சித்த மருத்துவத்தில் நோய்த்தேர்வு முறை – பகுதி 3

சித்த மருத்துவம்-thamil.co.ukநோய்த் தேர்வு
சித்த மருத்துவத்தில் ‘நோய் நாடி’– நோயைக் கண்டறியும் தேர்வுமுறை சிறந்து காணப்படுகிறது. நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன் நோயைக் கண்டறிய வேண்டும் என்பதே மருத்துவக் கொள்கை. நோயைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் முறை ‘நோய்த் தேர்வு முறை’ எனப்படும்.

நோயைக் கண்டறிவதற்காக ஒவ்வொரு வகை மருத்துவத்திலும் வெவ்வேறு முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சித்த மருத்துவத்தில் காணப்படும் நோய்த் தேர்வு முறை, பிற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் சிறந்த தேர்வு முறையாகவும் கருதலாம்.

எண்வகைத் தேர்வு முறை
சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் தேர்வு முறைகள் எட்டுவகைப்படும். அவை நாடி, பரிசம், நாக்கு, நிறம், மொழி, விழி, மலம், மூத்திரம் என்பன. இவை எட்டும் மருத்துவனின் கருவிகளாகக் கூறப்படுகின்றன.

‘நாடிப்பரிசம் நாநிறம் மொழிவிழி
மலம் மூத்திரமிவை மருத்துவ ராயுதம்’
என்றும்,

‘மெய்க்குறி நிறந்தொனி விழிநா விருமலம் கைக்குறி ‘ என்றும் குறிப்பிடுவர்.

எண்வகைத் தேர்வு என்பது பிணியை அறியும் முறையைக் குறிக்கிறது. உடலைப் பிணிப்பது நோய் என்பதனால், நோயைப் பிணி என்னும் சொல்லாலும் குறிப்பிடுவர். நோயறிதல் என்பது, நோயைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முறை எனலாம்.

நாடி
நாடி, தாது என்னும் பெயராலும் வழங்கப்படும். நாடி, வாதம், பித்தம், ஐயம் ஆகிய பொருளில் ஆளப்படும். உயிர்த்தாது உடற்தாதுகளைக் குறிப்பிடவும் தாது என்னும் சொல் பயன்படும். சுருங்கக் கூறின், நாடியைக் குறிக்கும் தாது, உடலில் உயிர் தங்கியிருப்பதற்குக் காரணமான ஆற்றல் எதுவோ அதுவே நாடி அல்லது தாது எனப்படும்.

தாது ஒன்றாயினும் அதன் தொழில் காரணமாக மூன்று பிரிவுகளாக அல்லது ஒன்றாகக் கூடிய மூன்று பிரிவுகளாகக் கருதப்படுகின்றன. அவையே வாதம், பித்தம், ஐயம் எனப்படும். இவையே அண்டரெண்டமெல்லாம் நால்வகைப் பிறப்பு, எழுவகைத் தோற்றம், எண்பத்தி நான்கு நூறாயிரமாகிய எவ்வுயிர்க்கும் பொருந்தும் என்பர்.

நாடிகளின் தொகை
உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கை 72,000 ஆகும். அவற்றில் கரு உருவாகும்போதே உடன் தோன்றுகின்ற குண்டலி என்னும் மூலத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு தோன்றுகின்ற நாடிகள் பத்து ஆகும்.

நாடிகளின் எண்ணிக்கை
நாடிகளின் தொகை 72,000 ஆனாலும் அவற்றில் பெருமைதரும் நாடிகள் பத்து. அவை இடகலை, பிங்கலை, சுழிமுனை, காந்தாரி, குகு, சங்கினி, அசனி, அலம்புடை, புருடன், சிங்குவை என்பன. இப்பத்து நாடிகளிலும் மேலும் சிறந்தனவாகக் கருதப்படுவன மூன்று. அவை இடகலை, பிங்கலை, சுழு முனை என்பன.

நாடிகளும் இயங்கும் இயக்கமும்
நாடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடங்களில் பொருந்தி ஒவ்வொரு முறையில் இயங்கிக் கொண்டிருப்பது தெரியவருகிறது.
1. இடகலை – வலக்காலின் பெருவிரலிருந்து கத்தரிக்கோல் போல இடது மூக்கைச் சென்றடையும்.
2. பிங்கலை – இடதுகாலின் பெருவிரலிருந்து கத்தரிக்கோல் போல வலது மூக்கைச் சென்றடையும்.
3. சுழுமுனை – மூலாதாரத்தைத் தொடர்ந்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாய் நடுநாடியாக சிரசு வரை முட்டி நிற்கும்.
4. சிங்குவை – உள் நாக்கில் நிற்கும்.
5. புருடன் – வலது கண்ணில் நிற்கும்.
6. காந்தாரி – இடது கண்ணில் நிற்கும்.
7. அசனி – வலது காதில் நிற்கும்.
8. அலம்புருடன் – இடது காதில் நிற்கும்.
9. சங்குனி – குறியில் நிற்கும்.
10. குகு – அபானத்தில் நிற்கும்
என்று நாடிகள் ஒவ்வொன்றும் உடலில் பொருந்தி இயங்கும் இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வாயுக்கள்
நாடிகள் பத்து என்று உரைக்கப்பட்டதைப் போல, வாயுக்களும் பத்து என்பர். நாடிகளின் இயக்கத்துடன் இணைந்து வாயுக்களும் இயங்குவதால், நாடிகளைப் போல வாயுக்களும் சிறப்புடையவை யாகக் கருதப்படும்.

வாயுக்கள் பத்து வருமாறு
பிராணன், அபானன், வியானன், உதானன், கூர்மன், தேவதத்தன், சமானன், நாகன், கிரிகரன், தனஞ்செயன் என்பனவாகும்.

வாயுக்களின் இயக்கம்
நாடிகளைப் போல வாயுக்கள் உடலில் ஒவ்வோர் இடத்தில் அமைந்து இருப்பதுடன் ஒவ்வொரு தொழிலைச் செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றன.

வாயுக்களின் இயக்கம் விபரம்
1. பிராணன் – மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு இடகலை, பிங்கலை இவற்றின் நடுவாகச் சென்று சிரசை முட்டி, மூக்கின் வழியாக வெளியே பாயும். நெஞ்சில் நின்று ஓடும்.
2. அபானன் – மலநீர்களைக் கழிக்கும்.
3. வியானன் – உணவின் சாரத்தை உடல் முழுவதும் பரவச்செய்து வலிமையளிக்கும்.
4. உதானன் – கழுத்தில் நின்று உணவு, நீர் இவற்றின் சாரத்தை உடல் முழுவதும் பரவச் செய்து வளர்க்கும்.
5. கூர்மன் – கண்ணை இமைக்கச் செய்யும்.
6. தேவதத்தன் – கொட்டாவி, உடம்பு முறுக்கலை உண்டாக்கும்.
7. சமானன் – நாடியுடன் கூடிய உணவைச் செரிக்கச் செய்யும்.
8. நாகன் – மனத்தில் கலைகளை உண்டாக்கும்.
9. கிரிகரன் – தும்மலை உண்டாக்கும்.
10. தனஞ்செயன் – உயிர்போன பின்னரும் சிரசில் நின்று உடலை வீங்கச் செய்யும். இதுவே இறுதியில் மண்டையைக் கிழித்துக் கொண்டு வெளியே போகும்.

