அச்சம் fear, பதற்றம் anxiety, பீதி phobia

அச்சம் பதற்றம் பீதிஅச்சம் (fear ) பதற்றம் (anxiety ) பீதி (phobia ) ஆகிய உணர்வுகள் ஒன்றுபோல் தெரிந்தாலும் இயல்பில் வெவ்வேறானவை.

நமக்கு ஆபத்து வரும் என்று தெரியும் போது நாம் முதலில் அடைவது அச்சம். அந்த ஆபத்து எந்த வடிவில் எப்படி வரும் என்று தெரியாத நிலை ஏற்படும்போது உண்டாவது பதற்றம். வந்த ஆபத்தை நம்மால் எதிர்க்கொள்ள முடியாதபடி நாம் உறைந்து கிடக்கும் போது நமக்கு உண்டாவது பீதி.

நமது வீட்டுக்கு வந்த பாம்பைப் பார்த்து வருவது அச்சம். அதை அடிக்க நாம் கோல் எடுக்கலாம். அது துணிவு. அது படமெடுத்து நின்றால் நம்மை என்ன செய்யுமோ என்று நடுங்கி இருப்பது பதற்றம். இந்த வேளையில் கட்டில் மேல் ஏறி நின்று கொண்டு செய்வதறியாமல் பாம்பையே பார்த்துக் கொண்டிருப்போம். மாறாக, நாம் கேள்விப் படாத அளவு நீளமாகவும் பெரியதாகவும் படமெடுத்தபடி அந்தப் பாம்பு இருந்தால் மனம் பீதியில் உறைந்து திகைத்து நிற்போம்.

இம்மூன்றில் அச்சம் இயல்பானது. மனிதன் மட்டுமல்ல உயிரினங்கள் யாவும் அச்சம் கொண்டிருக்கும். இயற்கை விதிப்படி ஓர் உயிரினம் இந்த உலகில் நிலைத்து வாழ துணிவு விட அச்சமே அவசியம். துணிவின்றிகூட நாம் வாழலாம். அச்சமின்றி வாழ முடியாது. நாம் பிற மனிதனுக்கு அஞ்சா விட்டாலும் இயற்கைக்கும் விலங்குக்கும் அஞ்சியே வாழவேண்டி உள்ளது. தற்காப்புக்கு இந்த அச்சம் அவசியம் என்று இயற்கை கொடுத்த கொடை இந்த அச்சம். அதனால் தான் நாம் சாலையைக் கடக்கும்போது நாலாப்பக்கம் திரும்பிப் பார்க்கிறோம். இது நல்லது. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை.

இந்த அச்சத்தில் இருட்டு அச்சம், விலங்கு அச்சம், சண்டை அச்சம் எனப் பல வகைகள் உள்ளன. அவை அனைத்திலும் தற்காப்பு பொதிந்துள்ளது என்பதை அறியவும். சிலரிடம் காரணமில்லாமல் அச்சம் கொண்டிருப்பர். தமது அதிகாரியிடம் அளவுக்கு அதிகமாக அஞ்சி இருப்பர். இதில் காரணம் இருக்குமானால் அவர் ஏதோ குற்றம் செய்து இருக்கிறார் என்று பொருள். மாறாக, காரணமே இல்லை என்றால் அந்த அச்சத்தின் பின்னணியில் பழைய குற்ற உணர்வே (sense of guilt ) காரணமாகும். இந்தக் காரணம் நனவிலி மனத்தில் (unconscious ) இருந்து அவரின் தற்கால வாழ்வில் அச்ச ஆளுமை குணத்தை( fearful personality ) ஏற்படுத்தி விடும். அதனால் தமக்கே தெரியாமல் அச்சம் கொண்டு இருப்பர். இதைப் போக்க counseling தேவை. சிலருக்கு உள மருத்துவம் கூடத் தேவைப்படும்.

பதற்றம் என்பது நாம் எதிர்க்கொண்டிருக்கும் ஆபத்தால் நமக்கு எப்போது என்ன ஆகுமோ என்று நடுங்கிக் கொண்டிருக்கும் நிலை ஆகும். இந்த நிலையில் எதிர்கொள்ள நினைத்தாலும் எப்படி என்று தடுமாறுவோம். படபடப்பு அதிகரிக்க கன்னா பின்னா என்று செயல்படுவோம். பதறிய காரியம் சிதறியே போகும். ஒரு காரியத்தை முன்கூட்டியே திட்டமிடாமல் போனால் கூட பதற்றம் வரும்.

தேர்வின்போது பலருக்கு இது ஏற்படுவதுண்டு. காரணம் கேள்விக்கான திட்டம் அவர்கள் மனத்தில் இல்லை. தேர்வு அச்சம் மாணவர்களுக்குத் தேவைதான். அப்போதுதான் நன்கு படிக்க வேண்டும் என்கிற முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பாகும். மாறாக, தேர்வுப் பதற்றம் என்பது அவர்கள் மனத்தில் விடைக்கான திட்டம் இல்லை என்று பொருள். அவ்வேளையில் கேள்வித்தாளைக் கண்டவுடன் சிலர் மயங்கி விடுவர். துணிவின்மை, தெளிவின்மையின் அறிகுறியே பதற்றம்.

பீதி என்பது எதிர்வரும் ஆபத்தை எதிர்க்கொள்ளும் வாய்ப்பு ஏதும் இல்லாத நிலையில் உருவாவதாகும். போர்க்காலத்தில் வான்வழித் தாக்குதல்கள் நடக்கும் போது யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்போது ஏற்படுகின்ற பீதி மரண பீதியாகும்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒருவன் இருட்டு அறைக்குள் நுழைந்து போகும்போது வெள்ளையாக ஒரு உருவம் இருப்பதைக் கண்டான். கண்டவுடன் ஆவி என்று கருதி பீதி அடைவான். பேய் பிடித்தவன் போல் வெறித்து கிடப்பான். இத்தகு பீதிக்கு மன முதிர்ச்சியின்மையே முழுமுதற் காரணம். பேய் நம்பிக்கையே இப்படி அவர்களை ஆக்கி விடுகிறது. இத்தகு நபர்கள் முன் உண்மையிலேயே கடவுள் தோன்றினாலும் இவர்கள் பீதிதான் அடைவரே அன்றிப் பக்திப் பரவசம் அடைய மாட்டர்.

அச்சம் – அவசியமானது.  துணிவுடன் எதிர்கொள்ளலாம் .
பதற்றம் – அவசியமற்றது. துணிவே இல்லாத நிலை.
பீதி – துணிவிருந்தும் எதிர்க்கொள்ள முடியாதது.

-உளவியல் ஆலோசனை