சொல்லிலக்கணம் 3 : சிறீ சிறீஸ்கந்தராஜா

சொல்லிலக்கணம் – 7 பதம் (பதவியல்)

எழுத்து தனித்து நின்றாயினும், பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றாயினும், பொருள் தருமாயின் அது சொல் எனப்படும். பொருளை அறிவதற்குக் கருவியாய் இருப்பது சொல் ஆகும்! சொல்லை வடமொழியில் “பதம்” என்பர். எனவே இவ் இயல் வடமொழி இலக்கணத்தையும் தழுவிச் செல்வதனால் “பதம்” என்னும் வடமொழிச் சொல்லை தமிழுக்குக் கொண்டுவரும் நோக்கில், தமிழிலக்கண நூல்வல்லோர் இதற்குப் “பதவியல்” எனப் பெயரிட்டனர் போலும்.

“பதம்” என்றால் என்ன?
ஓர் எழுத்துத் தனியே வந்து பொருளைத் தந்தால், அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருளைத் தந்தால் அது பதம் எனப்படும். “பதம்” என்பது “சொல்” என்றும் பொருள்படும். சொல் என்பதை உணர்த்த “மொழி” என்ற சொல்லும் பயன்படுகிறது. எனவே பதம், சொல், மொழி ஆகிய மூன்று சொற்களும், பொருள் தரக்கூடிய தனி எழுத்தை அல்லது எழுத்துகளின் கூட்டத்தைக் குறிப்பன எனலாம். நூற்பா: 128
(பதம் இரண்டு)
எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருடரிற்
பதமா மதுபகாப் பதம்பகு பதமென
இருபா லாகி யியலு மென்ப. (01)

“எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருடரிற் பதமாம்” இந்த நூற்பாவின் மூலம் நாம் அறியக்கூடியது என்னவெனில், ஒரு எழுத்து தனித்தும் வரலாம், ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்தும் வரலாம், ஆனால் அவை பொருள் தருதல் வேண்டும் என்பதாகும். மேலும் இந்த நூற்பா இன்னொரு மறைபொருளையும் இங்கே உணர்த்தி நிற்கிறது.

எழுத்து தனித்து வந்தாலும், எழுத்துகள் தொடர்ந்து வந்தாலும் அவை பொருள் தரவில்லை என்றால் அது பதமாகாது என்பதாம்.
(எ.கா) : ஆ – பசு
ஈ – இலையான்

(எ.கா) : தலைவி – மூன்றெழுத்துக்கள்
தலைவன் – நான்கு எழுதுக்கள்.

ஓரெழுத்து ஒருமொழியும், தொடர்எழுத்து ஒரு மொழியும்
ஓர்எழுத்து மட்டும் தனித்து நின்று பொருள் தருமானால் அது ஓர்எழுத்து ஒருமொழி என்றும், பல எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருமானால் அது தொடர் எழுத்து ஒருமொழி என்றும் வழங்கப்படும்.

இது பற்றி தொல்காப்பியரின் கருத்துக்களையும், நன்நூலாரின் கூற்றுக்களையும் காண்போம்.

தொல்காப்பியர் : எழுத்துக்களின் பிறப்பிடங்களை மிகவும் நுட்பமாக வரையறை செய்த தொல்காப்பியர் சொற்கள் தோன்றும் முறைமையையும் வகுத்துக் காட்டுகிறார்.

* ஓர்எழுத்து ஒருமொழி
* ஈர்எழுத்து ஒருமொழி
* பலஎழுத்து ஒருமொழி

“ஓர்எழுத்து ஒருமொழி ஈர்எழுத்து ஒருமொழி இரண்டுஇறந்து
இசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய
நெறியே” (எழுத்து. 2 : 45)

ஓர்எழுத்து ஒருமொழி
ஏழு நெட்டெழுத்துக்களையும் ஓர்எழுத்து மொழி என்று கூறுகிறார்.

‘நெட்டெழுத்து ஏழே ஓர்எழுத்து ஒருமொழி’ – (எழுத்து. 2: 43)

1 – ஆ = பசு
2 – ஈ = ஈ
3 – ஊ = இறைச்சி
4 – ஏ = அம்பு
5 – ஐ = அழகு, தலைவன்
6 – ஓ = மதகுநீர் தாங்கும் பலகை
7 – ஒள = பொருள் இல்லை

இவ்வாறாக, நெட்டெழுத்துக்களைப் பற்றிக் கூறிய தொல்காப்பியர், குற்றெழுத்துக்கள் ஐந்தும் ஓர்எழுத்து ஒருமொழியாக வருவது வழக்கில் இல்லை என்பதையும் குறிப்பிடுகின்றார். “குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே” – (எழுத்து. 2 : 44)

அ, இ, உ, எ, ஒ என வரும் இந்த குற்றெழுத்துக்கள் ஐந்தில், அ, இ, உ ஆகிய மூன்றும் சுட்டுப் பொருளை உணர்த்துவன. எ என்னும் எழுத்து வினாப்பொருளை உணர்த்துகின்றது. எனவே, இவற்றை ஏன் ஓர்எழுத்து ஒருமொழியாக தொல்காப்பியர் கொள்ளவில்லை என்ற சந்தேகமும் கூடவருகிறது.

சுட்டெழுத்துகளும் வினா எழுத்தும் ‘இடைச் சொற்கள்’ என்னும் வகையில் அடங்குவன. இடைச்சொற்கள் பெரும்பாலும் பிற சொற்களோடு சேர்ந்து வந்தே பொருள் தரும். ஆகவே அவை ஒருபோதும் தனித்து நின்று பொருள்தர வல்லன அல்ல என்பதையும் அவர் அறிவார்.

