கஞ்சக் கருவிகள்

தமிழர் இசைக்கருவிகளை அதன் தயாரிப்பு மற்றும் இசைக்கும் விதத்தின் அடிப்படையில், தோல்கருவிகள், காற்றுக்கருவிகள், நரம்புக்கருவிகள், கஞ்சக்கருவிகள் என 4 விதமாக வகைப்படுத்துகிறார்கள்.

விலங்குகளின் தோலில் தயாரிக்கப்படுபவை தோற்கருவிகள். காற்றை வாங்கி நாதம் எழுப்புவன காற்றுக் கருவிகள் / துளைக்கருவிகள். சுருதிக்கு அடிப்படையாக விளங்குபவை நரம்புக்கருவிகள். உலோகங்களால் வார்க்கப்படுபவை கஞ்சக்கருவிகள். கனத்த எடையின் காரணமாக ‘கனக்கருவிகள்’ என்றும் அழைக்கப்பட்டன. தாளம், கைமணி, சேகண்டி முதலியன கஞ்சக்கருவிகள் ஆகும்.

கஞ்சம் என்றால் வெண்கலம். தூய வெண்கலத்தால் ஆன கருவிகளே கஞ்சக்கருவிகள். தகுந்த இலக்கண வரம்பறிந்து இசைக்காவிட்டால் வெண்கலம் தெறித்து, நாதம் பிசகிவிடும். அதனால் கஞ்சக்கருவிகளை மிக நுணுக்கமாக இசைக்க வேண்டும்.

தாளம்
தாளம் thami.co.ukஉலோகங்களால் வார்க்கப்படும் கஞ்சக்கருவிகள் பட்டியலில் முதன்மையானது தாளம். சிங்கி, மணி, ஜால்ரா, ஜாலர் எனப் பல்வேறு பெயர்களால் இக்கருவி அழைக்கப்பட்டாலும் தாளம் என்பதே அதற்குரிய மகத்தான் பெயராக நிலைபெற்றுவிட்டது. இசைப்பாளர்கள் வேறு தொழில் நாடிவருவதால், இக்கருவி அழிவின் விளிம்பில் இருக்கிறது. வெண்கலத்தால் உருவாக்கப்படுவது தாளக்கருவி. ஒலிக்கு உகந்தது வெண்கலம்.

இசையின் கால அளவுகளை சீர்படுத்தி நேர்கோட்டில் பயணிக்கச் செய்வதே தாளம். இசையும் தாளமும் உடலும் உயிரும் போன்றது. பிரித்தால் இரண்டுமே இறந்துபோகும். நாதஸ்வரம், மிருதங்கம், கடம், கஞ்சிரா, கொன்னக்கோல் உள்ளிட்ட எல்லா லய வாத்தியங்களையும் தாளம்தான் கட்டுப்படுத்துகிறது. இசையில் பிசிறு தட்டாமல் இருக்க வாய்ப்பாட்டுக்காரர்களும் வாத்தியக்காரர்களும் தங்கள் தொடைகளை கைகளால் தட்டி கைத்தாளம் கட்டுவார்கள்.

பழங்குடி மக்களின் நாட்டியத்தில் இருந்தே தாளம் பிறந்ததாகச் சொல்கிறார்கள் இசையறிஞர்கள். வேட்டையாடிக் கிளர்ந்த மகிழ்வு அதிர அவர்கள் ஆடும் நடனத்தில், பாடலுக்குத் தகுந்தவாறு பாதங்களைக் கொண்டு செய்த கணக்கீடே ‘தாளம்’ என்றானதாம். அந்தக் காலத்தில் கோயில்களில் நாட்டியமாடும் தெய்வ மகளிர்கள் தங்கள் பாதங்களிலேயே தாளத்தைக் கணக்கிட்டு அபிநயம் புரிவார்கள். தற்கால பரதத்திலும் அது ஒரு அடிப்படையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

காலப்போக்கில், தாளத்திற்கென ஒரு இசைக்கருவி வடிவமைக்கப்பட்டது. இரண்டு உலோகத் துண்டுகள் அல்லது கட்டைகளே முதலில் தாளமாக பயன்படுத்தப் பட்டன. அதன்பின் இலக்கண சுத்தியோடு நவீன தாளக்கருவிகள் வந்தன. இலைதாளம், குழிதாளம் என தரத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப பெயர்களும் உருவாயின.

