அணியிலக்கணம் 5 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தொடர்-31அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 12

08)வேற்றுமை அணி
தண்டியலங்காரத்தில் எட்டாவதாகக் கூறப்படும் அணி வேற்றுமை அணி ஆகும்.  உவமை அணியிலிருந்து தோன்றிய அணிகளில் இதுவும் ஒன்று.  உவமை அணியில் இரு பொருள்களுக்கு இடையிலான ஒப்புமை மட்டுமே சொல்லப்படும்.

ஒப்புமை உடைய இருபொருள்களுக்கு இடையிலான வேற்றுமையையும் சொல்வது வேற்றுமை அணி ஆகும்.  ஆகவே இவ்வணி உவமை அணியிலிருந்து பிறந்து அதன் தொடர்ச்சியாக அமைவது.  திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் இவ்வணி மிகுதியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

வேற்றுமை அணியின் இலக்கணம்
இரு பொருள்களுக்கிடையே உள்ள ஒப்புமையை வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ முதலில் கூறிப் பின்னர் அவற்றுக்கிடையே வேற்றுமை தோன்றக் கூறுவது வேற்றுமை அணி ஆகும்.
“கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்
வேற்றுமைப் படவரின் வேற்றுமை அதுவே”  (நூற்பா – 48)
(கூற்று – வெளிப்படையாகச் சொல்வது;
குறிப்பு – குறிப்பாக, மறைமுகமாகச் சொல்வது)
ஒப்புமையைக் கூறும் முறையால்; கூற்று வேற்றுமை, குறிப்பு வேற்றுமை என வேற்றுமைஅணி இரு வகைப்படும் என்பது புலனாகிறது.

இரு பொருள்களுக்கு இடையிலான ஒப்புமையை வெளிப்படையாகச் சொல்லுவது கூற்று வேற்றுமை எனப்படும்.  அவ்வொப்புமையை வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பாகச் சொல்லுவது குறிப்பு வேற்றுமை எனப்படும்.

வேற்றுமையை எடுத்துக்காட்டும் வகையிலும் வேற்றுமை அணி இருவகைப்படும்.

இருபொருள்களை வேற்றுமைப் படுத்தும்போது, இரண்டும் சமமான சிறப்புடையவையே எனத் தோன்றுமாறு கூறுவது வேற்றுமைச் சமம் எனப்படும்.

அவ்வாறு அல்லாமல், இரு பொருள்களுள் ஒன்று, மற்றொன்றைவிட உயர்ந்தது எனத் தோன்றுமாறு காரணத்துடன் சொல்வது உயர்ச்சி வேற்றுமை எனப்படும்.

ஒரு பொருளை மட்டும் வேற்றுமைப்படுத்துவது ஒரு பொருள் வேற்றுமை எனவும், இரு பொருள்களையும் வேற்றுமைப் படுத்துவது இரு பொருள் வேற்றுமை எனவும் குறிப்பிடப்படும்

வேற்றுமைச் சமம்
வேற்றுமைப் படுத்தப்படும் இரு பொருள்களும் சமமான சிறப்புடையவையே எனக்காட்டுவது வேற்றுமைச் சமம் ஆகும்.
“அனைத்து உலகும் சூழ்போய், அரும்பொருள் கைக்கொண்டு,
இனைத்து அளவைத்து என்றற்கு அரிதாம், – பனிக்கடல்
மன்னவ! நின் சேனைபோல்; மற்று அது நீர்வடிவிற்று
என்னும் இது ஒன்றே வேறு”
மன்னவனே! கடலும் நின் சேனையும் ஒரே வகையான இயல்பு, தொழில்களை உடையவை.

குளிர்ந்த கடல், உலகம் முழுவதையும் சூழ்ந்து, பல அரிய பொருள்களைத் தன்னகத்தே கொண்டு, இன்ன அளவை உடையது என்று அளப்பதற்கு அரியதாய் உள்ளது; உன் சேனையும் பல நாடுகளையும் கைப்பற்றுவதற்கு உலகம் முழுவதையும் சூழ்ந்து, பகை நாட்டு அரசர்களின் அரிய பொருள்களை எல்லாம் கைக்கொண்டு, இன்னஅளவை உடையது என்று அளப்பதற்கு அரியதாய் உள்ளது.

ஆனால் கடல், ‘நீர் வடிவில் உள்ளது’ என்னும் ஓர் இயல்பு மட்டும்தான் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும்.

இப்பாடலில், சேனை, கடல் என்னும் இரு பொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமைகள் முதலில் வெளிப்படையாகக் கூறப்பட்டன.  பின்பு, கடல் என்னும் ஒரு பொருளுக்கு மட்டும் ‘அது நீர் வடிவிற்று’ என்னும் வேறுபாடு கூறப்பட்டது.

வேற்றுமை கூறும்போது, ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்தது எனக் கூறவில்லை.  ஆகவே இது வேற்றுமைச் சமம் ஆகும். கடல், நீர்வடிவை உடையது என ஒரு பொருள் மட்டுமே வேற்றுமைப் படுத்தப்பட்டதால் இது ஒருபொருள் வேற்றுமைச் சமம் எனப்படும்.

உயர்ச்சி வேற்றுமை
வேற்றுமைப் படுத்தப்படும் இரு பொருள்களில் ஒன்று மற்றொன்றைவிட உயர்ந்தது எனப்புலப்படுமாறு வேற்றுமைப் படுத்துவது உயர்ச்சி வேற்றுமை ஆகும்.
“மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள்
ஒலியும் பெருமையும் ஒக்கும்; – மலிதேரான்
கச்சி படுவ கடல்படா; கச்சி
கடல்படுவ எல்லாம் படும்”
(மலிதேரான் = மிகுந்த தேர்ப்படையை உடையவன்;
கச்சி = காஞ்சிபுரம்; படுவ = இருப்பவை)
மிக்க தேர்ப்படையை உடைய எம் அரசனுடைய காஞ்சி மாநகரும் பெரிய கடலும் தமக்குள்ளே ஒலியாலும் பெருமையாலும் ஒத்தவை.  எனினும் காஞ்சி மாநகரில் உள்ளவை எல்லாம் கடலில் இல்லை; கடலில் இருப்பவை எல்லாம் காஞ்சி மாநகரில் உள்ளன.