ஈர்எழுத்து ஒருமொழி
இரண்டு எழுத்துகள் சேர்ந்து வந்து பொருள் தருமானால், அது ஈர்எழுத்து ஒருமொழி ஆகும். (எ.கா) : அணி, மணி, கல், நெல்

தொடர்எழுத்து ஒருமொழி
பல எழுத்துகள் சேர்ந்து வந்து பொருள் தருவதைத் தொடர்எழுத்து ஒருமொழி என்று கூறுகிறார். (எ.கா) : கல்வி, கொற்றன், பாண்டியன்

நன்னூலார்
சில விடயங்களில் தொல்காப்பியரிலும் பார்க்க நன்னூலார் மிகவும் அதி நுட்பமாகச் சிந்திப்பார். ஓர்எழுத்து ஒருமொழியாக அமையக்கூடிய தமிழ் எழுத்துகள் எத்தனை வகையின என்பதனை நன்நூலார் இப்படிப் பட்டியலிடுகின்றார்.

நூற்பா: 129
உயிர் ம இல் ஆறு உம் த ப ந இல் ஐந்து உம்
க வ ச இல் நால் உம் ய இல் ஒன்று உம்
ஆகும் நெடில் நொ து ஆம் குறில் இரண்டு ஓடு
ஓர் எழுத்து இயல் பதம் ஆறு ஏழ் சிறப்பின

ஓர்எழுத்து ஒருமொழி
உயிர், மவில் ஆறும்
உயிர்எழுத்துகள் 6 – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
‘ம’ வருக்கத்தில் ஆறு 6 – மா, மீ, மூ, மே, மை, மோ

தபந – இல் ஐந்தும்
‘த’ வருக்கத்தில் ஐந்து 5 – தா, தீ, தூ, தே, தை
‘ப’ வருக்கத்தில் ஐந்து 5 – பா, பூ, பே, பை, போ
‘ந’ வருக்கத்தில் ஐந்து 5 – நா, நீ, நே, நை, நோ

கவச – இல் நாலும்
‘க’வருக்கத்தில் நான்கு 4 – கா, கூ, கை, கோ
‘வ’வருக்கத்தில் நான்கு 4 – வா, வீ, வை, வௌ
‘ச’வருக்கத்தில் நான்கு 4 – சா, சீ, சே, சோ

ய வில் ஒன்றும்
‘ய’ வருக்கத்தில் 1 – யா

குறில் இரண்டும்
‘நொ, து’- குறில் 2 – நொ, து
மொத்தம் 42 எழுத்துக்கள் தமிழில் ஓர் எழுத்து ஒரு மொழியாக அமைவன என்று நன்னூலார் வகுத்துக் காட்டுகின்றார். இவற்றுள் பல சொற்களை நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். ஏனயவை பேச்சு வழக்கில் இல்லாத இலக்கிய வழக்குச் சொற்களாகும்.

உயிர் எழுத்துக்கள் – 6
உயிர் மெய் நெடில் எழுத்துக்கள் – 34
உயிர் மெய்க் குறில் எழுத்துக்கள் – 2
மொத்தம் – 42

ஓர்எழுத்து ஒருமொழியில் உயிர் எழுத்துகள்
ஆ – பசு
ஈ – ஈ
ஊ – இறைச்சி
ஏ – அம்பு
ஐ – அழகு, தலைவன்
ஓ – மதகு நீர் தாங்கும் பலகை

ஓர்எழுத்து ஒருமொழியில் உயிர்மெய் எழுத்துகள்
‘ம’ வருக்கத்தில் (6)
********************
மா – பெரியது
மீ – மேல்
மூ – மூப்பு
மே – மேல்
மை – மசி
மோ – மோத்தல், முகத்தல்

‘த’ வருக்கத்தில் (5)
*******************
தா, தீ, தை – பேச்சு வழக்கு
தூ – என்பது தூய்மை, வெண்மை என்றும்,
தே – என்பது கடவுள் என்றும் பொருள்படும்.

‘ப’ வருக்கத்தில் (5)
***************
பூ, பை, போ – பேச்சு வழக்கு
பா – பாடல்
பே – அச்சம்

‘ந’ வருக்கத்தில் (5)
*******************
நே – அன்பு
நை – வருத்தம், துன்பம்
நோ – துன்பம்

‘க’ வருக்கத்தில் (4)
*******************
கா – காப்பாற்று, சோலை
கூ – பூமி
கை – கரம்
கோ – மன்னன், தலைவன்

‘வ’ வருக்கத்தில் (4)
*******************
வா – வருதல்
வீ – மலர்
வை – வைத்தல்
வெள – திருடல், கவர்தல்

‘ச’ வருக்கத்தில் (4)
*******************
சா – இறத்தல்
சீ – இகழ்ச்சி
சே – எருது
சோ – மதில்

‘ய’ வருக்கத்தில் (1)
*******************
யா – ஒரு வகை மரம்

உயிர்மெய்க் குறில்
*******************
நொ – வருத்தம், துன்புறுத்து
து – உண்

தொல்காப்பியரும் நன்னூலாரும் ஓர்எழுத்து ஒருமொழியாக வரும் என்பதனை ஒப்புக்கொள்ளுகின்றனர். அவற்றிலும் நெட்டெழுத்துக்கள் ஓர்எழுத்து ஒருமொழியாக வரும் என்பதிலும் முரண்பாடில்லை. மேலும் தொல்காப்பியரோ ஓர்எழுத்து ஒருமொழியாக உயிர்எழுத்துக்கள் மட்டுமே வரும் என்று கொள்ளுகிறார்.

