சொல்லிலக்கணம் 1 : சிறீ சிறீஸ்கந்தராஜா

சொல்லிலக்கணம்சொல்லிலக்கணம் 

ஒரு எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருமிடத்து அது சொல் என்று பெயர் பெறுகின்றது. இவற்றின் வகைகளையும் அதுகூறும் விரிவுகளையும் மற்றும் உபபிரிவுகளையும் தொடர்ந்து நோக்குவோம்.
(01) பெயர்ச்சொல்
(02) வினைச்சொல்

முற்று
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று

எச்சம்
பெயரெச்சம்
வினையெச்சம்

(03) இடைச்சொல்
(04) உரிச்சொல்
ஒரு பொருள் குறித்த பல சொல்
பல பொருள் குறித்த ஒரு சொல்
(05) பிறவகைச்சொல்

இயற்சொல்

பெயர் இயற்சொல்
வினை இயற்சொல்

திரிசொல்
ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
பல பொருள் குறித்த ஒரு திரிசொல்

வடசொல்
தற்சமம்
தற்பவம்

திசைச்சொல்
(06) பதம்
பகுபதம்
பகாப்பதம்

(07) தொகைச்சொல்
வேற்றுமைத் தொகை
வினைத் தொகை
பண்புத் தொகை
உவமைத் தொகை
உம்மைத் தொகை
அன்மொழித் தொகை
ஆகியன சொல் இலக்கணத்துக்குள் வரும் பிரிவுகளும் உபபிரிவுக்களுமாகும்.

சொல்லின் உறுப்புகள்:
சொல் இலக்கணத்துக்குள் ஐந்து உறுப்புக்கள் வருகின்றன. திணை, பால், எண், இடம், காலம் என்பனவாகும்.

இவற்றுள் முதல் நான்கும் (திணை, பால், எண், இடம்) பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் பொதுவானவை.காலம் என்பது வினைச்சொல்லுக்கு மட்டுமே உரியதாகும். இவை பற்றி ஒவ்வொன்றாக கொஞ்சம் விரிவாக நோக்குவோம்.

(01) பெயர்ச்சொல்
பெயர்ச்சொல் என்பது ஒன்றினது பெயரைக் குறிப்பதாகும். இது ஆறுவகைப்படும்.பொருட் பெயர் – புத்தகம்
இடப் பெயர் – யாழ்ப்பாணம்
காலப் பெயர் – மாதம்
சினைப் பெயர் – தலை
பண்புப் பெயர் – நீலம்
தொழிற் பெயர் – கற்றல்

பெயர்ச்சொற்கள் வேற்றுமை ஏற்கும். ஆனால் காலம் காட்டாது.

சொல்லிலக்கணம் – 7

(02) வினைச்சொல்
வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும். பழம் மரத்தில் இருந்து வீழந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது அல்லது வீழ்தல் என்பது வினைச்சொல்லாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்.

வினைச்சொல்லாவது யாது?
“வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்”
என்று தொல்காப்பியர் கூறுகிறார்.
“செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே”
நன்னூலார் தரும் விளக்கம் இது.

வினைச்சொற்களின் வகை
வினைச்சொற்கள் இவை தாம் எனக்கூறிய தொல்காப்பியர், அவை இவ்வகையின என்பதனையும் பகருகின்றார்.
“குறிப்பினும் வினையினும் நெறிப்பட தோன்றிக்
காலமொடு வரும் வினைச்சொல் எல்லாம்
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்குமோ ரன்ன உரிமையும்
அம்மூவுருபின் தோன்ற லாறே”
எனக் கூறுவார்.

காலம் குறிப்பாகப் புலப்படுதலையும், தெளிவாகப் புலப்படுதலையும் தொல்காப்பியர் ஏற்றுக் கொள்கிறார். தொல்காப்பியர் இவ்வாறு அமைகின்ற வினைச் சொற்களை மூவகைப்படுத்துவர் அவையாவன:
1. உயர்திணைக்குரிய வினைச்சொற்கள்
2. அஃறிணைக்குரிய வினைச்சொற்கள்
3. ஆயிரு திணைக்குமுரிய வினைச்சொற்கள்

இவ்வாறு, திணையடிப்படையில் வினைச்சொற்களை பாகுபடுத்திய தொல்காப்பியர், இடவரையறை கொண்டு, உயர்திணை வினைச்சொற்களைப் பலவகையாக்குகிறார். உயர்திணையில், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களுக்கு ஒருமை, பன்மை வினை ஈறுகளை எடுத்தோதும் வகையில் இப்பாகுபாடுகளை அறியமுடிகிறது.

