தமிழிசைப்பண்கள் -அறிமுகம் : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் : உலகின் முதல் இசை தமிழிசையே!! அறிமுகம் – தொடர் – 01

“வாதாபி கணபதிம் பஜே…”

முத்துசாமி தீட்சிதர்“வாதாபி கணபதிம் பஜே…” பெரும்பாலான கர்நாடக இசைக் கச்சேரிகளில் முதன் முதலில் பாடப்படும் பாடல் இதுதான். கர்நாடக சங்கீதம் அறிந்தவர்களுக்கே இந்தக் கீர்த்தனை முழுமையாகத் தெரியும். இதனுடைய பொருள் அறிந்தவரும் மிகச்சிலரே.

முத்துசாமி தீட்சிதர் ஒரு அம்பாள் உபாசகர் ஆவார். இந்தப் பாடலை இவர்தான் இயற்றினார். சுமார் இருநூறாண்டுகளுக்கு முன்னால் எட்டயாபுரத்து மன்னரின் ஆதரவில் வாழ்ந்தவர். இவர் மேலும் பல கீர்த்தனைகளை எழுதியுள்ளார். இந்த வாதாபி கணபதிம் என்னும் கீர்த்தனையை இவர் திருவாரூரில் உள்ள மூலாதாரக் கணபதியின் மீது பாடினார் என அறியமுடிகிறது. இந்தக் கணபதியை ‘வாதாபி கணபதி’ என்றும் அழைப்பார்கள். இந்தக் கீர்த்தனையில் அவர் பதினாறு விதமாக கணபதியின் பெருமைகளைச் சொல்லுகிறார். “ஷோடச கணபதி கீர்த்தனை” என்ற பெயரும் இதற்கு உண்டு.

திருவாரூரில் உள்ள வாதாபி கணபதி மேல் பாடப்பட்ட “ஷோடச கணபதி கீர்த்தனை”.

பல்லவி
வாதாபி கணபதிம் பஜேஹம்
வாரணாஸ்யம் வரப்ரதம் ஸ்ரீ

அனுபல்லவி
பூதாதி ஸம்ஸேவித சரணம்
பூதபௌதிக ப்ரபஞ்ச பரணம்
வீதராகிணம் வினதயோகினம்
விச்வகாரணம் விக்னவாரணம்

சரணம்
பூராகும்ப ஸம்பவ முனிவரப்ரபூஜிதம்
த்ரிகோண மத்யகதம்
முராரி ப்ரமுகாத்யுபாஸிதம்
மூலாதார க்ஷேத்ரஸ்திதம்
பராதி சத்வாரி வாகாத்மகம்
ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்
நிரந்தரம் நிடில சந்த்ரகண்டம்
நிஜவாமகர வித்ருதேகக்ஷுதண்டம்
கராம்புஜபாசபீஜாபூரம்
கலுஷவிதூரம் பூதாகாரம்
ஹராதிகுரு ஹதோஷித பிம்பம்
ஹம்ஸத்வனி பூஷித ஹேரம்பம்

பொருள்:
யானை முகம் கொண்டவராகவும் வரங்களைக் கொடுக்கின்றவராகவும் விளங்கும் வாதாபி கணபதியை நான் பஜனை செய்கிறேன். பூதகணங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவர். பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும் தரிப்பவர். ஆசையில்லாதவர். வணங்கப்படும் யோகியர்களை உடையவர். உலகங்களுக்குக் காரணபூதர். இடையூறுகளைப் போக்கடிப்பவர். முன்காலத்தில் கும்பசம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்னுவாதாபி கணபதிம் சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர்.மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர். விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர். மூலாதார க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்குவித வாக்கு சொரூபமாக இருப்பவர்.

பிரணவ சொரூபமாக (ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர். எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர். தமது இடது கையில் வைத்திருக்கப்பட்ட கரும்புத் துண்டத்தை உடையவர். தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம், இவற்றை உடையவர். பாபமற்றவர். பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர். பரமசிவன் முதலியவர்களாலும் சிவகுருவாகிய முருகனாலும் சந்தோஷிக்கப்பட்ட சொரூபத்தை உடையவர். ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானைமுகத்தோன்.

