சித்த மருத்துவத்தில் மருந்து

சித்த மருந்துகள்நமது உடல் நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் என்கிற ஐந்து கூறுகளின் கலவையே ஆகும். நமது முன்னோர்கள் இந்த விகிதங்களை கொண்டு ஒருவரின் உடலை வாதம் உடம்பு, பித்த உடம்பு, சிலேத்தும உடம்பு என மூன்றாய் பிரித்துக் கூறியிருக்கின்றனர். மேலும் நாம் உண்ணும் உணவே நமது உடலுக்கு வலுவையும், நோயையும் தருகிறது. இந்த இரு தத்துவங்களின் அடிப்படையில் அமைந்ததுதான் பழந்தமிழரின் மருத்துவம். இதனை வள்ளுவர் பின்வரும் இரண்டே வரிகளில் விளக்குவது சிறப்பு.

‘மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’

திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, கலித்தொகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, திரிகடுகம் போன்ற நூல்கள் தமிழரின் மருத்துவம் பற்றிய தகவல்களை நமக்குத் தருகின்றன. இவை தவிர அநேகமாக எல்லா சித்தர் பெருமக்களும் மருத்துவம் பற்றிய தனித்துவமான நூல்களை அருளியிருக்கின்றனர். சித்தர்களைப் பொறுத்த வரையில் உணவே மருந்து, மருந்தே உணவு என்கிற கோட்பாட்டினை உடையவர்கள்.

இதனை இன்னமும் எளிமையாய் சொல்வதாயின் நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத கூறுகளில் இரண்டு கூறுகள் இணைந்து ஒரு சுவையினை உருவாக்குகின்றன. இப்படி நமது உணவின் ஆறு சுவைகளும் ஏதேனும் இரு கூறுகளை பிரதிபலிக்கின்றன. நம் உடலின் தன்மைக்கேற்ப இந்த சுவை உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால் உடல் நலத்துடன் வாழலாம்.

மேலே சொன்ன முறையில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது குறைபாடுகள் தோன்றும் போது அது நோயாகிறது. இந்த நோய்க்கான மருத்துவம் என்பது கூட பஞ்ச பூதங்களின் சமநிலையை உடலில் மீட்டெடுப்பதாகவே இருக்கிறது. நோய் என்பது என்ன?, நோயாளியின் தன்மை அல்லது பாதிப்பு எத்தகையது?, அதை தீர்க்கும் வகை என்ன என்பதை அறிந்தே அதற்கான மருந்தை தீர்மானிக்க வேண்டும் என்கின்றனர். இதையே வள்ளுவரும்…
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்‘என்கிறார்.

நமது உடலானது 96 தத்துவங்களினால் ஆனது என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இவற்றின் தன்மைகளை அறிந்தே மருந்துகளை தெரிந்தெடுக்க வேண்டுமாம். எனவே தேர்ந்த மருத்துவர்களினால் மட்டுமே சரியான மருந்தினை நோயாளிக்குத் தரமுடியும். எனவே சித்த மருந்துகளைப் பொறுத்தவரையில் நாமே கைவைத்தியமாய் எதனையும் மேற்கொள்ளக் கூடாது.

மருந்துப் பொருள் விளக்கம்
மருந்து என்னும் சொல்லுக்கு ஒளடதம் (Medicine), பரிகாரம் (Remedy), அமிர்தம் (Ambrosia), வசியமருந்து (Pitter), சோறு (Cooked Rice), இனிமை (Sweetness), குடிநீர் (Drinking Water)ஆகிய பொருள்கள் உள்ளன.

துன்பத்தை வேருடன் களைந்து பிணி, மூப்பு, சாக்காடு என்னும் இவற்றை யொழித்து, உடலில் எக்காலமும் உயிர் நிலைத்திருக்கச் செய்யும் கருவியே மருந்து எனவும், அது பயன்படுத்தப்படும் முறையே மருத்துவம் எனவும் கூறுவர். இதனால் மருத்துவத்தின் பயனும், சிறப்பும் விளங்கக் காணலாம்.

