அணியிலக்கணம் 3 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தொடர்-30அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 6

03)உருவக அணி – முதலாம் பகுதி
தண்டியலார் கூறும் 35 பொருளணிகளில் தன்மையணி, உவமையணி மற்றும் அவற்றின் உபபிரிவுகள் பற்றி இதுவரை பார்த்தோம். இத்தகைய பொருளணிகள் என்ற வகையில் மூன்றாவதாக வருகிறது உருவகவணியாகும். தாய் அணியாகிய உவமையணியிலிருந்து உருவகவணியை எவ்வளவு நுட்பமாகப் பிரித்தோதுகின்றார் என்பது பற்றிப் பார்ப்போம்.

உருவக அணி
உவமை அணியில் ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்பிட்டுக் கூறும்போது அவை ஒப்புமை உள்ள வேறுவேறு பொருள்கள் என்றே கருதப்படும்.

“தாமரை போன்ற முகம்” இங்கே இரண்டினுக்கும் உள்ள ஒற்றுமை மிகுந்து, வேற்றுமை குறைவுஎனத் தோன்றுகிறது.

காலப்போக்கில் அவை இரண்டினுக்கும் வேற்றுமை இல்லை; அவை இரண்டும் ஒன்றே என்றமனவுணர்வு வருகிறது,

“முகம் ஆகிய தாமரை” இங்கு முகமே தாமரை எனப்பொருள்படுகிறது, இவ்வாறு வரும்போது உவமையணியிலிருந்து உருவக அணி தோன்றுவதை உணரலாம்.

உருவக அணியின் இலக்கணம்
“உவமையும் பொருளும் வேற்றுமை யொழிவித்(து)
ஒன்றென மாட்டின்அஃ துருவக மாகும்” (நூற்பா – 35)

உவமையாம் பொருளையும், உவமிக்கப்படும் பொருளையும் வேறுபாடு ஒழிவித்து ஒன்றென்பதோர் உள்ளுணர்வு தோன்ற ஒற்றுமைப்படுத்தின் உருவகம் என்னும் அலங்காரமாம்.

உவமைக்கும் பொருளுக்கும் வேற்றுமை தோன்றக் கூறுதல் உவமை அணியாம். அவ்விரண்டிற்கும் வேற்றுமையின்றி ஒன்றே என்று கூறின் அது உருவக அணியாம்.

உருவக அணி விளக்கம்
உவமையணியில் உவமானம் முன்னும் உவமேயம் பின்னும் இருக்கும்.
இரண்டினுக்கும் ஒப்புமை காட்ட இடையில் போல, புரைய, அன்ன முதலான உவமை உருபுகளுள் ஏதேனும் ஒன்றுவரும்.
உருவக அணியில் உவமேயம் முன்னும் உவமானம் பின்னும் வரும்.

இவற்றை ஒற்றுமைப்படுத்துவதற்காக ‘ஆகிய’ என்ற உருபு இடையில் வரும். ‘ஆக’ என்ற உருபும் வருவதுண்டு. இவை ‘உருவக உருபுகள்’ என்று கூறப்படும். இவை மறைந்து வருதலும் உண்டு.

மலர்போன்ற கண், மலர்க்கண் – உவமை
கண் ஆகிய மலர், கண்மலர் – உருவகம்
மலர் போன்ற கண் என்ற உவமையில் மலரும் கண்ணும்வேறு வேறு எனும் உணர்வு தோன்றுவதையும், கண் ஆகியமலர் என்ற உருவகத்தில் கண்ணே மலர், கண்ணும் மலரும் வேறுவேறல்ல என்னும் உணர்வு தோன்றுவதையும் இங்கே காணலாம்.