ஆனால் நன்னூலார் உயிர் எழுத்துக்கள் மட்டுமல்ல, உயிர்மெய் எழுத்துக்களும் ஓர்எழுத்து ஒருமொழியாக வரும் என்பதனையும் வகுத்துக்காட்டுகிறார்.

தமிழில் எழுத்துக்கள் இணைந்து, பொருள் தரும்போது மொழியாக உருவாகின்றன. அவை தனித்து நின்று ஒலிக்கும்போது எத்தகைய ஒலியைக் கொண்டிருக்கின்றனவோ அவ்வாறே அவை இணைந்து நின்று ஒலிக்கும் போதும் திரிவு அல்லது மாற்றம் ஏற்படுவதில்லை. இது தமிழ் மொழிக்கே உரிய ஒரு சிறந்த தனித்துவமாகும்.

பகாப்பதம் / பகுபதம்
பகுபதம்நூற்பா: 128 : (பதம் இரண்டு)
எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருடரிற்
பதமா மதுபகாப் பதம்பகு பதமென
இருபா லாகி யியலு மென்ப. (01)

எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள் தரின் பதம் ஆம் –
எழுத்துக்கள் தாமே ஒவ்வொன்றாகத் தனித்தும் இரண்டு முதலாகத் தொடர்ந்தும் பிற பொருளைத் தருமாயின் அது பதமாம்

அது பகாப்தம் (என) பகுபதம் என இருபாலாகி இயலும் –
அப் பதம் பகாப்பதம் எனவும் பகுபதமெனவும் இரண்டு வகையினை உடையதாகி நடக்கும் என்ப –
என்று சொல்லுவர் புலவர்.

பகாப்பதம் என்றால் என்ன??
நன்னூலார் பின்வருமாறு விளக்கம் தருகின்றார்.
நூற்பா: 131 : (பகாப்பதம்)
பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி
முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற
பெயர்வினை யிடையுரி நான்கும் பகாப்பதம். (04)

பகுப்பால் பயன் அற்று-
பிரிக்கப்படுதலினாலே பகுதி விகுதி முதலாகிய பயனில்லாமல்

இடுகுறி ஆகி முன்னே ஒன்று ஆய் முடிந்து இயல்கின்ற-
காரணமின்றி இடப்பட்ட குறியாகிப் படைப்புக் காலந்தொட்டு ஒன்றாகி முடிந்து நடக்கின்ற

பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம்–
பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லுமாகிய நான்கும் பகாப்பதங்களாம். .
பிரித்தால் பொருள் தராத பதமே பகாப்பதம் ஆகும்.
அவை இடுகுறியாக, மிக நீண்ட நெடுங்காலமாக வழங்கி வருவன ஆகும்.

(இடுகுறி = காரணம் இன்றி இடப்பட்டு வழங்கி வரும் சொல்).

(எ.கா) : ‘மழை பொழிகிறது’ இந்த வாக்கியத்தில் இரு பதங்கள் (சொற்கள்) உள்ளன.

பொழிகிறது என்பதை, பொழி + கிறு + அது என்று பிரிக்கலாம்.

‘பொழி’ என்பதைப் பிரிக்கமுடியாது. பிரித்தாலும் அது பொருள் தராது.

‘மழை’ என்பதும் அவ்வாறே, பொருள் தராது. எனவே இரண்டும் பகாப்பதங்கள் என்று கொள்ளலாம்.

பகாப்பதத்தின் வகைகள்
இவை நான்கு வகைப்படும் என்று கொள்ளுகிறார்.
* பெயர்ப் பகாப்பதம்
* வினைப் பகாப்பதம்
* இடைப பகாப்பதம்
* உரிப் பகாப்பதம்

பெயர்ப் பகாப்பதம்
பெயர்ச் சொற்களாக அமையும் பகாப்பதங்கள் பெயர்ப் பகாப்பதங்கள் ஆகும்.
(எ.கா) : நிலம், நீர், நெருப்பு, காற்று என்பன.

வினைப் பகாப்பதம் 
வினைச் சொற்களாக அமையும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதங்கள் எனப்படும்.
(எ.கா) : நட, வா, உண், தின் முதலியன.

இடைப் பகாப்பதம் 
இடைச் சொற்களாக அமையும் பகாப்பதங்கள் இடைப் பகாப்பதங்கள் எனப்படும்.
(எ.கா) : மன், கொல், போல், மற்று என்பன.

உரிப் பகாப்பதம்
உரிச் சொற்களாக அமையும் பகாப்பதங்கள் உரிப் பகாப்பதங்கள் எனப்படும்.
(எ.கா) : கூர், மிகு, உறு, தவ, நனி, கழி

நன்நூலாரின் கருத்துப்படி, இத்தகைய இடுகுறிச் சொற்களைப் பிரித்தால் அவை எவ்வித பொருளையும் தரமாட்டா எனலாம். எனவே இவற்றை நாம் பகாப் தங்களாகக் கொள்ளலாம்.

பதம்நூற்பா: 132 : (பகுபதம்)
பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின்
வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே. (05)

பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின் வருபெயர்-
பொருளும் இடமும் காலமும் சினையும் குணமும் தொழிலும்
காரணமாக வருகின்ற பெயர்ச்சொற்களும்

பொழுது கொள் வினை-
தெரிநிலையாகவும் குறிப்பாகவும் காலத்தைக் கொள்ளும்
வினைச் சொற்களும்

பகுபதம்-பகுபதங்களாகும்.

