சங்க காலமும் தொல்லியலும்

சங்க காலமும் தொல்லியலும்தொல்லியல் Archaeology  என்பது ‘ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்’ ஆகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும், அல்லது மேற்பரப்பிலே காணப்படும் மனித இனத்தோடு தொடர்புடைய பொருள்களையும், அவர்கள் நாள்தோறும் வாழ்க்கையில் பயன்படுத்தி விட்டுச்சென்ற பொருள்களையும் அகழ்ந்தெடுத்து ஆய்வுசெய்து அவர்களின் பழம் பண்பாடுகளைப் பற்றி உய்த்தறியும் ஓர் ஆய்வாகும்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் எடுத்த அரிய பல தொல்பொருட்கள் C14 எனப்படும் கரிப்பகுப்பாய்வு மூலம் அறிவியல் முறைப்படி காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் அவற்றின் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை எனக் கணிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வுகளில் சங்க இலக்கியங்களோடு தொடர்புடைய பல பெயர்கள் – பொருள்கள் கிடைத்துள்ளன. எனவே அந்தத் தொல்லியல் அகழாய்வுக் காலத்தைச் சங்ககாலம் என்று கொள்ளுவது தவறாகாது.

சங்ககால ஊர்கள்
சங்க இலக்கியம் குறிக்கும் தொன்மையான சில ஊர்களில் முறைப்படி அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் மூலம் அவ்வூர்கள் இருந்தமையும், அங்கு மக்கள் வாழ்ந்தமையும் அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அகழாய்வு நடைபெற்ற ஊர்கள் – அதன் சங்ககாலப் பெயர்

அரிக்கமேடு (வீராம்பட்டிணம்) – வீரை முன்துறை (அகம் 206)
அழகன்குளம் – மருங்கூர்ப்பட்டினம் (நற் 258)
உறையூர் – உறந்தை (புறம் 39)
கரூர் – கருவூர், வஞ்சி (புறம் 13,11)
காஞ்சிபுரம் – கச்சி (பெரும் 420)
காவிரிப்பூம்பட்டினம் – புகார் (பட்டின 173)
கொடுமணல் – கொடுமணம் (பதிற் 74)
கொற்கை – கொற்கை (அகம் 27)
தருமபுரி – தகடூர் (பதிற் 78)
திருக்கோவிலூர் – கோவல் (அகம் 35)
திருத்தங்கல் – தங்கால் (நற் 386)
மதுரை – மதுரை (பரி 11)
வல்லம் – வல்லம் (அகம் 336)
கொடுங்கலூர் – முசிறி (புறம் 343)

மைய அரசு, தமிழக அரசு, சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த தொல்லியல் துறைகள் இவ்வூர்களில் அகழாய்வை மேற்கொண்டன. அரிக்கமேட்டில் அமெரிக்கத் தொல்லியல் துறையினரும் அகழாய்வில் ஈடுபட்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னர் மேற்கண்ட ஊர்கள் சிறந்த நாகரிகத்துடன் விளங்கின என்பது அகழாய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வூர்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் சங்ககாலச் சிறப்பும் தொன்மையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பெருங்கற்படை
சங்ககாலத்திற்கு இணையான தமிழகத் தொல்லியல் ஆய்வில் மிகவும் சிறப்பாகக் குறிக்கப்பெறும் தன்மையுடையது பெருங்கற்படைச் சின்னங்களின் அகழாய்வாகும். தமிழகமெங்கும் பரவலாகவும். மிகுதியாகவும் காணப்பெறுவது இச்சின்னங்களேயாகும். இதனைத் தொல்லியலார் Megalithic என அழைப்பர். இக்கால ஈமக் குழிகள் மிகப் பெரிய கற்பலகைகளைக் கொண்டும், பெரிய கற்களைக் கொண்டும் அமைக்கப்பட்ட காரணத்தால் இதனைப் பெருங்கற்படைப் பண்பாடு என அழைப்பர். கல்அறை, கல்வட்டம், கல்படை, கல்குவை, கல்திட்டை, கற்கிடை எனப் பலவாறாக இவை காணப்படும். பெருங்கற்படைப் பண்பாடு 2500 ஆண்டுகட்கு முற்பட்ட பண்பாடாகும்.

