மாவிலங்கம்

மாவிலங்கம்மூலிகையின் பெயர் – மாவிலங்கம்
தாவரவியல் பெயர் – Crataera adansoni
தாவர குடும்பம்  – Capparidiacaae
வேறு பெயர்கள் – வில்வபத்திரி, வரணி, மாவிலங்கம், மாவிலங்கு, மாவிலங்கை, மகாவிலங்கமரம், அதிசரணம், மரலிங்கம், மாவிப்பட்டை, மாவிட்டை, மாவிளக்கப்பட்டை.

வளரியல்பு : இந்தியாவில் பரவலாகக் காணப்படும் இம்மரம் தானாக வளர்கிறது. இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளிலும் இம்மரம் காணப்படுகிறது. இது நடுத்தர உயரம் வளரும் இலையுதிர் மரம். இதன் கிளைகள் ஒழுங்கற்று வளரும். மரப்பட்டை சாம்பல் நிறத்திலும் வழவழப்பாகவும் இருக்கும். இலை விரல்கள் போன்ற மூன்று கூட்டிலை அமைப்பைக் கொண்டிருக்கும். பிப்ரவரி– மார்ச் மாதங்களில் புதிய இலைகள் உண்டாகும். பூக்கள் இளமஞ்சள் நிறத்தில், மரத்தில் இலைகள் உதிர்ந்திருக்கும் போது உண்டாகின்றன. வெண்ணிற மலர்கள் பெரியவை, பளபளப்பானவை. மலர்ந்தவுடன் இவை மஞ்சள் நிறமாக மாறிவிடும். புல்லி இதழ்கள் நான்கும் மடல்கள் போன்ற வட்டத்தட்டுடன் ஒட்டியிருக்கும். அல்லி இதழ்கள் நான்கும் நீண்ட கால் கொண்டிருக்கும். மகரந்தத்தாள்கள் மிகுதி. ஆல்பைக் காம்பின் மீது இருக்கும். இரண்டு வரிசை உட்சுவர் சூலொட்டு முறையில் அமைந்திருக்கும். சதைக்கனி, கடினமான கரடுமுரடான புறத்தோலுடன் காணப்படும். காய் உருண்டையாகவும், 1.5 – 5 செ.மீ கனத்தில் முதலில் பச்சையாகவும் பின்பு சிவப்பாகவும் இருக்கும். விதைகள் சதையுள் புதைந்திருக்கும்.

மாவிலங்கு தாவரத்தில் சபோனின்கள், பிளேவனாய்டுகள், தாவரஸ்டீரால்கள் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் ரூட்டின், சிட்டோஸ்டிரால், பெட்டுலினிக் அமிலம், குளுக்கோகப்பாரின், கெடா பிசைன் போன்றவை காணப்படுகின்றன.

மாவிலங்கப் பட்டை ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும். மேலும் காய்ச்சல் வயிற்று எரிச்சல், வாந்தி ஆகியவற்றினையும் போக்கும். மூட்டுக்களின் வீக்கம் மற்றும் புண் போக்க பசுமை இலைகள் உதவுகின்றன. கசக்கிய இலைகளை வினிகர் சேர்த்து பயன்படுத்துவர்.

பயன்கள்
இம்மரம் வலிமையற்றது. எனவே இதைத் தீக்குச்சி, சீப்பு செய்யப் பயன்படுத்தலாம். மரம் பளபளப்பான மஞ்சள் கலந்த வெள்ளை நிறமானது. பூச்சிகளால் எளிதில் தாக்கப்படும். இம்மரத்தின் இலைகள் கால் நடைகளுக்கு உணவாகும்.

மாவிலங்க மரத்தின் இலை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவத்திற்கு உதவும், பட்டைக் குடிநீர் கல்லடைப்பைப் போக்கும்.

பட்டையைச் சிதைத்து உட்புறமாக வைத்துக் கட்ட, கட்டிகள் கரையும்.

இதன் பட்டையை வட்டமாக வெட்டி அரையாப்புக் கட்டியில் வைத்து அதன் மீது ஓர் ஈயத்தகட்டைப் பொருத்திக் கட்ட, கட்டி அமுங்கிவிடும். பட்டை 170 கிராம், மூக்கிரட்டை 65 கிராம்

இவற்றை 1400 மி.லி நீரிலிட்டுக் குடிநீரிட்டு அதில் 17-35 கி. தர நாட்பட்ட புண், விரை வீக்கம் நீங்கும்.

இம்மரத்தின் வேர்ப்பட்டையை நன்கு அரைத்துக் கொட்டைப் பாக்களவு கொடுத்துவர வண்டுக்கடி போகும்.

மாவிலங்கப்பட்டை, மிளகு, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொட்டைப் பாக்களவு காலை உணவிற்குமுன் சாப்பிட்டுவர சூதக வாயு காரணமாகப் பெண்களுக்கு மாதவிடாய் தடைப்பட்டால் சீராகும்.

சீரகம் சுக்குடன் இலையைக் குடிநீரிட்டுக் குடிக்க காய்ச்சல், செரியாமை, வலி நீங்கும்.

இலையை அரைத்து உள்ளங்காலில் பற்றிட வீக்கம், எரிச்சல் நீங்கும்.

மாவிலங்க இலை முடக்குவாதத்தையும் போக்கும்.

குளிர்காலத்தில் பனிக்காற்று தாக்குவதினால் ஏராளமானோர் முகவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாவிலங்கம் அருமருந்தாகும். மாவிலங்கு மரப்பட்டை, மூக்கிரட்டைப் பட்டை வேர், வெள்ளைச் சாரணை வேர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் ‘நண்டுகல் பஷ்பம்’ சேர்க்க வேண்டும்.

தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும். சர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை ‘தோள்பட்டை உறைவு’. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பஷ்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும்.

சிறுநீரகக் கற்களை நீக்க மேலை நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிறுநீருடனேயே கல் வெளிவருவது போன்று உதவுகிறது. இன்றைய நவீன ஆய்வுகள் இதனை நிரூபித்துள்ளன. சிறுநீர்ப்பையில் வீக்கம், சிறுநீர்க்குழாய் அடைப்பு மற்றும் இனபெருக்க உறுப்புடனான சுரப்பியில் அதிக வளர்ச்சியினால் ஏற்படும் சிறுநீரக கோளாறுகளை குணப்படுத்துகிறது.

நோக்கீட்டு நூல்: அறிவியல் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (2005).

-tamilvu.org
-penmai.com