இப்பாடலில் ஒலியாலும், பெருமையாலும் காஞ்சிபுரமும் கடலும் ஒத்தவை என அவற்றின் ஒப்புமை வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. பின்னர்  கடலைவிடக் காஞ்சி மாநகர் உயர்ந்தது எனப்பொருள்படும்படி வேற்றுமை கூறப்பட்டது. ஆகவே இது உயர்ச்சி வேற்றுமை ஆயிற்று.

வேற்றுமை அணி, திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  சான்றாகத் திருக்குறளில் இருந்து ஒரு குறள் பாவினைக் கொண்டு அதில் வேற்றுமை அணி அமைந்திலங்கும் திறத்தைக் காண்போம்.
“தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு” (குறள். 129.)
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் கூறிச் சுட்ட வடு என்றும் ஆறாது.

இக்குறளில், தீயும் சுடும், நாவினால் கூறும் தீய சொல்லும் சுடும் என்று ஒப்புமை கூறி, பின்பு தீயினால் சுட்ட புண் ஆறிவிடும்; ஆனால் நாவினால் சுட்ட வடு ஆறாது என்று வேற்றுமை கூறியதால் வேற்றுமை அணி ஆயிற்று.

 

அணியிலக்கணம் – தொடர்-34அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 13

09).விபாவனை அணி
தண்டியலங்காரத்தில் ஒன்பதாவதாகக் கூறப்படும் அணி விபாவனை அணி ஆகும்.  விபாவனை என்பதற்கு சிறப்பாக எண்ணுதல் என்று பொருள்.  பொருளைக் குறிப்பாக உணர்ந்து கொள்ளும் வகையில் கூறப்படும் அணிகள் தண்டியலங்காரத்தில் பல உள்ளன. அவற்றுள் விபாவனை அணியும் ஒன்று.

விபாவனை அணியின் இலக்கணம்
ஒரு பொருளின் செயலைக் கூறும்போது அச்செயலுக்குப் பலரும் அறியவரும் காரணத்தை நீக்கி வேறொரு காரணத்தால் அது நிகழ்ந்தது என்றோ, அல்லது காரணம் எதுவுமின்றி இயல்பாக நிகழ்ந்தது என்றோ உய்த்துணர்ந்து கொள்ளுமாறு குறிப்பாகக் கூறுவது விபாவனை என்னும் அணி ஆகும்.
“உலகுஅறி காரணம் ஒழித்து ஒன்று உரைப்புழி
வேறுஒரு காரணம், இயல்பு குறிப்பின்
வெளிப்பட உரைப்பது விபாவனை ஆகும்” (நூற்பா – 50)

விபாவனை அணியின் வகைகள்
1) அயல் காரண விபாவனை அணி
2) இயல்பு விபாவனை அணி

இவற்றின் இலக்கணத்தை நோக்குமிடத்து;
அயல் காரண விபாவனை அணி
அயல் காரணம் = வேறு காரணம். ஒரு பொருளின் செயலை உரைக்கும் போது, அச்செயலுக்குப் பலரும் அறியும் காரணங்களை நீக்கி, அது வேறு ஒரு காரணத்தால் நிகழ்ந்தது எனக் குறிப்பாக உணர்ந்து கொள்ளும் வகையில் கூறுவது அயல் காரண விபாவனை அணி எனப்படும்.

“தீ இன்றி வேம் தமியோர் சிந்தை; செழுந்தேறல்
வாய் இன்றி மஞ்ஞை மகிழ்தூங்கும்; – வாயிலார்
இன்றிச் சிலர் ஊடல் தீர்ந்தார்; அமர் இன்றிக்
கன்றிச் சிலை வளைக்கும் கார்”
(தமியோர் = தனித்திருப்போர்; தேறல் = மது;
மஞ்ஞை = மயில்; வாயிலார் = ஊடல் தீர்ப்போர்;
அமர் = போர்; சிலை = வில்; கார் = கார்காலம்)

இணை பிரிந்து தனித்திருப்பார் (காதலர்) உள்ளமானது, தீயில்லாமலே வேகும்; மயில்கள் செழுமையான மதுவை வாயில் கொள்ளாமலே களிப்புற்று ஆடும்; சிலர் (ஊடல் கொண்ட மகளிர்) ஊடல் தீர்க்கும் வாயிலார் இல்லாமலே ஊடல் தீர்ந்தார்கள்; மேகமானது போர் இல்லாமலே வெகுண்டு (கறுத்து) வில்லை (வான வில்லை) வளைக்கும்.

இப்பாடலில், வேகுதல், களிப்புற்று ஆடுதல், ஊடல் தீர்தல், வில்லை வளைத்தல் ஆகிய வினைகளுக்கு (செயல்களுக்கு) உலகு அறிந்த காரணங்கள் முறையே தீ, செழுந்தேறல் (மது), வாயிலார், போர் ஆகியனவாம். ஆனால், இக்காரணங்களால் இல்லாமல் இவ்வினைகள் யாவும் ‘கார் காலம்’ என்ற வேறு ஒரு காரணத்தால் நிகழ்ந்தன என்பதைக் குறிப்பாக உணர்த்தியதால் இப்பாடல் ‘அயல் காரண விபாவனை அணி’ ஆயிற்று.

