ஆரோக்கியம் வேண்டுமா? தண்ணீர் விரதம் (Water Fasting) இருங்கள்

தண்ணீர் விரதம்ஆரோக்கியம் வேண்டுமென்றால் ஃபுல்லா குடியுங்க என்று சொன்னவுடன் நிறையபேருக்கு மதுபானக்கடை நினைவுக்கு வரும். உடனடியாக கடைக்குச் சென்று சரக்கு வாங்கிக் குடிக்கச் சொல்கிறேன் என்று தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம். நான் ஃபுல்லா குடியுங்க என்று சொல்வது சாதாரண தண்ணீரை மட்டும் தான். நீங்கள் வேறு எதையாவது நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

நம் உடலில் ஆரோக்கியம் கெட்டுப்போவதற்கு அடிப்படைக் காரணம் வயிறுதான். வயிறு சுத்தமாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வயிற்றில் அசுத்தம் இருந்தால், பித்தம் இருந்தால், கழிவுகள் தேங்கியிருந்தால் அது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். அதனால் மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக நம் வயிற்றைச் சுத்தப்படுத்தியே ஆகவேண்டும்.

என்னதான் அனாடமிக் தெரபி செவிவழி தொடுசிகிச்சை முறையில் உணவை பசி எடுத்தல், உணவை நன்கு மென்று உமிழ்நீர் கலந்து சாப்பிடுவது, உதட்டை மூடி சாப்பிடுவது, அறுசுவை உணவை சாப்பிடுவது என்று பலவற்றையும் சரியாக கடைப்பிடித்தாலும் வயிற்றைச் சுத்தப்படுத்தும் வேலையை தவறாமல் செய்துகொள்வதால் நம் உடலின் ஆரோக்கியம் இன்னும் மேம்பாடு அடையும்.

பசி எடுத்தால் சாப்பிடவும் என்ற விதிமுறையை நாம் கூறிவருகிறோம். ஆனால் எல்லோராலும், எல்லா நேரத்திலும் இந்த விதிமுறையைக் கடைப்பிடிப்பதற்கு சாத்தியமில்லை. நம்மால் முடிந்தவரை அதைக் கடைப்பிடிக்கிறோம். இருந்தாலும் பல நேரங்களில் பசியின்றி சாப்பிட வேண்டியதாக அமைந்துவிடுகிறது. இதனால் நம் வயிற்றில் குப்பைகள், அசுத்தங்கள், கழிவுகள், பித்தம் போன்றவை சேர வாய்ப்பிருக்கிறது. எனவே வயிற்றை சுத்தப்படுத்துவது என்பது மிக அவசியம்.

வயிற்றைச் சுத்தப்படுத்திக் கொள்ள நிறைய வழிமுறைகள் உள்ளன. அதில் ஒரு வழியான தண்ணீரின் மூலம் வயிற்றை சுத்தப்படுத்திக் கொள்ளக் கூடிய ஒரு பயிற்சியைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

தண்ணீர் விரதம் (Water Fasting) அதாவது 24 மணிநேரத்திற்கு தண்ணீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பதற்கு தண்ணீர் விரதம் என்று பெயர். இதைக் கேட்டவுடன் நிறைய பேருக்கு பயம் ஏற்பட்டிருக்கும். என்னது 24 மணிநேரத்திற்கு வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டிருப்பதா? அப்படினால் எனக்கு மயக்கம் வந்துவிட்டால் நான் களைப்பாகி கீழே கீழே விழுந்து விட்டால், உயிர் போய்விட்டால்? இப்படி பல கேள்விகள் மனதில் எழும். இதற்கு நமது எண்ணம் தான் காரணம். உண்மையில் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை.

உதாரணமாக தீடீரென்று நீங்கள் ஒரு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த காட்டுப்பகுதிக்குள் உண்பதற்கு உணவோ, குடிப்பதற்கு நீரோ கிடைக்கவில்லை என்றாலும் கூட நான்கு நாட்கள் ஒருவரால் உயிர்வாழ முடியும். ஒருவாரம் அல்லது பத்து நாட்கள் கூட ஒருவரால் உயிர் வாழ முடியும். ஆரோக்கியமாக இருக்க முடியும்.

