இலவு – முள்ளிலவு

மூலிகையின் பெயர் இலவு மரம்
தாவரவியல் பெயர் – BOMBAX PENTANDRUM(OR) ERIODENDRON ANFRACTUOSUM
வேறு பெயர்கள் – இலவம், CAPOK TREE, WHITE SILK COTTON TREE
பயன்தரும் பாகங்கள்  – இலை, பூ, வித்து, பட்டை, பிசின், பஞ்சு, வேர்
வளரியல்பு – இது இந்தியாவில் உஷ்ணப் பிரதேசங்களில் வளரும் மரவகையைச் சேர்ந்தது.
இலவுஇலவு-

 

 

 

 

 

 

இலவு.மருத்துவப்பயன்கள்

சுவை – இனிப்பு, துவர்ப்பு, கைப்பு,
வீரியம் – சீதம்,
பிரிவு – இனிப்பு
குணம் – இலவு மரத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிவு, தந்து மேகம் போம். இவைகள் விலகும், சுக்கிலமும் இரசதாதுவும் பலப்படும்.

‘நீர்க்கடுப்பு நீர் எரிவு நீண்டோழுக்கு மேகமும்போம்
ஆர்க்கும் விந்து வோடிக்கு மாண்டையும் – பார்க்குங்
நிலவு மதிவதன நேரிழையே ! வெப்பம்
இலவு மரத்தா லியம்பு

இலவம் பட்டையை அரைத்து எலுமிச்சங்காய் அளவு எடுத்து சாப்பிட்டு புளித்தகாடி, புளித்த நீர் மோர் இவைகளைக் கொடுக்க இடு மருந்து முறியும்.

குறிப்பு – இதன் பிஞ்சு மராட்டி மொக்கு என்ற பெயரில் கடைகளில் கொடுக்கின்றனர். மற்றும் இதன் பிசின் கடைகளில் கிடைக்கும். மற்றதை நாம் மரத்தில் இருந்து பெற்றுக் கொள்ளவேண்டும். முள்ளிலவு, இலவு இரண்டும் குணங்களில் ஒன்றாக இருப்பதால் சந்தர்ப்பம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

இலவம்இலவு அல்லது இலவம் பஞ்சு மரம் வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும். இலவமரம் பூக்கும். காய்க்கும். பழுக்காது. காய் நெற்றாகிவிடும் பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும் . இதனால் இலவு காத்த கிளி போல என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று.

இலவ மரத்தின் தாயகம் ஆப்பிரிக்கா ஆகும். இது ஆப்பிரிக்காவில் இயற்கையாகவே வளர்கிறது. உலகின் மற்ற பகுதிகளில் இது தோட்டப் பயிராக பயிரிடப்படுகிறது. காயிலிருந்து பஞ்சு எடுக்கப்படுகிறது. இலவம் பஞ்சு உறுதியற்றது. எனவே, இவை நூல்நூற்க பயன்படுவதில்லை. மெத்தை, தலையணை, உயிர்காக்கும் உறைகள் தயாரிக்க மட்டுமே இவை பயன்படுத்தப்படுகின்றன. இதனுடைய விதையிலிருந்து எண்ணை எடுக்கப்பட்டு சோப்பு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. பிண்ணாக்கு கால்நடைத் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. காயின் மேலோடு எரிபொருளாக பயன்படுகிறது. இதனுடைய மிருதுவான பகுதியிலிருந்து தீக்குச்சி தயாரிக்கப்படுகிறது.

இலவ மரத்தில் நாட்டு ரகம், சிங்கப்பூர் ரகம் என பல வகைகள் உள்ளன. இம்மரத்தினைச் சாலையின் இருபுறங்களிலும் வளர்ப்பதால் ஒரு கம்பீரமான அழகினைக் கொடுக்கிறது. இம்மரம் எல்லா நிலங்களிலும் குறிப்பாக தரிசு நிலங்கள், சாலை ஓரங்களில் நன்கு வளரும். இது வறட்சியைத் தாங்கவல்லது.

நவம்பர் டிசம்பரில் மரங்களில் பூக்க ஆரம்பிக்கும். அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இதன் மலர்கள் காயாகி பழுக்காமல் நார் போன்று மாறி பஞ்சாகி பின் வெடிக்கிறது. 15 வருடத்திற்கு மேற்பட்ட மரங்களிலிருந்து விதைகள் எடுப்பது நல்லது. விதைகளை மேடை பாத்திகளில் நேரடியாகவோ அல்லது பாலித்தின் பைகளிலோ விதைக்கலாம். நாற்றுக்கள் ஆறு முதல் ஒன்பது மாதங்களில் நடவுக்கு தயாராகி விடும். நன்கு வளர்ந்த மரங்கள் 2 முதல் 3 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்து விடும். இருப்பினும் 6 ஆண்டுகள் ஆன பின் தான் மிகுதியாகவும், ஒரே சீராகவும் காய்க்கும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரை காய்களை அறுவடை செய்யலாம்.

நற்றிணை 105, முடத்திருமாறன் , பாலை திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

“முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ் சுரக் கவலைய என்னாய் நெடுஞ் சேண்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே.”

அகநானூறு 11, ஔவையார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது

“வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு,
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த
அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி,
கயந்துகள் ஆகிய பயம்தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,
வம்புவிரித் தன்ன பொங்குமணற் கானயாற்றுப்,
படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர்,
மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம்
அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,
நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஓ மறந்து
அறுகுளம் நிறைக்குந போல, அல்கலும்
அழுதல் மேவல வாகிப்
பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே!”

