பண்டைய தமிழர்களின் உணவுகளும் பழக்கவழக்கங்களும்

பண்டைய தமிழர்களின் உணவு“உணவு, பிரபஞ்சத்தின் சுழற்சி” என்பது தைத்ரேய உபநிடதம். மனிதவரலாற்றைப் பற்றிச் சிந்தித்தவர்கள், நாகரிக வரலாற்றை எழுதியவர்கள் எல்லோருமே ஆதிகால மனிதனின் உணவு சேகரிப்பு அல்லது உணவு வழக்கத்திலிருந்துதான் சமூக வரலாற்றைத் தொடங்குகின்றனர்.

ஆரம்ப காலத்தில் மனித சமூகம் வேட்டை சமூகமாக இருந்தது. மனிதன் இயற்கையாகவே கிடைத்தவற்றை உண்டு வாழ்ந்தான். உணவிற்காக வேட்டையாடுவது இயற்கையாகக் கிடைத்தவற்றைத் தேடுவது என்னும் செயல்பாடு மட்டுமே இருந்தது. இந்தக் காரணங்களின் அடிப்படையான உணவு சேகரிப்பு என்பதிலிருந்துதான் மனித சமூகத்தின் வரலாறு ஆரம்பமாகிறது என்கின்றனர்.

கி.மு.7000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே கால்நடைகளை மேய்க்கும் தொழிலைக் கற்றுக் கொண்டனர். இதுவும் உணவின் தேவைக்காக ஏற்பட்ட தொழில். மனிதன் விவசாயத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தது (கி.மு.3000) கூட உணவின் தேவைக்காகவே. இதனால் மானிடவியலாளர் மனித சமூக நாகரிகத்தை உணவு உற்பத்தியின் அடிப்படையில் மதிப்பீடு செய்கின்றனர்.

உணவு உற்பத்தி முறையை மானிடவியலாளர்கள் வேட்டை உணவுக்காலம், கால்நடை வளர்ச்சிக்காலம், எளிய வேளாண்முறைக் காலம், பண்பட்ட வேளாண்மைக் காலம் என வகுக்கின்றனர்.

மனித வரலாற்றின் தொன்மையான நாகரிக காலத்திலிருந்தே உணவு பதப்படுத்தும் முறை ஆரம்பித்துவிட்டது. ஹரப்பா அகழாய்வில் களிமண் கருவிகளும் தானியங்களை அரைக்கும் கல் யந்திரங்களும் அம்மி போன்ற அமைப்புடைய கல் கருவியும் கிடைத்துள்ளன. இந்தக் காலத்தில் மாதுளம்பழம் வழக்கத்தில் வந்து விட்டது. இக்காலமக்கள் ஆமை, மீன் போன்றவற்றையும் மாட்டிறைச்சியையும் கூட உண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் மிகப் பழங்காலம் தொட்டே உணவு பதப்படுத்தப்பட்டும், தயாரிக்கப்பட்டும் வந்த செய்திகளைப் பற்றி இலக்கியங்கள் கூறுகின்றன.

தொல்காப்பியத்தில் வரும் உணா என்ற சொல் உணவைக் குறிப்பதாகும். உணவுக்குத் தமிழில் உள்ள சொற்களைப் பிங்கள நிகண்டு
“உணாவே வல்சி உண்டி ஓதனம்
அசனம் பகதம் இசை ஆசாரம் உறை, ஊட்டம் “
 
என வகைப்படுத்துகிறது. இவை தவிர புகா, மிசை என்னும் சொற்களும் உணவைக் குறிக்கப் பயன்பட்டிருக்கின்றன.

தொல்காப்பியர் மரபியலில் “மெய் திரி வகையின் எண்வகை உணவில் செய்தியும் உரையார்” என்பார் (பொருளதிகாரம் 623) இங்கு எண்வகை உணவு குறிக்கப்படுகிறது. இளம்பூரணர் இதற்கு உரைகூறும்போது நெல், காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், கோதுமை என எண்வகைத் தானியங்களைக் குறிப்பிடுகிறார். ஆனால் சங்ககாலத் தமிழகத்தில் சாமை, இறுங்கு, கோதுமை போன்ற தானியங்கள் வழக்கில் இல்லை.