பெருங்கற்படைச் சின்னங்களைச் சங்க இலக்கியங்கள் ‘பதுக்கை’ எனக் குறிப்பிடுகின்றன.

‘செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை’ (புறம் 3)
‘வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
எண்ணுவரம்பு அறியா உவல்இடு பதுக்கை’ (அகம் 109)
‘இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை’ (கலி 12)
என்பன 2500 ஆண்டுகட்டு முற்பட்ட பெருங்கற்படையைக் குறிக்கும் சங்க இலக்கியத் தொடர்கள். பூமிக்குள் பதுங்கியிருப்பது, பதுக்கப்பட்டிருப்பது பதுக்கை ஆயிற்று. இவை வீரம்காட்டி மாய்ந்த வீரர்கட்குப் புதிதாக எடுக்கப்பட்டது என்பதை ‘வம்பப்பதுக்கை’ என்பதன் மூலம் அறியலாம். வீரயுகமான சங்ககாலத்தில் பெரும்பாலும் வீரர்கட்கென்றே பெருங்கற்படைகள் அமைக்கப்பட்டன.

நெடுங்கல்
பெருங்கற்படைச் சின்னங்களான இப்பதுக்கைகளை அமைத்தபின்னர் அதன் அருகே நீண்டு உயர்ந்த குத்துக்கல்லை அடையாளமாக அமைத்தனர். இதனைத் தொல்லியலார் Menhir என அழைப்பர். இவை ஒன்றோ இரண்டோ பெருங்கற்படையின் அருகே இருக்கும்.

இதனைப் புறநானூறு ‘பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி

இனி நட்டனரே கல்லும்’
என்று கூறும் (264). அகநானூற்றில் இவை
‘சிலை ஏறட்ட கணைவீழ் வம்பலர்
உயர்பதுக்கு இவர்ந்த அதர்கொடி அதிரல்
நெடுநிலைநடுகல்’ என்றும்.
‘பிடிமடித் தன்ன குறும்பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்’
என்றும் குறிக்கப்படுகின்றன (289, 269).
இந்நெடுநிலைக் கற்களே பிற்காலத்தில் நடுகற்களாக (Hero Stones) மாறின என்பர்.

நடுகல்
Hero Stones (வீரன்கல் – வீரக்கல்) என வழங்கிய கற்கள் இப்பொடுது Memorial Stones (நினைவுக் கற்கள்) என வழங்கப்படுகின்றன. வரலாற்றின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் பழங்குடி மக்களின் பண்பாட்டை விளக்க நடுகற்களே காரணமாக அமைந்துள்ளன. மறவர், எயினர், மழவர், வேடர், கோவலர், வடுகர், கள்வர், பறையர், பாணர் ஆகிய குடிகளைச் சேர்ந்த சேவகன், இளமக்கள், இளையோர், ஆள், இளமகன், அடியாள், அடியார், மன்றாடி, தொறுவாளன் ஆகியோருக்கே பெரும்பாலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கிருந்து உயிர்நீத்த கோப்பெருஞ்சோழனுக்கும், போரில் வீரமரணம் அடைந்த அதியமானுக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது (புறம் 221,223,232). பிற்காலத்தில் இவை பள்ளிப்படையாக மாறியது. பெரும்பாலும் வீரர்களுக்கே நடுகல் நாட்டப்பட்டது. குறிப்பாக போருக்கு முதற்காரணமாக அமையும் ஆநிரைகவரும் வெட்சித்திணைக்கும், கவர்ந்த ஆநிரைகளை மீட்கும் கரந்தைத் திணைக்கும் உரிய நடுகற்களே மிகுதியாகும். கல் என்றாலே நடுகல்லையே குறிக்கும் பழக்கம் இருந்தது.