உயர்திணை வினைகளில், தன்மைப் பன்மை ஈறுகளாக அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், ரும் ஆகியவற்றையும், தன்மை, ஒருமை, வினைமுற்று ஈறுகளாக அள், ஆன், அள், ஆள் என்பனவற்றையும், படர்க்கைப் பன்மை வினைமுற்றுக்களாக அர், ஆர், ப ஆகிய மூன்றையும் குறித்துச் சொல்லுகிறார்.

இஃதே போல், அஃறிணைப் பன்மை வினைமுற்று ஈறுகளாக அ, ஆ வ என்பவற்றையும், ஒருமை வினைமுற்று ஈறுகளாக த,ற,ட, ஊர்ந்த, குற்றியலுகரத்தையும் குறிப்பிடுகின்றார்.

குறிப்பு வினைமுற்று
தொல்காப்பியர், குறிப்பு வினைமுற்று, என்றொரு பாகுபாட்டை செய்யவில்லையாயினும், அப்பாகுபாடு பற்றிய குறிப்புக்களை விட்டுச் செல்லுகிறார். குறிப்பாகக் காலம் புலப்படும் வினைச் சொற்களைக் கூறப்புகுந்த தொல்காப்பியர்,
“அதுசொல் வேற்றுமை உடைமையானுங்
கண்ணென் வேற்றுமை நிலத்தினானும்
ஒப்பினானும் பண்பினானு மென்று
அப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும்”
என்றுரைத்தார்.
மேற்கண்ட பொருட்பகுதிகளில் காலம் குறிப்பாகத் தோன்றுமேயொழிய வெளிப்பட நில்லாது என்பது புலனாகிறது. எனவே காலம் வெளிப்படத் தோன்றாதிருத்தலும் வினைச்சொற்களில் உண்டு என்பதை தொல்காப்பியர் மனதில் கொள்ளுகிறார். அப்பாகுபாட்டினைக் குறிப்பாகப் புலப்படுத்தி வினைக் குறிப்புச் சொற்களாக, இன்று, இல, உடைய, அன்று, உடைத்து, அல்ல, பண்புகொள் கிளவிகள், உள என் கிளவி, பண்பின் ஆகிய பத்தினையும் பகர்கின்றார்.

நன்னூலார், தெரிநிலை வினை, குறிப்புவினை என வினைமுற்றுக்களை இருபெரும் பிரிவுக்குள் அடக்குவர்.
“பொருண் முதலாறினுந் தோற்றி முன்னாறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக் குறிப்பே” என்று கூறுகிறார்.

வினைச் சொற்கள்
“முற்றும் பெயர்வினை யெச்சமு மாகி
ஒன்றற் குரியவும் பொதுவு மாகும்”
என வகைப்படுத்துகிறார் நன்னூலார்.

முற்றுவினை
“பொதுவியல் பாறையும் தோற்றிப் பொருட்பெயர்
முதலறு பெயரல தேற்பில முற்றே என்பர்.”
எனவே இம்முற்றுவினையுள் தெரிநிலைவினை, குறிப்புவினை ஆகிய இரண்டும் அடங்குகின்றன. நன்னூலாரும், தொல்காப்பியரும் பெயரெச்ச வினையெச்சங்களை பற்றியும் குறித்துச் சென்றுள்ளனர்.
“தொழிலும் காலமும் தோன்றிப் பால்வினை
ஒழிய நிற்பது வினையெச் சம்மே”. என்பது நன்னூலார் தரும் விளக்கமாகும்.

எனவே வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும். இது முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனவும், முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனவும் கொள்ளலாம்.

முற்று இருவகைப்படும்.தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று.

எச்சம் இரண்டு வகைப்படும். பெயரெச்சம்,வினையெச்சம்.

தெரிநிலை வினைமுற்று
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும். உ + ம் : கயல்விழி மாலை தொடுத்தாள்.

குறிப்பு வினைமுற்று
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும். உ + ம் : அவன் பொன்னன்.

பெயரெச்சம் : பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும். உ + ம் : கற்ற மாணவன்.