உணவை ஐவகை உணவாகக் கூறுவது ஒரு மரபு. பெருங்கதை “ஐவேறு அமைந்த அடிசிற் பள்ளியும்” எனக் கூறும்.

பிங்கல நிகண்டு கறித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல், என்றிவை ஐவகை உணவே எனக் கூறும்.

வடமொழியில் “பஞ்ச பக்ஷய பரமான்னம்” என்ற வழக்கு தமிழ் மரபை ஒத்தது. ஐவகை உணவு முறையை நடைமுறையில் உண்பன, தின்பன, கொறிப்பன, நக்குவன, பருகுவன என்பர். இந்தப் பாகுபாடு உணவின் தன்மை, உண்ணும்முறை, சுவை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

உண்பன என்பதற்கு அரிசிச்சாதம், புழுங்கல், பொங்கல் போன்றன உதாரணங்கள். சமைத்த காய்கறி கூட்டுகள் வரிசையில் பொரியல், அவியல், துவட்டல், துவையல் ஆகியனவும் கொறிப்பன வரிசையில் வற்றல் வடாம் போன்றனவும் அடங்கும்.

பச்சடி, கிச்சடி போன்றன நக்குவன வரிசையில் வரும்.

பருகுவன என்பதில் பானகம், பாயகம், கஞ்சி, கூழ் ஆகியன அடங்கும்.

சிற்றுண்டிப் பண்டங் களை (அப்பம், இட்டலி) தின்பன வரிசையில் அடக்கலாம்.

உணவின் சுவைகளை உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு என ஆறு வகைகளாகக் கூறுவதுண்டு. குற்றியலுகரச் சொற்களுக்கு உதாரணமாக இச்சொற்களைக் கூறுவர். வடமொழியாளர் இச்சுவைகளை லவண, கஷாய, தித்த, கடு, மதுர, அம்ல என்பர். இந்திய உணவுக்குரிய தானியங்களில் பரவலாக அறியப்பட்டவை அரிசியும் கோதுமையும் ஆகும்.

இவை பற்றிய செய்திகள் இந்திய இலக்கியங்களிலும் பழைய வேதங்களிலும் வருகின்றன.

ரிக்வேதத்தில் பார்லி என்னும் தானியத்தைப் பற்றி மட்டுமே குறிப்பு வருகிறது.

பிரகதாரண்ய சம்ஹிதையில் குறிப்பிடப்படும் பத்து தானியங்களில் அரிசி, பார்லி, கோதுமை ஆகியன அடங்கும். யஜுர் வேதத்தில் கடவுளர்க்கும் கோதுமை உணவு படைக்கப்பட்டது பற்றிய செய்தி வருகிறது.

தொல்காப்பியம், எள் தானியத்தை உணவுப் பொருளாகக் கூறுகிறது.

அகநானூற்றில் கொள்ளும் (காணம்) பாலும் கலந்து வைத்த கஞ்சி பற்றிக் குறிப்பு வருகிறது.(371213) அவரை விதையை அரிசியுடன் கலந்து தயாரித்த கஞ்சி பற்றிய குறிப்பை மலைபடுகடாம் கூறும் (434) தானியங்களை வெயிலில் காய வைத்துச் சமைக்கும் பழக்கம் பொதுவாக இருந்திருக்கிறது. (அகம் 250 நற் 344).