இயல்பு விபாவனை அணி
ஒரு செயல் உலகு அறிந்த காரணங்கள் இன்றி இயல்பாகவே நிகழ்ந்தது எனக் குறிப்பாக உணர்த்துவது இயல்பு விபாவனை அணி எனப்படும்.
“கடையாமே கூர்த்த கருநெடுங்கண்; தேடிப்
படையாமே ஏய்ந்த தனம்; பாவாய்! – கடைஞெமிரக்
கோட்டாமே கோடும் புருவம்; குலிகச்சேறு
ஆட்டாமே சேந்த அடி”
(தனம் = மார்பு; ஞெமிர = அமுங்குமாறு;
கோட்டாமே = வளைக்காமலே;
குலிகச்சேறு = சாதிலிங்கக் குழம்பு)

சித்திரப் பாவை போன்ற பெண்ணே! உன்னுடைய கரிய நெடிய கண்கள் கடைதல் செய்யாமலே (சாணை பிடிக்காமலே) கூர்மையைப் பெற்றன; பிறர் ஆராய்ந்து செய்யாமலேயே மார்புகள் தக்க உருவத்தோடு அமைந்தன; உன் புருவங்கள் இரு கோடிகளும் அமுங்குமாறு யாரும் வளைக்காமலேயே வளைந்துள்ளன; உன் பாதங்கள் சாதிலிங்கக் குழம்பு தோய்க்கப்படாமலேயே சிவந்துள்ளன.

சாணை பிடித்துக் கூர்மை செய்தல், ஆராய்ந்து செய்து தக்க உருவம் படைத்தல், இரு கோடிகளையும் பற்றி வளைத்தல், சாதிலிங்கக் குழம்பு தோய்த்துச் சிவக்கச் செய்தல் ஆகிய உலகு அறிந்த காரணங்கள் இல்லாமல், இயல்பாகவே முறையே, தலைவியின் கண்கள் கூர்மை பெற்றன, மார்புகள் தக்க உருவத்தோடு அமைந்தன, புருவங்கள் வளைந்தன, பாதங்கள் சிவந்தன என்பனவற்றைக் குறிப்பாகக் கூறினமையால் இப்பாடல் இயல்பு விபாவனை அணி ஆயிற்று.

ஒரு பொருளின் வினை உரைக்குங்கால் அவ்வினைக்குப் பலரும் அறியும் காரணங்களை ஒழித்து, அவ்வினையானது வேறு ஒரு காரணமாகவோ, அல்லது இயல்பாகவோ நிகழ்ந்ததாகப் பாடுவது விபாவனை அணி.

 

அணியிலக்கணம் – தொடர்-38அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 14

10). ஒட்டு அணி
தண்டியலங்காரத்தில் பத்தாவதாகக் கூறப்படும் அணி, ஒட்டு அணி ஆகும்.  இலக்கியத்திற்கு உரிய பண்புகளுள் தலைசிறந்த ஒன்றாகக் கருதப்படுவது குறிப்பாற்றல் (Suggestiveness) என்பதாகும்.  கவிஞர் பாடலில் தாம் கூற விரும்பும் கருத்தினைக் குறிப்பாகக் கூறி, படிப்பவர் சிந்திந்து உணர்ந்து கொள்ளச் செய்தால் படிப்பவர்க்குக் கவிதைச் சுவை மிகுதியாகும்.

பாடல் பொருளை மிகக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்குக் கவிஞர்கள் கையாண்ட அணிகள் பலவாகும்.  அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று ஒட்டு அணி ஆகும்.

ஒட்டு அணியின் இலக்கணம்
கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை மறைத்து, அதனை வெளிப்படுத்துவதற்கு அதனோடு ஒத்த வேறு ஒரு பொருளைச் சொல்வது ஒட்டு என்னும் அணியாம்.
“கருதிய பொருள்தொகுத்து அதுபுலப் படுத்தற்கு
ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டு என மொழிப”  (நூற்பா – 51)
என்ற நூற்பாவில் தண்டி ஆசிரியர் கூறுவதாவது, ‘ஒத்த வேறு ஒரு பொருள்’ என்பது, கவிஞர் சொல்லக் கருதிய பொருளுக்கு உவமையாகத் தக்க பொருள் ஆகும்.

இவ்வாறு ‘பிறிது’ ஒரு பொருளை மொழிவதால் இவ்வணி ‘பிறிதுமொழிதல் அணி’ எனப் பெரும்பாலும் வழங்கப்படுகிறது.
“வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்தது ஓர் காவிக்
குறைபடுதேன் வேட்டும் குறுகும்; -நிறைமதுச்சேர்ந்து,
உண்டாடும் தன்முகத்தே, செவ்வி உடையது,ஓர்
வண்தா மரைபிரிந்த வண்டு”
இப்பாடல், ‘பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனுக்கு வாயில் நேர்ந்த தோழி சொல்லியது’ என்னும் அகப்பொருள் துறையில் அமைந்தது.

(வெறி- களிப்பு; இனச்சுரும்பு – பல வண்டுகள்;
காவி – கருங்குவளைப்பூ; வேட்டும்- விரும்பி;
குறுகும் – சேரும்; மது – தேன்; தன்முகத்தே – தன்னிடத்து;
செவ்வி – வனப்பு; வண்தாமரை – வளமான தாமரை மலர்.)

வனப்பையும் வளமையையும் உடைய தாமரை மலரில் குறைவற்ற நிறைந்த தேனை உண்டு களித்து விளையாடுகின்ற ஆண் வண்டானது, பல வண்டுகள் சேர்ந்து உண்டு வெறுத்து விட்ட ஒரு கருங்குவளைப் பூவில் உள்ள குறைபட்ட தேனை ஆசைப்பட்டுச் சேருகின்றதே!