வினையெச்சம் : வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்.  உ + ம் : கற்றுத் தேறினான்.

(03)இடைச்சொல் 
பெயருக்கு இடையிலேயோ, வினைக்கு இடையிலேயோ, இரண்டு சொற்களுக்கு இடையிலேயோ வரும்.

சொல்லிலக்கணம் பெயர்ச்சொல்லோடு ;
அறிஞன் என்னும் சொல்லில் அறி என்பது வினைச்சொல்.
ஞ், அன் ஆகியவை இடைச்சொல்.
பொருநன் என்பதில் பொரு என்பது வினைச்சொல்.
ந், அன் என்பன இடைச்சொல்.
குடையன் என்பதில் குடை என்பது பெயர்ச்சொல்.
ய் என்னும் உடம்படுமெய்யும், அன் என்னும் ஆண்பால் உணர்த்தும் சொல்லும் இடைச்சொற்கள்.
உழவன் என்னும் சொல்லில் உழவு என்பது பெயர்.
வ் – என்னும் உடம்படுமெய்யும். அன் – என்னும் பால் உணர்த்தும் கூறுகளும் இடைச்சொல்.
இவை பெயர்ச்சொல்லோடு வந்த இடைச்சொற்கள்.

வினைச்சொல்லோடு ;
செய்தான் என்பதில் செய் என்பது வினை.
த் – என்பது இறந்தகாலம் காட்டும் இடைச்சொல்.
ஆன் என்பது பால் உணர்த்தும் இடைச்சொல்.
நல்லன் என்பதில் நல் என்பது நன்மைப்பொருள் உணர்த்தும் இடைச்சொல்.
அன் என்பது பால் உணர்த்தும் இடைச்சொல்.
இவை இரண்டும் வினைச்சொல்லோடு வந்தன.

வேற்றுமை உருபுகளும் இடைச்சொற்களாகும்.
இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது.
ஐ, ஆல், ஒ, ஓடு, உடன், கு, இல், இன், அது, கண் முதலிய வேற்றுமை உருபுகளும்;
போல, ஒப்ப முதலிய உவம உருபுகளும்;
அ, இ, உ என்னும் சுட்டுக்களும்;
யா முதலிய வினாவெழுத்துக்களும்;
`உம்’ முதலிய பிறவும் இடைச்சொற்கள் ஆகும்!
தவிர, இடை நிலைகள், சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய ஏ, ஓ, மற்று, தான் ஆகியனவும் இடைச்சொற்களாகும்.
உ+ம் :  அவன்தான் வந்தான்
சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்.

இலக்கண நோக்கில் இடைச்சொல்
தொல்காப்பியம் , நன்னூல், வீரசோழீயம், இலக்கணவிளக்கம், தொன்னூல் விளக்கம், சுவாமிநாதம் முதலான இலக்கண நூல்களும்  அவற்றின் உரைகளும் இடைச்சொல் பற்றிய விபரங்களைத் தருகின்றன.

இடைச்சொல் – விளக்கம்
இடைச்சொல் என்பது பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் முன்னும் பின்னும் மட்டுமல்ல பெரும்பான்மையாக, சொல்லின் நடுவிலே வருவதால் இடைச்சொல் எனப் பெயர் பெறுகின்றது என்று சேனாவரையர் கூறுகிறார். நாச்சினார்ககினியரும் இதனையே ஆதரிக்கின்றார். சேனாவரையரின் கருத்தின் முடிபிலிருந்து வேறுபட்டு, பெயருக்கும் வினைக்கும் இடமாக நின்று பொருளை உணர்த்துவதால் இது இடைச்சொல்லாகிறது என்பது தெய்வச்சிலையாரின் இன்னொரு விளக்கமாகும்!

இடைச்சொல் என்பது பெயர்ச்சொல், வினைச்சொற்களோடு இணைந்தும் தாமாக தனித்து நடக்கும் இயல்புடையனவன என்பது தொல்காப்பியக் கருத்தாகும்.
“இடையெனப் படுவ பெயரொடும் வினையொடு
நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே” (தொல். இடை. 1)

இடைச்சொல் வகைகள்
இடைச்சொற்களை பெரும்பாலும் ஏழு வகையாக அமைகின்றன.
1. புணர்ச்சி நிலையில் அவற்றின் பொருள் நிலைக்கு உதவவுகின்றன.
2. ஒரு செயலின் நிகழ்வைக் காட்டும்போது வினைச்சொல்லின் காலங்காட்டும் உருபுகளாக வருகின்றன.
3. வேற்றுமை உருபுகளாக வருவன.
4. அசைநிலைச் சொற்களாக வருவன.
5. இசைநிறைச் சொற்களாக வருவன.
6. இடம்நோக்கிய குறிப்புக்களால் பொருளுணர்த்துவன.
7. ஒப்பில் போலிகளாக வருவன.

1. புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதவுவன
புணர்ச்சி நிலையில் பொருள் தெளிவுக்கு உதவுவன சாரியை,

2. வினைசெயல் மருங்கின் காலமொடு வருவன
அன், ஆன், அள், ஆள் முதலான வினை விகுதிகளே வினைசெயல் மருங்கின் காலமொடு வருவன

3. வேற்றுமைப் பொருள் வயின் உருபாகுவன
வேற்றுமைப் பொருள் வயின் உருபாகுவன என்பது வேற்றுமை உருபுகளைக் குறிப்பதாகும். ஐ முதல் கண் வரையுள்ள உருபுகள் இதில் அடங்கும். சொல்லுருபுகளும் (உடைய என்னுமாப்போல வருவன) இதன்கண் அடங்கும்.
சான்றுகள்:
கண்ணனைக் கண்டேன் – ஐ
வாளால் வெட்டினான் – ஆல்
கூலிக்கு உழைத்தான் – கு
தில்லையில் விளங்கும் கூத்தன் – இல்
எனது மோதிரம் – அது
வீட்டின்கண் இருந்தான் – கண்

4. அசைநிலைக் கிளவி ஆகி வருவன
யாப்பு நிலையில் செய்யுள் கட்டுமானத்திற்கு உதவும் வகையில் அசைநிலைச் சொற்களாக வருவன இவ்வகையினவாகும். அசைநிலையானது யாப்பமைதியில் சீர், தளை, அடி சிதையாமல் காப்பதாகிய இலக்கணப்பொருள் நிலையில் உதவுகின்றது.

5. இசைநிறைக் கிளவி ஆகி வருவன
செய்யுளின்கண் இசைநிறைத்தலே பொருளாகக் கொண்டு வருவன இவ்வகை இடைச்சொற்களாம். அசைநிலை என்பது யாப்புப் பொருண்மைக்கு உதவுவதாகும்.
இசைநிறை என்பது சொல்லுவோன் உணர்ச்சியை வெளிப்படுத்த வருகின்ற ஒலிக்குறிப்புச் சொற்களாகும்.

6. தத்தம் குறிப்பில் பொருள் செய்குவன
குறிப்பினால் பொருள் உணர்த்தும் குறிப்புமொழி,
இங்குக் கூறப்படுவன தத்தம் குறிப்பில் பொருள் உணர்த்துவனவாம்.
பொருள் உடைய சொற்களாக இவை அமையினும் பெயரோடும் வினையொடும் சேர்ந்து அவற்றுக்குத்தக தம்முடைய குறிப்புப்பொருளை உணர்த்துவனவாகும்.
எற்று (இறந்தற்பொருட்டு),
மற்றையது (இனமான பிறிதொன்று),
மன்ற (குற்றம்),
தஞ்சம் (எளிமை),
கொல்(ஐயம்),
எல்(இலக்கம்) ஆகியனவும்,
கழிவு, ஆக்கம், ஒழியிசை என்று
முப்பொருள் தரும் மன் போன்ற இடைச்சொற்களும்
தொல்காப்பியரால் கூறப்பட்டுள்ளன.

7. ஒப்பில் வழியால் பொருள் செய்குவன
தொல்காப்பியர் ஒப்புவழியால் என்று தொடராட்சி செய்திருந்தால், அது உவம உருபுகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஒப்பில் வழி என்பதால் இது உவம உருபுகளைக் குறிப்பதன்று எனக் கொள்வதே பொருத்தமுடையது.

அவன் வந்தான் போலும் – இங்குப் போலும் என்பது ஐயப்பாட்டுப் பொருளைத் தந்தது.

முடிவாக
இடைச்சொல் என்பது ஒரு சொல்லின் இடையே அதாவது உள்ளே வரும் சொல்லாகவும், புணர்ச்சியில் இரு சொற்களுக்கிடையே பொருந்தும் சொல்லாகவும் வரும்.
இடைச்சொல் என்பதில் இடை என்பதற்கு நடுவே என்பது பொருளன்று, உள்ளே என்பதே பொருந்திய பொருளாகும்.

