காதலர்தினம் valentines day

அம்பிகாவதி அமராவதி காதல்காதலர்தினமாக மாசி 14ஐ பிரகடனப்படுத்தி மலர்கொண்டு மங்கையர் பின்னால் மன்மதர்களும், காதல்களைகள் கொண்டு காளையர் பின்னால் கொங்கையர்களும் ஒடித்திரிந்து கொண்டாடுவர்.

கீழத்தேய நாடுகளின் 7வயதுக்கு முன்னரும் 70வயதுக்குப் பின்னரும் இந்தக் காதல் உருவாவதில்லை. காரணம் என்ன? இந்தக்காதல் பன்மவயதில் மட்டும் எப்படி உருகிறது? காதலில் தொடர்ச்சி காமமாக அமைவது ஏன்?

இயற்கையின் சுரப்புக்களின் இருப்போ காதலும் காமம். இனப்பெருக்கம் என்னும் கோட்பாட்டை நடத்தி முடிக்க இயற்கை அமைத்த பொறிமுறையே காதல். சுரப்புக்கள் எனும் பொறியினுள் விழுந்து காதல் எனும் கவர்ச்சியினுள் அமிழ்ந்து விடுகின்றன உயிர்கள். இக்காதலில் தொங்கித் தொடரும் காமம் வாரிசுகளை உருவாக்குகின்றது. ஆணுக்குள் பெண்ணும், பெண்ணுக்குள் ஆணுமாக இயற்கை மனிதனைப் படைத்தாலும் உணர்வுகளை உயிர்மையை சுரப்புக்களினூடே நடத்தி முடிக்கிறது. காதல் காமம் இரண்டும் இனப்பெருக்கத்துக்கான ஒடுபாதைகளே.

இந்தக்காதலர் தினத்தை மேற்கில் valentines day என்பர். இந்த வலன்ரயினுக்கும் காதலுக்கும் என்ன தொடர்பு. இந்நாள் மேற்கு ஐரோப்பாவில் இருந்துதான் எம்கீழத்தேயங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வலன்ரைன் யார்?

உரோமர்களால் காதல் தேவதையான யூணோவை மையப்படுத்தி மாசி 14ல் ஒரு திருவிழா ஆரம்பமாகும் இது குடுப்பத்தையும் பெண்மையையும் பெருமைப்படுத்தும், முதன்மைப்படுத்தும் நாளாக லூப்பர்கலியா திருநாள் எனக் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்நாளுக்கும் காதலுக்கும் பெரிய தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை. அன்று உரோமர்கள் இந்துக்களைப் போல் பலதெய்வ வணக்கங்களைக் கொண்டவர்களாகவே இருந்தார்கள். இடி, மின்னல் போன்ற இயற்கையின் சீற்றங்களுக்கும் காதல், கோபம், இன்பம் போன்ற உணர்வுகளுக்கும் கூட தெய்வங்களை தேவதைகளை சிருஸ்டித்து வணங்கி வந்தார்கள். இந்த நடுமாசி நாளை கிஸ்தவமயமாக்கப்பட்ட உரோமாபுரி தத்தெடுத்துக் கொண்டது. இந்நாளுக்கும் காதலர் தினத்துக்கும் என்ன தொடர்பு? நிச்சயம் இல்லைத்தான் அப்போ வலன்ரைன் என்பது யார்? இதற்கும் காதலுக்கும் என்ன தொடர்பு?

சென் வலன்ரைன் என்பவர் ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் சுமார் கி.பி 3ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் அவர் கத்தோலிக்க முறையை மீறி படைவீரர்களுக்கு திருமணம் செய்து வைத்தார் என்றும், அதனால் அவர் கிளொடியஸ் என்ற உரோம் மன்னனால் சிறையில் அடைக்கப்பட்டு சிரச்சேதம் தீர்ப்பாக்கப்பட்டது என்றும், அவர் தலை துண்டிப்பதற்கு முன்னர் அவரின் இரகசியக் காதலியான யூலியாவுக்கு எழுதிய கடிதத்தில் உனது வலன்ரைன் என்று குறிப்பிட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. ஆக காதலர்களும் காதலும் கொல்லப்பட்ட தினமா இந்த காதலர் தினம் எனும் வலன்ரைன் டேய்?

கிறிஸ்தவர்கள், ஐரோப்பியர், வெள்ளையர்களுக்கு மட்டும் தான் காதல் வருமா? அப்படி வந்து காதல்கள் அனேகமாக 7வருடத்தினுள் விட்டு விட்டு எப்படி ஓடிவிடுகிறது? எம்மக்களுக்கு காதலே வருவதில்லையா? தமிழர்கள் நாம் காதல் செத்த இனமா?

