அணியிலக்கணம் 4 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தொடர்-32அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 8
04).தீவகவணி
தண்டியலங்காரம் பொருளணியியலில் சொல்அடிப்படையில் அமையும் சில அணிகள் இடம் பெறுகின்றன. பாடலில் வரும் சொற்கள் பொருள் விளக்கத்திற்குக் காரணமாக இருப்பதால் இவை பொருளணியியலில் வைக்கப்பட்டன. இத்தகைய அணிகளில் தீவக அணியும் ஒன்று.

தீவக அணியின் இலக்கணம்
ஒரு குணத்தையோ, தொழிலையோ, இனத்தையோ, பொருளையோ குறிக்கும் ஒரு சொல், செய்யுளின் ஓர்இடத்தில் நின்று, அச்செய்யுளில் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளைத் தருவது தீவக அணியாம்.

முதல் நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடை நிலைத் தீவகம் என்னும் மூன்று விதமாக பயின்றுவரும்.

“குணம் தொழில் சாதி பொருள் குறித்து ஒரு சொல்
ஒருவயின் நின்றும் பலவயின் பொருள் தரின்
தீவகம்; செய்யுள் மூவிடத்து இயலும்”  (நூற்பா – 39)

தீவகம் என்னும் சொல்லுக்கு ‘விளக்கு’ என்று பொருளாகும். ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்கேளாடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பொருள்படுகின்றது.

தீவக அணியின் வகைகள்
பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல்எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அதுமுதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அது இடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத்தீவகம்’ ஆகும்.

தீவகச் சொல் குணம், தொழில், சாதி,பொருள் ஆகியவற்றைக் குறித்து வரும்.

இந்நான்கு பொருளிலும், மூன்று இடங்களிலும் வருவதுகொண்டு தீவகஅணி மொத்தம் பன்னிரண்டு வகையாக விரியும்.
1) முதல் நிலைக் குணத் தீவகம்
2) முதல் நிலைத் தொழில் தீவகம்
3) முதல் நிலைச் சாதித் தீவகம்
4) முதல் நிலைப் பொருள் தீவகம்

5) இடைநிலைக் குணத் தீவகம்
6) இடைநிலைத் தொழில் தீவகம்
7) இடைநிலைச் சாதித் தீவகம்
8) இடைநிலைப் பொருள் தீவகம்

9) கடைநிலைக் குணத் தீவகம்
10) கடைநிலைத் தொழில் தீவகம்
11) கடைநிலைச் சாதித் தீவகம்
12) கடைநிலைப் பொருள் தீவகம்

முதல்நிலைத் தீவகம்
“சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து
திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,
மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து”

அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன;
அவைசிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள் சிவந்தன;
குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன;
வலிமை உடைய வில் பொழிந்த அம்புகளும் சிவந்தன;
குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.

இப்பாடலில் முதலில் நிற்கும் ‘சேந்தன’ (சிவந்தன) என்பது நிறம் பற்றிய குணச் சொல் (பண்புச் சொல்) இது.

வேந்தன் கண் சேந்தன!
தெவ்வேந்தர் தோள் சேந்தன!
குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன!
அம்பும் சேந்தன!
மிசைஅனைத்தும் சேந்தன!
புள் குலமும் சேந்தன!
என்று பாடலின் இடையிலும் இறுதியிலும் ஆகப் பல இடங்களிலும் உள்ள சொற்கேளாடு சென்று சேர்ந்து நின்றுபொருள் விளக்கம் தந்ததைக் காணலாம். இப்பாடல் முதல்நிலைக் குணத் தீவக அணியாகும்

இடைநிலைத் தீவகம்
“எடுக்கும் சிலைநின்று எதிர்ந்தவரும், கேளும்,
வடுக்கொண்டு உரம் துணிய, வாளி – தொடுக்கும்
கொடையும், திருவருளும், கோடாத செங்கோல்
நடையும் பெரும்புலவர் நா”

(உரம்-மார்பு; வாளி-அம்பு; கோடாத-வளையாத;)
அரசன் தன்னை எதிர்த்த பகைவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் புண்பட்டு மார்பு பிளக்குமாறு, தான் எடுத்த வில்லிலிருந்து அம்புகளைத் தொடுப்பான்.

அவ்வளவிலே, புலவருடைய நாவானது, அவனுடைய ஈகையையும், சிறந்தஅருளையும், வளையாத செங்கோல் சிறப்பையும் பாடல்களில்தொடுக்கும் (தொடுத்துப் பாடும்).

இப்பாடலில் இடையில் வந்த ‘தொடுக்கும்’ என்னும்சொல் தொழில் பற்றிய சொல்லாகும். இச்சொல், வாளி (அம்பு) தொடுக்கும்! பெரும்புலவர் நாத் தொடுக்கும்! என்று பாடலின் பிற இடங்களில் சென்று பொருந்திப் பொருள் விளக்கம் செய்தமையால் இது இடைநிலைத் தொழில் தீவகஅணியாகும்.

