அணியிலக்கணம் 8 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 26

அணியிலக்கணம் – தொடர்- 5022) உதாத்தவணி

தண்டியலங்காரத்தில் இருபத்திரண்டாவதாகக் கூறப்படும் அணி, உதாத்தவணி ஆகும். பாடலில் பாடப்பெறும் பொருளை அடிப்படையாகக் கொண்டும் சில அணிகள் தண்டியலங்காரத்தில் கூறப்படுகின்றன. அவற்றுள் ஒன்று உதாத்த அணி ஆகும். “உதாத்தம்” என்பதற்கு “வேறு ஒன்றிற்கு இல்லாத தனிச் சிறப்பு”  என்று பொருள். இவ்வணிக்கு “வீறுகோள் அணி” என்ற மற்றொரு பெயரும் உண்டு.

உதாத்த அணியின் இலக்கணம்
வியக்கத்தக்க செல்வத்தினது சிறப்பையும், மேம்பட்ட உள்ளத்தினது உயர்ச்சியையும் அழகுபடுத்திக் கூறுவது உதாத்தம் என்னும் அணி ஆகும்.
“வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும்
உயர்ச்சி புனைந்து உரைப்பது உதாத்தம் ஆகும்”  (நூற்பா – 73)

உதாத்த அணியின் வகைகள்
செல்வ மிகுதி, உள்ள மிகுதி என இரு வகைப்படும்

செல்வ மிகுதி
வியக்கத்தக்க செல்வத்தின் சிறப்பை மிகுத்து அழகுபடுத்திச் சொல்லுதல் ‘செல்வ மிகுதி’ எனப்படும்.
”கன்றும் வயவேந்தர் செல்வம் பலகவர்ந்தும்,
என்றும் வறிஞர் இனம்கவர்ந்தும், – ஒன்றும்
அறிவு அரிதாய் நிற்கும் அளவினதால் அம்ம
செறிகதிர்வேல் சென்னி திரு”
(கன்றும் – சினக்கின்ற; வய – வலிமைமிக்க; வறிஞர் – இரவலர்; இனம் – சுற்றம்; ஆல் – அசை; அம்ம – வியப்பு இடைச்சொல்; செறிகதிர் – நிறைந்த ஒளி; சென்னி – சோழ மன்னன்; திரு – செல்வம். )

சினத்துடன் தன்னை எதிர்த்து வருகின்ற வலிமைமிக்க வேந்தர்களுடைய செல்வங்கள் பலவற்றையும் நாள்தோறும் கவர்ந்து கொண்டு வருதலாலும், நாள்தோறும் இரவலர்கள் தங்களுடைய சுற்றத்துடன் சென்று வேண்டியவாறு எடுத்துக் கொள்வதாலும் நிறைந்த ஒளியை உடைய வேலை ஏந்திய சோழ மன்னனுடைய செல்வமானது சிறிதேனும் அளவு அறியப்படாததாய் நிற்கும்.

இப்பாடலில், சோழ மன்னன் கவர்ந்து வந்த செல்வம் பல என்றும், அதை வறியவர் கூட்டம் நாள்தோறும் வேண்டியவாறு வாரிச் சென்றாலும் அச்செல்வமானது சிறிது கூட அளவு அறியப்படாமல் இருக்கும் என்றும் கூறப்பட்டதால் இது ‘செல்வ மிகுதி’ கூறும் உதாத்த அணி ஆயிற்று.

தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இத்தகைய பொருள் கொண்ட அணி சிறப்பாகப் பாடப்பட்டிருப்பதைக் காணலாம்.

பத்துப்பாட்டில் பட்டினப்பாலை என்னும் பாடலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.  இப்பாடலில் அவர் ஓரிடத்தில் காவிரிப்பூம் பட்டினத்து மக்களின் செல்வ மிகுதியை ஓர் அழகான சிறு நிகழ்ச்சியால் பாடுகிறார். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர்.

அப்போது அந்நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள்.  ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம்.

“அகன்நகர் வியன்முற்றத்துச்
சுடர்நுதல் மடநோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை
பொன்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும்”  (பட்டினப்பாலை, 20-25)
(அகன்நகர் – அகன்ற நகர்; காவிரிப்பூம்பட்டினம் ; வியன் – பெரிய ; நேர் இழை – செவ்வையான அணிகலன்கள் ; உணங்கு – உலர்த்தும் ; உணா – உணவு, நெல் ;  கனங்குழை – கனமான காதணி ; பொன் – அழகிய ; புரவி – குதிரை ; இன்று – இல்லாமல் ; விலக்கும் – தடுக்கும்.)

