“ஹைக்கூ” என்றால்…..?? : சிறீ சிறீஸ்கந்தராஜா

ஹைக்கூ கவிதைமுதலில் கவிதை என்றால்…?
உணர்வு, கற்பனை நயம், உவமை, உருவகம், பொருள்வளம் கவிதைக்கு வேண்டும். சொல்லில், பொருளில், உருவகத்தில், உவமையில் அமையும் கற்பனைச் சிறப்பு வேண்டும்!.

மரபுக் கவிதையாயின் இவற்றுக்கும் மேலாக சீர், தளை,எதுகை, மோனை சிறந்திருக்க வேண்டும்!

சொல்லும் செய்திகள்…
நல்ல சிந்தனைகள், நல்ல எண்ணங்கள் பாடுபொருளாக இடம்பெறவேண்டும்.

“உழவன் சேற்றில் கால் வைக்காவிட்டால்,
நாம் சோற்றில் கை வைக்க முடியாது” (சொல்லில்கவித்துவம்)

“மண்ணில் வந்த நிலவே- என்
மடியில் பூத்த மலரே!” (உருவத்தில், உவமையில் கவித்துவம்)

“கூட்டி வச்ச வாசலிலே
குப்பை போடப் பிள்ளை இல்லை” (பொருள் கவித்துவம்)

“குனிந்து வளைந்து பெருக்கிச் சென்றாள்
வீடு சுத்தமாச்சு மனம் குப்பையாச்சு!” (பொருள் கவித்துவம்)

“இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை” (பொருள் கவித்துவம்)

ஹைக்கூ கவிதை என்றால்…?
“ஹைக்கூ” இந்தக்கவிதை வடிவம் ஜப்பானிய மண்ணில்தான் முதன்முதலில் முளைத்தது!. மூன்று சங்கங்கள் வைத்து தமிழை வளர்த்தனர் நம் முன்னோர். அதேபோல ஜப்பானிய இலக்கிய வரலாற்றை அதன் தலைநகர் மாற்றத்தின் அடிப்படையில் ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர் இலக்கிய ஆய்வாளர்கள்.

பிரிவு 1
நாராக் காலம் (கி.பி 700 முதல் 794 வரை)
இக்காலத்தில் “சோக்கா” என்ற கவிதை வடிவம் வழக்கத்தில் இருந்தது. அடுத்தடுத்தஅடிகள் 5, 7 என்ற அசை அமைப்பிலும், கடைசி இரண்டு அடிகள் 7, 7 என்ற அசை அமைப்பிலும் இருந்தன. “சோக்கா” கவிதைக்கு வரிவரம்புகள் எதுவுமில்லை. ஆனாலும் மக்கள் இதனை விரும்பி இரசிக்கவில்லை.

பிரிவு 2
ஹயன் காலம் (கி.பி 794 முதல் 1192 வரை)
இக்காலத்தில் “சோக்கா” என்ற நீண்ட கவிதை “தன்கா” என்ற 5 வரிப் பாடலாகச் சுருங்கியது. 5, 7, 5, 7, 7 என்ற அசை அமைப்பில் “தன்கா” கவிதை தன் வடிவத்தை அமைத்துக் கொண்டது.

பிரிவு 3
காமெக்கூரா காலம் (கி.பி 1192 முதல் 1332 வரை)
இக்காலத்தில் “ஜாக்கின்சூ” என்ற செய்யுள் தொகை வடிவம் பிறந்தது. கடுமையான இலக்கணங்கள். இந்தக் கவிதையும் மக்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை.

பிரிவு 4
நான்போக்குச்சாக் காலம் (கி.பி 1332 முதல் 1603 வரை)
இக்காலத்தில் “நோஹ” என்ற இசை நாடக சமய சமுதாயக் கவிதைகள் வெளிவந்தன.

பிரிவு 5
எடோ காலம் (கி.பி 1603 முதல் 1863 வரை)
இக்காலத்தில்தான் சீன ஜப்பான் மொழிக் கலவையாக “ஹைக்கூ” கவிதை தோன்றியது. மூன்றே மூன்று அடிகள் 5, 7, 5 என்ற அசை அமைப்பில் அமைந்தன.

பிரிவு 6
டோக்கியோ காலம் (கி.பி 1863 க்கு அடுத்தது)
ஹைக்கூ கவிதை உலகெங்கும்பரந்து ப்ரெஞ்ச், ஆங்கிலம் எங்கும் செறிந்து பின்னர் தமிழுக்கும் வந்துவிட்டது. ஆரம்ப காலத்தில் “ஹைக்கூ” கவிதை “ஹொக்கூ” என்றே அழைக்கப்பட்டது. பிறகு “ஹைகை” என்று திரிந்து “ஹைக்கூ” என்றாயிற்று. “ஹைக்கூ” என்றால் “அணுத்தூசி” போன்ற சிறிய கவிதை என்று பொருள் கொள்வர்.

தமிழில் ஹைக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்க விதை, வாமனக் கவிதை, அணில்வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகின்றன.