சித்த மருத்துவத்தில் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்னும் பிரிவுகள் உள்ளன. இம்மருந்துகள் தேவ மருந்து, மனித மருந்து, இரச மருந்து என்னும் முப்பெரும் பிரிவுகளாகக் காணப் படுகின்றன.

சித்த மருத்துவத்தில் மருந்துகள் இரண்டு பெரும் பிரிவினில் அடங்குகின்றன. அவை முறையே, “அக மருந்து”, “புற மருந்து” எனப்படுகிறது. உள்ளுக்கு சாப்பிடக் கூடியவை அக மருந்துகள் என்றும், உடலின் மேலே உபயோகிக்கக் கூடியவைகள் புற மருந்து என வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு பிரிவும் முப்பத்திரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

அக மருந்துகள்

1.சாறு, 2.கரசம், 3.குடிநீர், 4.கற்கம், 5.உட்களி, 6.அடை, 7.சூரணம், 8.பிட்டு, 9.வடகம், 10.கிருதம் அல்லது வெண்ணெய், 11.மணப்பாகு, 12.நெய், 13.இரசாயணம், 14.இளகம் இலேகியம், 15.எண்ணெய் அல்லது தைலம், 16.மாத்திரை, 17.கடுகு, 18.பக்குவம், 19.தேனூறல், 20.தீநீர், 21.மெழுகு, 22.குழம்பு, 23.பதங்கம், 24. செந்தூரம், 25. பற்பம், 26. கட்டு, 27. உருக்கு, 28.களங்கு, 29.சுண்ணம், 30.கற்பம், 31.சத்து, 32.குருகுளிகை.

புற மருந்துகள்

1.கட்டு, 2.பற்று, 3.ஒற்றடம், 4.பூச்சு, 5.வேது, 6.பொட்டணம், 7.தொக்கணம், 8.புகை, 9.மை, 10.பொடிதிமிர்தல், 11.கலிக்கம், 12.நசியம், 13.ஊதல், 14.நாசிகாபரணம், 15. களிம்பு, 16.சீலை, 17.நீர், 18 வர்த்தி, 19.சுட்டிகை, 20.சலாகை, 21.பசை, 22.களி, 23.பொடி, 24.முறிச்சல், 25.கீறல், 26.காரம், 27.அட்டை விடல், 28. அறுவை, 29.கொம்பு வைத்துக் கட்டல், 30.உறிஞ்சல், 31.குருதி வாங்கல், 32.பீச்சு.

மருந்து செய்முறைகள்
மருந்துகள் 64–ம் செய்யப்படும் போது கீழ்க்கண்ட 24 வகையான வினைகளால் செய்யப்படுகின்றன.
1. கருக்கல் , 2. அரைத்தல் , 3. கசக்கல் , 4. கலக்கல் , 5. வறுத்தல் , 6. சுழற்றுதல் , 7. உருக்குதல் , 8. இறுத்தல் , 9.உலர்த்தல், 10.உறைத்தல், 11.குழைத்தல், 12.உடைத்தல்
13.நறுக்குதல், 14.உருட்டுதல்,  15.நகத்துதல்,  16.நசுக்குதல்,  17,பொசுக்குதல், 18.நனைத்தல், 19.எரித்தல்,  20.வழித்தல்,  21.இறுக்குதல், 22.இழைத்தல்,  23.குழைத்தல், 24.எடுக்குதல் என்பனவாகும். இவை, மருந்து செய்யும் வினையாகக் கொள்ளலாம்.

அக மருந்துகள்

1. சாறு – இலை, வேர், பட்டை, பூ, காய், முதலிய ஏதாவது ஒன்றை அல்லது எல்லாவற்றையுமாவது பிழிந்து சாறு எடுப்பது. சிலவற்றை இடித்துப் பிழிவதும், சிலவற்றை அரைத்துப் பிழிவதும், சிலவற்றை அவித்துப் பிழிவதும் உண்டு.

2. கரசம் – காயந்து (சுக்கு போன்ற) வேர், காய் வகைகளை இடித்துப் பொடியாக்கி தண்ணீர்விட்டுக் கலக்கிப் பிழிந்த நீரையாவது, அல்லது அவற்றின் சாற்றையாவது கொதிக்க வைத்து எடுத்துக் கொள்வது.

