அணியிலக்கணம் 1 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தொடர்-21

 

அணியிலக்கணம்

“தண்டியலங்காரம்” – ஓர் அறிமுகம்

முன்னுரை
இற்றைக்கு இருக்கும் அணியிலக்கண நூல்களில் பெரிதும் பயிலப்படுவது இத்தண்டியலங்காரமாகும். இதனினும் விரிவாகக் கூறப்படும் அணியிலக்கண நூல்கள் வேறுபல இருப்பினும் சுருக்கமாயும் அளவுபடவும் அமைந்திருப்பது இந்நூலே ஆகும்.

உரை
இந்நூலிற்குச் சுப்பிரமணிய தேசிகர் உரை எனக் கூறப்படும் பழையவுரை என்றுள்ளது. இவ்வுரை கொண்டு அனைத்தையும் விளங்கிக்கொள்ள இயலாதிருக்கின்றது. எனினும் இப்பொழுதுள்ள உரைகளில் முதலாவதாக வைத்து எண்ணற்குரியது இவ்வுரையேயாகும்.

பதிப்புக்கள்
இப்பழையவுரையுடன் இந்நூலை 1857ல் முதன்முதல் பதிப்பித்துதவியவர் தில்லையம்பூர்த் திரு. சந்திரசேகர கவிராஜ பண்டிதர் அவர்கள் ஆவர். இதனையடுத்து யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ. குமாரசாமிப்பிள்ளை அவர்கள் இயற்றிய புத்துரையுடன் சுன்னாகம் கு.அம்பலவாண பிள்ளையவர்கள் 1903 -ல் பதிப்பித்தார்கள்.

இதன் பின்னர் 1920-ல் மதுரை மாவட்டம் செம்பூர் வித்துவான் திரு.வீ.ஆறுமுகம் சேர்வை அவர்கள் இந்நூலைப் பழைய வுரையுடன் பதிப்பித்தார்கள். இதனை அப்படியே பின்பற்றிச் சிவத்திரு கொ.இராமலிங்கத் தம்பிரான் அவர்களின் குறிப்புரையுடன் 1938-ல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் பதிப்பித்தார்கள்.

ஆராய்ச்சி முன்னுரை
மொழி பயிர்களைப் போன்றது. இலக்கணம் வேலி போன்றது. வேலி பயிர்கள் அழியாதவாறு காப்பது போல இலக்கணமும் மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் நின்று, அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகின்றது. இவ்விலக்கணங்கள் மொழிக்குப் பாதுகாப்பு மட்டுமன்றி அதற்குப் பெருமையும் தரவல்லனவாம்.

ஐந்திலக்கணப் பாகுபாடு
தமிழ் மொழியில் இன்றைக்குத் தொன்மையாகவுள்ள இலக்கணம் தொல்காப்பியாகும்.இது எழுத்துச் சொல் பொருள் என்ற மூன்று பாகுபாட்டை உடையது. செய்யுளியல் யாப்புப் பற்றியதாயினும், அதனைத் தனித்துக் கூறாது ஆசிரியர் பொருளதிகாரத்தின்பாற் படுத்தியே கூறியுள்ளார்.

கி. பி. 11ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரர் என்பார் எழுத்துச் சொல் பொருள் யாப்புடன் அணியிலக்கணத்தையும் வேறாக அமைத்து வீரசோழியம் என்ற பெயரால் ஐந்திலக்கணங்ளையும் ஒருங்கு சேர்த்துக் கூறினார்.

இதற்குப் பின்பு கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் அணியிலக்கணத்தைத் தனியே எடுத்து விளக்க வந்த நூலே இத்தண்டியலங்காரம் ஆகும்.

இதற்குப் பின்பு அணியிலக்கணத்தை மட்டும் எடுத்து விதந்த நூல்கள் மாறனலங்காரமும், சந்திராலோகமும், குவலயானந்தமும் ஆகும்.

அணியிலக்கணத்தின் தோற்றமும், வளர்ச்சியும் ஒரு செய்யுளில் உள்ள அழகையும் நயத்தையும் எடுத்துக் கூறுவது அணியிலக்கணமாகும்.

இவ்வருமையை எல்லா மொழிகளிலும் காணலாம். எனினும் இங்ஙனம் பாகுபடுத்திக் கூறுவதற்காக எழுந்த இலக்கண நூல்கள் வடமொழியிலேயே மிகப்பலவாகவுள்ளன. தமிழ் மொழியில் இதுபற்றி எழுந்த நூல்கள் மிகச் சிலவே.

தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம், சந்திராலோகம், வீரசோழியம், இலக்கணவிளக்கம், தொன்னூல், முத்துவீரியம், என்ற எட்டு நூல்களே உள்ளன. இவற்றுள்ளும் முன்னைய நான்குமே அணியிலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துக் கூறுகின்றன.

அவையும் மொழிபெயர்ப்பாக அமைந்தவையே. பின்னைய நான்கும் அணியிலக்கணத்தை ஒரு பகுதியாகக்கொண்டு கூறுவன.

இவற்றிற்கெல்லாம் முதனூலாகவுள்ள தொல்காப்பியத்தை நோக்குமிடத்து, தொல்காப்பியர் கூறிய உவமை அணியிலிருந்தே மற்ற அணிகள் எல்லாம் தோன்றின என்றும், எனவே அணியிலக்கணத்தை முதன் முதல் கூறிய நூல் தொல்காப்பியமே என்றும் கூறுவர்.

தண்டியலங்காரத்தில் கூறப்பட்ட பொருளணிகள் 35 ஆகும்.

தொல்காப்பிய உவம இயலை அடிப்படையாகக் கொண்டே,தண்டியலங்காரம் முதலிய அணியிலக்கணங்கள் எழுந்தன என்று கூறுவதிலும், தொல்காப்பியத்தையும் வடமொழி அணியிலக்கணங்களையும் கொண்டு தண்டியலங்காரம் எழுந்தது எனக் கூறினும் அது மிகையன்று!