யார் இந்த வாதாபி கணபதி ?
இவர் எங்கிருந்து வந்தார் ?
இவருக்கும் தமிழிசைக்கும் எத்தகைய தொடர்புகள் ?

உலகின் முதல் இசை  தமிழிசையே!! அறிமுகம் – தொடர் – 02

அறிமுகம் - தொடர் - 02“வாதாபி கணபதிம் பஜே…”
வேழமுகத்து விநாயகனைத் தொழ
வெற்றி மிகுந்து வரும்!
வேண்டிய சித்திகள் யாவும் கைகூடும்!

வாதாபி கணபதி
பல்லவி
வாதாபி கணபதியை மனமாரத் துதித்தேன்
நீதான் கதியென்று மலர்ப்பதம் பணிந்து

துரிதம்
பூதகணங்களும் நந்தியும் பிரமனும்
நரர்சுரரனைவரும் கரம்பணிந்தேத்தும்

அனுபல்லவி
மாதா பார்வதியும் மாதொருபாகனும்
வேதாகமங்களும் புகழ்ந்து கொண்டாடும்

சரணம்
பாதாரவிந்தம் சரணடைந்த பக்தருக்கு
ஆதரவளித்திடும் ஆனைமுகத்தோனை
சாதாரணர்களையும் மேதாவியாகச்செய்யும்
மாதயாகரனை கேசவன் மருகனை
(கேசவன் இசைப்பாடல்கள்)

ஏற்றுக்கொண்ட காரியம் இனிதே நிறைவேற எல்லாம் வல்ல முதல்வனாம் விநாயகப் பெருமானைப் போற்றி வழிபாடுவோம்!

வாதாபி கணபதி – அகத்தியர்
துன்பப்படுவோர் துயரை தடுப்போரில் முதன்மை வாய்ந்தவர் விநாயகர். முழு முதற் கடவுளாகிய அவரை தஞ்சமென்று சரணடைந்து விட்டால் மலைபோல்வந்த துயரும் பனி போல் நீங்கி விடும். ஒரு முறை வாதாபி, இவ்வலன், என்ற இரண்டு அசுரர்கள் கடுமையாக தவம் இருந்து பல அரிய வரங்களை பெற்றனர். வரம் பெற்ற பின் ரிஷிகளுக்கும், சாதுக்களுக்கும் தொல்லை தந்து அவர்கள் செய்யும் யாகம், பூஜை போன்றவற்றிற்கு ஊறு விளைப்பது அசுரர்களின் வழக்கம். இவர்கள் ரிஷிகளை தந்திரமாக கொல்வார்கள்.  தம்பி இவ்வலன் தன் சக்தியால் அண்ணன் வாதாபியை மிருகமாக்குவான். அதை கொன்று, அந்த மாமிசத்தால் யாருக்கும் தெரியாத வகையில் சுவையான அறுசுவை உணவை சமைப்பான். அதை மிகவும் பக்குவமாக ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் படைப்பான். அவர்கள் சாப்பிட்டு முடித்தும், வாதாபி வா என்று அழைப்பான் இவ்வலன். உடனே சாப்பிட்ட ரிஷிகளின் வயிற்றை கிழித்துக் கொண்டு வாதாபி வெளியே வருவான். ரிஷிகள் இறந்து போவார்கள். தாங்கள் பெற்ற இந்த அரிய வரத்தின் மூலம் பல முனிவர்களையும் கொன்று வந்தார்கள் இவர்கள். தங்கள் சாமர்த்தியத்தை அகத்திய மாமுனிவரிடமும்  காட்ட நினைத்தனர் அரக்கர்கள் இருவரும்.

