஆண்டுகட்கு முன் தென்பெருங்கடலில்  அமிழ்ந்துபோனதுமான குமரிநாடேயாதலிலின் தமிழே முதல் இசைமொழி. தமிழரின் இசையுணர்ச்சி தலையாயது.  அதனாலேயே, இழவுக்கு அழுவதைக்கூட இசையோடு அழுவது தமிழ்ப்பெண்டிர் வழக்கமாயிற்று.

தமிழர் இசையில் சிறந்திருந்ததினால்தான் இசையை மொழிப் பகுதியாக்கி இசைத்தமிழ் என்றனர். அதோடு நில்லாது, நாடகத்தையும் சேர்த்து முத்தமிழ் என வழங்கினர்.

இயற்றமிழின்றி இசைத் தமிழில்லை. இயற்றமிழும் இசைத்தமிழுமின்றி நாடகத்தமிழுமில்லை.ஆகவே, இயலிலிசை நாடகம் மூன்றும் முறையே ஒருதமிழும் இருதமிழும் முத்தமிழுமாகும். இங்ஙனம் இசை நாடகக் கலைகளை மொழிப்பகுதியாக்கியது வேறெந்த நாட்டிலுமில்லை.

இசைத்தமிழ் பற்றிய தொல்காப்பியச் சான்றுகள்: 

“அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.”  (எழுத்து. 33)

“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.”  (அகத். 20)

“துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” (களவு. 1)

“பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலிலியர் அறிவர் கண்டோர்’’   (கற்பு. 52)

“பாட்டின் இயல பண்ணத்தி யியல்பே”   (செய். 173)

தொல்காப்பியம் இடைச்சங்க நூல். இதன் காலம் கி.மு. 2000. இஃது ஒரு வழிநூலாதலிலின் இதிற் கூறப்பட்டுள்ளவை எல்லாம் தலைச்சங்க நூல்களிற் கூறப்பட்டவையே.

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!

இசைத்தமிழின் தொன்மை – 11

மகர யாழ்-காமன் கொடி யாழ்

மகர யாழ்-காமன் கொடி யாழ்

இசைத்தமிழ்
இசைக் குரியவை சுரம், பண், தாளம், பாட்டு, கருவி என ஐந்தாகும்.

சுரம் ஏழுவகைப்படும்.
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவாகும்.

அவற்றை இசைமுறையிற் பயிலும்போது, முற்காலத்தில் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் ஏழ் நெடில்களாலும், பிற்காலத்தில் ச ரி க ம ப த நி என்னும் எழுத்துகளாலும் குறித்தார்கள்.

எழுசுரத்தின் ஏற்ற முறைக்கு ஆரோசை என்றும், இறக்க முறைக்கு அமரோசை என்றும் பெயர்.

ச ப வொழிந்த மற்ற ஐஞ்சுரங்களும் அரைச்சுரம் முழுச்சுரம் எனத் தனித்தனி இரு நிலைகளைப் பெறுகின்றன.

அரைச் சுரத்திற்கு ஆகணம் என்றும் முழுச் சுரத்திற்கு அந்தரம் என்றும் பெயர்.

எழுசுரக் கோவைக்கு “நிலை” என்று பெயர்.

மக்கள் பாட இயலும் மூன்று நிலைகட்கும் முறையே மெலிவு, சமன், வலிவு என்பன பெயராகும்.

பண்கள்
பண் (7 சுரம்), பண்ணியம் (6 சுரம்), திறம் (5 சுரம்),  திறத்திறம் (4 சுரம்) என நாற்றிறத்தன.

பெரும்பண்கள்
மருதம், குறிஞ்சி, செவ்வழி, பாலை என நான்கு வகைப்படும். இவற்றுள் ஒவ்வொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நந்நான்கு வேறுபாடு உடையது.

பண்களைப் பிறப்பிக்கும் முறை
ஆயப்பாலை, வட்டப் பாலை, முக்கோணப்பாலை, நாற்கோணப்பாலை என நால்வகையாகும்.