எம்மிடமும் காதலுக்காகத் தலை துண்டிக்கப்பட்ட உண்மை நிகழ்வுகள் உண்டு. கம்பன் மகன் அம்பிகாபதி அரசிளங்குமரியை விரும்பியதும் அதில் 100 பாடல்களை தொடர்ச்சியாகப் பாடினால் திருமணத்தை ஏற்றுக் கொள்வதாக அரசன் அறித்து அப்போட்டி நடந்தியதும், கடவுள் வணக்கத்தையும் சேர்ந்து எண்ணியதால் 100 ஆவது பாடலுக்கு முன்னர் அரசகுமாரி சபையில் தோன்ற 100 பாடலை பாடாது அம்பிகாபதி போட்டியை முடித்ததான் எனத் தீர்ப்பாகி போட்டியில் தோல்வியுற்றான் அம்பிகாபதி என்று சிரச்சேதம் செய்யப்பட்ட காதல் எம்மிடமும் உண்டு.

Ambikapathyஇது சிவாஜிகணேசனால் நடிக்கப்பட்ட கறுப்பு வெள்ளை திரைப்படமாகவும் உள்ளது. இது எத்தனை இளசுகளுக்குத் தெரியும்? இந்த அம்பிகாபதி யார்? எமக்கு கம்பராமாயாணம் என்ற இதிகாசத்தைத் தந்த கம்பனின் புதல்வன் தான் அம்பிகாபதி. புலவர்கள் அறப்பாடியே கொல்வார்கள். அப்படிக் கம்பன் அறப்பாடி அரசனைக் கொன்றான் என்ற இரத்தம் தோய்ந்த, காதலுக்காக உயிர்விட்ட உண்மைகள் எம்மிடமும் உண்டு.

காதலைக் கண்டு பிடித்தவர்கள் ஐரோப்பியர் என்றும், மதம் கிறிஸ்தவம் என்றும் மாசி 14ல்தான் காதல் உச்சம் கொண்டு ஆடும் என்றும் கனவுகாணும் இளசுகளே, காதலுக்கே உலகின் முதன் முதலில் தினம் வைத்து பலநாட்கள் கொண்டாடியவர்கள் தமிழர்கள் என்பதை அறிவீர்களா? அதைவிட காதலுக்கும் காமத்துக்கும் மலரம்பு கொண்ட காமனையும் மனையாள் இரதியையும் வணங்கியவர்களும் தமிழர்களே. காதலை புனிதமாக்கி அதற்கு அழகான இரு தெய்வங்களை உருவாக்கி தெய்வநிலை நாடுபவன் காமன் வணக்கம் கொள்ளாதவன் என்பதையும் உருவாக்கி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இது எதையுமே அறியாமல் ஐரோப்பிய பாதிரி ஒருவரின் காதல் தான் காதல் மற்றையவை மோதல் என்றா எண்ணி இந்நாளைத் தெரிவு செய்து பூக்களுடனும் இனிப்புப் பண்டங்களுடனும் ஓடித்திரிகிறீர்கள்?

காவிரிப்பூம்பட்டினம், சேரநாடு மதுரையில் 2500வருடங்களுக்கு முன்னரே காதலர்தினம் காதல்விழாவாகக் கொண்டாடப்பட்டது. கி.மு 3 நூற்றாண்டுக்கு முந்திய சோழன் செம்பியன் தமிழுக்கு இலக்கணம் எழுதிய அகத்தியரின் ஆணைப்படி காதல் திருவிழா கொண்டாடினான் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்விழாக்கள் ஒருநாள் அல்ல பலநாட்கள் கொண்டாடப்பட்டன. ஆனால் உரோமிலோ காதலர்தினம் என்ற பேச்சே கி.பி 3ம் நூற்றாண்டிலேயே பேசப்பட்டது. கி.மு 5ல் நூற்றாண்டிலேயே இந்திவிழா என்றும் பின்னர் காதல்விழா காமன்பண்டிகை என்றும் இன்று காமாண்டி விழா என்றும் கிராமங்களில் கொண்டாடப்படுகிறது. இப்படி ஒரு பண்டிகை ஈழத்தின் கிழக்கில் மட்டக்களப்பில் இன்றும் கொண்டாடப்படுவதாக அறிய முடிகிறது.