3. குடிநீர் – மருந்து நீர், உண்ணீர், குடிநீர், புனல், கியாழம் என்ற பெயர்களும் இதற்கு உண்டு.உலர்ந்த சருகுளயாவது, ஈரமாயுள்ள இலைகளையாவது இடித்து அதற்காகச் சொல்லப்பட்ட அளவுப்படி தண்ணீர்விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்வது. காய்ச்சத் தொடங்கும் போது இருந்த அளவில் நான்கில் ஒரு பங்கு, ஆறில் ஒரு பங்கு, எட்டில் ஒரு பங்கு, இருபத்தி நான்கில் ஒரு பங்கு என்று மருந்திற்க்குத் தக்கப்படி காய்ச்ச வேண்டும்.

4. கற்கம் – ஈரமான அல்லது உலர்ந்த சரக்குகளை, மருந்துச் சரக்குகள் சேர்தது கல்லோடு கல்லாக ஒட்ட அரைத்துகெட்டியாக எடுத்துக் கொள்வது, கல்கம் என்றும் சொல்வர்.

5. உட்களி – உண்பதற்குரிய களி கிண்டுவது போல் மருந்துக்கான இலைகள், சரக்குகள் முதலியன சேர்த்து கிண்டி உண்பது. உள்ளுக்கு சாப்பிடுவதால் உட்களி என்பர்.

6. அடை – உண்பதற்குரிய அடை என்ற பண்டம் செய்வது போல் மருந்துச் சரக்குகள் சேர்த்து செய்வது.

7.சூரணம் – ஈரமானவைகளை காய வைத்தும், காயந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது. மெல்லிய பொடி இது. இந்தப் பொடி அதிக நாட்கள் கெடாமல் இருப்பதற்கும், வேறு மருந்துகளில் சேர்ப்பதற்கும் தூய்மைப்படுத்துவார்கள். மருந்திற்கு தேவையான பொடிகளைக் கலந்து கொண்ட பின்னர் பசும்பால் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும். பசும்பாலும் தண்ணீரும் சேர்ந்த கலவையுள்ள பாத்திரத்தில் பிட்டுப்போல் வேக வைக்கவும். அல்லது இட்லிக் கொப்பரையில் இட்லித் தட்டின் மேல் நல்ல துணியைப் போட்டுப் பொடியைப் பரப்பி வேக வைக்கவும். அடியில் உள்ள பால் சுண்டும் வரை எரித்த பின்பு பொடிப் பிட்டை எடுத்து மறுபடியும் பொடியாககிச் சலித்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேத முறையில் இப்படித் தூய்மை செய்யப்பட்ட பொருள் ‘க்வாத சூரணம்’ எனப்படுகிறது.

8. பிட்டு – முன்பு பொடியை தூய்மை செய்தது போல் செய்து சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து உண்ணக் கொடுப்பது.

9. வடகம் – தேவையான மருந்துச் சரக்குகளின் பொடியுடன் சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து பிட்டு செய்து கொள்ளவும். அந்த பிட்டை உரலில் இடித்து வேண்டிய அளவு சிறிதாக உருட்டி உலர்ததி எடுப்பது.

10. கிருதம் அல்லது வெண்ணெய் – தேவையான சரக்குகளை பொடி செய்து கொள்ளவேண்டும். பொடியின் எடைக்கு இரண்டு மடங்குபசுவின் நெய் சேர்தது அடுப்பில் வைத்து கிண்டவேண்டும். நெய் நன்றாக உருகிக் கலந்தவுடன் தண்ணீர் உள்ள மண் சட்டியில் ஊற்றவும். அதை தயிர் கடைவது போல் மத்தால் கடைந்தால் திரண்டு வருவதே வெண்ணெய் ஆகும்.

11. மணப்பாகு – தேவையான சரக்குகளை எடுத்து சாறு அல்லது குடிநீர் செய்து கொள்ளவும். அளவுக்கு ஏற்றபடி சர்க்கரை அல்லது கற்கண்டை பாத்திரத்தலிட்டுக் காய்ச்சவும். மணம் வரும் பக்குவத்தில் இறக்கிக் கொண்டு சரக்குப் பொடியை அல்லது சாற்றை கலந்து எடுத்துக் கொள்வது.

