சொல்லிலக்கணம் 2 : சிறீ சிறீஸ்கந்தராஜா

சொல்லிலக்கணம் – (05) பிறவகைச்சொல்

இயற்சொல்
மொழியியல் இலக்கணம் சொற்களை பெயர் என்றும் வினை என்றும் வகுத்துக் கொள்ளும்போது தமிழ் மொழியோ இவற்றுடன் மேலும் இடைச்சொல், உரிச்சொல் என்றும் வகைப்படுத்துகின்றது. செய்யுள் வழக்கில் தொல்காப்பியர் வேறு வகைச் சொற்களையும் வகைப்படுத்திக் கூறுகிறார்.

“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே”
அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்றும் மிக நுட்பமாக வகுத்துக் காட்டுகிறார்.  இப்பாகுபாடு பெயர்ச்சொற்களுக்கு மட்டுமே என்றும், வினைச் சொற்களுக்கு ஏற்புடைத்தல்ல என்றும் கருதுகிறார்.

தமிழில் வழங்கப்பட்ட செஞ்சொற்களை இயற்சொல் என்றும், ஒரு சொல்லுக்குப் பல பொருளும், பல சொல்லுக்கு ஒருபொருளும் தந்து செய்யுளுக்காகத் திரித்துக்கொண்ட சொற்களைத் திரிசொல் என்றும், தமிழகத்தைச் சூழ்ந்த நாடுகளில் பேசப்பட்ட தமிழ்ச்சொல்லை திசைச்சொல் என்றும், வடநாட்டில் பேசப்பட்ட மொழிச்சொற்களை வடசொல் என்றும் தமிழ் இலக்கண நூல் வல்லார் வகுத்துக்கொண்டனர்.

இயற்சொல் கற்றவர், கல்லாதவர் ஆகிய அனைவருக்கும் எளிதில் பொருள் புரியும் வகையில் உள்ள சொற்கள் இயற்சொற்கள் எனப்படும். (எ.கா) மரம், நடந்தான்.
‘செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல் ‘ – (நன்னூல் : 271)

இயற்சொல் வகைகள் இரண்டு வகைப்படும். அவை,
1) பெயர் இயற்சொல்
2) வினை இயற்சொல்

பெயர் இயற்சொல்
அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் வரும் பெயர்ச் சொற்களையே பெயர் இயற்சொற்கள் என்று கூறுவர். (எ.கா) மரம், மலை, கடல்.

வினை இயற்சொல்
அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் வரும் வினைச்சொற்களை வினை இயற்சொற்கள் என்றும் கூறுவர். (எ.கா) நடந்தான், சிரித்தாள், வந்தது.


சொல்லிலக்கணம் – 10-thamil.co.ukதிரிசொல்

மொழியியல் இலக்கணம் சொற்களை பெயர் என்றும் வினை என்றும், கற்றவர்கள் மட்டும் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள சொற்கள் திரிசொற்கள் எனப்படும். (எ.கா) தத்தை, ஆழி, செப்பினான்.

மேலே காட்டப்பட்டுள்ள சொற்கள் எளிதில் பொருள் புரிந்து கொள்ள இயலாத வகையில் வந்துள்ளன.
தத்தை – கிளி
ஆழி – கடல்
செப்பினான் – உரைத்தான் என்று கற்றவர்களால் பொருள் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே பொருள் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை திரிசொற்கள் என்று அழைக்கப்படுகின்றன. திரிசொல் குறித்து தொல்காப்பியர் கூறுகையில்
“ஒரு பொருள் குறித்த வேறுசொல் ஆகியும்
வேறுபொருள் குறித்த ஒருசொல் ஆகியும்
இருபாற்று என்ப திரிசொல் கிளவி”

இளம்பூரணர் பின்வருமாறு உரை கூறுகிறார்…
“ஒரு பொருளைக் கருதிப் பல சொல்லான் வருதலும், பல பொருளைக் கருதி ஒரு சொல்லான் வருதலும் என இரு கூற்றனவாகும் திரிசொற்கள்.” அதாவது:
1. ஒருபொருள் குறித்த வேறு சொல்
2. வேறுபொருள் குறித்த ஒருசொல்
உரிச்சொல்லிலும் இந்த நிலை உண்டு. எனவே உரிச்சொல்லுக்கும் திரிசொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்துகொள்ள வேண்டும். திரிசொல் முழுமையான சொல்லாக இருக்கும். உரிச்சொல் குறைசொல்லாக இருக்கும்.