இந்த இந்திரவிழா காதல்விழா காமன்பண்டிகை என்னபற்றி அகநானூறு 5, 76,  135, 222,  236, 375 ம் பக்கங்களில் காணலாம். இப்படியாக எமது மூதாதயர்கள் காதலுடன் கைகுலுக்கி இணைந்து கொண்டாடி வாழந்தார்கள் என்பதையே உணராது உரோமாபுரியின் பாதிரியின் காதலைக் கொண்டாடும் மக்களாக எம் இளந்தலைமுறை காதல் களமாடுகிறது என்பது படுவேதனைக்குரியது. தனது பேரனையே தெரியாதவன் அமெரிக்கா ஜனாதிபதியின் பீட்டனை அறிந்து வைத்திருக்கிறான். நான் யார் என்பதை அறியாது வாழ்வதும் ஒரு வாழ்வா? இந்த உலகத்துக்கு நாகரீகத்தை மட்டுமல்ல காதலையே கொடுத்தவர்களும் கொண்டாடியவர்களும் நாங்களே. 500 ஆண்டுகளுக்கு மேல் வெள்ளையர் காலணித்துவத்தில் அடிமை உணர்வேறிய உள்ளங்களின் விளைவா இது? வெள்ளையர்கள் செய்வது அனைத்தையும் சரி என்று ஏற்கும் அடிமைத்தளையை எப்போ வெட்டி எறியப்போகிறீர்கள்?

வெள்ளையர்கள் கொடுத்த நல்லவை அனைத்தும் ஏற்கனவே கீழத்தேயங்களில் களவெடுக்கப்பட்டவைதான். எம்மிடம் இரும்பைக் களவெடுத்து துப்பாகியாக எம்மை நாமே கொல்லத் தந்தவர்களும் வெள்ளையர்களே. நீ யார் உன் ஆணிவேர் என்ன எது என்று அறியாத வரை இரவல் சீலையில் இதுநல்ல கொய்யகம் என்றே வாழ்ந்து கொண்டிருப்பாய். உன் பீட்டனுக்கு திவசமோ கிறுத்தியமோ கொடுக்க முடியாத நீ வலன்ரைன் என்ற பாதிரி செத்த நாளுக்கு பூக்கொண்டு ஓடித்திரிகிறாயே தமிழா! உனக்கு வெட்கமாக இல்லையா? தேடு உன் ஆணிவேரைத் தேடு, அது உன்நிலத்தில் ஆழமாக ஊன்றி இருப்பதை அறி. மேலை நாட்டு மோகத்தை வெட்டி எறி.

மாசி 14ல் நீங்கள் கொண்டாடும் காதலர்தினம் என்பது ஒருபாதிரியைக் கொலை செய்து காடாத்திய தினமே. இங்கே காதல் காடாத்தப்பட்டது என்பதை அறி. ஐரோப்பா உறைபனியில் இருந்த காலத்திலேயே காதலுக்கும் காமனுக்கும் கோவில் அமைத்தவர்கள் தமிழர்கள் என்பதைப் புரி.

IMG_4117-1இன்று இக்காதலர்தினம் வெறும் கேளிக்கையாக்கப்பட்டு வியாபாரமாக்கப்பட்டது என்பதை புரிந்து கொள். இன்று பணம் பண்ணுவதே வாழ்க்கை என்று ஆனபின் காதலுக்கு நேரமின்றி நேரம் கொடுத்துக் காதலிக்கும் நிலைக்கே இன்று ஐரோப்பா வந்துள்ளது. ஆசையோ பாசமோ பணம் கொடுத்தே வாங்கப்படுகிறது. சென்றவருடம் 2015ல் நோர்வேயில் காதலர் தினத்துக்கான பொருட்கள் 255 மில்லியன் (255000000) குரோண்களுக்கு ஒருநாளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்தபோது இது பணத்துக்காக வரவழைக்கப்பட்ட போலிக் காதல் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இயற்கையுடன் ஒன்றிவாழ்ந்த உன்பாட்டனும் பீட்டனும் காதலில் ஒன்றிக் கொண்டாடி வாழந்த காலங்களைத் தேடு அதைக் கொண்டாடு. அதுவே உன்னுடையது. எம்மினத்தில் மதத்தில் இல்லாத ஒரு அன்னியனின் காதலைக் கடவுளாகக் கும்பிடும் ஈழத்தனத்தை விட்டொழித்து உனக்குரிய உன் இனத்துக்குரிய காதல் தினத்தை கண்டுபிடி. அதை ஆராதி பூசி. இதுவே நீ அடிமை உணர்வைக் களைந்தெறியும் முதற்படி ஆகும். நீ வெறும் காமத்தில் கட்டுப்பாடு இன்று வெறும் இச்சையில் பிறந்தவன் அல்ல. காதலைக் கொண்டாடிய போற்றி ஒரு இனத்தின் வாரிசு என்பதை அறி.

காதலுடன்
நோர்வே நக்கீரா
14.02.2016