பிராணன் என்னும் வாயு மூக்கின் வழியாக உள்ளே சென்று, சிரசில் முட்டி, நெஞ்சின் வழியாக மூலாதாரம் சென்று திரும்பி மீண்டும் மூக்கின் வழியாக வெளியே வரும். மூக்கின் வழியாக உள்ளே செல்லும் போது பன்னிரண்டு அங்குல மூச்சுக் காற்று உள்ளே செல்லும்; வெளியே வரும் போது நான்கு அங்குலம் பாழாகும் என்பர். இவ்வாறு, பிராணன் என்னும் வாயு நாழிகை ஒன்றுக்கு முன்னூற்று அறுபது முறையும், நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு முறையும் மூச்சாக இயங்கும். இவ்வாறு இயங்கும் மூச்சுக் காற்றில் 7200 மூச்சு வெளியே வந்து பாழாகிப் போகிறது. இப்பாழ் நிகழாமல் மூச்சுப் பயிற்சியான பிராணாயாமம் மூலம் உள்ளே சென்ற மூச்சுக் காற்றை உள்ளே இருத்திக் கொண்டால் மரணமில்லை என்பர்.

உயிர்த்தாதுகள்
நாடிகள், வாயுக்கள் போலத் தாதுகள் உடலை இயக்கும் ஆற்றல்களாக அமைந்துள்ளன. இத்தாதுகள் உடலில் குறைந்தால் உடலின் இயக்கத்தில் குற்றம் நேரும் என்பதால் இவை உயிர்த்தாதுகள் என அறியப்படும். அவை, இரசம், இரத்தம், தசை, கொழுப்பு, என்பு, மச்சை, விந்து என்பனவாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையாக உடலில் இயங்குகின்றன.
1. இரசம் – உடலுக்கும் உள்ளத்துக்கும் நிறைவு தரும்.
2. இரத்தம் – உயிரைக் காக்கும்.
3. தசை – உடலைத் தாங்கும், அசைவு, பலந்தரும்.
4. கொழுப்பு – உடலிலுள்ள தசைச் சந்துகளையும் என்புச் சந்துகளையும் தூர்த்து நிரப்பும். நெய்ப்பசை யூட்டும்.
5. என்பு – உடலை உயர்த்தி நிறுத்தித் தாங்கும்.
6. மச்சை – என்புத் துளைகளில் நிரம்பும்.
7. விந்து – இனப் பெருக்கத்தை ஏற்படுத்தும்.
என்று ஏழு தாதுக்களின் இயக்கம் உரைக்கப்பட்டது. இவற்றினால் தாதுகள் உடலுக்கு எந்த அளவுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகின்றன என்பது விளங்கும்.

நாடி, வாயு, தாது இவற்றுக்குள்ள தொடர்பு
நாடிகள் பத்துள் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் சிறப்புடையன. வாயுக்களை மேற்கண்ட மூன்று நாடிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். இடகலை வாத நாடியாகவும், பிங்கலை பித்த நாடியாகவும், சுழுமுனை ஐய நாடியாகவும் குறிப்பிடப்படும். வாயுக்கள் பத்துள் அபானன், பிராணன், சமானன் ஆகிய மூன்றும் வாதம், பித்தம், ஐயம் ஆகிய நாடிகளுடன் இணைந்திருக்கும். அதேபோல, தாதுகள் ஏழின் குணங்களையும் நலன்களையும் அறிய வேண்டுமானால், வாத பித்த ஐய நாடிகள் எவ்வாறு இயல்பாகவும் இயல்புக்கு மாறாகவும் இயங்குகின்றன என்பதைக் கொண்டே அறிந்திட இயலும். எனவே, நாடி, வாயு, தாதுகள் ஆகியவை உடலை இயக்கவும், காக்கவும், தாக்கவும், அழிக்கவும், ஆக்கவும் காரணிகளாக அமைகின்றன என்பது பெறப்படுகிறது. இவற்றின் இயக்கம் சீராகவும், முறையாகவும் அமைந்தால் உடல் நோயற்று இருக்க வகையேற்படும். அவை சீராக அமையாமல் முறை தவறினால் நோயோ நோய்க்குரிய பிற குற்றங்களோ உடலுக்கு நேர வழியேற்படும்.

நாடிகளில் மூன்று
நாடிகளில் வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்று நாடிகள் சிறப்பாகக் கூறப்படுகின்றன. இம்மூன்று நாடிகள் உடலுக்கு உற்ற நோய்த் துன்பத்தினைக் கணித்தறிய உதவும்.
‘ மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று ‘
என்னும் திருக்குறள், மூன்று நாடிகள் குறைந்தாலும் மிகுந்தாலும் நோயை உண்டாக்குமென்று உரைக்கக் காண்கிறோம். அவ்வாறே, மருத்துவ நூல்களும் வாதம் முதலாக உடைய மூன்று நாடிகளாலும் நோய்கள் தோன்றும் என்கின்றன.

மூன்று நாடிகளும் உடம்பிலிருந்து வெவ்வேறு நற்றொழில்களைச் செய்யும் இன்றியமையாக் கூறுகளேயன்றி, நோய்களல்ல. மூச்சும் பேச்சும் உட்பொருள் இட மாற்றமும், வெறியேற்றமும், தனித்தும், பிற தாதுகளோடு கூடியும் நிகழ்த்துவது வாதத்தின் தொழில்கள்; உண்ட பொருளின் செரிமானத்திற்கு உதவுவது பித்த நீர்; தசைகளின் மழமழப்பான இயக்கத்திற்கு உயவு நெய் போல் பயன்படுவது ஐயம். இவை, உணவின் செயல்களினாலும், ஒவ்வாமையாலும், இயற்கை மாறுபாட்டினாலும், மிகுதலும், குறைதலும் நேரும் பொழுது, அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும்.

மேலை நாட்டு மருத்துவர்கள் வாதம் முதலிய மூன்று நாடி களையும் இரத்தம், ஐயம், பித்தம், கரும்பித்தம் என நால்வகை நீரகங்களாகப் பகுப்பர் என்றதனால், மேலை நாட்டு அறிஞர்களும் மருத்துவ வல்லுநர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் சித்த மருத்துவ முன்னோர்களால் நாடிமுறைகள் அறியப்பட்டிருக்கின்றன.

நாடிகளின் செயல்கள்
நாடிகள் மூன்றும் உடலைக் காக்கவும், அழிக்கவும் செய்ய வல்லன என்பதை மருத்துப் பாரதம் விளக்குகிறது. வாதம் படைப்புத் தொழிலுக்கும், பித்தம் காக்கும் தொழிலுக்கும், ஐயம் அழிக்கும் தொழிலுக்கும் உடையன.
“சூழ்ந்தது சுக்கிலத்திற் சுரோணிதங் கலக்குமன்று
பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திய குமிழி போல”
என்று, மூன்று நாடிகளும் உயிரின் கருதோன்றும் போதே உயிரோடு சேர்ந்தே தோன்றுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மருத்துவர்கள் நாடிகளைக் கண்டறிந்து, ஆராய்ந்து, நோய்களை அறிந்திடக் கூடிய இடங்களாகப் பத்து இடங்கள் குறிப்பிடப்படுகிறது. அவை மறைவிடம், குதிக்கால், சந்து, உந்தி, கை, மார்பு, கழுத்து, புருவமத்தி,காது, மூக்கு ஆகிய பத்து இடங்களைச் சார்ந்த உறுப்புப் பகுதி நரம்புகளில் மூன்று நாடிகளும் நடந்து கொண்டிருப்பதனால், அவ்விடங்களில் நாடியைக் கண்டு உடலின் குண நலனை ஆராயலாம் என்றுரைக்கப்படுகிறது.