இதில் காவிரிப்பூம்பட்டினத்துச் செல்வப் பெருமை உயர்த்திக் கூறப்பட்டுள்ளதால் இது, ‘செல்வ மிகுதி’ கூறும் உதாத்த அணி ஆயிற்று.

உள்ள மிகுதி
மேம்பட்ட உள்ளத்தின் உயர்ச்சியை மிகுத்து அழகுபடுத்திச் சொல்லுதல் ‘உள்ள மிகுதி’ எனப்படும்.
“மண் அகன்று, தன்கிளையின் நீங்கி, வனம்புகுந்து,
பண்ணும் தவத்து இசைந்த பார்த்தன்தான் – எண்இறந்த
மீதுஅண்டர் கோன்குலையும் வெய்யோர் குலம்தொலைத்தான்
கோதண்ட மேதுணையாக் கொண்டு”
(கிளை – சுற்றத்தார் ; வனம் – காடு ; தவத்து இசைந்த – தவத்தால் இளைத்த ; பார்த்தன் – அருச்சுனன் ; எண்இறந்த – அளவு இல்லாத ; அண்டர்- தேவர்கள், சுரர்கள் கோன் – தலைவன், இந்திரன் ; வெய்யோர் – கொடியோர், அசுரர் ; கோதண்டம் – வில்.)

நாட்டை விடுத்து, சுற்றத்தாரை விட்டு நீங்கி, காட்டை அடைந்து, தவம் செய்து அதனால் வருத்தமுற்று இளைத்த பார்த்தனாகிய அருச்சுனன், தனது வில்லையே துணையாகக் கொண்டு, மேல் உலகத்தில் உள்ள எண்ணற்ற சுரர்களுக்குத் தலைவனாகிய இந்திரனை நடுங்கும்படி செய்த கொடியோராகிய அசுரர்களின் குலத்தை அழித்தான். இப்பாடலில் அருச்சுனன் தவம் செய்து உடல் இளைத்த நிலையிலும், தான் ஒருவனாகவே இருந்து, தன்னுடைய வில்லின் துணைகொண்டு அசுரர் குலம் தொலைத்தான் என அவனுடைய உள்ளத்து உயர்ச்சி கூறப்பட்டிருப்பதால் இது ‘உள்ள மிகுதி’ கூறும் உதாத்த அணி ஆயிற்று.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 27

அணியிலக்கணம் – தொடர்- 5123) அவநுதியணி

தண்டியலங்காரத்தில் இருபத்திமூன்றாவதாகக் கூறப்படும் அணி, அவநுதியணி ஆகும். கவிஞர்கள் பாடலில் ஏதேனும் ஒரு பொருளைப் பற்றிப் பாடுவர். அப் பொருளுக்கு இயல்பான ஒரு தன்மை இருக்கும். ஆனால் அவர்கள் அதை மறுத்துப் பிறிது ஒரு தன்மையை அப்பொருளுக்கு ஏற்றிக் கூறுவர். அவ்வாறு கூறுவது அவர்கள் பாடுகின்ற பொருளுக்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதாகவே அமையும்.  இவ்வாறு பாடப்படும் அணியே அவநுதி அணி. இது பிறிது மொழிதல் அணி என்று தமிழில் உள்ளது.

அவநுதி அணியின் இலக்கணம்
சிறப்பினாலும், பொருளினாலும், குணத்தினாலும் ஆகிய உண்மையை மறுத்துப் பிறிது ஒன்றாக உரைப்பது அவநுதி என்னும் அணி ஆகும்.
“சிறப்பினும் பொருளினும் குணத்தினும் உண்மை
மறுத்துப் பிறிது உரைப்பது அவநுதி ஆகும்”  (நூற்பா – 37)
அவநுதி என்பதற்கு மறுத்துரைத்தல் என்று பொருள்.  உண்மை – ஒன்றற்கு இயல்பாக உள்ள தன்மை.  ஏதேனும் ஒரு பொருளில் உள்ள உண்மைத் தன்மையை மறுத்துப் பிறிது ஒரு தன்மையை அதன்கண் ஏற்றி உரைப்பது அவநுதி ஆகும்.  இவ்வாறு உண்மையை மறுத்துப் பிறிது ஒன்று உரைக்குங்கால் அப்பொருளுக்குச் சிறப்புத் தோன்றுமாறு அமையும்.

அவநுதி அணியின் வகைகள்
சிறப்பு அவநுதி
பொருள் அவநுதி
குண அவநுதி

சிறப்பவநுதி
நறைகமழ்தார் வேட்டார் நலனணியும் நாணும்
நிறையும் நிலைதளரா நீர்மை – அறநெறிசூழ்
செங்கோலன் அல்லன் கொடுங்கோலன் தெவ்வடுபோர்
வெங்கோப மால்யானை வேந்து”
(நறை – நறுமணம் ; வேட்டல் – விரும்புதல்; நலன் – அழகு ; நாண் – நாணம், வெட்கம் ; நிறை – கற்பு; தெவ் – பகைவர் ;  அடு – அழிக்கும் ; மால் = பெரிய.)


