இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் உணவுவகைகள்

இரத்தத்தில் சர்க்கரை-thamil.co.ukஅவரை, போஞ்சி, கடலை, பருப்பு இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணிசமாகக் குறைக்கும்: 

அவரை, போஞ்சி, கடலை, பருப்பு போன்ற உணவு வகைகள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணிசமாகக் குறைப்பதாகக் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் காரணத்தால், சர்க்கரையை கலங்களின் நடுப்பகுதிக்குச் செலுத்த உதவும் இன்சுலின் குறைவாகத் தேவைப்படுகிறது.

இன்சுலின் குறைவாகக் காணப்படும் நேரங்களில், கொழுப்பு அதிகளவில் ஜீரணமாகுமென்பதால், உடலில் கொழுப்பு சேகரிக்கப்பட்டு உடற் பருமன் அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. அத்தோடு இன்சுலினின் தேவை குறைவாக இருக்குமிடத்து இரத்தக் குழாய்களில் ஏற்படும் பல பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன.

தாவரப் புரதத்தைக் கொண்ட கடலை, பருப்பு, அவரை வகைகளில் மனித வாழ்வியலிற்குத் தேவையான விட்டமின் ஊட்டச்சத்து, தாதுப் பொருட்கள், உலோகச் சத்துதெனப் பலதும் காணப்படுகிறது.

சோயா, அவரை வகையில் காணப்படும் இஸோபிலவோன் (Isoflavone) எனப்படும் பதார்த்தம், பெண்களின் பாலியற் கோமோனான ஒஸ்ரஜென் (Oestrogen) போன்ற அமைப்பைக் கொண்டதால் சோயா, அவரை போன்றவை மாதவிடாய் அற்றுப் போன காலப் பிரச்சனைகள் பலவற்றைப் போக்க உதவுகிறது. மார்பகப் புற்று நோயையும், இருதய நோயையும் பெண் பாலியற் கோமோன் தடுப்பது போன்ற செயலைப் புரிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடலை, பருப்பு வகைகளை உண்பதால் ஏற்படக்கூடிய வாயுத் தொல்லையைப் போக்க சீரகம், மல்லி, சோம்பு, வெள்ளைப் பூடு போன்றவற்றைப் பாவித்தல் பலனைத்தரும்.

பயறுடன் தேங்காய்ப் பூவும், சிறிதளவு சக்கரையும் கலந்து சாப்பிட்டால், மூளை வளர்ச்சி பெறுவதற்கான அசிற்றில்கொலின்(Acetylcholin) உற்பத்தி உடலில் அதிகரிக்குமெனத் தெரிய வந்துள்ளது. அத்தோடு இதில் காணப்படும் லிகான(Ligane) எனப்படும் பதார்த்தம் உயிரணுக்களைப் பாதுகாப்பதோடு புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது.

ஏதாவதொரு பருப்பு வகைகளில் 200 கிராம் அளவில் தினமும் பாவித்து வருவது போதுமானது. வைட்டமின் B1, B2, B6, பொஸ்பர், மங்கனீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் நாளாந்த தேவையின் பெரும் பகுதியை அது பூர்த்தி செய்கிறதென்பது கவனிக்கப்படத்தக்கது. பல பருப்பு வகைகளும், கடலை வகைகளும் ஆரம்பகாலங்களில் உண்ண உகந்ததாக உலகில் இருந்திருக்கவில்லை என்பதும், மூதாதையரால் பல முறைகள் பயன்படுத்தப்பட்ட மரபணு மாற்றங்கள் மூலம் அவை உண்ண உகந்ததாக மாற்றப்பட்டதும் அறியப்பட வேண்டிய அறிவியல் விடயமாகும்.

ஐரோப்பிய செய்தியாளர் மகேந்தி globaltamilnews.net