அணியிலக்கணம் 12 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம்

அணியிலக்கணம் – தொடர்- 65சொல்லணியியல் – மடக்கு பகுதி – 1
சொல்லணியியலில், சொல் அலங்காரமாக நிற்கும் முறை உணர்த்தப்படுகின்றது.

செய்யுளில் இடம் பெறும் சொற்கள் தம் அமைப்பு முறையால் அலங்காரமாகத் திகழ்வதை எடுத்துரைப்பதாக இப்பகுதி அமைகின்றது.

இப்பிரிவில் மடக்கு, சித்திரக்கவிகள், வழுக்கள், மலைவு ஆகியன குறித்த இலக்கணங்கள் இடம் பெறுகின்றன.

இவற்றுள் மடக்கு, சித்திரக்கவிகள் என்ற இரண்டு மட்டுமே சொல்லணியின் நேரடி வகைப்பட்டனவாகும்.

மடக்கு அணியின் இலக்கணம்
சொல்லால் செய்யுளின் ஓட்டத்தை மடக்கி அழகு தருவது, கற்பவருக்குச் சுவை தருவது, தவிர, வேறு வேறு பொருள் தருவதும் மடக்கு என்னும் சொல்லணியாகும்.

“எழுத்தின் கூட்டம் இடைபிறி தின்றியும்
பெயர்த்தும்வேறு பொருள்தரின் மடக்கெனும் பெயர்த்தே” (நூற்பா – 91)

செய்யுளில் இடம்பெறும் சொற்களில் அடங்கியுள்ள எழுத்துக்கள் இடையிலே பிரிப்பு இல்லாமலும், அதே சொற்கள் இடையிலே பிரிக்கப் பெற்றும் வேறு வேறு பொருள்களைத் தந்தால் அதற்கு மடக்கு என்று பெயராகும்.

யமகம், மடக்கு என்பன ஒரு பொருள் குறிப்பன. யமகம் வடமொழிப் பெயர், இதுவே முதனூலில் எடுத்தாளும் பெயருமாகும். மடக்கு தமிழ்ப் பெயர், இந்நூலில் எடுத்தாளும் பெயர் ஆகும்.

மடக்கு நான்கடிகளிலும் வரும்
“ஓரடி முதலா நான்கடி காறும்
சேரும் என்ப தெளிந்திசி னோரே” (நூற்பா – 92)

நான்கடிச் செய்யுளுள்ளே மடக்குங்கால்,
ஓரடிக்கண்ணும்,
ஈரடிக்கண்ணும்,
மூன்றடிக்கண்ணும்,
நான்கடிக்கண்ணும்
நடக்குமென்று சொல்லுவர் தெளிந்தோர்.

அதன்வகை
“ஆதி இடைகடை ஆதியோ(டு) இடைகடை
இடையொடு கடைமுழு தெனஎழு வகைத்தே” (நூற்பா – 93)
1. ஆதிமடக்கு
2. இடைமடக்கு
3. கடைமடக்கு
4. ஆதியோடு இடைமடக்கு
5. ஆதியோடு கடைமடக்கு
6. இடையோடு கடைமடக்கு
7. முழுதும் மடக்கு என எழு வகைப்படும்.

சொல்லணி ஒரு செய்யுளில் இடம்பெறும் அடிகளில் முதலாவதாக அமையலாம். இடைநிலையிலும், இறுதியிலும் அமையலாம்.

92 ஆம்நூற்பா முதல் இந்நூற்பாவரை கூறப்பட்ட தொடைகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
(1) ஓரடி மடக்கு
(2) ஈரடி மடக்கு
(3) மூவடி மடக்கு
(4) முற்று மடக்கு

ஓரடிமடக்கு நான்கு வகைப்படும்.
1 முதலடியில் மட்டும் மடங்கி வருவது.
2 இரண்டாமடியில் மட்டும்மடங்கி வருவது.
3 மூன்றாமடியில் மட்டும் மடங்கிவருவது.
4 நான்காமடியில் மட்டும் மடங்கி வருவது.