எண்ணம் தான் காரணம்

எண்ணத்தால் தைரியமாக நாம் வாழ வேண்டும் என்று எண்ணும்போது ஆரோக்கியமாக இருக்க, உயிர்வாழ வழிகிடைக்கும். எண்ணத்தால் தன் புத்தியில் யாரெல்லாம் சாப்பிடாவிட்டால் நான்கு நாட்களில் நான் இறந்துவிடுவோம் என்று எண்ணுகிறீர்களோ அவர்கள் எல்லாம் இறந்துவிடுவீர்கள். சாப்பிடவில்லை என்றால் மயக்கம் வந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் மயக்கம் போட்டுவிடுவீர்கள். சாப்பிடவில்லை என்றால் ஒன்றும் ஆகாது. நாம் கொஞ்ச நாட்கள் நிச்சயமாக உயிர் வாழ்வோம் என்று நினைப்பவர்கள் அப்படியே உயிர் வாழ்வார்கள்.

எண்ணம் போல் வாழ்க்கை

நாம் என்ன நினைக்கிறோமோ அதைப்போலவே நாம் ஆகிறோம். நம் வாழ்க்கை அப்படிதான் தீர்மானிக்கப்படுகிறது. எனவே நிச்சயமாக எந்த ஆபத்தும் நேராது மன உறுதியுடன் இருக்கலாம். இனி தண்ணீர் விரதத்தைபற்றி பார்க்கலாம்.

ஒருநாள் இரவு உணவை முடித்துக்கொண்ட பின் ஒரு சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும். சங்கல்பம் என்றால் ஒரு உறுதிமொழியை நமக்கு நாமே எடுத்துக்கொள்வது. அதாவது அடுத்த நாள் இரவு ஏழுமணிக்கு மேல் தான் இனி உணவு அருந்துவது அதுவரைக்கும் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டிருப்பது என்று நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். உறுதி எடுத்துக் கொண்ட பின் தண்ணீரை மட்டும் தேவைப்படும் பொழுது குடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

இரவு உறங்கி காலை எழுந்ததில் இருந்து தண்ணீரை மட்டும் குடிக்கும் விரதத்தைக் கடைப்பிடித்து வரவேண்டும். உணவை அறவே தவிர்க்க வேண்டும். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரை லிட்டர் தண்ணீர் அருந்திவர வேண்டும். ஏனென்றால் உடல் உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தும் பணியை ஆரம்பிக்க அது உதவும். அன்று முழுவதும் வேறு எந்த வேலையும் செய்யாமல் விடுமுறை எடுத்துக்கொண்டு இதில் ஈடுபட வேண்டும். குறிப்பாக உடலுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் கண்களை மூடி நன்கு ஓய்வு எடுத்துக்கொண்டு இந்த தண்ணீர் விரத்தை மேற்கொண்டால் இன்னும் சிறப்பான பலனைக் கொடுக்கும்.

உடல் உறுப்புகளுக்கு நாம் எவ்வளவு ஓய்வு அளிக்கிறோமோ அந்த அளவிற்கு உடலை சுத்தப்படுத்தும் பணி துரிதமாக நடைபெறும். சிலரால் ஒருநாள் முழுவதும் விடுமுறை எடுத்துக் கொண்டு முழு ஓய்வுடன் இதை கடைப்பிடித்து நன்மை பெற முடியாத நிலையில் உள்ளவர்கள் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே தண்ணீர் விரதத்தை மேற்கொள்ளலாம். முழுநாளும் ஓய்வு எடுத்துக் கொண்டு விரதத்தை மேற்கொள்ளுபவர்கள் படுத்துக்கொண்டு ஓய்வுபெற விரும்பினால் எக்காரணம் கொண்டும் வடக்கே தலைவைத்துப் படுக்கக்கூடாது. தெற்கே தலைவைத்துப் படுத்துக் கொள்ளலாம். நைலான் பாய், மெத்தை, ஃபோம் மெத்தை, ரெக்சின் விரிப்பு மெத்தை, ரெக்ஸின் சோபா போன்றவற்றில் படுத்து ஓய்வு எடுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக இலவம் பஞ்சு மெத்தை, பருத்திப் பஞ்சால் செய்யப்பட்ட மெத்தை, கோரப்பாய், போர்வையால் போடப்பட்ட விரிப்புகள், பருத்தி துணிகளால் செய்யப்பட்ட மெத்தை போன்றவற்றை ஓய்வு எடுக்க பயன்படுத்தலாம்.