நறுநாற்றத்தையுடைய மாலையை ஆசைப்பட்ட மடவாருடைய அழகும், அணியும், நாணும், நிறையும் நிறை தளராதபடி தாங்கும் அறநெறியினை உடைத்தாகிய செங்கோலை உடையவனல்லன், கொடுங் கோன்மை உடையவன். போர்க்களத்துப் பகைவரை அட்ட வெவ்விய கோபத்தையுடைய பெரிய யானையையுடைய வேந்தன்.
இப்பாடலில், அரசனைச் சிறப்பித்துக் கூறும்போது, அவனுக்குச் சிறப்பாக உள்ள தன்மையாகிய செங்கோன்மையை மறுத்துக் கொடுங்கோன்மை என்ற பிறிது ஒரு தன்மையை அவன் மீது ஏற்றிச் சொல்லியிருத்தலின், இது சிறப்பு அவநுதி ஆயிற்று.அரசன் தனது மாலையை விரும்பும் பெண்களுக்குக் கொடுங்கோலன் ஆவான் என்று கூறப்பட்டிருப்பதால் அவன் தன் மனைவியை அன்றிப் பிற மகளிரை விரும்பாதவன் என்ற கருத்துப் பெறப்படுகிறது.இது அவனுடைய சிறப்பைக் காட்டலின் சிறப்பு அவநுதி ஆயிற்று.

பொருளவநுதி
“நிலனாம் விசும்பாம் நிமிர்கால்நீர் தீயாம்
அலர்கதிராம் வான்மதியாம் அன்றி – மலர்கொன்றை
ஒண்ணறுந் தாரான் ஒருவன் இய மானனுமாய்
எண்ணிறந்த எப்பொருளு மாம்”

விரிந்த கொன்றைப் பூவினாற் செய்த நறுநாற்றத்தையுடைய ஒள்ளிய மாலையை அணிந்தவனும், ஏகனும் ஆகிய பரமசிவன், நிலமும், ஆகாயமும், உயர்ந்த காற்றும், நீரும், தீயும், பரந்த கதிரையுடைய இரவியும், வெள்ளிய மதியமும் ஆகிய ஏழாதலுமன்றி ஆன்மாவுமாய் எண்ணிறந்த எல்லாப் பொருளுமாவான்.

இப்பாடற்கண் கூறப்பட்ட பொருள் சிவபெருமான் ஆவர். அப்பெருமானுக்கு இயல்பாகவும் உண்மையாகவும் உள்ள ஒருவனாந் தன்மையை மறுத்து, எண்ணிறந்த எப்பொருளுமாம் என்னும் பலவாந் தன்மையை ஏற்றியுரைக்கப்படுதலால், இது பொருளவநுதியாயிற்று.

இறைவனின் தனித்தன்மை ஒன்றாய் நிற்பதாகும். உயிர்களிடத்துக் கலந்துள்ள தன்மையால் பலவாகியும் நிற்கின்றான் என்பது சைவசித்தாந்தத் துணிபாம். இங்ஙனம் இறைவன் ஒன்றாகியும், வேறாகியும் உடனாகியும் நிற்கும் திறமெல்லாம் ஞான நூல்களில் விரவிக் காணப்படுகின்றன.

குணவவநுதி
“மனுப்புவிமேல் வாழ மறைவளரக்கும் ஆரப்
பனித்தொடையல் பார்த்திபர்கோன் எங்கோன் – தனிக்கவிகை
தண்மை நிழற்றன்று தன்தொழுத பேதையர்க்கு
வெம்மை நிழற்றாய் மிகும்”

மாந்தர் பூவுலகில் இனிது உயிர்வாழ வேதாகம நெறியை வளர்க்கும் தண்ணிய ஆத்திமாலையையுடைய அரசர்க்குக் கோமானாகிய எம் இறைவனான சோழராசனது தனிக்குடையானது தண்ணிய நிழலை யுடையதன்று, அவனைக் கண்ட மடவார்க்கு மிக்க வெய்ய தன்மையைப் பண்ணாநிற்கும்.

தொடையல் – மாலை, பார்த்திபர் – அரசர், தனிக் கவிகை – ஒற்றை வெண்கொற்றக் குடை.

இப்பாடற்கண் கூறப்பட்ட பொருள் சோழனது வெண்கொற்றக் குடையாகும். அதனிடத்து இயல்பாகவுள்ள குளிர்ந்த தன்மையை மறுத்து, வெம்மைத் தன்மையை ஏற்றி உரைத்திருத்தலின், இது குண அவநுதி யாயிற்று. தண்மை, வெம்மை என்பன குணமாம்.

