சிலம்பு கூறும் சைவம்

சிலம்பு கூறும் சைவம்அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற உணர்வுடன் மக்கள் யாவரும் வாழ்வாங்கு வாழ வழி அமைத்த ஒழுக்க நெறியே சமயம் எனப்படுகின்றது. உலகம் முழுவதையும் படைத்துக் காத்த இறைவனை சிந்தையாலும், செயலாலும், சொல்லாலும் வழிபட்டு அமைதலே அச் சமயத்தார் மேற்கொள்ளும் செயல்முறைகளாகும். இந்த வகையின் அடிப்படையில் மக்கள் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை வடித்த இளங்கோவடிகள் அக்கால சமயநெறிகள் பற்றிப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றார்.சிலப்பதிகாரம் எழுந்ததாகக் கருதப்படும் சங்கமருவிய காலப்பகுதியில் பலமத வழிபாடுகள் இந்தியாவில் தோற்றம் பெற்ற நிலையில் இருந்தாலும் சைவமதம் எவ்வாறு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் வேரூன்றியிருந்தது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்ககால மக்கள் இயற்கையை வழிபட்டது மட்டுமன்றி நாநிலத் தெய்வங்களாக முல்லைநிலத் திருமால், குறிஞ்சிநில முருகன், மருதநில இந்திரன், நெய்தல்நில வருணன் ஆகியோரையும் சிறப்பாக வழிபட்டனர். சங்ககாலத் தொகைநூல்களில் ஒன்றான பரிபாடலில் “வேறு வேறு பெயரில் எவ்வியோனும் நீயே” என்ற வரியும், புலவர் கபிலரது கருத்துப்படி “வேறு பல்லுருவிற் கடவுள் பேணி” என்ற வரியும் அக்காலத்தில் ஒரே கடவுள் பலபல பெயர்களில் அழைக்கப்பட்டமை தெளிவாகிறது. சங்ககாலத்தில் வழிபடப்படாத பல புதிய கடவுள் வழிபாடுகளை அதன்பின் எழுந்த சிலப்பதிகாரத்தில் நாம் காணலாம்.

ஆரம்பகால மனிதன் இயற்கையில் இருந்து தனது இறைவழிபாட்டை மேற்கொண்டவனாகவே கருதப்படுகின்றான். அந்தவகையில் சைவமதமும் இயற்கையிலிருந்தே தோற்றம் பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன. இயற்கை வழிபாடுகள் தொன்றுதொட்டே இருந்துவந்தது என்பதனைக் கருத்தில் கொண்ட இளங்கோவடிகள் “திங்களைப் போற்றுதும்”, “ஞாயிறைப் போற்றுதும்”, மாமழை போற்றுதும் என்கின்றார். இது சைவ சமயத்தவர்களின் ஆரம்பகால சைவமத நம்பிக்கையின் வெளிப்பாடாகவே கொள்ளக்கிடக்கின்றது.

சிந்துவெளி நாகரிக காலத்திலிருந்தே பெண்தெய்வ வழிபாடு, கொற்றவை வழிபாடு என்பன தோற்றம் பெற்றதாகக் கொள்ளப்படுகின்றது. பிற்காலத்தில் கொற்றவை வழிபாடு அம்மன் வழிபாடாகக் கருதப்பட்டு சிவனுடன் அம்மனையும் சேர்த்து சைவசமயிகள் வழிபடத் தொடங்கினர். கொற்றவைத் தெய்வத்தைச் சிறப்புறச் செய்வதற்காகவே இளங்கோவடிகள் வேட்டுவவரி என்ற காதையை அமைத்திருப்பதிலிருந்து அக்காலத்தில் சைவமக்கள் மத்தியில் கொற்றவையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். கொற்றவை என்பவள் திருமாலுக்குத் தங்கையாகவும், சிவனுக்கு கிரிஜா சக்தியாகவும் ஒப்பிடப்படுகின்றாள். சிவனதும், திருமாலதும் செயல்கள் யாவும் கொற்றவைமேல் ஏற்றிப் புகழப்படுகின்றன. கொற்றவை வழிபாடு சிவன் வழிபாட்டோடு தொடர்புள்ளதாய் அமைந்துள்ளதை சிலம்பின்வழி தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். மாதவி ஆடிய நடன நிகழ்வில் கொற்றவைக்காக ஆடிய மரக்காலாட்டத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாள். தொல்காப்பியர் கூறாத பாலைநிலத்திற்கு இளங்கோவடிகள் இலக்கணம் வகுத்து அந்நிலத்தில் கொற்றவை வழிபாட்டை சிலம்பில் முக்கியத்துவப்படுத்தி இருப்பது அக்காலத் தமிழ்நாட்டவர் மத்தியில் பெண் தெய்வவழிபாட்டின் சிறப்பை விளங்க முடிகின்றது

பெண்தெய்வ வழிபாட்டுடன் இரண்டறக் கலந்த பத்தினித்தெய்வ வழிபாடும் அக்காலச் சைவர்களால் போற்றப்பட்டமை சிலம்பில் நன்கு புலப்படுத்தப் படுகின்றது. “உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்” என்ற சொற்தொடர் காப்பியத்தின் கொள்கைகளில் ஒன்றாகும். சாதாரண குடிமகளாகிய கண்ணகி தெய்வநிலைக்கு உயர்த்தப்படுதலும், சேரன் செங்குட்டுவனால் உலக வழிபாட்டிற்கு உரியவளாக்கப்படுதலும் இளங்கோவடிகளால் சித்தரிக்கப்படுவது சைவத்தின் ஒர் பெருமை என்றே கூறலாம்.