அகத்தியரை அழைத்த விருந்து படைத்தான் இவ்வலன். ஆனால் அகத்தியர் சாப்பிட்டு முடித்தவுடன் வாதாபி ஜீரோணத்பவ (வாதாபி ஜீரணமாகிவிட்டான்) என்று தன் வயிற்றை தடவினார். வாதாபி அழிந்து போனதும், இவ்வலன் உயிர் பிழைப்பதற்காக கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டான். அப்போது விநாயகரை பிரார்தித்தார் அகத்தியர். விநாயகர் அருளிய வரத்தால் கடலையே தன் உள்ளங்கையில் ஏந்தி உறிஞ்ச இவ்வலனும் அகத்தியர் வயிற்றுக்குள் சென்று ஜீரணமானான்.

தனக்கு அருள் புரிந்த விநாயகரை பிரதிஷ்டை செய்து அவருக்கு வாதாபி கணபதி என்றும் பெயர் வைத்தார் அகத்தியர். வாதாபி என்ற அசுரனை ஜெயித்துக் கொல்வதற்காக அகத்தியர் உபாசித்த கணபதி அவர். திருச்செங்கட்டான்குடிக்கு வந்து சேர்ந்தார். வாதாபி என்ற அசுர வதத்துக்குக் காரணமான அந்த ஊருக்குப் வாதாபி என்ற பெயர் வழங்கலாயிற்று. அது சாளுக்கிய ராஜவம்சத்தவர்களின் தலைநகரமாக ஆயிற்று.

பிள்ளையார் வழிபாடு செய்யும் வழக்கம் தமிழகத்துக்கு எப்படி வந்தது?

முருகப் பெருமானைப் பற்றி முதன்முதலில் குறிப்பிட்டுப் பெரும்புலவர் நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை  கி.பி. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். முருகப் பெருமானைப் பற்றிப் பேசும் போதெல்லாம்  விநாயகப் பெருமானைப் பற்றியும் பேசுவதே வழக்கம். ஆனால் சங்க இலக்கியத்தில் முதல் பாடலான திருமுருகாற்றுப் படையில் எந்த ஒரு இடத்திலேயும் விநாயகர் பற்றிக் குறிப்புகள் இடம்பெறவேயில்லை. எனவே 2ம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

கி.பி. 7ம் நூற்றாண்டில் கல்லிலே கலைவண்ணம் கண்ட  பல்லவ மன்னன் நந்திவர்மன், வட புலத்தைச் சேர்ந்த சாளுக்கிய மன்னன் 2ம் புலிகேசி மீது படை எடுத்துச் சென்று வெற்றி வாகை சூடினான். இந்தப் படையெடுப்பு வெற்றிபெறக் காரணமாக இருந்தவர் “பரஞ்சோதி” என்ற படைத்தளபதியே ஆவார். பல்லவர் – சாளுக்கியர் போர் “வாதாபி” என்ற இடத்தில் நடந்தது.

படை நடைத்திச் செல்லும்முன் “வாதாபி” நகரில் கோயில் கொண்ட விநாயகப் பெருமானை, படைத்தளபதியார் பரஞ்சோதி மனம் உருகி வழிபாடு செய்த பின்னர் சென்றார். பரஞ்சோதி தஞ்சை மாவட்டம், “திருச்செங்காட்டங்குடி” என்ற ஊரைச் சார்ந்தவர். வாதாபி கணபதியின் அருளால்தான், புலிகேசியை வென்றதாகக் பரஞ்சோதி கருதினார். எனவே வாதாபி கணபதிக்கு, தன் மன்னன் நரசிம்மவர்மன் ஆசிபெற்று திருச்செங்காட்டங்குடியில் வாதாபி கணபதியை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். பெரியபுராணத்தில் பரஞ்சோதியைச் “சிறுத்தொண்ட நாயனார்” என்று குறிப்பிடுகின்றார். பிள்ளைக்கறி கேட்ட சிவனுக்குத் தன் புதல்வனையே தர வந்த அழுத்தமான சிவபக்தரே இந்தப் பரஞ்சோதி ஆவார். எனவே பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் ஆண்ட கி.பி. 7ம் நூற்றாண்டில்தான் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் வழக்கத்திற்கு வருகிறது. திருச்செங்காட்டங்குடி வாதாபி கணபதி கோயிலுக்கு “கணபதீச்வரம்” என்ற பெயரும் உண்டு.