முடிந்தவரை அன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்காமல் கனிணி, லேப்டாப் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், பாடல்களை கேட்காமல், மொபைல் போனில் பேசாமல் அன்று ஓய்வை முழுமையாகக் கழித்தால் மிகவும் நல்லது.

ஓய்வாகப் படுத்திருக்கும் இடத்தில் சுத்தமான காற்றோட்டம் நிலவுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுவர்த்தி பயன்படுத்தாமல் ஏசியை பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது. யாருடனும் முடிந்தவரை பேசாமல், இந்த விரதத்தை கடைபிடிப்பது இன்னும் சிறப்பானது.

நமது உடலில் கண்களுக்குத்தான் அதிக சத்தி தேவைப்படுகிறது. எனவே கண்களை மூடி ஓய்வெடுக்கும் பொழுது சேமிக்கப்பட்ட ஆற்றலால் உடலை சுத்தப்படுத்தும் பணி நோயைக் குணப்படுத்தும் பணி நோயைக் குணபடுத்தும் பணி ஆகியன சிறப்பாக நடைபெறும்.

கண்களை மூடிப் படுத்திருக்கும் பொழுது நமது உடலுக்குள் நடப்பவற்றை வேடிக்கை பார்க்கவேண்டும். நிறையபேருக்கு ஒரு சந்தேகம் வரும் காலை உணவு எடுத்துக்கொள்ளும் வேலை வரும் பொழுது அந்த நேரத்தில் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சுரந்துவிடும் அப்படியானால் என்ன செய்வது? அல்சர் வந்துவிடாதோ இப்படியான சந்தேகங்கள் வரும். அப்படியெல்லாம் பயப்படத் தேவையில்லை. இரைப்பையில் எப்பொழுது ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கும் என்றால் நாம் நினைத்தால் மட்டுமே அமிலம் சுரக்கும். விரதம் இருப்பதற்கும் பட்டினியாய் இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது.

உதாரணத்திற்கு மதிய உணவிற்கு வீட்டிற்குச் செல்கிறீர்கள். உங்களுக்கு மிகுந்த பசி ஏற்படுகிறது. உணவு மேஜையில் உள்ள பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் திறந்து பார்க்கிறீர்கள். எதிலும் எந்த உணவும் இல்லை. மனைவி எங்கோ வெளியில் சென்றிருக்கிறார் அவருக்கு போன் செய்கிறீர்கள். என்ன இன்று உணவு சமைக்கவில்லையோ? நீ எங்கே இருக்கிறாய்? என்று கேட்கிறீர்கள். அவர் ஊருலிருந்து என் அம்மா வந்திருப்பதால் அவசரமாக அவர்களுடன் கிளம்பி கடைவீதி செல்ல வேண்டியதாகிவிட்டது. எதுவும் சமைக்க முடியவில்லை. சாரிங்க ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். நான் முன்பே இதைக் கூறுவதற்காக உங்களுக்கு போன் செய்தேன் நீங்கள் தான் போன் எடுக்கவில்லை என்று கூறுகிறார்.

நமக்கு சாப்பாடு வேண்டும் என்று நினைத்து நாம் சாப்பிடப்போவதற்கு தயாராகும் பொழுது ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்க ஆரம்பிக்கிறது. இப்பொழுது சாப்பிடாமல் இருந்தால் அதற்குப்பெயர் பட்டினி வயிறு கெட்டுபோகும் அல்சர் வரும்.

ஆனால் இந்தவேளை மதியம் நான் சாப்பிடப் போவதில்லை, இரவு தான் உணவு உண்ணப் போகிறேன், என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது மதியம் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்காது நீங்கள் சோதனை செய்து பார்த்து இதை அறிந்து கொள்ளலாம். இயற்கை மருத்துவ முறைகளை பல இடங்களில் இன்று வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். வெறும் தண்ணீர் அருந்தச் செய்து விரதம் இருப்பது போல் செய்து நோய்களை குணப்படுத்துகிறார்கள். இவ்வாறு சிகிச்சை அளிக்கக் கூடிய இடங்களில் 40, 50 பேர் வெறும் நீரை மட்டும் அருந்தி ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதை காணலாம்.