பண்களின் பெயர்களெல்லாம் குறிஞ்சி, நாட்டை, கொல்லி, தக்கேசி, யாழ்முறி, நேரிசை, செந்துருத்தி, செவ்வழி, புறநீர்மை எனத் தமிழ்ச்சொற்களாகவே இருந்தன.

பிங்கல நிகண்டில் 103 பண்கள் கூறப்பட்டுள்ளது.

“நரப்படைவா னுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்றாகிய ஆதியிசைகள்” என்று அடியார்க்குநல்லார் கூறுவதால் (சிலப். ப. 109) பண்டைத் தமிழிசையின் பரப்பை உணரலாம்.

தாளம் கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு உறுப்புகளையுடையது.

தாளத்திற்குப் பாணி யென்றும் பெயர்.
“அரை மாத்திரையுடைய ஏகதாளம் முதல்
16 மாத்திரையுடைய பார்வதிலோசனம் ஈறாக
41 தாளம் புறக்கூத்திற்குரிய” என்று அடியார்க்குநல்லார் கூறுகிறார்.

இக் கூற்றிலுள்ள தாளப் பெயர்கள் தமிழ்ப் பெயர்க்குப் பதிலாய்ப் புகுத்தப்பட்ட வடமொழிப் பெயர்கள்.

இசைப்பாட்டுகள் தலைச்சங்க காலத்திலும் இடைச்சங்க காலத்திலும் எண்ணிறந்திருந்தன. அவை யாவும் இறந்தொழிந்தன.

கடைச்சங்க நூல்களில் ஒன்றான பரிபாடல் இசைத் தமிழிலக்கியமே.

கருவிகள், தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, தாளக்கருவி (கஞ்சக்கருவி) என நான்கு.

அவற்றுள் தோற்கருவிகள் “பேரிகை படகம் இடக்கை உடுக்கை மத்தளம் சல்லிகை கரடிகை திமிலை குடமுழா தக்கை கணப்பறை தமருகம் தண்ணுமை தடாரி அந்தரி முழவு மதி(சந்திர) வளையம் மொந்தை முரசு கண்விடுதூம்பு நிசாளம் துடுமை சிறுபறை அடக்கம் தகுணிச்சம் விரலேறு பாகம் துணையுறுப்பு(உபாங்கம்) நாழிகைப் பறை துடி பெரும்பறை” முதலியவாகப் பல்வகையின.

இவை, அகமுழவு அகப்புறமுழவு புறமுழவு புறப்புறமுழவு பண்ணமைமுழவு நாண்முழவு காலைமுழவு என எழுவகைப்படும்.

பாட்டுறுப்பு (கீதாங்கம்)
கூத்துறுப்பு (நிருத்தாங்கம்)
பொதுவுறுப்பு (உபயாங்கம்) என மூவகைப்படும்.

துளைக்கருவி புல்லாங்குழல் நாகசுரம் முதலியன.

நரம்புக்கருவி பல்வகைத்து.
பேரியாழ் (21 நரம்பு)
மகரயாழ் (19 நரம்பு)
சகோடயாழ் (14 நரம்பு)
செங்கோட்டியாழ் (7 நரம்பு) என்பன பெருவழக்கானவை.  இவற்றுள் செங்கோட்டியாழே இப்போதுள்ள வீணையாகும்.

நரம்புக் கருவிகட்கெல்லாம் யாழ் என்பது பொதுப்பெயர்.  வீணை என்னும் பெயர் பிற்காலத்தது.

“யாழ்” என்னும் தமிழ்ச் சொற்குப் பதிலாக “வீணை” என்னும் வடசொல் வழங்கி வருகின்றது.

யாழ்கள் செங்கோடு (சிவப்புத் தண்டி), கருங்கோடு (கறுப்புத் தண்டி) என இருநிறத் தண்டிகளை யுடையவையா யிருந்தன.

செங்கோட்டையுடைய யாழ் செங்கோட்டியாழ், “கருங்கோட்டுச் சீறியாழ்” எனப் புறப்பாட்டில் வருதல் காண்க.

ஆங்கிலத்தில் Fiddle எனப்படும் கின்னரி தமிழகத்தினின்று மேனாட்டிற்குச் சென்றதே.