பொருளும், இடமும், காலமும், சினையும், குணமும், தொழிலும், காரணமாக வருகின்ற பெயர்ச்சொற்களும் தெரிநிலையாகவும் குறிப்பாகவும் காலத்தைக் கொள்ளும்  வினைச் சொற்களும் பகுபதங்களாகும்.

பகுபதங்களின் வகைகள்
பகுபதங்களை முதல் நிலையில் பெரும்பாலும் இரண்டு பெரும் பிரிவுகளாக வகுக்கலாம்.

* பெயர்ப் பகுபதம் (பெயர்ச்சொல்லாக அமையும் பகுபதம்)
*வினைப் பகுபதம் (வினைச்சொல்லாக அமையும் பகுபதம்)

பெயர்ப் பகுபதங்கள்
பெயர்ப் பகுபதங்களை மேலும் ஆறு உபபிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன வருமாறு.
* பொருட்பெயர்ப் பகுபதம்
* இடப் பெயர்ப் பகுபதம்
* காலப் பெயர்ப் பகுபதம்
* சினைப் பெயர்ப் பகுபதம்
* குணப் பெயர்ப் பகுபதம்
* தொழில் பெயர்ப் பகுபதம்

பொருட்பெயர்ப் பகுபதம்
ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்டு அமைவனவாகும். (எ.கா) : பொன்னன்
பொன்னை உடையவன் என்பது பொருள். இதைப் பிரித்தால் பொன்+அன் என்று பொருள் தருகிறது.

இடப்பெயர்ப் பகுபதம்
இடத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைவனவாகும்.
(எ.கா) : அகத்தான். ‘அகம்‘ என்னும் இடப்பெயரின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது.

காலப்பெயர்ப் பகுபதம்
நாள், திங்கள், ஆண்டு எனவரும் காலப் பெயர்களின் அடிப்படையில் இவை அமைகின்றன.
(எ.கா) : கார்த்திகையான். கார்த்திகைத் திங்களில் பிறந்தவன் என்று பொருள்படும்.
ஆதிரையாள். ஆதிரை நாளில் (நட்சத்திரத்தில்) பிறந்தவள் என்று பொருள்படுகிறது.

சினைப்பெயர்ப் பகுபதம்
சினை என்பது உறுப்பு என்று பொருள்தரும். உறுப்பின் பெயர் அடிப்படையில் இவை அமைகின்றன.
(எ.கா) : கண்ணன்
இங்கே ‘கண்’ என்பது உடலின் உறுப்பு (சினை).
இதனை கண் + அன் என்று பிரித்தால் ‘கண்‘ என்பது பொருள்தரும் சொல்லாக அமைகின்றது. எனவே இது சினைப் பெயர்ப் பகுபதம் ஆகின்றது எனலாம்.

குணப்பெயர்ப் பகுபதம்
இது ஒரு பண்பைக் (குணம்) குறிக்கும் சொல்லின் அடிப்படையில் அமைகின்றது.
(எ.கா) : கரியன்
இச் சொல் கருமை என்னும் பண்புப் பெயரின் அடிப்படையில் அமைந்துள்ளது.

தொழிற்பெயர்ப் பகுபதம்
இரு தொழிலின் பெயரை அடிப்படையாகக் கொண்டு அமைவன தொழிற் பெயர்ப் பகுபதங்கள் ஆகும்.
(எ.கா) : தட்டான், தச்சன், உழவன் எனவரும் பெயர்ச் சொற்கள் தொழிற்பெயரால் அமைந்தவை.

வினைப் பகுபதங்கள்
தெரிநிலை (வெளிப்படையாக)யாகவும், குறிப்பாகவும் காலத்தைக் காட்டும் வினைச் சொற்கள் வினைப் பகுபதங்கள் ஆகின்றன.

இவற்றை முதலில் இரு வகையாகப் பிரித்துக் நோக்கலாம்.
* வினைமுற்றுப் பகுபதம்
* வினையாலணையும் பெயர்ப் பகுபதம்
இவற்றையும் மேலும் உபபிரிவுகளாகப் பிரிக்கலாம்.

வினைமுற்றுப் பகுபதங்கள்
* தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம்
* குறிப்பு வினைமுற்றுப் பகுபதம்

தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம்
ஒரு வினைப் பகுபதம் காலத்தை வெளிப்படையாகக் காடுமேயானால் அது தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் எனப்படும்.
(எ.கா) : நடந்தான், நடக்கின்றான், நடப்பான் எனவரும் வினைமுற்றுகளில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களும் வெளிப்படையாகத் தெரிகின்றன. இவ்வாறு வினை நிகழ்ந்த காலம் வெளிப்படையாகத் தெரிவதனால் இவை தெரிநிலை வினைமுற்றுகள் ஆகின்றன.

தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் எதிர்மறையாகவும் வரும்.
(எ.கா) : நடவான்

குறிப்பு வினைமுற்றுப் பகுபதம்
ஒரு வினைப் பகுபதம் காலத்தைக் குறிப்பால் உணர்த்துமேயானால் அது குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் ஆகிறது. குறிப்பு வினை என்பது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறுவகைப் பெயர்களின் அடிப்படையாகத் தோன்றி, வினைச்சொல்லின் பொருளைத் தருவன எனலாம்.
(எ.கா) : பொன்னன், ஊணன், அற்று, இற்று எனவரும் சொற்களில் காலம் தெரிநிலையாக வெளிப்படவில்லை. ஆனால் இச்சொற்களில் காலம் குறிப்பால் உணர்த்தப்படுகின்றது.