நாடிகளை அறியுமிடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஏனெனில் நாபிக் கூர்மமானது பெண்களுக்கு மேல் நோக்கியும், ஆண்களுக்குக் கீழ் நோக்கியும் இருக்கின்றமையால், கைகளில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடு தோன்றும். அதனால், ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் நாடி பார்க்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நுட்பமான அறிவியல் உண்மையாகும்.

நாடிகளை ஆராயும்போது, கையின் பெருவிரலுக்குக் கீழே ஒரு அங்குலத்திற்கும் அப்பால் மூன்று விரல்களால் அழுத்திப் பார்க்க, முதல் விரலான ஆள்காட்டி விரலில் வாத நாடியும், இரண்டாம் விரலான நடுவிரலில் பித்த நாடியும், மூன்றாம் விரலான மோதிர விரலில் ஐய நாடியும் அறியச் செய்யும்.

நாடி வேளை நேரம்
வாதம் பகலும் இரவும் 6 10 மணி
பித்தம் பகலும் இரவும் 10 2 மணி
கோழை (ஐயம்) பகலும் இரவும் 2 6 மணி
என்று நாடிகள் நடக்கும் வேளைகள் கணித்தறியப்பட்டுள்ளன. இவ்வாறு நாடிகள் நடைபெறாமல் தொந்தமானாலோ, மாறுபட்டாலோ நோயோ மரணமோ உண்டாகுமென்று உணர்த்தப்படுகிறது.

நாடிகளும் காலமும்
‘காலையில் வாத நாடி கடிகையில் பத்தாகும்
பாலையில் பித்தநாடி பகருச்சி பத்தாகும்
மாலையாம் சேத்துமநாடி மதிப்புடன் பத்தாகும்’

பகற்பொழுதில் உதயம் முதல் பத்து நாழிகை வாதமும், அதன் பின் பகல் பத்து நாழிகை பித்தமும், மாலை பத்து நாழிகை ஐயமும் இவற்றிற்குரிய காலமாகும். அஃதேபோல், ஞாயிறு மறைவிற்குப்பின் முன்னிரவு பத்து நாழிகை வாதமும், அதன்பின் நல்லிரவு பத்து நாழிகை பித்தமும், பின்னிரவு பத்து நாழிகை ஐயமும் நாடிகள் இயங்கும் காலம் என்பர். இதனை வாத, பித்த, ஐயம் ஆகிய நாடிகளின் சிறப்புக்காலம் எனவும் கூறுவர்.

நாடிகளும் மாதங்களும்
“கடக முதல் துலாம் வரையும் வாதமாகும்
கண்ணாடியைப் பசியுமதுவே யாகும்
விட மீன முதல் மிதுனம் பித்தமாகும்
விரைகமழ் பைங்கூனி ஆனியது வேயாகும்
திடமான விருட்சிக முதற்கும்பஞ் சேத்துமஞ்
சேர்ந்த கார்த்திகை மாசியதுவே யாகும்
நடைமேவும் வாதபித்த சேத்துமத்தானும்
நலமாக மாதமுதல் நடக்குங் காணே.”

கடகம் முதல் துலாம் வரை (ஆடி ஐப்பசி) வாதம் வளர்ச்சி பெறும். மீனம் முதல் மிதுனம் வரை (பங்குனி ஆனி) பித்தம் வளர்ச்சி பெறும். விருச்சிகம் முதல் கும்பம் (கார்த்திகை மாசி) ஐயம் வளர்ச்சி பெறும் என்பர்.

நாடிபார்க்கும் மாதம், வகை
‘சித்திரை வைகாசிக்குச் செழுங்கதிருதந் தன்னில்
அத்தமான மானி யாடி ஐப்பசி கார்த்தி கைக்கும்
மத்தியானத்திற் பார்க்க மார்கழி தையு மாசி
வித்தகம் கதிரேன் மேற்கில் விழுகின்ற நேரந் தானே

தானது பங்குனிக்குந் தனது நல்லா வணிக்கும்
மானமாம் புரட்டாசிக்கு மற்றை ராத்திரியிற் பார்க்கத்
தேனென்று மூன்று நாடித் தெளிவாகக் காணுமென்று
நானமா முனிவர்சொன்ன கருத்தை நீ கண்டு பாரே.’

சித்திரை வைகாசியில் ஞாயிறு உதயத்திலும், ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகையில் நண்பகலிலும், மார்கழி, தை, மாசியில் மாலை எற்பாடு வேளையிலும், பங்குனி, ஆவணி, புரட்டாசியில் இரவிலும் நாடிகளைக் கணிக்க நவின்ற நேரமாகும் என்பதனால், இயற்கையில் ஏற்படுகின்ற தட்பவெப்பங்களுக்கு ஏற்றவாறு நாடிகளின் இயக்கம் அமைந்திருக்குமென அறிய முடிகிறது. வாத, பித்த, ஐய நாடிகளின் பண்பிற்கு ஏற்றவாறு இரவில் ஐயமும், காலையில் வாதமும் நண்பகலில் பித்தமும் ஆட்சி புரிவதாகக் கருதலாம்.

அதேபோல ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய திங்களில், வாதம் வளர்ச்சி பெறும். கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய திங்களில், ஐயம் வளர்ச்சி பெறும். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய திங்களில் பித்தம் வளர்ச்சி பெறும். அவ்வாறே சிறு பொழுதான ஆறில், வைகறையில் வாதமும், நண்பகலில் பித்தமும் எற்பாட்டில் ஐயமும் சிறப்புறுவதாகக் கூறப்படும். இயற்கையும் மாந்தர் தம் உடலும் இயைந்து இயங்கும் தன்மையன. ஆதலின் நாடிகளும் இயற்கைக்கு ஏற்ப இயைந்து இயங்குவதாகக் கருதலாம்.

நாடி தெரியாத பேர்கள்
பெண்போகர், நீண்டகால நோயாளி, குதிரை ஏற்றம் செய்தோர், யானை ஏற்றம் செய்தோர், வழி நடைப்பயணி, பேருண்டி உண்டோர், போதைப் பொருள் கொண்டவர், நீர்ப்பாடு, நீரிழிவு, பெருநோய், வீக்கம் ஆகிய நோய்களுற்றோர், அத்தி சுரத்தால் இளைத்தவர், பயமுற்றோர், துன்பமுற்றவர், விடந் தீண்டியவர், ஓட்டமுற்றவர், அளவுக்கு மிஞ்சிப் புசித்தவர், சூல் கொண்ட பெண், மாதவிடாயான பெண், பெரும்பாடுற்ற பெண், அதிகம் தூங்கியோர், எண்ணெய் தேய்த்து முழுகியவர், சினங்கொண்டோர், மோகங் கொண்டோர், முதிர்ந்த வயதினால் இளைப்புற்றவர், மதங்கொண்டோர், பெருத்த உடலினர், என்பு முறிந்தோர், சோகை நோயினர், பிணத்தைத் தொட்டோர், வாந்தி, விக்கல் எடுத்தோர், விரத மிருப்பவர், மழையில் நனைந்தோர், இசைப் பாடகர், களறி ஆடுவோர், நாட்டியமாடிக் களைப்புற்றோர், மூச்சுப் பயிற்சி மேற்கொண்டோர் ஆகிய இவர்களது நாடி நடை விரைவு கொண்டதாக இருக்குமாதலினால் நாடி நடையைக் கணித்தறிவது அரிதாம்.