இஃது இராவணனால் மிகுதியாய்ப் பயிலப்பட்டதென்றும், அதனால் “இராவணாசுரம்” எனப்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.

மேற்கூறிய கருவிகளை யெல்லாம் தொன்றுதொட்டுச் செய்துவந்தவரும் இயக்கி வந்தவரும் தனித் தமிழரே.

அவர் பாணர், மேளக்காரர் (நட்டுவர்) என இரு வகுப்பினர்.

இசைத் தெய்வத்திற்கே மாதங்கி (பாடினி) என்றுதான் பெயர்.

பிராமணர் இசை பயிலக் கூடாதென்று ஒரு விலக்கிருந்தது. மனுதர்ம சாத்திரம் 4ஆம் அத்தியாயம் 15ஆம் விதியில், “பிராமணர் பாட்டுப் பாடுவது கூத்தாடுவது இப்படிக் கொத்த சாத்திர விருத்தமான கருத்தினால் பொருளைத் தேடிக்கொள்ளக் கூடாது” என்று கூறப்பட் டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் வழிபாட்டு மந்திரம் இசையோடு பாடப் படுவதே. ஆனால், அஃது ஆலாபன இசையன்று. வடமொழி வேத மந்திரங்கள் இப்போதுகூட ஆலாபித்துப் பாடப்படுவதில்லை.

உதாத்தம் அனுதாத்தம் சுவரிதம் என்னும் ஒலிப்பு வேறுபாடும் மாத்திரைக் கணக்கும் வேதமந்திரத்திற்கு மிகக் கண்டிப்பானவை.

ஓர் எழுத்துத் தவறாக ஒலிக்கப் படினும் மந்திரத்தின் வலி குன்றிவிடுவதுடன் ஓதினவனுக்குப் பெருங் கேடும் விளையும் என்பது வடமொழியாளர் கொள்கை.

ஆதலால், காட்டாளத்தி பண்ணாளத்தி நிறவாளத்தி ஆகிய மூவகை ஆலாபனையும் வடமொழி மந்திரத்திற்கில்லை என்பது தெளிவு.

வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி வேதவொழுக்கத்தினின்று தவறியதால், சில ஆரியப் பார்ப்பனர் விலக்கப்பட்டு ஓர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தி சிலப்பதிகாரத்தில் (புறஞ்சேரி. 35, 39) கூறப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்துவந்தவர் பறையருள் ஒரு பிரிவினரான பாணரே.

இதனாலேயே “பாண்சேரிப் பற்கிளக்கு மாறு” என்னும் பழமொழியும் எழுந்தது.

பாணபத்திரர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார் முதலிய யாழ்வேந்த ரெல்லாம் பாணரே.

11ஆம் நூற்றாண்டில் தேவாரத்திற்கு இசைவகுத்தது திருநீலகண்ட யாழ்ப்பாணரின் மரபினரான ஒரு பெண் ஆவர்.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்னிருந்து வழங்கிவரும் பாணாற்றுப்படை கூத்தராற்றுப் படை முதலிய செய்யுள்களும் நூல்களும் பாணரின் இசைத் தலைமையைப் புலப்படுத்தும்.

ஆரியப் பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்த பின்பே வடமொழியில் இசைநூல்கள் எழுந்தன. இசைத்தமிழ் நூல்கள் படிப்பாரற்று எரிக்கும் சிதலுக்கும் இரையாயின.

இதுபோதும் பார்ப்பனர் பார்ப்பன இசைவாணரையே போற்றிப் புகழ்வதும் தமிழ் இசைவாணரைத் தூற்றியிகழ்வதும் வழக்கமாயிருந்து வருகிறது.

தமிழர் அயலாரைப் போற்றித் தம்மவரைப் புறக்கணித்ததினால், தமிழ் இசைவாணர்க்குப் பெரும்பாலும் இசையரங்குகளில் இடமில்லாது போயிற்று.

 

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!