ஒருபொருள் குறித்த வேறு சொல்
1. கிள்ளை, தத்தை என்பன கிளியைக் குறிக்கும் வேறு சொற்கள்
2. மஞ்ஞை, பிணிமுகம் என்பன மயிலைக் குறிக்கும் வேறு சொற்கள்
3. வெற்பு, விலங்கர், விண்டு என்பன மலையக் குறிக்கும் வேறு சொற்கள்
4. மதி, திங்கள் என்பன நிலவைக் குறிக்கும் சொற்கள்
5. கமலம், கஞ்சம், முண்டகம், முளரி ஆகியன தாமரையைக் குறிக்கும். இவை யாவும் பெயர்ச்சொற்கள். எனவே ஒரு பொருள் குறித்த பல பெயர்த் திரிசொற்கள் ஆகும்.
6. செப்பினான், உரைத்தான், மொழிந்தான், இயம்பினான் இவை யாவும் சொன்னான் என்ற ஒரு பொருளைக் குறிக்கும் வினைத்திரி சொற்களாகும்.

வேறுபொருள் குறித்த ஒருசொல்
1. உந்தி = கொப்பூழ், யாழ்ப்பத்தல், தேர்த்தட்டு, ஆற்றுச்சுழி
2. அளகு = கோழி, கூகை, மயில் ஆகியவற்றின் பெண்னினத்தைக் குறிக்கும்.
3. என்மனார், என்றிசினோர் போன்றவை வினையின் வகைப்பாட்டுத் திரிசொல்

சொல்லிலக்கணம் – 11-thamil.co.ukவடசொல்
வடமொழி என்று குறிப்பிடப்படும் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் வடசொற்கள் ஆகும். இவை இரண்டு வகைப்படும்.
1) தற்சமம்
2) தற்பவம்

தற்சமம்
வடமொழிச் சொற்கள் தமிழ்மொழியில் தமிழ்ச் சொற்கள் போன்றே மாற்றமின்றி வருவது தற்சமம் எனப்படும். (எ.கா) கமலம் காரணம் மேரு. இச்சொற்களில் வடமொழிக்குரிய சிறப்பு எழுத்து எதுவும் இல்லை. இவற்றில் தமிழ் எழுத்துகளே இடம் பெற்றுள்ளன. எனவே இச்சொற்கள் தற்சமம் என்று அழைக்கப்படுகின்றன.

தற்பவம்
வட மொழிக்குரிய சிறப்பு எழுத்துகள் தமிழ்த் தன்மைக்கு ஏற்ப மாறி வருவது தற்பவம் எனப்படும்.
(எ.கா) :
பங்கஜம்-பங்கயம்
ரிஷபம்-இடபம்
ஹரி-அரி
பக்ஷி-பட்சி
சரஸ்வதி-சரசுவதி
வருஷம்-வருடம்
இவற்றில் வடமொழிக்கே உரிய ஒலிப்புகளைக் கொண்ட எழுத்துகள் தமிழ் மொழிக்கு ஏற்ப மாறி வந்துள்ளன. எனவே தற்பவம் என்று அழைக்கப்படுகின்றன.