‘அவநுதி’ என்னாது ‘ஆகும்’ என்றதனால் இவ்வலங்காரம் பிற அலங்காரங்களோடும் கூடி வருமெனவுங் கொள்க.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 28

அணியிலக்கணம் – தொடர்- 5224) சிலேடையணி

தண்டியலங்காரத்தில் இருபத்தினான்காவதாகக் கூறப்படும் அணி, சிலேடையணி ஆகும்.  கவிஞர்கள் தாங்கள் பாடுகின்ற பாடலில் பெரும்பாலும் ஒரு பொருளையே அமைத்துப் பாடுவர். சில நேரங்களில் ஒரே பாடலில் இருவேறு பொருள் அமையுமாறும் பாடுவர். தமிழில் ஒரு சொல் பல பொருள் உணர்த்துவதும் உண்டு. அதேபோல ஒரு சொல்தொடரும் வெவ்வேறு வகையாகப் பிரிப்பதற்கு ஏற்ற வகையில் அமையும்போது பல பொருள் தருவது உண்டு.

இத்தகைய சொற்களையும் தொடர்களையும் கவிஞர்கள் ஒரு பாடலில் அமைத்து இரு வேறுபட்ட பொருள்களைப் பாடத் தலைப்பட்டதன் விளைவாகவே சிலேடை அணி தோன்றியது.  இதனை ‘இரட்டுற மொழிதல்’ என்று கூறுவர். இரண்டு பொருள்பட மொழிதலால் இவ்வாறு கூறப்பட்டது.

சிலேடை அணியின் இலக்கணம்
ஒரு வகையாக நின்ற சொற்றொடர் பல வகையான பொருள்களின் தன்மை தெரிய வருவது சிலேடை என்னும் அணி ஆகும்.
“ஒருவகைச் சொற்றொடர் பலபொருள் பெற்றி
தெரிதர வருவது சிலேடை ஆகும்” (நூற்பா – 75)

சிலேடை அணியின் வகைகள்
“அதுவே
செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்.” (நூற்பா – 76)

செம்மொழிச் சிலேடை
ஒரு சொற்றொடரில் உள்ள சொற்கள் பிரிக்கப்படாமல் அப்படியே நின்று பல பொருள் தருவது செம்மொழிச் சிலேடை எனப்படும்.
“செங்கரங்க ளான்இரவு நீக்கும் திறம்புரிந்து
பங்கய மாதர் நலம்பயிலப் – பொங்குஉதயத்து
ஓர்ஆழி வெய்யோன் உயர்ந்த நெறிஒழுகும்
நீர்ஆழி நீள்நிலத்து மேல்”
இப்பாடல் சூரியனுக்கும் சோழனுக்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது.  இப்பாடலில் உள்ள சொற்கள் சூரியனோடு பொருத்திப் பார்க்கும்போது, ஒரு பொருளையும், சோழனோடு பொருத்திப் பார்க்கும் போது வேறு ஒரு பொருளையும் தருகின்றன.

இப்பாடலில் உள்ள சொற்களை சூரியனோடு பொருத்துமிடத்து;
“கடல் சூழ்ந்த புவி மீது சூரியன், தன்னுடைய சிவந்த கதிர்களால் இருளைப் போக்கும் திறன் மிக்கவன்; தாமரை மலர்கள் காதலிக்கும் அழகு உண்டாக, மேல் நோக்கி வளரும் தோற்றத்தை உடையவன்; ஒற்றைச் சக்கரத்தை உடைய தேரில் உயர்ந்த வான வெளியில் வலம் வருபவன்” எனவும் பொருள்படுகிறது.

கரங்கள் – கதிர்கள், கற்றைகள் ; இரவு – இருள் ; பங்கயம் – தாமரை ; மாதர் – காதல் ; நலம் – அழகு ; பயிலல் – உண்டாதல் ; பொங்குதல் – மேல் நோக்கி வளர்தல் ; உதயம் -தோற்றம் ; ஓர் ஆழி -ஒற்றைச் சக்கரத்தை உடைய தேர் ; வெய்யோன் – சூரியன் ; உயர்ந்த நெறி – வான் வழி (விண் விசும்பு).

இப்பாடலில் உள்ள சொற்களை சோழனோடு பொருத்துமிடத்து;
“கடல் சூழ்ந்த புவி மீது சோழன், தன்னுடைய சிவந்த கைகளால் உலகில் உள்ளவர்களுடைய வறுமையைப் போக்கும் திறன் மிக்கவன்; தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளின் செல்வம் பெருக மேம்படும் பொருள் வருவாயை உடையவன்; தனி ஆணைச் சக்கரத்தை உடையவன்; உலகத்தாரால் விரும்பப்படும் இயல்பு உடையவன்; சான்றோர் வகுத்த உயர்ந்த ஒழுக்க நெறியில் நடப்பவன்” எனவும்,  இப்பாடல் பொருள் கொள்ளப்படுகிறது.

