அணியிலக்கணம் 2 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தொடர்-25அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் : 

பொருளணியியல் – 1

அணி இலக்கணத்தின் சிறப்பு
எழுத்து, சொல், பொருள், யாப்பு ஆகிய நான்கு இலக்கணங்களும் மொழிக்கு மொழி வேறுபடுவன. ஆனால் அணி இலக்கணம் எல்லா மொழிகளுக்கும் பொதுவானதாகும். எடுத்துக்கூற விரும்பும் கருத்தை எந்த நடையில் எந்தெந்த முறையில் எடுத்துரைப்பது எனக் கூறுவது எல்லா மொழிகளிலும் உள்ள நூல்களுக்கும் பொதுவானதாக உள்ளது. இது, பிற இலக்கணங்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு ஆகும்.

அணி இலக்கணத்தின் தொன்மை
தொல்காப்பிய ‘உவமவியல்’, அணி இலக்கணம் பற்றி கூறும் நூற்பாக்களில்,
“விரவியும் வரூஉம் மரபின என்ப” (நூற்பா-2)
‘உவமப் போலி ஐந்துஎன மொழிப” (நூற்பா-24)
ஆகிய நூற்பாக்களில் “என்ப”, “மொழிப” என்னும் சொல்லாட்சிகள் காணப்படுகின்றன. இச்சொற்களுக்கு “ஆசிரியர்கள் இவ்வாறு கூறுவார்கள்” என்பது பொருள்.

தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 3 அல்லது 4ஆம் நூற்றாண்டு என ஆராய்ச்சியாளர் கூறுவர். எனவே அதற்கும் முற்பட்ட காலத்திலிருந்தே அணி இலக்கணக் கருத்துகள் தமிழில் இருந்துள்ளன எனலாம்.

அணி இலக்கணப் பகுதிகள்
பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பகுதிகளாகத் தண்டியலங்காரம் வகுத்து காட்டுகின்றது.

பொதுவணியியல்
செய்யுளில் இடம்பெறும் அணிகள் குறித்த பொதுவான இலக்கணத்தைக் கொண்டது இப்பகுதியாகும்.

பொருளணியியல்
தன்மை அணி, உவமை அணி, உருவக அணி முதலான பொருள் அடிப்படையிலான பல அணிகள் இப்பகுதியில் எடுத்துக் காட்டுடன் விவரிக்கப் பெறும்.

சொல்லணியியல்
மடக்கணி, சித்திரக்கவி என்னும் சொல் அடிப்படையிலான இரண்டு அணிகளை விவரிக்கும் பகுதி இது.

தொல்காப்பிய உவமவியல் செய்திகள்
தொல்காப்பிய உவமவியலில்:
உவமையின் தோற்றம்
நிலைக்களன்
உவம உருபுகள்
உள்ளுறை உவமை
மரபு
புறனடை ஆகியன பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

உவமையின் தோற்றம்
வினை(செயல்), பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகிய நான்கின் அடிப்படையில் இருபொருள்களுக்கிடையில் உவமை அமையும்.

இவற்றுள் ஒருகூறு மட்டும் அல்லாமல், இரண்டு, மூன்று கூறுகளும் பொருந்தி வரலாம். உவமையாகக் காட்டப்படுவது பொருளை விட உயர்ந்ததாகவே அமையும்.

தொல்காப்பியமும் தண்டியலங்காரமும்
பிற்கால அணி இலக்கண நூல்களுள் சிறந்து விளங்குவது தண்டியலங்காரம் ஆகும். இந்நூல் தொல்காப்பிய உவமவியல் கருத்துகளையும் வடமொழித் தாக்கத்தையும் கொண்டு அமைந்துள்ளது.

பிற்கால அணிகளின் வளர்ச்சி
அணி இலக்கண வளர்ச்சியைப் பொருள் அணி வளர்ச்சி, சொல்லணி வளர்ச்சி என இரண்டாகப் பகுத்துக் கொள்ளலாம்.

தொல்காப்பியர் உவமவியலில் உவமை அணியை மட்டுமே எடுத்துரைத்துள்ளார். அதற்கு உரைவரைந்த பேராசிரியர் உவமையின் வகைகள் சிலவற்றைக் காட்டியுள்ளார்.

தொல்காப்பிய உவமவியலில் பொருள் அணி பற்றிய கருத்தே இடம் பெற்றுள்ளது. சொல்லணி இடம் பெறவில்லை. ஆனால் தொல்காப்பியச் செய்யுளியலில் உள்ள அந்தாதி, மடக்கு முதலான பகுதிகள் சொல்லணிக்கான விதைகளாக உள்ளன.

பொருள்அணிகள்
யாப்பருங்கல விருத்தி உரை – பொருள்அணி – 27
சேந்தன் திவாகரம் – பொருள்அணி – 28
வீரசோழியம் – பொருள்அணி – 35
தண்டியலங்காரம் – பொருள்அணி – 35
மாறனலங்காரம் – பொருள்அணி – 64
திருத்தணி விசாகப்பெருமாள்ஐயர் அணிஇலக்கணம் – பொருள்அணி – 100
குவலயானந்தம் – பொருள்அணி – 120

சொல்லணி வளர்ச்சி
திருஞான சம்பந்தர் தேவாரங்களில் – சொல்லணி – 10
வீரசோழியம் – சொல்லணி – 2
திவாகரம் – சொல்லணி – 21
தண்டியலங்காரம் -சொல்லணி – 2
யாப்பருங்கலம் – சொல்லணி – 22
யாப்பருங்கல உரை – சொல்லணி – 33
மாறனலங்காரம் – சொல்லணி – 2
மாறனலங்கார உரை – சொல்லணி – 2

அணி இலக்கணமும் ஐந்திலக்கணமும்
ஐந்திலக்கணம் கூறும் இலக்கண நூல்களுள் காலத்தால் முந்தியதாகத் திகழ்வது வீரசோழியம். எனினும் இதற்கு முற்பட்ட காலத்திலேயே அணிஇலக்கண வளர்ச்சி சிறப்புற் றிருந்தமையைத் திவாகர நிகண்டினால் அறிகிறோம். திவாகர நிகண்டில் பல்பொருள் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதியில் 28 பொருள் அணிகளும் 21 சொல்லணிகளும் சுட்டப் பட்டுள்ளன.

எனவே, தொல் காப்பியத்துக்கும் வீர சோழியத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அணி இலக்கணம் கூறும் நூல்கள் இருந்துள்ளமையை அறிய முடிகிறது. எனினும் அவை கிடைக்கப் பெறாத நிலையில் கிடைத்துள்ளனவாகிய

வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம் ஆகியன பற்றிச் சுர்க்கமாகப் பார்ப்போம்.

வீரசோழியம்
தமிழில் கிடைக்கப் பெறும் ஐந்திலக்கண நூல்களுள் முதன்மையானது. வீரராசேந்திர சோழனின் வேண்டுகோளுக்கு இணங்கப் புத்தமித்திரரால் பாடப்பெற்றது. இந்நூலில் அணி இலக்கணம் அலங்காரப் படலம் எனக் குறிக்கப்படுகிறது. தொல்காப்பியத்தையும் காவியாதரிசம் என்னும் வடமொழி நூலையும் அடியொற்றி எழுதப்பட்டது. இந்நூல், 35 பொருள் அணிகளையும், 2 சொல்லணிகளையும் பற்றிக் குறிப்பிடுகிறது. இதன் காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு ஆகும்.

இலக்கண விளக்கம்
திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டது. இதன் கருத்துகள் பெரும்பாலும் முன்னூல்களில் கூறப்பட்டவற்றின் தொகுப்பாகவே அமைந்துள்ளன. தொல்காப்பியக் கருத்துகள் கால மாற்றத்திற்கேற்ப, சுருக்கியும் பெருக்கியும் கூறப்படுதலின் இதனைக் குட்டித் தொல்காப்பியம் எனவும் கூறுவர். அணி இலக்கணப் பகுதி பெரும்பாலும் தண்டியலங்காரத்தை் ஒட்டியதாகும்,
இதில் 35 பொருள் அணிகளும், 2 சொல்லணிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியாகும்.

தொன்னூல் விளக்கம்
இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. ஐந்திலக்கணக் கருத்துகளை விரித்துரைக்கும் நூல் இது. இதில் 30 பொருள்அணிகளும், 30 சொல்லணிகளும் கூறப்பெற்றுள்ளன. இந்நூல், தற்குறிப்பேற்ற அணியை ‘ஊகாஞ்சித அணி’ எனச் சுட்டு்கின்றது. விடையில் வினா அணி, வினாவில் விடை அணி போன்ற புதிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டு ஆகும்.

முத்து வீரியம்
உறையூர் முத்துவீர உபாத்தியாயரால் இயற்றப்பட்டது. இதில் பொருளணிகள் 58, சொல்லணிகள் 14 என அணிகள் இடம் பெற்றுள்ளன. இதன் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு ஆகும்.

