சித்தமும், ஆயுர்வேதமும்.

சித்த மருந்துஆயுஷோ வேத: ஆயுர் வேத : வேதம் போலவே ஈசுவரன் மூச்சுக் காற்றிலிருந்து வேதத்துடன் சேர்ந்து வெளி வந்துள்ளதால் ஆயுர்வேதம் எனப்படுகிறது. ஆயுர்வேதம்  என்ற வசனத்தில் ஆயுஸ்ஸின் அர்த்தம் என்ன என்று பார்ப்போம்.

சூட்சமம், ஸ்தூலம் என்று ஸகல ஜீவராசிகளடைய உடல் இரு விதம். சூட்சம சரீரத்தை நம்மால் பார்க்க இயலாது. ஸ்தூல சரீரம் நாம் அனுபவிக்கும் பெரிய சரீரம். சரீர – இந்திரியம் (ஐம்புலன்கள்) – மனஸ் – ஆத்மா ஆகிய நான்கு திரவியங்களுடைய கர்மவசத்தினால் ஏற்பட்டுள்ள சேர்க்கையானது ஆயுஸ் எனப்படுகின்றது. இந்த ஸ்தூல தேகத்தைவிட்டு ஜீவாத்மா வெளியேறுவதைத்தான் மனிதன் மரித்தான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் மனிதப் பிறவியை அடைந்துள்ள ஜீவாத்மா மரணம் அடையவில்லை. அவன் எடுத்துக் கொண்ட ஸ்தூல சரீரம்தான் மரித்தது. கிழிந்த வேஷ்டியை எறிந்துவிட்டு வேறு வேஷ்டியை எடுத்துக் கொள்வது போல வயதாகிப் போன ஸ்தூல உடலைவிட்டு வேறு ஸ்தூல உடலை ஜீவன் அடைகிறான். இதைத்தான் மறுபிறவி, புனர்ஜன்மம் என்று பேசுகிறோம். வேறு ஒரு ஸ்தூல உடலை அடையும் வரை ஜீவாத்மா சூட்சும சரீரத்துடன் சேர்ந்தே இருக்கிறான். ஆதலால், ஆயுஸ் எனப்படும் சரீர – ஆத்மாவின் சேர்க்கை ஞானம் ஏற்பட்டு ஆத்மாவிற்கு ஸம்ஸாரததிலிருந்து மோட்சம் சித்திக்கும் வரையில் வரும் எல்லா ஜன்மங்களிலும் தொடர்ந்து ஆத்ம சரீரங்களுடைய சம்பந்தம் ஸ்தூல சூட்சும ரூபமாகத் தொடர்கிறது.

ஆயுஸின் அர்த்தம் வரும் பிறவிகளுக்கும் என்று நிரூபிக்கப்பட்டது. இந்த சித்தாந்தப்படி, ஆயுஸ்ஸுக்கு வந்த வியாதிகளைப் போக்கும் சிகிச்சையையும், வராமல் காப்பாற்றும் வழிகளையும் போதிக்கும் சாஸ்திரம் ஆயுர்வேதம். இந்தக் கொள்கை கொண்டுள்ள ஆயுர்வேதமானது. மனிதரின் இந்தப் பிறவியில் உள்ள சரீரத்தின் பாதுகாப்பையும், வியாதி சிகித்சைகளை போதிப்பதுடன் மட்டும் நிற்கவில்லை. இந்த மனிதனுக்கு வரும் பிறவிகளிலும் நோய்கள் ஏற்படாமலிருக்கும்படியாக இந்தப் பிறவியிலேயே இதே ஸ்தூல சரீரத்திலேயே செய்கிறது என்ற ஆயுர்வேதத்தின் விசேஷப் பெருமையை விளக்குகின்றது ஆயுர்வேதத்தின் பெயர். மற்ற மருத்துவ முறைகள் எதுவும்ட மனிதனுக்கு புனர்ஜன்மம் உண்டு என்பதையே அறியவில்லை. அப்படியிருக்க, அடுத்த ஜன்ம சரீரத்தின் பாதுகாப்பைப் பற்றி கேள்வி ஏதுமில்லை. இந்த சரீரத்திலேயே வரும் ஜன்மாவிற்கும் நோய்கள் வராமல் காப்பாற்ற முடியும் என்றறிந்து அதையும் உபதேசிக்கின்றது ஆயுர்வேதம். ஸ்தூல சரீர சிகித்ஸையில் ஆயுர்வேதம் சூட்சமமாக உள்ள வாத பித்த கபங்களையும் கருத்தில் கொண்டு சிகிச்சை அளிக்கின்றது.

‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ உலக மக்கள் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற ஒர் உயர்ந்த எண்ணத்தை மட்டுமே கொண்டிருந்த மகான்களான முனிவர்களால் எழுதப்பட்ட மருத்துவ முறைகள்தான் சித்தமும், ஆயுர்வேதமும். பூத உடலை ஜிவாத்மா அணிந்த கொண்டிருப்பதன் லட்சியம் அறம்- பொருள் – இன்பம் – வீடு (மோட்சம்) ஆகியவற்றைப் பெறுவதற்காகத்தான் இந்த நான்கிற்கும் இடையூறு விளைவிக்கின்ற நோய்களால் மக்கள் துன்புற்றிருக்க, அதைக் கண்டு வருந்திய முனிவர்கள் மூலிகைகளை முக்கியமாகக் கொண்ட நோய் தீர்க்கும் மருந்துகளை நமக்கு உபதேசித்தனர். எத்தனை யுகங்கள் வந்தாலும் ஆதியும் அந்தமுமில்லாத இந்த சித்த ஆயுர்வேதம் என்னும் அமுதத்தை தன்னலம் ஏதுமின்றி மக்களின் மேன்மைக்காக நமக்கு எடுத்துரைத்த முனிவர்களுக்கு நாம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். இந்த இரு வைத்திய முறைகளுமே சாதாரண மனிதர்களால் இயற்றப்படாததால் இவை இரண்டுமே மிகச் சிறந்த மருத்துவ முறைகள்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

-Meera Tharshan