கரங்கள் – கைகள் ; இரவு – வறுமை ; பங்கய மாதர் – தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் ;  நலம் – செல்வம் ; பயிலல் -பெருகுதல் ; பொங்குதல் – மேம்படுதல் ; உதயம் – பொருள் வருவாய் ; ஓர் ஆழி – தனி ஆணைச் சக்கரம் ; வெய்யோன் – விரும்பப்படுபவனாகிய சோழன் ; உயர்ந்த நெறி – உயர்ந்த ஒழுக்கமாகிய நெறி.

இப்பாடலில் உள்ள சொற்கள் பிரிக்கப்படாமல், அப்படியே நின்று,  சூரியன், சோழன் ஆகிய இருவருக்கும் பொருந்துமாறு பொருள் தருவதால் இது, “செம்மொழிச் சிலேடை” ஆயிற்று.

பிரிமொழிச் சிலேடை
ஒரு சொற்றொடரில் உள்ள சொற்களை வேறுவேறு வகையாகப் பிரித்துப் பல பொருள் கொள்வது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.
“தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய
எள்ளா அரிமா னிடர்மிகுப்ப – உள்வாழ்தேம்
சிந்தும் தகைமைத்தே எங்கோன் திருவுள்ளம்
நந்தும் தொழில்புரிந்தார் நாடு”
இப்பாடல், சோழனைப் பகையாதவர் (நட்புக் கொண்டோர்) நாட்டிற்கும்,  அவனைப் பகைத்தவர் நாட்டிற்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள சொற்கள், பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால் ஒரு வகையாகவும், பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால் வேறு ஒரு வகையாகவும்
பிரிந்து இருவேறு பொருளைத் தருகின்றன.

சோழனைப் பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால்
அழகு கெடாத விளைநிலங்களில் உளதாகிய பகட்டேர் (உழுகின்ற எருது) பெரிய தாமரை மலரைப் பொருந்தவும், இகழப்படாத நெற்கதிர்களை உழவர்கள் திரட்டவும், அத்தாமரை மலரில் உளதாகிய தேன் பொழியும் பெருமையை உடையது, எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் விரும்பும்படி நடந்தோருடைய நாடு.

தள்ளா இடத்து – அழகு கெடாத விளைநிலத்தில் ; ஏர் – பகட்டேர் அதாவது உழும் எருது ; தடம் – பெரிய ;  தாமரை – தாமரை மலர்; எள்ளா – இகழாத ; அரி – நெற்சூடு;
மானிடர் – உழவர் ; மிகுப்ப – திரட்ட ; உள்வாழ்தேம் – உள்ளே உண்டாகிய தேன் ; சிந்தும் – பொழியும் ; நந்தும் தொழில் புரிந்தார் – விரும்பும் பணி செய்தோர்.

சோழனைப் பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால்
அசையாத விடத்தேர் என்னும் முள்மரங்களை உடையதாய், பெரிய மலைச் சிகரங்களைத் தாவும் மான்களை உடையதாய், இகழப்படாத ஆண் சிங்கங்கள் துன்பமுறுத்த, நல்லோர் உள்ளங்களில் வாழும் இடங்கள் எல்லாம் அழிவுபடும் தன்மையை உடையது. எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் வெறுக்கும்படி நடந்தோருடைய நாடு.

விடத்தேர் – முள்ளுடைய ஒருவகை மரம் ; தள்ளா – அசையாத ; தடம் – மலை ; சிந்தும் – அழியும் ; தா மரை – தாவுகின்ற மரை என்னும் மான் ; எள்ளா – இகழாத ; அரி மான் – சிங்கப் போத்து, ஆண் சிங்கம் ; இடர் – துன்பம் ; மிகுப்ப – செய்ய ; உள்வாழ்தேம் – உள்ளத்தில் வாழும் நாடு ; நந்தும் தொழில் புரிந்தார் – வேறுபடும் தொழில் செய்தோர்.

இப்பாடலில் உள்ள சொற்கள், சோழனுடைய நண்பர்கள் நாட்டிற்கு ஆகுங்கால் ஒரு வகையாகவும், பகைவர்கள் நாட்டிற்கு ஆகுங்கால் வேறொரு வகையாகவும் பிரிந்து இருவேறு பொருள் தருவதால் இது, ‘பிரிமொழிச் சிலேடை’ ஆயிற்று.

தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் சிலேடை அணி மிகச் சிறப்பாகப் பாடப்பட்டிருப்பதைக் காணலாம். தனிப்பாடல்கள் பாடிப் புகழ் பெற்ற கவிஞர்களுள் ஒருவர் காளமேகப் புலவர். இவர், வைக்கோலுக்கும் யானைக்கும், ஆமணக்குக்கும் யானைக்கும், பாம்புக்கும் வாழைப் பழத்துக்கும், பாம்புக்கும் எலுமிச்சம் பழத்துக்கும்,
பாம்புக்கும் எள்ளுக்கும் என்றவாறு சிலேடை அணி அமைத்துப் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடை
“ஆடிக் குடத்து அடையும்; ஆடும்போதே இரையும்;
மூடித் திறக்கின் முகம்காட்டும்; – ஓடிமண்டை
பற்றின் பரபரெனும் பாரில் பிண் ணாக்குண்டாம்
உற்றிடு பாம்பு எள்ளெனவே ஓது”

(பிண்ணாக்கு என்னும் சொல், பாம்பிற்கு ஆகுங்கால் ‘பிள் + நாக்கு’ = பிண்ணாக்கு, பிளவுபட்ட நாக்கு என்றும், எள்ளுக்கு ஆகுங்கால் எள்ளுப் பிண்ணாக்கு என்றும் இருவேறு பொருள் தரும். மற்றச் சொற்கள் அப்படியே நேராக நின்று பாம்பிற்கும் எள்ளுக்கும் பொருந்துமாறு இரு வேறு பொருள் தரும்.)

‘பாம்பானது, படம் எடுத்து ஆடிக் குடத்தினுள் புகும்; படம் எடுத்து ஆடும்போதே சீத்து, சீத்து என ஓசை உண்டாக்கும்; குடத்தில் இட்டு மூடிய பின் மூடியைத் திறந்து பார்த்தால் தனது தலையை எடுத்துக் காட்டும்; அது ஓடி ஒருவர் தலையைத் தீண்டுமானால் அவர்க்குப் பரபர என்ற உணர்ச்சி உண்டாகும்; அதற்குப் பிளவுபட்ட நாக்கும் உண்டு.’

‘எள்ளானது, செக்கில் ஆட்டப்பட்டுக் குடத்திலே அடைக்கப்படும்; செக்கில் ஆட்டும் போதே இரைச்சல் ஓசையை உண்டாக்கும்; குடத்தில் எண்ணெயை அசையாமல் வைத்து மூடித் திறந்து பார்த்தால் அது பார்ப்பவருடைய முகத்தைக் காட்டும்; எண்ணெயைத் தலையில் ஊற்றித் தேய்த்தால் குளிர்ச்சியான உணர்ச்சி உண்டாகும்; எண்ணெய் ஆட்டும் போது எள்ளுப் பிண்ணாக்கு உண்டாகும்.’  ஆதலால் இவ்வுலகில் பாம்பும் எள்ளும் சமம் என்று கூறுவாயாக.

இப்பாடலில், காளமேகப் புலவர் சொற்களைப் பாம்பு, எள் ஆகிய இரண்டனுக்கும் பொருந்துமாறு அமைத்துப் பாடியதால் இது, சிலேடை அணி ஆயிற்று.

இச்சிலேடை, ஒருவினைச் சிலேடையும், பலவினைச் சிலேடையும், முரண்வினைச் சிலேடையும், நியமச் சிலேடையும், நியம் விலக்குச் சிலேடையும், விரோதச் சிலேடையும், அவிரோதச் சிலேடையும் என்னும் ஏழு கூறுபாட்டான் நடக்குமென்றும் சொல்லுவர் நூலோர்.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம்

மூலமும் பழையவுரையும் :

பொருளணியியல் – 29

அணியிலக்கணம் – தொடர்- 5325) விசேடவணி

தண்டியலங்காரத்தில் இருபத்திஐந்தாவதாகக் கூறப்படும் அணி, விசேடவணி ஆகும். கவிஞர்கள் தாங்கள் பாட எடுத்துக்கொண்ட பொருளின்பால் சிலபல காரணங்களால் உள்ள குறைகளையும் குறிப்பிட்டுப் பாடுவர். ஆனால் அக்குறைகளே அப்பொருளுக்குச் சிறப்பையும் பெருமையையும் சேர்ப்பது போலப் பாடலை அமைப்பர். இதனால் பாடலில் பாடப்படும் பொருள் வனப்பும் வலிமையும் பெற்றுத் திகழ்கிறது. இவ்வாறான சிறப்புத் தோன்ற பாடப்படும் அணியே விசேட அணி, அல்லது சிறப்பு அணி எனப்படும்