சைவசமயத்தவர்களின் முருகக் கடவுள்வழிபாடு சங்ககாலத்தில் குறிஞ்சி நிலத்தில் காணப்பட்டாலும் ‘சேயோன் மேவிய மைவரை உலகம்’ என்ற தொல்காப்பிய வாக்கியத்திலிருந்து முருகக் கடவுள் வழிபாடானது அக்காலத்திற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் தோற்றம் பெற்றிருப்பதனை அவதானிக்கலாம். சிலப்பதிகாரத்தில் செவ்வேள், வேலன், என்ற பெயர்கள் முருகனைக் குறிக்கின்றன. ‘ஆலமர் செல்வன் புதல்வன்’ ‘கயிலை நன்மலை இறைமகன்’ என்று செவ்வேளைக் குறிப்பிடும் தொடர்கள் முருகனைச் சிவபிரானுடன் தொடர்புபடுத்திக் கூறுகின்றன. கோவலனது அழகை முருகனுடைய அழகிற்கு உவமையாகக் கூறப்படுகின்றது. ‘கண்டேந்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக் காதலாற் கொண்டேந்தும் கிழமையான் கோவலன்’ என்ற சிலப்பதிகார வரிகள் இதற்குச் சான்றாகும். கோவலன் கண்ணகியின் கண்களைப் புகழுமிடத்து முருகனின் வேல் இரண்டு கூறாகி இரு மழைக்கண்கள் ஆனதோ என வியக்கின்றான். குன்றக் குரவை ஆடும் குறவர், முருகன் சூரனாகிய மாமரத்தைப் பிளந்தமை அசுரரை அழித்தமை போன்ற புராணக் கதைகளை தம் பாடலுக்குக் கருப்பொருள் ஆக்கியமையை இளங்கோவடிகள் தெளிவாகக் காட்டுகின்றார். கடலாடு காதையில் முருகனது துடிக்கூத்து, குடக்கூத்து ஆகியவை மாதவியின் ஆடல்களில் இடம்பெறுவதைக் காணலாம். முருகனைச் செவ்வேள் என்று குறிப்பிடும் அடிகளார் கண்ணகியை வள்ளி என்று குரவரின் வாயிலாகக் குறிப்பிடுகின்றார்.

சைவசமயத்தவர்கள் தங்கள் முழுமுதற் கடவுளாக சிவபெருமானையே வழிபட்டனர் என்பதற்கு சிலம்பில் நிறைய ஆதாரங்கள் உண்டு. அக்காலத்தில் செஞ்சடைக் கடவுள் என்று அழைக்கப்பட்ட சிவபிரான், செஞ்சடை வானவன், பிறவாயாக்கைப் பெரியோன், நிலவுக் கதிரமுடித்த நீளிருங் சென்னி, உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் என்றெல்லாம் ஆங்காங்கே குறிக்கப்படுகின்றான். கண்ணகியின் நெற்றியை வர்ணிக்க வந்த ஆசிரியர் அதற்குச் சிவபிரானது பிறையை உவமையாக்குகின்றார். மாதவி ஆடிய பதினோர் ஆடல்களுள் சிவபிரான் ஆடிய இரண்டு ஆடல்களும் சிலம்பில் குறிக்கப்பட்டுள்ளது. சிவனின் பெருமை கூறவந்த அடிகளார் மதியினைச் சூடியமை, நஞ்சுண்டு கண்டம் கறுத்தமை, சூலாயுதம் ஏந்தியமை, அரவினை நாணாகப்பூட்டி மேருமலையை வளைத்தமை போன்ற தெய்வீகச் செயல்களைத் தனது வேட்டுவவரியில் குறிப்பிடுகின்றார். சேரன் செங்குட்டுவன் கனகவிசயரை வெல்லப் புறப்பட்டபோது சிவனது சேடக்கைத் தன் தலையில் தரித்துக்கொண்டு செல்கின்றான். இச் செய்கையானது தமிழ்நாட்டில் சிவபக்கதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது என்று டாக்டர் உ.வே. சாமிநாதையரும் குறிப்பிடுகின்றார். செங்குட்டுவனோடு போர்செய்து தோற்றுப்போன ஆரிய மன்னன் தப்பித்துக் கொள்வதற்காக சடைமுடி தரித்து, உடலில் திருசீறு பூசி சிவனடியார்போல் தப்பித்துக் கொள்கின்றனர். இதனுடாக வடநாட்டிலும் சைவத்தை அறிந்திருந்தார்கள் என்பது புலனாகின்றது.

சிலப்பதிகாரம் எழுந்த காலத்தில் தமிழ்நாட்டில் பல சமய வழிபாடுகள் தென்பட்டாலும் சைவமதமே மேலோங்கியிருந்தது என்பதனைக் கண்டு கொள்ளலாம். பலமத வழிபாடுகள் அங்கே தோற்றம் பெற்றிருந்தாலும் ஒவ்வொரு மதங்களும் ஒன்றுக்கொன்று போட்டி பொறாமை இன்றியும், பழிப்புக்கிடமின்றியும் இருந்தது என்பதனை ‘காமுறு தெய்வம் கண்டடி பணிய நீபோ யாங்களும் நீள் நெறிப் படர்குதும்’ என்ற வரிகளால் இளங்கோவடிகளார் விளங்க வைக்கின்றார். சங்கமருவிய காலத்தில் ஊற்றெடுத்த சைவமதக் கருத்துக்களே பல்லவர் காலத்தில் பக்திப்பெருவாகமாக தமிழ்நாட்டை நனைத்தது என்றால் மிகையாகாது.

டென்மார்க் – சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கழக இணையத்தளத்திற்காக எழுதப்பட்டது.
-அன்புடன் Srikandarajah கங்கைமகன்