தண்டியலங்காரம்
100 அணிகள், 64 அணிகள் என விரிவாகக் கூறும் இலக்கண நூல்கள் இருக்கும் போது 35 அணிகள் பற்றியே நுவலும் இத் தண்டியலங்காரத்தைப் பலரும் பயில்வதொன்றே இதன் சிறப்பினை நன்கு விளக்கும்.

முதனூல்
இந்நூல் தொகுத்தல் முதலிய நால்வகையுள் மொழி பெயர்ப்பு வகையைச் சார்ந்தது. இதன் முதனூல் காவியாதர்சம் என்றும், இதன் ஆசிரியர் தண்டி என்னும் பெயரால் அறியப்படுகின்றார். இவர் இராசசிம்ம பல்லவன் (கி.பி. 666-705) காலத்தவர். இந்நூலை முதனூலாகக் கொண்டு எழுந்த நூல்கள் தமிழில் மட்டுமன்றிப் பிறமொழியிலும் உள்ளன.

தமிழ் – தண்டியலங்காரம்,
கன்னடம் – கவிராச மார்க்கம்,
சிங்களம் – சியபஸ்லகாரம் ஆகும்.

இந்தூலின் அமைப்பும் அழகும்
மேற்கூறிய காவியதர்சம் என்ற நூலில் நான்கு பிரிவுகளில் கூறப்பட்டிருப்பதை தண்டியலங்காரம் மூன்று பிரிவுகளில் மிகவும் அழகாகக் கூறுகின்றது எனலாம். அவையாவன, பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்பனவாகும்.

பொதுவணியியலில் செய்யுட்களின் வகைகள், அவற்றின் இலக்கணங்கள், வைதருப்பர், கௌடர் ஆகியோர்க்குரிய சொல்லமைப்பு நெறிகள் ஆகியவை கூறப்பட்டுள்ளன. பொருளணியியலில் 35 அணிகளின் இலக்கணமும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

சொல்லணியியலில் மடக்கின் வகைகள், அவற்றின் இலக்கணம்,சித்திர கவிகளின் இலக்கணம், வழுக்கள், அவற்றின் அமைதிகள், மலைவுகள் அகியன கூறப்பட்டுள்ளன.

நூலாசிரியர்
தண்டியலங்காரத்தை இயற்றிய ஆசிரியர் பெயர், வரலாறு முதலியன தக்கவாறு அறிதற் கியலாதிருக்கின்றது. காவியாதர்சத்தை இயற்றிய ஆசிரியர் பெயர் தண்டியாதல் போலவே, தமிழ்த் தண்டியலங்காரத்தை இயற்றிவரும் தண்டி என்ற பெயரினரே என்பது சிலருடைய முடிபாகும். இதற்குப் பின்வரும் சிறப்புப் பாயிரச் செய்யுளைச் சான்றாகக் காட்டுவார்.

‘வடதிசை யிருந்து தென்மலைக் கேகி
மதிதவழ் குடுமிப் பொதிய மால்வரை
இருந்தவன் தன்பால் அருந்தமிழ் உணர்ந்த
பன்னிரு புலவரின் முன்னவன் பகர்ந்த
தொல்காப் பியநெறி பல்காப் பியத்தும்
அணிபெறு மிலக்கணம் அரிதினில் தெரிந்து
வடநூல் வழிமுறை மரபினின் வழா அது
ஈரிரன் டெல்லையின் இகவா மும்மைப்
பாரத விலக்கணம் பண்புறத் தமீஇத்
திருந்திய மணிமுடிச் செம்பியன் அவையத்து
அரும்பொருள் யாப்பி னமைவுற வகுத்தனன்
ஆடக மன்றத்து நாடக நவிற்றும்
வடநூ லுணர்ந்த தமிழ்நூற் புலவன்
பூவிரி தண்பொழிற் காவிரி நாட்டு
வம்பவிழ் தெரியல் அம்பி காபதி
மேவருந் தவத்தினிற் பயந்த
தாவருஞ் சீர்த்தித் தண்டியென் பவனே.’

இதிலிருந்து நூலாசிரியர் பெயர் தண்டியென்பதும், அவர் அம்பிகாபதியின் புதல்வர் என்பதனால் கம்பரின் பேரன் என்பதும், வடமொழி தென்மொழி வல்லுநர் என்பதும், சோழ நாட்டினர் என்பதும், சோழனவையில் இந்தூல் அரங்கேற்றப்பட்டதென்பதும் அறிய முடிகின்றது. இவர் அம்பிகாபதியின் புதல்வர் தான் என்பதற்கு பிறசான்றுகள் ஏதுமில்லை.

காலம்
இவ்வாசிரியர் பலவிடத்தும் தம் அன்புரிமை கொண்டு அனபாயன் பற்றி விதந்துரைகின்றார். இவ்வனபாயன் இரண்டாம் குலோத்துங்க சோழனேயாவான். இவனுடைய காலம் கி.பி. 12 -ம் நூற்றாண்டு ஆகும். ஆதலால் இவர் தம் காலமும் அதுவேயாகும். அன்றியும், ஒட்டக்கூத்தரின் காலம் கி.பி. 12-ம் நூற்றாண்டாதலால் இவ்வாசிரியர் காலமும் அதுவேயாதல் அறியலாம்.

உரையாசிரியர்
இந்நூலுக்கு உரை வகுத்த ஆசிரியரைப்பற்றி ஒன்றும் தெளிவாக அறிய இயலவில்லை. சுப்பிரமணிய தேசிகர் உரை எனச் சில பிரதிகளில் உள்ளன. சில பிரதிகளில் அப்பெயரும் இல்லாதிருக்கின்றது.

