அழகுக்கும் அடிப்படையாகும் உணவு!

கரிசலாங்கண்ணியும் பொன்னாங்கண்ணியும் அழகுக்கு உதவுபவை என்பதில் சந்தேகமில்லை. கீரையைப் பறித்துப் பதப்படுத்தித் தலைக்குத் தேய்க்கவோ, மூலிகைகளைத் தேடிக் கண்டுபிடித்து முகத்துக்குத் தடவவோ இன்று யாருக்கும் நேரமோ, பொறுமையோ கிடையாது. எல்லாவற்றிலும் அவசரமாகப் பலன் எதிர்பார்க்கும் மக்கள், அழகு விஷயத்திலும் அப்படித்தான். இன்ஸ்டன்ட் அழகைக் கொடுப்பதால்தான் மக்கள் கூட்டம் பார்லர்களை நோக்கிப் படையெடுக்கிறது. ஆனால், அழகு என்பது அவசரத்தில் வாய்ப்பதில்லை. அதற்காக காடு, மலை, கடல் தாண்டி, மூலிகைகளைத் தேடிக்கொண்டு வந்தோ, பார்லர்களில் போய் காஸ்ட்லியான சிகிச்சைகளை செய்து கொண்டோதான் அழகாக வேண்டும் என்றில்லை. உணவே மருந்து மட்டுமல்ல… உணவுதான் அழகுக்கும் அடிப்படை என்கிறார் அழகு மற்றும் உணவியல் நிபுணர் ஹேமா லஷ்மணன்.

நமக்கு கைக்கெட்டிய தூரத்தில் – அதாவது, சமையலறையில் தினசரி நமது கண்களில் பட்டுக் கொண்டிருக்கும் பொருள்களை சரியாக உபயோகித்தாலே அழகு தேடிவரும் என்கிறவர், அப்படி சில பொருள்களையும் அவற்றின் பலன்களையும் பட்டியலிடுகிறார்.

மாதுளை
இயற்கை நமக்களித்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதம் இது. மாதுளையின் சாறெடுத்து, சிறிது தண்ணீர் கலந்து குடித்தால், இரத்தசோகை காணாமல் போகும். சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஒரே நேரத்தில் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். செரிமானத்தை சீராக்கி, உடல் சூட்டை தணித்து, பலவீனம் போக்கி, இரத்த விருத்திக்கு உதவும். மாதுளம் பழத்தோலை வெயிலில் காய வைத்து, பொடித்து, அரை தேக்கரண்டி அளவு எடுத்து மோரில் கலந்து குடித்தால் உடல் வலிமையும் வனப்பும் பெறும்.

மருதாணிப் பொடியுடன், சிறிதளவு மாதுளை ஜூஸ், கோப்பிதூள், சிறிது புரோட்டீன் பவுடர், எலுமிச்சைச்சாறு எல்லாம் கலந்து ஒரு நாள் முழுக்க ஊறவைத்து, தலையில் தடவிக் குளித்தால், கூந்தல் அழகான ‘பர்கண்டி’ நிறத்தைப் பெறும்.

மாதுளையை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கு உதடுகள் இயற்கையான சிவப்பழகும் பளபளப்பும் பெறும். மாதுளை சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு வரும் என நினைப்போர், அதை முழுதாக அப்படியே வெந்நீரில் சிறிதுநேரம் போட்டு வைத்திருந்து, பிறகு உடைத்துச் சாப்பிடலாம்.

பப்பாளி
பப்பாளியை அழகு தரும் பழம் என்றே சொல்லலாம். பருமனை நீக்கி, மேனிக்கு மெருகூட்டுவதில் பப்பாளிக்கு இணையே இல்லை. பப்பாளியின் இலையும் மருத்துவ குணம் வாய்ந்தது.

பப்பாளி இலையைக் காய வைத்து அரைத்துக் கொள்ளவும். அதில் 2 தேக்கரண்டி அளவு எடுத்து, 1 தேக்கரண்டி மாதுளை சாறு கலந்து, முகத்துக்கு பூசி கழுவினால், முகம், கழுத்துப் பகுதிகளில் உள்ள கருமை போகும். அலர்ஜி இல்லாதவர்கள் மட்டும் இதைச் செய்யவும்.

கொய்யா, ஆப்பிள், பேரிக்காய்
ஒரு துண்டு கொய்யா, ஒரு துண்டு ஆப்பிள், ஒரு துண்டு பேரிக்காய் மூன்றையும் தினம் 5 முறைகள் இடைவெளி விட்டு சாப்பிட்டால் உங்கள் சருமம் கண்ணாடி போல மின்னும்.

கொத்தமல்லி
கொத்தமல்லியை சுத்தம் செய்து, இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் அந்தத் தண்ணீரை குடித்தால், உடல் குளிர்ச்சியடையும். கொத்தமல்லியை பொடித்து வைத்துக் கொண்டு, சமைக்கிற எல்லாவற்றிலும் சிறிது சேர்த்துச் சாப்பிடுகிற பழக்கம் இருந்தால், செரிமானமும் சீராகும்.

கடுகு
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். கடுகை மிகக்குறைந்த அளவுதான் உபயோகிக்க வேண்டும். அது வெடித்து, அதிலுள்ள சல்ஃபர் வெளியேற வேண்டும். கடுகெண்ணெய் மிகச்சிறந்த வலி நிவாரணி. கழுத்தைச் சுற்றிலும், இடுப்பைச் சுற்றியும் கருப்பு உள்ளவர்கள், கடுகெண்ணெய் கொண்டு மசாஜ் செய்து துடைத்தால், கருமை நீங்கி, சருமம் பளிச்சென மாறும்.

ஜாதிக்காய்-பொடிஜாதிக்காய்
வயிற்றுப் பிரச்னைகளுக்கு மருந்து. நரம்புகள் வலிமை பெறும். ஜாதிக்காயைப் பொடித்து, கால் தேக்கரண்டி எடுத்து சூடான சாதத்தில் பிசைந்து ஒரு வாய் சாப்பிட்டால், வாயுத்தொல்லை இருக்காது.

ஜாதிக்காயை பால் விட்டு அரைத்து, கண்களுக்கு அடியில் வாரம் 2 முறை, 3 மாதங்களுக்குச் செய்து வந்தால், கருமை மறையும்.

கொத்தமல்லி கீரைகொத்தமல்லி தழை
கொத்தமல்லி தழையை சமைக்கிற எல்லாவற்றிலும் சேர்த்துக் கொள்ளலாம். கொத்தமல்லி தழைச்சாறு பருக்களையும் பரு வந்த தழும்புகளையும் போக்கக்கூடியது.

-ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்