உருவக அணியின் வகைகள்
“தொகையே விரியே தொகைவிரி யெனாஅ
இயைபே இயைபிலி வியநிலை யெனா அச்
சிறப்பே விருபகஞ் சமாதான மெனா அ
உருவகம் ஏகம் அநேகாங்க மெனா அ
முற்றே அவயவம் அவயவி யெனா அச்
சொறறஐம் மூன்றும் மற்றதன் விரியே” (நூற்பா – 36)

01 – தொகையுருவகமும்,
02 – விரியுருவகமும்,
03 – தொகைவிரியுருவகமும்
04 – இயைபுருவகமும்,
05 – இயைபிலியுருவகமும்,
06 – வியநிலையுருவகமும்,
07 – சிறப்புருவகமும்,
08 – விருபகவுருவகமும்,
09 – சமாதானவுருவகமும்,
10 – உருவகவுருவகமும்,
11 – ஏகாங்கவுருவகமும்,
12 – அநேகாங்கவுருவகமும்,
13 – முற்றுருவகமும்,
14 – அவயவவுருவகமும்,
15 – அவயவிவுருவகமும்
எனச் சொல்லபட்ட பதினைந்தும் மேற்கூறிய உருவகத்து விரியாம்.

01 – தொகை உருவகம்
‘ஆகிய’ என்னும் உருவக உருபு மறைந்து வருவது தொகை உருவகம் ஆகும். அதாவது உவமேயமும் உவமானமும் இணைப்புச்சொல் எதுவும் இன்றிச் சேர்ந்து வருவது.
“அங்கை மலரும் அடித்தளிருங் கண்வண்டும்
கொங்கை முகிழுங் குழற்காரும் – தங்கியதோர்
மாதர்க் கொடியுளதா னண்பா ! அதற்கெழுந்த
காதற் குளதோ கரை”

‘நண்பா! அழகிய கையாகிய மலரையும், அடியாகியதளிரையும், கண்ணாகிய வண்டையும், கொங்கையாகிய அரும்பையும், கூந்தலாகிய மேகத்தையும் உடைய விருப்பம்தரும் கொடி ஒன்று உளது. அக்கொடி மேல் எழுந்தகாதலுக்கு எல்லை உலகத்தில் உண்டோ இல்லை’ என்று தலைவன் பாங்கனிடம் கூறுகிறான்.

அங்கை மலர், அடித்தளிர், கண்வண்டு, கொங்கை முகிழ், குழற்கார் மாதர்க் கொடி என்றவிடங்களில் “ஆகிய” என்னும் உருபு தொக்கு வருதலின் இது தொகையுருவகம் ஆயிற்று.

ஆகிய என்ற உருபு ஆக, ஆ எனக் குறைந்து நிற்றலும் உண்டு. அவை தொக்குநிற்பினும் தொகையுருவகமேயாம்.

02 – விரி உருவகம்
“கொங்கை முகையாக மென்மருங்குல் கொம்பாக
அங்கை மலரா அடிதளிராத் – திங்கள்
அளிநின்ற மூர லணங்காம் எனக்கு
வெளிநின்ற வேனிற் றிரு”

கொங்கை அரும்பாக, நுண்ணிடை வஞ்சிக் கொம்பாக, அழகிய கையே மலராக, அடி தளிராக, நிலவு போல வெள்ளிய ஒளியினை யுடைத்தாய், நெருநல் தோன்றிய அணங்கு போன்று இருந்தாள், இப்பொழுது எனக்கு இளவேனிற் காலத்தைக் கொண்டு வெளிப்பட்ட திருவை யொப்பாள் ஆனாள்’ என்று தலைவன் பாங்கனிடம் தலைவியின் அழகை கூறுகிறான்.

இப்பாடலில் கொங்கை முகையாகவும், இடை வஞ்சிக்கொடியாகவும், கை மலராகவும், பாதம் தளிராகவும் உருவகிக்கப் பட்டுள்ளதைக் காணுங்கள். இப்பாடலில், முகையாக, கொம்பாக, மலரா, தளிரா என ‘ஆக’ ‘ஆ’ என்றஉருவக உருபுகள் விரிந்து வருதைக் காணலாம். ஆகவே இது விரி உருவக அணி ஆகும்.