மேலே குறிப்பிடப்பட்டிருப்போரில் பெரும்பாலோர் மெய்ப் பாட்டுணர்ச்சியால் அதிவேக இரத்த ஓட்டத்தைக் கொண்டவர்களாக இருப்பர். அவ்வாறு அதிவேக இரத்த அழுத்தம் ஏற்படுகின்ற அந்த வேளையில் நாடியைக் கணித்தறிதல் கூடாது என்றும், கணித்தறிவது கடினம் என்றும் கருதலாம். அந்த வேளையில் நாடித் தேர்வு நடத்துவது முறையற்ற மருத்துவத்திற்கு வழி காட்டியதாக அமையும் என்பதனால், நாடி தெரியதாக பேர்கள் எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பூத நாடி
வாதம், பித்தம், ஐயம் என்னும் நாடியைப் போல பூதநாடி என ஒன்றுண்டு. இதைக் கண்டறிவது எளிதல்ல. ‘நிறைந்த பரிபூரணத்தோர் காண்பார் தாமே’ என்பதற்கிணங்க, நாடி நூல்கள் அனைத்தும் பூத நாடியைக் குறிப்பிட வில்லை. ஒரு சில நூல்கள் மட்டும் சிறிய அளவிலேயே கூறிச் செல்கின்றன.

“சாற்றுவேன் பெருவிரலில் பூத நாடி
தோற்றுகின்ற சிறுவிரல் தான் பூத நாடி”

என்றதனால், ஐந்து விரலாலும் நோயாளியின் கையைப் பிடித்துப் பார்க்கும் போது பெருவிரலாலும் சிறுவிரலாலும் உணரப் பெறுகின்ற நாடிதான் பூத நாடி எனப்படும். ஆராயுமிடத்து வாத, பித்த, ஐய நாடிகளுக்கு முன்னும் பின்னுமாக உணரப்படும் நாடி பூதநாடி எனத் தெரிகிறது.

இவ்வாறாக மூன்று உயிர்த்தாது நாடிகளும் சிறப்பாகப் பூதநாடியும் நடக்கின்றவனுக்குச் சுக சன்னிமார்க்கமாகும். அவன் சாகான். காயசித்தி அடைவான். ஆகவே யோக வல்லுனர்கள் காயசித்தி அடைவதால் அவர்களுக்குப் பூதநாடி புலப்படும்.

பூதநாடி நடக்குங்கால் காயசித்தன் சமாதி நிலையை அடைவான். பூதநாடி நடக்கின்ற காலத்தில் சித்தர்கள் சமாதி நிலைக்கு ஏற்ற சமயமென்று பேருறக்க நிலையைச் சாதிக்க முயல்வார்கள் என்பதிலிருந்து, நாடிகளின் சிறப்பும் உயர்வும் எடுத்துக் காட்டப் பட்டிருப்பது உணர்தற்குரியது.

குருநாடி
வாத நாடியையே குருநாடி என்பர் சிலர். நாடிகள் தோறும் ஊடுருவிப் பாய்ந்து அவற்றிற்கு இயக்கத் தன்மையைக் கொடுப்பதால் குரு நாடி என்கிறார்கள். எனவே தொழில் பற்றியே நாடிகளை வகுத்த போதிலும் குருநாடி எல்லா நாடிகளின் இயக்கத்திற்கும் காரண நாடியாக உள்ளபடியாலும், காரியத்தைச் செய்கின்றபடியாலும் இதனை உன்னதமாகவும், சிறப்பாகவும் போற்றினார்கள். மற்றும், இந்நாடி குற்றமடைவதில்லை. இதற்குக் குணமுமில்லை. ஆனால் ஐந்து நிலையாகிய விழிப்பு நிலை, கனவு, உறக்கம், துரியம், துரியாதீதம் என்பவற்றைக் கொண்டது. மற்ற நாடிகள் குற்றமடைந்த காலத்து அக்குற்றங்களுக்கேற்ப இந்நாடியின் நிலைமாறும். வாத, பித்த நாடிகளின் தொழிற்கேற்ப முக்கியமாக விழிப்பு நிலை, கனவு, உறக்கம் என்ற தொழில்களால் குருநாடியின் நிலைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

குருநாடியில் உறக்க நிலை ஏற்பட்டு விட்டால் உடலுக்குச் சலனமில்லை. இந்நிலையைத்தான் பிணம் என்று கூறுகின்றார்கள். ஆனால் உயிர் வெளியாகி விடவில்லை. உயிர் அணுக்கள் உறக்க நிலையை அடைந்து விட்டது என்பது வெள்ளிடைமலை. ஆகவே, குரு நாடியை மருத்துவன் சாதாரணப் பயிற்சியினால் உணர வல்லன் அல்லன். யோக வல்லமையினால் தான் அறிய முடியும். குருநாடி, வாத, பித்த, ஐய நாடிகள் மூன்றும் தராசு முனை போன்றதாகும்.

“தம்முடன் வாத பித்த ஐய நடுவிலே தான்
தமரகம் போலாடி நிற்கும் குருவி தாமே”

என்பதினால், குருநாடி வாத, பித்த, ஐய நாடிகளின் மத்தியில் தமரகம் போன்றது எனவும் விளங்குகிறது. ‘தமரகம்’ எனும் ‘இதயம்’ உடற்கு எவ்வளவு முதன்மையானதோ அதேபோல குரு நாடியானது வாத, பித்த ஐயமாகிய உயிர்த்தாதுவுக்கு முதன்மையானது என்பதை அறிகிறோம். இதனை வேறுபடுத்திக் காண்பது எளிதன்று என்றதனால், குருநாடி, நாடிகளுக்கெல்லாம் தலைமை பெற்ற நாடியாகவும், மூலநாடியாகவும் ஆதிநாடியாகவும் விளங்குகிறது எனலாம்.

நாடி நடை
நோய் அற்றபோது ஒரு வகை நடையும், நோய் உற்ற போது ஒருவகை நடையும், நோயின் வேறுபாட்டிற்கு ஏற்ப நாடியின் நடையும் வேறுபட்டிருக்கும். இந்த நாடியின் நடை இம்மாதிரி இருந்தால் இந்த நோய் அல்லது இந்த நோய் வருவதற்குரிய அடையாளம் என அனுபவத்தின் மூலம் உணர்வர். இதைப் பயில்வதற்கு ஏற்றவாறு விலங்குகள், பறவைகள், ஊர்வன, பூச்சி, புழுக்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டி உவமைகள் மூலமாக உணர்த்தப்பட்டுள்ளன.

வாத நாடி“வாகினில் அன்னங் கோழி மயிலென நடக்கும் வாதம்”
வாத நாடியானது இயல்பினில் அன்னம், கோழி, மயில், போல நடக்கும். உடலின் தன்மை மாறி நிற்குமானால் இந்நடையில் மாற்றம் ஏற்பட்டு நோயின் தன்மைக்கு ஏற்பச் செயல்படும். அவை, மண்டூகம் தாவுவது போலும், ஓணான் போலும், பாம்பு, அட்டை, வேலிக்குருவி, ஆமை போலவும் நடக்கும்.