தமிழில் தேவையில்லாத இடங்களில் திசைச்சொற்களையும் வடசொற்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
“பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும்
ஈர் எழுத்தானும் இயைவன வடசொல்” (நன்னூல் : 274)

வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவாக உள்ள எழுத்துகளாலும் வடமொழிக்குச் சிறப்பாக உள்ள எழுத்துகளாலும் வடமொழியிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் வடசொற்கள் ஆகும் எனலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் வட மொழிச் சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. நம் முன்னோர்களின் மொழிப்பற்றாலும், தமிழறிஞர்களின் அளப்பரிய தொண்டுகளாலும், வடமொழிச் சொற்களால் தமிழில் பெரியபாதிப்பை உருவாக்க முடியவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல வடமொழிச் சொற்கள் கைவிடப்பட்டு, எளிய தமிழ்ச்சொற்கள் மீண்டும் பழக்கத்திற்கு வந்துள்ளன.

இன்றைய கல்விச் சூழலாலும் ஊடகங்களாலும், நம்மில் பலருக்கு வடமொழிச் சொற்களுக்கும், தமிழ் சொற்களுக்கும் வேறுபாடே காணமுடியாத நிலை உருவாகி உள்ளது. ஆரம்பம், கல்யாணம், அவசரம், அன்னியம், ஞாபகம், சந்தோசம், கர்வம், துரோகம், பரம்பரை, யோக்யதை மேலே குறிப்பிட்ட சொற்கள் எல்லாமே வடமொழிச் சொற்களே.

பல வடமொழிச் சொற்களை எழுதுவதற்காக பின்வரும் எழுதுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. (ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ) இது போன்ற எழுத்துருக்களைக் கொண்ட சொற்களை வடமொழிச் சொற்கள் என்று மிகஎளிதாகக் கண்டறிந்துவிடலாம். (எ.கா) நஷ்டம், ஆக்ஷேபம் போன்ற சொற்கள்.

ஆனால் பல வடமொழிச் சொற்கள் தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. (எ.கா) ஆரம்பம், கல்யாணம் போன்ற சொற்கள். இவற்றை நாம் பெரும்பாலும் தமிழ்ச் சொற்கள் என்றே எண்ணுகின்றோம்.

நாம் அன்றாடம் அடிக்கடி பயன்படுத்தப்படும் வடமொழிச் சொற்களையும் அதற்கு இணையான தமிழ்ச் சொற்களையும் கீழே காண்க.

வடமொழிச் சொல்- தமிழ்ச் சொல்
இருதயம் – உள்ளம்
ஆச்சர்யம் – வியப்பு
ஆரம்பம் – தொடக்கம்
அக்ஷேபம் – மறுப்பு
சங்கீதம் – இன்னிசை
கோஷ்டி – குழு
அபிவிருத்தி – செழிப்பு
அபூர்வம் – அருமை
அர்த்தம் – பொருள்
அவசரம் – விரைவு
அவசியம் – தேவை
அனாவசியம் – தேவையற்றது
அற்புதம் – புதுமை
அன்னியம் – அயல்
அனுபவி – நுகர்
ஆசீர்வாதம் – வாழ்த்து
சந்தோசம் – மகிழ்வு
கர்வம் – செருக்கு
சகஜம் – இயல்பு
சகோதரன் – உடன்பிறந்தவன்
கல்யாணம் – திருமணம்
சந்ததி – மரபு
சீக்கிரம் – சுருக்க
சுதந்திரம் – உரிமை
சேட்டை – குறும்பு
ஞாபகம் – நினைப்பு
தருமம் – அறம்
துரோகம் – இரண்டகம்
நஷ்டம் – இழப்பு
நிஜம் – மெய்
பக்தன் – அன்பன்
பரம்பரை – தலைமுறை
பிரகாசம் – ஒளி
பாபம் – தீவினை
யோக்யதை – தகுதி
ஜன்மம் – பிறவி
ஸ்ரீ – திரு
மீண்டும் சொல்லுகிறேன்… முடிந்தவரை நாம் அனைவரும் வடமொழிச் சொற்களைத் தவிர்த்து தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு தவிர்க்க இயலாமல் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தினால் அதற்கான விதி முறைகளுக்கேற்ப பயன்படுத்த வேண்டும்.

