முசுமுசுக்கை

முசுமுசுக்கைமுசுமுசுக்கை melothria maderaspatana
Family-  Cucurbitaceae

கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.

முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.

முசுமுசுக்கை கீரையை ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும்.

மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை.

உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.

சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும்.

முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், இரத்த சுவாசநோய் போன்றவை குணமடையும்.

பரட்டைக் கீரை, தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குறையும்.

முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

முசுமுசுக்கை தைலம் காய்ச்சியும் தலை குளிக்க பயன்படுத்தலாம். முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும்.

முசுமுசுக்கை கீரையில் தோசை, துவையல் ஆகியவை செய்யலாம். மற்றபடி சாதாரணமாக கீரைகளில் என்ன என்ன சமையல் வகைகள் செய்வோமோ (கீரை மசியல், துவட்டல், ரசம்….) அவற்றை முசுமுசுக்கையிலும் செய்யலாம். முசுமுசுக்கை இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டும் குடிக்கலாம். அடை மாவில் முசுமுசுக்கை இலை சேர்த்து அரைத்து முசுமுசுக்கை அடை செய்யலாம். முசுமுசுக்கை இலையில் தண்ணீர் விட்டு அரைத்து, அதில் அரிசி மாவு, மிளகு, சீரகம், உப்பு சேர்த்து, கெட்டியாக பிசைந்து முசுமுசுக்கை ரொட்டி செய்து சாப்பிடலாம்.

கேழ்வரகு மாவில் சீரகம், பச்சை மிளகாய், உப்பு, முசுமுசுக்கை இலை சேர்த்து கேழ்வரகு முசுமுசுக்கை அடை செய்யலாம். வழக்கமாக செய்யும் கேழ்வரகு அடையில் முருங்கை இலைக்குப் பதிலாக முசுமுசுக்கை இலை சேர்த்து செய்ய வேண்டும்.

முசுமுசுக்கை தோசை
தேவையான பொருள்கள் : புழுங்கல் அரிசி – 1 டம்ளர், உளுந்து -1 பிடி, முசுமுசுக்கை இலை – 1 கைப்பிடி

மிளகு – 1/2 தேக்கரண்டி,  சீரகம் -1/2 தேக்கரண்டி,  கல் உப்பு – 1 தேக்கரண்டி. நெய் – தோசை வார்க்க.

இட்லி அரிசி (புழுங்கல் அரிசி), உளுந்து இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் உப்பு போடாமல் நன்கு விழுதாக அரைக்கவும். இப்போது வழக்கமான தோசை மா தயார். வழக்கமான தோசைக்கு தேவைப்படுவதை விட, சற்று குறைவாக உளுந்து போட்டால் போதும்.

முசுமுசுக்கை இலைகளை மட்டும் ஆய்ந்து நன்கு கழுவவும். மிக்சியில் கல் உப்பு, மிளகு, சீரகம் போட்டு, கொரகொரப்பாக அரைக்கவும். பின் சுத்தம் செய்த முசுமுசுக்கை இலைகளை போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். தோசை மாவுடன், அரைத்த முசுமுசுக்கை சேர்த்து நன்கு கலக்கவும். முசுமுசுக்கை தோசை மா தயார். இந்த தோசை மாவை புளிக்க வைக்க வேண்டியதில்லை.

தோசை கல்லில் நெய் ஊற்றி, முசுமுசுக்கை தோசை மாவை ஊற்றவும். மாவை கரண்டியால் தேய்த்து, சுற்றிலும் சிறிது நெய் விட்டு, நன்கு வேக வைக்கவும். நன்கு வெந்ததும், திருப்பி போட்டு வேக வைக்கவும். முசுமுசுக்கை தோசை ரெடி.

புளித்த தோசை மாவில் கூட முசுமுசுக்கை இலை சேர்த்து தோசை வார்க்கலாம். அதில் இவ்வளவு பச்சை நிறம் வராது. தோசை லேசான பொன்னிறத்தில் இருக்கும்.

-MEERA THARSHAN

தொகுப்பு – thamil.co.uk