பண்டைய தமிழர்களின் உணவு.பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் பிற்காலக் கல் வெட்டுக்களிலும் அரிசியைப் பயன்படுத்திய விதம் பற்றிய தகவல்கள் வருகின்றன. தமிழகத்தின் மிகப் பழைய தொல்லியல் சான்று கிடைத்த ஆதிச்ச நல்லூர் மக்களிடம் அரிசி பயன்பாட்டில் இருந்தது. பட்டினப் பாலை “சோறு வடித்த கஞ்சி ஆற்று நீர் போல ஓடியது” என்பதை “சோறு வாக்கிய கொழுங் கஞ்சி யாறு போலப் பரந்து ஒழுகி “, என வருணிக்கிறது. (வரி 4445)

அரிசியை மூன்று ஆண்டுக் காலம் பாதுகாக்கும் முறை பற்றிய தொழில்நுட்பம் பழந்தமிழர் அறிந்திருந்தனர். “சாதம்’ எனப் பொதுவாக இன்று வழங்கப்படும் அரிசிச் சோறு, பொது வழக்கில் சோறு என்றே வழங்கப்பட்டிருக்கிறது. இன்று வழக்கில் சாதம் என வழங்குவது உயர்வாகக் கருதப்படுகிறது. என்றாலும் பழைய இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் சோறு என்னும் பெயரே பொதுவாகக் கையாளப்படுகிறது.

ஆற்றுக்குள் இருந்து அரகரா என்றாலும் சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கநாதன் என்பது பழம் பாடல். சோறு என்பதற்கு அடிசில், அழினி, கூழ், அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை எனப் பல சொற்கள் இருந்தன. பச்சரிசியால் பொங்கப்பட்ட சோற்றை பொங்கல் என்றும், புழுங்கல் அரிசியால் பொங்கப்பட்ட சோற்றைப் புழுங்கல் என்றும் அழைக்கப்பட்ட வழக்கம் இருந்திருக்கிறது.

சங்ககால ஒளவை, அதியமான் நெடுமான் அஞ்சியை சிறு சோற்றாலும் நனிபல கலத்தன்,பெருஞ்சோற்றாலும் நனி பல கலத்தன் என்கிறார். இதனால் சோறு, சிறுசோறு, பெருஞ்சோறு என வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் “பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையம் “ என வருமிடத்தில் (சூத்60) இச்சோறு சுமங்கல காரியத்திற்குரியது என்ற பொருளில் குறிக்கப்படுகிறது. அகநானூற்றில் (பாடல் 110) சிறுசோறு என்ற சொல் மங்கல காரியத்திற்காகக் காட்டப்படுகிறது. சோற்றில் கலந்த பொருளின் அடிப்படையில் இது பின்னொட்டாக வரப் பல பெயர்களால் வழங்கப்படுகிறது. ஊன் சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, புளிச்சோறு, பாற்சோறு, வெண்சோறு என சோற்றுக்கு பல பெயர்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.

இன்னும் வழக்கில் உள்ள உளுத்தஞ்சோறு சங்க காலத்தில் மங்கல நிகழ்ச்சிகளில் பரிமாறப்பட்டது. அகநானூறு (8612) “உழுந்து தலைப் பெய்த கொழுங்கழி மிதவை “ எனக் கூறும். இங்கு மிதவை என்பது சோற்றுக்குரிய பெயர்தான். அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட அவல், பொரி இரண்டையும் பால் கலந்து சாப்பிடுவது என்னும் பழக்கம் ஆரம்பகாலத் தமிழகத்திலும் பிற்காலத்திலும் இருந்திருக்கிறது.

நீர் கலந்த சோற்றுப் பருக்கையைக் கஞ்சி என்பது பொது வழக்கு. பிங்கல நிகண்டு கஞ்சிக்கு காடி, மோழை, சுவாகு என்னும் சொற்களைக் கூறும் தென்னிந்திய வாய் மொழிக் கதைகளும் புத்த சமயம் தொடர்பான நூல்களும் கஞ்சி குடிக்கும் வழக்கம் பொதுவானது என்கின்றன. வறுமைக் கோட்டிலிருந்த மக்கள் பழைய சோற்றைக் கஞ்சி என்ற சொல்லால் குறிப்பிட்டனர். கஞ்சிக்கு அலைந்து அடிமை ஆனோம் என்று பறை அடிமை ஆவணம் ஒன்று கூறும். பழங்கஞ்சி மிகச் சாதாரண உணவாக இருந்தது என்பதற்கு இது ஆதாரம்.