ஓதுவார்கள், நட்டுவனார்கள், நாட்டுப்புற பாடகர்கள் என இசையோடு தொடர்புடைய பலரும் தாளக்கருவியை பயன்படுத்தினார்கள். கோலாட்டம், வில்லுப்பாட்டு, நாடகங்கள் போன்றவற்றிலும் இது முதன்மை பெற்றிருந்தது. திரிபுடை தாளம் முழங்க, நாதஸ்வரக்காரர் இசைக்கும் மல்லாரி ராகத்தை வைத்தே பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் வசிக்கும் மக்கள், சுவாமி வீதியுலா தொடங்கியதை தெரிந்து கொள்வார்கள். இன்று பெரும்பாலான கோயில்களில் மின்சார இசைக்கருவிகள் வந்துவிட்டதால், மரபுரீதியான இந்த நிகழ்வுகள் மறைந்து விட்டன.

தொடக்கத்தில், கோயில் மணிகளில் பயன்படும் முறி என்ற உலோகத்தை இளநீரில் பக்குவப்படுத்தி தாளக்கருவி செய்யப்பட்டது. இப்போது செம்பு மற்றும் வெள்ளீய கலவையால் செய்கிறார்கள்.வெண்கலம், ஐம்பொன்னால் செய்யும் மரபும் இருந்தது. ஆதிகால தாளத்தில் 108 வகைகள் உண்டு. இப்போது 35 வகை தாளங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. தாளம் இசைக்க பண் அறிவும் லய ஞானமும் அதிபுத்திசாலித்தனமும் தேவை. தாளக்காரர் கணநொடி தவறு செய்தாலும் இசை வேறொரு திசைக்கு இழுத்துக்கொண்டு போய்விடும்.

சேமக்கலம்
சேமங்கலம் thamil.co.ukதாளம், பாரிமணி போன்றவை தமிழர்கள் பயன்படுத்திய முக்கிய கஞ்சக்கருவிகள். இவ்வரிசையில் இடம்பெறும் சிறப்பு பொருந்திய இசைக்கருவியே சேமக்கலம்.

சேகண்டி, சவுண்டி, செகண்டை, செயகண்டி, செயகண்டிகை, சேமணி, சேமக்கலம், சேமங்கலம், சேங்கலம், சோமங்கலம், சேடகம், சேகடம், எறிமணி என பகுதிக்கு ஒரு பெயரிட்டு அழைக்கப்படும் இக்கருவி, திருச்சங்குடன் சேர்த்து இசைக்கப்படும். திருச்சங்கு விஷ்ணுவுக்கு உரியது. சேமக்கலம் சிவனுக்குஉரியது. சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்ற உயரிய தத்துவத்தை விளக்கும் விதமாகவே இவ்விரு கருவிகளும் இணைத்து இசைக்கப்படுகின்றன.

வட்டவடிவில் தூய வெண்கலத்தால் ஆன சேமக்கலம் சுமார் 6 கிலோ எடையிருக்கும். கனத்த தேக்கு குச்சி கொண்டு இதை அடிப்பார்கள். நுனியில் கயிறு கோர்க்கப்பட்டிருக்கும். ஆதியில் இதன் பெயர் ‘சோமன் கலம்’. சோமன் என்பது சந்திரனின் பெயர். சந்திரனைப் போன்ற வட்டவடிவம் கொண்டதால் அப்பெயர்.

‘தொடக்கத்தில் இக்கருவி இறைவனுக்குரிய இசைக்கருவியாகவே கருதப்பட்டது. கோயில்களில் இருந்த சர்வவாத்தியங்களில் முக்கிய இடம் பெற்றிருந்தது. பிற்காலத்தில், எதன் காரணமாகவோ இறப்பு அறிவிக்கும் கருவியாக உருமாறிவிட்டது’ என்கிறார் இக்கருவி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள சென்னை இசைக்கல்லூரி பேராசிரியை டாக்டர் சுப்புலட்சுமி.