12. நெய் – சாறு, கற்கம், குடிநீர் முதலியவைகளில் ஏதாவது ஒன்றோ அல்லது சிலவகைகளில் சேர்த்தோ பசுவின் நெய்யுடன் சேர்த்து, அடுப்பில் ஏற்றிக் காய்ச்சி பக்குவத்தில் இறக்கிக் கொள்வது.

13. இரசாயனம் – சரக்குகளைப் பொடியாக்கி சர்க்கரையும் நெய்யும் அளவுப்படி சேர்த்து இளகலாகப் பிசைந்து எடுத்துக் கொள்வது.

14. இளகம் அல்லது இலேகியம் – இது இருவகையில் தயாரிக்கப்படுகிறது.
(1) தேவையான குடிநீர் வகை, சாறு முதலியவைகளில் வேண்டிய அளவு சர்க்கரை சேர்த்து அடுப்பில் ஏற்றவும் சாறு சுருங்கி மணம் வரும் நேரத்தில் சரக்குப் பொடியைத் தூவி, தேன் விடவும்.பின்னர் நெய் விட்டுக் கிளறிப் பக்குவத்தில் எடுத்துக் கொள்ளவும்.

(2) சர்க்கரையைப் பாத்திரத்தில் இட்டு, வேண்டிய அளவு பசும்பால் அல்லது நீர் விட்டு அடுப்பேற்றி மணம் வரும் பக்குவத்தில் தேனை விட்டுப் பொங்கி வரும் போது சரக்குப் பொடியைத் தூவி, பிறகு தேனையும் நெய்யையும் விட்டுக் கிளறி எடுத்துக் கொள்வது.

சமஸ்கிருத மொழியில் அவலேஹம் என்பது மருவி ‘லேகியம்’ என்ற பெயரே இளகத்திற்கு வழக்கில் சொல்லப் படுகிறது.

15. எண்ணெய் அல்லது தைலம் – எள் + நெய் என்பதே எண்ணெயாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை ‘திலம்’ என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர். இக்காலத்தில் எல்லா வகையான நெய்களையும் எண்ணெய் என்றே குறிப்பிடுகின்றனர்.

தேவையான சரக்குகளைப் பொடித்து எள் நெய் சேர்த்துப் பக்குவத்தில் காய்ச்சி எடுப்பதே எண்ணெய் ஆகும். இவை தயார் செய்யும் முறையைக் கொண்டு பன்னிரெண்டு வகையாக வகைப்படுத்தப்படும்.. அவை..

கொதிநெய் – ஆமணக்குமுத்து முதலியவற்றை வறுத்து, இடித்து நீரில் கலக்கி அடுப்பில் ஏற்றிக் கொதிக்க வைப்பதால் உண்டாவது.

உருக்கு – வெண்ணெய், கோழிமுட்டைக்கரு முதலியவைகளை உருக்குவதால் உண்டாவது.

புடநெய் அல்லது குழிப்புட நெய் – அடியில் துளையிட்ட பானையில் சேங்கொட்டை, சிவனார்வேம்பு முதலியவற்றை பக்குவப்படி செயது நிரப்பி, மேலே மூடி மண்சீலை செய்து ஒரு குழி தோண்டி அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து மேலே சரக்குள்ள பானையை வைத்து புடம் போடுவதால் அடியில் இருக்கும் சட்டியில் இறங்கி இருப்பது.

சூரிய புட நெய் – எள்ளுடன் சேர்த்து அரைத்த கல்க மரந்தை (சூரிய) வெய்யிலில் வைத்து அந்த வெப்பத்தின் மூலம் உண்டாக்குவது.

தீ நீர் நெய் – சந்தனக்கட்டை முதலியவைகளைத் தூளாக்கிப் பட்டி கட்டித் தண்ணீரில் இட்டு இறக்குகின்ற தீ நீரினால் உண்டாவது.

மண் நெய் – சேறில்லாத நிலத்தில் இருந்து தானாகவே கொப்பளித்து உண்டாவது.

மர நெய் – மரத்தில் வெட்டப்படும் இடத்தில் உண்டாவது.