இசைத்தமிழின் தொன்மை – 12

இசைத்தமிழின் தொன்மை - 12உலகின் தொன்மை வாய்ந்த மொழிகளில் செவ்வியல் மொழி என்னும் பெருமையுடன் வாழும் மொழி தமிழ்மொழி ஆகும்.

தமிழ் இசையானது தனக்கே உரிய தனித்தன்மையுடன் விளங்குகின்ற அதே வேளையில் தமிழ் இலக்கியங்களில் இரண்டறக் கலந்திருப்பதைக் காணலாம்.கலைகளைப் படைக்கும் கலைஞன் அவற்றால் தான் மகிழ்வதோடு அக்கலையைச் சுவைப்பவர்களையும்  மகிழ்ச்சி அடையச் செய்கிறான்.

நுண்கலைகளில் ஒன்றாகச் போற்றப்படுவது இசைக்கலை ஆகும். ஓசையை அடித்தளமாகக் கொண்டு, செவி நுகர் கனியாக  அமைவது இசைக்கலை ஆகும்.
ஒலியின் நுட்பத்தைப் பகுத்தறியும் ஆற்றல் உடையோர்க்கே இசைக்கலை ஓர் அரிய கலை எனலாம்.

எழுத்துக்களை உருவாக்கிச் சொற்களைப் பொருள் தருமாறு அமைப்பது போல் ஒலியின் பகுதிகளைச் சுவை தருமாறு இணைத்து இசை உருவங்களான பணிகளை உருவாக்கி இசைக் கலையைப் படைக்கிறான் மனிதன்.

இசையானது எல்லா உயிர்களையும் ஈர்க்கும் தன்மை படைத்ததாக விளங்குவதோடு மனித சமுதாயத்தின் உயர்ந்த பண்பாட்டு விழுமியத்திற்குச் சான்றாக விளங்குகிறது.

தமிழ் மக்கள் பழங்காலத்தில் இருந்தே தங்கள் அறிவுத்திறனால் இசையமைப்பு முறையை அமைத்திருந்தனர். இதனைத் தொல்காப்பியக் குறிப்புகளிலிருந்தும் சங்க இலக்கியப் பாடல்களில் இருந்தும் அறியமுடிகிறது.

பழந்தமிழ் மக்கள் சுரங்களையும், சுருதிகளையும் ராகம் உண்டாக்கும் விதிகளையும் நன்கு உணர்ந்து பன்னிரண்டாயிரம் ராகங்களைப் பாடி வந்தார்கள் என்று பழந்தமிழ் இசை நூல்கள் கூறுகின்றன.

இசை அமைப்பு, பண் அமைப்பு, தாள அமைப்பு, வண்ணங்களை இனிமையாகப் பாடுதல் ஆகியவற்றில் பண்டைத் தமிழர் தனித்திறமை பெற்றவராகத் திகழ்ந்தனர்.

அழிந்துபோன இசை நாடக நூல்கள்
அகத்தியம் (முத்தமிழ் நூல்), பரிபாடல் (தலைச்சங்க இலக்கியம்), பெருநாரை, பெருங்குருகு, இசைநுணுக்கம், வரி, சிற்றிசை, பேரிசை, இந்திரகாளியம், தாளசமுத்திரம், தாளவகை யோத்து, சச்சபுட வெண்பா, பஞ்சமரபு, பஞ்ச பாரதீயம் முதலிய பண்டை இசைத்தமிழ் நூல்களும்,

முறுவல், குணநூல், சயந்தம், செயிற்றியம், கூத்தநூல், மதிவாணனார் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து (இலக்கியம்), சுத்தானந்தப் பிரகாசம், பரதம், பரத சேனாபதியம் முதலிய பண்டை நாடகத்தமிழ் நூல்களும் அயலார் (வடவர்) சூழ்ச்சியால் இறந்தொழிந்தன.