பித்த நாடி“ஏகிய ஆமை அட்டை இவையென நடக்கும் பித்தம்”
பித்த நாடியானது இயல்பினில் ஆமை, அட்டை போல நடக்கும். பித்த நோய்க்குறி தோன்றும் போது அந்நோய்க்கு ஏற்ப நடையில் மாற்றம் ஏற்படும். அவை, நாகரிகமான அன்ன நடை போலும், மயில் போலும், தாரா போலும், மாடப் புறா, ஊர்க்குருவி போலும் , கருடப் போத்து, சிங்கம், பாம்பு, பிள்ளை குதிப்பது போல, மதயானை போல, சிறு காக்கை தூங்குவது போல, நடக்கும்.

ஐய நாடி “போகிய தவளை பாம்பு பொல்லாத சிலேட்டுமந்தானே”
ஐய நாடியானது இயல்பினில் தவளை, பாம்பு போல நடக்கும். ஐய நோய் தோன்றும் போது அந்நோய்க்கு ஏற்ப நடையில் மாற்றம் ஏற்படும். அவை கோழியின் நடை, கொக்கினது உறக்கம், ஊர்க் குருவி, சிலந்திவலையினில் பூச்சி போல நடக்கும். பாம்பு நடையெனப் பதுங்கியும், அரணையினது வால் போலவும் ஐயநாடி நடையிருக்கும்.

பூத நாடி
பூத நாடியானது இயல்பினில், கல்லெறிதல், ஆட்டுக்கிடா பாய்ச்சல், செக்கிடை திருகல், சீறுகின்ற மூஞ்சூறு, பந்தடித்து எழும்புதல், ஏற்றம் போல் ஏறி இறங்குதல் போல இருக்கும்.இதிலிருந்து மாறுபடும் போது,

பூனைபோல நடக்கும், வெள்ளெலி போல குன்றியும்
வண்டுபோல ஊர்ந்தும் , பாம்பு போல நெளிந்தும்
சங்கு போல ஊர்ந்தும், கார்வண்டு போல ஊர்ந்தும்
பூதத்தைப் போல ஊர்ந்தும், தேரை போல தாண்டியும்
காக்கைபோலக் குதித்தும் , நெருப்பு போல சுட்டும்
செக்குபோலச் சுற்றியும் , நடக்கு மென்றறியலாம்
என்பதனால், மருத்துவ நாடி நூலார் நாடித் தேர்வின் வளர்ச்சியையும், முதிர்ந்த நிலையையும் காட்டுவதாக அமைந்திருக்க காணலாம். பல்வேறு வகைகளைக் கொண்ட நாடியின் நடைகளை மிகவும் துல்லியமாக, வளர்ச்சியடைந்த நிலையிலுள்ள அறிவியல் கருவிகளுக்கு ஈடாக, விரலைக் கொண்டு தொடு உணர்வினால் நோய்த் தன்மை, நோயுற்ற காலம், முதிர்ச்சி, மரணத்தின் எல்லை என்பவற்றையெல்லாம் அறியும் வகையாக நாடித் தேர்வு அமைந்திருக்கிறது.

நாடிகளும் அளவுகளும்
நாடிகளை ஆராயும் போது அவற்றுக்கு உரிய அளவுகளின்படி அமையாமல் குறைந்தோ கூடியோ தோன்றுகின்றனவா என்று அறிவதற்கு நாடிகளின் இயல்பான அளவுகள் குறிப்பிடப் படுகின்றன. வாத நாடி ஒரு மாத்திரை அளவும், பித்த நாடி அரை மாத்திரை அளவும், ஐயநாடி கால் மாத்திரை அளவும் என மூன்று நாடிகளின் அளவும் குறிப்பிடப் படுகின்றது. இந்த அளவுகளில் மூன்று நாடிகளும் தோன்றினால் உடலில் ஒரு குற்றமும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம். ஒரு மாத்திரை என்பது ஒரு கை நொடி அல்லது கண்ணிமைக்கும் கால அளவு ஆகும்.

நாடிகளுக்குரிய காலங்கள்
நாடிகளை எல்லா வேளையிலும், எல்லாக் காலங்களிலும் பார்த்தால் அதற்குரிய இயல்புகள் அறிய முடியாமற்போகும் என்பதால், நாடிகளுக்குரிய காலங்களாகச் சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றில் உரிய காலத்தை உரைத்துள்ளனர்.

“காலமே சேத்தும நாடி கட்டுச்சிப் பித்த நாடி
மாலையில் வாத நாடி வகை தப்பிப் பிதறி நின்றால்
… … … … … … … …
நாலஞ்சில் மரணமென்று நன்முனி யருளிச் செய்தார்.”

நாடித் தேர்வினால் அறியக் கூடிய நோய்கள்
நாடிகள் நடக்கும் இயல்பைக் கொண்டு உடலில் தோன்றிய நோய்களைக் கண்டறிவது மருத்துவத்தில் இயல்பானதாகும். நாடிகளைக் கொண்டு அறியப்படும் நாடிகள், இயல்புக்கு மாறாக நடந்தால் அது, தொந்தம் என்று குறிக்கப்படும்.
1. வாதம் கால், பித்தம் ஒன்று என்னும் அளவில் நாடிகள் தோன்றினால், வாந்தி, மந்தம், வயிற்றெரிச்சல், சுரம், கண்ணில் காந்தல், பாண்டு, மூலம் ஆகிய நோயும்,
செவி அடைப்பு, உடல் வெதுப்பு, உடல்வலி, உடல் நடுக்கம், மூத்திர எரிச்சல், போன்று உடலில் குணங்களும் காணப்படும்.
2. வாதம் முக்கால், பித்தம் அரை, ஐயம் கால் என்னும் அளவில் நாடிகள் தோன்றினால், உடல் வேர்க்கும்; சீதளம் உண்டாகும்; மேகம் உண்டாகும்; உடல் தடிக்கும்; காலில் வெடிப்பு உண்டாகும்.
3. பித்தம் அரை, ஐயம் அரை, வாதம் கால் என்னும் அளவில் நாடிகளின் நடை தோன்றினால், வாய் காந்தும்; வாயில் நீரூரும்; கண்ணுழலும்; இருமல் உண்டாகும்; கால்களில் வெடிப் புண்டாகும்.
4. வாதம் ஒன்று, பித்தம் ஒன்று, ஐயம் ஒன்று என நாடி நடையிருந்தால்,
“சாவில்லை சாகாம லிருக்கலாகும்
சாத்தியத்தில் குணங்களப்பா யிதுகளெல்லாம்
சாவில்லை நோயில்லை வறுமையில்லை”
என்றதனால், மரணமில்லாப் பெருவாழ்வுக்குரிய உடலினர்க்கு இவ்வாறான நாடி நடை அமையுமென்று தெரிகிறது.
5.ஐயம் ஒன்று, பித்தம் கால், வாதம் கால் என்னும் அளவில் நாடி நடை அமைந்தால் காது அடைக்கும்; தலையில் வியர்வை உண்டாகும்; கண் மூக்கில் நீர் வடியும்; மயக்கம் உண்டாகும்.
6. வாதம் கால், பித்தம் ஒன்று என்னும் அளவில் நாடி நடை அமைந்தால், வாய்வு தொடர்பான நோய்கள் உண்டாகும்.
7. வாதம் ஒன்று, பித்தம் முக்கால், ஐயம் ஒன்று என்னும் அளவில் நாடி நடந்தால் தொப்புளுக்கும், தொண்டைக்கும் மூச்சிழுக்கும்; நெஞ்சடைக்கும்; உடல் முழுவதும் நோவும்; மரணம் நெருக்கத்தில் வந்து விட்டதென்று அறியலாம், என்று நாடிகளின் தொந்தத்தால் பல நோய்களைக் கண்டறியும் குறிப்புகள் காணப்படுகின்றன. பெரும் பகுதி நாடிகள் மரணத்தின் அறிவிப்பைத் தெரிவிக்க கூடியதாகக் காணப்பட்டாலும், அவற்றின் அறிகுறியை அறிந்த பின்பு அதற்கான மருந்துகளைக் கொண்டு மரணத்திலிருந்து மீளுகின்ற வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.