ஆதலின் இவரைப் பற்றிய செய்திகள் ஏதும் தெரிந்தில. எனினும் இவர் தம் உரையைக் கொண்டு இவருடைய புலமையை நன்கறிய முடிகின்றது. இவர் பல இடங்களில் ‘என்பாருமுளர்’ எனக் குறிப்பதிலிருந்து இவருக்கு முன்னமையே இந்நூலிற்கு உரையிருந்தது என அறியமுடிகின்றது.

முடிவுரை
இவ்வுரைவழி நூலையும், நூல்வழி அணியிலக்கணத்தையும் அறிந்தின்புறுவது நம்முடைய கடமையாகும்.
பொதுவணியியல்
பொருளணியியல்
சொல்லணியியல்
ஆகிய அணி இலக்கண விதிகள் பற்றி தொடர்ந்து பாப்போம்.

அணியிலக்கணம் – தொடர்-22

 

அணியிலக்கணம்

“தண்டியலங்காரம்” – பொதுவணியியல்

பொதுவணியியல் – செய்யுள் வகை

1 – செய்யுள் வகை
“செய்யுள் என்பவை தெரிவுற விரிப்பின்
முத்தகங் குளகந் தொகைதொடர் நிலையென.
எத்திறத் தனவும் ஈரிரண் டாகும்”
(நூற்பா – 02)

1 – முத்தகச் செய்யுள்
2 – குளகச் செய்யுள்
3 – தொகைநிலைச் செய்யுள்
4 – தொடர்நிலைச் செய்யுள்

செய்யுள் வகை நான்கு வகைப்படும் எனலாம்.

முத்தகச் செய்யுள் என்பது
தனியே நின்று ஒருபொருள் பயந்து முற்றுப் பெறுவது ஆகும்.

குளகச் செய்யுள் என்பது
பல பாட்டாய் ஒருவினை கொண்டு முடிவது ஆகும்.

தொகைநிலைச் செய்யுள் என்பது
“தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின்
ஒருவர் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
பொருளிடங் காலந் தொழிலென நான்கினும்
பாட்டினும் அளவினுங் கூட்டிய வாகும்”
(நூற்பா – 05)

ஒருவரால் உரைக்கப்பட்டுப் பல பாட்டாய் வருவனவும்,
பலரால் உரைக்கப் பட்டுப் பல பாட்டாய் வருவனவுமாம்.

அவை பொருளாற் றொகுத்த பெயர் பெற்றனவும்,
இடத்தாற் றொகுத்த பெயர் பெற்றனவும்,
காலத்தாற் றொகுத்த பெயர் பெற்றனவும்,
தொழிலாற் றொகுத்த பெயர் பெற்றனவும்,
பாட்டாற் றொகுத்த பெயர் பெற்றனவும்,
அளவாற் றொகுத்த பெயர் பெற்றனவுமாம் என்றவாறு.

தொடர்நிலைச் செய்யுளென்பது
“பொருளினுஞ் சொல்லினும் இருவகை தொடர்நிலை” (நூற்பா – 06)

பொருளினால் தொடர்தலும் , சொல்லினால் தொடர்தலுமென இருவகைப்படும்.

பொருள்தொடர்நிலைச் செய்யுளும் , சொற்றொடர்நிலைச் செய்யுளும் என இருவகைப்படும்.

எனினும் மூன்றாவது வகையும்முண்டு:
பொருளினாலுஞ் சொல்லினாலும் தொடர்தலும் உண்டெனக் கொள்க.

முற்செய்யுளோடு பிற்செய்யுளுக்குத் தொடர்பு யாதுமின்றித் தனித்தனியே ஒரு பொருளுணர்த்தும் செய்யுட்கள் பல விரவித் தொகுக்கப்பட்ட நூலுக்குத் தொகைநிலைச் செய்யுள் என்றும் முற்செய்யுளோடு பிற்செய்யுளுக்குச் சொல்லினாலோ அன்றிப் பொருளினாலே தொடர்புடைய நூலுக்குத் தொடர்நிலைச் செய்யுள் என்றும் கொள்ளப்படும்.

பொருள் தொடர்நிலைச் செய்யுளுக்குப் பெரிய புராணம் , கம்பராமாயணம் முதலியன ஆகும்.

சொல்தொடர்நிலைச் செய்யுளுக்குத் திருச்சதகம் , அந்தாதி , கலம்பகம் முதலியன எடுத்துக்காட்டாம்.

பொருள் தொடர்நிலைச் செய்யுள் வகைகள்
“பெருங்காப் பியமே காப்பிய மென்றாங்(கு)
இரண்டாய் இயலும் பொருள்தொடர் நிலையே” (நூற்பா – 07)

பொருள் தொடர்நிலைச் செய்யுளைப் பகுத்து நோக்குமிடத்து, பெருங்காப்பியம், காப்பியம் என இரண்டு வகையாய் பொருள் தொடர்நிலைச் செய்யுள் அமையும் எனலாம்.

‘இரண்டாய் இயலும்’ என்பதன் விளக்கம், பத்து வகைப்பட்ட நாடக இனங்களும், கோவையும் பொருள் தொடர் நிலைப்பாற் படுமெனக் கொள்க.

பத்து வகைப்பட்ட நாடக இனங்களாவன,

நாடகம், பிரகரணம் , பாணம், பிரகசனம், டிமம் , வியாயோகம், சமவாகாரம், வீதி, அங்கம், ஹீயா மிருகம் என்றவாறு.

கோவை என்பன தமிழ் முத்தரையர் கோவை முதலாயின .

முற்கூறிய முத்தகம் முதல் மூன்றும் , பின்னர்க்கூறிய பொருள்தொடர்நிலைச்செய்யுட்கு உறுப்பாய் வருதலுமுடைய வெனக் கொள்க.