வடமொழி எழுத்துகளை தமிழில் பயன்படுத்த உதவும் சில விதிகள்:
வட எழுத்து தமிழில் எழுதும் முறை உதாரணம்
ஜ ‘ச’ அல்லது ‘ய’ ஜயம் – சயம்
பங்கஜம் – பங்கயம்
ஷ ‘ச’ அல்லது ‘ட’ ஷண்முகம் – சண்முகம்
விஷம் – விடம்
ஸ ‘ச’ அல்லது ‘ய’ ஸபா – சபை
நேசம் – நேயம்
ஹ ‘அ’ அல்லது ‘க’ ஹரி – அரி
க்ஷ ‘க்க’ அல்லது ‘ட்ச’ பக்ஷி – பட்சி
பக்ஷம் – பக்கம்
சொல்லிறுதியில் வரும் ‘ஆ’ ‘ஐ’ மாலா – மாலை
கலா – கலை
‘ர’ ‘அ’ அல்லது ‘இ’ உடன் வரும் ரங்கம் – அரங்கம்
ராமன் – இராமன்
‘ல’ ‘இ’ அல்லது ‘உ’ லாபம் – இலாபம்
லோகம் – உலோகம்
‘ய’ ‘இ’ அல்லது ‘உ’ யமன் – இயமன்
யுத்தம் – உயுத்தம்

சொல்லிலக்கணம் thamil.co.uk

சொல்லிலக்கணம்

 (06)திசைச்சொல்

ஆரியர் வருமுன்பே தமிழ் இலக்கண நூலார் தமிழைச் செந்தமிழ், கொடுந்தமிழ் என வகுத்தனர். பாண்டி நாட்டை தன்னகத்தே கொண்டு செந்தமிழ் நிலத்தில் வழங்கிய சொற்களைச் செந்தமிச் சொல் என்றும், செந்தமிழ் நிலத்தின் வடக்கும் கிழக்கும், மற்றும் வடமேற்குமாகப் பல்வேறு திசைகளிலுமுள்ள எல்லைப்புற நாடுகளாகிய கொடுந்தமிழ் நிலங்களில் வழங்கிய சொற்களை திசைச்சொல் என்றும் வழங்கினர்!

“செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப” (நன்னூல் : 273)

செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு பகுதிகளிலிருந்தும் பதினெட்டு மொழி பேசும் நாடுகளில் தமி்ழ்மொழி பேசும் பகுதி அல்லாத பிற பதினேழு நிலங்களில் உள்ள மொழிகளிலிருந்தும் தமிழ் மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் என்பது இந்த நூற்பாவின் பொருள்.

பன்னிரண்டு நிலங்கள் (நாடுகள்)
“தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி
பன்றிஅருவா அதன்வடக்கு — நன்றாய
சீதமலநாடு புனல்நாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிரு நாட்டெண்”

1)தென்பாண்டி நாடு,  2)குட்ட நாடு,  3)குட நாடு,  4)கற்கா நாடு, 5)வேணாடு,  6)பூழி நாடு, 7)பன்றி நாடு, 8)அருவா நாடு, 9)அருவா வடதலை நாடு, 10)சீதநாடு, 11)மலாடு, 12)புனல் நாடு என்பவை பன்னிரண்டு நாடுகள் ஆகும்.

பதினெட்டு மொழி வழங்கும் நாடுகளில் தமிழ் தவிர்த்து ஏனைய பதினேழு நாடுகள்.
1)சிங்களம்,  2)சோனகம்,  3)சாவகம்,  4)சீனம்,  5)துளு,  6)குடகம்,  7)கொங்கணம்,  8)கன்னடம்,  9)கொல்லம்,  10)தெலுங்கம்,  11)கலிங்கம், 12)வங்கம், 13)கங்கம், 14)மகதம், 15)கடாரம்,  16)கௌடம்,  17)குசலம் என்பவை பதினேழு மொழிகள் பேசப்படும் நாடுகள் ஆகும்.

