தொடர் ஏப்பத்திற்கு தீர்வு

ஏப்பம்வாயு என்னும் காற்றை உணவுக்குழாய் மூலம் வாய் வழியாக வயிறு வெளியேற்றுகிறது. அப்போது வாயிலிருந்து ‘ஏவ்’ என்று ஒருவித சப்தத்துடன் ஏப்பம் வருகிறது. சாப்பிட்ட பிறகோ அல்லது பானங்களைக் குடித்த பிறகோ ஏப்பம் ஏற்படும். சிலருக்கு சாப்பிடுவதற்கு முன்பே ‘பசி ஏப்பம்’ ஏற்படும். மேலும், அஜீரணக் கோளாறு காரணமாக நிறையப் பேர் ஏப்பம் விட்டு அவதிப்படுவார்கள்.

ஏப்பம் என்பது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண விஷயம் தான் என்றாலும், பல கலாச்சாரங்களில் அது மிகவும் அநாகரிகமாகக் கருதப்படுகிறது. இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் மேலை நாடுகளில் கூட இது கொஞ்சம் அருவருப்பாகத் தான் பார்க்கப்படுகிறது. தொடர் ஏப்பம் அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். இப்போது இந்த ஏப்பத்தை நம் வீட்டு சமையலறையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சரி செய்யலாம்.

அடிக்கடி வரும் ஏப்பத்தை சரிசெய்ய
ஏப்பத்திற்கு உடனடி நிவாரணம் தரும் ஒரு பொருள்தான் இஞ்சி. சமிபாட்டுப் பிரச்சனையையும் இது உடனடியாகத் தீர்க்கும். மாத்திரை மற்றும் சாறு வடிவில் எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், இஞ்சியைக் கடித்தும் சாப்பிடலாம். தேனுடன் இஞ்சி கலந்த தேனீர் குடித்தும் ஏப்பத்தைச் சரி செய்யலாம்.

நீர் மற்றும் பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்தாலும் ஏப்பம் உடனடியாக அடங்கும்.மேலும் சமிபாட்டும் சரியாகும்.

பப்பாளி சத்துள்ள பப்பாளிப் பழத்தை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலமும் ஏப்பத்தைத் துரத்தலாம். பப்பாளியில் உள்ள பாப்பெய்ன் என்னும் என்சைம், நம் உடலில் தோன்றும் வாயுப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறது.

தயிர் சாப்பிடுவதன் மூலமும் ஏப்பத்தைத் தவிர்க்கலாம். தயிரில் உள்ள பாக்டீரியா அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளையும் சரி செய்ய வல்லது. தயிரின் பிற வடிவங்களான இனிப்பு கலந்த லஸ்ஸி மற்றும் உப்பு கலந்த மோர் ஆகியவற்றையும் குடிக்கலாம்.

ஏப்பத்தைக் குறைப்பதில் பெருஞ்சீரகம் (சீமைச்சோம்பு) பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்த பின்னும் இதை வாயில்போட்டு மென்றால் ஏப்பத்தைத் தவிர்க்கலாம்.

சமிபாட்டை துரிதப்படுத்துவதில் ஏலக்காய்க்கு நிகர் ஏலக்காய் தான். வாயு அதிகமுள்ள உணவுகளை ஏலக்காய் தேனீர் குடிப்பதன் மூலம் சமிபாடடைய வைக்கலாம். அதன் விளைவாக ஏப்பம் குறைகிறது. சாப்பாட்டுக்கு முன் இதைக் குடிப்பது நல்லது. ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், வறுக்கப்பட்ட சீரகத்தை மென்று தின்று வந்தால், ஏப்பம் உள்ளிட்ட அனைத்து வாயுப் பிரச்சனைகளும் சரியாகும்.

பலவிதமான வயிற்றுக் கோளாறுகளுக்கு சீமைச் சாமந்தி தேனீர் நல்லது. தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் சீமைச் சாமந்தி தேனீர் குடித்தால் ஏப்பம் விடுவது நிற்கும்.

கொதிக்கும் நீரில் புதினா இலைகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் வரை நன்றாகக் கலக்க வேண்டும். உறங்கச் செல்லும் முன் இந்த நீரைக் குடித்தால் ஏப்பம் ஓடிப் போகும்.

வெறும் வயிற்றில் ஒரேஒரு பல் பூண்டைக் கடித்து விழுங்கி, நீர் குடிக்கவேண்டும். இதனால் வயிறு சுத்தமாகி விடும். ஏப்பம் உள்ளிட்ட சமிபாட்டுப் பிரச்சனைகளுக்கு பூண்டு தான் சிறந்தது.

பெருங்காயம் கலந்த சுடு நீரை சாப்பாட்டிற்கு முன் குடித்தால், ஏப்பம் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனைகள் சரியாகும்.

சுமார் மூன்று மணிநேரம் வெந்தயத்தை ஊற வைத்து, வெறும் வயிற்றில் குடித்தால் ஏப்பம் சரியாகும். வாயும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு துளி சோயா எண்ணெயைக் கலந்து சாப்பிட்டால், ஏப்பம் உடனடியாகச் சரியாகும்.

சாப்பிட்ட பின் ஓரிரு கிராம்புகளை மென்று சாப்பிடுவதன் மூலம், சமிபாட்டுப் பிரச்சனைகளும் ஏப்பமும் சரியாகும் ஏப்பம் அதிகம் வரும் போது ஒரு டம்ளர் ஐஸ் தண்ணீரைக் குடித்தால், ஏப்பம் உடனே நின்றுவிடும்.

செரிமானக் கோளாறு
பசியின்மை – ருசியின்மை – புளித்த ஏப்பம் – நெஞ்செரிச்சல் – வயிற்று உப்புசம். இந்தக் கோளாறுகள் இன்றைய அவசர உலகில் அனைவருக்கும் ஏற்படும் ஒரு வியாதி. இது முற்றினால் வயிற்றுப்புண் (அல்சர்) ஏற்படும். இதற்கு எளிமையான மருந்து சீரகம். சீராக உள் உறுப்புகளைக் காப்பதால் இதற்குச் சீரகம் என்ற காரணப்பெயர்.

நூறு கிராம் சீரகத்தை மண்சட்டியில் கோப்பிபொடி நிறம் வரும் வரை நன்கு வறுக்கவும். அதனை நன்கு பொடி செய்து பாட்டிலில் பத்திரப்படுத்தவும். தினமும் மூன்று வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வெந்நீர் அருந்தவும். நல்ல நிவாரணம் கிடைக்கும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் தேனில் குழைத்துக் கொடுக்கலாம்.

-ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்
-மூலிகைவளம்