ஈரடி மடக்கு ஆறுவகைப்படும்.
1 முதல் ஈரடியில் மட்டும் மடங்கிவருவது.
2 முதலடியிலும் மூன்றாமடியிலும் மட்டும்மடங்கி வருவது.
3 முதலடியிலும் நான்காமடியிலும் மட்டும் மடங்கி வருவது.
4 இறுதி யிரண்டடியில்மட்டும் மடங்கி வருவது.
5 இடையிலுள்ள இரண்டடியில் மட்டும் மடங்கி வருவது.
6 இரண்டாமடியிலும் நான்காமடியிலும் மட்டும் மடங்கி வருவது.

மூவடி மடக்கு நான்குவகைப்படும்
1 ஈற்றடி யொழித்து ஏனைய மூன்றடியில்மடங்கி வருவது.
2 முதலடி யொழித்து ஏனைய மூன்றடியில்மடங்கி வருவது.
3 முதலடி, மூன்றாமடி, நான்காமடியில்மட்டும் மடங்கி வருவது.
4 முதலடி, இரண்டாமடி, நான்காமடியில் மட்டும் மடங்கி வருவது.

முற்றுமடக்கு
ஒன்று. – ஆகப் பதினைந்து வகைப்படும்.

இணை முதலாகிய விகற்பத் தொடை ஏழு வகைப்படும்
இணை
பொழிப்பு
ஒரூஉ
கூழை
மேற்கதுவாய்
கீழ்க்கதுவாய்
முற்று

மேற் கூறிய பதினைந்து மடக்குகளுள் இவ்விகற்பங்களைப் பெற்று வரும் மடக்குகள் ஏழாகும். அவையாவன:

ஈரடி மடக்குகளில்வருவன
முதல் ஈரடியில் மட்டும் மடங்கி வருவது – இணை.
முதலடியிலும் மூன்றாமடியிலும் மட்டும் மடங்கி வருவது – பொழிப்பு.
முதலடியிலும் நான்கா மடியிலும் மட்டும் மடங்கி வருவது – ஒரூஉ.

மூன்றடி மடக்குகளில் வருவன
ஈற்றடி யொழித்து ஏனை மூன்றடியில் மட்டும் மடங்கி வருவது – கூழை.
முதலடி, மூன்றாம் அடி, நான்காம் அடியில் மட்டும் மடங்கி வருவது – மேற்கதுவாய்.
முதலடி, இரண்டாம் அடி, நான்காம் அடியில் மட்டும் மடங்கி வருவது – கீழ்க்கதுவாய்

நான்கடியிலும் வரும் மடக்கு
முற்று மடக்கு ஒன்றாகும்.

இப்பதினைந்து மடக்குகளும், மேல் 93 ஆம் நூற்பாவில் கூறப்பட்ட ஏழு கூறுபாட்டோடும் வர (15 x 7 = 105) நூற்றைந்து மடக்குகளாகும்.

இந்த நூற்றைந்தும்
இடையிட்டு வருவன,
இடையிடாது வருவன,
இடையிட்டும் இடையிடாதும் வருவன என்னும் மூவகையோடும் விகற்பிக்க (105 x 3 = 315) மொத்தம் முந்நூற்றிப் பதினைந்து மடக்குகளாகும்.  அவற்றுள் சில எடுத்துக் காட்டுக்களை மட்டும் அடுத்து வரும் தொடர்களில் பார்ப்போம்.


அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம்


சொல்லணியியல் – மடக்கு பகுதி – 2 

1. ஓரடி முதன்மடக்கு

அணியிலக்கணம் – தொடர்- 656முதலடி முதன்மடக்கு
“துறைவா துறைவார் பொழிற்றுணைவர் நீங்க
உறைவார்க்கும் உண்டாங்கொல்? சேவல் – சிறைவாங்கிப்
பேடைக் குருகாரப் புல்லும் பிறங்கிருள்வாய்
வாடைக் குருகா மனம்”

நெய்தல்நிலத் தலைவனே! துறையின்கண் பெருத்திருக்கப்பட்ட பொழிலிடத்துத் தலைவர் பிரியத் தனித்திருப்பார்க்கும் உண்டாகுமோ? சேவற்குருகானது தன் சிறகை வளைத்துப் பேடைக் குருகை இறுகப்புல்லும் மிக்க இருளினையுடைய யாமத்துக்கண் வாடைக் காற்று வந்தால் கரையாத மனம்.

முதலடி முதலில், ‘துறைவா துறைவா’ என ஒரேசொல் மடங்கி வந்தமை காண்க.
துறைவா – நெய்தல் நிலத்தவனே!, பெயர்விளி.
துறை – கடல் துறையினிடத்து.
வார் -பெருத்திருக்கப்பட்ட.

2. ஈரடி முதன்மடக்கு

முதலடியும் இரண்டாமடியும் முதன்மடக்கு
‘நினையா நினையா நிறைபோ யகலா
வினையா வினையா மிலமால் – அனையாள்
குரவாருங் கூந்தல் குமுதவாய்க் கொம்பில்
புரவாள நீபிரிந்த போது”
தலைவனே! குரவம்பூவினையுடைத்தாகிய கூந்தலினையும், அல்லி மலரை யொத்தவாயினையும், உடைத்தாய் இருப்பதொருவஞ்சிக்கொம்பு உண்டாயின், அக்கொம்பு போன்றாளாய இவளை நீ பிரிந்த பொழுதே நின்னையாங்கள் நினைத்து எங்கள் நிறையாயினது எங்களை விட்டு நீங்கி வருந்தி ஒரு செய்தியும் அறியோமாயினேம்.

ஆதலால் எங்களைப்பிரியாது ஒழிவாயாக என்பது குறிப்பெச்சம்.
‘நின்னை’ என்பது ‘நினை’ என விகாரமாயிற்று.

இதன் முதலடியில் ‘நினையா நினையா’ என்றும்,
இரண்டாமடியில் ‘வினையா வினையா’ என்றும் மடக்குகள் வந்தமை காண்க.

இதுதலைவனைத் தோழி செலவழுங்குவித்ததாகும்.
முதலடியில் நினை யாம் நினையா எனவும்,
இரண்டாமடியில் இனையா வினையாம் எனவும் பிரித்துப்
பொருள் கொள்ள நின்றன.

இனையா -இனைந்து; வருந்தி

3. மூவடி முதன்மடக்கு

ஈற்றடி யொழித்து ஏனை மூன்றடியும் முதன்மடக்கு
“இறைவா இறைவால் வளைகாத் திருந்தியார்
உறைவார் உறைவார் புயலால் – நறைவாய்
வண்டளவு வண்டளவு நாளின்மயி லாலக்
கண்டளவில் நீர்பொழியுங் கண்”
இறைவனே! இறைக்கண் வெள்ளிய வளைகள் வீழாதபடி காத்திருந்து யார் உயிரோடு வாழ்வார்? துவலை மிக்க புயலினாலே, தேனை யிடத்திலேயுடைய வளப்பத்தையுடைய முல்லை மலரின் மீதே வண்டுகள் இருக்கப்பட்ட கார்காலத்து மயிலாடக் கண்டு அளவில்லாத நீரைப்பொழியும் கண்கள்.

‘இறைவா இறைவா’ என்று முதலடி முதலிலும்,
‘உறைவார் உறைவார்’ என்று இரண்டாமடி முதலிலும்,
‘வண்டளவு வண்டளவு’ என்று மூன்றாமடி முதலிலும் மடக்குகள் வந்தமை காண்க.