03 – தொகைவிரியுருவகம்என்பது அச்சொல் தொக்கும் விரிந்தும் நிற்பது.
“வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி 2நீங்குகவே யென்று”

உலகமே தகளியாகவும், நெடிய கடலே நெய்யாகவும், வெம்மையையுடைய பகலவனே விளக்காகவும், சிவந்த நிறத்தை யுடைத்தாகிய சக்கரத்தை யுடையான் அடிக்கே சேர்த்தினேன் , சொல்லினால் தொடுத்த மாலையை, என்னுடைய துக்கமாகிய கடல் வறப்பதாக. தகளியா, நெய்யாக, விளக்காக என்ற இடங்களில் அவ்வுருபு விரிந்தும் இடர்ஆழி என்றவிடத்து அவ்வுருபு தொக்கும் நிற்றலின், இது தொகைவிரி யுருவகமாயிற்று.

04 – இயைபு உருவகம்
பல பொருள்களை உருவகம் செய்யும் பொழுது, அவற்றை ஒன்றற்கு ஒன்று இயைபு (பொருத்தம்) உடையபொருள்களாக வைத்துக் கூறுவது இயைபு உருவகம்
“செவ்வாய்த் தளிரும் நகைமுகிழுங் கண்மலரும்
மைவா ரளக மதுகரமும் – செவ்வி
உடைத்தாந் திருமுகமென் னுள்ளத்து வைத்தார்
துடைத்தாரே யன்றோ துயர் ”

சிவந்த வாயாகிய தளிரினையும், நகையாகிய முல்லை அரும்பினையும், கண்ணாகிய மலரினையும், கரிய நீண்ட அளகமாகிய வண்டினையும், செவ்வியினையும் உடைய கண்டாரால் விரும்புந் தன்மையுடைத்தாகிய முகத்தை யென்னுள்ளத்திலே வைத்தார்; இதனாலே என்னுடைய உள்ளத்திலுண்டாகிய துயரத்தை நீக்குவாரன்றோ ? சொல்லுவீராக

இப்பாடலில் வாய் தளிராகவும், புன்முறுவல் முல்லை அரும்பாகவும், கண் மலராகவும், கூந்தல் வண்டாகவும் உருவகப்பட்டுள்ளதைக் காண்லாம். உருவகம் செய்யப் பயன்படுத்திய தளிர், முகிழ் (அரும்பு), மலர், மதுகரம்(வண்டு) என்ற நான்கும் ஒன்றோடு ஒன்று இயைபு உடைய பொருள்களாகும். இவ்வாறு தொடர்புடைய பொருள்களைக் கொண்டு உருவகம் செய்தமையால் இது இயைபுஉருவக அணி ஆகும்.

05 – இயைபிலுருவகம் என்பது பல பொருளுந் தம்முள் இயையாமை வைத்து உருவகஞ் செய்வது.
“தேனக் கலர்கொன்றை பொன்னாகச் செஞ்சடையே
கூனற் பவளக் கொடியாகத் – தான
மழையாகக் கோடு மதியாகத் தோன்றும்
புழையார் தடக்கைப் பொருப்பு”
மதுவைக் காலுகின்ற கொன்றைமலர் பொன்னாகவும் , சிவந்த சடை வளைந்து நன்மையுடைத்தாகிய பவளக் கொடியாகவும், மதம் மழையாகவும், மருப்பு மதியாகவும் தோன்றாநின்றது, துளையை யுடைத்தாகிய பெரிய கையையுடைய யானையாகிய மலை.

விநாயகப் பெருமான் அணிந்திருக்கும் கொன்றை மலர், அவர்தம் சடை, மதம், மருப்பு ஆகிய பொருள்களை முறையே, தம்மில் இயைபற்ற பொருள்களான பொன், பவளக்கொடி, மழை, மதியாக உருவகிக்கப்பட்டுள்ளமையின் இது இயைபில் உருவகமாயிற்று.

