நீரைப் பிரிக்கும் சண்டிக்கீரை

சண்டிக்கீரைசிறுநீரை அடிக்கடி அடக்குவதாலும், குறைந்தளவு நீர் அருந்துவதாலும்  உப்புச்சத்து இரத்தத்தில் அதிகரித்து, சிறுநீரகக் கற்கள். கால் மற்றும் முகவீக்கம் போன்ற உபாதைகளுக்கு ஆளாகுகிறார்கள். இரத்தத்தில் புரதச்சத்து மற்றும் அத்தியாவசிய உப்புகளின் அளவு அதிகரிப்பதாலும், சிறுநீர்ப்பாதையில் கற்கள் தங்குவதாலும், சிறுநீர்ப்பையில் சிறுநீர் அதிகளவு தேங்குவதாலும் கால்களில் வீக்கம் உண்டாகின்றன. இந்த வீக்கத்தை ஆரம்ப நிலையில் நாம் கவனிக்காமல் விடும்பொழுது வீக்கம் கடினப்பட்டு, கல் போன்று சதை இறுகி, காலின் பருமனும், எடையும் அதிகரித்து யானைக்காலைப் போன்ற வீக்கமும் உண்டாகிவிடுகிறது. இரத்தத்தில் சிறுநீரகம் சார்ந்த சோதனைகளை செய்வதன் மூலமும், சிறுநீரக உப்புகள் மற்றும் நொதியங்களின் அளவை அறிந்தும் சிறுநீரக செயல்பாட்டை முடிவு செய்யலாம்.

சிறுநீர் சரியாக செல்லாவிட்டால் முறையான சிகிச்சை மேற்கொண்டு சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பாதையில் சிறுநீர் தேங்காமல் சரிசெய்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல் முழுவதும் வீக்கம் உண்டாகிவிடும். சிறுநீரைப் பெருக்கக்கூடிய, உடல் வீக்கத்தை வற்றக்கூடிய அற்புதமான கீரை சண்டிக்கீரை.

பெருத்துப்போன உடலை குறைக்கும் தன்மையுடையதால் இது இலச்சக்கட்டை கீரை என்று கிராமப்புற மக்களால் அழைக்கப்பட்டதால் இப்பெயரைப் பெற்றது. கழிச்சலை உண்டாக்குவதால் நச்சுக்கட்டை கீரை என்றும் சிலர் அழைக்கின்றனர்.  சண்டி மரத்தின் இலைகளில் உள்ள வேதிச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள உப்புகளை வெளியேற்றி, சிறுநீரைப் பெருக்கி கால்களின் வீக்கத்தை குறைக்கின்றன.

பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளியை தாளிதம் செய்து அத்துடன் மசித்த பாசிப்பருப்பை சேர்த்து, லேசாக வதக்க வேண்டும். பின் காம்பு, நரம்பு நீக்கிய சண்டிக்கீரையை கலந்து மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்கு வேகவைத்து, கீரை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதனை அடிக்கடி மதிய உணவுடனோ அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து உட்கொண்டு வர சிறுநீர் நன்கு வெளியேறும்.

சண்டி இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி அத்துடன் வெந்தயத்தூள் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட சிறுநீர் நன்கு வெளியேறும்.

எலும்பு மச்சை தேய்மானம் ஏற்படும்போது அதில் உள்ள சவ்வு சிதைந்துவிடும். இதனால் மூட்டு வலி ஏற்படும். முதியவர்களில் இருந்து வீடுகளில் உள்ள பெண்கள் வரை பலர் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். அதேபோன்று பனி காலங்களில் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி தொல்லையால் சிரமப்படுகின்றனர். இரத்தத்தில் உள்ள கழிவுகள் நுரையீரலில் தங்குவதால் தொடர் இருமலும், சளி தொந்தரவும் ஏற்படுகிறது. மூட்டு வலி மற்றும் இருமல், சளி தொந்தரவை அகற்றும் சக்தி சண்டிகீரையில் அதிக அளவில் உள்ளது. இதில் உள்ள நார் மற்றும் இரும்பு சத்து எளிதாக நிவாரணத்தை வழங்கும். தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாவதோடு, சளி, இருமல் தொந்தரவும் ஏற்படாது.

-tamilnews.cc

தொகுப்பு – thamil.co.uk