கடை நிலைத் தீவகம்
“புறத்தன, ஊரன, நீரன, மாவின்
திறத்தன, கொல்சேரி யவ்வே, – அறத்தின்
மகனை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டி
முகனை முறைசெய்த கண்”

(புறத்தன-மான்; ஊரன-அம்பு; நீரன-தாமரை; மாவின் திறத்தன-மாவடு; கொல்சேரிய – கொல்லன் உலைக்களத்தில் உள்ள வாள; வஞ்சியாட்டி-வஞ்சி நகரத்தைச் சேர்ந்த பெண்; முகன்-முகம்;)

அறத்திற்காக மகனையே தேர்க்காலில் கிடத்தி அவன்மீது தேரைச் செலுத்திக் கொன்று முறை செய்த மனுநீதிச்சோழனுக்கு உரிய வஞ்சி என்னும் ஊரில் வாழும்தலைவியின் முகத்தை அழகு செய்த கண்கள் வெளியில் உள்ளமான்களுடைய கண்களைப் போன்றும், ஊரில் உள்ளஅம்புகளைப் போன்றும், நீரில் உள்ள தாமரை மலர்களைப்போன்றும், மாமரத்தில் உள்ள வடுக்களைப் போன்றும்,கொல்லன் சேரியில் உள்ள வாள்களைப் போன்றும் இருக்கின்றன.

இப்பாடலில் இறுதியில் வந்துள்ள ‘கண்’ என்பதுபொருளைக் குறிக்கும் பெயர்ச்சொல்.

இது பாடலின் பலஇடங்களிலும் உள்ள ‘புறத்தன, ஊரன, நீரன, மாவின்திறத்தன, கொல்சேரிய,’ ஆகிய சொற்கேளாடு தனித்தனியே இணைந்து நின்று பொருள் விளக்கம் செய்தமையால் கடைநிலைப் பொருள் தீவக அணியாகும்.

தன்மை அணி; எத்தகைய மிகையும் கற்பனையும் இல்லாமல் ஒரு பொருளின் இயல்புகளை உள்ளபடி அழகுபடுத்திக் கூறுவதாகும்.

உவமை அணி, பொருளணிகள் எல்லாவற்றிலும் தலைசிறந்தது. பிற அணிகள் பலவும் இதிலிருந்தே தோன்றின.

எனவே உவமை அணி தாய் அணிஎனக் கூறப்படும் சிறப்பு வாய்ந்தது. உவமை அணி, ‘பண்பு,தொழில், பயன்’ ஆகிய ஒப்புமைத்தன்மை காரணமாகத் தோன்றுவது.

உவமை அணியிலிருந்து தோன்றிய முதலாவதுஅணி உருவக அணி. இது உவமைக்கும் பொருளுக்கும்இடையே உள்ள வேற்றுமையை ஒழித்து இரண்டும் ஒன்றேஎன்னும் உணர்வு தோன்றுமாறு சொல்வது.

தண்டியலங்காரம் பொருளணியியலில் சொல் அடிப்படையில்அமைந்த சில அணிகளும் இடம் பெறுகின்றன. இத்தகையஅணிகளில் தீவக அணியும் ஒன்று.

இதற்குரிய இலக்கணமும் அது வழங்கிவரும் இடங்கள் பற்றியும் விரிவாகவும் தெளிவாகவும் இங்கு பார்த்தோம். தொடர்ந்து ஏனைய அணிகள் பற்றி அடுத்து வரும் தொடர்களில் பார்ப்போம்.

அணியிலக்கணம் – தொடர்-33அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 9

05). பின்வருநிலையணி

தண்டியலங்காரம் பொருளணியியலில் விளக்கிக் கூறப்படும் அணிகள் முப்பத்தைந்து.  அவற்றினுள் பின்வருநிலை அணி ஐந்தாவதாக வருகிறது. தண்டியலங்காரம் பொருளணியியலில் சொல் அடிப்படையில் அமையும் அணிகள் சிலவும் இடம் பெற்றுள்ளன என்பதை அறிவோம். அத்தகைய அணிகளில்இதுவும் ஒன்று எனலாம்.

பின்வருநிலை அணியின் இலக்கணம்
ஒரு செய்யுளில் முதலில் வந்த சொல்லோ பொருளோ பின்னர்ப் பல இடங்களிலும் வருமாயின் அது பின்வருநிலை அணி எனப்படும்.
“முன்வரும் சொல்லும் பொருளும் பலவயின்
பின்வரும் என்னில் பின்வரு நிலையே”   (நூற்பா – 41)

பின்வருநிலை அணியின் வகைகள்
1) சொல் பின்வருநிலை அணி
2) பொருள் பின்வருநிலை அணி
3) சொல் பொருள் பின்வருநிலை அணி

சொல் பின்வருநிலை அணி
ஒரு செய்யுளில் முதலில் வந்த சொல் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொல் பின்வருநிலை அணி எனப்படும். முதலில் வந்த சொல் மட்டுமே மீண்டும் வரும் ஆனால், அதன்பொருள் மீண்டும் வராது.  அதாவது, முதலில் வந்த சொல், பின்னர்ப் பல இடங்களிலும் வரும்போது வேறுவேறு பொருள்களில் வரும்.