சுவாமிநாதம்
சாமிகவிராசர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இதில் அணி இலக்கணப் பகுதி, அணி அதிகாரம் எனப் பெயர் பெற்றுள்ளது. இப்பகுதி, பொருள் அணி மரபு, சொல்லணிமரபு, அமைதிமரபு என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் 31 பொருள் அணிகளும், 23 சொல்லணிகளும் இடம் பெற்றுள்ளன. அமைதி மரபுப் பகுதி, சில வழுவமைதிகளை எடுத்துரைக்கின்றது. இதன் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

அறுவகை இலக்கணம்
திருவாமாத்தூர் ‘வண்ணச்சரபம்’ தண்டபாணி சுவாமிகள் இயற்றியது. இந்நூலின் ஐந்தாவது இயலாக அணி இலக்கணம் விளங்குகிறது. இப்பகுதி உவமை, உடைமை, கற்பனை, நிகழ்ச்சி, ஆக்கம் ஆகிய ஐவகைப் பாகுபாடுகளைக் கொண்டுள்ளது. இதன் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு ஆகும்.

இவ்வாறாக அணி இலக்கணத்தைத் தம் ஒரு கூறாகக் கொண்டு திகழும் இலக்கண நூல்கள், சிறப்புற அணிகளைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

அணி இலக்கண நூல்கள்
ஒரு துறைப் புலமையில் ஆழ்ந்த அறிவும், திட்பநுட்பமும் செறிந்திருக்க வேண்டுமென விரும்பிய இலக்கண ஆசிரியர்கள், இலக்கண வகைகளுள் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கு விரிவான இலக்கணம் எழுதத் தொடங்கினர்.

அவ்வகையில் அணி இலக்கணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அணிகளின் வகைகளைக் குறிப்பிட்டு, சான்றுப்பாடல்கள் இயற்றி நூல்கள் இயற்றத் தொடங்கினர்.

தண்டியலங்காரம், மாறனலங்காரம் ஆகியன தமிழின் இயல்புக்கேற்ப அமைந்தனவாகும்.

சந்திராலோகம், குவலயானந்தம், தொனி விளக்கு, சித்திரக்கவிகள் ஆகியன வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்பாக அமைந்தனவாகும்.

இவற்றைப் பற்றியும், மேலும் கிடைக்கப் பெறாத அணி நூல்கள் பற்றியும் இங்கு பார்ப்போம்.

தண்டியலங்காரம்
வீரசோழியத்தை அடுத்துத் தோன்றியது இந்நூல். தண்டி என்பவரால் இயற்றப்பட்டது. தொல்காப்பியத்தையும், வடமொழி நூலாகிய காவியாதரிசத்தையும் அடியொற்றி எழுதப்பட்டது. இதில் 35 பொருள் அணிகளும், 2 சொல்லணி களும் இடம் பெற்றுள்ளன. இதன் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு ஆகும்.

மாறனலங்காரம்
திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் இயற்றப்பட்டது. “மாறன்” என்பது நம்மாழ்வாரின் பெயர்களுள் ஒன்று. இந்நூலாசிரியர் நம்மாழ்வார் மீது கொண்ட பக்தியின் காரணமாக இந்நூலுக்கு, மாறனலங்காரம் எனப் பெயரிட்டுள்ளார். இது தண்டியலங்காரத்தைப் பெரிதும் அடியொற்றியது. இதில் 64 பொருள் அணிகளும், 2 சொல்லணிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு ஆகும்.

சந்திராலோகம்
திருத்தணிகை விசாகப் பெருமாள் ஐயர், சந்திராலோகம் என்னும் வடமொழி நூலை, அதே பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது, 100 பொருள் அணிகளையும், 2 சொல்லணிகளையும் கொண்டுள்ளது. இதன் காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு ஆகும்.

குவலயானந்தம்
அப்பைய தீட்சிதரால் இயற்றப்பட்டது இந்நூல். இது, சந்திராலோகத்தின் வடமொழி உரையாகும். இது தமிழில் அதே பெயருடன் வந்துள்ளது. இதனைச் சண்முக சிகாமணிக் கவிராயர் இயற்றினார். இது 120 பொருள் அணிகளைக் கொண்டுள்ளது.இதன் காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு ஆகும்.

தொனிவிளக்கு
ஆனந்தவர்த்தனர் வடமொழியில் தொன்யாலோகம் என்னும் அணிஇலக்கண நூலை இயற்றியுள்ளார். அதனைத் தொனிவிளக்கு எனத் தமிழில் பின்னங்குடி சா.சுப்பிரமணிய சாத்திரியார் மொழி பெயர்த்துள்ளார். இவர் காலம் கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

சித்திரக்கவிகள்
இவை, சொல்லணி வகையைச் சார்ந்தனவாகும். கி.பி. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தனவாகும்.

சித்திரக்கவி – நா.க.உ. கல்விக் களஞ்சியப்புலவர்.
சோடச பங்கி, இரட்டை நாகபந்தம் – திரு.கா.மு. செட்டியார்
மாலைமாற்று ஏகபாதம் – வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்
சித்திரக்கவிப் புஞ்சம் – மதுரகவிப்புலவர்
மாலை மாற்று மூலம் – சோழவந்தான் அ. சண்முகம்பிள்ளை

கிடைக்கப் பெறாத அணி நூல்கள்
மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள், மறைந்துபோன தமிழ் நூல்கள் என்னும் நூலில் மறைந்துபோன இலக்கண நூல் பெயர்கள் பலவற்றைச் சுட்டுகிறார். அவற்றுள் அணி இலக்கண நூல்களாகக் கருதப்படுபவை :
1. அணியியல்,
2.கவிமயக்கறை,
3. புணர்ப்பாவை,
4. போக்கியம்,
5. இரணியம்,
6. வதுவிச்சை,
7. பெரிய முப்பழம் ஆகியனவாகும். இவை வருங்காலத்தில் கிடைக்கப் பெறும் என நம்புவோமாக.

அணியிலக்கணம் – தொடர்-26அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 2

பல்வேறு அணிகளின் இலக்கண விரிவைத் தமிழில் கொண்டுவர வேண்டும் எனும் நோக்கத்துடன் தமிழில் அணி இலக்கண நூல்கள் தோன்றின. இவற்றுள் “தண்டியலங்காரம்” அணியியல் பற்றி மிகவும் விரிவாக ஆராய்கிறது. ஒவ்வோர் அணியைப் பற்றியும் தண்டியாசிரியர் கூறும் போது முதற்கண்அதன் இலக்கணத்தைக் கூறுகிறார். அவ்வணியானது பல்வகைப்பட்டு அமையுமாயின் அவ்வகைகளையும் கூறுகிறார். தண்டியலங்கார உரையில் ஒவ்வொரு வகைக்கும் தெளிவானவிளக்கம் தரப்படுகிறது. ஒவ்வொரு வகைக்கும் பொருத்தமான பாடல் சான்று காட்டப்படுகிறது.

பொருளணிகள்
“தன்மை யுவமை யுருவகந் தீவகம்
பின்வரு நிலையே முன்ன விலக்கே
வேற்றுப் பொருள்வைப்பே வேற்றுமை விபாவனை
ஒட்டே யதிசயந் தற்குறிப் பேற்றம்
ஏது நுட்பம் இலேசம் நிரனிறை
ஆர்வ மொழிசுவை தன்மேம் பாட்டுரை
பரியா யம்மே சமாயிதம் உதாத்தம்
அரிதுண ரவநுதி சிலேடை விசேடம்
ஒப்புமைக் கூட்டம் மெய்ப்படு விரோதம்
மாறுபடு புகழ்நிலை புகழாப் புகழ்ச்சி
நிதரிசனம் புணர்நிலை பரிவருத் தனையே
வாழ்த்தொடு சங்கீ ரணம்பா விகம்இவை
ஏற்ற செய்யுட் கணியே ழைந்தே”  (நூற்பா – 27)

தன்மையும், உவமையும், உருவகமும், தீவகமும், பின்வருநிலையும், முன்ன விலக்கும், வேற்றுப்பொருள் வைப்பும், வேற்றுமையும், விபாவனையும், ஒட்டும், அதிசயமும், தற்குறிப்பேற்றமும், ஏதுவும், நுட்பமும், இலேசமும், நிரனிறையும், ஆர்வ மொழியும், சுவையும், தன்மேம்பாட்டுரையும், பரியாயமும், சமாயிதமும், உதாத்தமும், அவநுதியும், சிலேடையும், விசேடமும், ஒப்புமைக் கூட்டமும், விரோதமும், மாறுபடு புகழ்நிலையும், புகழாப் புகழ்ச்சியும், நிதரிசனமும், புணர்நிலையும், பரிவருத்தனையும், வாழ்த்தும், சங்கீரணமும், பாவிகமும் என இவை முப்பத்தைந்தும் மேற்கூறிய செய்யுட்கு அலங்காரமென்று சொல்லப்படும். அவையாவன:

01) தன்மையணி
02) உவமையணி
03) உருவகவணி
04) தீவக அணி
05) பின்வருநிலையணி
06) முன்னவிலக்கணி
07) வேற்றுப்பொருள் வைப்பணி
08) வேற்றுமையணி
09) விபாவனை அணி
10) ஒட்டணி
11) அதிசய அணி
12) தற்குறிப்பேற்ற அணி
13) ஏதுவணி
14) நுட்ப அணி
15) இலேச அணி
16) நிரல்நிறை அணி
17) ஆர்வமொழியணி
18) சுவையணி
19) தன்மேம்பாட்டுரை அணி
20) பரியாய அணி
21) சமாகிதவணி
22) உதாத்தவணி
23) அவநுதியணி
24) சிலேடையணி
25) விசேட அணி
26) ஒப்புமைக் கூட்டவணி
27) விரோதவணி
28) மாறுபாடுபுகழ்நிலையணி
29) புகழாப்பகழ்ச்சி அணி
30) நிதரிசன அணி
31) புணர்நிலையணி
32) பரிவருத்தனை அணி
33) வாழ்த்தணி
34) சங்கீரணவணி
35) பாவிக அணி

01) தன்மையணி
“எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்’   (நூற்பா – 28)

எவ்வகைப்பட்ட பொருளும், மெய்ம்மைக் கூறுபாட்டான் விளக்குஞ் சொன்முறையாற் பாடப்படுவது தன்மை என்னும் அலங்காரமாம்.