சேகண்டி

சேகண்டி

‘‘சேமக்கலம், நேரடி இசைக்கருவி. இதில் எழும் சத்தம் இயற்கையானது. தாளத்தில் சற்று பெரியவகை. சிவன், விஷ்ணு ஆலயங்களில் சுவாமி புறப்பாட்டின்போது இக்கருவி இசைக்கப்பட்டது. இப்போது இறப்புச்சடங்கில் அறிவிப்புக் கருவியாக இசைக்கப்படுகிறது. கோயில்களில் வாசிக்கப்படும் சேமக்கலத்துக்கும், இறப்புகளில் வாசிக்கப்படும் சேமக்கலத்திற்கும் வித்தியாசம் உண்டு. இறப்புகளில் வாசிக்கப்படுவது பித்தளையால் ஆனது. வேறுவிதமான ஒலியைக் கொண்டது. அதை ‘சவுண்டி’ அல்லது ‘சேகண்டி’ என்பார்கள். ‘ஒரு உயிர் இறைவனிடம் சென்றடைந்து விட்டது’ என்று அறிவிப்பதற்காக இறைவனுக்குரிய இந்த இசைக்கருவி இறப்புச்சடங்கில் இசைக்கப்படுவதாகக் கருதுகிறேன்’’ என்கிறார் அவர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மட்டும் சேமக்கலம் இசைக்கும் வழக்கம் மிஞ்சியிருக்கிறது. நம்பெருமாள் புறப்பாட்டுச் சேவையின்போது, நாதஸ்வரம், தவிலோடு சேர்த்து சேமக்கலமும் இசைக்கப்படுகிறது. ‘குதிரை வையாளி’ வழிபாட்டில் 4ம் உத்திர வீதியில் நம்பெருமாள் உலாவரும்போது சேமக்கலமும் வீரவண்டியும் மட்டுமே இசைக்கப்படும். பரந்தாமன் என்ற கலைஞர் அங்கு இக்கருவியை வாசிக்கிறார்.

தஞ்சை பகுதியில், மார்கழி முழுவதும் நள்ளிரவு நேரத்தில், தொட்டியம்பட்டி நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வீடுவீடாகச் சென்று சேமக்கலத்தை இசைத்தபடி திருப்பாவை மற்றும் பெருமாள் பாடல்களைப் பாடுவார்கள். இவ்வழக்கம் அண்மைக்காலம் வரை இருந்தது. ஒருகையில் சங்கைப் பிடித்து ஊதியபடியும், மறுகையில் சேமக்கலம் இசைத்தபடியும். பனிபடர்ந்த நள்ளிரவில் இவர்கள் பாடுகிற பாடல்கள் ரசனையானவை. வீதிகளில் சுற்றித் திரியும் துர்தேவதைகளை விரட்டுவதற்கான சடங்கு இது என்கிறார்கள்.

தொட்டியம்பட்டி நாயக்கர்களின் பூர்வீகம் ஆந்திரா. தமிழ்நாட்டில் இவர்களை தாதர்கள் என்கிறார்கள். திருமாலின் அடியவர்களாக தங்களை கூறிக்கொள்வதால் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.  தாசர் சமூக மக்களின் நிகழ்த்துக் கலையான தாதராட்டத்தில் சேமக்கலம் முக்கிய இடம்பெறுகிறது. திருநெல்வேலி, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் மாரியம்மன் கோயில் திருவிழாவிலும், சடங்குகளிலும் சிலர் இக்கலையை நிகழ்த்துகிறார்கள். இதை திருமாலுக்கு உரிய ஆட்டம் என்கிறார்கள்.

ராமன், கண்ணன், ரங்கநாதர், திருமலைநாதனின் சிறப்புக்களை பாடுபொருளாகக் கொண்டது இக்கலை. தாசரித் தப்பு, உருமி, சேமக்கலம் ஆகியவை இப்பாடலுக்குரிய இசைக்கருவிகள். தலையில் பாகையையும், இடுப்பில் அடர்நிறப் பாவாடையையும் அணிந்து கொள்வர். ஒட்டியாணம், சலங்கை போன்ற அணிகலன்களை உடுத்தி, நெற்றியில் நாமமிட்டு பாடலுக்கும், இசைக்கும் தகுந்தவாறு ஆடுவர். தேவராட்டத்தை ஒத்திருக்கும் இந்த ஆட்டத்தில் 32 அடவுகள் உண்டு. சுற்றிச்சுழன்றும், முன் பின் வளைந்தும் ஆடுவர். அனுமன் வேடமிட்டு கோமாளித்தனத்தால் நகைக்கவைக்கும் கலைஞரே சேமக்கலத்தை இசைப்பார்.

காலத்தின் அதிவேக சுழற்சியில் இக்கலை பொலிவிழந்து விட்டது. ஆலய இசைமரபிலிருந்து சேமக்கலமும் வழக்கொழிந்து விட்டது.

-வெ.நீலகண்டன்

தொகுப்பு – thamil.co.uk