06 – வியநிலையுருவகம் என்பது ஒன்றன் அங்கம் பலவற்றினுள் சிலவற்றை உருவகஞ் செய்தும், சிலவற்றை உருவகஞ் செய்யாதும் உரைத்து, அங்கியை உருவகஞ் செய்து உரைப்பது.
“செவ்வாய் நகையரும்பச் செங்கைத் தளிர்விளங்க
மைவாள் நெடுங்கண் மதர்த்துலவச் – செவ்வி
நறவலருஞ் சோலைவாய் நின்றதே நண்பா!
குறவர் மடமகளாங் கொம்பு”

சிவந்தவாய் எயிற்றையரும்பச், செங்கரங்கள் தளிரை விளக்க, வருத்தஞ் செய்யும் வாளாகிய கண்கள் சிவந்த அரியோடு உலாவப், புதிதாகிய தேனையுடைத்தாய் மலருஞ் சோலையின்கண்ணே தோன்றிற்று; நண்பனே! குறவர்க்கு மடப்பத்துடனே கூடிய மகளாந் தன்மை யுடைத்தாயிருப்பதொரு வஞ்சிக்கொம்பு.

இப்பாடலில் கூறப்பட்ட பொருள் குறவர் மடமகள். இப்பெண்ணின் உறுப்புக்களில் இங்குக் கூறப்படுவன வாய், கை, கண் ஆகிய மூன்றுமாம். இவற்றுள் கையை மட்டும் தளிராக உருவகஞ் செய்து, ஏனைய உறுப்புக்களை உருவகிக்காதும், உறுப்பினையுடைய பெண்ணை (அங்கியை) மட்டும் கொம்பாக உருவகித்தும் இருத்தலின் இது வியநிலை யுருவகமாயிற்று.

07 – சிறப்புருவகம் என்பது ஒரு பொருளை எடுத்து அதற்குச் சிறந்த அடைகளை உருவகஞ் செய்து அவற்றானே உருவகமாக்கி யுரைப்பது .
“விரிகடல்சூழ் மேதினி நான்முகன்மீ கானாச்
சுரநதிபா யுச்சி தொடுத்த – அரிதிருத்தாள்
கூம்பாக எப்பொருளுங் கொண்டபெரு நாவாய்
ஆம்பொலிவிற் றாயினதால் இன்று”

பரந்த கடல்சூழ்ந்த உலகமானது, நான்முகத்தோன் மீகாமனாகவும், தேவகங்கை பாயாகவும், அப்பாயையுச்சியிலே உடைத்தாகிய திருமால் மேனோக்கி யெடுத்த சீர்பாதம் கூம்பாகவும், பல வகைப்பட்ட பொருள்களையும் உடைத்தாய்ப் பெரிதாகிய அழகோடு கூடிய நாவாய் ஆனது. இதனுள் நான்முகன் மீகாமனாகவும், சுரநதி பாயாகவும், அரிதிருத்தாள் கூம்பாகவும் உருவகஞ் செய்யப் புவி நாவாய் ஆயினமையின், அப்பெயர்த்தாயிற்று .

பாயை உச்சியிலே உடைத்தாகிய தாள்’ எனக் கூட்டுக. உலகமானது இவ்வுறுப்புக்களை யுடைமையின் மரக்கலம் ஆயிற்றெனக் கொள்க.

அணியிலக்கணம் – தொடர்-31அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 7

உருவக அணி –  இரண்டாம் பகுதி

08 – விரூபகவுருவகம் என்பது ஒரு பொருட்குக் கூடாத தன்மை பலவுங்கூட்டி உருவகஞ் செய்வது.
“தண்மதிக்குத் தோலாது தாழ்தடத்து வைகாது
முண்மருவுந் தாண்மேன் முகிழாது – நண்ணி
இருபொழுதுஞ் செவ்வி இயல்பாய் மலரும்
அரிவை வதனாம் புயம்”

தட்பத்தினையுடைய மதியின் தொழிற்குக் கெடாது, ஆழ்ந்த கயத்தில் தங்காது, முள்னை ‘யுடைத்தாகிய தாளின்மீது மொட்டியாது, காலையும் மாலையுஞ் சேர்ந்து செவ்வியை யுடைத்தாய் மலர்ந்து நிற்கும், என் காதலியுடைய முகமாகிய தாமரை’

மதிக்குத் தோலாமை, தடத்துள் வைகாமை, முள்தாளின் மீது முகிழாமை, இருபொழுதும் மலர்தல் ஆகிய இவை தாமரைக்குக்கூடாத தன்மைகளாம். இத்தன்மைகளை அதற்கு ஏற்றி, அத்தகைய தாமரையாக முகத்தை உருவகம் செய்தமையின், இது விரூபகவுருவக மாயிற்று.

