வடக்குபக்கம் தலைவைத்து படுக்க கூடாது

மகிழ்ச்சியா இருக்கவடக்கு பக்கம் தலைவைத்து படுக்ககூடாது என்பார்கள் – காரணம் என்ன? இதைபற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

காந்தம், உலோகப் (இரும்பு, செப்பு போன்ற) பொருட்களையும், காந்ததன்மை கொண்ட பொருட்களையும் தன்வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறுவயதில் பாடசாலைகளில் செய்த ஆராய்ச்சியின் மூலம் அறிந்து கொண்டவைகளாகும்.

காந்ததிற்கு இரண்டு துருவங்கள் உண்டு – வட துருவம் மற்றும் தென் துருவம். காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள்ளும் (தள்ளும்), எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் (இழுக்கும்) தன்மைகளைக் கொண்டதாகும்.

எனவே, நாம் ஆய்வு கூடத்தில்  ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன் காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால் அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும் காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறு சிறு காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது.

பூமி எப்படி காந்தம் ஆனது?
சூரியனின் வெப்பத்தால் பூமியின் கிழக்குபகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்குபகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான மின்னோட்டம் கிழக்குதிசையில் இருந்து மேற்குதிசைக்கு சூரியனால் உருவாக்கப்படுகிறது. எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும் வடக்குதிசை, நேர்மின்னோட்டதையும் (Positive Current), இடதுபுறம் இருக்கும் தெற்குதிசை, எதிர் மின்னோட்டதைம் (Negative Current) பெறுகிறது. இதனால் பூமி ஒருபெரிய காந்தம் ஆகிறது.

மனிதன் எப்படி காந்தப்பொருள் ஆனான்?
மனிதஉடலில் ஓடும் ரத்தம் வெள்ளைஅணு, சிவப்புஅணு மற்றும் பல இரசாயன பொருட்களை கொண்டது. இதில் சிவப்புஅணுவில் இரும்புசத்து உள்ளது. இந்த சிவப்புஅணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்புதன்மைக்கு உள்ளாகிறான்.

எப்படி தூங்கவேண்டும்?
பூமிக்கு நான்கு துருவங்கள் உண்டு. வடதுருவம் நேர்மின்னோட்டம் உடையது. தென்துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில்இருந்து தெற்கிற்கும், தெற்கில்இருந்து வடக்கிற்கும் செல்லும். அதேபோல் மனிதனின் தலை நேர்மின்னோட்டம் கொண்டது. கால் எதிர்மின்னோட்டம் கொண்டது. நாம் தெற்குபக்கம் தலைவைத்து, வடக்குபக்கம் கால்நீட்டி படுக்கும்போது, பூமியின் நேர்மின்னோட்டம் மனிதனின் எதிர்மின்னோட்டத்துடனும் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சீராக இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாகஇருக்கும். இதனை மாற்றி செய்யும்போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பலவேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும். எனவே தெற்கில் தலைவைத்து படுப்பது உத்தமம்.

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!

உறக்கம் என்பது நாள்தோறும் உழைத்து களைத்த உடலுக்கு அளிக்கும் ஓய்வு தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருகின்றன. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, சரியாக தூங்காதவர்களே பிரச்சினைகளில் ஈடுபடுகிறார்கள்’ என்று கூறுகிறது.

தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை.

தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இரவு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

எந்த திசையில் தலைவைத்து படுப்பது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உறக்கமும் திசைகளும்

கிழக்கு திசையில் தலை வைத்துப் படுத்தால், ஒருவன் தான் பிறந்த ஊரில் இருக்கும் போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பானோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியை தருமாம்.

மேற்கு திசையில் தலைவைத்துப் படுப்பவர்கள் சொந்த ஊரைவிட்டு வெளியூருக்கு வந்து வாழ்க்கை நடத்துபவர்களுக்கு கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை தருமாம்.

மாமியார் வீட்டில் தங்கும் மகிழ்ச்சியைத் தருவது தெற்கு திசை.

ஆனால் வடக்கில் தலை வைத்து உறங்குவது நல்லதல்ல என்கின்றன சாஸ்திரமும், விஞ்ஞானமும்.