சிலை நெய் – உயர்ந்த மலைகளிலிருந்து வழிந்து வருவது.

நீர் நெய் – புழுகுச் சட்டம் முதலியவைகளை இடித்து, நன்றாக நசுக்கி தண்ணீரில் ஊற வைப்பதனால் உண்டாவது.

ஆவிநெய் – மட்டிப்பால், சாம்பிராணி முதலிய சரக்குகளை நெருப்பில் காயந்த மண் சட்டியில் போட்டு அதன் மேல் தண்ணீர் நிறைந்த தட்டு ஒன்றை வைக்க அந்தப் புகையால் தட்டின் அடிப்பாகத்தில் உண்டாவது.

சுடர் நெய் – கெந்தகம் முதலிய சரக்குகளை அரைத்துப் புதுத்துணியில் தடவி இரும்புக் கதிரி சுற்றிக் கட்டி அதை ஒரு முனையில் கொளுத்தி பெறப்படுவது.

பொறிநெய் – எள், கடலை முதலிய விதைகளிலிருந்து செக்கு போன்ற பொறி (இயந்திர) கருவிகளால் எடுக்கப்படுவது.

இந்தப் பன்னிரண்டு வகை நெய்களும் பயன்படுத்தும் முறையைக் கொண்டு ஐந்து வகையாகப் பிரிக்கப்படும்.

முடி நெய் – தலைக்கு இடுகின்ற நெய்.

குடி நெய் – உள்ளுக்குக் குடிக்கும் நெய்.

பிடி நெய் – தோல் மீது தடவிப் பிடிக்கும் நெய்.

தொளை நெய் – உடலில் உள்ள ஒன்பது துவாரங்களில் இடுகின்ற நெய்.

சிலை நெய் – புரைகளின் வழியாக ரத்தம், சீழ் முதலியவைகளை ஒழுகச் செய்யும் கெட்ட ரணங்களுக்கு இடுகின்ற நெய்.

16. மாத்திரை – மாத்திரை என்றால் அளவு என்று பொருள். எந்த அளவில் மருந்து கொடுக்க வேண்டுமோ அதற்குரிய அளவுக்குரியது மாத்திரை எனப்படும் உருண்டையாக இருப்பதால் உண்டை என்பர்.

சில சரக்குகளைச் சேர்த்து சாறுகள் அல்லது குடிநீர்களால் அரைத்து அளவாக உருட்டி உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வது.

17. கடுகு – மருந்துச் சரக்குகளை நெய் முதலியவைகளுடன் சேர்த்துக் காய்ச்சவும். அச்சரக்குகள் திரண்டு வரும்போது (கடுகு பதத்தில்) அதை உண்டு விடுவது. வடியும் நெய்யை மேல் பூச்சாகப் பூசுவது.

18. பக்குவம் – பாடம் செய்வது, பாவனம் செய்வது எனவும் அழைப்பர். கடுக்காய்போன்ற சில சரக்குகளை அரிசி கழுவிய நீரில் ஊறப்போட்டு மென்மையான பிறகு மோர், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துப் பக்குவம் செய்து கொள்வது.

19. தேனூறல் – இஞ்சி, நெல்லிக்காய், கடுக்காய் முதலியவற்றை நீரில் ஊறவைத்து எடுத்து நன்றாக உலர்த்திக் கொண்டு சர்க்கரைப் பாகு அல்லது தேனில் ஊற வைத்துத் தயாரிப்பது.

20. தீநீர் – சரக்குகளைச் சேர்த்து வாலையிலிட்டு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து எரித்து இறக்குவது தீநீர் ஆகும்.

21.மெழுகு. இது இரண்டு வகைப்படும்.
அரைப்பு மெழுகு -பாதரசம் சேர்ந்த சரக்குகள், உப்புகள் முதலியவைகளைத் தனியாகவோ கடைச்சரக்குகள் சேர்த்தோ அரைத்து மெழுகு பதத்தில் எடுத்துக் கொள்வது.
சுருக்கு மெழுகு – ரசச்சரக்குகள், பாஷாணங்கள் முதலியவகைகளை மூலிகைகளின் சாறு, நெய் முதலியவைகளினால் சுருக்குக் கொடுத்து அவை இளகி மெழுகுப்பதமாக வரும்பொழுது எடுத்து கல்வத்தில் இட்டுப் பதமாக அரைத்துக் கொள்வது.