09 – சமாதானவுருவகம் என்பது ஒருபொருளை நன்றாக உருவுகஞ் செய்து, அதனையே தீங்கு தருவதாகக் கூறி, அத்தீங்கும் அதனானே வருகின்றது அன்றென்று அதற்குப் பிறிதோர் காரணங் கூறுவது.
“கைகாந்தள் வாய்குமுதங் கண்நெய்தல் காரிகையீர்!
மெய்வார் தளிர்கொங்கை மென்கோங்கம் – இவ்வனைத்தும்
வன்மைசேர்ந் தாவி வருத்துவது மாதவமொன்(று)
இன்மையே யன்றோ எமக்கு”

அழகினையுடையீர்! உம்முடைய காந்தள் மலராகிய கையும், குமுதமாகிய வாயும், நெய்தல் மலராகிய கண்ணும், நீண்ட தளிராகிய மெய்யும், மென்மையுடைய கோங்கரும்பாகிய கொங்கையும் என்று சொல்லப்பட்டன நும்முடைய அவயவமாகிலும், அவை யனைத்துந் தன்மை திரிந்து வன்கண்மையைச் சேர்ந்து எம்முடைய உயிரை வருத்தஞ் செய்யும்; இது, முற் காலத்தில் யாஞ்செய்த தீவினைப்பயன் இக்காலத்து எமக்குப் பயத்தலாலன்றோ? நும்மேல் தவறுண்டோ

இப்பாடலில் எடுத்துக் கூறப்பட்ட பொருள் ஒரு பெண் ஆவள். அப்பெண்ணின் உறுப்புக்களான கை, வாய், கண், மெய், கொங்கை ஆகியவற்றை முறையே காந்தள், குமுதம், நெய்தல், தளிர், கோங்கரும்பு என நன்றாக உருவகஞ் செய்து, இத்தகைய உறுப்பு நலமுடைய பெண்ணே தன்னாவியை வருத்துவதாக அவ்வழகு நலத்திற்குத் தீங்கு கூறி, அத்தீங்கும் தன்னுடைய தீவினைப் பயனாலேயே வந்ததாம் என அதற்குப் பிறிதொரு காரணமும் கூறியிருத்தலின் இது சமாதான உருவகமாயிற்று .

முதற்கண் பெண்ணால் தீங்கு வந்ததாகக் கூறிப், பிறகு அதுவும் தன் தீவினையினாலேயே வந்தது எனச் சமாதானம் செய்து கொள்கின்றமையின், இது சமாதான உருவகம் எனப் பெயர் பெற்றது.

10 – உருவகவுருவகம் என்பது ஒன்றனை உருவகஞ் செய்து, அதனையே பெயர்த்தும் பிறிதொன்றாக உருவகஞ் செய்வது
“கன்னிதன் கொங்கைக் குவடாங் கடாக்களிற்றைப்
பொன்னெடுந்தோட் குன்றே புனைகந்தா – மன்னவநின்
ஆகத் தடஞ்சே வகமாக யான்அணைப்பல்
சோகித் தருளேல் துவண்டு”

இப்பாடலில் கொங்கையைக் குவடாக உருவகஞ் செய்து, அதனையே மீண்டும் களிறாகவும், தோளைக் குன்றாக உருவகஞ் செய்து, அதனையே மீண்டும் கந்தாக (கட்டுத்தறியாக)வும் உருவகம் செய்யப்பட்டுள்ளமையின், இது உருவக வுருவகமாயிற்று

11 – ஏகாங்கவுருவகம்
என்பது ஒரு பொருளினது அங்கம் பலவற்றுள்ளும் ஓரங்கமே உருவகஞ் செய்து, ஒழிந்த அங்கங்களை வாளாவே கூறுவது.
“காதலனைத் தாவென் றுலவுங் கருநெடுங்கண்
ஏதிலனால் யாதென்னும் இன்மொழித்தேன் – மாதர்
மருண்ட மனமகிழ்ச்சி வாண்முகத்து வந்த
இரண்டினுக்கும் என்செய்கோ யான்”

நெஞ்சமே ! எமக்கொரு கணவனைத் தருவாயாக என்பது போன்றிருந்தது, காதளவும் உலவுகின்ற கரிய நெடிய கண்கள்; அயலானாற் பயனில்லை என்பது போன்றிருந்தது, இனிய தேனாகிய மொழி; மாதருடைய கண்டார்க்கு மயக்கத்தோடு கூடிய உள்ளக் களிப்பைக் கொடுக்கின்ற ஒளியையுடைய முகத்திலே தோற்றிய இவ்விரண்டினுக்கும் யான் என்ன செய்யக் கடவேன்.