“மால்கரி காத்துஅளித்த மால் உடைய மாலைசூழ்
மால்வரைத்தோள் ஆதரித்த மாலையார் – மால்இருள்சூழ்
மாலையின் மால்கடல் ஆர்ப்ப மதன்தொடுக்கும்
மாலையின் வாளி மலர்”
(கரி = யானை; வரை = மலை; மதன் = மன்மதன்; வாளி = அம்பு)
மதத்தால் மயங்கிய யானையின் இடர் தீர்த்துக் காத்தருளிய திருமாலுடைய மலர்மாலை சூழ்ந்த பெரிய மலை போன்ற தோள்களை விரும்பிய இயல்பினை உடைய பெண்களின் மீது, மயங்கிய இருள் சூழ்ந்த மாலைப் பொழுதில், கரிய கடல் ஆரவாரம் செய்ய, மன்மதன் இடைவிடாமல் மலர்களாகிய அம்புகளைத் தொடுப்பான்.

இப்பாடலில் முதலில் வந்த ‘மால்’ அதை ஒத்த ‘மாலை’ ஆகிய இரு சொற்கள் பின்னர்ப் பல இடத்தும் பல பொருளில் வந்துள்ளன.

‘மால்’ என்னும் சொல்.
மால் கரி – மயக்கம் (மதமயக்கம்)
மால் உடைய – திருமால்
மால் வரைத்தோள் – பெருமை (பெரிய)
மால் இருள்சூழ் – மயக்கம்
மால் கடல் – கருமை (கரிய)
அதேபோல் ‘மாலை’ என்னும் சொல்,
மாலை சூழ் – மலர்மாலை
மாலையார் – இயல்பு
மாலை யின் – மாலைப் பொழுது
மாலை யின் வாளி – மாலை – வரிசை
ஆகவே இப்பாடல் சொல் பின்வருநிலை அணி ஆயிற்று.பொருள் பின்வருநிலை அணி
ஒரு பாடலில் முதலில் வந்த சொல் (பொருள்) பின்னர்ப் பல இடங்களிலும் வேறுவேறு சொற்களில் (அதே பொருளில்) வருவது பொருள் பின்வருநிலை அணி எனப்படும்.
“அவிழ்ந்தன தோன்றி; அலர்ந்தன காயா;
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை; மகிழ்ந்து இதழ்
விண்டன கொன்றை; விரிந்த கருவிளை;
கொண்டன காந்தள் குலை”
(தோன்றி, காயா, முல்லை, கொன்றை, கருவிளை, காந்தள் – மலர்கள்)
தோன்றி மரங்கள் மலர்ந்தன; காயாஞ் செடிகள் மலர்ந்தன; அழகிய அரும்புகளை உடைய முல்லைக் கொடிகள் மலர்ந்தன; கொன்றை மரங்கள் மகிழ்வுற்று இதழ்கள் மலர்ந்தன; கருவிளைகள் மலர்ந்தன; காந்தள் குலைகளாக மலர்ந்தன.இப்பாடலில் முதலில் வந்த ‘அவிழ்ந்தன’ என்ற சொல்லின் பொருள் மலர்ந்தன என்பதாகும்.  பின்னர் அதே பொருள் அலர்ந்தன, நெகிழ்ந்தன, இதழ்விண்டன, விரிந்த, குலைகொண்டன எனும் வெவ்வேறு சொற்களில் மீண்டும் வந்தது.  ஆகவே இது பொருள் பின்வருநிலை அணி ஆகும்.சொல் பொருள் பின்வருநிலை அணி
ஒரு செய்யுளில் முதலில் வந்த சொல்லும் அதன் பொருளும் பின்னர்ப் பல இடங்களில் மீண்டும் வருவது சொல் பொருள் பின்வருநிலை அணி எனப்படும்.  அதாவது முதலில் வந்த சொல் அதே பொருளில் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது.
“வைகலும் வைகல் வரக்கண்டும் அஃது உணரார்;
வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர்;
வைகலும் வைகற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துஉணரா தார்” – நாலடி-39
நாள்தோறும் நாள் கழிந்து வருவதைக் கண்கூடாகப் பார்த்திருந்தும், அப்படிக் கழிதலைத் தம் வாழ்நாள் மேல் வைத்து, அதுதான் இவ்வாறு கழிகின்றது என உணராதவர்கள், நாள்தோறும் நாள்கழிவதைக் கண்டு துன்புறாமல் இன்புறும் நாளாக எண்ணி மகிழ்வார்கள்.

இப்பாடலில், ‘வைகல்’ என்ற முன் வந்த சொல் பின்னும் பலவிடத்து ‘நாள்’ என்னும் ஒரே பொருளில் பின்னர்ப் பலவிடத்திலும் வந்தமையால் இப்பாடல் சொல் பொருள் பின்வருநிலை அணியாயிற்று.

சொல் பொருள் பின்வருநிலை அணி திருக்குறளில் பல இடங்களில் சிறப்பாக அமைந்துள்ளது.
“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை” (குறள் : 411) என்ற குறளில் ‘செல்வம்’ என்ற சொல் திரும்பத் திரும்ப ஐந்து இடங்களில் ஒரே பொருளில் வந்துள்ளமை காணலாம்.

அணியிலக்கணம் – தொடர்-34

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 10

06).முன்னவிலக்கணி
தண்டியலங்காரத்தில் ஆறாவதாகக் கூறப்படும் அணி முன்னவிலக்கு அணியாகும். முன்னம் என்பதற்குக் ‘குறிப்பு’ என்றும் பொருள் பெறும்.