பண்டைய தமிழர்களின் உணவுக...அரிசியால் தயாரிக்கப்பட்ட ஆப்பம், இடி ஆப்பம், பிட்டு, கும்மாயம், இட்லி, தோசை போன்ற உணவு வகைகள் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் அரிதாகக் காணப்படுகின்றன. பிற்காலச் சோழர் காலத்தில் இடி ஆப்பம் என்னும் அரிசிப் பலகாரம் வழக்கில் இருந்திருக்கிறது. அதைப் பாலுடன் கலந்து சாப்பிட்டனர். இதற்குக் கல்வெட்டுச் சான்று உண்டு.

பெரும் பாணாற்றுப்படை கும்மாயம் என்னும் பலகாரத்தைப் பற்றிக் கூறும் (19495) அவித்த பயிற்றுடன் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படுவது கும்மாயம். இந்த உணவு பற்றி மணிமேகலை “பயிற்றுத் தன்மை கெடாது கும்மாயமியற்றி “ (27185) எனக் கூறும். அம்பா சமுத்திரம் கல் வெட்டிலும் இந்தக் கும்மாயம் உணவு என்ற அர்த்தத்தில் கூறப்படுகிறது. இது பயிற்றுப் போகம் என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது.

மதுரைக் காஞ்சி (624) மெல்லடை என்னும் அரிசி உணவைப் பற்றிக் கூறும். இது தோசை வடிவில் இருந்திருக்கலாம். புட்டு அல்லது பிட்டு எனப்படும் அரிசி உணவு பற்றிய செய்தி புராணங்களில் வருகிறது. திருவிளையாடல் புராணம் மண் சுமந்த படலத்தில் “களவிய வட்டம் பிட்டு கைப் பிட்டு பிட்டு ” எனக் குறிக்கப்படுகிறது. இந்தப் பிட்டு வட்டக் கிண்ணத்தில் வைக்கப்பட்டது என்கிறார் உரையாசிரியர்.

தமிழகத்தில் தெலுங்கர், மராட்டியர் ஆதிக்கத்துக்குப் பின்னர் எண்ணெய் பலகாரங்கள் பொது வழக்கில் வந்தன என்ற கருத்து உண்டு. இசுலாமியர், ஐரோப்பியர் போன்றோரின் செல்வாக்கு புதிய பல காரங்களையும் உணவுப் பழக்கத்தையும் மாற்றியிருக்கின்றன.

சங்கப் பாடல்களில் ஊன், கள் இரண்டிற்கும் தான் அதிகச் சொற்கள் இருக்கின்றன. 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட இலக்கியங்களிலும் உணவின் வகைகள் தயாரிப்பு பற்றிய செய்திகள் குறைவாகவே வருகின்றன. தனிப் பாடல் திரட்டில் பலகாரங்களின் பட்டியல் உள்ள பாடல்கள் உண்டு.

“தேன்குழல் அப்பம் தோசை யித்தியமாவுடலில்
திகழ்வடை அப்பளம் பணியாரங்கள் எலாம் நீத்தே
ஓங்கியமுதலட்டு பலகாரமுள அளைமார்க்கு
ஒடுங்கிய பாயசம் நிகர்த்த உற்றார்க்கும் அஞ்சி
வீங்கு இபந்கோடா முலையில் பூந்தினவு கொண்டுன்
விரகமதில் அதிரசமுற்று அன்பிட்டு வந்தான்
தாங்குதல் நின்கடன் செந்தில் வேலரசே
தண்பாலாய் அடைதல் எழில்தரு முறுக்குதானே “
என்ற ஒரு பாடல் உண்டு.

-worldtamilswin.com

தொகுப்பு – thamil.co.uk