தலைவனது பிரிவின்கண் தலைவியது ஆற்றாமை கூறித்தோழி செலவழுங்குவித்ததாகும்.
இறைவா – இறைவனே; தலைவனே!
இறை – முன்கை. வால் – வெண்மையான.
உறைவார் – தங்குவார் (உயிரோடு வாழ்வார்).
உறை – நீர்த்துளி. வார் – மிக்க.
வண்தளவு – வளப்பம் பொருந்திய முல்லை.
வண்டு அளவு – வண்டுகள் இருக்கப்பட்ட.

4. முற்றுமடக்கு

முதல் முற்றுமடக்கு
“வரைய வரைய சுரஞ்சென்றார் மாற்றம்
புரைய புரையவெனப் பொன்னே! – உரையல்
நனைய நனைய தொடைநம்மை வேய்வர்
வினையர் வினையர் விரைந்து”
களவொழுக்கு ஆகாது எனக்கொண்டு வரைய வேண்டும் என்னும் ஆசையால் பிரிந்து மலைகளையுடைய சுரங்கடந்து போயினார், ‘நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன்’ என்று முற்காலத்து நம்மைத் தேற்றிய வார்த்தைகள் இப்பொழுது நமக்குப் பெரிதாகிய குற்றத்தைப் பயந்தனவென்று, பொன்னை யொப்பாய்! சொல்லற்பாலை யல்லை; மதுவோடும், குளிர்ச்சியோடும் கூடிய தொடையலை நமக்கு விரைந்து வந்து சூட்டுவர்; என்னை யெனில், அவர் பல செய்தியும் அறிவினையும் உடையராதலால்.

‘வரைய வரைய’ என்று முதலடி முதலிலும்,
‘புரைய புரைய’ என இரண்டாமடி முதலிலும்,
‘நனைய நனைய’ என மூன்றாமடி முதலிலும்,
‘வினையர் வினையர்’ என நான்காமடி முதலிலும் மடக்குகள் வந்தமை காண்க. இது பிரிவிடை ஆற்றாளாய தலைவியைத் தோழி ஆற்றுவித்ததாம்.

வரைய – வரையவேண்டும் என்ற ஆசையால்.
வரைய – மலைகளையுடைய.
புரைய – பெரிதாகிய.
புரைய – குற்றம்.
நனைய – தேன்.
நனைய – குளிர்ச்சி.
வினையர் – பல செயல்களையும் உடையவர்.
வினையர் – அறிவினையுடையவர்.

இவை அனைத்தும் அடிமுதன் மடக்குகள் என்பதனை மட்டும் நினைவில் கொள்க. இத்துடன் சொல்மடக்கு அணி முற்றுப்பெறுகிறது. அடுத்துவரும் தொடரில் அடிமடக்கு அணி பற்றி பார்ப்போம்.


அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம்

சொல்லணியியல் – மடக்கு பகுதி – 3 – அடி மடக்கு
அணியிலக்கணம் – தொடர்- 67“அடிமுழுதும் மடக்கலும் ஆங்கதன் சிறப்பே” (நூற்பா – 95)
அடிகள் முழுதும் மடக்கி வருதலும், அம்மடக்கிற்குச் சிறப்புடைத்து. அடி மடக்கின் வகைகளாவன:
1) ஈரடி மடக்கு
2) மூவடி மடக்கு
3) நான்கடி மடக்கு என மூன்று வகைப்படும்.