‘விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர்
நன்னிலை பொறித்த கல்’ (அகம் 179)
‘என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்ஐ
முன்நின்று கல்நின்றவர்’ (குறள் 771)
இவ்விடங்களில் நடுகல் கல் என வழங்கப்பட்டுளமையைக் காணுகிறோம்.
(கல் நடுவித்தார் மதியுளி – தருமபுரி நடுகல் கல்வெட்டு).

ஒரு காலத்தில் நடுகல்லை மட்டுமே தெய்வமாக வணங்கியுள்ளனர்.
‘ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பில் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே’ (புறம் 335)
என்பது மாங்குடிகிழார் பாடலாகும்.

இறந்த வீரனின் பெயரையும் பெருமையையும் கல்லில் பொறிப்பர் நடுகல்லுக்கு நீராட்டி நெய்பெய்து வாசனைப்புகை காட்டுவர். விளக்கேற்றுவர். பூக்களைச் சொரிவர். மாலை சூட்டுவர். மயிற்பீலி சாத்துவர். காப்புநூல் கட்டுவர். ஆட்டுக்கிடாய்களைப் பலியிடுவர். துடி, மணி ஒலிப்பர். எண்ணெய் பூசுவர். சிறு கலங்களில் கள் படைப்பர். துணிப்பந்தல் அமைப்பர். வில், வேல், வாளால் வேலி அமைப்பர். பெரும்பாலும் வழிகளில் நடுகல்லை நட்டனர். ஆழமாக நட்டனர். நடுகல்லை ஆள் என ஒரு யானை உதைத்தது. நடுகல் சாயவில்லை, யானையின் கால் நகம் உடைந்ததாம். போர்க்களத்தில் விழுப்புண் பட்டோர் நடுகல் அருகே வந்து புண்ணைக் கிழித்து உயிர் விடுவர். நடுகல்லை வணங்கினால் மழைவரும், அரசன் வெற்றி பெறுவான், பயிர் செழிக்கும், கால்நடை பெருகும், வீட்டுக்கு விருந்தினர் வருவர் என நம்பினர்.

தாழிகள்
தொல்லியல் ஆய்வில் மிகவும் சிறப்பிடம் பெறுவது தாழிகள் ஆகும் (Urns). தமிழ்நாட்டில் இவை பல வகைகளாகக் காணப்படுகின்றன. இவை கூர்முனைத் தாழிகள், கால்கள் உடைய தாழிகள், விலங்குருவத் தாழிகள் எனப் பலவகைப்படும்.

சங்க இலக்கியங்களில் இவை கலம், தாழி, கவிசெந்தாழி, ஈமத்தாழி, தாழியபெருங்காடு. முதுமக்கள் தாழி, மன்னர் மறைத்த தாழி எனப்பலவாறு அழைக்கப்பெறுகின்றன (அகம் 129, புறம் 228, 236, 256, 364, பதிற் 44). தாழிப்புதையல் 2500 ஆண்டுகட்கு முற்பட்ட ஒரு வழக்கமாகும், கி.பி. 2,3 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அவ்வழக்கம் மறைந்து விட்டது – தாழிகள் பல மிகப் பெரியவையாக இருந்த காரணத்தால்,
மா இருந்தாழி (நற் 271)
ஓங்குநிலைத்தாழி (அகம் 275)
கண்ணகன்தாழி (புறம் 228)
எனக் குறிக்கப்பட்டுள்ளன. இவை கைகளாலும் (Hand made), சக்கரங்களாலும் (Wheel made) செய்யப் பெற்றிருந்தன.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இறந்தான். மிகப்பெரும் புகழ்கொண்ட இவனுக்கு மிகப் பெரிய தாழி அல்லவா வனைய வேண்டும். உலகையே சக்கரமாகக் கொண்டு, இமய மலையையே மண்ணாக வைத்துப் பெரிய தாழியைவனைய வேண்டும். அது உன்னால் முடியுமா? என்று வேட்கோவனைப் பார்த்து வினவுகிறார், ஐயூர் முடவனார் என்னும் புலவர் (புறம் 228).
‘அன்னோன் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை யாயின் எனையதூஉம்
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே’
என்பது ஐயூர் முடவனார் பாடலாகும்.