நாடிமுறைத் தேர்வின் மூலம் அறியக் கூடிய நோய்களாக மருத்துவ நூலார் குறிப்பிடுகின்ற வாத நோய்த் தொகை, பித்த நோய்த் தொகை, ஐய நோய்த்தொகை, தொந்த நோய்த் தொகை என்னும் நோய்கள் அனைத்தும் அறியலாம் எனத் தெரிகிறது.

நாடிகளை அறிக்கூடிய முறை, வகுப்பு, பயிற்சி, அடிப்படைகள் என எதுவும் நாடி நூல்களில் காணப்பட வில்லை. அல்லது கிடைத் துள்ள நாடி நூல்களில் அவ்வாறான பாடல்கள் இணைக்கப் பெற வில்லை.

நோயறியும் முறைகளில் நாடி முறை மிகவும் துல்லியமாகக் கணிக்கப்படுவதாகக் கருத்து நிலவுவதால், அவை பற்றிய அறிவியல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. சித்த மருத்துவத்துக்கு மட்டுமல்லாது உலக மருத்துவத்துக்கே அது உதவியாக இருக்கும்.

நோயாளிக்கு உற்ற நோயின் தன்மையை அறியவும், நோயின் வகையை அறியவும் எண்வகைத் தேர்வுகள் பயன்படுகின்றன. அவ்வாறான தேர்வுகள் மூலம் நோயாளியின் நிலையை அறிய முயல்கின்றனர். அவ்வகையில் ஒலி, உணர்வு, வடிவம், சுவை, நாற்றம், மலம், மூத்திரம், எச்சில், விந்து ஆகிய ஒன்பதைத் தேரையர் நூல் விவரிக்கக் காண்கிறோம். அந்நூல் காட்டும் முறைகள் வருமாறு:

1. ஒலித்தேர்வு
நோயுற்றவர் பேசுகின்ற போது அவரின் பேச்சு அவரின் இயல்பு நிலையினிலிருந்து மாறுபட்டு, வீணையினது நாதத்தைப் போலும், கின்னரி இசைப்பது போலவும், குழல் இசைப்பது போலவும் சன்னமாகவும், நாயின் சத்தத்தைப் போலவும், ஈச்சு கொட்டுகின்றதைப் போலச் சத்தமும், மலை எதிரொலிப்பதைப் போன்ற ஓசையும், கிணற்றில் பேசுவது போலவும், எக்காளம் போன்ற ஓசையும், பேரியம் கொட்டுகின்றதைப் போன்ற முழக்கமும் இருக்குமேயானால் வீணை யிசைக்கு ஒரு நாழிகையிலும், கின்னரத்திற்கு பத்து நாழிகையிலும், குழலோசைக்கு நூறு நாழிகையிலும், நாயோசைக்கு ஆயிரம் நாழிகையிலும், ஈச்சு கொட்டுகின்ற ஓசைக்கு இரண்டாயிரம் நாழிகையிலும், மலையோசைக்கு மூவாயிரம் நாழிகையிலும், எக்காளத்திற்கு நாலாயிரம் நாழிகையிலும், கிணற்றோசைக்கு ஐயாயிரம் நாழிகையிலும், பேரிய வோசைக்கு ஆறாயிரம் நாழிகையிலும், இறுதி வரும் என்று உரைக்கலாம்.

‘வீணையிசை நத்தோசை வேயோசை நாயோ
வீணையிசை நத்தோசை வெற்போசைவீணையி
தாரையியம் பேரியியந் தப்பாதொன் றாதிலக்கந்
தாரையியம் பேர்கலைவி தான்’

என்பதனால், ஒலித்தேர்வு முறையினால் நோயைக் காணாமல் நோயாளிக்கு இறுதி நாள் எத்தனை நாழிகையில் வரும் என்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடற்குரியது.

2. உணர்வுத் தேர்வு
நோயாளியை மருத்துவன் தொடுகின்றபோது, மருத்துவனின் உணர்வில் நோயாளியின் உடல், முதலையினது முதுகைப்போல இருக்குமானால் பன்னிரண்டு நாளிலும், ஆமையினது முதுகு போல இருக்குமானால் ஐம்பத்தாறு நாளிலும், மீனினது வால்புறம் போல இருக்குமானால் நாற்பத்தைந்து நாளிலும், குளிர்ச்சி அதிகமாய் இருக்குமானால் பன்னிரண்டு சாமத்திலும், வெப்பமும் சீதளமும் தொந்தித்து இருக்குமானால் ஐம்பத்தாறு சாமத்திலும், அதிக காங்கை இருக்குமானால் நாற்பத்தைந்து சாமத்திலும், மறைவிடத்தைப் பார்க்கும்போது யானைத் தோலைப் போல வன்மையாயிருந்தால் பன்னிரண்டு நாழிகையிலும், மரத்தைப் போன்றிருந்தால் ஐம்பத்தாறு நாழிகையிலும், கல்லைப் போன்றிருந்தால் நாற்பத்தைந்து நாழிகையிலும் இறுதிவரும்.

இரத்த நாளமானாது தாமரைக் கொடியின் முள்ளைப் போலிருக்குமானால் பன்னிரண்டு விநாடியிலும், தச்சு உளிபோல கூர்மையாக இருக்குமானால் ஐம்பத்தாறு விநாடியிலும், ஆரம்போலக் கருக்குடன் இருக்குமானால் நாற்பத்தைந்து விநாடியிலும் இறுதி வருமென்று உரைக்கலாம்.

உணர்வுத் தேர்வு முறைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்ற தோலில் தோன்றும் வேறுபாடுகள் அனைவராலும் அறியக் கூடியதாக இருந்தாலும், அவ்வாறு தோன்றுவதற்குரிய அடிப்படைகள் என்னவென்னு அறியமுடியவில்லை. அறிவியல் அடிப்படையாக அமைகின்றனவா அல்லது அனுபவம் அடிப்படையாக அமைகின்றனவா என்பது கண்டறியப்பட வேண்டிய தெனலாம்.