கவிஞர் கூறக் கருதிய பொருள் இதுவன்று; வேறு ஒன்றாகும். அதனை இப்பாடலில் வெளிப்படையாகக் கூறாமல் மறைத்துக் கூறுகிறார். மறைத்துக் கூறும் அப்பொருள் வருமாறு:

வனப்பையும் வளப்பத்தையும் உடைய தலைமகளிடத்தில் குறைவற்ற நிறைந்த இன்பத்தைத் துய்த்து மகிழ்ந்த தலைமகன், அவளை விட்டு நீங்கி, பலரும் துய்த்து வெறுத்து விலக்கிய ஒரு பரத்தையினது குறைவாகிய இன்பத்தை விரும்பி அவளைச் சேர்கின்றானே”

பலராலும் அனுபவித்து விடப்பட்ட பரத்தை –  (கூறக் கருதிய பொருள்)
“வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்தது ஓர் காவி”-  (கூறிய பொருள்)

அப்பரத்தைபால் பெறும் குறைவாகிய இன்பம்- (கூறக் கருதிய பொருள்)
“குறைபடு தேன்” – (கூறிய பொருள்)

வனப்பையும் வளப்பத்தையும் உடைய தலைவி – (கூறக் கருதிய பொருள்)
“செவ்வி உடையது ஓர்வண்தாமரை” – (கூறிய பொருள்)

அத்தலைவிபால் பெறும் நிறைவாகிய இன்பம் – (கூறக் கருதிய பொருள்)
“நிறைமது” – (கூறிய பொருள்)

தலைவியைப் பிரிந்த தலைமகன் – (கூறக் கருதிய பொருள்)
“வண்தாமரை பிரிந்த வண்டு” – (கூறிய பொருள்)

இவ்வாறு கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை மறைத்து, அதனோடு ஒத்த வேறு ஒரு பொருளைக் கூறி, அதன் வாயிலாக வெளிப்படுத்தியமையால் இப்பாடல் ஒட்டு அணியாயிற்று.

இங்கு உவமானம் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது; உவமேயம் குறிப்பாகப் பெறப்படுகின்றது.

ஒட்டு அணியின் வேறு பெயர்கள்
தண்டியலங்கார ஆசிரியர் கூறும் இந்த ஒட்டு அணியைத் தொல்காப்பியர் உள்ளுறை உவமம் என்றும் உவமப் போலி என்றும் குறிப்பிட்டுள்ளார். வேறு சில அணி இலக்கண நூலாரும்  பிறிது மொழிதல், நுவலா நுவற்சி, குறிப்பு நவிற்சி  என்ற வேறு பெயர்களால் வழங்குகின்றனர்.

தொல்காப்பியர் குறிப்பிடும் உள்ளுறை உவமம் அல்லது உவமப் போலி என்பது பின்னாளில் அகப்பொருள் பாடல்களில் மட்டும் பயின்று வரலாயிற்று.

தெய்வம் ஒழிந்த ஏனைய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு கூறப்படும்.

ஒட்டு அணிக்குச் சான்றாகத் தண்டியலங்கார ஆசிரியர் காட்டிய ”வெறிகொள் இனச்சுரும்பு” என்று தொடங்கும் பாடல், மருதத் திணைக்கு உரிய தாமரைமலர், காவிமலர் ஆகிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டிருப்பதைக் காணலாம்.

தொல்காப்பியர் குறிப்பிடும் உள்ளுறை உவமத்திற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணரும் இப்பாடலையே காட்டியுள்ளார்.
அகப்பொருளில் பயின்று வரும் ஒட்டு அணியை  ‘உள்ளுறை உவமம்’ என்றும்,  புறப்பொருளில் பயின்று வரும் ஒட்டு அணியைப்  ‘பிறிது மொழிதல் அணி’ என்றும்  “இலக்கண விளக்கம்” என்ற நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் வேறுபடுத்திக் கூறுகின்றார்.

திருக்குறள், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி போன்ற தமிழ் இலக்கியங்களில் பிறிது மொழிதல் அணி மிகுதியாகப் பயில்கிறது.  திருவள்ளுவர் திருக்குறளில் பல குறள்பாக்களில் பிறிது மொழிதல் அணியைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.

இத்திறத்தை ஒரு திருக்குறள் வழிநின்று காண்போம்.
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்”  (குறள். 475)
(சாகாடு – வண்டி; பீலி – மயில் இறகு;
அச்சு – அச்சாணி; சால- மிகவும்.)

மென்மையான மயில் இறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப பண்டத்தை அளவோடு ஏற்றாமல் அளவுக்கு மீறி மிகுதியாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து போகும்.

திருவள்ளுவர் கூறக் கருதிய பொருள் இதுவன்று.
”ஓர் அரசன் தன் பகைவர்கள் தன்னைக் காட்டிலும் வலிமையில் குறைந்தவர்கள் என்று கருதி, அவர்கள் மீது ஆராயாமல் போர் தொடுத்தால் அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கூடி அவனை எதிர்த்துப் போரிடும் பொழுது அந்த அரசன் தன் வலிமை கெட்டு அழிந்து போவான்.”

இதுவே வள்ளுவர் கூறக் கருதிய பொருள். ஆனால் இதனை வெளிப்படையாகக் கூறாமல் மறைத்து இதைப் புலப்படுத்துவதற்காக இதனோடு ஒத்த வேறு ஒரு பொருளைக் கூறினமையால் இக் குறள்பா பிறிது மொழிதல் அணியாயிற்று.

 

அணியிலக்கணம் – தொடர்-39அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 15

11). அதிசய அணி
தண்டியலங்காரத்தில் பதினோராவதாகக் கூறப்படும் அணி, அதிசய அணி ஆகும்.  பாடல் பொருளை உள்ளது உள்ளபடி அழகுபடுத்திக் கூறல் தன்மை அணி என்பதை முதல் பாடத்தில் பார்த்தோம்.