கணவன் மனைவி இருவரையும் ஒன்றாகத் தாழியுள் அடக்கம் செய்ய வேண்டும். அதனால்,
‘வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
அகலிதாக வனைமோ’.
எனக் கூறுகின்றார் ஒரு புலவர் (புறம் 256).
தாழி வனைவோர் ‘கலம்செய் கோ’ எனப்பட்டனர்.

சங்ககாலச் சோழமன்னர்கள் தாழிப் புதையல் வழக்கத்தை ஏற்படுத்தினர் என்று மூவருலாக் கூறுகிறது.
பதுமக் கடவுள் படைப்படையக் காத்த
முதுமக்கட் சாடி முதலோன்’
என்று பண்டைச் சோழன் ஒருவன் புகழப்படுகின்றான். (குலோ உலா 12).

யவனர்
சங்ககாலத்தில் தமிழ்நாட்டோடு யவனர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். கிரேக்கர், ரோமானியர், எகிப்தியர், பாரசீகர், அராபியர் ஆகிய அனைவரையும் ‘யவனர்’ என அழைக்கும் வழக்கம் இருந்தாலும் பெரும்பாலும் ரோமானியரே மிகுதியாகத் தமிழகம் வந்தனர்.

மேற்குக் கடற்கரைக்கு மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம், சில விலங்குகள், பறவைகள் ஆகிய பல பொருள்களுக்காக வந்த ரோமானியர் பாலக்காடு, போளுவாம்பட்டிக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டுக்கு வந்து பல வண்ணக் கல்மணிகளை விரும்பி வாங்கினர். சோழநாடு, பாண்டிய நாட்டின் துறைமுக நகரங்கள் வரை சென்றனர். கிழக்குக்கரை முத்துக்களையும் பெற்றனர்.

ரோம் நாட்டவரின் ரெளலடெட், அரிட்டைன் என்ற உயர்வகைப் பானை ஓடுகள், அம்போரா என்னும் கூர்முனை மதுக்குடங்கள், ரோமானிய சுடுமண் பொம்மைகள், ரோம அரசரின் பொன், வெள்ளி, செம்பு நாணயங்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன. அகஸ்டஸ் (கி.மு. 44 – 14); டைபீரியஸ் (கி.பி. 14 – 37); நீரோ (கி.பி. 54 – 68) போன்ற ரோம் நாட்டு அரசர்களின் பெயரும் உருவமும் பொறித்த நாணயங்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன.

மிளகு யவனர்கட்கு மிகவும் பிடித்தமான பொருள். அதனை ‘யவனப்பிரியா’ என அழைத்தனர். யவனர் கப்பல்களில் பொன்னொடு முசிறிக்கு வந்து பொன்னைக் கொடுத்துவிட்டு கப்பலில் மிளகை ஏற்றிச் செல்வர்.
‘சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி’
என அகநானூறு (149) கூறும்.

‘யவனர் இயற்றிய வினைமாண் பாவை’ (நெடுநல் 101)
‘வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமாண் நல் இல்’ (முல்லை 61-62)
‘நயனில் வன்சொல் யவரைப் பிணித்து
நெய்தலைப் பெய்து கையிற் கொளீஇ’ (பதிற். பதிகம் – 2)
‘யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன் செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்க இனிது ஒழுகுமதி’ (புறம் 56)
என்பன சங்க இலக்கியம் குறிக்கும் யவனர் பற்றிய தொடர்களாகும். இத்தொடர்பு 2000 ஆண்டுகட்கு முற்பட்டதாகும்.