17 தமிழ்மொழி நிலம்
“சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுக், குடகம்
கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம், கலிங்கம்,வங்கம்,
கங்க மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம்,
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்நிலம் தாமிவையே”

அருமணம், காம்போசம், ஈழம், கூவிளம், பல்லவமங்கம் இந்த 17 நாடுகளுக்குள் அடங்கும் நாடுகளின் மாற்றுப்பெயர்கள்.
‘கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுறச் சையத்து
உடனுறைவு பழகும் தமிழ்திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இடுநில ஆட்சி
அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
பன்னிரு நிலத்தில் சொல்நயம் உடையவும்’
– என்றார் அகத்தியனார்

தொல்காப்பியர் இது பற்றி என்ன கூறுகிறார்??

செந்தமிழ் சேர்ந்த 12 நிலம்
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம குறிப்பினவே திசைச்சொல் கிழவி” – தொல்காப்பியம்

இளம்பூரணர் செந்தமிழ் நிலத்துக்கு இவ்வாறு எல்லை கூறுகிறார்.
‘வையை ஆற்றுக்கு வடக்கே, மருத ஆற்றுக்குத் தெற்கே,
கருவூருக்குக் கிழக்கே, மருவூருக்கு மேற்கே,’ என செந்தமிழ் நிலத்துக்கு எல்லை காட்டுகிறார்.

இதன் வழி இவர் காட்டும் 12 நிலங்களும் திசைச்சொற்களும்
1. பொங்கர் (பொதுங்கர்) நாடு
2. ஒளி நாடு
3. தென்பாண்டி நாடு – ஆ, எருமை என்பனவற்றைப் பெற்றம் என்பர்,
4. குட்டநாடு – தாயைத் தள்ளை என்பர்
5. குடநாடு – தந்தையை அச்சன் என்பர்
6. பன்றிநாடு – செறுவைச் செய் என்பர்.
7. கற்கா நாடு – வஞ்சரைக் கையர் என்பர்
8. சீத நாடு – ஏடா என்பதனை எலுவ என்பர்.
9. பூழி நாடு – நாயை ஞமலி என்பர்
10. மலையமான் நாடு – தோழியை இகுளை என்பர்.
11. அருவாள் நாடு – செய்யை (நிலத்தை)ச் செறு என்பர். சிறுகுளத்தைப் பாழி, என்றும், கேணி என்றும் கூறுவர்.
12. அருவா வடதலை நாடு – குறுணியை (ஒரு கல நெல்லில் ஆறில் ஒரு பங்கு) குட்டை என்பர். புளியை எகினம் என்பர்.

பிற மொழிச் சொற்கள்
வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியோடு தமிழுக்குக் காலந்தோறும் தொடர்பு இருந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. சங்கம் மருவிய காலத்தில் சமணசமயச் செல்வாக்கினால் பிராகிருத மொழித் தொடர்பு ஏற்பட்டது.  ஆழ்வார், நாயன்மார் காலத்திலும் சோழர் காலத்திலும் வடமொழிச் செல்வாக்கு மிகுந்தது.

கி.பி. 14 ம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பின் தமிழகத்தின் ஒரு பகுதியை முஸ்லிம்கள் ஆண்டனர். அப்போது அரபு, உருது, பாரசிகச் சொற்கள் தமிழில் புகுந்தன.

கி.பி. 16 ம் நூற்றாண்டில் விஜய நகர நாயக்கர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆளத் தொடங்கிய போது தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்தன.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மேலை நாட்டார்  வருகையால் போர்ச்சுக்கீஸ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலச் சொற்கள் தமிழில் கலந்தன.

வடமொழி
திருப்புகழிலும், வில்லிபுத்தூரார், தாயுமானவர் பாடல்களிலும் சமஸ்கிருதத் தொடர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. சாதாரண மக்களின் பேச்சுத் தமிழிலும் சமஸ்கிருதச் சொற்கள் புகுந்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் வடசொற் கலந்தே எழுதப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய தமிழ்மொழித் தூய்மை இயக்கம் குறிப்பாக வடமொழிச் சொற்களுக்கு எதிரான இயக்கமாக அமைந்தது.