காஞ்சி மகா பெரியவரின் ஆய்வு:
காஞ்சி மகா பெரியவர், தமிழ்நாட்டில் வாதாபி கணபதி வழிபாட்டுக்கு முன்பே விநாயகர் வழிபாடு தோன்றிவிட்டது. கி.பி. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞான சம்பந்தர், தன் தேவாரப் பதிகத்தில் விநாயகர் வழிபாடு பற்றிக் கூறியுள்ளார். திருநாவுக்கரசரும் விநாயகரைப் போற்றியுள்ளார். எனவே வாதாபி கணபதியை வழிபாடு செய்வதற்கு முன்பே தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு தோற்றம் பெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் திருச்செங்காட்டங்குடியில்தான் முதன்முதல் வாதாபி கணபதியைப் பரஞ்சோதி முனிவர் பிரதிஷ்டை செய்தார் என்ற கருத்தையும் காஞ்சி மகான் மறுக்கிறார்.

திருவாரூர் “மூலாதார ஷேத்ரம், பிருதிவி ஸ்தலம்” என்று போற்றப் பெறும் புனிதத் தலமாகும். மூலாதாரத் தலமாகிய திருவாரூரில் அகத்திய முனிவரே மூல முதல்வனாகிய “வாதாபி கணபதி”யை முதன்முதலில் பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும் என்று தன் ஆய்வு முடிவாகக் குறிப்பிட்டுள்ளார் ஆச்சாரிய சுவாமிகள்.

தன் ராம பக்தி கொஞ்சும் பாடலால் ஸ்ரீ இராமனையே நேரில் கண்டு வழிபாடு செய்த தியாகராஜ சுவாமிகள், தம் கீர்த்தனையில் திருவாரூரில் “அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பெற்ற வாதாபி கணபதியையே போற்றி, “வாதாபி கணபதிம் பஜே” என்று பாடியுள்ளார் என்றும் ஆச்சாரிய சுவாமிகள் கூறியுள்ளார்.

திருவாரூரில் உள்ள வாதாபி கணபதியின் வடிவமைப்புத்தான் சாளுக்கியர் கால வடிவமைப்பு என்றும் திருச்செங்காட்டாங்குடி வாதாபி கணபதி சாளுக்கியர் பாணியில் அமையவில்லை என்பதும் காஞ்சி மகா பெரியவர்கள் ஆய்வு முடிவாகும்.

பிள்ளையார்பட்டி பிள்ளை யார்?

ராஜாஜியின் இனிய அன்பர் சா. கணேசன் (சுதந்திரப் போராட்ட வீரர்), தான் அரிய கல்வெட்டுக் குறிப்புகளுடன் ஆய்வு செய்து எழுதியுள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் தல வரலாற்றில் பல்லவர் காலத்துக்கு முன்பே, அதாவது கி.பி. 7ம் நூற்றாண்டுக்கும் முன்பே, கி.பி. 4ம் நூற்றாண்டில் ஆண்ட பாண்டியரின் திருப்பணியால் வடிவமைக்கப் பெற்றதே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் என்று முடிவு கூறியுள்ளார். மேலும் உலகின் முதல் பிள்ளையார் ஆலயம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயமே என்றும் தெளிவு படுத்தியுள்ளார்  சா. கணேசன்.

சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இல்லை என்பதனை அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆரியர்கள் தமிழ் நாட்டில் புகுத்தியவற்றில் கணபதி வழிபாடும் ஒன்றாகும்.

அறிமுகம் - தொடர் - 03உலகின் முதல் இசை தமிழிசையே!!  அறிமுகம் – தொடர் – 03

“கைத்தல நிறைகனி…”
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய …… மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் …… அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை …… கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய …… மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய …… முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த …… அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை …… இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் …… பெருமாளே.

சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இல்லை என்பதனை அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆரியர்கள் தமிழ் நாட்டில் புகுத்தியவற்றில் கணபதி வழிபாடும் ஒன்றாகும். கர்நாடக இசைப்பாடகர்கள் பாட்டுத் தொடங்கும் முன் கணபதியை அதாவது முதற் கணபதியை வணங்குவதாக, கர்நாடக இசை மூவர்களில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் பாடிய “வாதாபி கணபதி பஜேம்” என்னும் பாடலைப் பாடுகின்றார்கள்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டு அல்லது அய்ந்தாம் நூற்றாண்டுக்கு முன் எந்த இலக்கியத்திலும் விநாயகர் பற்றிய குறிப்பு இல்லை. சிற்ப அமைதியிலும் ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட விநாயகர் சிலை ஏதும் இல்லை. தமிழகத்தில் சங்க காலத்திற்குப் பின் சங்க காலத்தில் பத்து விழுக்காடு அளவு இருந்த ஆரியம் பல்கிப் பெருகி, வடக்கும், தெற்கும் பல்வகையில் இணைந்தன.

தீபாவளி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி, ராமநவமி,  கிருஷ்ண ஜெயந்தி ஆகியன இறக்குமதியாயின.

குணம், குறி, உருவம் அற்ற பரம் பொருள் என்று இயற்கைக்கு உருவம் கொடுக்காத தமிழர் மத்தியில் வெவ்வேறு வடிவங்களைக் கற்பித்தனர் ஆரியர்.

சிவன், திருமால், சக்தி, கணபதி, முருகன் சூரியன் என்று கூறி பெயரிட்டு வழிபடும் நெறி முறைகளையும் வகுத்தனர்.

தமிழர்களின் கடவுளான இந்திரன், வருணன் வடநாட்டு வழிபாட்டு முறையில் அறு சமயப் பிரிவில் இடம்பெறவில்லை. இப்படிப் பரவியதுதான் கணபதி வழிபாடு. வாதாபிக் கணபதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஆலயங்களுக்கு நாம் செல்லும் போது முதலில் பிள்ளையாரை வணங்கிய பின்பே மூலவரையும், மற்ற பரிவார மூர்த்திகளையும் வணங்கவேண்டும்.

பின்வரும் பாடல்கள் போலப் பெரும்பாலான சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் காப்புச் செய்யுள் அல்லது கடவுள் வாழ்த்துக்கள் அமைந்துள்ளன.

திருமந்திரம் காப்புச் செய்யுளில்
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்றுகின்றேனே”

சிவஞானசித்தியார் காப்புச் செய்யுள்
“ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன்
நால்வாய் ஐங்கரத்தன் ஆறு
தரு கோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான்
தரும் ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே
இரவுபகல் உணரவோர் சிந்தைத்
திருகு ஓட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன்
றோஎன்னச் செய்யும் தேவே.”

திருவருட்பயன் காப்புச் செய்யுளில்
“நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்கன்று காண்.”

சிவப்பிரகாசம் பாடல்
“நலந்தரநூல் இருந்தமிழின் செய்யுட் குற்றம்
நண்ணாமை இடையூறு நலியாமை கருதி
இலங்குமிரு குழையருகு பொருதுவரி சிதறி
இணைவேல்கள் இகழ்ந்தகயல் கண்ணியொடும் இறைவன்
கலந்தருள வரும்ஆனை முகத்தான் மும்மைக்
கடமருவி எனநிலவு கணபதியின் அருளால்
அலந்துமது கரமுனிவர் பரவவளர் கமலம்
அனையதிரு அடியிணைகள் நினைதல் செய்வாம்.”

திருவிளையாடற் புராணம் காப்புச் செய்யுளில்
“சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதிசெயச்
சுத்தி யாகிய சொற்பொரு ணல்குவ
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே.”

ஔவையார் நல்வழியில் கடவுள் வாழ்த்தில்
(14 ம் நூற்றாண்டில்)
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.”

விநாயகர் துதிகள்
வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள்நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!

தமிழிசைப்பண்கள் : தொடர்  01-03
சிறீ சிறீஸ்கந்தராஜா
22/01/2016 – 05/02/2016

தொகுப்பு – thamil.co.uk