சில நேரங்களில் கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தைப் புலப்படுத்த வேண்டியும், படிப்போரை வியப்பில் ஆழ்த்த வேண்டியும் பாடல் பொருளை உயர்வுபடுத்திக் கூறுவர்.  அவ்வாறு கூறும் அணியே அதிசய அணி. இவ்வணியை ‘உயர்வு நவிற்சி அணி’ என்று கூறுவர்.

அதிசய அணி இலக்கணம்
கவிஞர், தாம் கருதிய ஒரு பொருளினது அழகை உவந்து சொல்லும் போது, உலகவரம்பைக் கடவாதபடி உயர்ந்தோர் வியக்கும்படி சொல்லுவது அதிசயம் என்னும் அணியாகும்.

அதிசய அணி மிகைப்படுத்திக் கூறுவதுதான். இங்கு ‘உலகவரம்பு கடவாமல்’ கூறுதல் என்பது, கவிஞர்கள் வழக்கமாக மிகைப்படுத்திக் கூறும் மரபுக்கு முரண்படாமல் கூறவேண்டும் எனப் பொருள்படும்.
“மனப்படும் ஒருபொருள் வனப்பு உவந்து உரைப்புழி
உலகுவரம்பு இறவா நிலைமைத்து ஆகி
ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம்”  (நூற்பா – 53)

அதிசய அணி வகைகள்
“அதுதான்
பொருள்குணம் தொழில்ஐயம் துணிவே திரிபெனத்
தெருளுறத் தோன்றும் நிலைமைய தென்ப” (நூற்பா – 54)

அதிசய அணி ஆறு வகைப்படும். அவை வருமாறு:
1) பொருள் அதிசயம் (ஒரு பொருளின் இயல்பை விளக்குமாறு  உயர்த்திக் கூறுவது.)
2) குண அதிசயம் (ஒரு குணத்தின் இயல்பை விளக்குமாறு உயர்த்திக் கூறுவது)
3) தொழில் அதிசயம் (ஒரு தொழிலின் இயல்பை விளக்குமாறு உயர்த்திக் கூறுவது.)
4) ஐய அதிசயம் (ஐயப்பட்டுக் கூறுவதன் மூலம் ஒருபொருளைஉயர்த்திக் கூறுவது.)
5) துணிவு அதிசயம் (ஐயம் தெளிந்து கூறுவதன் மூலம் ஒருபொருளை உயர்த்திக் கூறுவது)
6) திரிபு அதிசயம் (ஒரு பொருளை வேறுவேறு பொருளாக மாற்றி (திரிபுற்று) வியக்குமாறு உயர்த்திக் கூறுவது.)

பொருள் அதிசயம்
ஒரு பொருளின் இயல்பை அதிசயம் தோன்றக் கூறுவது  ‘பொருள் அதிசயம்’ எனப்படும்.
“பண்டு புரம்எரித்த தீ மேல்படர்ந்து, இன்றும்
அண்ட முகடு நெருப்பு அறாது – ஒண்தளிர்க்கை
வல்லி தழுவக் குழைந்த வடமேரு
வில்லி நுதல்மேல் விழி”
(புரம் – திரிபுரம், அரக்கர்களின் மூன்று கோட்டைகள்;
முகடு – உச்சி; வல்லி – மலைமகள்; உமையம்மை;
மேரு = மேருமலை; வில்லி = வில்லாக உடையவர்;
நுதல் – நெற்றி.)
ஒளிமிக்க தளிர் போன்ற கைகளை உடைய மலைமகள் தழுவியதால் குழைந்த திருமேனியையும், வட மேருமலையாகிய வில்லினையும், நெற்றியின் மேல் கண்ணினையும் உடைய சிவபெருமான் முன்னொரு காலத்தில் திரிபுரத்தை நகைத்து எரித்த தீயானது மென்மேலும் படர்ந்து ஓடுதலால், இன்றும் அண்டத்து உச்சியில் நெருப்பு நீங்காமல் உள்ளது.

இப்பாடலில் கூறப்படும் பொருள் ‘திரிபுரத்தை எரித்த தீ’ ஆகும்.  சிவபெருமான் நகையிலிருந்து புறப்பட்ட தீயானது இன்றும் அண்டமுகட்டில் அணையாமல் உள்ளது என்று யாவரும் வியக்கும்படி கூறியதால் இப்பாடல் பொருள் அதிசயம் ஆயிற்று.

குணவதிசயம்
“’மாலை நிலவொளிப்ப மாதர் இழைபுனைந்த
நீல மணிகள் நிழலுமிழ – மெல்விரும்பிச்
செல்லும் இவள்குறித்த செல்வன்பாற் சேர்தற்கு
வல்லிருளா கின்ற மறுகு”
மாலைக் காலத்தில் தோன்றிய நிலவானது ஒளிப்ப, ஆசையினாற் புனைந்த அணிகளிலுள்ள நீலமணிகள் ஒளியை யுமிழ, இவள் காதலோடு இச்சித்துச் செல்லும்படி குறித்த தலைவனிடத்திற் போதற்குத் , தெருக்கள் செறிந்த இருளாகின்றன.

இப்பாடற்கண் கூறப்படும் பொருள் நீலமணிகளின் ஒளியாகும்.  அவ்வொளியே தலைவி தான் செல்லும் வீதியில் இருளைச் செய்கின்றது . என அதனை உலகநடை கடந்து அதிசயித்து உரைத்திருத்தலின், இது குண அதிசயமாயிற்று . நீலமணியின் நிறப்பண்பைக் கூறியிருத்தலின் குணமாயிற்று.

தொழிலதிசயம்
“ஆளும் பரியும் கரியும் சொரிகுருதி
தோளுந் தலையுஞ் சுழித்தெறிந்து – நீள்குடையும்
வள்வார் முரசும் மறிதிரைமேற் கொண்டொழுக
வெள்வாள் உறைகழித்தான் வேந்து”
மள்ளர்களும், குதிரைகளும், யானைகளும் சொரிகின்ற குருதி வெள்ளமானது, தோள்களையும் தலைகளையும் சுழித்து வீசி , நீண்ட குடைகளையும் வார் இறுக்கிய பேரிகைகளையும் மடங்குகின்ற அலைகளையுடைய கடலின்மேல் அடித்துக்கொண்டு ஓடும்படி அரசன் வெண்மையாகிய வாளை உறையினின்று நீக்கினான்.