ஆனால் பிற இந்திய மொழிகளை ஒப்பிடும் போது தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து குறைவாகவே கடன் பெற்றுக்கொண்டது.

வடமொழி – தமிழ்
தை – சுறவம்
மாசி – கும்பம்
பங்குனி – மீனம்
சித்திரை – மேழம்
வைகாசி – விடை
ஆனி – ஆடவை
ஆடி – கடகம்
ஆவணி – மடங்கல்
புரட்டாசி – கன்னி
ஐப்பசி – துலை
கார்த்திகை – நளி
மார்கழி – சிலை

மராத்தி
மராட்டியர்கள் கி.பி. 1766 முதல் 1800 வரை தமிழகத்தை ஆண்டு வந்தனர். சரபோஜி என்ற மராட்டிய மன்னர் தஞ்சாவூரில் சரஸ்வதி மகால் என்ற நூலகத்தை ஏற்படுத்தி வடமொழி, மேலை நாட்டு மொழிகள், மராத்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளின் நூல்கள் பலவற்றைத் திரட்டி வைத்துப் பெருமை சேர்த்தார்.
தமிழில் 55 மராத்திச் சொற்கள் இடம் பெற்றிருப்பதாகத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. இவற்றுள் 23 சொற்கள் இன்றும் பேச்சு வழக்கில் உள்ளன. தமிழில் வழங்கும் பல மராத்திச் சொற்கள் உணவு வகைகளைப் பற்றியவையாகும்.
(எ.கா)
சேமியா, கிச்சடி, கசாயம், பட்டாணி, கோசும்பரி, வாங்கி,ஸொஜ்ஜி முதலியன உணவு பற்றிய சொற்களாகும்.

கங்காளம், கிண்டி, ஜாடி, சாலிகை, குண்டான் முதலியன சமையல் பாத்திரங்கள் பற்றியவை.

கண்டி, சாகி, லாவணி, அபங்கம், டோக்ரா முதலியன இசை தொடர்பான மராத்திச் சொற்களாகும்.

காமட்டி, கைலாகு, வில்லங்கம், சாவடி, கோலி (சிறுவர் விளையாட்டு), அபாண்டம், கில்லாடி, இண்டி மாமா, கலிங்கம், கொட்டு, சந்து, பொந்து, சலவை, நீச்சல், ஜாஸ்தி, சுங்கு, சொண்டி, தடவை, தரகரி, திமிசு, நீச்சு, பீருடை போன்ற சொற்களும் தமிழில் கலந்துள்ளன.

தெலுங்கு
திராவிட மொழிகளுள் ஒன்றான தெலுங்குடன் தமிழுக்கு நீண்ட காலமாகத் தொடர்புகள் உண்டு. சோழர்களது வெற்றியாலும் திருமண உறவாலும் தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்து கொண்டன எனலாம்.

விசய நகரப் பேரரசின் சிற்றரசர்களான நாயக்கர்கள் ஆட்சி மதுரையில் நடைபெற்றபோது தெலுங்கு மொழி சிறப்புற்று விளங்கியது. தமிழ் நாட்டிற்கு ரெட்டியார்களும் நாயக்கர்களும் வந்து குடியேறியதால் தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்தன.

தமிழ்ப் பேரகராதி 325 சொற்கள் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்ததாகக் குறிப்பிடுகிறது. (எ.கா) இரளி, உப்பசம், சளிப்பு, கலிங்கம், சொண்டி, கத்தரி, கடப்பாரை, ராயசம், தரகரி, சேந்திரவர், கம்பத்தக்காரர், குப்பம், ரெட்டியார், பட்டர், கோமட்டி முதலிய சொற்கள் சான்று.