கடுகளவு உருவில் சிறியதாக இருந்தாலும் பூமியளவு பரந்த விடயத்தை உள்ளடக்கியது இந்த ஹைக்கூ கவிதை வடிவம் என்றால் அது மிகையன்று! “கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த கைக்கூ” (புலவர் இடைக்காடர் பொறுத்தருள்க).

ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில்7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும். மூன்று வரிகளில் பதினேழு வார்த்தைகள் என்ற விதியுமுள்ளது. ஜப்பானிய மொழியில் “ஒஞ்சி” என்று அழைக்கப்படுகின்றது.

ஜப்பானிய மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில்தான் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் இந்த 5, 7, 5 என்ற அசை அமைப்பு முறையாக கடைப்பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5, 7, 5 என்ற அளவு கோலும் அருகிப்போயிற்று.

ஜப்பானிய கவிஞர்கள் மோரிடேகே (1473-1549) மற்றும் சோகன் (1465-1553) ஆகியோர் ஹைக்கூ கவிதையின் முன்னோடிகள் என்று அழைக்கப் படுகிறார்கள்.
“உதிர்ந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறதோ?…
வண்ணத்துப் பூச்சி”
(மோரிடேகே)

“நிலவிற்கு ஒரு
கைப்பிடி வைத்தால்…
எத்துனை அழகான கைவிசிறி”
(சோகன்)
இந்தச் சிறுவடிவத்தைப் பற்றி அதிகளவில் சிந்தித்தவர் நமது சிறுகதைச் சித்தர் சுஜாதா ஆவர்.

“ஹைக்கூ என்னும் கவிதை வடிவம் ஜப்பானிலிருந்து நமக்கு வந்து, தமிழுக்கு ஏற்ப மேலும் மாறி, மிகமிக பிரபலமாகி, சுலபமாக்கப்பட்டு, நிஜ ஹைகூக்கள் அடையாளமிழந்து சமூகச்சாயம் ஏற்றிய, மூன்று வரிகளில் எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளும் ஹைக்கூ என்கிற கேவலநிலைக்கு வந்துவிட்டதால், உண்மையான ஹைக்கூக்களை அடியாளம் கண்டுகொள்ள இந்த மாதிரியான புத்தகங்கள் தேவை என்று தோன்றி இது எழுதப்பட்டது. இதைப் படித்தபின் பல ஹைக்கூக்கள் எழுதப்படாமல் இருந்தால் இப்புத்தகத்தின் குறிக்கோள் நிறைவேறுகிறது.”

“இதுஹைக்கூ – ஒரு புதிய அறிமுகம்” என்றபுத்தகத்திற்கு சுஜாதா எழுதிய முன்னுரை.

ஒரு சில வார்த்தைகள் மூலம்அனுபவம் அல்லது உணர்ச்சி கடத்தல் ஹைக்கூ என்று கருதுகின்றார்.
“நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சார்த்தப்பட்டது”

உடனே பார்க்கும்போது இந்த மூன்று வரிகள் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கும் வெறும் வரிகள்தாம். ஆனால் சற்றே சிந்திக்கையில் இதன் பரிமாணங்கள் விரிவதை கவனிக்க முடியும்.

நள்ளிரவு இந்த வரிகளை எழுதியவன் விழித்திருக்க வேண்டும்.

அவன் தனிமை வெளிப்படுகிறது.
அவனுக்கு ஏன் தூக்கம் வரவில்லை?
கவலையா? தனிமையா? உடல் நலமில்லையா?

எங்கே இவன் விழித்திருக்கிறான்? நகரத்திலா, கிராமத்திலா?

நகரத்தில் இருக்க முடியாது, அத்தனை நிசப்தம் நகரத்தில் எது?

தூரத்தில் கதவு சாத்தப்படும் சப்தம்கேட்க முடிகின்ற நிசப்தம்,
அந்த சப்தத்தின் அர்த்தம் என்ன?

அந்த வேளை வீட்டுக்கு வந்தது யார்?

ஒரு தகப்பனா, ஒரு மனைவியா, ஒரு மகனா, வயசுக்கு வந்த பெண்ணா?

அல்லது யாராவது கோபத்தில் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்களா?

மூன்றே மூன்று வரிகள். அவை ஏற்படுத்தும் சலனங்கள் எத்தனை பாருங்கள்.

உங்கள் சிந்தனை என்னும் நீர்ப்பரப்பில் எறியப்படும் ஒருசிறிய கல் “ஹைக்கூ” ஆகும்.

இவ்வளவு விலை கொடுத்து இதனை ஏன் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்தார்கள் என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது!!

மீண்டும் சுஜாதா சொன்னதை நினைவு கூர்வோம்..

“…….மூன்று வரிகளில் எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளும் ஹைக்கூ என்கிற கேவலநிலைக்கு வந்துவிட்டதால், உண்மையான ஹைக்கூக்களை அடையாளம் கண்டுகொள்ள இந்த மாதிரியான புத்தகங்கள் தேவை என்று தோன்றி இது எழுதப்பட்டது. இதைப் படித்தபின் பல ஹைக்கூக்கள் எழுதப்படாமல் இருந்தால் இப்புத்தகத்தின் குறிக்கோள் நிறைவேறுகின்றது.”

சிறீ சிறீஸ்கந்தராஜா
06/05/2015