இப்பாடற்கண் கூறப்படும் தொழில் உறையினின்றும் வாளை எடுத்ததாகும். அதனை எடுத்தவுடனேயே பகைவர்தம் படையினின்று ஒழுகிய குருதியில் தோள் , தலை முதலியன மிதந்தன என அத்தொழிலை உலகநடை கடந்து அதிசயித்து உரைத்திருத்தலின், இது தொழில் அதிசயமாயிற்று.

ஐயவதிசயம்
“உள்ளம் புகுந்தே யுலாவும் ஒருகால்என்
உள்ளம் முழுதும் உடன்பருகும் – ஒள்ளிழைநின்
கள்ளம் பெருகும் விழிபெரிய வோ ! கவல்வேன்
உள்ளம் பெரிதோ உரை”
ஒள்ளிய ஆபரணத்தை உடையாய் ! நினது கள்ளம் மிக்க விழிகளானவை எனது உள்ளத்துப் புகுந்து உலாவுதலால் சிறிதாய்த் தோன்றின ; அவை புகுந்து என்னுள்ளம் முழுதும் தமதுள்ளே அடக்கினமையின் அவ்வுள்ளம் சிறிதாய்த் தோன்றிற்று . இவற்றுள் விழி பெரியவோ ? உள்ளம் பெரிதோ ? சொல்லுவாயாக.

இப்பாடற்கண் கூறப்படும் பொருள் விழி ஆகும்.  அது உள்ளம் புகுந்து உலாவுதலின் உள்ளம் பெரிதோ ? அன்றி அது உள்ளம் முழுமையும் உடன் பருகுவதால் அவ்விழி பெரியதோ ? என ஐயுற்றுக் கூறும்முகத்தான் அவ்விழியை உலகநடை கடந்து அதிசயித்து உரைத்தலின் , இது ஐய அதிசயமாயிற்று.

துணிவதிசயம்
“பொங்கிச் செறிந்து புடைதிரண்டு மீதிரண்டு
செங்கலசக் கொங்கை திகழுமால் – எங்கோன்தன்
தில்லையே யன்னார் இவரல்குல் தேரின்மேல்
இல்லையோ உண்டோ இடை”
வளர்ந்து நெருங்கி அடிபரந்து திரண்டு மேலே இரண்டு சிவந்த கலசம் போன்ற கொங்கை விளங்கா நின்றன, ஆதலால், எந்தலைவனாகிய பரமசிவனுடைய தில்லைப்பதியை ஒத்த இவருடைய அல்குலாகிய தேரின் மேல் , இடை இல்லையோ ? உண்டு.

ஒகாரம் இரண்டனுள் முன்னது எதிர்மறை ; பின்னது அசைநிலை
பொங்குதல் – வளர்தல். செறிதல் – நெருங்குதல். திகழல் – விளங்கல்.
இப்பாடற்கண் கூறப்படும் பொருள் இடை ஆகும்.
அது இல்லையோ ! உண்டோ ! என முன்னர் ஐயுற்றுப்,  பின்பு ‘ மீதிரண்டு செங்கலசக் கொங்கை திகழ்வதால் ‘ உண்டு எனத் துணிந்து கூறுமுகமாக, அவ் இடையை உலகநடை கடந்து அதிசயித்து உரைத்தலின் , இது துணிவு அதிசயமாயிற்று.

திரிபதிசயம்
“திங்கள் சொரிநிலவு சேர்வெள்ளி வள்ளத்துப்
பைங்கிள்ளை பாலென்று வாய்மடுக்கும் – அங்கயலே
காந்தர் முயக்கொழிந்தார் கைவறிதே நீட்டுவரால்
ஏந்நிழையார் பூந்துகிலா மென்று”
நிலா முற்றத்திருந்த வெள்ளிக் கிண்ணத்து உள்ள நிலவைப் பசுங்கிளிகள் , பாலென்று கருதி வாய் மடுக்கும் ; அதுவேயுமன்றி , அங்கு ஒரு புறத்துத் தங்கொழுநரைப் புணர்ந்து நீங்கினாராகிய ஏந்திழையார் தாம் ஒழித்த துகிலெனக் கருதி அந்நிலவிலே கையை நீட்டுவார்.

இப்பாடற்கண் கூறப்படும் பொருள் நிலா முற்றத்தில் உள்ள வெள்ளிக் கிண்ணத்தில்படும் நிலவின் ஒளியாகும்.  அதனைக்கண்டு கிளி பால் என்றும் பெண்கள் தம் துகில் என்றும் ஒன்றையொன்றாகத் திரித்து மயங்குகின்றார் என அதனை உலகநடை கடந்து அதிசயித்து உரைத்தலின் , இது திரிபு அதிசயமாயிற்று. திரிபு – ஒன்றை ஒன்றாக மயங்கல். இதனை ‘ மயக்க அணி ‘ என்றும் கூறுவர்

அணியிலக்கணம் – தொடர்-37அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 16

12). தற்குறிப்பேற்ற அணி
தண்டியலங்காரத்தில் பன்னிரண்டாவதாகக் கூறப்படும் அணி, தற்குறிப்பேற்ற அணி ஆகும்.  கவிஞர் தம்முடைய கற்பனைத் திறத்தைக் காட்டுவதற்குப் பாடலில் கையாளும் அணிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க அணி தற்குறிப்பேற்ற அணியாகும்.