அதன் வகை
“அதுவே,
பொருள் குணஞ் சாதி தொழிலொடு புலனாம்” (நூற்பா – 29)
அத்தன்மை பொருளும், குணமும், இனமும், தொழிலும் என்னும் இவைபற்றித் தோன்றும்.
1. பொருட்டன்மை
“நீல மணிமிடற்ற னீண்ட சடைமுடியன்
நூலணிந்த மார்பன் நுதல்விழியன் – தோலுடையன்
கைம்மான் மறியன் கனன்மழுவன் கச்சாலை
எம்மான் இமையோர்க் கிறை”

கருங்குவளை போன்ற அழகிய மிடற்றினையும், முடியின் கண்ணே நீண்டிருக்கப்பட்ட சடையினையும், மார்பினிடத்தே யணியப்பட்ட முப்புரி நூலினையும், நெற்றியின்கட் சேர்ந்த விழியினையும், உடையாக அசைத்த தோலினையும், கரதலத் தேந்திய மானினையும், கனல் போன்ற மழுவினையும், திருக்கச்சாலை யென்னும் திருப்பதியினையும் உடையவனாய் எம்மை யாண்டுகொண்ட பெரியோன் இமையவர்க்குத் தலைவன்.

சிவபெருமானாகிய பரம்பொருளிடத்துள்ள பலவிதமான தன்மைகள் இப்பாடலில் கூறப்படுவதால், இது பொருள் தன்மையாயிற்று.

2. குணத் தன்மை
“உள்ளங் குளிர வுரோமஞ் சிலிர்த்துரையும்
தள்ளவிழி நீரரும்பத் தன்மறந்தாள் – புள்ளலைக்கும்
தேந்தா மரைவயல்சூழ் தில்லைத் திருநடஞ்செய்
பூந்தா மரைதொழுத பொன்”

நெஞ்சமானது குளிர மெய்ம்மயிரரும்பி மாற்றமுந் தளரக் கண்ணிலே புனல் தோன்றத் தன்னுருவத்தையும் மறந்தாள், புட்குலம் அலைக்காநின்ற மது நிறைந்த தாமரையையுடைய பழனஞ் சூழ்ந்த தில்லைப் பொதுவின்கண்ணே அழகுடைத்தாகிய கூத்தையாடுகின்ற சபாபதியின் பொலிவினையுடைய திருவடித் தாமரையை வணங்கின பொன்னையொப்பாள் என்றவாறு.

இது தில்லை நடராசப் பெருமானைத் தொழுதலால் ஆகும் இன்பத்தின் தன்மையைக் கூறுதலின் குணத்தன்மையாயிற்று.

3. இனத்தன்மை
‘பத்தித் தகட்ட கறைமிடற்ற பைவிரியும்
துத்திக் கவைநாத் துளையெயிற்ற – மெய்த்தவத்தோர்
ஆகத்தான் அம்பலத்தான் ஆரா வமுதணங்கின்
பாகத்தான் சாத்தும் பணி ‘

பத்தியாகிய வரைகள் பொருந்திய வயிற்றினை யுடையனவாய்க் கருமையாகிய மிடற்றினை யுடையனவாய்ப் படத்தின்கண் விரிந்த பொறி நிறத்தையும், இரண்டு பிரிவான நாவையும், புரையையுடைய பல்லினையும் உடையனவாயிருப்பன; மெய்யாகிய தவத்தினையுடையோர் அகத்தின்கண்ணுள்ளான், அம்பலத்திலே நிற்பான், பருகாத அமுதமன்ன உமாதேவியின் பாகத்தை யுடையான் சாத்தும் பணிகள்.

இது பாம்பு இனத்தின் பலவிதமான தன்மைகளைக் கூறுதலின் இனத்தன்மையாயிற்று

4. தொழிற்றன்மை
“சூழ்ந்து முரன்றணவி வாசந் துதைந்தாடித்
தாழ்ந்து மதுநுகர்ந்து தாதருந்தும் – வீழ்ந்தபெரும்
பாசத்தார் நீங்காப் பரஞ்சுடரின் பைங்கொன்றை
வாசத்தார் நீங்காத வண்டு”

பாச நீங்கிய முத்தர்களை விட்டு நீங்காத பரஞ்சோதியின் வாசனையையுடைய பசுமையாகிய கொன்றை மாலையைப் பிரியாத வண்டு, சூழ்ந்து பண்ணை முரன்று சேரச் சென்று மணத்தைச் செறிந்து மீதே பறந்து விரும்பி மதுவையுண்டு தாதைக் கோதா நிற்கும். இப்பாடல் வண்டு தாதருந்துதலாகிய தொழிற்கண் உள்ள பலவிதமான தன்மைகளைக் கூறுதலின், தொழில் தன்மையாயிற்று.

“தண்டியலங்காரம்” அணியிலக்கணம் பற்றி மிகவும் விரிவாக ஆராய்கின்றது. அவற்றை இங்கே அதன் சுவை குன்றாமலும், பொருள் குன்றாமலும் முடிந்தவரை எடுத்து வருகின்றேன்.

இலக்கண இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் எமது மொழியின் அருமை பெருமைகளையும் அதன் ஆழமான வரலாறுகளையும் அறிய விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.குற்றம் குறை ஏதுமிருந்தால் குறிப்பில் எழுதுங்கள், திருத்திக் கொள்ளுகிறேன்.

மீண்டும் சொல்லுகிறேன், நான் ஆசான் அல்ல!! இன்னும் நான் மாணவன்!! உங்களின் ஒருவன் தான்!!

அணியிலக்கணம் – தொடர்-27அணியிலக்கணம் – தண்டியலங்காரம் 

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 3

02) உவமையணி

‘அணி’ எனும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்.புலவன் செய்யுளில் தான் கூறவந்த கருத்தை அழகுறச் சொல்வதற்காகப் பயன்படுத்தும் உத்திமுறை ‘அணி’ எனப்படுகிறது. இவ்வணிகளுள் தலைமையான சிறப்புடையது உவமை அணி ஆகும். தொல்காப்பியர் ‘உவமை இயல்’ எனும்பகுதியில் உவமை அணியின் இலக்கணத்தைக் கூறியுள்ளார்.

பல்வேறு அணிகள் உவமை அணியிலிருந்து தோன்றியவை, அல்லது உவமை அணியின் சாயல் உடையவை எனலாம். உவமை அணியிலிருந்து உருவகம், வேற்றுமை, ஒட்டணிமுதலிய பல அணிகள் தோன்றின. இதனால் உவமை அணியைத்’தாய் அணி’ என்று கூறுவர்.

உவமை அணியின் இலக்கணம்
ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பலபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம்.

பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை,தொழில் ஒப்புமை, பயன்ஒப்புமை ஆகியவை காரணமாக உவமை அமையும். பண்பு உவமை, தொழில் உவமை, பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும்.

உவமை அணியின் இலக்கணத்தைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகிறது.
“பண்புந் தொழிலும் பயனுமென்(று) இவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்(து)
ஒப்புமை தோன்றச் செப்புவ(து) உவமை” (நூற்பா – 30)
பண்பு, தொழில், பயன் என்பன காரணமாக ஒன்றாகியும், பலவாகியும் வரும் பொருளோடு பொருள் இயைய வைத்து ஒப்புமை புலப்படப் பாடுவது உவமை யென்னும் அலங்காரமாம்.

உவமை அணியின் விளக்கம்
உவமை அணியின் இலக்கணத்தைச் சற்று விரிவாக நோக்குவோம். உவமை அணியில் நான்கு உறுப்புகள் இருப்பதைக் காணலாம். அவையாவன
1) உவமை அல்லது உவமானம்
2) பொருள் அல்லது உவமேயம்
3) ஒத்த பண்பு
4) உவமை உருபு

உவமானம், உவமேயம்
புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், ‘பொருள்’அல்லது ‘உவமேயம்’ எனப்படும். அப்பொருளை விளக்கவோ அழகுபடுத்தவோ அவர் இயைத்துக் கூறும் மற்றொரு பொருள்’உவமை’ அல்லது ‘உவமானம்’ எனப்படும்.

சான்று: “தாமரை போன்ற முகம்”
இங்குப் புலவர் விளக்கக் கருதிய பொருள் முகம். ஆகவே ‘முகம்’ உவமேயம்.
முகத்தை விளக்குவதற்காக அதனோடு அவர் இயைத்துக் கூறும் பொருள் ‘தாமரை’ ஆகவே தாமரை உவமானம்.