அக்கடா, அட்டி, அண்ணு, டாப்பு, துரை, பெத்த, தீவட்டி, ஜாடி, ஜதை, தண்டா, களுபு, கட்டடம், கலப்படம், உருண்டை, சொக்கா, திப்பி, தோத்தி, பட்டறை, பலப்பம், சந்து, ரவிக்கை, ராவடம், ரேக்கு, லாகிரி, உத்தி, உம்மச்சு, ஒட்டாரம், ஒயில், கந்தை, கண்ணராவி, கபோதி, கம்பத்தம், கம்பல், கரிசை, கவுளி, காட்டம், கும்பு, கெடுவு, கொப்பி,
கொலுசு, சந்தடி, களிப்பு, சிட்டிகை, சிமிளி, தோபத்தி, பவிசு, வாணலி, ஜப்பை, அடாதுடி, அப்பட்டம், ரம்பம், காயம், கொடுக்கு, தெம்பு, நமுத்தல், ஜாஸ்தி, பத்தர், அட்டவணை, சாம்பார், சரவடி, பேட்டை, ரசவாங்கி, வில்லங்கம் , பாம்பு, தீவிட்டி, சாம்பார், குடுமி போன்றவையும் தெலுங்கிலிருந்து தமிழுக்குப் பெறப்பட்ட சொற்களே ஆகும்.

கன்னடம்
தமிழகம் கன்னட மொழியுடன் பழங்காலத்திலிருந்தே தொடர்பு களைப் பேணி வந்துள்ளது. விசய நகர அரசாட்சியின் கீழ் சிலர் தெலுங்கு நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் சிலர் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். ஹொய்சளர்கள் சோழ நாட்டைக் கைப்பற்றி ஆண்ட காலத்தில் கன்னடம் உச்சநிலை அடைந்து செல்வாக்குப் பெற்றிருந்தது.
(எ.கா)
அட்டிகை, இதர, எகத்தாளம், சமாளித்தல், சொத்து, பட்டாக்கத்தி, ஒது, இட்டளம், குலுக்கல், குட்டு, கொம்பு, தாண்டல், எட்டன் போன்றன சான்றுகள்.

தமிழ்ப் பேரகராதி 38 கன்னடச் சொற்கள் தமிழில் புகுந்தவை என்று குறிக்கின்றது.

உருது
நவாப்புகள் ஆட்சிக் காலத்திலும், ஆங்கில ஆட்சியின் பொழுதும் நிர்வாகத் தொடர்பான பல உருதுச் சொற்கள் வழக்கில் இருந்தன. இன்றும் அவை வழக்கில் உள்ளன. தமிழில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உருதுச் சொற்கள் கலந்துள்ளன எனத் தமிழ்ச் சொற்களஞ்சியம் குறிப்பிடுகிறது.
(எ.கா)
நசர், சராய், கோரி, கெடுபிடி, கெழுவு அல்லது கெவு, கைதி, சப்பரம், சராசரி, செலாவணி, சாட்டி, சாமான், சாலேசுரம், சீனி, சுக்கான், சேடை, சீட்டு, தயார், அக்கப்போர், அகங்காரம், அண்டா, ஆசாமி, அசல், ராட்டினம், ராஜினாமா, அலாக்காக, அலாதி, இனாம், கச்சேரி, அஸ்திவாரம், உசார் போன்றவை அவற்றுள் சில ஆகும்.

பாலி மொழி
தம்ம (அறம்), தன (முலை), தல (இடம்) , பக்க (நட்பு, புறம்), ஸத்த (ஒலி), விஸய (பொருள்) , ஸந்தோஸ (மகிழ்ச்சி), தோஸ (குற்றம்)

இந்தி
நயா பைசா, சாதி, சாயா, அந்தர், ரூப்பியா ஆகியனவாகும்.

மலையாளம்
வெள்ளம், ஆச்சி, அவியல், சக்கை, காலன், தளவாடம், பிரதமர், வஞ்சிக்கொடி ஆகியனவாம்.