இந்த சிகிச்சையை ஆரம்பிக்கும் முன்னரே அவர்களுக்கு இந்த தண்ணீர் விரதத்தைப் பற்றி விளக்கி இருப்பார்கள். எனவே அவர்கள் உணவு அளிக்கும் வரை அவர்களுக்கு பசி உணர்வு ஏற்படாது. பழச்சாறு கொடுத்து விரத்தை முடிக்கும் வரை பட்டினியாய் இருக்க வேண்டும் என்று அவர்களது மனதில் பதிந்துவிடுகிறது. உதாரணமாக காலை ஏழு மணி வரை விரதம் இருக்க வேண்டும். அதற்கு பின்னரே உணவு வழங்கப்படும் என்று முந்தைய நாள் அறிவிக்கிறார்கள் என்றால் காலை ஏழுமணி என்பதை மனது பதிவு செய்து கொள்கிறது. அதிகாலை ஐந்து மணி அல்லது ஆறுமணியில் இருந்து ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்க ஆரம்பிக்கிறது. கவனியுங்கள்! ஒருவேளை ஐந்து மணிக்கே பழச்சாறு கொடுத்து விரதத்தை முடிப்பதாக இருந்தால் மூன்று மணிக்கே அமிலம் சுரந்துவிடும். இதுதான் அந்த ரகசியம்.

நமது உடலிலும், மனதிலும் என்ன மாதிரி எல்லாம் நினைக்கிறோமோ அதற்கு ஏற்றாற்போல் இந்த உடல் வேலை செய்யும். இன்னும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இன்னும் ஒரு உதாரணம். நாம் சிறுநீர் கழிக்கச் செல்லுகிறோமே, நாம் சிறுநீர் கழிப்பதற்கு ஏதாவது பட்டன் வைத்திருக்கிறோமா? நாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும்பொழுது சிறுநீர் கழிக்கிறோம். அதாவது நாம் நினைத்தால் வருகிறது. பிறகு சிறுநீர் கழிக்கலாம் எனும்பொழுது வருவதில்லை.

சிறுகுழந்தைகளை பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் விளையாட்டுக்காக சிறுநீர் கழித்துக் கொண்டே இருக்கும்பொழுது திடீரென நிறுத்துவார்கள். பின் திடீரென மீண்டும் சிறுநீர் கழிப்பார்கள். இதைப்போல நாமும் கூட விளையாட்டாக செய்து பார்க்கமுடியும். காசா, பணமா என்ன?சிறுநீர் நாம் நினைத்தால் வருகிறது. நினைத்தால் நிற்கிறது. எனவே எண்ணம் தான் காரணம்.

எனவே கண்டிப்பாய் மயக்கம் வராது. அல்சர் வராது தைரியமாக நாம் இந்த தண்ணீர் விரதத்தை மேற்கொள்வோம்.

இஸ்லாமிய சமுதாயத்தில் முப்பது நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பு இருப்பார்கள். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் உணவு உண்டால் இரவுதான் கஞ்சி குடிப்பார்கள். நடுவில் எச்சிலைக்கூட விழுங்க மாட்டார்கள். இதுவும் ஒரு வகையான விரதம் தான். இப்படி கடுமையான விரதத்தை முப்பது நாட்கள் மேற்கொள்ளுவதால் அவர்கள் அடிக்கடி அசைவம் சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால் தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டு விரதமின்றி இருப்பவர்களுக்கு கண்டிப்பாக நோய்வரும்.

பழங்கள் மட்டும் சாப்பிடுகிறவர்களுக்கும் வயிற்றில் அசுத்தம் அதிகமாக சேரும்பொழுது கண்டிப்பாக நோய்வரும். எனவே தண்ணீர் விரதம் என்பது மிக எளிதாக செய்யக்கூடிய ஒன்றுதான், கடினமான வேலை ஒன்றும் அல்ல.