ஒத்த பண்பு
உவமேயத்துக்கும் உவமானத்துக்கும் பொதுவாக உள்ள இயல்பைப் புலவர் சுட்டிக் காட்டியிருப்பார். இதுவே ‘ஒத்த பண்பு’ எனப்படும்
சான்று: ”பவளம் போலும் செவ்வாய்”
வாய்க்கும் பவளத்துக்கும் ஒத்த தன்மையாகிய ‘செம்மை’
(செம்மை-வாய்) இங்குச் சுட்டிக் காட்டப்படுகிறது.

உவமை உருபு
உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, புரைய, ஒப்ப, மான போன்ற இவை உவமை உருபுகள் எனப்படும். ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்தலாவது;
ஒரு பொருளோடு ஒரு பொருளும்,
ஒரு பொருளோடு பல பொருளும்,
பல பொருளோடு பல பொருளும்,
பல பொருளோடு ஒரு பொருளும் இயையவைத்துப் பாடுவது என நான்கு வகையாகப் பொருள்கள் இயைத்து (ஒப்புமைப்படுத்தி)க் கூறப்படும்.

ஒரு பொருளொடு ஒரு பொருள்
சான்று:”செவ்வான் அன்ன மேனி”
இங்கு ‘வானம்’ என்ற ஒரு பொருள் ‘மேனி’ என்றஒரு பொருளுக்கு உவமை ஆயிற்று.

ஒரு பொருளொடு பல பொருள்
சான்று: “அவ்வான்
இலங்கு பிறை அன்ன விளங்கு வால் வை எயிறு”
இங்கு ‘பிறைச்சந்திரன்’ என்ற ஒரு பொருள் ‘பற்கள்'(எயிறு) என்ற பல பொருளுக்கு உவமை ஆயிற்று.

பல பொருளொடு பல பொருள்
சான்று:“சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப”
இங்குச் ‘சுறா மீன் கூட்டம்’ என்ற பல பொருள்தொகுதி, ‘வாள் ஏந்திய வீரர் குழாம்’ என்ற பல பொருள்தொகுதிக்கு உவமை ஆயிற்று.

பல பொருளொடு ஒரு பொருள்
சான்று: “பெரும்பெயர்க் கரிகாலன் முன்னிலைச் செல்லாப்
பீடு இல் மன்னர் போல
ஓடுவை மன்னா? வாடை நீ எமக்கே?”

(பீடு-பெருமை; ஓடுவை-ஓடுவாய்)
இங்கு, கரிகாலனை எதிர்த்து நிற்க மாட்டாமல் தோற்று ஓடிய பகை மன்னர்கள் பலர், தலைவன் வந்தவுடன் தலைவிக்கு முன் செயலற்று ஓடப்போகின்ற வாடையாகிய ஒரு பொருளுக்கு உவமை ஆயினர்.

மூவகை ஒப்புமைகள்
‘பண்பு, தொழில், பயன்’ என்னும் மூன்று ஒப்புமைத்தன்மை காரணமாக உவமை அணி தோன்றும் என அறிவோம். இங்கு இவற்றை விளக்கமாகக் காணலாம்.

பண்புவமை
ஒரு பொருளின் வடிவம், நிறம், சுவை, அளவுஆகியவை அப்பொருளின் ‘பண்பு’ எனப்படும். இப்பண்புகள்காரணமாக அமையும் உவமை பண்புஉவமை ஆகும்.

“பவளத்தன்ன மேனி” (பவளம் போன்ற உடல்)
“வேய்புரை பணைத்தோள்” (மூங்கில் போன்ற தோள்)
“பால் போலும் இன்சொல்” (பால் போன்ற இனிய சொல

மேற்கூறிய சான்றுகளில் முறையே பவளத்தின் நிறம் மேனிக்கும், மூங்கிலின் வடிவம் தோளுக்கும், பாலின் சுவை சொல்லுக்கும், உவமைகளாயின.

தொழிலுவமை
ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாகஅமையும் உவமை தொழில் உவமை எனப்படும்.

“அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமா வளவன்” (அரிமா-சிங்கம்: அணங்கு-துன்பம்: துப்பு-வலிமை)
சிங்கத்தைப் போன்று பகைவருக்குத் துன்பம் தரும் வலிமையினை உடைய திருமாவளவன் என்பது இவ்வடிகளின் பொருள். துன்பம் தருதல் என்ற தொழில் ஒப்புமை காரணமாக இது தொழில் உவமை ஆயிற்று.

பயனுவமை
“மாரி அன்ன வண்கைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே”
(வண்கை-கொடைத்தன்மை, காணிய-காண,சென்மே-செல்லுக)
மழையை ஒத்த கொடைத் தன்மையை உடையஆய் வள்ளலைக் காண்பதற்குச் செல்வாயாக என்பது இவ்வடிகளின் பொருள். மாரியால் விளையும் பயனும் வள்ளலின் கொடையால் விளையும் பயனும் ஒத்தலின் இது பயன் உவமைஆயிற்று.

உவமை அணியின் வகைகள்
உவமை அணி மொத்தம் இருபத்து நான்கு வகைகளை உடையது.
“அதுவே
விரியே தொகையே யிதர விதரம்
உரைபெறு சமுச்சயம் உண்மை மறுபொருள்
புகழ்தல் நிந்தை நியமம் அநியமம்
ஐயந் தெரிதரு தேற்றம் இன்சொல்
எய்திய விபரீதம் இயம்புதல் வேட்கை
பலபொருள் விகாரம் மோகம் அபூதம்
பலவயிற் போலி யொருவயிற் போலி
கூடா வுவமை பொதுநீங் குவமை
மாலை யென்னும் பால தாகும்” (நூற்பா – 31)

மேற்கூறப்பட்ட உவமையணியலங்காரம்

01 – விரியுவமையும்
02 – தொகை யுவமையும்
03 – இதரவிதரவுவமையும்
04 – சமுச்சய வுவமையும்
05 – உண்மை யுவமையும்
06 – மறுபொருளுவமையும்
07 – புகழுவமையும்
08 – நிந்தையுவமையும்
09 – நியமவுவமையும்
10 – அநியமவுவமையும்
11 – ஐயவுவமையும்
12 – தெரிதருதேற்ற வுவமையும்
13 – இன்சொலுவமையும்
14 – விபரீதவுவமையும்
15 – இயம்புதல் வேட்கை யுவமையும்
16 – பல பொருளுவமையும்
17 – விகார வுவமையும்
18 – மோக வுவமையும்
19 – அபூத வுவமையும்
20 – பலவயிற்போலி யுவமையும்
21 – ஒருவயிற்போலி யுவமையும்
22 – கூடா வுவமையும்
23 – பொதுநீங்குவமையும்
24 – மாலை யுவமையும் என்னும் இருபத்து நான்கு பாகுபாடு உடையதாம்.

அணியிலக்கணம் – தொடர்-28அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 4

உவமையணியின் 24 உப பிரிவுகள்

(1) விரியுவமை என்பது பண்பு முதலியன விரிந்து நிற்பது
“பால்போலும் இன்சொல்; பவளம்போல் செந்துவர்வாய்;
சேல்போல் பிறழும் திருநெடுங்கண்; – மேலாம்
புயல்போல் கொடைக்கைப் புனல்நாடன் கொல்லி
அயல்போலும் வாழ்வ(து) அவர்”

(துவர்-பவளம்; சேல்-சேல்மீன்; புயல்-மழை)
பால் போன்ற இனிய சொல்லையும், பவளத்தைப் போன்றசிவந்த வாயினையும், சேல் மீன்களைப் போலப் பிறழ்கின்றஅழகிய கண்களையும் உடைய அவர் (தலைவி) வாழும் இடம், மழை போன்ற கொடைக் கையை உடைய சோழனின்கொல்லி மலைச் சாரலின் பக்கத்தே உள்ளது போலும், என்றுதலைவன் பாங்கனிடம் கூறுகிறான்.

இப்பாடலில் நான்கு உவமைகள் பயின்று வருகின்றன. இவற்றில் முறையே ‘இனிமை’, ‘செம்மை’ என்ற பண்புஒப்புமையும், ‘பிறழ்தல்’ என்ற தொழில் ஒப்புமையும், ‘கொடை’என்ற பயன் ஒப்புமையும் வெளிப்படையாக வந்துள்ளமைகாணலாம். ஆகவே இது விரி உவமை ஆகும்.

(2) தொகையுவமை என்பது பண்பு முதலியன தொக்குநிற்பது
ஒப்புமைத் தன்மை தொக்கி (மறைந்து) வருவதுதொகை உவமை.

“தாமரை வாண்முகத்துத் தண்டரளம் போன்முறுவல்
காமரு வேய்புரைதோட் காரிகையீர் ! – தேமருவும்
பூங்குழலின் வாசப் பொறைசுமந்து நொந்ததோ
பாங்குழலுந் தென்றற் பரிசு”

தாமரை போன்ற ஒளியையுடைய முகத்தினையும், குளிர்ந்த முத்துப் போன்ற நகையினையும் , அழகு மருவிய வேய் போன்ற தோளினையும் உடைய மாதரீர்! உம்முடைய பக்கத்திலே யுலாவுகின்ற தென்றலின் தன்மை , உம்முடைய தேன் பொருந்திய பூவினையுடைத்தாகிய குழலின்கண் உண்டாகிய நறுநாற்றப் பாரத்தைத் தாங்கிக்கொண்டு வருகின்ற வருத்தந் தானோ மெல்லிய வுருவுடைத்தானது ? சொல்லுவீராக.

