உடல் எடையைக் குறைக்கும் தேன்

தேன்உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இதற்கு கடைகளில் எத்தனை மருந்துகள் இருந்தாலும், அதனால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ, அதனால் பக்க விளைவுகளை கட்டாயம் சந்திக்கக்கூடும். எனவே எப்போதும் இயற்கை வழியை பின்பற்றுவது தான் நல்லது. அதிலும் ஒவ்வொருவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் மருத்துவ குணம் அதிகம் நிறைந்த பொருளான தேனைக் கொண்டே எளிமையாக உடல் எடையைக் குறைக்கலாம். முக்கியமாக இயற்கை வழியைப் பின்பற்றும் போது, அதனால் கிடைக்கும் நன்மைகளானது தாமதமாகவே கிடைக்கும். ஆனால் அந்த நன்மையானது நிரந்தரமானது.

தேனைக் கொண்டு எப்படி உடல் எடையைக் குறைப்பதற்கு ஒருசில வழிகள் உள்ளன. அந்த வழிகளின்படி தேனை எடுத்து வந்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்க முடியும்.

கறுவாத்தூள் மற்றும் தேன்
கறுவாத்தூளுடன் தேனை சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளும்போது, அதனால் செரிமானம் சீராக நடைபெறுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, அதன் மூலம் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும். அதற்கு செய்ய வேண்டியது ஒரு தேக்கரண்டி கறுவாத்தூள் மற்றும் 1 தேக்கரண்டி தேனை ஒன்றாக கலந்து சாப்பிட வேண்டும் அல்லது கறுவாத்தூள் மற்றும் தேன் கொண்டு செய்யப்படும் தேனீர் மூலமும் கொழுப்புக்களைக் கரைக்கலாம்.

திரிபலா மற்றும் தேன்
திரிபலா என்பது ஒரு பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது செரிமானத்தை மேம்படுத்தி, கழிவுகளை வெளியேற்றி, எடையைக் குறைக்க உதவும். அதிலும் இந்த திரிபலாவை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிடும் போது, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, எடை குறைய ஆரம்பிக்கும். 1 கரண்டி திரிபலாவை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் தேன் சேர்த்து கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

வேப்பம்பூ மற்றும் தேன்
இது மற்றொரு சிறப்பான நிவாரணி. வேப்பம்பூவை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால், உடல் எடை விரைவில் குறையும். அதற்கு சிறிது வேப்பம்பூவை தட்டி, அதில் தேன் சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால் இன்னும் சிறப்பான பலனைக் காணலாம்.

ரோஜாப்பூ மற்றும் தேன்
ரோஜாப்பூவின் இதழை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். சிறிது ரோஜாப்பூ இதழை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி, அதில் தேன் சேர்த்து தினமும் ஒருமுறை குடிக்க வேண்டும். இப்படி ரோஜாப்பூ இதழை தேனீராக போட்டுக் குடித்தாலும் உடல் எடையைக் குறைக்கலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை
இது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த கலவையை எடுத்துக் கொண்டால், செரிமானம் மேம்படுவதோடு, உடலில் இருந்து டாக்ஸின்களும் வெளியேற்றப்படும். அதற்கு நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வர வேண்டும். இது மிகவும் சிறப்பான உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் பானமாகும்.

-L Karthikeyan