ஈரடி மடக்கு ஆறு வகைப்படும்.
(1) முதல் ஈரடியும் மடக்கு
(2) முதலடியும் மூன்றாமடியும் மடக்கு
(3) இடை யீரடியும் மடக்கு
(4) முதலடியும் ஈற்றடியும் மடக்கு
(5) கடை யீரடியும் மடக்கு
(6) இரண்டாமடியும் ஈற்றடியும் மடக்கு

மூன்றடி மடக்கு நான்கு வகைப்படும்.
(1) ஈற்றடி யொழித்து ஏனை மூன்றடியும் மடக்கு
(2) முதலடி யொழித்து ஏனை மூன்றடியும் மடக்கு
(3) இரண்டாமடி யொழித்து ஏனை மூன்றடியும் மடக்கு
(4) மூன்றாமடி யொழித்து ஏனை மூன்றடியும் மடக்கு

நான்கடி மடக்கு மூன்று வகைப்படும்
(1) ஏகபாதம்
(2) இயமாலியமகம்
(3) பாடகம்

ஈரடி,மூவடி மடக்கிற்கு ஒவ்வொரு எடுத்துக் காட்டுகளையும், நான்கடி மடக்கின் மூன்று வகைக்கும் ஒவ்வொரு எடுத்துக் காட்டுகளையும் பார்ப்போம்.

ஈரடி மடக்கு

முதல் ஈரடியும் மடக்கு
“விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக
விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக
வரைமேவு நெறியூடு தனிவாரல் மலைநாட!
நிரைமேவு வளைசோர இவளாவி நிலைசோரும்”

விரை மேவு மதமாய – கமழும் கடமுடைய,
விடர் கூடு – துன்பமுறும்,
கடுநாக இரை – கடிய யானைகளை இரையாகக் கொள்ள,

மேவு – விரும்பும், மதமாய – வலிய முழையுள்,
கூடு கடு நாகம் – உறையும் நஞ்சையுடைய பாந்தளையுடைய,

வரை மேவு – மலை பொருந்திய, நெறியூடு – வழியினூடு,
தனி வாரல் – தனிமையாய் வாராதொழியாக,
மலை நாட – குறிஞ்சி நிலத்தலைவனே! (அங்ஙனமின்றி வருவையாயின்),

நிரை மேவு – வரிசை பொருந்திய, வளைசோர – வளை சரிய,
இவள் ஆவி நிலை சோரும் – இவள் ஆவியும் நிலையினின்று நீங்கும்.

‘விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக’ என்ற சொற்றொடர் முதல் இரண்டடி முழுவதிலும் மடங்கி வந்தமை யுணர்க.

மூவடி மடக்கு

ஈற்றடி யொழித்து ஏனை மூன்றடியும் மடக்கு
“காம ரம்பயி னீரம துகரம்
காம ரம்பயி னீரம துகரம்
காம ரம்பயி னீரம துகரம்
நாம ரந்தை யுறனினை யார்நமர்”

கா – சோலையில், மரம் பயில் நீர – மரந்தொறும் நெருங்கின,
மதுகரம் – வண்டினமானவை,

காமரம் பயில் நீர – காமரம் என்னும் இசையைப் பாடாநின்றன,
மது கரம் – தேன் பொழியும்,

காமர் அம்பு – மதவேள் அம்பு,
அயில் நீர – வேற் செய்தியை யுடையவாயின,
மது – வேனிற்காலத்து, கரம் – எதிர்ப்பட்ட,

நாம் அரந்தையுற – நாம் துயருழப்பவும்,
நினையார் நமர் – நினையாதொழிந்தார் நம் காதலர்

‘காம ரம்பயி னீரம துகரம்’ என்ற சொற்றொடர், ஈற்றடி யொழிய மற்றைய மூன்றடிகளிலும் மடங்கி வந்தமை யுணர்க.

நான்கடி மடக்கு

ஏகபாதம் (நான்கடியும் மடக்கு)
“வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின”

வானம் – மேகம், கம்தரு – கடலினிடத்திற் கொடுக்கும்,
இசைய ஆயின – ஓசையோடுகூடியிருந்தன,

வான் – ஆகாயத்தை, அகம்தரும் – வவ்விக்கொள்ளும்,
மிசைய ஆயின – எழுச்சியை யுடையவாயின,

வானகம் – விண்ணுலகத்தை, தரும் – ஒக்கும்,
இசைய ஆயின – புகழையுடையன,

வால் நகம் – பெரிய மலைகள்
தரு மிசைய ஆயின – மரங்களை உச்சியிலே உடையன,

இதில் நான்கடிகளும் ஒரேவிதமாக மடங்கினமை யுணர்க. இது ஏகபாதமுமாம்.