பாடலில் கவிஞர் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைப் பாடுகின்றார்.  அந்நிகழ்ச்சி இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சி.  இயல்பாக நடைபெறும் அந்நிகழ்ச்சிக்குக் கவிஞர் தம் கற்பனையாக ஒரு காரணம் கற்பிக்கின்றார்.

இதனால் தாம் கூறும் நிகழ்ச்சிக்குப் புதிய சுவை உணர்வைத் தருகிறார்.  பாடலைப் படிப்போர் நெஞ்சிலும் இத்தகைய உணர்வைக் கிளர்ந்தெழச் செய்கிறார்.  இதன் பொருட்டுக் கையாளப்படும் அணியே தற்குறிப்பேற்ற அணி.

தற்குறிப்பேற்ற அணியின் இலக்கணம்
பெயரும் பொருள், பெயராத பொருள் என்னும் இருவகைப் பொருளிலும் இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒழித்து, கவிஞர் தாம் கருதிய வேறு ஒரு காரணத்தை அவற்றின் மீது ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.
“பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்
இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று
தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்”  (நூற்பா – 55)
(பெயர்பொருள் = அசையும் பொருள்;
அல்பொருள் = அசையாத பொருள்)
எனவே தற்குறிப்பேற்ற அணி ‘பெயர்பொருள் தற்குறிப்பேற்ற அணி,  பெயராத பொருள் தற்குறிப்பேற்ற அணி’ என இரு வகைப்படும்.

பெயர்பொருள் தற்குறிப்பேற்ற அணி
“மண்படுதோள் கிள்ளி மதயானை, மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால், – விண்படர்ந்து
பாயும்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
தேயும் தெளிவிசும்பில் நின்று”

(கிள்ளி – சோழன்; மாற்றரசர் – பகை அரசர்;
வெகுளி – கோபம்; விசும்பு – விண்,வான்
பனிமதியம் – குளிர்ச்சி பொருந்திய முழு நிலவு.)
நிலவுலகத்தைத் தாங்கிய தோள் வலிமையை உடைய சோழனுடைய மதயானையானது, பகை அரசர்களுடைய வெண்கொற்றக் குடையைச் சீறிச் சிதைத்தது கோபத்துடன், அக்குடையைப் போல உள்ள தன் மேலும் வானை நோக்கி வந்து பாயுமோ என்று அஞ்சி, குளிர்ச்சியை உடைய முழு நிலவானது தெளிந்த வானத்தில் நின்று தேய்கின்றது.

இப்பாடலில் கூறப்பட்ட பொருள் வானத்தில் உள்ள சந்திரன் ஆகும்.  இது பெயரும் பொருள் ஆகும். அதன் இயல்பு வளர்தலும் தேய்தலும் ஆகும்.  தேய்தல் நிலவில் இயல்பாக (இயற்கையாக) நிகழும் தன்மை.

ஆனால் கவிஞர் அது இயல்பான நிகழ்வு என்பதை ஒழித்து, ‘சோழனுடைய மதயானை பகை அரசர்களுடைய வெண்கொற்றக் குடையைச் சீறிச் சிதைத்த சினத்தாலே, அக்குடையை ஒத்த தன் மேலும் வந்து பாயுமோ என்று அஞ்சியே தேய்கிறது’ என்று தாம் கருதிய வேறு ஒரு காரணத்தை ஏற்றிக் கூறியதால் இப்பாடல் பெயர்பொருள் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.

பெயராத பொருள் தற்குறிப்பேற்ற அணி
“வேனில் வெயிற்கு உலர்ந்த மெய்வறுமை கண்டுஇரங்கி,
வானின் வளம்சுரந்த வண்புயற்கு, – தான்உடைய
தாதும் மேதக்க மதுவும் தடஞ்சினையால்
போதும் மீதுஏந்தும் பொழில்”
(உலர்ந்த – வாடிய; மெய்வறுமை- மேனி வாட்டம்;
வண்புயல் – கார் மேகம், மழைமேகம்; தாது – மகரந்தம்;
மது -தேன்; தடஞ்சினை – பெரிய கிளை; போது – மலர்; பொழில் – சோலை.)

முதுவேனில் காலத்தில் கதிரவன் வெயில் வெப்பம் தாளாமல் உலர்ந்து மேனி வாடியது சோலை.  அதைக்கண்டு இரங்கி, வானிலிருந்து மழைவளத்தைப் பொழிந்தது கார்மேகம்.

அச்செயலுக்குக் கைம்மாறாகச் சோலை, தன்னிடத்தில் உள்ள பெருமை பொருந்திய மகரந்தம் நிறைந்த மலர்களையும், தேனையும் நிறைந்த தன் பெரிய கிளைகளாகிய கைகளால், மேகத்திற்குத் தருவதற்காக, மேல்நோக்கி ஏந்தி நிற்கிறது. இப்பாடலில் கூறப்பட்ட பொருள் ‘பொழில்’ ஆகும்.  இது பெயராத பொருள் ஆகும்.

பொழில் தன்னிடத்தில் வளர்ந்து ஓங்கிய மரக் கிளைகளில் தாதும் பூவும் தேனும் கொண்டிருத்தல் இயல்பாக நிகழும் தன்மையாகும்.  ஆனால் கவிஞர் அத்தன்மையை ஒழித்து, ‘வேனில் காலத்தில் தனக்கு வெயிலின் வெப்பம் தீர்த்து உதவிய மழைமேகத்திற்குக் கைம்மாறாகக் கொடுப்பதற்காக அப்பொழில், தன் கிளைகளாகிய கைகளால் தாதையும், மலரையும், தேனையும் ஏந்தி நிற்கும்’ எனத் தாம் கருதிய வேறு ஒரு காரணத்தை ஏற்றிக் கூறுவதால் இப்பாடல் பெயராத பொருள் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.