பத்து வகைப்பட்ட நாடக இனங்களும், கோவையும் பொருள் தொடர்நிலைச் செய்யுளில் அடங்கும் என்பது தெளிவு.

முத்தகம், குளகம், தொகைநிலை என்ற மூவகைச் செய்யுட்களும் பொருள்தொடர்நிலைச் செய்யுட்கு உறுப்பாய் வரும் என்பதும் அறிக.

பத்து வகைப்பட்ட நாடக முறைகளாவன:
01 – நாடகம்
தற்புகழ்ச்சியற்ற நற்பண்புவாய்ந்த தலைவனை நாடகத் தலைவனாகக் கொண்டிருக்கும், வீரம் அல்லது இன்பச் சுவை தழுவியதாய், ஏனைச் சுவைகளையும் ஆங்காங்கு உடையதாய், முகசந்தி, பிரதி முதசந்தி, கர்ப்பசந்தி, விமர்சசந்தி, நிர்வகனசந்தி ஆகிய ஐந்து சந்திகளையும் உடையதாய் ஐந்து அங்கங்கள் முதல் பத்து அங்கங்கள் வரையில் உள்ளதாய் அமைந்து விளங்குவது இதன் இலக்கணமாகும்.

இதில் கூறப்படும் கதை புராணத்தில் உள்ளதாகவே இருக்கும்.

02 – பிரகரணம்
கற்பனைக் கதையாக இருக்கும்.
வீரம் குறைந்தவனை நாடகத் தலைவனாகக் கொண்டிருக்கும்.
இன்பச் சுவை மிகுதியாக இருக்கும்.
ஏனைய இலக்கணங்கள் எல்லாம் முன்னர்க் கூறிய நாடக இலக்கணத்தை ஒத்திருக்கும்.

03 – பாணம்
கற்பனைக் கதையாக இருக்கும்.
தீயவனையும், தரமற்றவனையும், நாடகத் தலைவனாகக் கொண்டிருக்கும். இன்பச்சுவை, வீரச்சுவை ஆகிய இரண்டும் கலந்திருக்கும்.
இதில் அமைந்த பேச்சுக்கள் உலகியல் நடையில் இருக்கும்.
முகசந்தி, நிர்வகனசந்தி ஆகிய இரு சந்திகளை மட்டும் கொண்டு ஓரங்க நாடகமாக இருக்கும்.

04 – பிரகசனம்
ஒழுக்கமற்றவனை நாடகத் தலைவனாகக்கொண்டு நகைச்சுவை நிரம்பப் பெற்று இருக்கும்.
ஏனைய இலக்கணங்கள் மேற்கூறிய பாணத்தை ஒத்து விளங்கும்.

05 – டிமம்
உலகறிந்த கதையாக இருக்கும், தேவன் , கந்தருவன், அசுரன் முதலியவர்களுள் ஒருவனைத் தலைவனாகத் கொண்டு விளங்கும்.
வெகுளிச் சுவை மிக்கும், ஏனைய வீர, இன்பச் சுவைகள் ஆங்காங்கு இடம் பெற்றும் விளங்கும்.
மாயை, இந்திரசாலம், போர் ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கும்.
நான்கு அங்கங்களையும் நான்கு சந்திகளையும் கொண்டு விளங்கும்.

06 – வியாயோகம்
இதில் கூறப்படுவதும் உலகறிந்த கதையாக இருக்கும்.
வீரச்சுவை மிக்கிருக்கும்.
ஒரே நாளில் நடந்த கதையாயும், அதுவும் போர் பற்றியதாயும் இருக்கும்.

07 – சமவாகாரம்
தேவர்களையும் அசுரர்களையும் நாடகத் தலைவனாகத் கொண்டிருக்கும். வீரச்சுவை மிகுதியாக இருக்கும்.
ஒரே நாளில் நடந்த கதையை மூன்று யாமமாகப் பிரித்து,
மூன்று அங்கங்களில் விவரிக்கப்பட்டிருக்கும்.

08 – வீதி
தீயவனைத் தலைவனாகக் கொண்டிருக்கும் , கற்பனைக் கதையாக இருக்கும்.
குறிப்பாக இன்பசுவை இருக்கும்.
இரண்டு சந்திகளையுடைய ஒரங்க நாடகமாக இருக்கும்.

09 – அங்கம்
உலக மக்களில் ஒருவனைத் தலைவனாகக் கொண்டிருக்கும்.
உலகறிந்த கதையாகவும் இருக்கும்.
கருணைச் சுவை மிகுதியாக இருக்கும்.
பெண்களுடைய வாய்ச் சண்டை, விளையாட்டு ஆகிய இவை இடம் பெற்றிருக்கும்.

10 – ஹீயாமிருகம்
புரணத்தில் உள்ளதும், கற்பனையுமான கதையாக இருக்கும்.
நாடகத் தலைவன் தேவனாகவும், துணைத்தலைவன் மனிதனாகவும் இருப்பர்.
மகளிரை விரும்பி அவர்களைக் களவினால்கொண்டு வரும் நிகழ்ச்சிகள், போர் முதலியன இடம் பெற்றிருக்கும்.
எனினும் கொலை நிகழ்ச்சி யற்றிருக்கும்.
உரையாடல்கள் தகுதியற்றனவா யிருக்கும்.

தமிழ் முத்தரையர் கோவை : இத்தகைய நூலொன்று பெயரளவிலேயே அறியப்படுகின்றது .

யாப்பருங்கல விருத்தியுரையால் இது சந்தத்தால் அமைந்த நூல் என்று மட்டும் அறிய முடிகின்றது. (95 – ஆம் நூற்பா உரை.)