காந்த ஈர்ப்பு விசையானது வடக்கில் தலை வைத்து உறங்குபவர்களின் ஓய்வினை குறைத்து விடுகிறதாம். எனவேதான் வடக்கு திசை ஆகாது என்கின்றனர்.

நோயாளிகளுக்கு ஏற்ற திசை நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவில் குணம் பெற கிழக்கு திசையில் தலைவைத்து உறங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மேற்கு பரவாயில்லை, தெற்கு திசை ஆயுள் பெருகும். வடக்கு கூடாது என்று மருத்துவ நூலில் கூறப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியாக இருக்க

உறங்கும் போது இடது பக்கமாக திரும்பி படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது புறமாக ஒருக்களித்து தூங்கும் போது, வலதுபுற நாசி வழியாக மூச்சுக் காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும். உடம்புக்குத் தேவையான வெப் பம் கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குணமாவதாக கூறுவார்கள்.

இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி, வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.

படுக்கையில் வலது பக்கம் திரும்பி படுத்து தூங்குபவர்களைவிட, இடது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாகவும், குறைந்த மன அழுத்தத்துடன் இருப்பார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படுக்கையில் இடது பக்கம் திரும்பி தூங்கும் பழக்கம் உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் அதிக மகிழ்ச்சியாகவும், நேர்மறையான எண்ணங்களுடன் இருக்கின்றனர். வேலைப்பளு மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை திறம்பட கையாள்வதுடன், அதிக மன உறுதியுடன் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டள்ளது.

அதிகம் சம்பாதிக்கலாம்

வலது பக்கம் திரும்பி தூங்குபவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், மோசமான மனநிலை ஏற்படுவதால் தூக்கத்தில் அடிக்கடி எழுவதாகவும் கூறினர். இதற்கிடையில், இடப்பக்கம் தூங்குபவர்கள் மகிழ்ச்சியாக வேலை செய்தாலும், வலப்பக்கம் தூங்குபவர்கள் அதிகம் சம்பாதிக்க முற்படுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கவிழ்ந்து படுக்க கூடாது கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. குப்புறப்படுக்கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாதா?

வடக்கே தலை வைத்து உறங்கக்கூடாது, யமன் பிடித்துக்கொண்டு போய்விடுவான் என்று பல பூதாகரக் கதைகள் கேட்டிருப்பீர்கள். இது போன்று எழுதப்படாத நியதிகள் பல நம் கலாச்சாரத்தில் இன்றும் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதென்ன பகட்டா இல்லை நம்மை மிரளச் செய்யும் தந்திரமா? விளக்குகிறார் சத்குரு…

இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம்.

மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.

பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில், உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது. ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம் வலிமையானது. அதனால்தான் வலிமையான காந்த ஈர்ப்பின் காரணமாக முழுக் கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.

அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7, 8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4 அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள். வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான், பெரும்பாலான நாடுகள் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கின்றன.

இரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில் இரும்பும் ஒன்று. ஒருவேளை உங்களுக்கு இரத்தச்சோகை இருந்தால், மருத்துவர் உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார். அதனால், ரத்தம் மூளையை நோக்கி இழுக்கப்படும். அது நல்லதல்ல. அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக் பாதிக்கும்.

குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது. மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும். கிழக்கே தலை வைத்துப் படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப் படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை.

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள், மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள். அன்று கடல் அலைகள்கூட உயர உயர எழும்புகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.

இரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் பாதிப்படைகிறீர்கள். வடக்கே தொடர்ந்து தலைவைத்துப் படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என கர்நாடகாவில் சொல்வதுண்டு. தொடர்ந்து நீங்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான் அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்!

 

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்குதூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான கலங்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி (குறிப்பிட்ட வயது வரை) பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

‘சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்’

இதன் விளக்கம் :  இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் (உடலில்) சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரை இல்லாதவர்களுக்கு பற்பல நோய்கள் கவ்விக் கொள்ளும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்தவதால் உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

-சுபா ஆனந்தி
-tamil.boldsky.com

தொகுப்பு – thamil.co.uk