இப்பாடலில் ‘தாமரை போல் முகம்’ என்ற உவமையில் ‘செம்மை’ என்ற நிறப்பண்பு மறைந்துள்ளது.

‘தண்தரளம் போல்முறுவல்’ என்ற உவமையில் ‘வெண்மை’ என்ற நிறப்பண்பு மறைந்துள்ளது.

‘வேய் புரை தோள்’ என்ற உவமையில் வடிவமாகிய பண்பும் மறைந்து வந்துள்ளது.

இவ்வாறு ஒப்புமைக்குரிய பண்புகளைச் சுட்டிக் காட்டாததால் இது தொகைஉவமை ஆயிற்று.

முகத்திற்குத் தாமரையையும், முறுவலுக்கு முத்தையும், தோளிற்கு மூங்கிலையும் உவமையாகக் கூறப்பட்டிருப்பினும், இன்ன தன்மையால் உவமை கூறப்பட்டது என்னும் பொதுத்தன்மையை மறைத்துக் கூறியுள்ளமையால் இது தொகையுவமையாயிற்று.

உவமை, பொருள், உவம உருபு, பொதுத்தன்மை ஆகிய நான்கனுள் ஒன்றேனும் இரண்டேனும் மூன்றேனும் தொக்கு வருவது தொகையுவமை என்பர் தண்டியலங்காரசார ஆசிரியர்.

தொகையுவமையைத் தொல்காப்பியர் ‘சுட்டிக்கூறா உவமை’ என்பர் .

(3) இதரவிதர வுவமை என்பது பொருள் ஒருகால் உவமையாயும் , உவமை ஒருகாற் பொருளாயும் ஒருதொடர்ச்சிக்கண்ணே வருவது
ஒரே பாடலில் உவமேயத்தை உவமானமாகவும்,  உவமானத்தை உவமேயமாகவும் தொடர்ச்சியாகக் கூறுவது இதர விதர உவமை ஆகும்.

அதாவது, முதலில் உவமானமும் உவமேயமுமாகச் சொல்லப்பட்ட பொருள்களையே பின்னர்உவமேயமும் உவமானமுமாக மாற்றிச் சொல்லுதல்.

இவ்வாறுசொல்வதன் நோக்கம், இப்பொருள்களுக்கு ஒப்புமையாகக்கூடிய மூன்றாவது பொருள் எதுவும் இல்லை எனக் குறிப்பதுஆகும்.

இதரவிதரம் என்ற தொடருக்கு ‘ஒன்றற்கொன்று’ என்பதுபொருள்.

“களிக்கும் கயல்போலும் நும்கண்; நும்கண்போல்
களிக்கும் கயலும்; கனிவாய்த் தளிர்க்கொடியீர்!
தாமரைபோல் மலரும் நும்முகம்; நும்முகம்போல்
தாமரையும் செவ்வி தரும்”

தளிரொடு கூடிய கொடி போன்ற நங்கையீர்!
கயல்மீன்களைப் போல நும் கண்கள் களிக்கின்றன;
நும்கண்களைப் போலக் கயல் மீன்களும் களிக்கின்றன;
தாமரைபோல் நும் முகம் மலர்ந்துள்ளது;
நும் முகம் போலத் தாமரையும்மலர்ந்து அழகு தருகின்றது.

இதரவிதரம் – ஒன்றற்கொன்று. கண்ணிற்குக் கயலை உவமை கூறிப் பின் அக்கயலுக்கே கண்ணை உவமை கூறுகின்றமையும் முகத்திற்குத் தாமரையை உவமை கூறிப் பின் அத்தாமரைக்கே முகத்தை உவமை கூறுகின்றமையும் இதரவிதரமாம்.

முன்னிரண்டடி ஒருதொடராயும், பின்னிரண்டடி ஒரு தொடராயும் வருதலின் ஒரு தொடர்ச்சிக் கண்ணே இவ்வுவமை வந்ததாயிற்று.

(4) சமுச்சய வுவமை என்பது இதனை யொப்பது இதனாலேயன்றி இதனாலும் ஒக்கும் என்பது.
“அளவே வடிவொப்ப தன்றியே பச்சை
இளவேய் நிறத்தானு மேய்க்கும் – துளவேய்
கலைக்குமரி போர்துளக்குங் காரவுணர் வீரம்
தொலைக்குமரி யேறுகைப்பாள் தோள்”

துழாய் மாலையைச் சூடிய கலைமடந்தையாகிய கன்னி, போரிடத்துப் பகைவரை நடுக்கஞ் செய்யவற்றாய வெகுளியினையுடைய அசுரருடைய ஆண்மையைக் கெடுக்கும் சிங்கப் போத்தை வாகனமாக வுடையாள் தோள்களைப் பசிய இளவேயானது அளவினானும் வடிவினானும் ஒப்பதன்றிப் பசுமை நிறத்தானும் ஒக்கும் என்றவாறு.

வெற்றித் திருவின் தோள்களை மூங்கிலானது அளவினாலும் வடிவினாலுமேயன்றி நிறத்தினாலும் ஒக்கும் என்பதால் இது சமுச்சயவுவமையாயிற்று.

சமுச்சயம் – இரண்டு மூன்று முதலியவைகளின் கூட்டம்.

ஒரு பொருளோடு ஒரு பொருள் உவமையாங்கால் ஒரு காரணத்தாலன்றி ஈண்டு இரண்டு மூன்று காரணங்களாலும் உவமையாயிற்று.

(5) உண்மை யுவமை என்பது உவமையைக் கூறி மறுத்துப் பொருளினையே கூறி முடிப்பது.

“தாமரை யன்று முகமேயீ தீங்கிவையும்
காமருவண் டல்ல கருநெடுங்கண் – தேமருவு
வல்லியி னல்லள் இவளென் மனங்கவரும்
அல்லி மலர்க்கோதை யாள்”

இது தாமரை மலரன்று முகமே; இவையும் அழகு மருவிய வண்டல்ல, கறுத்து நீண்ட கண்களே; தேன் மருவப்பட்ட கொடியல்லள் இவள் மடந்தையே. இத்தன்மைத்தாகிய அவயவங்களுடைய இவள் என்னுள்ளங்கவரும் அகவிதழ்களையுடைய பூவாற் செய்யப்பட்ட மாலையினையுடையாள்

முகம், கண், பெண், ஆகிய மூன்று பொருள்களுக்கும் முறையே; தாமரை, வண்டு, வல்லி ஆகிய மூன்று உவமைகளைக் கூறிப் பின்பு மறுத்துச் சொல்லப் பட்டமையால் இது உண்மை யுவமையாயிற்று.

(6) மறுபொரு ளுவமை என்பது முன்னர் வைத்தபொருட்கு நிகராவதொரு பொருளைப் பின்னர் வைப்பது .
“அன்னைபோல் எவ்வுயிருந் தாங்கும் அனபாயா !
நின்னையார் ஒப்பார் நிலவேந்தர் – அன்னதே
வாரி புடைசூழ்ந்த வையகத்திற் கில்லையால்
சூரியனே போலுஞ் சுடர்”

தாயினை யொப்பாக எவ்வகைப்பட்ட உயிர்களையும் தாங்கும் அனபாயனே!
நிலத்திலுண்டாகிய வேந்தரில் உன்னை யொப்பாராருமில்லை; அதுபோலக் கடல் சூழ்ந்த வையகத்திற்குச் சூரியனை யொக்குஞ் சுடரும் இல்லை.

இப்பாடலில் முன்னர் வைத்த பொருள் அனபாயன். பின்னர் வைத்த பொருள் சூரியன்.

உலகிற்கு அனபாயனைப்போல் தாங்குநர் எவரும் இல்லையாதல்போல, இருளை நீக்குதற்கும் சூரியனையொத்த சுடர் இல்லை எனக் கூறுதலின் இது மறுபொருளுவமை யாயிற்று.

(7) புகழுவமை என்பது உவமையைப் புகழ்ந்து உவமிப்பது .
“இறையோன் சடைமுடிமேல் எந்நாளுந் தங்கும்
பிறையேர் திருநுதலும் பெற்ற – தறைகடல்சூழ்
பூவலயந் தாங்கும் அரவின் படம்புரையும்
பாவைநின் னல்குற் பாப்பு”

ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட நிலப்பரப்பைத் தாங்குகின்ற சேடனுடைய படப்பரப்பை ஒக்கின்றது உனது அல்குல்; அதுவேயன்றி, முக்கட் கடவுள் முடியினைப் பிரியாது எந்நாளும் தங்கும் பிறையினுடைய அழகினை நின்னுடைய நுதலும் பெற்றது; ஆதலால், பாவாய்! நின்னுருவத் தன்மையிருந்தபடியென்?

நுதலுக்குக் கூறப்பட்ட பிறையும், அல்குலுக்குக் கூறப்பட்ட அரவின் படமும் முறையே ‘இறையோன் சடைமுடிமேல் எந்நாளும் தங்கும்’ என்றும், ‘அறைகடல்சூழ் பூவலயந் தாங்கும்’ என்றும் புகழ்ந்து உவமிக்கப் பட்டிருத்தலின் இது புகழுவமை யாயிற்று.