விசேட அணியின் இலக்கணம்
குணமும், தொழிலும், இனமும், பொருளும், உறுப்பும் குறைபடுதல் காரணமாக, ஒரு பொருளுக்கு மேம்பாடு தோன்றக் கூறுவது விசேடம் என்னும் அணி ஆகும்.
“குணம்தொழில் முதலிய குறைபடு தன்மையின்
மேம்பட ஒருபொருள் விளம்புதல் விசேடம்” (நூற்பா – 78)
விசேடம் என்பதற்கு மேம்பாடு அல்லது பெருமை என்று பொருள். நூற்பாவில் ‘முதலிய’ என்று கூறியதனால், குணம், தொழில் என்பனவற்றோடு இனம், பொருள், உறுப்பு ஆகியனவும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

விசேட அணியின் வகைகள்
விசேட அணி ஐந்து வகைப்படும். குணக்குறை விசேடம், தொழில்குறை விசேடம், இனக்குறை விசேடம், பொருள்குறை விசேடம்,  உறுப்புக்குறை விசேடம் என்பன ஆகும்.

குணக்குறை விசேடம்
“கோட்டம் திருப்புருவம் கொள்ளா; அவர்செங்கோல்
கோட்டம் புரிந்த; கொடைச்சென்னி – நாட்டம்
சிவந்தன இல்லை; திருந்தார் கலிங்கம்
சிவந்தன, செந்தீத் தெற”
(கோட்டம் – வளைதல் ; சென்னி – சோழன் ;  நாட்டம் – கண்கள் ; திருந்தார் – பகைவர் ;  கலிங்கம் – கலிங்க நாடுகள்.)

கொடை நலம் சான்ற சோழனுடைய அழகிய புருவங்கள் கோட்டத்தைக் (வளைவைக்) கொள்ளவில்லை, ஆனால் அதற்குள் அவனுடைய பகைவர்களின் செங்கோல் கோட்டத்தை (கெடுதலை) அடைந்து விட்டன.

அச்சோழனுடைய கண்கள் சிவக்கவில்லை, ஆனால் அதற்குள் அவனுடைய பகைவர்களின் கலிங்கநாடு எரியுற்றுச் சிவந்து விட்டன என்பதாம். சோழன் பகைவர்மீது சினங் கொள்ளுதற்கு முன்னமேயே அவர்தம் நாடு அழிந்துவிட்டன என்பது கருத்து.

சோழன் தன் பகைவர் நாட்டை அழிக்க வேண்டுமெனில், முதற்கண் அவனுக்குச் சினம் ஏற்பட வேண்டும்.அச்சினம் உண்மையை அறிவிக்கும் குணங்களாய கோடுதலும், சிவத்தலும் சோழனுக்கு ஏற்படுவதற்கு முன்னமேயே பகைவர்நாடு அழிந்து விட்டன என்பதால் இது குணக்குறை விசேடமாயிற்று.

குணத்தால் குறை விருப்பினும், செயலால் மேம்படுதலின் இது குணக்குறை விசேடமாம்.

தொழிற்குறை விசேடம்
“ஏங்கா முகில்பொழியா நாளும் புனல்தேங்கும்
பூங்கா விரிநாடன் போர்மதமா – நீங்கா
வளைபட்ட தாளணிகள் மாறெதிர்ந்தார்க் கந்நாள்
தளைபட்ட தாள்தா மரை ”
இடித்தலைச் செய்து முகில் பொழியாத நாளும் நீர் இரைத்தேறும் காவிரியாற்றை உடைய நாடனுடைய போரில், வலிய யானைகளின் கால்களெல்லாம் கழலாதபடி வளைத்திடப்பட்ட வீரக்கழல் பூண்டன. இவை இவ்வண்ணம் செய்ய, மாறுபட்ட மன்னவர் கால்களாகிய தாமரைகள் எல்லாம் தளையாகிய விலங்கு பூண்டன. “அந்நாள் தளைபட்ட” என்றது, யானைகளின் கால்கள் வீரக்கழல் பூண்ட அன்றே, பகைவர் தாள்களும் தளைபட்டன எனக் கொள்க.

மேகம் மழையைச் சொரிதலாகிய தொழிலை நிகழ்த்தினாலன்றி ஆற்றில் தண்ணீர் நிறையாது. யானை முதலிய படைகள் வீரக்கழல் பூண்டு போரிடுதலாகிய தொழிலை நிகழ்த்தினாலன்றிப் பகைவரைச் சிறையிலடைத்தல் இயலாது. எனினும் இப்பாடற்கண் அவ்வத்தொழில் நிகழும் முன்னமேயே, அவ்வச் செயல்கள் நிகழ்ந்துவிட்டன எனக் கூறுவதால், இது தொழிற்குறை விசேட மாயிற்று.