தொல்லெழுத்தியல்
பழங்காலக் குகைகளில் உள்ள சமணப்பாழிகளிலும், அகழ்வாய்வில் கிடைத்த பானை ஓடுகளிலும், பழங்காசுகளிலும், மோதிரங்களிலும், முத்திரைகளிலும், கற்களிலும் ஏறக்குறைய 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தொல்லெழுத்துக்கள் பல காணப்படுகின்றன. இவற்றைத் ‘தமிழி’ என அழைப்பர். கரூர் அருகேயுள்ள புகலூர் ஆறுநாட்டார் மலையில் பதிற்றுப்பத்து 7, 8, 9 ஆம் பத்திற்குரிய அரசர்கள் அதே வரிசையில் குறிக்கப்பட்டுள்ளனர்.
‘மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் (இ) ளங்
கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்’
என்பது ஆறுநாட்டார்மலைத் தமிழிக் கல்வெட்டாகும்.

மதுரை அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தை அந்துவன் பாடியதாகச் சங்க இலக்கியம் கூறுகிறது. அதே மலைக் குகையில் ‘அந்துவன் கொடுபித்தவன்’ என்ற 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிக் கல்வெட்டு உள்ளது. (அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை. அகம் 59)

திருக்கோவிலூரைச் சங்க இலக்கியம் ‘கோவல்’ என்று கூறும். மலையமான் ஆட்சிப்பகுதி. தகடூர் அதியமான் மலையமானை வென்று கோவலை அழித்தான் என்று அவ்வையார் பாடுகிறார் (புறம் 99). திருக்கோவிலூர் அருகில் உள்ள ஐம்பையில் அதியமான் சமண முனிவர்கட்குப் பாழி அமைத்துக் கொடுத்த செய்தி தமிழிக் கல்வெட்டொன்றில் கூறப்படுகிறது.

‘ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி’ என்பது ஜம்பைக் கல்வெட்டாகும். அசோகனின் பிராமிக் கல்வெட்டில் ‘ஸதியபுத்ரர்’ குறிக்கப்படுகின்றனர். ‘அதியாமகன்’ என்ற சொல்லே ஸதியபுதோ எனக் குறிக்கபட்டுள்ளது. எனவே தகடூர் அதியமான் மரபில் ஒருவன் அசோகன் காலத்தவன் என்பதில் ஐயமில்லை.
மாங்குளம் தமிழிக் கல்வெட்டில் ‘நெடுஞ்செழியன்’ என்ற பெயர் காணப்படுகிறது. அந்தை, ஆந்தை, நள்ளி, பிட்டன், கீரன், ஓரி, பரணன், சாத்தந்தை, பண்ணன், வண்ணக்கன் போன்ற சங்க இலக்கியங்களில் மட்டுமே பயின்று வரக்கூடிய பல சொற்கள் தமிழி என்ற தொல் எழுத்துக்களில் எழுதப்பட்டுக் கிடைத்துள்ளன. குறவன் (நற் 201), தித்தன் (புறம் 80), தாயன் (குறு 319), சாத்தன் (நற் 370), வேட்டுவன் (அகம் 36), குட்டுவன்கோதை (புறம் 54), கொல் இரும்பொறை (புறம்53), மாக்கோதை (புறம் 48), பெருவழுதி நற் 55) என்ற தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகளும், மோதிரங்களும், காசுகளும் தமிழ்நாட்டில் பெரும்பாலும் கரூர்ப் பகுதியில் கிடைத்துள்ளன. இவற்றின் எழுத்தமைதி கொண்டு இப்பெயர்கள் எறக்குறைய 2000 ஆண்டுகட்கு முற்பட்டவை என அறிகின்றோம்.