பாடலில் கவிஞர் ஒரு பொருளைக் குறிப்பாகப் புலப்படுத்தலாம் அன்றி, குறிப்பாக விலக்குதலும் செய்யலாம்.  முன்னவிலக்கு அணி இவற்றுள் பின்னைய வகையைச் சார்ந்தது.

முன்னவிலக்கு அணியின் இலக்கணம்
ஒரு பொருளை (ஒரு கருத்தை அல்லது ஒரு செயலை)க் குறிப்பினால் விலக்கின் (மறுத்தால்) அது முன்னவிலக்கு என்னும் அணியாகும்.

அது இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்னும் மூன்று காலத்தோடும் தொடர்பு படலாம் அதாவது மூன்று காலப் பொருள்களும் மறுக்கப்படலாம்.

குறிப்பினால் அல்லாமல் கூற்றினால் (வெளிப்படையாக) மறுப்பதும் முன்னவிலக்கு அணியேயாகும்.
”முன்னத்தின் மறுப்பின் அது முன்ன விலக்கே
மூவகைக் காலமும் மேவியது ஆகும்”  (நூற்பா – 42)

முன்னவிலக்கு அணியின்வகைகள் 
1 – இறந்தவினை விலக்கு
2 – நிகழ்வினை விலக்கு
3 – எதிர்வினைவிலக்கு என மூவகைப்படும் என்று தண்டியலங்கார உரை கூறுகிறது.

இறந்த வினை விலக்கு
இறந்த காலத்தில் நிகழ்ந்ததை மறுத்து விலக்குவது இறந்த வினை விலக்கு ஆகும்.
“பாலன் தனது உருவாய், ஏழ்உலகுஉண்டு, ஆல்இலையின்
மேல் அன்று கண்துயின்றாய், மெய்என்பர்; -ஆல்அன்று
வேலைநீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?
சோலைசூழ் குன்றுஎடுத்தாய் சொல்” -பொய்கையார் அந்தாதி

“சோலை சூழ்ந்த குன்றத்தைக் குடையாகப் பிடித்த திருமாலே! நீ ஊழிக்காலத்தில் ஏழு உலகத்தையும் உண்டு, குழந்தை வடிவம் கொண்டு, ஆல் இலையில் துயின்றாய் என்று கூறப்படும் கூற்று உண்மை என்று கூறுவர்.

அவ்வாறாயின் நீ உறங்கிய ஆல் இலையானது அன்றைய நாளில் கடலின் உள்ளே இருந்ததோ? விண்ணுலகில் இருந்ததோ? மண்ணுலகில் இருந்ததோ? சொல்லுவாயாக”

உலகம் முழுவதும் உண்ணப்பட்ட பின் ஆல் இலை ஒன்று மட்டும் தனியாக இருந்தது எனக் கூறுவது பொருந்தாது என்று அந்நிகழ்ச்சியைக் குறிப்பால் மறுத்துக் கூறியமையால் முன்ன விலக்கு அணி ஆயிற்று.

இறந்த காலத்தில் நிகழ்ந்த வினை (செயல்) ஒன்றைக் குறிப்பாக விலக்கியதனால் இறந்த வினை விலக்கு என்னும் வகை ஆயிற்று.

இங்குத் திருமாலின் செயல் நம்பமுடியாதது என மறுக்கப்பட்டது போலத் தோன்றினாலும் புலவர் கருத்து அஃது அன்று. மறுப்பது போலச் சொல்லித் திருமால் எத்தகைய அற்புதமும் செய்யவல்லவர் எனக் குறிப்பதே நோக்கமாகும்.

நிகழ் வினை விலக்கு
நிகழ்கால நிகழ்ச்சியை மறுத்து விலக்குவது நிகழ்வினை விலக்கு ஆகும்.
“மாதர் நுழைமருங்குல் நோவ, மணிக்குழைசேர்
காதில் மிகைநீலம் கைபுனைவீர்! – மீது உலவும்
நீள்நீல வாள்கண் நெடுங்கடையே செய்யாவோ?
நாள்நீலம் செய்யும் நலம்”
இப்பாடலில் தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டிச் சொல்கிறான்: நுண்ணிய இடை வருந்துமாறு அழகிய குழை அணிந்த உம் காதின் மீது மிகையாக நீலமலரைச் செருகுகின்றீர்களே! அக்காதளவு சென்று உலாவுகின்ற நீண்ட நீல நிறத்தை உடைய உமது கண்களின் நெடிய கடையே நீல மலர்கள் தரும் அழகைத் தரும் அல்லவா!

இப்பாடலில், காதளவு ஓடிய நீண்ட நீல விழியுடைய தலைவி தன் காதுகளில் நீல மலர் சூடுவது மிகை என்று அவ்வொப்பனை குறிப்பாக விலக்கப்படுதலின் இப்பாடல் முன்ன விலக்கு அணி ஆயிற்று.

நிகழ்காலத்தில் நிகழ்கின்ற வினை (ஒப்பனைச் செயல்) ஒன்றைக் குறிப்பாக விலக்கியதனால் இது நிகழ் வினை விலக்கு என்னும் வகை ஆயிற்று.