(8) நிந்தையுவமை என்பது உவமையைப் பழித்து உவமிப்பது.
“மறுப்பயின்ற வாண்மதியு மம்மதிக்குத் தோற்கும்
நிறத்தலரு நேரொக்கு மேனும் – சிறப்புடைத்துத்
தில்லைப் பெருமா னருள்போல் திருமேனி
முல்லைப் பூங்கோதை முகம்”

தில்லைக்கண் கூத்தாடுகின்ற பெரியோன் அருளையொத்த அழகிய மேனியினையுடைய, முல்லைப் பூவாற் செய்யப்பட்ட கோதையினையுடையாள் முகமானது மறுப்பிரியாத ஒளியினையுடைத்தாகிய மதியமும், அம்மதியத்திற்குக் கருகுகின்ற தாமரை மலரும் உவமிக்கப் பொருந்துமெனினுஞ் சிறப்புடையது

முகத்திற்கு உவமையாகிய மதியையும், தாமரையையும் முறையே களங்கம் உடையது என்றும், மதிக்குத் தோற்கும் என்றும் பழித்துப் பின் ‘நேரொக்குமேனும்’ என்பதால் உவமித்துக் கூறுவதால் இது நிந்தை யுவமையாயிற்று. இரவில் தாமரை குவிந்திருத்தல் நோக்கி ‘மதிக்குத் தோற்கும்’ என்றார்.

(9) நியம வுவமை என்பது இன்னதற்கு இன்னதே உவமையாம் எனத் தேற்றேகாரம் புணர்த்துத் துணிந்து சொல்லுவது.
“தாதொன்று தாமரையே நின்முகம் ஒப்பதுமற்
றியாதொன்று மொவ்வா திளங்கொடியே! – மீதுயர்ந்த
சேலே பணியப் புலியுயர்த்த செம்பியர்கோன்
வேலே விழிக்கு நிகர்”

இளங்கொடியை ஒப்பாய்! எல்லாருடைய கொடிக்கு மேலாகவுயர்ந்த பாண்டியனுடைய சேற்கொடி தாழத், தனது புலிக்கொடியை யுயர்த்த சோழனுடைய வேலே விழிக்கு நிகராவது; தாதுக்கள் பொருந்தியிருக்கப்பட்ட தாமரை மலரே நின்முகத்தை ஒப்பது; இவையல்லது உன் விழியினையும் உலகத்துண்டாகிய யாவும் ஒவ்வா.

முகத்திற்கும் விழிக்கும் உவமை கூறுங்கால் முறையே தாமரையே நின்முகம் ஒப்பது என்றும், வேலே விழிக்கு நிகர் என்றும் தேற்றேகாரம் புணர்த்துத் துணிந்து சொல்லியிருப்பதால் இது நியமவுவமையாயிற்று.

(10) அநியம வுவமை என்பது நியமித்த வுவமையை விலக்கிப் பிறிதும் இப்பெற்றியனவாம் என்பது.
“கௌவை விரிதிரைநீர்க் காவிரிசூழ் நன்னாட்டு
மௌவல் கமழுங் குழன்மடவாய்! – செவ்வி
மதுவார் கவிரேநின் வாய்போல்வ தன்றி
அதுபோல்வ துண்டெனினு மாம்”

ஆரவாரத்தையும் பரந்த திரைகளையும் உடைத்தாகிய நீரையுடைய காவிரி சூழ்ந்த நன்னாட்டின்கண் மௌவற் பூவாற் செய்த மாலையானது நாறப்பட்ட குழலினையுடைய மடவாய்! செவ்வியும் தேனும் நிறைந்த முருக்கிதழே நின்வாயை யொப்பது ; அதுவன்றி, அப்பூப் போல்வது உலகத்து உண்டாயினும் நின்வாயை யொக்கும்.

வாய்க்கு முருக்கிதழே உவமை கூறத்தகும் என முன்னர் நியமித்துப், பின்பு அம்முருக்கிதழ் போன்ற பிற பொருள்களுண்டெனினும் அதற்குவமையாகும் எனக் கூறப்படுதலின் இது அநியம வுவமையாயிற்று.

(11) ஐயவுவமை என்பது உவமையையும் பொருளையும் ஐயுற்று உரைப்பது.
“தாதளவி வண்டு தடுமாறுந் தாமரைகொல் !
மாதர் விழியுலவு வாண்முகங்கொல் ! – யாதென்
றிருபாற் கவர்வுற் றிடையூச லாடி
ஒருபாற் படாதென் னுளம்”

தாதைக் கலந்து வண்டுகள் சூழப்பட்ட தாமரை மலரோ காதலைச் செய்கின்ற விழியுலவுகின்ற ஒளியினையுடைய முகமண்டலமோ ! என்னென்று என் மனமானது ஊசலைப்போலாடி இருதலைப்பட்டு ஒன்றன்கண் துணிகின்றதில்லை

தாமரையாகிய உவமையையும், முகமாகிய பொருளையும் உறுதியாகத் தெரியாது இதுவோ, இதுவோ என ஐயுற்றுரைத்தலின் இது ஐயவுவமையாயிற்று.

(12) தெரிதருதேற்ற வுவமை என்பது ஐயுற்றதனைத் தெரிந்து துணிவது.
“தாமரை நாண்மலருந் தண்மதியால் வீறழியும்
காமர் மதியுங் கறைவிரவும் – ஆமிதனால்
பொன்னை மயக்கும் புனைசுணங்கி னார்முகமே
என்னை மயக்கு மிது”

நாட்காலை மலருந் தாமரையும் குளிர்ந்த மதியினாலே அழகு கெடும் ; அழகிய மதியும் களங்கத்தோடு கூடியிருக்கும் ; ஆதலால், என்னை மயக்கஞ் செய்த இது, பொன்னையொப்பாக அலங்கரிக்கப்பட்ட சுணங்கினையுடையாளுடைய முகமே!

முகத்தைக் கண்டு இது தாமரையோ, மதியோ என முன்னர் ஐயுற்றுப் பின்னர், அது தாமரையேல் மதியத்தைக்கண்டு குவியும், மதியேல் களங்கம் உடைத்தாயிருக்கும்.

இவ்விரண்டும் இன்றி எஞ்ஞான்றும் மலர்ச்சியும், களங்கமின்றியும் இருத்தலின் முகமே எனத்தெளிந்து உரைக்கப்பட்டுள்ளமையின் இது தெரிதருதேற்ற உவமையாயிற்று.

சுன்னாகம் திரு.குமாரசாமிப் புலவர் அவர்கள் இதனைத் ‘தேற்றவுவமை’ என்பர். உண்மையுவமை மயக்கவுணர்வு காரணமாகத் தோன்றும், இது ஐயவுணர்வு காரணமாகத் தோன்றும் என வேற்றுமை காண்பர் அவர்.


அணியிலக்கணம் – தொடர்-29அணியிலக்கணம் – 
தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 4

உவமையணியின் 24 உப பிரிவுகள் (இரண்டாம் பிரிவு)


(13) இன்சொலுவமை என்பது பொருளினும் யுவமைக்கொரு மிகுதி தோன்றக் கூறியுவமித்து, இன்ன மிகுதியையுடைத்தேனும் ஒப்பதன்றிச் சிறந்ததன்று என்பது.
“மான்விழி தாங்கு மடக்கொடியே ! நின்வதனம்
மான்முழுதுந் தாங்கி வருமதியம் – ஆனாலும்
முற்றிழை நல்லாய் ! முகமொப்ப தன்றியே
மற்றுயர்ச்சி யுண்டோ மதிக்கு”

நிறைந்த அணிகளையுடைய நல்லாய் ! நின்னுடையமுகமானது மானின்விழி யொன்றனையே தாங்கா நின்றது ; ஆகாயத்தின்கண் வருகின்ற மதியானது மானின் அவயவ முழுதும் தாங்கா நின்றது ; இப்படி முழுவதுந் தாங்கினும் நின் முகத்தை யொப்பதன்றியே விசேடமுடைத்தாகவற்றே அம்மதியம்?

இதன்கண் கூறப்பட்ட பொருள் முகம். உவமப் பொருள் மதியம். முகம் மானின் விழியை மட்டுமே கொண்டுள்ளது. மதியமோ மான் வடிவம் முழுவதையும் தாங்கி நிற்கின்றது.

இவ்வாற்றான் முகத்தினும் மதியம் உயர்ந்திருப்பினும், அம்மதியமும் முகத்திற்கு உவமையாதலன்றி வேறு உயர்வு கூறப்படுதற்குண்டோ ? எனக்கூறுதலின் இது இன்சொல் உவமையாயிற்று.

(14) விபரீதவுவமை என்பது மேற்றொட்டு உவமையாய் வருவதனைப் பொருளாக்கிப், பொருளாய் வருவதனை யுவமையாக்கியுரைப்பது.
“திருமுகம் போல்மலருஞ் செய்ய கமலம்
கருநெடுங்கண் போலுங் கயல்கள் – அரிவை
இயல்போலு மஞ்ஞை யிடைபோலும் கொம்பர்
மயல்போலும் யாம்போம் வழி”
அரிவையுடைய திருமுகத்தையொப்ப மலரும் சிவந்தகமலம்; கறுத்த நெடிதாகிய கண்கள் போலும் கயல்கள்; சாயல்போலும் மயில்; மருங்குல் போலும் கொம்பு; ஆதலால் இவ்வழியில் யாம்போகின்ற போக்கு மயல் போலும்.