அணியிலக்கணம் – தொடர்-23

 

அணியிலக்கணம்

 “தண்டியலங்காரம்” – பொதுவணியியல்

பொதுவணியியல் – பெருங்காப்பியம் / சிறுகாப்பியம்

பெருங்காப்பியம்:
“அவற்றுள்
பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்(று)
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகடல் நாடு வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றமென்(று) இனையன புனைந்து
நன்மணம் புணர்த்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்று
இன்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரந் தூது செலவிகல் வென்றி
சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்
பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப” (நூற்பா – 08)

பெருங்காப்பியம் என்னும் பொருள்தொடர்நிலைச் செய்யுளாகும்.

‘பெருங்காப்பியநிலை…வியன்று’ என்பது
பெருங்காப்பியத்தின் இலக்கணத்தைச் சொல்லுமிடத்து வாழ்த்துதல், தெய்வம் வணங்குதல், உரைக்கும் பொருள் உணர்த்தலென்னும் மூன்றனுள் ஒன்று முன்வர நடப்பது எனலாம்.

‘தன்னிகரில்லா…யுடையதாய்’ என்பது
தன்னோடு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதானை நாயகனாக வுடைத்தாய் என்றவாறு.

‘பல்பொருட் கேற்பின் நல்லது கோடல்’
என்பதனால் , தன்னில் உயர்ந்தார் இல்லாதானென்றும் கொள்ளப்பட்டதாயிற்று.

‘மலைகடல்…புனைந்து’ என்பது
மலைவருணனையும், கடல் வருணனையும் நாட்டு வருணனையும், நகர வருணனையும், இருது வருணனையும் ஆதித்தோதய வருணனையும் சந்திரோதய வருணனையும் என்று இன்னோரன்ன வருணனை யுடைத்தாய் என்றவாறு.

‘நன்மணம்…..நன்னடைத்தாகி’ என்பது
இன்னோரன்ன செய்கைச் சிறப்புப் புகழ்ந்து தொடுக்கப்பட்ட நல்லொழுக்க முடைத்தாய் என்றவாறு.
‘இன்னன’ என்றதனால் பல வருணனைகளையு முடைத்தாய் வருவதெனக் கொள்க.

‘மந்திரம்…தொடர்ந்து’ என்பது
மந்திரமிருத்தலும், தூது விடுத்தலும், மேற்செலவும், செருச்செய்கையும், வென்றி யெய்தலும் சந்திபோலத் தொடரப்பட்டு என்றவாறு.

‘சந்தி’ என்பது நாடகத்தே நிலைபெறுதலான், ஈண்டு அது போலவெனக் கூறப்பட்டது.

‘சருக்கம்….விளங்கி’ என்பது
சருக்கம் என்றாதல், இலம்பகம் என்றாதல், பரிச்சேதம் என்றாதல் பாகுபட்டு நிற்கும் என்றவாறு.

‘நெருங்கிய….விரும்ப’ என்பது
எட்டுவகைப்பட்ட சுவையும் மெய்ப்பாட்டுக் குறிப்பும் இடைவிடாமற் கேட்போர் மதிக்க என்றவாறு.

‘கற்றோர்…..தென்ப’ என்பது
இவ்வகைத்தாகப் புலவராற் புனையப்படுந் தன்மையை யுடைத்தென்பர் ஆசிரியர் என்றவாறு.

‘நாற்பொருள் பயக்கும் நடை’ என்பது
அகமும், அகப்புறமும், புறமும், புறப்புறமும், பயந்தநடை யென்றுமாம்.

தன்னிகரில்லாத் தலைமை யுடையோன் எனில்,
அவனுக்கு அழகு, இளமை, புகழ், ஆண்மை, ஆக்கம், ஊக்கம், அருள், பிரதாபம், கொடை, குலம் முதலிய குணங்கள் இருக்கவேண்டும் என்பர் சாகித்யதர்ப்பணத்தின் நூலாசிரியர்.

இவையனைத்தும் ஒருங்கு இருப்பதே அரிது;
அதிலும் அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாது இருத்தல்
அதனினும் அரிது, அங்ஙனம் இருப்பினும்

‘அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியங்கால், இன்மை அரிதே வெளிறு’ என்பதனாலும்,

‘பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர், ஆகுதல் மாணார்க் கரிது’ என்பதனாலும்,

‘அரம்போலும் கூர்மைய ரேனும் மரம் போல்வர், மக்கட்பண் பில்லா தவர்’ என்பதனாலும்

ஓரிரு தீக்குணமேனும் ஒரோவழி இல்லாதிருத்தல் அரிது.

ஆதலின் தன்னிகரில்லாத் தலைவனை ஒரு காப்பியம் தலைவனாகக் கொண்டியங்க வேண்டுமெனில், அது இறைவனைக் கொண்டியங்கினன்றி இயலாததாகும்.

சந்தி ஐந்து வகைப்படும்
அவை முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்பனவாம்.

இவற்றுள் முகமாவது,
எழுவகைப்பட்ட உழவினாற் சமைக்கப்பட்ட பூழியுள் இட்ட வித்துப் பருவஞ் செய்து முளைத்து முடிவது போல்வது.

பிரதிமுகாவது,
அங்ஙனம் முளைத்தல் முதலாய் இலை தோன்றி நாற்றாய் முடிவது போல்வது.

கருப்பமாவது,
அந்நாற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுட் பொருள் பொதிந்து கருப்பம் முற்றி நிற்பது போல்வது.

விளைவாவது,
கருப்பம் முதலாய் விரிந்து கதிர் திரண்டிட்டுக் காய் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது.

துய்த்தலாவது,
விளையப்பட்ட பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலி செய்துகொண்டு போய் உண்டு மகிழ்வது போல்வது.
(சிலம்பு – 3 ; 13 – அடியார்க்கு நல்லார்)

சருக்கம் என்ற பாகுபாட்டில் அமைக்கபட்டது பாரதம் முதலியன.