எதிர் வினை விலக்கு
எதிர்காலத்தில் நிகழவிருக்கும் வினை ஒன்றை மறுத்து விலக்குவது எதிர்வினை விலக்கு ஆகும்.
“முல்லைக் கொடிநடுங்க, மொய்காந்தள் கைகுலைப்ப,
எல்லை இனவண்டு எழுந்து இரங்க, – மெல்லியல்மேல்
தீவாய் நெடுவாடை வந்தால் செயல் அறியேன்
போவாய், ஒழிவாய், பொருட்கு”
பொருள்தேடப் பிரிந்து செல்லவிருக்கும் தலைவனிடம் தோழிகூறுகிறாள்: தலைவனே! முல்லைக்கொடி நடுங்கவும், நெருங்கிய காந்தள் மலர்கள் கைகளைப் போலப் பூப்பவும், ஒளி பொருந்திய வண்டின் கூட்டம் எழுந்து ஒலிக்கவும், தீயின் தன்மையை உடைய நெடிய வாடைக் காற்றானது மெல்லிய இயல்பை உடைய தலைவியின் மேல் வந்தால் பின் விளையும் செய்தியைத் தோழியாகிய யான் அறியமாட்டேன். ஆதலின், தலைவியைப் பிரிந்து பொருள் தேடுவதற்குப் போவதையோ, அவளைப் பிரியாது உடன் இருப்பதையோ உன் விருப்பப்படி செய்வாயாக.’ தலைவன் பிரிந்து சென்றால் தலைவிக்குப் பெரும் தீங்கு நேரும் என்பது பொருள்.

இப்பாடலில், எதிர்காலத்தில் தலைவனது பிரிவால் நிகழக்கூடிய தலைவியின் துன்ப நிகழ்வைக் கூறி, அவனது பிரிவைக் குறிப்பாக விலக்கியதால் இப்பாடல் எதிர் வினை விலக்கு என்னும் வகை ஆயிற்று.

 

அணியிலக்கணம் – தொடர்-35அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 11

07).வேற்றுப்பொருள் வைப்பு அணி
தண்டியலங்காரத்தில் ஏழாவதாகக் கூறப்படும் அணி வேற்றுப்பொருள் வைப்பு அணியாகும். இலக்கியங்கள் பலவற்றிலும் குறிப்பாகக் கம்பராமாயணம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களில் இவ்வணி மிகுதியாக இடம்பெற்றுள்ளது.
வேற்றுப்பொருள் வைப்பு அணியின் இலக்கணம்
முதலில் ஒரு பொருளினது திறத்தைத் தொடங்கிய கவிஞர் பின்னர் அதனைச் சிறப்பாக முடிப்பதற்கு ஏற்ற, வலிமை வாய்ந்த உலகறிந்த, வேறு ஒரு பொருளை, ஏற்றி வைத்துச் சொல்வது வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆகும்.இவ்வாறு கவிஞன் தான் சொல்லத் தொடங்கிய பொருளை உறுதிப்படுத்துவதற்காக வேற்றுப் பொருளைச் சொல்லி முடிப்பதால் இவ்வணிக்கு இப்பெயர் அமைந்தது.
“முன்ஒன்று தொடங்கி மற்றுஅது முடித்தற்குப்
பின் ஒருபொருளை உலகுஅறி பெற்றி
ஏற்றிவைத்து உரைப்பது வேற்றுப்பொருள் வைப்பே”  (நூற்பா – 46)
வேற்றுப்பொருள் வைப்பு அணியில் கவிஞர் முன்னர்க் கூறும் பொருளைச் ‘சிறப்புப் பொருள்’ என்றும், பின்னர் அதனை முடித்தற்கு அவர் கூறும் உலகு அறிந்த, வலிமையான பொருளைப் ‘பொதுப் பொருள்’ என்றும் குறிப்பிடுவர்.சிறப்புப் பொருளைப் பொதுப் பொருள் கொண்டு முடித்தல் வேற்றுப்பொருள் வைப்பு அணி என்று இதன் இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறலாம்.வேற்றுப்பொருள் வைப்பு அணியின் வகைகள்
“முழுவதுஞ் சேறல் ஒருவழிச் சேறல்
முரணித் தோன்றல் சிலேடையின் முடித்தல்
கூடா வியற்கை கூடு மியற்கை
இருமை யியற்கை விபரீதப் படுத்தலென்(று)
இன்னவை எட்டும் அதன(து) இயல்பே”  (நூற்பா – 47)

இவ்வாறாக, வேற்றுப்பொருள் வைப்பு அணி எட்டு வகைப்படும் எனத் தண்டியலார் குறிப்பிடுகின்றார்.
1) முழுவதும் சேறல்
2) ஒருவழிச் சேறல்
3) முரணித் தோன்றல்
4) சிலேடையின் முடித்தல்
5) கூடா இயற்கை
6) கூடும் இயற்கை
7) இருமை இயற்கை
8) விபரீதப்படுத்தல்

முழுவதும் சேறல்
“புறம்தந்து இருள்இரியப் பொன்நேமி உய்த்துச்
சிறந்த ஒளிவளர்க்கும் தேரோன் – மறைந்தான்
புறஆழி சூழ்ந்த புவனத்தே தோன்றி
இறவாது வாழ்கின்றார் யார்?”
உலகைக் காத்துப் பொலிவுடைய சக்கரத்தை நடத்தி இருள்கெட , மிக்க ஒளியை வளர்க்குந் தேரையுடைய ஆதித்தன் மறைந்தான் ; கடல் சூழ்ந்த உலகிற் பிறந்தார் இறவாதே வாழ்கின்றார் யாவர்?