பண்டுதொட்டுப் பெண்களின் முகத்திற்குத் தாமரையையும், கண்களுக்குக் கயலையும், சாயலுக்கு மயிலையும், இடைக்குக் கொம்பையும் உவமை கூறல் இயல்பு.

அவ்வியல்பை மாற்றித் தாமரை, கயல், மயில், கொம்பு ஆகிய உவமைப்பொருள்களைப் பொருளாக்கியும் முகம், கண், சாயல், இடை ஆகிய பொருள்களை உவமையாக்கியும் கூறப்பட்டிருத்தலின் இது விபரீத வுவமையாயிற்று.

(15) இயம்புதல் வேட்கை யுவமை என்பது பொருளை இன்னது போலுமென்று சொல்ல வேட்கின்றது என் உள்ளம் என்பது.
“நன்றுதீ தென்றுணரா தென்னுடைய நன்னெஞ்சம்
பொன்றுதைந்த பொற்சுணங்கிற் பூங்கொடியே ! – மன்றல்
மடுத்ததைந்த தாமரைநின் வாண்முகத்திற் கொப்பென்
றெடுத்தியம்ப வேண்டுகின்ற தின்று”
பொன் துதைந்த போலும் அழகிய சுணங்கினையும் பொலிவினையும் உடைத்தாய்க் கொடியை யொப்பாய் ! நன்று தீது என்பதனை ஒன்றுந்தெளியாது நறுநாற்றத்தை யுடைத்தாய் மடுவிடத்து நின்று தயங்கா நின்ற தாமரை , நின் ஒளியினையுடைத்தாகிய முகத்திற்கு ஒப்பாம் என்று எடுத்துரைக்க வேண்டுகின்றது இன்று என் நல்ல நெஞ்சம் என்றவாறு .

இதன்கண் எடுத்துக் கூறப்படும் பொருள் முகம் , நன்றென்றோ தீதென்றோ உணராமல் இம்முகத்திற்குத் தாமரையை ஒப்பாகச்சொல்ல வேண்டுகின்றது என் உள்ளம் என்று கூறப்பட்டிருத்தலின் இது இயம்புதல் வேட்கையுவமை யாயிற்று.

(16) பலபொருளுவமை என்பது ஒருபொருட்குப் பல வுவமை காட்டுவது.
“வேலுங் கருவிளையு மென்மானுங் காவியும்
சேலும் வடுவகிருஞ் செஞ்சரமும் – போலுமால்
தேமருவி யுண்டு சிறைவண் டறைகூந்தற்
காமருவு பூங்கோதை கண்”
மதுவை விரும்பியுண்டு சிறைவண்டு முரல்கின்ற கூந்தலையும் , அழகிய மாலையையும் உடையாளுடைய கண்களானவை வேலையும், கருவிளை மலரையும் மிருதுவாகிய நோக்கத்தையுடைய மானையும், காவி மலரையும், சேலையும், மாவடுவையும்,செவ்விய சரத்தினையும் போலும் என்றவாறு.


இதன்கண் கண்ணாகிய ஒரு பொருளுக்கு வேல்,கருவிளை மலர், மான், நீலம், மீன், மாவடு, அம்பு ஆகிய பல பொருள்களையும் உவமை கூறப்பட்டித்தலின் இது பல பொருளுவமை யாயிற்று.
(17) விகார வுவமை என்பது ஓர் உவமையை விகாரப்படுத்தி யுவமிப்பது.
“சீத மதியி னொளியுஞ் செழுங்கமலப்
போதின் புதுமலர்ச்சி யுங்கொண்டு-வேதாதன்
கைம்மலரா லன்றிக் கருத்தால் வகுத்தமைத்தான்
மொய்ம்மலர்ப்பூங் கோதை முகம்”
செறிந்த மலர்களாற் பொலிவு பெற்ற கூந்தலினையுடையாள் முகத்தினைப் பிரமன், குளிர்ந்த மதியின்கண் உண்டாகிய ஒளியினையும், செழித்த கமலப்போதில் உண்டாகிய புதிய மலர்ச்சியையுங் கொண்டு, தன் கைத்தாமரையினாலன்றித் தன்னுள்ளக் கருத்தால் வகுத்து அமைத்தான் என்றவாறு.

இப்பாடலில், முகத்திற்கு உவமையாகக் கூறப்படும் மதி, மலர் ஆகிய இரண்டையும் முழுமையாக உவமமாக்கிக் கூறாது அவற்றின் ஒளி,மலர்ச்சி ஆகிய இரண்டை மட்டுமே பிரித்து உவமையாகக் கூறப்பட்டிருத்தலின் இது விகாரவுவமை யாயிற்று. மதியினின்று ஒளியையும், மலரினின்று மலர்ச்சியையும் பிரித்தல் விகாரமாம்.

(18) மோகவுவமை என்பது ஒரு பொருள்மேல் எழுந்த வேட்கையான் வந்த உள்ள மயங்கந் தோன்ற உரைப்பது.
“கயல்போலு மென்றுநின் கண்பழிப்பல் கண்ணின்
செயல்போற் பிறழுந் திறத்தாற் – கயல்புகழ்வல்
ஆரத்தா னோமருங்கு லந்தரள வாண்முறுவல்
ஈரத்தா லுள்வெதும்பும் யான்”
முத்தினாற் செய்யப்பட்ட பூணால் வருந்தாநின்ற மருங்கு லினையும் அழகிய முத்தினுடைய ஒளிபோன்ற முறுவலினையு முடையாய்! உன்னுடைய குறிப்பினால் மனமழியும் யான், கயல்போலுமென்று நின் கண்ணினைப் பழிப்பன்: நின் கண்போற் பிறழுந் திறப்பாட்டாற் கயலைப் புகழ்வன்.

இது கண்ணாகிய ஒரு பொருளை அதற்கு உவமையான கயலுடன் மயக்கந் தோன்ற உவமித்துக் கூறலின் மயக்கவுவமை யாயிற்று.

கண், கயல்போலுள்ளன எனப் பழித்துப் பின் அக்கயல் கண்போல் உள்ள தெனப் புகழ்தல், கண்ணாகிய அப்பொருள்மேல் எழுந்துள்ள மயக்கத் தாலாம்.  இவ்வாற்றான் கண்ணிற்கும் கயலுக்கும் ஒப்புமை உண்டு எனத் தெரிதலின் உவமையுமாயிற்று. மோகம் – மயக்கம்.

(19) அபூதவுவமை என்பது முன்புஇல்லதனை உவமையாக்கி உரைப்பது.
“எல்லாக் கமலத் தெழிலுந் திரண்டொன்றின்
வில்லேர் புருவத்து வேனெடுங்கண் – நல்லீர்!
முகம்போலு மென்ன முறுவலித்தார் வாழும்
அகம்போலுமெங்க ளகம்”
வில்லினை யொத்த புருவத்தினையும், வேல் போன்ற நெடிய கண்ணினையு முடைய நல்லீர்! உம்முடைய முகத்தினை யொக்கும் எங்கு முள்ள கமலப்பூக்களின் செவ்வியும் செறிந்தொன்றுமாயின் என, முறுவலைச் செய்தார் மருவி வாழும் இடம் போலும் எங்கள் உள்ளம்.

விகாரவுவமையோடு இதனிடை வேற்றுமை என்னவெனில், விகாரவுவமை யென்பது பிறரான் விகாரப் பட்டதாகக் கொண்டு அதற்கு உவமையாக்கி யுரைப்பது. இது அவ்வாறன்றி என்றறிக.

அபூதம் – இல்லாதது. தாமரையும் அதன் எழிலும் உள்ள பொருளே. எனினும், எல்லாத் தாமரைகளின் அழகும் சேர்ந்து ஒன்றுதல் இல்பொருளாம். அவ்வழகு அனைத்தும் சேர்ந்து ஒன்றின் முகத்தை யொக்கும் எனவே இது அபூதவுவமையாயிற்று.

இதனை, ‘இல்பொருளுவமை’என்றும் வழங்குவர். விகார வுவமையில், மதியத்திலிருந்து ஒளியையும், மலரிலிருந்து மலர்ச்சியையும் வேறுபடுத்திப் பிரமன் இப்பெண்ணின் முகத்தை அமைத்தான் எனக் கூறப்பட்டள்ளது.

(20) பலவயிற்போலி யுவமை என்பது ஒரு தொடர்மொழிக்கண் பல உவமை வந்தால், வந்த உவமைதோறும் உவமைச் சொல் தோன்றப் புணர்ப்பது.
“மலர்வாவி போல்வரான் மாதர் கமல
மலர்போலு மாதர் வதனம்-மலர்சூழ்
அளிக்குலங்கள் போலு மளக மதனுட்
களிக்குங் கயல்போலுங் கண்”
கமல மலர்ந்த வாவி போல்வார் மாதர்; கமல மலர் போலும் மாதர் வதனம் மலர் சூழ்ந்த வண்டின் குலம் போலும் அளகம்; அதனுள் களித்து உகளாநின்ற கயல்போலுங் கண்கள்.