இப்போதுள்ள இசைத்தமிழ் இலக்கியம்
பரிபாடல், தேவாரம், நாலாயிரத் தெய்வப் பனுவல், திருப்புகழ் , தேவபாணி, வரிப்பாடல், குரவைப்பாடல், முத்துத்தாண்டவர், வேதநாயகம் பிள்ளை முதலியோர் கீர்த்தனைகள், சீகாழி அருணாசலக் கவிராயர் இராம நாடகக் கீர்த்தனை, கோபாலகிருட்டிண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து, வழிநடைப் பதங்கள், நொண்டிச் சிந்துகள், தில்லானா, தென்பாங்கு முதலிய பல இசைத்தமிழ் இலக்கியங்களும் பாடல்களும் இதுபோது தமிழிலுள்ளன.

இசையானது ஒலிவடிவாய் வெளிப்படும் ஒருவனது மகிழ்ச்சிப் பெருக்கம். அம் மகிழ்ச்சியைத் தன் தாய்மொழிச் சொற்களால் அறிவிக் கின்றான் நாகரிக மாந்தன்.

ஊமையரும் விலங்கு பறவைகளும் பேச்சின்மையால் ஒலிவடிவாய் மட்டும் மகிழ்ச்சியைக் காட்ட முடியும்.

ஒருவனது இசை கருத்தோடு கூடியிருப்பின், அஃது உணர்ச்சியுள்ளதும் உண்மையானதும் உயர்ந்ததுமாயிருக்கும்.

ஒருவரது கருத்து, தாய் மொழியிற் போல வேறெம்மொழியிலும் சிறக்க வெளிப்படாது; அறியாத மொழியாயின் வெளிப்படுத்தவே முடியாது.

மனிதனின் சிறந்த பேறுகளில் ஒன்றானதும் அவனை உயர்திணைப் படுத்துவதும் மொழியாம். அதை அவன் பயன்படுத்தாவிடின் கடைப்பட்ட அறிவிலியும் அஃறிணையு மாகின்றான்.

இசை ஒருவரது உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்த தாதலின், அதைக் கடவுள் வழிபாட்டிற்கும் ஊடல் தீர்ப்பிற்கும் தொன்று தொட்டுப் பயன்படுத்தி வருகின்றனர்.

விளங்காத மொழியில் கடவுளை வேண்டின் அஃது உளறுவது போல்வதோடு கடவுளைப் பகடிசெய்து பழிப்பதுமாகின்றது.

இசையினால் பாடுவார்க்கு மட்டுமன்றிக் கேட்பார்க்கும் இன்பம் விளைகின்றது. விளங்கும் மொழியில் பாடினால்தான் கேட்பார்க்கும் இன்பம் விளையும்.

பருந்தும் நிழலும் போலப் பொருளும் பண்ணும் பொருந்தியிருக்கும் உயர்ந்த இசையைப் பண்பட்ட தமிழன்தான் நுகர முடியும்; அயலார் நுகர முடியாது.

இந்து தேசத்து இசைக்கே இசைத்தமிழ்தான் அடிப்படை.

முதலாவது இசைத்தமிழ் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

கேள்வியைச் “ச்ருதி” என்றும் நிலையை “ஸ்தாய்” என்றும் மொழிபெயர்த்தனர்.

பண்களுக்கெல்லாம் தமிழ்ப்பெயரை நீக்கி ஆரியப்பெயரை இட்டுத் தமிழ்நாட்டிலும் வழங்கச் செய்தனர்.

ராகம் என்பது அராகம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு.

சுரம் தாளம் பாணி என்பவையும் தமிழ்ச்சொற்களே. “இந்துத்தானிய இசை” என்பதும் இசைத்தமிழின் திரிபேயாகும்.

அக்பர் அவைக்களத்தில் தென்னாட்டு இசைத்தமிழ்வாணரும் இருந்தனர்.

இந்துத்தானி இசையிலும் சுரம் தாளம் அராகம் என்பவற்றிற்குத் தென்னாட்டிசையில் இன்று வழங்கும் பெயர்களே வழங்கி வருகின்றன.  “கருநாடக இசை” என்பது தமிழிசையே அன்றி வேறன்று.

தமிழிசைப்பண்கள் : தொடர் 10-12
சிறீ சிறீஸ்கந்தராஜா
25/03/2016 – 02/04/2016

தொகுப்பு – thamil.co.uk