3. வண்ணத் தேர்வு
நோயாளியைக் காணுகின்ற மருத்துவன் கண்களுக்கு, நோயாளியின் வடிவம் சூரியனைப் போலச் சிவந்த வண்ணமும், மினுமினுப்பும் தோன்றுமேயானால் இரண்டு மாதத்திலும், சந்திரனைப் போல வெள்ளை நிறமுமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் மூன்று மாதத்திலும், செவ்வாயைப் போலச் சிவந்த நெருப்பு நிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் நான்கு மாதத்திலும், வியாழனைப் போல பொன்னிறமென்னும் மஞ்சள் நிறம் தோன்றுமேயானால் ஐந்து மாதத்திலும், வெள்ளியைப் போல வெண்ணிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் ஆறு மாதத்திலும், காரியைப் போலக் கருமை நிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் ஏழு மாதத்திலும், உமையாள் போலக் கறுத்த பச்சை நிறமான நீலச் சாமள நிறத்துடன் மினுமினுப்பும் தோன்றுமேயானால் எட்டு மாதத்திலும், வண்ணம் தோன்றாமல் மினுமினுப்பு மட்டும் தோன்றுமேயானால் அந்த நிமிடமே இறுதி வரும் என்று உறுதியாகக் கூறலாம்.

‘என்றுமதி செவ்வாய் இரணியன்சுங் கன்காரி
யென்றுமதி செவ்வாய் இவையோடுமைஎன்றுமதி
அஞ்சுமா தக்கணமேல் ஆறுதிங்க ளாமினுக்கே
அஞ்சுமா தக்கணமே யாம்.’

இச் செய்யுளில் கிழமைகளையும் அவற்றிற்குரிய கோள்களின் வண்ணத்துடன் ஒப்பிட்டுக் காட்டி, நோயாளியின் இறுதி நாள் எண்ணிக் காட்டப்பட்டுள்ளது. புதன் குறிப்பிடப்படவில்லை. அதற்காக உமை என்று உரைக்கப் பெற்றிருப்பதும் கவனத்திற்குரியது.

4. சுவைத் தேர்வு
நோயுற்றவர் அறுசுவைப் பொருள்களை உண்ணும் போது அந்தச் சுவை தோன்றாமல் வேறு சுவை தோன்றுவதாகக் கூறினால், அதனால் நோயுற்றவர் என்ன நிலையில் உள்ளார் என்பதைத் தெரிவிப்பதே சுவைத் தேர்வாகும். ஒரு சுவைப் பொருளை உண்ணும் போது, அதற்குரிய சுவை தோன்றாமல்,வேறு எந்தப் பொருளை உண்டாலும் அந்தச் சுவை தோன்றுவதாகக் கூறினால், நோயின் முதிர்ச்சியால் எத்தனை நாளில் இறுதிவரும் என்பதை அறியலாம்.

கசப்புச் சுவையை உண்ணும் போது கசப்புத் தோன்றாமல் மற்றெந்தப் பொருளை உண்டாலும் கசப்பதாகக் கூறினால் ஏழு நாளிலும், இனிப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு திங்களிலும், புளிப்புச் சுவை தோன்றாவிட்டால் பதினைந்து நாளிலும், காரச் சுவை தோன்றாவிட்டால் அரை நாளிலும், கரிப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு நாளிலும், துவர்ப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு நாழிகையிலும் இறுதி வருமெனலாம். நோயாளியைப் பற்றிக் கொண்ட நோய் உயிரை வாங்கிக் கொண்டு போக நினைத்திருக்கிற காலத்தை இவ்வாறு அறிய வேண்டும்
இச்சுவைத் தேர்வு மூலம் நோயாளியின் நிலைமையை மருத்துவர் மட்டுமல்ல, மற்றவர்களும் அறியக்கூடியதாக அமைந்திருக்கக் காணலாம். நோயாளியின் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து நிலைமையை அறிய உணர்த்தப் பெற்ற இவ்வாறான முறைகள் அரியவையாக உள்ளன.

5. நாற்றத் தேர்வு
மலர்களிடத்து எழுகின்ற மணத்தை நோயாளி நுகர்ந்து பார்த்து, அந்த மலருக்குரிய மணம் தோன்றாமல் வேறு மணமாகத் தோன்றுவதாகக் கூறினால் நோயாளியின் நிலையை அறிவிப்பது நாற்றத் தேர்வாகும்.
மூங்கிற்பூ மணம் அறியாவிட்டால் ஏழு வினாடியிலும்,
வேங்கைப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு நாழிகைக்குள்ளும்,
தாழம்பூ மணம் அறியாவிட்டால் ஏழு சாமத்திற்குள்ளும்
அத்திப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு நாளிலும்,
கொன்றைப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு மாதத்திற்குள்ளும்,
சிறுசண்பகப்பூ மணம் அறியாவிட்டால் பதினான்கு மாதத்திலும்,
மராமரப்பூ மணம் அறியாவிட்டால் மூன்று ஆண்டிற்குள்ளும்
இறுதி வருமென்று அறிந்து பார்த்துத் துணிவுடனே உரைக்க வேண்டும், என்று உறுதியாக உரைப்பதைக் கொண்டு மருத்துவ நூலாரின் ஆழ்ந்த புலமையும் ஆய்வும் தெளிவாகிறது.

6. மலத் தேர்வு
நோயாளியின் மலம் எந்த வடிவிலும், வண்ணத்திலும், தன்மை யிலும் இருக்கிறது என்றறிந்து நோயாளியின் நிலையை அறிவிக்கிறது. வெள்ளாட்டுப் புழுக்கையைப்போல உலர்ந்து வறண்டிருந்தால், இறுதி அருகிலுள்ளதெனலாம். சற்றுக் குழம்பு போலிருந்தால் மிக நன்று. போதுமான நீர்த்தன்மையுடையதாய் கடினமுமில்லாமல், தளர்ச்சியு மில்லாமல், வெண்மையாயும் இல்லாமலிருந்தால் மிக நன்று. செம்பு நிறம் மத்திமமாகவும், கறுப்பு நிறம் தீயதாகவும் இருக்கும். இத்தேர்வு அதிக ஆய்வும் விளக்கமுமில்லாமல், சாதாரணத் தோற்றத்தைக் கொண்டு பொதுவாக உணரப்படும் கருத்தைப் போலுரைக்கப் பெற்றவையாகும்.

7. நீர்த் தேர்வு
நோயாளியின் சிறுநீரின் நிறத்தைக் கொண்டு அறியப்படுகின்ற கருத்து இங்கு விளக்கப்படுகிறது.
‘மாணிக்கம் போன்று சிவப்பாக இருந்தால் அசாத்தியம்
வெண்ணிறமானால் பொல்லாங்கு. தேன் போன்றிருந்தால் சாத்தியம்
ஆனாலும் நாளாகும்.
பொன்னிறமானால் சாத்தியம் ஆனாலும் நன்றில்லை’

இங்கு குறிப்பிடப் பெற்ற நான்கு வகைகளில் இரண்டு அசாத்தியம் இறுதி நிச்சயமென்றும், இரண்டு சாத்தியம் ஆனாலும் நாளாகு மென்று ஒன்றிலும், மற்றொன்றில் சாத்தியம் ஆனாலும் நன்றில்லை என்பதைக் கொண்டு இறுதியாகக் கூறப்பெற்றதும் அசாத்தியம் போலவே தோன்றுகிறது. மூன்றாவதாகக் கூறப்பெற்ற தேன் போன்ற நிறத்தினை மட்டுமே நம்பி மருத்துவம் பார்க்கலாம் என்று அறிவிப்பதாக இருக்கிறது.