தொழிற்குறை விசேடம் – தொழிலில் குறையிருப்பினும், செயலால் மேம்பாடு தோன்ற உரைப்பது இதன் சிறப்பாயிற்று

இனக்குறை விசேடம்
“மேய நிரைபுரந்து வெண்ணெய் தொடுவுண்ட
ஆயனார் மாறேற்(று) அமர்புரிந்தார் – தூய
பெருந்தருவும் பின்னுங் கொடுத்துடைந்தார் விண்மேற்
புரந்தரனும் வானோரும் போல் ”
புரத்தல் – காத்தல் ; தொடுவுண்டல் – தோண்டியுண்டல் ; போல் – ஒப்பில் போலி.

பொருந்திய ஆனிரைகளைக் காத்து வெண்ணெயைத் தோண்டி அதனை எடுத்துண்ட இடைக்குலத்தினராய கண்ணபிரான் தேவர்களுடன் எதிர்த்துப் போர் செய்தார். அது பொழுது விண்ணுலகிலுள்ள இந்திரனும் ஏனைய தேவர்களும் அப்போருக்கு ஆற்றாது தூய பாரிசாதம் என்னும் கற்பகத்தருவையும், தமது முதுகையும் கொடுத்தர்கள் என்பதாம்.

முதுகைக் கொடுத்தார் என்றது புறக்கிட்டார் என்றபடி. போல் – உரையசை. கண்ணபிரான் இடைக்குலத்தில் தோன்றினர் என்பதால் சாதிக்குறைவு தோன்றினும், தேவகுலம் அனைத்தையும் வென்றார் என்பதால் மேம்பாடு தோன்றலின், இது இனக்குறை விசேடமாயிற்று.

பொருட்குறை விசேடம்
“தொல்லை மறைதேர் துணைவன்பால் ஆண்டுவரை
எல்லை யிருநாழி நெற்கொண்(டு) ஒர் – மெல்லியலாள்
ஒங்குலகில் வாழும் உயிரனைத்து ஊட்டுமால்
ஏங்கொலிநீர்க் காஞ்சி யிடை”
தொல்லை – பழமை ; மறை – வேதம் ; தேர்தல் – ஒதுதல் ;   துணைவன் – தலைவன் ; பால் – இடம் ; மெல்லியலாள் – உமாதேவி ; ஆல் – அசை ; இடை – இடம்.

மிகுந்த ஒளியைச் செய்யும் நீர்வளம் மிக்க காஞ்சீபுரத்தில், மென்மைத்தன்மை வாய்ந்த ஒப்பற்ற பெருமை யுடைய உமையம்மையார், பழமையான வேதங்களும் அறிதற்கரிய தன்னுடைய தலைவனான சிவபெருமானிடத்தே இருநாழி நெல்லைப்பெற்று அது கொண்டு ஓராண்டு அளவும் உலகுயிர்கள் அனைத்திற்கும் உணவூட்டிப் பாதுகாப்பளாயினள் என்பதாம்.

இப்பாடற்கண் “இருநாழி நெற்கொண்டு” என்பதால் பொருட் குறைவு தோன்றினும், உயிரனைத்தும் ஊட்டும் என்பதால் மேம்பாடு தோன்ற உரைத்திருத்தலின், அது பொருட்குறை விசேடமாயிற்று.

உறுப்புக்குறை விசேடம்
“யானை இரதம் பரியாள் இவையில்லை
தானும் அனங்கன் தனுக்கரும்பு – தேனார்
மலரைந்தி னால்வென் றடிப்படுத்தான் மாரன்
உலகங்கள் மூன்றும் ஒருங்கு”
இரதம் – தேர் ; பரி- குதிரை ; ஒருங்கு – ஒருபடித்தாக.

மன்மதனுக்கு யானை, தேர், குதிரை, காலாள் ஆகிய நால்வகைப் படைகளும் இல்லை. அவனும் உடம்பு இல்லாதவன். அவனுடைய வில்லோ வலிமையற்ற கரும்பு.
அங்ஙனம் இருந்தும் தேன் நிறைந்த ஐந்து மலர்களினாலேயே மூவுலகையும் ஒருங்கே வென்று அடிப்படுத்தினான் என்பதாம்.

மலர் ஐந்து – தாமரை, முல்லை, கருவிளை, மாம்பூ, அசோகம் என்பன.

உலகம் மூன்றையும் ஒருங்கு அடிப்படுத்தற்கான உறுப்புகள் ஒன்றும் இல்லாத குறையிருப்பினும், அவற்றை வென்று அடிப்படுத்தான் என மேம்பாடு கூறினமையின் இது உறுப்புக்குறை விசேடமாயிற்று.

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் : தொடர் 50-53
சிறீ சிறீஸ்கந்தராஜா
04/08/2013 – 07/08/2013

தொகுப்பு – thamil.co.uk