தற்குறிப்பேற்றம் உவம உருபுகளோடும் வரும்
“அன்ன போலெனும் அவைமுத லாகிய
சொன்னிலை விளங்குந் தோற்றமும் உடைத்தே”  (நூற்பா – 56)
அன்ன, போல என்பவை முதலாகிய உவமைச் சொல் சில புணர்ந்து விளங்கும் தன்மையும் உடைத்தாம், அத் தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரம்.

“காமருதேர் வெய்யவன் எங்கும் கரம்பரப்பித்
தேமருவு சோலை மலர்திறக்கும் – தாமரையின்
தொக்க இதழ்விரித்துப் பார்க்குந்தொலைந் திருள்போய்ப்
புக்க !புரைகிளைப்பான் போல்”
காமருதேர் – அழகு மருவிய தேர். வெய்யவன் – சூரியன். விரித்தல் – திறத்தல். புரை- இடம். கிளைத்தல் – ஆராய்தல்.

அழகு பொருந்திய தேரினையுடைய சூரியன், தனக்குத் தோற்று இருள் சென்று ஒளிந்த இடத்தை ஆராய்ந்து பார்ப்பவன் போல, எவ்விடத்தும் தன் ஒளிக்கதிர்களாகிய கைகளை விரித்து நீட்டி, தேன் பொருந்திய சோலையிலுள்ள மலர்களைத் திறந்து பார்ப்பான்.

மூடியிருக்கும் தாமரை மலரின் இதழ்களையும் விரித்துப் பார்ப்பான் என்பதாம். இதன்கண் கூறப்பட்ட பொருள் கதிரவன் தன் ஒளிக்கதிர்களைச் சோலையில் யாண்டும் பரப்புதல் ஆகும்.

இவ்வியல்பான நிகழ்ச்சிக்குக் ‘ கதிரவன் தன் பகையாகிய இருள் சென்று ஒளிந்த இடத்தைத் தேடுதற்காகத்தான் அங்ஙனம் செய்கிறான் ‘ எனக் கவிஞன் தான் குறித்ததொரு காரணத்தை ஏற்றிச் சொல்லுதலின், இது தற்குறிப்பேற்றம் ஆயிற்று.

ஈற்றடியில் ‘ போல் ‘ என்னும் உவமவுருபு இருத்தலின், இந்நூற்பாவின் இலக்கணத்திற்கு ஏற்புடையதாயிற்று.

இலக்கியங்களில் தற்குறிப்பேற்ற அணி
தற்குறிப்பேற்ற அணி தமிழ் இலக்கியங்களில் மிகுதியாகப் பயில்கிறது.  சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் இவ்வணியின் ஆட்சி அதிகம் இருப்பதைக் காணலாம்.

சிலப்பதிகாரம்
கண்ணகி, கோவலன், கவுந்தியடிகள் மூவரும் ஒரு மரப்புணையில் (படகில்) ஏறி வையை ஆற்றைக் கடந்து மதுரை மாநகர் செல்கின்றனர்.  வையையில் வெள்ளம் நிறைந்து கரைபுரண்டு ஓடுகிறது.  இரு மருங்கிலும் சோலைகளில் உள்ள மரங்கள் உதிர்த்த மலர்களைச் சுமந்து கொண்டு வையை செல்கிறது.

இஃது இயற்கையாக நிகழும் நிகழ்ச்சி. ஆயின் இளங்கோவடிகள் கண்ணகிக்கு வரப் போகும் துன்பத்தை அவ் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி முன்பே அறிந்தவள் போல வருந்தி அழுத கண்ணீரே ஆறாக ஓடுகிறது என்றும் அதனைப் பிறர்க்குத் தெரியாமல் மறைக்க வேண்டி மலர் ஆடை போர்த்துக் கொண்டு செல்கிறாள் என்றும் கற்பனை நயம் தோன்ற வேறு ஒரு குறிப்பை ஏற்றிக் கூறுகிறார்.

“வையை என்ற பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண் நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி”
(புறஞ்சேரி இறுத்த காதை,170-173)
(தையல்=பெண், கண்ணகி; உறுவது = நேர இருப்பது;
கரந்தனள் = மறைத்தவளாக)

கம்பராமாயணம்
இராமன் வில் வளைத்துச் சீதையை மணக்க வேண்டி, விசுவாமித்திர முனிவருடனும், தம்பி இலக்குவனுடனும் மிதிலை மாநகரம் செல்கின்றான்.  அந்நகரத்து அருகில் செல்லும்போது, நகர் மதில் மேல் உள்ள கொடிகள் காற்றில் அசைந்தாடின.  கொடிகள் காற்றில் அசைந்தாடுவது இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஆகும்.

ஆனால் கம்பர், மதில் மேல் உள்ள கொடிகள் அசைந்தாடுவது, சீதையை விரைவில் வந்து மணம் புரியுமாறு இராமனைக் கை காட்டி அழைப்பது போல உள்ளது என்று தம் குறிப்பை (கருத்தை) ஏற்றிக் கூறுகிறார்.
“மையறு மலரின் நீங்கி, யான் செய் மாதவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக்கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்த கடிநகர், கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாவென்று அழைப்பது போன்றதம்மா”  (பால காண்டம், 563)
(செழுமணி = அழகிய; கடிநகர் = காவல் மிகுந்த நகர்;
கமலம் = தாமரை; ஒல்லை = விரைவாக)

இளங்கோவையும், கவிச்சக்கரவர்த்தியையும் கவர்ந்த இந்த அணி என்னையும் உங்களையும் கவராமல் போகுமா?? அணிஇலக்கணத்தில் உவமையணி ஒரு “மணிமகுடம்” என்றால் தற்குறிப்பேற்றவணி அதில் பதிக்கப்பட்ட “முத்துச்சரம்” எனினும் அது மிகையன்று!

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் : தொடர் 36-40
சிறீ சிறீஸ்கந்தராஜா
24/07/2013 – 28/07/2013

தொகுப்பு – thamil.co.uk