சிங்களம்
சீசா, போத்தல், பில்லி, அந்தோ, மருங்கை

மலாய் (மலேசியா)
சவ்வரிசி, கிடங்கு, கிட்டங்கி ஆகியனவாம்.

அரபிய மொழி
வசூல், இலாக்கா, சைத்தான், மகால், ரத்து, ஜப்தி, ஜாமின், தணிக்கை, மகசூல், ஜில்லா போன்றவையாகும்.

துருக்கி
துப்பாக்கி, தோட்டா, வான்கோழி போன்றவை.

போர்க்சுகீசியம்
கடுதாசி, பேனா, வாத்து, அலமாரி, மேசை, சாவி, கோப்பை, வராந்தா, கிராதி, கொரடா, ஏலம், சன்னல், மேஸ்திரி போன்றவை.

டச்சு
கக்கூஸ், தொப்பி.

பிரெஞ்சு
லாந்தர், ஆஸ்பத்திரி, பீரோ, பொத்தான்.

ஆங்கிலம்
சினிமா, சோப்பு, பேப்பர், டிக்கெட், போலீஸ், பஸ், மோட்டார், பங்களா, பென்சில், லீவு, கோர்ட்

மேலும் பல நாட்டவர்கள் தமிழ்நாட்டுடன் கொண்ட வணிகத் தொடர்புகளாலும், பிறதொடர்புகளாலும் இன்னும் பல திசைச்சொற்கள் தமிழில் வந்து சேர்ந்தன. திசைச்சொற்கள் தொல்காப்பியத்திற்கு முன்பிருந்தே தமிழில் இருந்தன என்றும் அறிய முடிகிறது.

முடிவாக
பிறமொழிக் கலப்பின்றி எழுத வேண்டும் என்ற வாதம் திசைச்சொற்களைத் முடிந்தவரை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதே பொருளாகும்.

அறிவியல், தொழில்நுட்ப, வணிக வார்த்தைகளுக்குக் கலைச்சொல்லாக்கம் செய்வது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் இலக்கண மரபின்படி நம்மிடையே ஊறிப்போன திசைச்சொற்களை தமிழின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்வதுமாகும்.

பல ஆண்டுகளாகத் தமிழில் ஏற்கனவே பொதுமக்களிடையே பிரபலமான திசைச்சொற்களை தமிழ் என்ற பெயரில் எழுத முயல்வது, தமிழின் இலக்கணமும், மரபும் அறியாதோர் செயல் ஆகும்.

ஒரு சொல்லின் ஆரம்பத்தை (origin) ஆராய்கின்ற முறைக்கு “வேர்ச்சொல் ஆராய்ச்சி” (Etymology) என்று பெயர்.

தொல்காப்பியர் கூட சொற்களின் மூலத்தைத் தெளிவாகக் கண்டுபிடித்துவிட முடியாதென்று சொல்கிறார் என, சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி ஓரிடத்தில் பதிவு செய்துள்ளது.

டாக்டர் கால்டுவெல் போன்ற ஒரு சிலரின் முயற்சிகளைத் தவிர, தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியானது அனுமானத்தின் அடிப்படையிலும், கற்பனையின் அடிப்படையிலுமானவை என்றும் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி மேலும் கூறுகின்றது.

சுருங்கச் சொன்னால் இலக்கண நூல் வல்லோர் இத்தைகைய “வேர்ச்சொல் ஆராய்ச்சிகளை” மேற்கொள்ள வேண்டுமென்றே நாம் பெரிதும் விரும்புகிறோம்.

மொழி அறிவு என்பது தாய் மொழிமீது உணர்வுபூர்வமான பற்றுதலைத் தோற்றுவிக்க வேண்டுமே தவிர, அது மொழி வெறியை உருவாக்கிவிடும் என்ற கருத்தையும் இங்கு நாம் நிராகரிக்கின்றோம்!

சொல் இலக்கணம் : தொடர் 9-12
சிறீ சிறீஸ்கந்தராஜா
22/022013 – 08/03/2013

தொகுப்பு – thamil.co.uk