அவன் பொன்னனாக இருந்தான்,
பொன்னனாக இருக்கிறான்,
பொன்னனாக இருப்பான் எனப் பொருள் வரும் போது காலம் குறிப்பாக உணர்த்தப்படுவதை அறியலாம். எனவே இவை குறிப்பு வினை முற்றுகள் எனப்படுகின்றன. இத்தகைய குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் எதிர்மறையிலும் வரும்.
(எ.கா) : அவன் இல்லாதவன்.

பெயரெச்சங்களும் வினையெச்சங்களும்
தெரிநிலையாகவும் குறிப்பாகவும் காலம் காட்டும் பெயரெச்சங்களும் வினையெச்சங்களும் வினைப் பகுபதங்களே.

பெயர் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம்.
(எ.கா) : உண்ட பையன்
ஓடாத குதிரை
இத் தெரிநிலை வினைகள் பையன், குதிரை என்ற பெயர்ச்சொற்களைக் கொண்டு பொருள் முடிவு பெறுகின்றன. எனவே, இவை தெரிநிலைப் பெயரெச்சப்பகுபதம் என வழங்கப்படும்.

இன்னொரு வினைமுற்றைக் கொண்டு பொருள் நிறைவடையும் வகையில் அமையும் எச்சம் வினையெச்சப் பகுபதம் ஆகும்.
(எ.கா) : உண்டு வந்தான்
உண்ண வருகின்றான்
உண்டு, உண்ண எனவரும் வினைகள், வந்தான், வருகின்றான், ஆகிய வினைமுற்றுகளைக் கொண்டு பொருள் முடிவைப் பெறுகின்றன.

குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம்
இவை காலத்தைக் குறிப்பாகக் காட்டுவன.
(எ.கா) : பெரிய பையன் – பெயரெச்சம்
மெல்ல வந்தான் – வினையெச்சம்

வினையாலணையும் பெயர்ப் பகுபதம்
வினையாலணையும் பெயர்ப் பகுபதங்களும் இருவைகைப்படும்.
1.தெரிநிலை வினையாலணையும் பெயர்ப் பகுபதம்
(எ.கா) : நடந்தானைக் கண்டேன்
நடந்தவனைக் கண்டேன்
இவை காலத்தை வெளிப்படையாகக் காட்டுகின்றன

2. குறிப்பு வினையாலணையும் பெயர்ப் பகுபதம்
(எ.கா) : பொன்னனைக் கண்டேன்
இது காலத்தை குறிப்பாகவே காலம் உணர்த்துகிறது.

பகுபத உறுப்புக்கள்
ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனலாம். இப்பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.
பகுதி
விகுதி
இடைநிலை
சாரியை
சந்தி
விகாரம் என்பனவாகும்.

நூற்பா: 133 : (பகுபதவுறுப்புக்கள்)
பகுதி விகுதி யிடைநிலை சாரியை
சந்தி விகார மாறினு மேற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும்.
(06)

நன்நூலார் இவ்வாறு வகுத்துக் காட்டுகிறார்.

பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறினும்-
முதனிலையும் இறுதிநிலையும் இடை நிலையும் சாரியையும்
சந்தியும் விகாரமும் ஆகிய இவ்வாறு உறுப்பினுள்ளும்,

ஏற்பவை முன்னிப் புணர்ப்ப –
பொருளமைதிக்கு ஏற்பவைகளை நினைத்து
அறிவுடையோர் கூட்டி முடிக்க

எப்பதங்களும் முடியும்-
எவ்வகைப் பட்ட பகுபதங்களும் முடிவு பெறும்.

இந்த ஆறு உறுப்புகளையும் அறிவுடையோர் கூட்டிச் சேர்த்தால் எல்லாவிதமான பகுபதங்களும் அமையும் என்பது பொருள்

பகுதி
ஒரு பகுபதத்தின் முதலில் அமையும் உறுப்பு ஆகும். எனவே இதனை முதனிலை என்றும் வழங்கலாம். உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) உண் என்பது பகுதியாகும்.

விகுதி
பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு என்பதால் இதனை இறுதிநிலை என்றும் வழங்குவது மரபு.
உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) ஆன் என்பது விகுதி ஆகும். இது திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டி நிற்கும்.

இடைநிலை
முதனிலைக்கும் (பகுதி) இறுதிநிலைக்கும் (விகுதி) இடையில் நிற்கும் உறுப்பு என்பதால் இடைநிலை என்னும் பெயர் பெறுகின்றது. வினைப் பகுபதத்தில் இடைநிலை காலம் காட்டும் உறுப்பு ஆகும்.
உண்+ட்+ஆன் என்னும் பகுபதத்தில் –
உண் – முதனிலை
ட் – இடைநிலை
ஆன் – இறுதிநிலை
‘இடைநிலை‘ – பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்திருத்தலைக் காணலாம்.

சாரியை
இது பெரும்பாலும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் உறுப்பு ஆகும். சிறுபான்மையாகச் சந்திக்கும் விகுதிக்கும் இடையிலும் வரும்.
சாரியை = சார்ந்து இயைந்து நிற்பது. தனக்கெனப் பொருள் எதுவும் இன்றிப் பிற உறுப்புகள் இணையும்போது இடையில் வருவது.

வந்தனன் என்னும் சொல் ‘வா+த்+த்+அன்+அன்‘
வா – பகுதி
த் – சாந்தி
த் – இடைநிலை
அன் – சாரியை
அன் – விகுதி
‘த்’ இடைநிலைக்கும், ‘அன்‘ விகுதிக்கும் இடையில் சாரியை வந்துள்ளதைக் காணலாம்.