22.குழம்பு – சாறுகள், சர்க்கரை, சரக்குப் பொடிகள் முதலியவைகளைக் காய்ச்சி கொழகொழப்பான பக்குவத்தில் எடுத்துக் கொள்வது.

23. பதங்கம் – ரசம் அல்லது ரசக் கலப்புள்ள மருந்துகளை உப்பும், செங்கல்லும் உள்ள மண்சட்டியில் போட்டு மேலேடு சட்டியை வைத்துச் சீலைமண் செய்து எரிக்க வேண்டும். தேவையான நேரம் வரை எரித்தபின் பிரித்து மேல்சட்டியில் படர்ந்திருப்பதை எடுத்து வைத்துக் கொள்வது.

24.செந்தூரம் – உலோகம், பாஷாணம் முதலியவகைகளை இலைச்சாறு, திராவகம், செயநீர் ஆகியவைகளினால் அரைத்துக் கொண்டு செய்வது. புடம்போட்டோ, எரித்தோ, வறுத்தோ, அரைத்தோ, வெயிலில் காயவைத்தோ, சிவப்பாகும் பதத்தில் எடுத்துப் பொடித்து வைத்துக் கொள்வது.

25.பற்பம் – உலோகம் பாஷாணம் முதலியவைகளை இலைச்சாறு புகைநீர் செயநீர் ஆகியவைகளினால் அரைத்துப் புடம்போட்டோ வறுத்தோ எரித்து ஊதியோ வெளுக்கும்படி செய்து எடுத்துக் கொள்வது.

தங்க பற்பத்தின் நிறம் மட்டும் மஞ்சளாக இருக்கும்.

26.கட்டு – பாஷாணங்களைப் புகைநீர், செயநீர், சாறு, தேன், நெய் முதலிய ஏதாவது ஒன்றினால் சுருக்குக் கொடுத்து (கெட்டியாக) கட்டிக் கொள்வது. இதை மாத்திரைக்கல் என்றும் அழைப்பர்.

27.உருக்கு – பாஷாணங்கள், உலோகங்கள் மற்ற சரக்குகளைச் சேர்த்து மூசையிலிட்டு மேலேமூடி மண்சீலை செய்து அடுப்புக் கரித் தீயில் வைத்து ஊதி இளகச் செய்து (உருக்கி) ஆறவைத்து எடுப்பது.

28.களங்கு – பாதரசம் முதலிய சரக்குகளை சாறு, நீர் முதலியவைகளில் சுருக்குக் கொடுத்து புடம் இட்டுக் கட்டியாக்கிக் கொண்டு பிறகு அடுப்புக் கரித் தீயில் வைத்து ஊதி மணியாக்கி உருக்கித் தங்கமும் நாகமும் சேர்த்து ஆறவைத்து எடுப்பது.

29. சுண்ணம் – தேவையானவைகளை அரைத்து, மூசையிலிட்டு சீலை செய்து உலர்த்தி, கரி நெருப்பிலிட்டு ஊதி எடுத்து ஆறவைத்துப் பூத்தபின் எடுத்துக்கொள்வது.

30.கற்பம் – இலை, வேர், கடைச்சரக்கு, உலோக, உபரச சத்துக்கள் முதலியவைகளை கூறப்பட்ட நாள் அளவு, பத்திய முறைப்படி உண்டு வரவேண்டிய மருந்து.

31.சத்து – காந்தம், இரும்புத்தூள் மற்ற உபரசம் முதலியவைகளோடு சில பாஷாணங்களையும் சேர்த்து செய நீரால் அரைத்து உலர்த்திக் கொண்டு, சீலை செய்து மூசையிலிட்டு மூன்றுமுறை ஊதி எடுக்கக் கிடைப்பது.

32.குருகுளிகை – வாலை ரசத்துடன் சில சரக்குகள் சேர்த்துக் கட்டி மணிமணியாகச் செய்து கொள்வது.

-siththarkal.com