இரத்தசோகை

இரத்தசோகை – ஏற்படுவது எப்படி? எதிர்கொள்வது எப்படி?

இந்தியக் குழந்தைகளில் 75 சதவிகிதத்தினர் இந்தியக் கர்ப்பிணிகளில் மூவரில் இருவர் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை. எப்படி ஏற்படுகிறது இரத்தசோகை? இரத்தசோகையை எதிர்கொள்வது எப்படி? இது குறித்து இக்கட்டுரையில் நாம் பார்ப்போம்.

இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டிய அளவைவிடக் குறையும்போது இரத்தசோகை குறைபாடு ஏற்படுகிறது. உடலின் பல உறுப்புகளுக்கும் ஆக்சிஜனைச் சுமந்து செல்வது இந்தச் சிவப்பு அணுக்கள்தான். அவற்றில் இருக்கும் ஹீமோகுளோபின்கள்தான் இந்தப் பணியைச் செய்கின்றன. எனவே, இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்தால், அது உடலின் பல உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கும்.

ஆரோக்கியமான ஆண்களுக்கு, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்கள் அளவு, 13 கிராம்/டெசி லிட்டர் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 கிராம்/டெசி லிட்டர் என்ற அளவிலும் இருக்க வேண்டும். ஒன்று முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 11 கிராம்/டெசி லிட்டரும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு 12 கிராம்/டெசி லிட்டரும் இருக்க வேண்டும். இந்த அளவைவிட ஹீமோகுளோபின்களின் அளவு குறையும்போது, இரத்த சோகை ஏற்படுகிறது.

இரத்தசோகையை எப்படிக் கண்டறிவது?

சாதாரண ஹீமோகுளோபின் பரிசோதனை மூலமாகவே இரத்தசோகை இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். இரத்தசோகை பாதிப்பு இருந்தால், என்ன வகையான இரத்தசோகை என்பதைக் கண்டறிய எம்.சி.வி (corpuscular volume) பரிசோதனை செய்ய வேண்டும்.

இரத்தசோகையை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

இரத்தச் சிவப்பு அணுக்களின் அளவு 80 ஃஎப்-எல்லுக்கும்(FL) குறைவாக இருந்தால் ‘மைக்ரோசைட்டிக் அனீமியா’ என்றும் 80 முதல் 95 ஃஎப்.எல். வரை இருந்தால் ‘நார்மோசைட்டிக் அனீமியா’ என்றும் 95 ஃஎப்-எல்லுக்கும் அதிகமாக இருந்தால் ‘மேக்ரோசைட்டிக் அனீமியா’ என்றும் வகைப்படுத்தலாம்.

மூன்று வகை இரத்தசோகைகளுக்கும் இடையே என்ன வேறுபாடு?

மைக்ரோசைட்டிக் அனீமியா:வெறும் இரும்புச் சத்துக் குறைபாட்டால் உருவாவது மைக்ரோசைட்டிக் அனீமியா. பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது இந்த வகையால்தான்.

நார்மோசைட்டிக் அனீமியா:தைராய்டு பிரச்னை, காசநோய், சிறுநீரகக் கோளாறுகள், ஹெச்.ஐ.வி. போன்றவற்றின் பாதிப்பால் ஏற்படுவது நார்மோசைட்டிக் அனீமியா. இந்த வகையான ரத்தசோகையைக் குணப்படுத்த, அதற்குக் காரணமான நோயை முற்றிலுமாகக் குணப்படுத்துவது முக்கியம்.

மேக்ரோசைட்டிக் அனீமியா:வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாட்டால் ஏற்படுவது மேக்ரோசைட்டிக் அனீமியா.

இரத்தசோகையால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

சோர்வு அதிகமாக இருக்கும்; படிகளில் ஏறி இறங்கினாலே, மூச்சு வாங்கும்; கால்கள் வீங்கிக் காணப்படும். சோகை அதிகமாகும்போது இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். கவனம் இன்மை, படிப்பில் நாட்டமின்றி இருத்தல் போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் காணப்படும். மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய்ச் சுழற்சியில் இருக்கும் பெண்கள் ஆகியோரிடம் இந்தப் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

இரத்தசோகையை எப்படிக் குணப்படுத்துவது?

மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பால்தான் முக்கிய உணவு. பாலில் இரும்புச் சத்தின் அளவு குறைவாக இருப்பதால், இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்பட்டு சின்ன வயதிலேயே இரத்தசோகை உண்டாகிறது. இதைத் தவிர்க்க பிறந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு பாலுடன் சேர்த்து மற்ற உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டும். தவிர, வயிற்றில் உள்ள புழுக்களினாலும் குழந்தைகளுக்கு ரத்த சோகைப் பாதிப்பு உண்டாகலாம். எனவே, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் புழுநீக்கம் செய்ய வேண்டும்.

மாதவிடாய்ச் சுழற்சியில் உள்ள பெண்களுக்கு, ஒவ்வொரு மாதமும் மாதவிடாயின்போது 20 மில்லி கிராம் இரும்புச் சத்து வெளியாகிறது. அதேபோல், கர்ப்பிணிகளைப் பொறுத்த வரை கரு உண்டானதில் இருந்து குழந்தைக்குப் பாலூட்டும் வரை 1,000 மில்லி கிராம் இரும்புச்சத்து கூடுதலாகத் தேவைப்படுகிறது. அதற்கேற்ற உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் இரத்தசோகை ஏற்படும்.

பொதுவாக, இரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல உணவுடன் இரும்புச் சத்து மாத்திரைகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொள்ளும்போது, இரண்டு, மூன்று வாரங்களிலேயே ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். அதற்காக மாத்திரை எடுத்துக்கொள்வதை உடனே நிறுத்திவிடக் கூடாது. குறைந்தது ஆறு மாதங்களுக்காவது தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது.

உணவைப் பொறுத்த அளவில், வெறும் இரும்புச் சத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் இரத்தசோகை குணமாகாது. இரும்புச் சத்துடன் புரதச்சத்து சேரும்போதுதான், ஹீமோகுளோபினாக மாற்றம் அடைகிறது. எனவே, இரும்புச் சத்துடன் புரதத்தையும் சேர்த்துச் சாப்பிடுவது அவசியம்

ஆட்டு ஈரல் மற்றும் முட்டையில் அதிக அளவு இரும்புச் சத்தும் புரதமும் உள்ளன. 100 கிராம் ஈரலில் 6.3 சதவிகிதம் இரும்புச் சத்தும் 19.3 சதவிகிதம் புரதமும் உள்ளன. முட்டையில் 2.1 சதவிகிதம் இரும்புச் சத்தும் 13.3 சதவிகிதம் புரதமும் உள்ளன. இதேபோல், சைவ உணவுகளில் தாமரைத் தண்டு வற்றலில் 60 – 4.1 சதவிகிதம் என்கிற அளவிலும் சுண்டைக்காய் வற்றலில் 60 – 8.3, அரைக்கீரையில் 38.5 – 2.8, சிறுகீரையில் 27.3 – 2.8, கைக்குத்தல் அவலில் 20 – 6.6 சதவிகிதம் என்கிற அளவில் இரும்புச் சத்தும் புரதமும் உள்ளன.

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் இரத்தசோகைக் குறைபாட்டைப் போக்க முடியும். சைவ உணவு சாப்பிடுபவர்கள், மேற்சொன்ன உணவுகளுடன் பருப்பு வகைகளையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

 இரத்தசோகையைத் தடுக்க…

இரத்தத்தில் இரும்புச் சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பிறகுதான் ரத்தசோகை இருப்பது தெரியவரும்.

இரத்த சோகையின் குணங்கள்
வெளிறிய முகம், நாக்கு, நகம், உள்ளங்கை வெளுத்து போதல், படபடப்புடன் இதயம் துடித்தல், மூச்சிறைப்பு, சோர்வு, எதிலும் பிடிப்பின்மை.

சேர்க்கவேண்டியவை:
இரும்புச் சத்து அதிகம் இருக்கும் சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி என எல்லாக் கீரைகளையும் சாப்பிடலாம்.

எள், பனை வெல்லம் கலந்த உருண்டை, கம்பஞ்சோறு, வரகரிசியில் செய்த கிச்சடி, பிரியாணி, புலாவ் செய்த்து சாப்பிடலாம். கஞ்சியாகவும் குடிக்கலாம்.

இதைத்தவிர, பாசிப்பயறு, சிகப்புக் கொண்டை கடலை, முளைக்கட்டிய தானியங்கள் இதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் இரும்பை கிரகிக்க உதவும்.

தவிர்க்கவேண்டியவை:
இரும்புச் சத்து மருந்துகளை வாங்கி சாப்பிடுவது வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, மாத்திரை, மருந்துகளாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.