புலி முத்திரை
புகார் நகரின் துறைமுகத்தில் சங்ககாலத்தில் பொருள்களுக்குப் புலி முத்திரை பொறிக்கப்பட்டதாகப் பட்டினப்பாலை கூறிகிறது.
‘அளந்து அறியாப் பலபண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெரும் காப்பின்
வலியுடைவல் அணங்கின் நோன்
புலி பொறித்துப் புறம் போக்கி
என்பது பட்டினப்பாலைப் பகுதி (131 – 135). அவ்வாறு புலிச்சின்னம் பொறிக்கப் பயன்படுத்திய முத்திரையொன்று பூம்புகார் நகரில் அண்மையில் கிடைத்துள்ளது.

கடல் கடந்த சான்றுகள்
சங்கத் தமிழர் கடற்செலவில் தேர்ந்தவர்களாக விளங்கினர். கடல் கடந்து பல நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.
‘நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக’ (புறம் 66)

‘சினம் மிகு தானை வானவன் குடகடல்
பொலம்தரு நாவாய் ஓட்டிய அவ்வழி
பிறகலம் செல்கலாது’ (புறம் 126)
என்பன அதைப்பற்றிய சான்றுகளுட் சிலவாகும். பருவக் காற்றின் பயந்தெரிந்து 2000 ஆண்டுகட்கு முன்பு தமிழர் ‘கப்பலோட்டிய’ தமிழர்களாக வாழ்ந்துள்ளனர் என்பதை ‘வளிதொழில் ஆண்ட’ என்ற தொடர் சிறப்புடன் விளக்குகிறது.

தமிழ்நாட்டில் வெளிநாட்டார் குறிப்புகளும், வெளிநாட்டார் தொல்பொருள்களும் கிடைத்துள்ளன. பிற வெளிநாடுகளில் இதுவரை சங்காலத் தமிழகச் சான்றுகள் பெரும்பாலும் அகப்படாமல் இருந்தன. அண்மைக் காலத்தில் மேற்கு நாடுகளிலும், கிழக்கு நாடுகளிலும் சங்ககாலச் சான்றுகள் பல கிடைத்துள்ளன. எகிப்து நாட்டில் நைல்நதிக் கரையில் உள்ள ‘குவாசிர் அல் காதிம்’ என்னும் ஊரில் அமெரிக்க நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் கண்ணன், சாத்தன் என்ற சங்ககாலத் தமிழி எழுத்துப் பொறிப்புக்கள் கிடைத்துள்ளன.

எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் லெய்டன் பல்கலைக்கழகத்தார் நடத்திய அகழ்வாராய்ச்சியில் ‘கொற்ற பூமான்’ என்ற சங்ககாலத் தமிழி எழுத்துக்கள் பொறித்த மதுச்சாடி கிடைத்துள்ளது. இவையிரண்டும் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துப் பொறிப்புக்கள் ஆகும்.

வியன்னா அருங்காட்சியகத்தில் உள்ள ‘பேபிரஸ்’ எனப்படும் பண்டைய தாளில் எழுதப்பட்ட கி.பி. முதல் நூற்றாண்டு ஆவணத்தில் முசிறி வணிகன் ஒருவன் கப்பலில் ஏற்றிச் சென்ற வாசனைப் பொருள், தந்தப் பொருள், துணிகள் பற்றிய செய்திகளும். அவற்றின் எடையும் கூறப்பட்டுள்ளது. ஒரு கப்பலில் 150 வணிகரின் பொருள்கள் இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.

தாய்லந்து நாட்டில் கிளாங்தோம் நகரில் நடத்திய அகழாய்வில் சோழரின் சதுர வடிவான புலிபொறித்த ஒரு செப்புக்காசும், 8 x 4 சென்டி மீட்டர் அளவுள்ள தங்கம் மாற்றுரைத்துப் பார்க்கும் பட்டைக்கல் ‘பெரும்பத்தன் கல்’ என்ற சங்ககாலத் தமிழிப் பொறிப்போடு கிடைத்துள்ளது. இந்த அயல்நாட்டுச் சான்றுகள் அனைத்தும் 2000 ஆண்டுகட்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

-யாழறிவன்