சந்தி
இது பெரும்பாலும் முதனிலை (பகுதி)க்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். பகுதிக்கும் விகுதிக்கும் இடையிலும் சிறுபான்மை வரக்கூடும். உறுப்புகளின் இணைவில் (சந்தி), அவற்றை இணைக்க வருவது சந்தி.

நடத்தல் என்னும் பகுபதம் நட+த்+தல் என்று பிரிந்து வரும்.
நட – பகுதி
த் – சந்தி
தல் – விகுதி
பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் ‘த்‘ சந்தி வந்திருப்பதைக் காண முடிகிறது.

விகாரம்
விகாரம் என்று தனியாக ஓர் உறுப்பு இல்லை. பகுதியும் சந்தியும் மாற்றம் அடையலாம். அல்லது சந்தி மட்டும் மாற்றம் அடைந்து வரலாம். இவ்வாறு மாற்றம் பெறுவதை ‘விகாரம்‘ என்பர்.

வந்தனன் – வா+த்+த்+அன்+அன்
வா – பகுதி
த் – சந்தி
த் – இடைநிலை
அன் – சாரியை
அன் – விகுதி

இதில் வரும் வா என்னும் பகுதி வ எனக் குறுகியும், த் என்னும் சந்தி ந் என்று மாற்றம் அடைந்தும், விகாரமாகியுள்ளன.

சொல்லிலக்கணம் – 10-thamil.co.ukபகாப்பதம் / பகுபதம்

பகுதியின் பொது இயல்பு
பகுபதங்களாவன பெயர்ப் பகுபதங்கள், வினைப் பகுபதங்கள் என இருவகையினவாக அமையும் என்பதனை இதுவரை கண்டோம்.

ஒரு பகுபதத்தின் முதலில் உள்ள உறுப்பு பகுதி ஆகும். அதனை மேலும் பிரிக்க முடியாது ஆகையால் ‘பகுதி’யைப் ‘பகாப்பதம்’ எனவும் குறிப்பிடுவர். இதனைப் பின்வரும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது.
நூற்பா: 134
தத்தம்,
பகாப் பதங்களே பகுதி யாகும். (07)

தத்தம் பகாப்பதங்களே – பெயர்ப் பகுபதங்களுள்ளும் வினைப் பகுபதங்களுள்ளும் அவ்வவற்றின் முதலில் நிற்கின்ற பகாப்பதங்களே பகுதி ஆகும்- பகுதிகளாம் .

பெயர்ப் பகுபதங்கட்கும் வினைக்குறிப்புப் பகுபதங்கட்கும் பெரும்பான்மையும் பெயர்ச்சொற்களும் சிறுபான்மை இடைச்சொற்களும் பகுதிகளாம் .

பெயர்ப் பகுபதப் பகுதி
பெயர்ப்பகுபதங்களின் பகுதிகள் பெயர், வினை, இடை, உரிச் சொற்களாக அமைகின்றன.
– பொன்னன் – இதன் பகுதி பொன். இது பெயர்ப் பகுதிக்கு எடுத்துக்காட்டாகும்.

– அறிஞன் – இதில் அறி என்னும் பகுதி வினைப்பகுதிக்கு எடுத்துக் காட்டாகும்.

– பிறன் என்னும் சொல்லில் பகுதி பிற என்பதாகும்.
இதில் ‘பிற‘ என்பது இடைச்சொல்லாகும். இது இடைச் சொல் பகுதி.

– கடியவை என்னும் பெயர்ப்பகுபதத்தின் பகுதி கடி என்பதாகும்.
இதன் பகுதியான ‘கடி‘ என்பது உரிச்சொல். எனவே இது உரிச்சொல் பகுதி.

வினைப் பகுபதப் பகுதி
வினைப் பகுபதங்களில் பகுதியாகப் பெரும்பாலும் வினைச் சொற்களே வருகின்றன. சிறுபான்மையாக இடைச் சொற்களும் உரிச் சொற்களும் வருதல் உண்டு.

நின்றான், இதில் நில் என்பதும், நடந்தான் என்பதில் நட என்பதும் வினைப் பகுதிகள் ஆகும். இங்கு வினைச்சொற்களே பகுதிகள் ஆயின.

போன்றான் என்பதில் போல் என்பது இடைச்சொல் ஆகும். இங்கு இடைச்சொல் வினைப்பகுதியாக உள்ளது.

சான்றோன், கூர்ந்தான் என்பனவற்றில் வரும் சால், கூர் என்பவை உரிச்சொற்கள் வினைப்பகுதியாக வந்தமைக்கு சான்றுகளாகும்.

பண்புப்பெயர்ப் பகுதிகள்
ஆறுவகைப் பெயர்ப் பகுபதங்களில் பண்புப் பெயர்ப் பகுபதங்கள் ஏனையவற்றிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. அவற்றின் தனித் தன்மையே அதற்குக் காரணமாகும்.

நூற்பா: 135 : (பண்புப் பகுதிகள்)
செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர்
இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே.
(08)

செம்மை… நுண்மை-
செம்மை முதல் நுண்மை ஈறாகச் சொல்லப்பட்ட பதினொன்றும்,
இவற்று எதிர் –
இவைகளுக்கு எதிரான வெண்மை முதலானவைகளும்.
இன்னவும்-
இவை போல்வன பிறவும்.
பண்பின் பகா நிலைப் பதம்-
பண்புப் பொருளினின்றும் வேறு பொருள் பகுக்கப்படாத
நிலையையுடைய பதங்களாம் .

