சம்பங்கியின் மருத்துவ குணங்கள்

சம்பங்கிசம்பங்கியின் பூக்கள் இயற்கையாகவே மணம் நிறைந்தவை. மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஊட்ட வல்லவை. சிகிச்சை முறையில் மணமுள்ள மலர்களையோ அவைகளினின்று பெறப்பட்ட வாசனை மிகுந்த எண்ணெய் களையோ கொண்டு நோய் தீர்க்கும் முறை ஒன்று உண்டு. அதற்கு நறுமணச் சிகிச்சை (அரோமா தெராபி) என்று சொல்லப்பெறும்.

மணமுள்ள ஓர் தாவரத்தின் இலை, பூ, பட்டை, தண்டு, வேர், விதை ஆகியவற்றின்று இயற்கை மணமுடைய எண்ணெய் தயாரித்து அதை மருந்தாகப் பயன்படுத்துவது உண்டு. நறுமணமுள்ள இந்த எண்ணெய்களை முகர்வதாலும் உடலின்மேல் தேய்த்துக் கொள்வதாலும் மனோநிலையில் ஓர் தூண்டுதல் ஏற்படுகின்றது.

நறுமணம் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றது. இதனால் மூளையின் அழற்சி தணிகிறது. நல்லதோர் மனோ பாவத்தை (mood) நறுமணம் நல்குகிறது.

சம்பங்கியின் நறுமணம் மனிதனின் மனதுக்கு அமைதியைத் தருகின்றது. மன உளைச்சல், மன அழுத்தம், கோபம், பரபரப்பு, நரம்புத் தளர்வு, வலிப்பு, தசைப்பிடிப்பு, குத்திருமல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் குணப்படுத்த உதவுகின்றது.

சம்பங்கி thamil.co.ukசம்பங்கியின் நறுமணம் நரம்புகளுக்கும் சுவாச உறுப்புகளுக்கும் சுகந்தரவல்லது. சுவாசப் பாதை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஏற்பட்ட அழற்சியைத் தணித்து சீராண சுவாசத்துக்குத் துணை செய்கிறது.

சம்பங்கி உடலின் இரத்த ஓட்டத்தைத் தூண்டி உடலுக்கு உஷ்ணத்தைப் பரவச் செய்கிறது. இதனால் பணிக்காலத்திலும் குளிரைத் தாங்கும் தன்மையை உடல் பெறுகிறது.

உடல் வெப்பம் பெறுவதால் சுவாசப் பாதை யிலும் சுவாச அறையிலும் சளி, கோழை ஆகிய துன்பம் தரும் பொருட்கள் சேராத வண்ணம் தடுக்கப்படுகின்றது.

சம்பங்கி எண்ணையை மேல் பூச்சாகப் பயன்படுத்துவதால் தொற்றுக் கிருமிகள் தாக்காத வண்ணம் தோல் பாதுகாப்பைப் பெறுவதோடு தோலின்மேல் ஏற்படும் வெடிப்புகள் தவிர்க்கப்படுகின்றது.

சம்பங்கி எண்ணையைத் தலைக்குத் தேய்க்கும் எண்ணையோடு சேர்த்துப் பயன்படுத்துவதால் தலைமுடி உதிர்வு, தலைமுடியின் முனைகளில் உடைதல், இளை நரை, குமட்டல் போன்ற தொல்லைகள் விலகுகின்றன.

நில சம்பங்கி மருந்தாகும் விதம்

* சம்பங்கிப் பூவை உலர்த்தி வைத்துக் கொண்டு தேவையான போது 5 அல்லது 6 பூக் களை நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து பனங் கற்கண்டு அல்லது சீனாக் கற்கண்டு சேர்த்து தினம் இரண்டு வேளைகள் உணவுக்கு முன் பருகி வருவதால் “கொனோரியா” என்னும் பால்வினை நோய் விரைவில் குணமாகி உடலும் மனமும் தேறும்.

* சம்பங்கிப் பூக்களை நன்கு மைய அரைத்துப் பசையாக்கி நீண்ட நாட்களாக உடையாமலும் ஆறாமலும் இருக்கும் கொப்புளங்கள், கட்டிகள் இவற்றின் மேல் பற்றாகப் போட்டு வைக்க இரண்டொரு நாட்களில் கட்டிகள் பழுத்து உடைந்து சீழ்வெளியேறி சீக்கிரத்தில் குணமாகும் கொப்புளங்களும் வந்தவடு தெரியாமல் விலகிப் போகும்.

* சம்பங்கிக் கிழங்கை அரைத்து மேற்பற்றாகப் பூசுவதன் மூலம் சீன தேசத்து மக்கள் தீக்காயங்களை குணப்படுத்தவும், தோலினைப் பாதிக்கும் தொற்றுக் கிருமிகளை வெளியேற்றவும், அடிபட்ட காயங்கள், கட்டி ஆகியவற்றின் வீக்கங்களைக் கரைக்கவும் பயன்படுத்துகின்றனர்.

* சம்பங்கிப் பூக்கள் ஐந்தாறு எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சிக் சுவைக்காக தேன் அல்லது கற்கண்டு சேர்த்துப் பருகிவருவதால் சிறுநீர் தாராளமாகக் கழியும். இதையே சற்று அதிகமாகக் குடிப்பதால் வாந்தியை வரவழைத்து வயிற்றில் தங்கித் துன்பம் தரும் செரிமானமாகாத நச்சுப் பொருட்களை வெளியேற்றி நன்மை பயக்கும்.

* சம்பங்கிப் பூவை உலர்த்திப் பொடித்து மைய சலித்து வைத்துக் கொண்டு மேற்பூச்சாகப் பூசுவதால் வேர்க்குரு விரைவில் மறைந்து அது தரும் நமைச்சலில் இருந்தும், தோலுக்குத் தரும் தொல்லையில் இருந்தும் விடிவு தரும்.

* சம்பங்கிச் செடியின் இலையை நன்றாக அரைத்துப் பசையாக்கித் தலைக்குத் தடவி வைத்திருந்து இருபது நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து விடுவதால் தலையில் அரிப்பு தருவதோடு செதில் செதிலாக மாவு போல உதிரச் செய்தல், துர்நாற்றம் வீசுதல் போன்றவற்றுக்குக் காரணமான பொடுகுத் தொல்லையினின்று குணம் ஏற்படும்.

தொடர்ந்து மூன்று அல்லது நான்கு வாரங்கள் இப்படி சம்பங்கி இலையைத் தலைக்குத் தேய்த்து குளித்து விடுவதால் பூரண கேச ஆரோக்கியம் கிடைக்கும்.

* ஐந்தாறு சம்பங்கிப் பூக்களைத் தீநீராக்கிச் சுவைக்காகப் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்துக் குடிப்பதால் செரிமானத்தைத் துரிதப்படுத்தி சீரணக் கோளாறுகளைக் கண்டிக்கும். மேலும் வெயிற்காலத்தில் வெயிலில் திரிந்து வந்ததால் ஏற்பட்ட காய்ச்சல் தணியும்.

-சரவணா ஸ்ரீ