இப்பாடலில் கூறப்பட்ட பொருள் ஒரு பெண் ஆவள். அப்பெண்ணின் உறுப்புக்களுள் மொழியை மட்டும் தேனாக உருவகித்து, ஏனைய கண், முகம் இரண்டையும் உருவகஞ் செய்யாது வாளா கூறினமையின், இது ஏகாங்க உருவகமாயிற்று.

12 – அநேகாங்கவுருவகம் என்பது ஒன்றன் அங்கம் பலவற்றையும் உருவகஞ் செய்து உரைப்பது.
“கைத்தளிராற் கொங்கை முகிழ்தாங்கிக் கண்ணென்னும்
மைத்தடஞ்சேல் மைந்தர் மனங்கலங்க – வைத்ததோர்
மின்னுளதால் மேக மிசையுளதால் மற்றதுவும்
என்னுளதாம் நண்பா! இனி”

கையாகிய தளிரினாலே முலையாகிய அரும்பினைத் தாங்குகின்ற தன்மையையுடைத்தாகவும், கண்ணெனப்பட்ட கரிய குளிர்ந்த சேல்களாலே ஆடவர் உள்ளங்களை அழிக்குந் தன்மையை யுடைத்தாகவும், கறுத்த மேகத்தைச் சுமந்துகொண்டு நிற்பதாகவும், ஒரு மின் தோன்றிப் பூமிக் கண்ணே நின்றதேல், அது நண்பனே! என் உள்ளத்ததுவேயாம்.

இப்பாடலில் ஒரு பெண்ணின் கை, கொங்கை, கண், கூந்தல், வடிவம் ஆகிய பலவுறுப்புக்களும் முறையே தளிர், கோங்கரும்பு, கயல், மேகம், மின்னல் ஆக உருவகிக்கப்பட்டுள்ளமையின் இது அநேகாங்க வுருவகமாயிற்று.

13 – முற்றுருவகம்
என்பது அவயவ அவயவிகளை ஏற்ற இடத்தோடும் , பிறவற்றோடும் முற்ற உருவகஞ் செய்து உரைப்பது.
“விழியே களிவண்டு மென்னகையே தாது
மொழியே முருகுலாந் தேறல் – பொழிகின்ற
தேமருவு கோதைத் தெரிவை திருமுகமே
தாமரையென் னுள்ளத் தடத்து”

தேன் மருவிய கூந்தலையுடைய தெரிவை திருமுகமே தாமரை, விழிகளே களிக்கின்ற வண்டு, மெல்லியவாகிய நகையே தாது, வார்த்தையே நறுநாற்றம் உலாவுகின்ற மது, என் உள்ளமாகிய தடாகத்து.

இப்பாடலில் ஒரு பெண்ணின் விழி, நகை, மொழி, முகம் ஆகிய உறுப்புக்களை முறையே வண்டு, தாது, தேன், தாமரை ஆக உருவகித்து, அது தன் உள்ளத்தில் இருப்பதற்கு ஏற்ப உள்ளத்தைக் குளமாகவும் உருவகித்துள்ளமையின் இது முற்றுருவகம் ஆயிற்று.