இவை எல்லாம் சொல் நிலையால் பகுபதமாயினும்
மை விகுதிக்குப் பகுதிப் பொருளல்லது
வேறு பொருள் இல்லாமையினாலே பொருள் நிலையால்
பகாப்பதமாகும் என்றும்,
இவை மை விகுதியின்றி இயங்காமையினால்
இவ் விகுதியையும் பகுதியாகவே நிறுத்தி
மேல் வரும் விகுதியோடு புணர்க்கப்படும் என்பதனையும்
அறிவித்தற் பொருட்டு அவற்றை நிலைப்பதம் என்றும்
நன்னூலார் கூறிச்சென்றார் எனலாம்.

கரியன் என்னும் பண்புப் பெயர்ப் பகுபதத்தைப் பிரித்தால், கருமை + அன் என்று அமையும்.

‘கருமை‘ என்பது பகுதி ‘அன்’ என்பது விகுதி. இதில் கருமை என்பதை, கரு+மை என மேலும் பிரிக்க இயலும் எனினும், இங்கே ‘மை’ என்பதற்குப் பகுதிப் பொருளே அன்றி வேறு பொருள் இல்லை. ஆகவே, ‘கருமை’ என்பது பொருள் நிலையில் பகுக்கவியலாத தன்மையில் அமைகின்றது.

எனவே ‘கருமை’ என்பதே பகாப் பதமாக நின்று, பகுபதத்தின் பகுதியாகி உள்ளது. செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை எனவரும் பண்புப் பெயர்ப் பகுபதங்களின் பகுதிகள் பகுபதங்களாக இருப்பினும், அவை பொருள் நிலையில் பகாப்பதங்களாக இருப்பதால் பகுதிகளாகவே கொள்ளப்படுகின்றன.

இத்தகைய பண்புப் பெயர்ப் பகுதிகளுடன் அவற்றிற்கு எதிரான பண்புப் பெயர்ப் பகுதிகளும் பொருள் நிலையில் பகாப்பதங்களே ஆகும்.

செம்மை – வெண்மை, கருமை, பொன்மை, பசுமை
சிறுமை – பெருமை
சேய்மை – அண்மை
தீமை – நன்மை
வெம்மை – தண்மை
புதுமை – பழமை
மென்மை – வன்மை
மேன்மை – கீழ்மை
திண்மை – நொய்மை
உண்மை – இன்மை
நுண்மை – பருமை.

பண்புப் பகுதிக்கு சிறப்புவிதிகள்
நூற்பா: 136 (பண்புப் பகுதிகள் புணர்ச்சியி்ல் அடையும்மாற்றம்)

ஈறு போதல் இடையுகர மிய்யாதல்
ஆதி நீட லடியகர மையாதல்
தன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரிதல்
இனமிக லினையவும் பண்பிற் கியல்பே.
(09)

ஈறு போதல்- இறுதியிலுள்ள மை விகுதி கெடுதலும்,
இடை உகரம் இ ஆதல்- நடுநின்ற உகரம் இகரமாதலும்,
ஆதி நீடல்- முதல் நின்ற குறில் நெடிலாதலும்,
அடிஅகரம் ஐ ஆதல்- முதல் நின்ற அகரம் ஐகாரமாதலும்,
தன் ஒற்று இரட்டல்- தன் மெய் நடுவே மிகுதலும்,
முன்னின்ற மெய்திரிதல்- முன்னின்ற மெய் வேறொரு மெய்யாதலும்,
இனம் மிகல்- வருமெழுத்திற்கு இன வெழுத்து மிகுதலும்,
இனையவும் – இவை போல்வன பிறவும்,
பண்பிற்கு இயல்பு – அப்பண்பினுக்கு இயல்பாகும்,
பண்புப் பெயர்ப் பகுதிகள் பிற சொற்களோடு சேர்ந்து (புணர்ந்து) வரும்போது அவை ஏழு வகையான மாற்றங்களை அடையும் என்று கூறுகிறார்.

* ஈறு போதல்
* இடை ‘உ’கரம் ‘இ’ ஆதல்
* ஆதி நீடல்
* அடி அகரம் ‘ஐ’ ஆதல்
* தன் ஒற்று இரட்டல்
* முன்நின்ற மெய்திரிதல்
* இனம் மிகல்
இவ்வாறு புணரும் போது ஏழுவகை மாற்றங்களில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவையோ ஒரே சொல்லில் வந்து அமையலாம். இவற்றிற்கான விளக்கங்களையும் எடுத்துக்காட்டுக்களையும் காண்போம்.

ஈறுபோதல்
(எ.கா): சிறுவன் – சிறுமை + அன்,
நல்லன் – நன்மை+அன்
இவற்றில் ஈற்றில் உள்ள ‘மை’ விகுதிகள் கெட்டு வந்துள்ளன.

இடை ‘உ’கரம் ‘இ’ ஆதல்
(எ.கா) : பெரியன் – பெருமை + அன்
கரியன் – கருமை + அன்
இவற்றில் ‘மை‘ கெட்டது மட்டுமன்றிப் பெருமை, கருமை என்பதில் இடையில் உள்ள உகரம், இகரமாக மாறி வந்துள்ளது.

ஆதிநீடல் (முதல் எழுத்து நீண்டு வருதல்)
(எ.கா) : பசுமை + இலை = பாசிலை.
பசுமை + இலை. பசுமை என்பதில் உள்ள முதல் எழுத்தான பகரம் நீண்டு ‘பா‘ ஆகியுள்ளது.
‘சு‘ என்பதில் உள்ள உகரம் ‘சி‘ என இகரமாயிற்று.
‘மை‘ விகுதிகெட்டு பாசிலை என்றாயிற்று.