நீர்க்குறி
நோயாளியிடமிருந்து பெறப்படுகின்ற சிறுநீர் வண்ணத்தைக் கொண்டு, நோயாளியின் உடல்நிலை எந்த நிலையில் இருந்து வருகிறது என்பதைக் கண்டறியவே இவ்வாறான முறை சித்த மருத்துவத்தில் கையாளப் படுவதாகத் தெரிகிறது. சிறுநீரைக் கொண்டு ஆய்வுக்கூட முறையில் நோயை அறிய (அ) உடலில் இருக்க வேண்டிய சத்துப் பொருள்கள், உயிர்ப் பொருள், தாதுப் பொருள் போன்றவை இருக்கின்ற அளவு என்ன என்று கணித்தறியப் பயன்படுகிறது. இவ்விரண்டு வகையிலும் சிறுநீரைப் பயன்படுத்தினாலும் கண்டறியப்படும் அடிப்படையில் வேறு வேறாகத் தோன்றும்.

சித்த மருத்துவம் ஆராயும் சிறுநீர்த் தேர்வு முறையில், சிறுநீரின் அடிப்படையில் மஞ்சள், சிவப்பு, பச்சை, கறுப்பு, வெண்மை என்னும் ஐந்து வண்ணங்கள் கொள்ளப்பட்டு, இவற்றின் பிரிவுகளாக இருபத்தொறு வண்ணங்கள் ஆராயப்படுகின்றன.

சிறுநீரின் பொதுத் தன்மையாக நிறம், எடை, நாற்றம், நுரை, குறைதல் என்னும் ஐந்தினைக் குறிப்பிடுவர். சிறுநீர்த் தேர்வினால், உடலின் வெப்பக் குணங்களும், அதனால் உண்டாகக் கூடிய நோய்களும், வாதம், பித்தம், ஐயம் ஆகியவற்றினால் உண்டாகக் கூடிய உடலின் மாற்றமும் அறிப்படுகிறது. சிறுநீர்த் தேர்வினால் கருப்பை, ஆண்குறியில் புண், கல்லடைப்புப் போன்றவற்றை அறியக் கூடும்.

‘காணிதில் சீழும் கலந்து இழிமணம் உறின்
கருப்ப நாபிகள் உளும் காமநா ளத்துளும்
விரணமுண்டு இன்றேல் எய்தும் அஸ்மரி யலது
இருத்தலே திண்ணம் எனமனத்து எண்ணே.’

சிறுநீரில் சீழும் நாற்றமும் வீசினால், கருப்பை, கொப்பூழ், ஆண் குறியில் புண்ணும், கல்லடைப்பும் திண்ணம் என்கிறது.

நெய்க்குறி
சிறுநீரில் எண்ணெய் விட்டு பார்த்து சோதிக்கும் முறை வேறு மருத்துவத் துறைகளில் இருப்பதாகத் தெரியவில்லை. இம்முறை சித்த மருத்துவத்துக்கு மட்டுமே உரியது என்பது குறிப்பிடத்தக்கது. எண்வகைத் தேர்வு முறைகளில் நெய்க்குறி என்னும் தேர்வு முறை சிறப்பானது என்கிறார் தேரையர். சிறுநீரில் ஒரு துளி அளவு நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் நீரில் எவ்வாறு பிரிகிறது என்றும், தோன்றுகிறது என்றும் கண்டு, நோயின் குற்றத்தைக் கண்டறிவது இம்முறை. எண்ணெய்த்துளி சிறுநீரில், பாம்பு, மோதிரம், முத்து, சங்கு, ஆசனம் போன்ற வடிவங்களாகக் காணப்பட்டால் அவற்றினால் நோய் கணிக்கப்படும். நோயாளியின் சிறுநீரும் எண்ணெயும் வேறுபாடின்றி இரண்டும் ஒன்றாகக் கலந்தால், உயிர் நீங்கிவிடும் என்று கணிக்கப்படுகிறது.
சிறுநீரின் இயல்பான வண்ணம் தெளிந்திருந்தால் வாத நோயும், மஞ்சளானால் பித்த நோயும்,வெளுத்து நுரைத்திருந்தால் ஐய நோயையும் காட்டுவதாக இருக்கும். சிறுநீரின் இந்த வண்ணம் எக்காலத்திலும் மாறாமல் இருக்குமென்றும் உரைக்கப்படுகிறது.

8. எச்சில் தேர்வு
நோயாளியின் உமிழ்நீர் எட்டுவகையாகப் பிரிக்கப்பட்டு, அதனால் அறியப் பெறுவன உத்தமம், மத்திமம், அதமம் என்னும் மூன்று வகையில் கூறப்படுகிறது.
1. “உமிழ் நீரானது, இளநீர் போன்றிருந்தால் முதன்மையான உத்தமமென்றும்,
2. பால் போன்றிருந்தால் இரண்டாவது உத்தமமென்றும்,
3. வெண்ணெய் போல் அழுந்தி வெண்மையா யிருக்குமானால் மத்திமத்தில் முதன்மை என்றும்,
4. தயிரைப்போல் அழுத்தமும் வெண்மையும் இருக்குமானால் மத்திமத்தில் இரண்டாவது என்றும்,
5. குதிரை வாயிலிருந்து வெளியாகும் நுரைபோ லிருந்தால் அதன்மத்தில் முதன்மை என்றும்,
6. களியைப் போலிருந்தால் அதமத்தில் இரண்டாவது என்றும்,
7. ஓட்டிலே சுடப்படும் ஓட்டடை போலிருந்தால் அதமத்தில் முதன்மையான அசாத்தியம் என்றும்,
8.மாவைப்போல வறட்சியாக இருக்குமானால் அதமத்தில் அதமமான அசாத்தியம் என்றும், இறுதி மிகவும் அருகில் இருக்குமென்றும் எட்டு வகைகள் உரைக்கப்படுகின்றன.”

விந்துத் தேர்வு
விந்துத் தேர்வும் எச்சில் தேர்வைப் போலவே உத்தமம், அதமம், மத்திமம் என்கிற முறையில் உரைக்கப்படுகிறது. அதாவது நோயாளியின் விந்து,
1. “வெண்ணெய் போன்றிருந்தால் உத்தமத்தில் முதன்மை,
2. தயிரைப் போன்றிருந்தால் உத்தமத்தில் இரண்டாவது,
3. பால்போன்றிருந்தால் மத்திமத்தில் முதன்மை,
4. மோர் போன்றிருந்தால் மத்திமத்தில் இரண்டாவது,
5. தேன் போன்றிருந்தால் அதமத்தில் முதன்மை,
6. நெய்போன்றிருந்தால் அதமத்தில் இரண்டாவது,
7. கள் போன்றிருந்தால் அதமத்தில் முதன்மை ஆனாலும் பொல்லாங்கு (தீமை)
8. தண்ணீர் போன்றிருந்தால் அதமத்தில் அதமம். முயற்சி வேண்டாம் என்று கைவிடலாம்
என்று கூறப்படுகிறது. நோயாளியின் உயிர் பிரியும் போது இரத்தமும் விந்துவும் நீர்த்துத் தண்ணீரைப்போல வெளியாகும். அவ்வேளையில் நோயாளியைக் காப்பாற்ற முயல்வது வீண் என்று கூறப்படுகிறது.“

-ayurvedamaruthuvam.blogspot.com