செம்பருத்திப்பூ

மூலிகையின் பெயர் – செம்பருத்திப்பூ
தாவரப்பெயர் – GOSSYPIUM INDICUM- RED FLOWER
தாவரக்குடும்பம் – MALVACEAE
பயன்தரும் பாகங்கள் – பூ, விதை, இலை, பிஞ்சு காய், பஞ்சு.

செம்பருத்திப்பூ வளரியல்பு – செம்பருத்திப்பூச் செடி தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. கரிசல் மண்ணில் நன்கு வளரும். வரட்சியைத் தாங்கக் கூடியது. எதிர் அடுக்கில் அகலமான இலைகளை உடையது. கிளைகள் அதிகமாக இருக்கும். பருத்திச் செடி போன்று பிஞ்சு காய்கள் விட்டு முற்றி வெடித்துப் பஞ்சு விடும். பூக்கள் அடுக்காக இழஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். செடிகளை ஆறடிக்கு மேல் வளரக்கூடியது. நீண்ட காலச் செடி. இது விதை மூலம் இனப் பெருக்கும் செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்

‘செம்பருத்திப் பூவழலைத் தீயரத்த பிடித்தத்தை
வெம்பு வயிற்றுக்கடுப்பை வந்துவைநீர்த் – தம்பனசெய்
மேகத்தை வெட்டயை விசூசி முதற் பேதியையும்
டாகத்தை யொட்டிவிடுந்தான்.’

செம்பருத்திப்பூ.செம்பருத்திப்பூ தேக அழற்சி, இரத்த பித்த ரோகம், உதிரக்கடுப்பு, சலமேகம், வெள்ளை, விசூசி முதலிய பேதிகள் தாகம் இவற்றை நீக்கும்.

செய்முறை – செம்பருத்திப் பூவின் இதழ்களை வேளைக்கு 1-1.5 தோலா எடை அரைத்துக் கற்கமாகவாவது அல்லது பாலில் கலக்கிப் பானமாகவாவது தினம் 2 வேளை 5 நாள் கொடுக்க இரத்தப் பிரமேகம், வெள்ளை, இரத்த வாந்தி, உட்கொதிப்பு முதலியன குணமாகும்.

இதன் இலையை அரைத்துச் சிறு கொட்டைப் பாக்களவு பாலில் கலக்கி தினம் 2 வேளை 5 நாள் கொடுக்க இரத்தப்பிரமேகம், வெள்ளை, இரத்த வாந்தி, உட்கொதிப்பு முதலியவைகள் குணமாகும்.

இதன் பிஞ்சுக்காயை முன்போல் அரைத்துக் கொட்டைப் பாக்களவு மோரில் கலக்கித் தினம் 2 வேளை 3 நாள் கொடுக்கச் சீதபேதி, இரத்த பேதி முதலியன குணமாகும்.

இதன் பஞ்சு கெட்டியான நூல்கள் செய்ய மட்டுமே பயன்படும்.

-மூலிகைவளம்