அடி அகரம் ‘ஐ’ ஆதல்
(எ.கா) : பசுமை + கண் = பைங்கண்.
பசுமை என்பதில் உள்ள அடி (முதல்) எழுத்தான ப(ப்+அ) இல் உள்ள
அகரம் பை (ப்+ஐ) என ஆகியுள்ளது.
‘மை’ கெட்டுள்ளது. ‘சு’ என்பதும் கெட்டு வந்துள்ளது.

தன் ஒற்று இரட்டல்
(எ.கா) : வெறுமை + இலை = வெற்றிலை
இதில் று (ற்+உ) இல் உள்ள ஒற்றான ‘ற்’ இரட்டித்துள்ளது. ‘மை’ கெட்டுள்ளது.

முன்நின்ற மெய்திரிதல்
(எ.கா) : செம்மை + ஆம்பல் – சேதாம்பல் என்றாயிற்று. இதில் ‘மை’ விகுதி கெட்டது. ஆதி செ – சே என நீண்டது. ‘செம்’ முன்னின்ற ‘ம்’ ‘த்’ என்னும் மெய்யாகத் திரிந்துள்ளது.

இனம் மிகல்
(எ.கா) : பசுமை + தழை என்பது பசுந்தழை என்றாகும்.
தில் ஈற்றில் உள்ள ‘மை’ கெட்டது.
‘தலை‘ என்னும் சொல்லில் உள்ள ‘த்’ என்னும் மெய்க்கு இனமான ‘ந்’ என்னும் நகரமெய் மிகுந்துள்ளது.

வினைப் பகுபதங்களின் பகுதிகள்
வினைப் பகுபதங்களின் பகுதிகள் எவ்வாறு அமைகின்றன என்பதைக் நோக்குமிடத்து, முதலில் தெரிநிலை வினைப் பகுபதத்தின் பகுதிகளைக் பார்ப்போம். தெரிநிலை வினைப் பகுதிகள் செய் என்னும் ஏவல் பகாப்பதங்களாகவும் அமையும். இதனை,

நூற்பா: 137
(தெரிநிலை வினைப்பகுதிகள்)
நடவா மடிசீ விடுகூ வேவை
நொப்போ வௌவுரி ஞுண்பொருந் திருந்தின்
தேய்பார் செல்வவ் வாழ்கே ளஃகென்
றெய்திய விருபான் மூன்ற மீற்றவும்
செய்யெ னேவல் வினைப்பகாப் பதமே. (10)

நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று எய்திய இருபான் மூன்று ஆம் ஈற்றவும்.-

முதனிலையாகப் பொருந்திய இருபத்து மூன்றாகும் உயிரும் மெய்யும் குற்றியலுகரமுமாகிய ஈற்றையுடைய இவை முதலாகிய வாய்பாடுகளெல்லாம்
செய் என் ஏவற் பகாப்பதம்-

செய் என்னும் ஏவலினது பகாப்பதமாகிய பகுதியும் , வினைப் பகாப்பதம் மற்றை வினைப் பகாப்பதங்களாகிய பகுதியுமாம். இவை ஏவலாய் வரும் இடத்து நடப்பாய், வருவாய், தின்பாய் என்பவற்றில் நட, வா, தின் என்ற வினைப்பகுதிகளைப் பெற்று வரும்.

விளக்கம்
பதவியல் பற்றி நான்கு தொடர்களில் விளக்கப்பட்டுள்ளன. பகாப்பதம், பகுபதம் ஆகியவற்றின் விரிவுகள் இங்கே இடம் பெற்றுள்ளன. பகாப்பதம் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும்.

பகுபதம் பெயர்ப்பகுபதம் என்றும் வினைப்பகுபதம் என்றும் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றது.

இவற்றுள் வினைமுற்றுப் பகுபதம் தெரிநிலை என்றும் குறிப்புவினை என்றும் வகைப்படுத்தப்பட்டன.

பெயரெச்சங்களும், வினையெச்சங்களும் பகுபதங்களாக அமைவதற்கான இலக்கணக் கூறுகள் தரப்பட்டுள்ளன.

பகுபதத்தின் உறுப்புகள் ஆறும் விரிவாகப் பதியப்பட்டுள்ளன. பகுபத உறுப்புகள் ஆறினுள் ‘பகுதி’ என்பது குறித்து விரிவாகக் கூறப்பட்டது.

ஒரு பகுபதத்தின் முதலில் நிற்கும் ‘பகாப்பதமே’ பகுதி என்பதும், பெயர்ப்பகுபதத்திலும் வினைப்பகுபதத்திலும் வரும் பகுதிகள், எவ்வாறு வரும் என்பதும் விளக்கப்பட்டன.

பண்புப் பெயர்ப் பகுபதத்தின் பகுதிகளாக வரும் செம்மை, சிறுமை என்பனவற்றின் தன்மையும் இவை பிற சொற்களோடு புணரும் போது அடையும் மாற்றங்களும் விளக்கிக் கூறப்பட்டன.

தெரிநிலை வினைமுற்றுப் பகுபதத்தின் பகுதிகள். இவை ‘செய்’ என்னும் ஏவல் பகாப்பதங்களாகவும் அமையும் என்பதும் காட்டப்பட்டது.

நட, வா, மடி, சீ எனவரும் 23 ஏவல்மற்றும் தெரிநிலைப் பகாப்பதங்களின் எடுத்துக் காட்டப்பட்டது. இவை பிறவினையாய் வரும் முறைகள் என்பதையும் காணலாம்.

பதவியல் முற்றுப் பெற்றுள்ளது.

சிறீ சிறீஸ்கந்தராஜா : தொடர் 13-16
17/03/2013 – 04/04/2013

தொகுப்பு – thamil.co.uk