இதன்கண் ‘இருளை நீக்கி ஒளி வளர்ந்த கதிரவன் மறைந்தான் ‘ என்பது கவிஞன் சொல்லக் கருதிய பொருளாகும் . இதனை முடித்தற்கு ‘உலகில் தோன்றியவர்களில் யார்தாம் இறவாதவர் ‘ என்ற உலகறிந்த பொருளை ஏற்றியுரைத்தலின் , இது வேற்றுப் பொருள் வைப்பாயிற்று.

தோன்றிய பொருள் யாவும் மறையும் என்பது உலகப் பொருள்கள் அனைத்திற்கும் பொருந்துதலின் , இது முழுவதும் சேறல் என்னும் வகையாயிற்று . ‘தோற்றம் உண்டேல் மரணம் உண்டு ‘ என்ற சுந்தரர் தேவாரமும் காண்க.

ஒருவழிச் சேறல்
பாடலில் கூறப்படும் பொதுப்பொருள் உலகில் உள்ள பொருள்கள் முழுவதிற்கும் உரியதாகாது, ஒரு பகுதிக்கு அல்லது சிலவற்றிற்கு மட்டுமே உரியதாக அமைவது ஒருவழிச் சேறல் எனப்படும்.
“எண்ணும் பயன்தூக்காது, யார்க்கும் வரையாது
மண்உலகில் வாமன் அருள்வளர்க்கும் – தண்நறுந்தேன்
பூத்துஅளிக்கும் தாராய்! புகழாளர்க்கு எவ்வுயிரும்
காத்துஅளிக்கை அன்றோ கடன்?”
குளிர்ந்த நல்ல தேனை மலர்ந்து கொடுக்கின்ற மாலையை அணிந்தவனே! கைம்மாறு கருதாமல், யாவர்க்கும் வரையறை இல்லாமல், இவ்வுலகில் திருமால் (வாமன்) கருணையை மிகுதியாகச் செய்தருள்கின்றான். புகழை உடையவர்களுக்கு எல்லா உயிர்களையும் பாதுகாத்து அருள் செய்வது கடமை அன்றோ?

இப்பாடலில், ‘திருமால் யாவர்க்கும் கைம்மாறு கருதாமல் கருணை செய்கின்றான்’ என்பது கவிஞர் சொல்லக் கருதிய சிறப்புப் பொருள் ஆகும்.

எல்லா உயிர்களையும் பாதுகாத்து அருள் செய்வது புகழ் உடையவர்களுக்குக் கடமை அன்றோ? என்பது, அச்சிறப்புப் பொருளை முடிப்பதற்குக் கூறிய உலகறிந்த பொதுப் பொருள் ஆகும்.

இவ்வாறு சிறப்புப்பொருளைப் பொதுப் பொருள் கொண்டு முடித்துக் கூறியமையால் இப்பாடல் வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆயிற்று.

பொதுப் பொருள் உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் பொருந்தாமல், ‘புகழாளர்’ என்னும் ஒரு பகுதிக்கு மட்டுமே பொருந்துவதால் இப்பாடல், ‘ஒருவழிச் சேறல்’ என்னும் வகை ஆயிற்று.

முரணித்தோன்றல்
தம்முள் மாறுபட்டிருக்கும் இயல்புடைத்தாய பொருள் வைப்பது.
“வெய்ய குரல்தோன்றி வெஞ்சினவே றுட்கொளினும்
பெய்யு முகில்தன்னைப் பேணுவரால் -வையத்
திருள்பொழியுங் குற்றம் பலவரினும் யார்க்கும்
பொருள்பொழிவார் மேற்றே புகழ்”
கொடிய இடி முழக்கத்தைத் தோற்றுவித்து அதற்குக் காரணமான கொடிய இடியைத் தன்னிடத்தே யுடைத்தாயினும் மழை பொழியும் மேகத்தை அனைவரும் பாராட்டுவார்கள் ; உலகில் இருள் தன்மை வாய்ந்த மிகக் கொடிய குற்றங்களைச் செய்யினும் , அவர்கள் யாவர்க்கும் வரையாது வழங்கும் வள்ளன்மையாராயின் அவர்களையே பாராட்டுவர் என்பதாம்.

இதன்கண் ‘ கடிய குரலையும் , கொடுமையையும் உடைய இடியைத் தன்னகத்தே கொண்டிருப்பினும் மழை தருதலின் மேகத்தை யாவரும் புகழ்வர் ‘ என்பது கவிஞன் சொல்லக் கருதிய பொருளாகும்.

இதனை முடித்தற்குக் ‘குற்றமிருப்பினும் கொடையாளரை யாவரும் புகழ்வர் ‘ என்ற உலகறி பொருளை ஏற்றியிருத்தலின் வேற்றுப்பொருள்வைப்பாயிற்று .

குற்றம்உடையார் புகழப்படாதிருத்தலே இயல்பு . அங்ஙனமின்றிப் புகழப்படுவர் என்றல் முரணித் தோன்றலாம்.