14 – அவயவவுருவகம் என்பது அவயவத்தை உருவகஞ் செய்து, அவயவியை வாளாவே கூறுவது.
புருவச் சிலைகுளித்துக் கண்ணம்பெ னுள்ளத்
துருவத் துரந்தார் ஒருவர் – அருவி
பொருங்கற் சிலம்பிற் புனையல்குல் தேர்மேல்
மருங்குற் கொடிநுடங்க வந்து”

அலங்கரிக்கப்பட்ட அல்குலாகிய தேரின்மேல் ஏறி, இடையாகிய கொடி யசைய வந்து, அருவி யலைக்கப்பட்ட மலைச் சிலம்பினிடத்திலே தோற்றித் தம்முடைய புருவமாகிய வில்லை வளைத்துக், கண்ணாகிய அம்பினாலே என் உள்ளத்திலே உருவிப் போக ஒருவர் எய்தார்; இதற்குச் செய்யக்கடவது என்கொல்? சொல்லுவாயாக.

இப்பாடலில் ஒரு பெண்ணின் புருவம் , கண், அல்குல், மருங்குல் ஆகிய உறுப்புக்களை மட்டும் உருவகித்து, இவ்வுறுப்புக்களையுடைய பெண்ணை மட்டும் ‘ஒருவர்’ என வாளாவே கூறியுள்ளமையின், அது அவயவ வுருவகம் ஆயிற்று.

ஒரு பொருளது உறுப்புக்கள் பலவற்றையும் உருவகம் செய்துரைப்பதில் இதுவும், அநேகாங்க உருவகமும் ஒக்குமேனும், இது அவ்வுறுப்பியை (அவயவியை) உருவகஞ் செய்யாது விடுத்தும், அது அவ்வுறுப்பியையும் உருவகஞ் செய்தும் நிற்றல் காண்க. இவை தம்முள் வேற்றுமை

15 – அவயவியுருவகம் என்பது அவயவியை உருவகஞ் செய்து, அவயவங்களை வாளாவே கூறுவது.
“வார்புருவங் கூத்தாட வாய்மழலை சோர்ந்தசைய
வேரரும்பச் சேந்து விழிமதர்ப்ப – மூரல்
அளிக்குந் தெரிவை வதனாம் புயத்தால்
களிக்குந் தவமுடையேன் கண்”

நல்லாருடைய புருவம் அசைய, வாயில் வார்த்தையானது உருத்தெரியாது அழிந்து தளரக், குறுவியர்ப்பை யுடைத்தாக, விழியானது சிவந்து மதர்ப்ப, முறுவலிப்பதொரு முகமாகிய தாமரையினாலே களிக்குந் தன்மையைப் பெற்றது; முற்காலத்தில் யான் செய்த நல்வினைப் பயத்தினாலே, எனது கண்.

இப்பாடலில் கூறப்படும் பெண்ணின் முகம் அவயவியாகும். அதனை மட்டும் தாமரையென உருவகித்து, அதன்கண்ணுள்ள உறுப்புக்களான புருவம், மழலை, விழி, முறுவல் ஆகியவற்றை உருவகியாது வாளாவே கூறியுள்ளமையின், இது அவயவி யுருவகமாயிற்று.

பிற அணிகளுடன் கூடி வருதல்
இவ்வுருவக அலங்காரம் பிற அலங்காரங்களோடும் கூடி வரும் என்பதையும் குறிப்பிடுகின்றார்.
“உவமை ஏது வேற்றுமை விலக்கே
அவநுதி சிலேடையென்(று) அவற்றொடும் வருமே” (நூற்பா – 37)
உவமையும், ஏதுவும், வேற்றுமையும், விலக்கும், அவநுதியும், சிலேடையும் என்னும் ஆறு அலங்காரங்களோடு கூடியும் வரும் அவ்வுருவக அலங்காரம்.

இவ்வாறாக உருவகமும், உவமையும் ஓரினமாக்கிப் புணர்த்தமையால் உருவகத்திற்கு ஓதிய இலக்கணம் உவமைக்கு ஆதலும், உவமைக்கு ஓதிய இலக்கணம் உருவகத்திற்கு ஆதலும் உள எனவும் கொள்க. உருவக அணி பற்றிய விளக்கமும் அதன் உபபிரிவுகளும் முடிந்தவரை இங்கே தெளிவாக கூறப்பட்டுள்ளன.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் : தொடர் 30,31
சிறீ சிறீஸ்கந்தராஜா
21/06/2013 – 24/06/2013

தொகுப்பு – thamil.co.uk