1. தொல்காப்பியத்தில் மட்டும் கூறப்படுவன
1. கொன்,  2. எற்று,  3. மன்ற,  4. தஞ்சம்,  5. எல்  6. ஆர்,  7. ஔ,  8. ஆக,  9. ஆகல், 10. என்பது,  11. உந்து,  12. கண்டீரோ,  13. கொண்டீர்,  14. சென்றதே,  15. போயிற்றே,  16.கோட்டை,  17. நின்றை,  18. காத்தை,  19. கண்டை,  20. நன்றே,  21. அன்றே, 22. அந்தோ,  23. அன்னோ. (16 முதல் 23வரை உள்ளவை எச்சவியலில் கூறப்பட்டவை).

2. நன்னூலில் மட்டும் இடம்பெறுவன
1. அத்தை,  2. இத்தை,  3. வாழிய,  4. மாள,  5. ஈக,  6.யாழ,  7. ஓரும்,  8. இருந்து, 9. இட்டு, 10. அன்றும்,  11. ஆம்,  12. தாம்,  13. தான்,  14. கின்று,  15. தெய்ய.

3. தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் கூறப்படுவன
1.மன்,  2. தில்,  3. உம்,  4. ஓ,  5. ஏ,  6. என,  7. என்று,  8. மற்று,  9. மற்றையது,  10. அந்தில்,  11. கொல்,  12. குரை,  13. மா,  14. அம்ம,  15. ஆங்க,  16. போலும்,  17. எனா,  18.என்றா,  19. ஒரு,  20.மியா,  21. இக,  22. மோ,  23. மதி,  24. இகும்,  25. சின்,  26. யா,  27. கா,  28. பிற,  29. பிறக்கு,  30. அரோ,  31. போ,  32. மாது.

விளக்கம்
தொல்காப்பியர் கூறிய இடைச்சொற்கள் – 55
நன்னூலார் கூறிய இடைச்சொற்கள் – 48
தொல்காப்பியர் கூறியும் நன்னூலார் கூறாதவை – 23
நன்னூலார் கூடுதலாகக் கூறியவை – 16
இருவரும் கூறியவை – 32

சொல்லிலக்கணம் – 8(04)உரிச்சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்ற நான்கு வகைச்சொற்களின் வரிசையில் உரிச்சொல் இறுதியாக வருகிறது. “உரி” என்றால் உரிய, உரிமை என்று பொருள் தருகிறது. இது செய்யுள் வழக்கில் விரவிவரும் ஒரு சொல்லாகும். பேச்சு வழக்கில் இது பயில்வதில்லை. உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் உரிய சொல் என்றும் கூறலாம். இது பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் வேறுபடுத்தி விளக்கி நிற்கும் எனலாம்.

பெயரும் வினையும் தத்தமக்குரிய பொருளை உணர்த்தித் தனித்து நின்று இயங்கும் ஆற்றல் வாய்ந்தவை. இடைச்சொல்லுக்கும், உரிச்சொல்லுக்கும் தனித்தனிப் பொருள் உண்டெனினும் அவை பெயரையும் வினையையும் சார்ந்து நின்றே பொருளை உணர்த்தவல்லன. உரிச்சொற்கள் பெயருக்கும் வினைக்கும் முன்னால் வந்து நின்று அவற்றின் பொருளைச் சிறப்பிக்கும் அடைகளாக விளங்குவன.

உரிச்சொல் இலக்கணம்
உரிச்சொல் இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாக வரும்.
ஒரு சொல் ஒரு பொருளுக்கே உரியதாய் வருவதும் உண்டு.
ஒரு சொல் பல பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு.
பல சொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு.

தொல்காப்பியர் உரிச்சொல் குறித்து இவ்வாறு இலக்கணம் கூறுகிறார். தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் உரியியலில் 120 உரிச்சொற்களைக் குறிப்பிடுகிறார்.
இவை வினையடைகளாகவும், பெயரடைகளாகவுமே தொல்காப்பியரால் கூறப்பட்டுள்ளன. உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை பின்வருமாறு நன்னூலார் கூறுகிறார்.
‘பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி
ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல் ‘ – நன்னூல் – 442

உரிச்சொல் ன்பது பல்வேறுபட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயராகும்.
ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம்.
ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம்.
இவை பெயர்ச்சொற்களோடும், வினைச்சொற்களோடும் இணைந்து நின்று பண்ப உணர்த்தும். இது செய்யுள் வழக்கிற்கு உரியதாகும்.