இலம்பகம் என்ற பாகுபாட்டில் அமைக்கப்பட்டது சிந்தாமணி முதலியன.

பரிச்சேதம் என்ற பாகுபாட்டில் அமைந்த இலக்கியம் இது இப்பொழுது காணக் கிடைத்திலது.

சுவை எட்டு
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன.
(இவ்வெட்டும் சுவையணியில் பின்னர் விளக்கப்படும்).

அகம்-ஐந்திணை
அகப்புறம் – கைக்கிளை, பெருந்திணை
புறம்- வெட்சி முதல் வாகையீறாக உள்ளன
புறப்புறம் – பாடாண், பொதுவியல் என்பன.

அதற்குப் புறனடை
“கூறிய வுறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபா டின்றென விளம்பினர் புலவர்”  (நூற்பா – 09)

மேற்சொல்லப்பட்ட உறுப்பிற் சில குறைந்துவரினும், பெருங்காப்பியத்திற் பிறிதன்றென விளம்பினர் அறிவுடையோர் என்றவாறு.

சிறு காப்பியம்
“அறமுதல் நான்கினுங் குறைபா டுடையது
காப்பிய மென்று கருதப் படுமே” (நூற்பா – 10)

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினுள் ஒன்றேனும் பலவேனும் குறைந்து வருவது காப்பியமென்று கருதப்படுவது. இதனால் ‘கூறிய வுறுப்பிற் சில குறைந்தியலும்’ என்பதற்கு அறமுதல் நான்கு மொழித்து அல்லாத வுறுப்பிற் சில குறைவதே பெருங்காப்பிய மென்று கொள்ளப்படும்.

8ம் நூற்பாவில் பெருங்காப்பியத்தின் இலக்கணத்தைக் கூறிய ஆசிரியர், 9ம் நூற்பாவில் அவ்விலக்கணங்களுள் சில குறைந்து வரினும் பெருங்காப்பியமென்றெ கருத வேண்டும் என்றார்.

ஆனால் எவ்விலக்கணங்கள் குறையலாம் என்றாரில்லை. 10ம் நூற்பாவில் சிறுகாப்பியமென்பது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பொருள்களில் குறைபாடுடையதாம் என்றனர்.

சிறு காப்பியத்தின் இலக்கணமாய இவ்விலக்கணத்தைக் கொண்டு, முன்னர்ப் பெருங்காப்பியத்தில் எவை குறைந்து வரினும் இழுக்கில்லை என்பது விளக்கமாகின்றது.

அறமுதல் நான்கும் அல்லாத ஏனையிலக்கணங்களில் குறைந்து வரினும் பெருங்காப்பியம் என்று கருதப்படும் என்பதும், ஏனைய இலக்கணங்கள் எல்லாம் நிரம்பி, ஆனால் அறமுதல் நான்கனுள் ஏதேனும் ஒன்று குறையினும் அது சிறுகாப்பியம் என்று கருதப்படும் என்பதும் புலனாயிற்று.

இவ்வகையால் பிள்ளைத்தமிழ், உலா, பரணி முதலியன சிறுகாப்பியமாதல் நன்கு தெளியலாம்.

அதன் இலக்கணம்

“அவைதாம்
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையும் பாடையும் விரவியும் வருமே”
(நூற்பா – 11)

மேற்கூறிய பெருங்காப்பியமும், காப்பியமும்,
ஒருவகைச் செய்யுளாயினும் பலவகைச் செய்யுளாயினும்,
உரை விரவியும் வருதலுடையது.
பாட்டு – அடி, தொடை முதலிய உறுப்புகள் அமைந்து ஓசை பொருந்த வருவது.

அது வெண்பா முதலிய பாக்களாகவும், தாழிசை, துறை, விருத்தம் ஆகிய இனங்களாகவும் வரும்.

உரை – செய்யுள்போல அடி, தொடை முதலிய உறுப்புகளின்றி நூற்பா போன்ற அமைப்பில் வருவது.
நூற்பாவையும் செய்யுள் என்பர், இலக்கண விளக்கப் பாட்டியலார்.

பாடை – பிற மொழி விரவிவரும்.

காப்பியம் தமிழில் ஏதும் இல்லை. ‘வழக்கத்தில் கதை சொல்லுவதுபோல ஓசை முதலிய வின்றித் தொடர் மொழிகளாக வருவனவே பாடை ‘என்பர். திரு சுன்னாகம் குமரசாமிப் புலவர் அவர்கள்.

பாடை – திசைச்சொல் என்பர் மாறனலங்கார வுரையாசிரியர்.

ஒருதிறப்பாட்டால் வந்த காப்பியம் நளவெண்பா, பாரத வெண்பா முதலியன. பலதிறப்பாட்டால் வந்தன பெரிய புராணம், கம்பராமாயணம் முதலியன. உரையும் பாட்டும் விரவிவந்தன தகடூர் யாத்திரை முதலியன.

செற்றொடர் நிலைச் செய்யுள்
“செய்யுளந் தாதி சொற்றொடர் நிலையே” (நூற்பா – 12)

ஒரு செய்யுளின் இறுதி அடுத்த மற்றொரு செய்யுட்கு ஆதியாகத் தொடுப்பது, சொற்றொடர்நிலைச் செய்யுளாம். அவை கலம்பகம் முதலியன.

அணியிலக்கணம் – தொடர்-24

 

 

அணியிலக்கணம் 

“தண்டியலங்காரம்” 

பொதுவணியியல் – செய்யுள் நெறி

செய்யுள் நெறி குறித்தும், அதன் வகைகளைக் குறித்தும், வைதருப்ப நெறியின் முதல் ஐந்து குணப்பாங்குகளைக் குறித்தும் நோக்குவோம்.

