ஆரோக்கியப்பச்சா

ஆரோக்கியப்பச்சாமூலிகையின் பெயர் – ஆரோக்கியப்பச்சா
தாவரவியல் பெயர் – TRICHOPUS ZEYLANICUS
தாவரக்குடும்பம் – TRICHOPODACEAE
பயன்தரும் பாகங்கள் – இலை மற்றும் பழம்

வளரியல்பு – ஆரோக்கியப்பச்சா ஒரு சிறு மூலிகைச் செடி. இதில் இருவகை மட்டும் உள்ளது. இலங்கையில் இதற்கு வேறு பெயரில் அழைப்பர். இதன் இலை 20 செ.மீ. நீள்ளது. இதன் இலைகள் மனிதனின் இதய வடிவில் அமைந்திருக்கும். இலைகள் இடத்திற்குத் தக்கவாறு மாறுபடும். இது மணற்பாங்கான இடத்தில், ஆற்றுப்படுகைகளில் நிழலில் வனங்களில் நன்கு வளரக்கூடிய மூலிகைச் செடி. வருடம் முழுவதும் பூக்கள் இருக்கும். பழங்கள் விடும். அதிகம் பழுத்தால் தண்ணீரில் மிதந்து செல்லும்.

ஆரோக்கியப்பச்சா..பூக்கள் கருநீலத்தில் தென்படும். இலங்கையில் வெண்மையாக இருக்கும். இதன் தாயகம் இந்தியா. ஆரோக்கியப்பச்சா மலேசியா, சிங்கப்பூர், இலங்கை தாய்லண்டு மற்றும் தென் இந்தியாவில் தென்மேற்கு மலைத்தொடரில் கேரளாவில் அகஸ்தியர் மலையில் காணி என்ற மலைவாழ் மக்களால் தொன்று தொட்டு மூலிகையாகப் பயன்படுத்தி வருகின்றனர். விஞ்ஞானிகள் 1987ல் தான் அது பற்றி ஆய்வு செய்துள்ளனர் அந்த மலைவாழ் மக்கள் அந்த மூலிகையை ‘ஆரோக்கியப்பச்சா’ என்று குறிப்பிட்டனர். அதற்குப் பொருள் ‘சக்தியைக் கொடுப்பது’ என்று சொன்னார்கள். இது இனவிருத்தி செய்ய விதை மூலமும், பக்கக்கிழங்குகள் மூலமும் செய்யப்படுகிறது. வியாபார ரீதியாக கிழங்குகள் மூலமாகத்தான் செய்கிறார்கள். திசு வளர்ப்பு முறையிலும் முயற்சி செய்துள்ளனர்.

ஆரோக்கியப்பச்சாவின் மருத்துவகுணங்கள்
ஆரோக்கியப்பச்சா ஒரு வித சக்தியைக் கொடுக்கிறது. மனிதர்களின் எடையைக் குறைக்க இதைப் பயன்படுத்துகிறார்கள். இது ஈரல் சம்பந்தமான வியாதியைக் குணப்படுத்தும்.

இது வயிற்றில் ஏற்படும் குடல் புண்ணைக் குணமாக்கும். காணி மலைவாழ் மக்கள் ஆரோக்கியப்பச்சாவின் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு ஒரு வாரம் கூட மலையினுள் செல்வர், அப்போது அவர்களுக்கு பசி ஏற்படாது நல்ல சக்தியுடன் செயற்படுவர். மேலும் ஆண் பெண் உறவில் அதிக சக்தியைத் தூண்டுவதாகச் சொல்கிறார்கள். இவர்கள் கூற்றை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் சுண்டெலிகளுக்குக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டதில் உண்மை என்று தெரிந்தனர்.

-மூலிகைவளம்