சிலேடையின் முடித்தல்
முன்னர் வைத்த பொருளையும், பின்னர் வைத்த பொருளையும் ஒரு சொற்றொடர்பால் சொல்லுவது.
“எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த
முற்றிழையாள் வாட முறுவலிக்கும் – முற்று
முடியாப் பரவை முழங்குலகத் தென்றும்
கொடியார்க்கும் உண்டோ குணம்”
முல்லைக் கொடியானது , முன்பு தன்னை வளர்த்துக் காத்த குறைவற்ற அணிகளை யுடையளாகிய இவள் வருந்த முறுவல் செய்யா நின்றது ; இஃது என்னே ! முழக்கத்தினை யுடைய முடிவு தெரியாத கடல் சூழப்பட்ட உலகத்துக் கொடியார்க்கும் குணம் உண்டாமோ?

கொடியார் – கொடுமையுடையார்க்கும் , கொடிக்கும் பெயர் . இதனுள் , கொடுமையுடையார்க்கும் , கொடிக்கும் சிலேடை வந்தவாறு காண்க.

இதன்கண் ‘ தன்னை வளர்த்தெடுத்த தலைவி தலைவனுடைய பிரிவால் வருந்துமாறு முல்லைக்கொடி முறுவலிக்கும் (அரும்பும்) ‘ என்பது கவிஞன் சொல்லக் கருதிய பொருளாகும்.

இதனை முடித்தற்கு உலகத்தில் கொடியாரிடத்தும் குணம் உண்டாகுமோ? ‘ என்ற உலகறி பொருளை ஏற்றி வைத்திருத்தலின் வேற்றுப்பொருள் வைப்பாயிற்று.

இதன்கண் முன்னர்க் கூறிய பொருள் முல்லைக்கொடி, அதனை விளக்கப் பின்னர் வைத்த பொருள் கொடியவர்கள், இரண்டிற்கும் ஏற்பக் ‘கொடியார்க்கும் உண்டோ குணம் ‘ என்ற தொடர் இருத்தலின் சிலேடை ஆயிற்று.

கொடியார் – முல்லைக்கொடியார்; கொயவர்கள். அஃறிணைப் பொருளாகிய முல்லைக் கொடியைக் கொடியார் என்றல் இழிவுபற்றி வந்த திணைவழுமைதியாம்.

கூடாவியற்கை என்பது கூடாததனைக் கூடுவதாக்கிக் கொள்வது.
“ஆர வடமும் அதிசீத சந்தனமும்
ஈர நிலவும் எரிவிரியும் – பாரில்
துதிவகையான் மேம்பட்ட துப்புரவுந் தத்தம்
விதிவகையான் வேறு படும்”
துப்புரவு – அநுபவம். விரிதல் – மிகுதல்.

தண்ணிய முத்து மாலையும் மிகவும் குளிர்ந்த சந்தனமும், குளிர்ந்த நிலவும் பிரிவாற்றாது வருந்துபவர்க்கு நெருப்பின் வெம்மையைத் தருவனவாயின், உலகில் புகழ்தற்குரிய பொருள்களும் அவரவர் விதி வகைக்கேற்பத் தத்தம் நிலைமையினின்றும் வேறுபடும் என்பதாம்.

இதன்கண், `ஆரவடம், சந்தனம், நிலவு ஆகியன பிரிவாற்றாத பெண்டிர்க்கு நெருப்பாக இருக்கும்’ என்பது கவிஞன் சொல்லக் கருதிய பொருளாகும்.

இத்தன்மை அவற்றிற்குக் கூடாத்தன்மையாகும். இங்ஙனம் கூடாத தன்மையைக் கூடுவதாக்கி யுரைத்தற்கு, ‘நுகர்தற்குரியபொருள்களெல்லாம் அவரவர் விதிவகையான் வேறுபடும்’ என்ற உலகறி பொருளை ஏற்றி வைத்திருத்தலின், இது வேற்றுப் பொருள் வைப்பாயிற்று. முன்னிரண்டு அடிகளில். கூடாத தன்மையைக் கூட்டி யுரைக்கப் பட்டிருத்தலின் கூடா இயற்கை ஆயிற்று.

கூடுமியற்கை என்பது கூடுவதாகக் கூறுவது.

“பொய்யுரையா நண்பர் புனைதேர் நெறிநோக்கிக்
கைவளைசோர்ந் தாவி கரைந்துகுவார் – மெய்வெதும்பப்
பூத்தகையுஞ் செங்காந்தள் பொங்கொலிநீர் ஞாலத்துத்
தீத்தகையார்க் கீதே செயல்”

எக்காலத்தும் பொய்யறியாத தலைவருடைய அலங்கரிக்கப்பட்ட தேர் வரும் வழிபார்த்துக் கைவளை வீழ உயிர் நைந்து விதனப் படுகின்ற மடவாருடைய மேனி அழலப் பூத்து விளங்கிவருத்துகின்றது சிவந்த நிறத்தையுடைய காந்தள்; கடல் சூழ்ந்த ஞாலத்துத் தீக்குணத் தார்க்கு ஈதன்றோ செயல்.

‘தீத்தகையார்’ என்றது தீயகுணத்தையுடையார்க்கும், தீப்போலச் சிவந்த நிறத்தையுடைய பூத்த காந்தளுக்கும் பெயர்.

இதன்கண் ‘ தலைவனின் தேர் வரும் வழியைப் பார்த்து மனம் வெதும்புவார்தம் உடல் வருந்துமாறு செங்காந்தள் பூத்துகிடக்கின்றது’ என்பது கவிஞன் சொல்லக் கருதிய பொருளாகும்.