செய்யுள்நெறி
நெறி என்பது சொல்லமைப்பு வகையினைக் குறிக்கும். செய்யுளில் அமையும் சொல்லமைப்பு வகைகளை எடுத்துரைப்பது செய்யுள்நெறி ஆகும். இது பின்வரும் கூறுகளைக் கொண்டுள்ளது.

* உயிரெழுத்து (குறில், நெடில்) அமையும் நிலை.
*மெய்யெழுத்தின் வகைகள் (வல்லினம், மெல்லினம், இடையினம்) தனித்து வருதலும் கலந்து வருதலும்.
* பொருள்தெளிவுக்கு உரிய சொற்கள் இடம் பெறுதலும் வருவித்தலும்.
* வெளிப்படைப் பொருள் அமைதலும் குறிப்புப் பொருள் அமைதலும்.
* ஓசை நலம் குன்றாமை.
* சொல்நலம், பொருள்நலம் அமைதல்.
* கருத்து, வருணனைகளின் நம்பகத்தன்மை.
* வேற்றுமை உருபுகள் மறைந்து வரும் நிலை.
*ஒன்றன் இயல்பை வேறொன்றில் ஏற்றி உரைத்தல்.

செய்யுள்நெறி – வகைகள்
செய்யுள்நெறி இருவகைப்படும்.
(1) வைதருப்ப நெறி
(2) கௌட நெறி

“மெய்பெறு மரபின் விரித்த செய்யுட்கு
வைதருப் பம்மே கௌடம் என்றாங்(கு)
எய்திய நெறிதாம் இருவகைப் படுமே” (நூற்பா – 13)

பொருள் பெறும் இலக்கண நெறியான் விரித்தோதப்பட்ட செய்யுள் அனைத்திற்கும் வைதருப்பமும், கௌடமும் எனப் பொருந்திய நெறி இருவகைப்படும் என்பதாம்.

வைதருப்ப நெறி
விதர்ப்ப நாட்டார் ஆதரித்த நெறி ஆதலால் வைதருப்பநெறி எனப்பட்டது. இது எளிமையாகவும் இயல்பாகவும் அமையக்கூடியது. பத்துக் குணங்களைத் தன்னிடத்துக் கொண்டது. அவை, மேற்குறிப்பிடப்பட்டுள்ள பத்துக் குணவலங்காரங்களும் வருமாறு:

“செறிவே தெளிவே சமநிலை யின்பம்
ஓழுகிசை யுதாரம் உய்த்தலில் பொருண்மை
காந்தம் வலியே சமாதி யென்றாங்(கு)
ஆய்ந்த ஈரைங் குணனும் உயிரா
வாய்ந்த வென்ப வைதருப் பம்மே”  (நூற்பா – 14)

1. செறிவு
“செறிவெனப் படுவது நெகிழிசை யின்மை”  (நூற்பா – 16)

செறிவென்று சொல்லப்படுவது நெகிழ்ந்த இசையின்றி வரத் தொடுப்பது.
இனி ‘ நெகிழிசை ‘ என்பது வல்லினம் விரவாது ஓரினத்து எழுத்தானே நெகிழத் தொடுப்பது .

2.தெளிவு
“தெளிவெனப் படுவது பொருள்புலப் பாடே” (நூற்பா – 17)

தெளிவென்று சொல்லப்படுவது கவியாற் கருதப்பட்ட பொருள், கேட்போர்க்கு உளங்கொண்டு விளங்கத் தோன்றுவது.

3. சமநிலை
“விரவத் தொடுப்பது சமநிலை யாகும்” (நூற்பா – 18)

வன்மை , மென்மை ,இடைமை என்னும் மூவினமும் தம்முள் விரவத் தொடுப்பது சமநிலையாம்.

4. இன்பம்
“சொல்லினும் பொருளினும் சுவைபடல் இன்பம்” (நூற்பா – 19)

சொல்லினாற் சுவைபடத் தொடுத்தலும், பொருளினாற் சுவைபடத் தொடுத்தலும் இன்பமாம். அவற்றுள், சொற்காரணமாகிய இன்பமாவது வழிமோனை முதலாயின வரத்தொடுப்பது.

5. ஒழிகிசை
“ஒழிகிசை யென்பது வெறுத்திசை யின்மை” (நூற்பா – 20)

ஒழிகிசையென்று சொல்லப்படுவது வெறுக்கத்தகும் இன்னா இசையின்றி வரத்தொடுப்பது. மெல்லெழுத்துக்களால் இயன்ற யாப்பமைதியினிடையில் வல்லெழுத்துக்கள் வரினும், வல்லெழுத்துக்களான் இயன்ற யாப்பமைதியினிடையில் உயிரெழுத்துக்கள் வரினும் செவிக்கு இன்னாத இசையையே உண்டாக்கும்.

6. உதாரம்
“உதார மென்பது ஓதிய செய்யுளிற்
குறிப்பின் ஒருபொருள் நெறிப்படத் தோன்றல்” (நூற்பா – 21)

உதாரமென்று சொல்லப்படுவது, சொல்லப்பட்ட செய்யுளுள் சொற்படு பொருளின்றி அதன் குறிப்பினால் ஒரு பொருள் நெறிப்படத் தோன்றுவது என்றவாறு.

7. உய்த்தலில் பொருண்மை
“கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற்(கு)
உரியசொல் லுடைய(து) உய்த்தலில் பொருண்மை” (நூற்பா – 22)

உய்த்தலில் பொருண்மை என்பது கவி தன்னாற் கருதப்பட்ட பொருளை விரிக்குஞ் சொல்லைச் செய்யுளுள்ளே யுடைத்தாய்ப் பிறிது மொழி கூட்டியுரைக்கும் பெற்றியின்றி வரத் தொடுப்பது.

8. காந்தம்
“உலகொழுக் கிறவா(து) உயர்புகழ் காந்தம்” (நூற்பா – 23)

காந்தம் என்பது ஒன்றனை உயர்த்துப் புகழுங்கால் உலக நடை யிறவாமல் உயர்த்துப் புகழ்வது என்றவாறு .