நனி – மிகுதி – நனி பேதை = அறிவற்றவன்.
சால – மிகவும் – மிகவும் தின்றான்.
கடி – மணம் – கடி மலர் = மணம் மிக்கமலர்
கடி – காவல் – கடி நகர் = காவல் மிக்கநகர்

உரிச்சொல் உணர்த்தும் பண்புகளை இரண்டாக வகைப்படுத்தபடுகின்றன. : குணப் பண்பு, தொழிற் பண்பு.

உயிர்களின் குணங்கள்
உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகின்றார் நன்னூலார் (நூற்பா 452). அவையாவன:
அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறைவு, பொறை, (பொறுமை), ஓர்ப்பு (தெளிவு), கடைப்பிடி, மையல் (மயக்கம்), நினைவு, வெறுப்பு, உவப்பு (மகிழ்வு), இரக்கம், நாண், வெகுளி (கோபம்),துணிவு, அழுக்காறு (பொறாமை), அன்பு, எளிமை, எய்த்தல் (சோர்வு), துன்பம், இன்பம், இளமை, மூப்பு, இகல் (பகை), வென்றி (வெற்றி),
பொச்சாப்பு (பொல்லாங்கு), ஊக்கம், மறம், மதம் (வெறி), மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும்.

உயிர் அல்லாத பொருள்களின் பண்புகள்
உயிர் அல்லாத பொருள்களின் பண்புகள் வட்டம், இருகோணம், முக்கோணம், சதுரம் முதலிய பலவகை வடிவங்களும்,
நறுநாற்றம், துர்நாற்றம் என்னும் இரு நாற்றங்களும்,
வெண்மை, செம்மை (சிவப்பு), கருமை,
பொன்மை (மஞ்சள்), பசுமை என்னும் ஐந்து வண்ணங்களும்,
கைப்பு (கசப்பு), புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு (காரம்), இனிப்பு என்னும் ஆறு சுவைகளும்,
வெம்மை (வெப்பம்), தண்மை (குளிர்ச்சி), மென்மை, வன்மை, நொய்மை (நைதல்), திண்மை, இழுமெனல் (வழவழப்பு) சருச்சரை (சொரசொரப்பு) என்னும் எட்டு ஊறுகளும் (தொடு உணர்வுகளும்) உயிர் அற்ற பொருள்களின் பண்புகளாகும். (நன்னூல், 454)

உயிருள்ள உயிரற்ற இரண்டிற்கும் பொதுவான தொழில் பண்புகள்
உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். (நன்னூல்,455)
‘தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கல், இசைத்தல், ஈதல் என்பன எல்லாவற்றிற்கும் பொதுவானவையாகும்.

முடிவுரை:
உரிச்சொல்லுக்குரிய எளிமையான இலக்கணங்களை இங்கே கண்டோம். இவை பெரும்பாலும் உரிச்சொற்கள் செய்யுளுக்கு உரியன. உரிச்சொற்கள் பெயர், வினைகளைத் தழுவி வருபவை. குணப்பண்பு, தொழிற்பண்பு எனும் பண்புகளை உணர்த்தும் தன்மை உடையவை. அவ்வாறு உணர்த்தும்போது ஒரு பொருள் குறித்த பல சொல் எனவும் பல பொருள் குறித்த ஒரு சொல் எனவும் இருவகைப்படும்.

உயிர் உடைய பொருள்களின் வகைகளும் அவற்றின் குணப்பண்புகளும் தொழில் பண்புகளும் உயிர் அற்ற பொருள்களின் குணப்பண்புகளையும், மற்றும் உயிருள்ள உயிர் அற்ற ஆகிய இருபொருள்களுக்கும் பொதுவான தொழில் பண்புகளையும் மிகவும் எளிதான முறையில் கற்றுக்கொண்டோம்!

சொல்லிலக்கணம் : தொடர் 3-8
சிறீ சிறீஸ்கந்தராஜா
25/01/2013 – 15/02/2013

தொகுப்பு – thamil.co.uk