இதனை முடித்தற்கு ‘ உலகில் கொடிய தன்மையுடையார்க்குப், பிறர் வெதும்புமாறு செய்தலே இயல்பாம் ‘ என்ற உலகறி பொருளை ஏற்றி வைத்திருத்தலின், வேற்றுப்பொருள் வைப்பாயிற்று.

தீயதன்மை வாய்ந்தார், பிறர்க்கு தீய தன்மையை விளைவித்தல் பொருந்திய இயல்பாதலின், இது கூடும் இயற்கை ஆயிற்று.

இருமையியற்கை என்பது கூடாததனையும் கூடுவதனையும் ஒருங்கு கூறுவது.
“கோவலர்வாய் வேய்ங்குழலே யன்றிக் குரைடகலும்
கூவித் தமியோரைக் கொல்லுமால் – பாவாய்!
பெரியோரும் பேணாது 1செய்வரே போலும்
சிறியோர் பிறர்க்கியற்றுந் தீங்கு”
இடைக்குல மாக்கள் வாயின் வேய்ங்குழல் இசையே யன்றி, ஒலிக்குங் கடலும் கதறிப் பிரிந்திருந்தாரைக் கொல்லும்; பாவாய்! பெருந்தகைமை உடையாரும் விசாரியாது செய்வர் போன்றதுகாண், எப்பொழுதுஞ் சிறியோர் அயலவர்க்குச் செய்யுந் தீமைக் காரியத்தை.

பெரியோர் – கடல். சிறியோர் – குழல். தீங்கு – தீமை. ஆல்- அசை

இதன்கண் ‘பிரிவால் வருந்தியிருப்பவர்களை அவர்கள் வருத்தம் மிகுமாறு கோவலரின் வேய்ங்குழலே யன்றிக் கடலும் அத்தன்மையைச் செய்கிறது’, என்பது கவிஞன் சொல்லக் கருதிய பொருளாகும்.

இதனை முடித்தற்குச் ‘ சிறியோர் செய்யும் தீங்கினைப் பெரியோர்களும் செய்வர் போலும்’, என்ற உலகறி பொருளை ஏற்றி வைத்திருத்தலின், இது வேற்றுப் பொருள் வைப்பாயிற்று.

சிறியோர் பிறர்க்குத் தீங்கியற்றல் கூடும்தன்மை. பெரியோர் அங்ஙனம் செய்தல் கூடாத் தன்மை. சிறுமையதாகிய குழல் செய்யும் தீங்கினைப், பெரிதாகிய கடலும் செய்கிறது எனவே, அவ்விருமை (கூடுமியற்கை, கூடா இயற்கை) இயற்கையும் ஒருங்கு கூறியதாயிற்று.

விபரீதம் என்பது விபரீதப்படச் சொல்லுவது.
“தலையிழந்தான் எவ்வுயிருந் தந்தான் பிதாவைக்
கொலைபுரிந்தான் குற்றங் கடிந்தான் – உலகில்
தனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேல் தப்பாம்
வினையும் விபரீத மாம்”.
முழுதுலகும் படைத்த பிரமன் தலை இழந்தான்; பிதாவைக்கொன்ற சண்டீசன் குற்றம் தீர்ந்தான்; ஒருவர்க்கு மில்லாத பெருமையுடையராய் உயர்ந்தோர் நினைப்பின் தப்பாத வினைகளும் உலகத்து மறுதலைப்படும்.

இதனுள் நல்வினைப்பயன் தீதாகவும், தீவினைப்பயன் நன்மையாகவும் வந்து விபரீ தமானது காண்க.

இதன்கண் தலையிழந்த பிரமன் எவ்வுயிரையும் தந்தான் என்பதும், பிதாவைக் கொலைபுரிந்த சண்டீசரைக் குற்றமற்றவராக இறைவன் ஆட்கொண்டான் என்பதும் கவிஞன் கூறக்கருதியவிபரீதப் பொருளாகும்.

இதனை முடித்தற்கு ‘உலகில் தனித்தலைமை பூண்டவர்கள் தவறுகள் செய்யினும் தவறாகா’ என்ற உலகறி பொருளை ஏற்றி வைத்திருத்தலின் இது வேற்றுப் பொருள் வைப்பாயிற்று.

பிரமன் தலை இழந்த வரலாறு:
பிரமனும் சிவபொருமானைப் போன்றே ஐம்முகம் உடையனாய் இருந்தனன் என்றும், உமையம்மையாருக்கு ஐயம் ஏற்படாதிருக்கச் சிவபெருமான் பிரமனுக்குள்ள ஐம்முகத்துள் ஒன்றைக் கொய்தனர் என்றும் கூறுப.

வேற்றுப்பொருள் வைப்பணியில் கூறப்பட்ட ஒருவழிச் சேறல் முதலிய வகைகளின் இலக்கணம், கவிஞன் தான் சொல்லக் கருதிய பொருளிலோ, அல்லது அதனை முடித்தற்கு வந்த பொருளிலோ, அல்லது அவ்விரண்டிலுமோ அமையலாம் என்பதை மேற்காட்டிய பாடல்களால் அறியமுடிகின்றது.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் : தொடர் 32-35
சிறீ சிறீஸ்கந்தராஜா
21/06/2013 – 23/07/2013

தொகுப்பு – thamil.co.uk