9. வலி
“வலியெனப் படுவது தொகைமிக வருதல்” (நூற்பா – 24)

வலியென்று சொல்லப்படுவது தொகைச் சொற்றொடர்பு மிகத் தொடுப்பது.

10. சமாதி
“உரியபொரு ளன்றி யொப்புடைப் பொருள்மேல்
தரும்வினை புணர்ப்பது சமாதி யாகும்” (நூற்பா – 25)

முக்கியப் பொருளின் வினையை ஒப்புடைப் பொருள்மேல் தந்து புணர்த்த உரைப்பது, சமாதியென்னும் அலங்காரமாம்.

வைதருப்ப நெறி செறிவு முதலிய பத்துக் குணங்களையும் ஏற்கும். பெரும்பாலும் மூவினங்களால் இயன்ற பாடலையே விரும்புவர்.

கௌட நெறி
அப்பத்தினுள் சிலவற்றை ஏற்கும்.
ஓரினமான எழுத்துக்களால் இயன்ற பாடலையே விரும்புவர்

கௌடரால் மேற்கொள்ளப்பட்ட நெறி, கௌட நெறியாகும்.
கௌடர் என்னும் பெயர், கௌட நாட்டினர் என ஒரு நாட்டினரைக் குறிப்பதும் ஆகலாம் ; தனி ஒருவருக்கு அமைந்த இடுகுறிப் பெயரும் ஆகலாம்.

இது குறித்து உரைநூல்களில் தெளிவான விளக்கம் காணப்படவில்லை.
வைதருப்ப நெறியை மறுத்து எழுந்தது கௌட நெறியாகும்.

“கௌட மென்பது கருதிய பத்தொடும்
கூடா(து) இயலுங் கொள்கைத் தென்ப” (நூற்பா – 15)

கௌட நெறியென்று சொல்லப்படுவது மேற்குறித் துரைக்கப்பட்ட பத்துக் குணவலங்காரங்களோடுங் கூடாது நடக்கும் ஒழுகலாறுடையது என்றவாறு.

‘பத்தொடும் கூடாது’ என்னும் முற்றும்மையை எச்சவும்மையாக்கிச் சிலவற்றோடு கூடியும் வரும் எனக் கொள்க.

இப்பத்து நெறிகளுள் கௌடநெறியாரும் ஏற்கும் நெறிகள் ஐந்தாம் அவையாவன:

பொருள் காரணமான இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலிற் பொருண்மை , சமாதி என்பன.

தொகுப்புரை
செய்யுளின் சொல்லமைப்பு வகையே செய்யுள்நெறி எனப்படும்.

அது வைதருப்பநெறி எனவும் கௌடநெறி எனவும் இருவகைப்படும்.

அவை ஒவ்வொன்றும் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தல் இல்பொருண்மை, காந்தம், வலி, சமாதி எனப் பத்துக் குணப்பாங்குகளை உடையன.

எளிமையாக அமையும் வைதருப்ப நெறியிலிருந்து சில வேறுபாட்டுத் தன்மைகளைக் கொண்டதாக எழுந்தது கௌடநெறியாகும்.

வைதருப்பமும் கௌடமும்
செய்யுள்நெறியின் இருபெரும் வகைகளாக உள்ள வைதருப்பம், கௌடம் ஆகிய இரண்டும் தம்முள் ஒற்றுமையும் வேற்றுமையும் ஒருங்கு கொண்டு விளங்குகின்றன. ஒற்றுமைக் கூறுகளாக உள்ள குணங்கள் ஒழுகிசை, பொருளின்பம், உதாரம், சமாதி ஆகியனவாகும்

புறனடை
தண்டியலங்காரத்தின் முதற்பகுதியாகிய பொதுவணியியலின் இறுதியில் செய்யுள் வகைக்கும் செய்யுள் நெறிக்கும் பிற இலக்கணங்களுக்குமாகப் புறனடை நூற்பா அமைகின்றது.

(புறனடை = குறிப்பிட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டவைகளைப் பொருத்திக் காட்ட உதவுவது.)

“ஏற்ற செய்யுட்கு இயன்ற அணியெலாம்
முற்ற உணர்த்தும் பெற்றியது அருமையின்
காட்டிய நடைநெறி கடைப்பிடித்து இவற்றொடு
கூட்டி உணர்தல் ஆன்றோர் கடனே” (நூற்பா – 26)

பொருள் எளிதில் விளங்கும் தன்மையுடையதாய்ச் சொற்செறிவு இல்லாததாய் விளங்குகின்ற மிடுக்கற்ற நடையொன்று உளது, அது வைதருப்பம் என்பதாகும்.

பொருட்செறிவும் சொற்செறிவும் உடைய மிடுக்கான நடையுடையது ஒன்று உளது, அது கௌடம் என்பதாகும்.

எந்த நடைக்கும் ஓசையினிமையும், பொருட்செறிவும் இன்றியமையாதவையாகும்.

வைதருப்பம், கௌடம் தவிர வேறு நெறிகளும் உள்ளன.

இவற்றுள் வெளிப்படையான பேதமுடையவை வைதருப்பமும் கௌடமுமேயாகும்.

பிற, நுட்பமான பேதமுடையன. நூலாசிரியர் தண்டியடிகளார் வடநாட்டுக் கவிநயங்களில் விரிந்த பயிற்சி பெற்றவர் ஆகையால் அவற்றை எடுத்துக் காட்டி விளக்குகின்றார்.  இவை புறனடை நூற்பாவில் பெறப்படும் கருத்துகளாகும்.

அணியிலக்கணம் – தொடர் : 21-24
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
28/05/2013

தொகுப்பு – thamil.co.uk