சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பு

தேங்காய் எண்ணெய்வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி? வெள்ளோட்டமாக முதலில், ஒரு நூறு மில்லி அளவு எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

ஒரு தேங்காய் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். அந்த காய் இளம் காயாகவும் இல்லாமலும், முற்றிலும் தண்ணீர் வற்றிய காயாகவும் இல்லாமலும் தேங்காய் பூ துருவி எடுக்கும் தன்மை உள்ள காயாக இருக்க வேண்டும். (சாதாரணமா சமையலுக்கு பயன்படுத்துகின்ற காய் போல்)

இப்போது தேங்காயை துருவி பூ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பூவில் சிறிதளவு நீர் விட்டு கையால் நன்கு பிசைந்து பால் எடுக்கவும். அந்த பாலை வடிகட்டி, பின்பு மீண்டும் சிறிதளவு தண்ணீர் விட்டு கையால் பிசைந்து பால் எடுக்கவும்.

பூவில் இருந்து முழுவதும் பால் எடுக்கும் வரை இம்முறையினை மீண்டும் மீண்டும் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். (சிலர் வெந்நீர் விட்டு கலந்து பால் எடுப்பார்கள். அப்படி செய்யவேண்டாம். மிக்சியில் அடித்து பால் எடுக்கவும் கூடாது. ஆனால் ஆட்டுரலில் இட்டு அரைத்து பால் எடுத்துக்கொள்ளலாம்).

இப்படி எடுக்கப்பட்ட பாலை ஒரு பருத்தி துணியால் நன்றாக வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒரு இரவு அல்லது பதினைந்து மணி நேரமாவது மூடி வைத்து விடவும்.

குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் மூடியை திறந்து பார்த்தால் தேங்காய் பாலானது பாலாடை கட்டி போல நீரில் மிதக்கும். அந்த பாலாடை கட்டியை ஒரு அகலமான கரண்டியால் வழித்து எடுக்கவும். மீதமான நீரை அப்புறப்படுத்தி விடவும்.

இப்போது ஒரு வாணலியில் இந்த பாலாடை கட்டியை ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். காஸ் அடுப்பு என்றால் ‘சிம்’மில் வைத்து சூடேற்றவும்.

ஒரு கரண்டியால் பாலாடை கட்டியை லேசாக கிளறி விட்டுக்கொண்டே வரவும். நேரமாக நேரமாக பாலாடை கட்டியிலிருந்து எண்ணையானது வெளியேறும். இறுதியாக எண்ணெய் முழுதும் கட்டியிலிருந்து வெளியேறிய பின் கட்டியானது பழுப்பு நிறமாக மாறி அடியில் தங்கிவிடும்.

இந்த நிலையில் அடுப்பில் இருந்து வாணலியை கீழே இறக்கிக்கொள்ளுங்கள். இப்போது முகர்ந்து பார்த்தால் தேங்காய் வாசம் ‘கும்’மென்று மணக்கும். சூடு ஆறிய பின்பு பருத்தி துணியால் வடிகட்டி போத்தலில் அடைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதன்முறையாக செய்யும்போது சில தவறுகள் நேரலாம். குறிப்பாக அதிக சூட்டினால் எண்ணெய் அடி பிடித்துக்கொண்டு லேசான கருகல் வாடை வரலாம். அப்படி இருந்தாலும் எண்ணையை பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்தடுத்து செய்யும் போது தவறுகளை சரி செய்து கொள்ளலாம். முதலில் ஒரு தேங்காய் வைத்து முயற்சித்து பாருங்கள். பின்பு படிப்படியாக அதிகரித்து கொள்ளலாம்.

இப்படி தயாரித்த எண்ணையை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்பதையும் அடுத்ததாக பார்ப்போம்.

தலைக்கு தினமும் தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால் முடி உதிராது. முடி உடைந்து போகாது. முடி வறட்சி ஏற்படாது. பேன், பொடுகு தொல்லை இருக்காது. மயிர்க்கால்கள் ஆரோக்யமாகி நன்றாக வளரும். சீக்கிரம் வெள்ளை முடி (இள நரை) தோன்றாது.

தேங்காய் எண்ணையில் உள்ள கொழுப்பு இரத்த நாளங்களின் உட்புறம் நலமாக இருக்க பயன்படுகிறது.

சில நுண்கிருமிகளைக் கொல்லும் இயல்பு தேங்காய் எண்ணைக்கு உண்டு.

குறைமாதத்தில் பிறந்த குழந்தை தேற தேங்காய் எண்ணை பயன்படுகிறது.

குழந்தைகளுக்கு இந்த எண்ணையை உடலில் தேய்த்து வந்தால் தோல் மினுமினுப்புடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கும்.

6 மாத குழந்தைக்கு கஞ்சியில் தேங்காய் எண்ணை சில துளிகள் கலந்து கொடுக்க எடை கூடும்.

குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைவரும் தங்களது தோல் மினுமினுப்பு பெற இந்த தேங்காய் எண்ணையை உபயோகிக்கலாம்.

இந்த எண்ணையை சமையலுக்கு பயன்படுத்துவதால் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு கிடைக்கிறது. சமையலும் நல்ல மனமுடன் இருக்கும்.

தேங்காய் எண்ணை தீங்கு செய்யுமா?

தேங்காய் எண்ணையில் அதிகக் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) உள்ளது என்ற வாதம், வதந்தியாகும். சூரியகாந்தி எண்ணையை பரவலாக விற்பனைக்குக் கொண்டுவர வணிக நிறுவனங்கள் செய்த பிரச்சாரம் அது.

தென்கிழக்கு ஆசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள், மேற்கிந்திய தீவுகள் ஆகியவற்றில் முழுவதும் தேங்காய் எண்ணையே பயன்பாடு. கேரளாவில் அதுவே முதன்மை. ஆனால், இரத்தக் குழாயில் கொழுப்பு அடைக்கும் என்று ஒரு செய்தியைப் பரப்பி தேங்காய் எண்ணையின் பயன்பாட்டைக் குறைத்தனர்.

உண்மையில் கொழுப்பு சத்து நம் உடலுக்கு கட்டாயம் வேண்டும்.

ஒரு மிருகத்தில் இருந்து எடுக்கப்படும் நெய்யே நமக்கு நன்மை தந்தால் ஒரு இயற்கையான தாவரத்தில் இருந்து கிடைக்கும் எண்ணை நமக்கு செரிமானம் ஆகாதா!? சிந்தனை செய்யுங்கள் மக்களே!!!

மனிதனுக்கு வரக்கூடிய நோய்களில் பெரும்பாலான நோய்களுக்கு கடைகளில் விற்கும் செயற்கை முறையில் தயாரித்து விற்கப்படும் எண்ணணெய்களும் ஒரு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

-ரா. ராஜகோபாலன்