ஒரே அடி. நான்கடியாக மடங்கிவரின் அது ஏகபாதமாம்.

இயமாலியமகம்
ஒரு சொல்லானே நான்கடியும் மடக்குவதனை, இயமாஇயமகம் என்ப.

“உமாதர னுமாதர
னுமாதர னுமாதர
னுமாதர னுமாதர
னுமாதர னுமாதரன்”

உமா – உமையை, தரனும் – தரித்தவனும்,
ஆதரனும் – ஆதரிக்கின்றவனும்,

மா தரனும் – மானைத்தரித்தவனும்,
மாதரனும் – திருவைத் தரித்தவனும்,

ஆ தரனும் – ஆனிரையைக் காத்தவனும்,
மா தரனும் – யானைத் தோலைத் தரித்தவனும்,

ஆ தரனும் – இடபத்தை நடத்துவானும்,
மா தரன் – பெருமையைத் தரித்த முக்கட்கடவுள்

இதில் “உமாதரன்” என்ற ஒரு சொல்லே நான்கு அடிகளிலும் மடங்கி வந்தமையுணர்க. அளவடிச் செய்யுளாக்கிற் செந்துறையாம்.

இப்பாடற்கண் ஒரு சொல்லே நான்கு அடிகளிலும் மடங்கி வருதலின், இது இயமாஇயமகம் ஆயிற்று.

பாடகம்
இரண்டடிப் பாடக மடக்கு,
அடிதொறும் இருதொடர்கள் மடங்கிவந்த பாடக மடக்கு,
இடையிட்டு வந்த பாடக மடக்கு என பாடக மடக்கு மூன்று வகைப்படும்.

ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.

இரண்டடிப் பாடக மடக்கு
“பணிப வநந்தன தாக மன்னுவார்
பணிப வநந்தன தாக மன்னுவார்
அணியென மேயது மன்ப ராகமே
அணியென மேயது மன்ப ராகமே”

பணி – பாம்புகளுக்கு, பவநம் – இடம்,
தனது ஆகம் மன்னுவார் – தனது மார்பகமாக நிற்பார்,
பணி – தாழ்ந்த, பவம் – பிறப்பு, நந்தல் – இறப்பு,
நதாக – இல்லையாக, மன்னுவார் – நிலைபெறுவார்,

அணியென – அழகென்று சொல்ல, மேயதும் – உறைவதும்,
அன்பர் ஆகமே – அன்பருடைய உள்ளமே,

அணியென – அலங்காரம் என்று சொல்ல,
மேயதும் – விரும்புவதும், மன் – என்றும் உள்ள,
பராகம் – திருவெண்ணீற்றை

பவனம் – இடம். பணிபவம் – தாழ்ந்த பிறப்பு.
நதாக – இல்லையாக.

பாடகம் – வளைவாக மடங்கியிருக்கும் ஒருவகைக் காலணி.

அது மடங்கியிருத்தல் போன்று, இரண்டடிகள் இப்பாடற்கண் மடங்கி வருதலின், இது இரண்டடிப் பாடக மடக்காயிற்று.

இத்துடன் அடி மடக்கு (சொல் மடக்கு) முற்று பெறுகின்றது. அடுத்துவரும் தொடரில் அந்தாதி மடக்கு பற்றி பார்க்கலாம்.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் : தொடர் 65-67
சிறீ சிறீஸ்கந்தராஜா
28/08/2013 – 05/09/2013

தொகுப்பு – thamil.co.uk