 

முள்ளிலவு மரம்

மூலிகையின் பெயர் – முள்ளிலவு
தாவரவியல் பெயர் – BOMBAX MALABARICUM / B. HEPTAPHYLLS
வேறு பெயர்கள் –  சால்மலி, பூரணி, பொங்கல் மோசம்
ஆங்கிலப் பெயர் – THE REDSILK – COTTON TREE

முள்ளிலவுவளரியல்பு – இது இந்தியாவில் உஷ்ணப் பிரதேசங்களில் வளரும் மரவகுப்பைச் சேர்ந்தது. பெரிய இலையுதிர் மரம், தாங்கு வேர் உடையது, 40 மீ. உயரம் வரை வளரக்கூடியது. மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, எளிதில் உதிரக்கூடிய முட்களுடையது. சிறு செதில்களாக உதிரக்கூடியது.

கிளைகள், நிலத்திற்கு கிடைமட்டமானது; சிறிய நுனிக்கிளை கள் கணுவில் நெருக்கமாக சுழலில் அமைந்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, எளிதில் உதிரக்கூடிய முட்களுடையது.

இலைகள் கூட்டிலைகள், கைவடிவகூட்டிலைகள், நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை. இலையடிச்செதில் ஈட்டி வடிவானது, உதிரக்கூடியவை. இலையின் காம்பு 12-30 செ.மீ. நீளமானது. குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.

முள்ளிலவு...ஒர் கூட்டிலையில் 3-8 ஜோடி சிற்றிலைகளுடையது. சிற்றிலையின் அலகு (4-) 8-16 X (1.5-) 3-7 செ.மீ., நீள்வட்ட வடிவம் முதல் தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு முதல் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, கீழ்பரப்பு உரோமங்களற்றது.

கனி / விதை : வெடிக்கனி , தடித்தவை 5-அறைகளுடையது, வெள்ளை நிறமான அடர்த்தியான பஞ்­­­­­­சு கொண்டது; விதைகள் எண்ணற்றது.

இதன் பூ குங்குமம் போல் சிவப்பாய் இருக்கும். தனித்தவை அல்லது ஒர் தொகுப்பானது. பொதுவாக இலைகளற்ற தனித்தவை கிளைகளில் காணப்படுபவை.

மருத்துவ உபயோகம் – இலவ மரத்தின் குணமும் இதுவும் ஒரே குணத்தைக் கொண்டு இருக்கும்.

சுவை – இனிப்பு, துவர்ப்பு,
வீரியம் – சீதம்,
பிரிவு – கார்ப்பு

செயல்

இலை
குளிர்ச்சியுண்டாக்கி – REFRIGERANT
உள் அழல் ஆற்றி – DEMULCENT
பூ
மலகாரி – LAXATIVE
சிறுநீர் பெருக்கி – DIURETIC

விதை
காமம் பெருக்கி – APHRODISIAC
உள்ளழாற்றி – DEMULCENT
குருதி பெருக்கடக்கி – STYPTIC

பட்டை
துவர்ப்பி – ASTRINGENT MILD
உள்ளழாற்றி – DEMULCENT
சிறு நீர்பெருக்கி — DIURETIC
உரமாக்கி – TONIC

பிசின்
துவர்ப்பி – ASTRINGENT
குருதி பெருக்கடக்கி – STYPTIC

வேர்
வெப்பமுண்டாக்கி – STIMULANT
உரமாக்கி – TONIC
குணம் – முள்ளிலவு மரத்தினால் தந்தி மேகம், நீர்த்தாரை வெப்பம் வாத அதிசாரம் போம்.

“தந்துமேகஞ் சிறுநீர்த் தாரைவெப் பம்வாய்
வுந்தவரு பெதியிவை யோட்டுங் கான் – முந்திக்
கிளர்வள்ளை பாயும் வரிக் கெண்டை விழியாய்!”
– அகத்தியர் குணவாகடம்

(இலவ மரம், முள்ளிலவ மரம் இவைகளின் குணம் பெரும்பாலும் ஒத்து இருக்கும். இதனால் இவைகளை வழங்கும் விதங்களை ஒன்று சேர்த்து தரப்படுகிறது.)

மருத்துவ குணம்

இலையை அரைத்து பசுவின் பாலில் கலந்து கொடுக்க வாத கிரிச்சரம் நீங்கும்.

பூவை கசாயம் செய்து கொடுக்க மலக்கட்டையும், நீர்க்கட்டையும் நீக்கும்.

இதன் விதை – 100 gm, சீரகம் – 50 gm, வால்மிளகு – 25 gm இவைகளை தூள் செய்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு 3 gm முதல் 5 gm வரை கொடுக்க தந்தி மேகம், நீர்ச் சுருக்கு, எரிச்சல். தொண்டைப்புண், வாய், நீர்த்தாரையில் இருந்து வரும் இரத்தம் சீழ் பிரமியம் தீரும். தேனில் அல்லது வெண்ணையில் நோயின் தன்மை போல் கொடுக்கலாம்.

இலவம் பிசின்
இதன் பிசினை பொடித்து 1முதல் 2 கிராம் வரை எடை இளநீரில் கலந்து அல்லது இந்தப் பொடியை சாப்பிட்டு இளநீர் குடிக்கவேண்டியது இரண்டு மூன்று வேளை கொடுக்க தந்தி மேகம், நாட்பட்ட மூத்திரச் சூடு, எரிவு, அசீரண பேதி,சீத பேதி குணமாகும்.

இலவம் பஞ்சை முன் காலங்களில் விரனங்களுக்கு வைத்து கட்டுவதற்கு பயன்படுத்தியுள்ளனர்.

இலவம் வேரைக் கொண்டும் கசாயம் செய்து மேற்கண்ட நோய்களில் கொடுக்கலாம்.

-yuuvi.blogspot.co.uk

தொகுப்பு – thamil.co.uk