தண்ணீர் விரதத்தை முடித்துக் கொள்ளும் பொழுது முதலாவதாக எலுமிச்சை பானம் தான் அருந்த வேண்டும். எலுமிச்சை பழத்தினை சாதாரண நீரில் பிழிந்துவிட்டு சிறிதளவு உப்பு சேர்த்து முதலில் அருந்த வேண்டும். பிறகு அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரம் கழித்து இட்லி, பொங்கல், இரசம் சாதம், கஞ்சி, தயிர்சாதம் இவற்றில் ஏதாவது ஒன்றை கொஞ்சமாக சாப்பிடவேண்டும். அடுத்த நாளில் இருந்து சாதரணமாக நாம் சாப்பிடும் அளவு சாப்பிடலாம். இந்த தண்ணீர் விரதத்தினை மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நமக்கு எப்பொழுது வாய்ப்புக்கிடைக்கிறதோ அப்பொழுது இதைச் செய்யும்பொழுது நமது உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி உடல் தூய்மையாகும். நன்கு ஜீரணம் நடக்கும். வயிறு சம்பந்தப்பட்ட எல்லாவிதமான கோளாறுகளும் நீங்கும். அல்சர், அஜீரணக்கோளாறு (IBS, Irritable Bowel Syndrome) எதுக்களித்தல், வயிறு எரிச்சல் (Acidity) என்று வயிறு சம்பந்தப்பட்ட எல்லப் பிரச்சனைகளும் இது நல்ல தீர்வாக அமையும்.

ஒரு நாள் தண்ணீர் விரதம் இருப்பதற்கு சிலபேருக்கு கடினமாக இருந்தால் இயற்கை மருத்துவ பயிற்சி முகாம் நடைபெறும் இடங்களுக்கு சென்று அங்கு நடைபெறுவதைப் பார்வையிடலாம். அங்கு வெறும் நீரை மட்டும் அருந்திக்கொண்டு மூன்று நாட்கள், ஏழு நாட்கள், பத்து நாட்கள் என்று பலரும் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை காணலாம். நாம் தனியாய் இந்த விரதத்தை மேற்கொள்ளும் பொழுது தனிமையாய் இருப்பது சில நேரம் பயமாகவும், அசௌகரியமாகவும் இருப்பதாக உணரலாம். ஆனால் இயற்கை மருத்துவபயிற்சி முகாமில் கலந்து கொண்டு 80, 90 பேர் படுத்துக் கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது நமக்கு பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருக்கும்.

முதலில் வீட்டிலேயே இந்த தண்ணீர் விரதத்தை மேற்கொள்ள பயப்படுகிறவர்கள் ஏதாவது இயற்கை மருத்துவ பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அதை பயிற்சி செய்யலாம். பின்னர் வீட்டில் வந்து செய்து பார்க்கும்பொழுது மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். உடலும் ஆரோக்கியம் பெறும்.

எனவே நமது உடலில் ஆரோக்கியத்திற்காக மாதம் ஒருமுறை 24 மணிநேரமும் தண்ணீரை மட்டும் அருந்தி நமது உடலை சுத்தம் செய்யலாம். இந்த விரதத்தினால் வயிறு, கல்லீரல், மண்ணீரல், இரைப்பை, சிறுநீரகம் போன்றவை சுத்தமாகின்றன. உடலில் உள்ள கழிவுகள் உடலைவிட்டு நீங்குகின்றன.

குறிப்பிட்ட சில நோய்கள் என்றில்லாமல் உடலில் எந்த நோயாக இருந்தாலும் அனைத்தும் குணமடையும். ஆரோக்கியமாக வாழலாம்.

தண்ணீர் விரதத்திற்கு சாதாரணமாய் பச்சைத் தண்ணீர்தான் பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்துக் குடிக்க கூடாது. மிளகு கலந்து, சீரகம் கலந்து குடிக்கக் கூடாது. அதேபோல மினரல் வாட்டர், வடிகட்டிய தண்ணீர் போன்றவற்றையும் பயன்படுத்தாமல் சாதாரண நீரையே மண்பானையில் வைத்துப் பயன்படுத்தலாம். மண்பானையில் ஊற்றி வைத்த நீரை 2 மணி நேரம் கழித்துப் பயன்படுத்தலாம். செம்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்தால் அதை நான்கு மணி நேரம் கழித்துப் பயன்படுத்தலாம். அந்த நீர் உடலை நல்ல முறையில் சுத்தப்படுத்தும். எனவே நம்முடைய ஆரோக்கியம் பற்றி யாராவது என்ன காரணம் என்று கேட்டால் “நாங்கள் எல்லாம் வாரம் ஒருமுறை புல்லா குடிப்போமே” என்று கூறிப்பாருங்கள். ஜாலியாக நகைச்சுவையாக அதேசமயம் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.

எனவே புல்லா குடிப்போம் !!
ஆரோக்கியமாக வாழ்வோம் !!

நன்றி – ஹீலர் பாஸ்கர் (அமைதியும் ஆரோக்கியமும்)