இதன்கண் அடிதொறும் உவமிக்கப்பட்டு, அங்ஙனம் உவமிக்கப்பட்ட இடங்களிலெல்லாம் போல என்னும் உரும உருபு வந்தமையின் இது பலவயிற்போலி யுவமை யாயிற்று.
(21) ஒருவயிற்போலி யுவமை என்பது ஒரு தொடர் மொழிக்கண் பலவுவமை வந்தால், அவ்வந்த உவமைதோறும் உவமைச்சொற் புணராது,ஓர் உவமைச் சொற் புணர்ப்பது.
“நிழற் கோப மல்க நிறைமலர்ப்பூங் காயா
சுழற்கலவ மேல்விரித்த தோகை – தழற்குலவு
தீம்புகை யூட்டுஞ் செறிகுழலார் போலுங்கார்
யாம்பிரிந்தோர்க் கென்னா மினி”
காயாமலரின் நிழலின்கண் இந்திர கோபஞ் செறிய, அப்பொலிவினை யுடைய காயாவின் நிறைந்த மலரின் சூழலிலே தன் கலாபத்தை விரித்த மயிலானது தழலின்கண் தோன்றிய நறும்புகையினையூட்டும் செறிந்த குழலினையுடைய மடவாரைப் போலுங் கார்காலம் ; யாம் பிரிந்து போகப்பட்டாருக்கு என்னாம் இனி?

நிழல் – காயா நிழல். கோபம் – இந்திரகோபம். அல்க – தங்க.
சுழல் – தழைப்பு. கலவம் – பீலி. விரித்தல் – ஆடுதல். தோகை – மயில். குலவல் – உண்டாதல். தீம்புகை – அகிற்புகை. கார்-கார்ப்பருவம்.

ஒரு தொடர்மொழிக்கண் – ஒரு நிகழ்ச்சி பற்றிய வருணனையிடத்து. இப்பாடலில் கார்காலம் பற்றிய நிகழ்ச்சி கூறப்படுகின்றது.  அக்கார்காலத்தைக் கண்டு மகிழும் மயிலுக்குத் தழற்புகை யூட்டும் பெண்களை உவமையாகக் கூறுகின்ற பொழுது, மயில் பெண்களை ஒக்கும் என்றவிடத்து மட்டும் ‘போலும்’ என்ற உருபை விரித்து, ஏனைய இடங்களில் எல்லாம் அவ்வுருபை விரியாமையின் இது ஒருவயிற்போலியுவமை யாயிற்று.

இந்திர கோபத்தை நெருப்பாகவும், மயில் தோகையைத் தீம்புகையாகவும் உவமிக்கப்பட்ட பொழுது அவ்வுவம வுருபு இல்லாதிருத்தல் காண்க. ஒருவயின்-ஓரிடத்து மட்டும்.

(22) கூடாவுவமை என்பது ஒரு பொருட்குக் கூடாதவதனைக் கூடுவதாகக்கொண்டு அதனை ஒன்றற்கு உவமை யாக்கி உரைப்பது.
“சந்தனத்திற் செந்தழலுந் தண்மதியில் வெவ்விடமும்
வந்தனவே போலுமால் நும்மாற்றம்- பைந்தொடியீர்!
வாவிக் கமல மதிமுகங்கண் டேக்கறுவார்
ஆவிக் கிவையோ வரண்”
பைந்தொடியீர்! சந்தனத்தின்கண் செந்தழலும், குளிர்ந்த மதியினிடத்து வெவ்விய விடமும் பிறந்தாற்போலும், நும்முடைய வார்த்தைகள்; ஆனால், குளிர்ந்த வாவியிடத்துக் கமலமலரும் மதியமும் போலும் நும்முகங்கண்டு ஏக்கறுவார் ஆவிக்கு இவையோ காவல். ஏக்கறல் – ஆசைப்படுதல்.

சந்தனத்தில் நெருப்பும், மதியில் விடமும் தோன்றக் கூடாதன. இவற்றைத் தோழியிடமிருந்து வந்த சொல்லிற்கு உவமை கூறினமையின் கூடாவுவமை யாயிற்று. இதனைப் பாங்கியிற் கூட்டத்துத் தலைவியும் தோழியும் ஒருங்கிருந்த வழித் தலைவன் இரந்து பின்னிற்க, அவனைத் தோழி அகற்ற ஆற்றாத தலைவன் கூறிய கூற்றாகக் கொள்க.

(23) பொது நீங்குவமை என்பது உவமையைக் கூறி மறுத்துப் பொருள்தன்னையே உவமையாக உரைப்பது.
“திருமருவு தண்மதிக்குஞ் செந்தா மரையின்
விரைமலர்க்கு மேலாந் தகையால்-கருநெடுங்கண்
மானே! யிருளளகஞ் சூழ்ந்தநின் வாண்முகம்
தானே யுவமை தனக்கு”
கரிய நெடிய கண்களையுடைய மானே ! குளிர்ந்த மதிக்கும், திருமருவப்பட்ட சிவந்த தாமரையினது நறு நாற்றத்தையுடைய மலருக்கும் மேலாகிய தன்மையை யுடைத்தாகலான், இருளாகிய அளகஞ் சூழ்ந்த நின் ஒளியினையுடைய முகம் தானே தனக்கு உவமையாம்.

முகத்திற்கு உவமையாயுள்ள மதி, தாமரை ஆகிய இரண்டையும் முன்னர்க் கூறி மறுத்துப், பின்பு அம்முகத்திற்கு அதுவே உவமையாதலன்றிப் பிறிதில்லை என்பதால் இது பொது நீங்குவமையாயிற்று.

உவமையை கூறி மறுத்துப் பொருளினையே கூறி முடிப்பது உண்மையுவமை.

இஃது உவமையைக் கூறி மறுத்துப் பொருள்தன்னையே உவமமாக்கி யுரைப்பது. இவை தம்முள் வேற்றுமை.

(24) மாலையுவமை என்பது ஒரு பொருட்குப் பலவுவமை வந்தால். 1அவை யொன்றோடொன்று இடைவிடாது தொடர்ச்சி யுடையவாகப் புணர்த்துக் கடைக்கண் பொருள்கூட்டி முடிப்பது.
“மலயத்து மாதவனே போன்றும் அவன்பால்
அலைகடலே போன்றும் அதனுட் – குலவும்
நிலவலய மேபோன்றும் நேரியன்பா னிற்கும்
சிலைகெழுதோள் வேந்தர் திரு”
பொதிய மலையிடத்து அகத்தியனைப் போன்றும், அவன் உண்ணப்பட்ட அலையையுடைய கடல்போன்றும், அதனுள் உண்டாகிய நிலாவட்டம் போன்றும், சோழனுடைய இடத்தே பேராதே நிற்கும், விற்பயின்ற தோள்களையுடைய வேந்தர் செல்வம்.

இதன்கண் சோழனைவிட்டு நீங்காத செல்வத்திற்கு மூன்று உவமைகள் தரப்பட்டு, அம்மூன்றும் ஒன்றின் ஒன்று தொடர்ச்சியுடையவாகப் புணர்க்கப் பட்டுள்ளமையானும், இறுதியில் அப்பொருளைக் (உபமேயத்தை) கூறி முடித்திருப்பதானும் இது மாலையுவமையாயிற்று. இவ்வுவமை யலங்காரம் பிற அலங்காரங்களோடுங் கூடிவரும் என்றும் தண்டியலார் கூறுகிறார்.


உவமை பிற அணிகளுடன் கூடிவரும்
இவ்வுவமை யலங்காரம் பிற அலங்காரங்களோடுங் கூடிவரும் என்றும் தண்டியலார் கூறுகிறார்.
“அற்புதஞ் சிலேடை யதிசயம் விரோதம்
ஒப்புமைக் கூட்டந் தற்குறிப் பேற்றம்
விலக்கே யேதுவென வேண்டவும் படுமே”(நூற்பா – 32)
அவையாவன, அற்புதவுவமை, சிலேடையுவமை, அதிசயவுவமை, விரோதவுவமை, ஒப்புமைக்கூட்டவுவமை, தற்குறிப்பேற்றவுவமை, விலக்குவமை, ஏதுவுவமை எனப்பெயர் கொடுத்து வழங்கப்படும்.
விளக்கம்!
தண்டியலார் அணியிலக்கணம் பற்றி 35 வகைகளை மிகவும் நுட்பமாக வகுத்துக் காட்டுகின்றார். அவற்றில் உவமையணி மட்டும் தாய் அணி என்றும் அது 24 உபபிரிவுகளை யுடைத்து என்றும் கூறிப் போந்தார். இதுவரை உவமையணியின் 24 உபபிரிவுகள் பற்றி அவற்றின் தெளிவான எடுத்துக் காட்டுகளோடு பார்த்தோம்.
மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்பதே எமது எண்ணமாகும். தொடர்ந்து அடுத்துவரும் அணிகள் பற்றி பார்ப்போம்.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் : தொடர் 25-29
சிறீ சிறீஸ்கந்தராஜா
04/06/2013 – 17/06/2013

தொகுப்பு – thamil.co.uk